நாதஸ்வர இசை கேட்கவில்லை. உற்றார் உறவினர்களின் பேச்சரவம் கேட்கவில்லை. மணமக்களின் நண்பர்கள் செய்யும், கேலிகளும், கிண்டல்களும் கேட்கவில்லை. கெட்டி மேளம். கெட்டி மேளம். என்று பரபரப்பாகும் பெரிசுகளின் உத்தரவுகளோ, மேளம் கொட்டும் சத்தமோ கேட்கவில்லை. மண்டபங்களின் கதவுகளில், வெளியே பூட்டுகள் தொங்க. உள்ளே ரகசியமாக நடந்தன திருமணங்கள்.! எங்கே தெரியுமா? நம் தமிழ்நாட்டில். தூத்துக்குடியில்.
இதே காட்சியை இதற்கு முன்பு எங்கோ பார்த்த, கேட்ட நினைவு வருகிறதா? ஆம். ஈழத்தில் பார்த்தோம். பவுத்த மதவெறி சிங்கள அரசின் ராணுவ அடக்குமுறைக்களுக்கு அஞ்சி, அங்குள்ள தமிழர்கள் தம் வீட்டு நல்லது கெட்டதுகளை பூட்டிய வீடுகளுக்குள் நடத்திக் கொண்ட அவலத்தை ஈழத்தில் கண்டோம். இன்று, அதே காட்சிகளைத் தமிழ்நாட்டில் பார்க்கிறோம். இந்த நிலை உணர்த்தும் செய்தி என்னவென்பதை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால், தமிழ்நாடு தமிழருக்கில்லை.
1950களில் வடவர் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடந்த மண் தமிழ்நாடு. ஆனால், இன்று, ஓ. என். ஜி. சி. என்னும் வடநாட்டுப் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக, கதிராமங்கலத்தில் ராணுவம் இறக்கிவிடப்பட்டது. அனில் அகர்வால் என்னும் வடநாட்டுப் பெருமுதலாளிக்காக, தூத்துக்குடியில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். அதுவும் தமிழகக் காவல்துறையைக் கொண்டே தமிழர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்.
ஸ்டெர்லைட் என்னும் உயிர்க்கொல்லித் தொழிற்சாலையை மூடச் சொல்லிப் போராடியவர்கள், ‘எங்கள் மண்ணைச் சுடுகாடாக்காதீர்கள், எங்கள் பிள்ளைகள் சுவாசிக்கும் உயிர்க்காற்றில் நஞ்சைக் கலக்காதீர்கள்’ என்று, இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழ்வதற்கான கோரிக்கையை முன்வைத்துப் போராடியவர்கள். அவர்களின் ஒற்றைக் கோரிக்கை, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது மட்டுமே. அவர்கள் மீதுதான் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். 13 பேர் பலி என்கின்றன ஊடகங்கள். இல்லை இன்னும் இரண்டு மடங்கு உயிர்கள் பலியாகியுள்ளன என்கின்றனர் களத்தில் நிற்போர். 144 தடையுத்தரவு போட்டு, இணையச் சேவையை முடக்கி, மின்சாரத்தை நிறுத்தி, வீடு வீடாக நுழைந்து நரவேட்டையாடியிருக்கிறது தமிழகக் காவல்துறை. பொதுமக்களின் போராட்டத்தைத் திட்டமிட்டுக் கலவரமாக மாற்றி, இந்தப் படுகொலைகளை, பயிற்சி பெற்ற காவலர்களைக் கொண்டு அரங்கேற்றியிருக்கிறார்கள். கொத்துக் குண்டுகளும், பதுங்குகுழிகளும் மட்டும்தான் இல்லை. சொந்த மக்கள் மீது ஓர் அரசுக்கு ஏன் இவ்வளவு வன்மம்?
தன்னுடைய மொழி, இன உரிமை உள்ளிட்ட அடையாளங்களை விட்டுக்கொடுக்காத மாநிலம் தமிழ்நாடு. பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு உள்ளானாலும், அவற்றைச் செரித்துக் கொள்ள முடியாமல் வெளியே தள்ளிவிடும் எதிர்ப்பாற்றால் மிக்க மண். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் காணமுடியாத, சமூக நீதி அரசியலின் மீது இயங்கிக் கொண்டிருக்கும் தனித்துவமான மாநிலம் தமிழ்நாடு. வடவரின் ஆதிக்கத்தை, குறிப்பாக டெல்லியின் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்காத, விரும்பாத மாநிலம் தமிழ்நாடு. ஆள்வது எந்த அரசாக இருந்தாலும், டெல்லியின் ஆதிக்கப் போக்கிற்கு எப்போதும் கடிவாளமாக இருப்பது, தமிழ்நாட்டின் தனித்துவம் மிக்க இந்த அரசியல்தான்.
எத்தனையோ வழிகளில் முயற்சி செய்து பார்த்து, முடியாமல் போனதால், வேறு வழியின்றி, இந்தித் திணிப்பு தொடங்கி நீட் வரை தமிழக மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வந்தது காங்கிரஸ் கட்சி. அதற்கான சான்றுகள் வரலாறு நெடுகிலும் கொட்டிக் கிடக்கின்றன. அவ்வப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி டெல்லியில் எட்டிப்பார்த்த போதும் அதே நிலைதான். அவர்களின் மதவெறி அரசியல் தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை. மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோதும், தமிழ்நாட்டில் பாஜக என்ற கட்சி இருப்பதற்கான அடையாளமே வெளியில் தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழ்நாட்டில் வாழும் பாஜக தலைவர்கள் தமிழர்களுக்கு எதிரான கருத்துகளை, மதவெறியைத் தூண்டும் பேச்சுகளை பொதுவெளிகளில் பேசும் அளவுக்குத் துணிச்சல் பெற்றுவிட்டனர்.
கடந்த 2014 மே மாதம், வாஜ்பாய் என்னும் முகமூடியைக் கழற்றி எறிந்துவிட்டு, மோடி முகமூடியை மாட்டிக்கொண்டு மத்தியில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியாவின் முகம் மாறத் தொடங்கியது அல்லது திட்டமிட்டு மாற்றத் தொடங்கினார்கள். ஏற்கனவே இந்தியா இந்து மத நாடு. வேதங்களும், புராணங்களும், யோகங்களுமே இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு. என்பதாகப் பார்ப்பனீயம் உலகமெங்கம் செய்து வைத்துள்ள பிரச்சாரத்திற்கு, பொய் சாட்சிகளைக் கட்டமைத்து வலுசேர்க்கும் வேலையை இன்றைக்கு மோடி - அமித்ஷா கூட்டணி திட்டமிட்டுச் செய்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு, ஆதிக்கத்தின் மூலம் செய்து விடத் துடிக்கிறது.
தன்னுடைய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி, போகும் நாடுகளுக்கெல்லாம். கையோடு பகவத் கீதையைக் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்து, இந்தியாவின் தேசிய நூலாக்கப் பாடுபடுகிறார் சுஷ்மா ஸ்வராஜ். பன்முகத் தன்மையைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் தமிழ்நாடு உடனே எதிர்க்கிறது.
பசுவதைத் தடைச்சட்டம். அதன் நீட்சியாக மாட்டுக்கறிக்குத் தடை, முத்தலாக்கிற்குத் தூக்குத் தண்டனை என்று மதச்சட்டத்தால் நாட்டை ஆளத்துடிக்கும் பாஜகவின் எண்ணத்தை அடித்து நொறுக்க, இந்தியாவெங்கும் போராடிய மக்கள் கையில் எடுத்தது, தந்தை பெரியார் என்னும் சமூகநீதிச் சாட்டையைத்தான்.
பள்ளிகளில் இந்திப் பாடம், பாடத்திட்டத்தில் யோகா பயிற்சி என, முரளிமனோகர் ஜோஷியின் சூத்திரத்தை மீண்டும் கையில் எடுத்தனர். புதிய கல்விக் கொள்கை என்னும் பெயரில் குலக்கல்வித் திட்டத்தைப் புதுப்பிக்கப் பார்க்கின்றனர். நீட்டைக் கட்டாயமாக்கி, இந்தியா முழுமைக்கும் ஒரே பாடத்திட்டத்தைக் கொண்ட கல்வியைப் புகுத்த முயற்சிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., கும்பலின் காவிமயக் கொள்கையை வீரியமாக எதிர்ப்பதோடு, மற்ற மாநிலங்களுக்கும் எச்சரிக்கை மணியடிக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.
தேர்தல் அரசியலை எடுத்துக் கொண்டால், ஒட்டு மொத்த அதிகாரத்தையும், தேர்தல் ஆணைத்தையும் பயன்படுத்திக் கொண்டு மக்களாட்சியின் மாண்பைக் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது மோடி - அமித்ஷா கூட்டணி. தேர்தலில் பெரும்பான்மை பெறாத மாநிலங்களிலும், பேரங்களின் மூலமும், உருட்டல், மிரட்டல் மூலமும் கூட்டணி வைத்து ஆட்சியில் அமர்ந்து கொண்டு, ஒட்டு மொத்த இந்தியாவுமே காவி மயமாகிவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்தியா இந்துக்களின் நாடு என்றும், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இங்கிருக்க உரிமையற்றவர்கள் என்றும் நச்சுக்கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். மதவாத அரசியலால் மக்களைப் பிளவுபடுத்தி வரும் பாஜகவிற்கு எதிராக, மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் ஓரணியில் திரண்டு வருகின்றன. மதவாதத்திற்கு எதிரான அணியைக் கட்டமைப்பதில், தமிழ்நாடு, குறிப்பாக திமுக முன்னணியில் நின்று செயல்படுகிறது.
மொழி, இன, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான, எதிர்ப்பாற்றலையும், தத்துவ அடித்தளத்தையும் கொண்டிருப்பதுடன், அவற்றை அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிற்கும் உணர்த்திக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாடு முன்னெடுத்த மொழிப்போராட்டமே, கேடயமாக நின்று தங்களுடைய தாய்மொழியையும் காத்து வருகிறது என்ற உண்மையை இந்தியாவின் பிற மாநிலங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. தெலங்கானாவின் சட்டமன்றத்தில், இடஒதுக்கீடு குறித்து அறிவிப்பு செய்யும்போது, முதல்வர் சந்திரசேகர்(ராவ்) தந்தை பெரியாரை நினைவு கூர்கிறார். கர்நாடகத்தில், மொழி உரிமை குறித்துப் பேசும்போது, சித்தராமையா தமிழ்நாட்டின் மொழிப்போராட்டத்தை மேற்கோள் காட்டுகிறார். தமிழ்நாட்டில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்த அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்திற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் செயல்வடிவம் கொடுக்கிறார். இப்படி எல்லா வகையிலும், ஆர்.எஸ்.எஸ்., பாஜக கூட்டணியின் மதவாத அரசியலை முறியடிக்கும் தத்துவாயுதங்களின் வார்ப்படப் பட்டறையாகத் தமிழ்நாடு இருக்கிறது.
விளைவு, இயல்பாகவே ஆர்.எஸ்.எஸ். - பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு பகை இலக்காகிப் போனது. எனவே, பகையை ஊடுருவி அழிப்பது அல்லது உள்வாங்கிச் செரிப்பது என்ற, தங்களுக்கே உரிய பார்ப்பனியத் தந்திரத்தைக் கையில் எடுக்க முடிவு செய்தனர். தமிழ்நிலப்பரப்பின் மண்ணும், காற்றும் கூட சமூக நிதி அரசியலை சுவாதித்தே உயிர்வாழ்வதால், உள்வாங்கிச் செரிப்பது அவ்வளவு எளிதான காரியமாக அவர்களுக்கு இல்லை. பார்ப்பனியம் வேரூன்ற முயற்சிக்கும் போதெல்லாம். முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் இயல்புடையது தமிழ்நாட்டின் அரசியல் - சமூகக் களம். எனவே உள்வாங்கிச் செரிக்கும் தந்திரம் எடுபடாது என்ற உண்மை புரிந்ததும். ஊடுருவி அழிக்கும் தந்திரத்தைக் கையில் எடுத்தனர். மறைந்திருந்து ஆடுவதற்கான இடமாகத் தலைமையில்லாத அதிமுக அவர்களுக்குக் கிடைத்தது.
விடுவார்களா?
தமிழ்நாட்டின் வளமான நிலப்பரப்பும், தமிழர்களின் நலமான வாழ்வும், உறுதியான தத்துவப் பின்புலமும் அழிக்கப்பட்டாக வேண்டும் என்ற திட்டத்துடன் களமிறங்கியது பாஜக - ஆர்.எஸ்.எஸ் கூட்டணி. பதவியும், பணமுமே தங்கள் வாழ்நாள் லட்சியம் என்ற எண்ணத்தில் இருக்கும் அதிமுக ஆட்சியாளர்கள், மோடி - அமித்ஷா தட்டும் தாளத்திற்கு ஆடத் தொடங்கியது அவர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம்.
கதிராமங்கலத்தில் மீத்தேன் எடுக்கும் திட்டம்.
தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம்.
தஞ்சை டெல்டா விவசாயப் பகுதிகளை
பெட்ரோலிய மண்டலமாக்கும் திட்டம்.
கூடங்குளம் அணுஉலைத் திட்டம்.
இப்படி அடுக்கடுக்காக, பேரழிவு தரும் திட்டங்களை எல்லாம் தமிழ்நாட்டில் கொண்டு வந்து குவித்துவிட்டது மத்திய அரசு. அதுமட்டுமா, நீட் தேர்வைக் கொண்டு வந்து திணித்து, சிறந்த மருத்துவர்களை உருவாகித் தந்து கொண்டிருந்த தமிழ்நாட்டின் பிள்ளைகளை, ஏமாற்றத்தில் தள்ளி, தூக்கில் தொங்கவிட்டு, கொக்கரித்து நிற்கின்றரே பார்ப்பன பனியாக்கள். இதெல்லாம் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தெரியாதா? தெரியும். சுயநலமே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் என்பதால் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டைச் சூறையாடுவதற்கும், தமிழர்களை அழித்தொழிப்பதற்கும் ஐந்தாண்டு திட்டம்தீட்டி செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், அதன் ஆதரவு பெற்ற வடநாட்டுப் பெருமுதலாளிகளுக்கும் சிறியளவிலான இடையூறுகூட இருந்துவிடக் கூடாது என்பதில் மட்டும் தமிழக அரசு கவனமாக இருக்கிறது. பா.ஜ.க. வின் பேரழிவுத் திட்டங்களை எதிர்த்து, போராடிய மக்களை காவல் துறையைக் கொண்டு, சட்டத்தைக் காட்டி தமிழக அரசு மிரட்டிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான், தலைநகர் சென்னையின் கடற்கரைச் சாலையில், ஆர்.எஸ்.எஸ்.சின் பேரணி, தமிழகக் காவல்துறைப் பாதுகாப்புடன் நடந்து முடிந்தது என்பதை நாம் கவனத்தில் கொண்டு வந்து, ஆழ்ந்து சிந்தித்தால், தமிழ்நாடும், தமிழர்களும் எதிர்கொண்டிருக்கும் பேராபத்து தெளிவாக விளங்கும்.
சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, மெரினாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் அன்றாடங்காய்ச்சி மக்களின் மீது வேட்டை நாயைப்போல் பாய்ந்த காவல்துறை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடிய மக்களைச் சுட்டுத் தள்ளியிருக்கிறது. சல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், தாக்குதல் குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என்றார். பிறகு, போராட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டனர் என்று சட்டமன்றத்திலேயே சொன்னார். இன்று முதல்வராக இருக்கும், எடப்பாடி பழனிச்சாமியும், துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு எதுவுமே தெரியாது, சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டார்கள் என்கிறார். காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் அதிமுக முதல்வர்களுக்கே தெரியாமல், தமிழகக் காவல்துறைக்கு உத்தரவுகள் எங்கிருந்து, யார் மூலம் வருகின்றன? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைப் பொறுத்தளவு, பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்களும், அங்கு சென்று வந்த வழக்கறிஞர்கள் தரும் செய்திகளும், ஒரு சில நேர்மையான ஊடகவியலாளர்களின் பதிவுகளும் இரண்டு நபர்களை நோக்கித்தான் கைகாட்டுகின்றன. ஒருவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இன்னொருவர் ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழ்நாட்டு ஏஜென்ட்டும், துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி. இவர்களுக்குப் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த உத்தரவின் பேரிலேயே, தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எனக் கூறப்படுகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தில், உத்தரப்பிரதேசத்தில் ரத்த ஆறு ஓடியதே. ராம் ரஹீம் சிங் என்ற வடநாட்டுச் சாமியார் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டபோது, அவரது ஆதரவாளர்கள் அரங்கேற்றிய வன்முறை வெறியாட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனரே. அங்கெல்லாம் நடத்தப்படாத துப்பாக்கிச் சூடு, கோரிக்கை மனு கொடுக்கச் சென்ற தூத்துக்குடி மக்களின் மேல் நடத்தப்பட்டதற்கான காரணம் என்ன?
இங்கிருப்பது மாநில அரசு போன்ற ஒன்றே தவிர, மாநில அரசு அன்று. தங்களுடைய பிரதிநிதியான ஜெயலலிதாவின் ஆட்சியில், தில்லை நடராசர் கோவில் பறிப்பு, சேதுசமுத்திரத் திட்ட எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்புக்கும், இராமர் கோவில் கட்டுவதற்கும் ஆதரவு, மதமாற்றத் தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை என, மாநில அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சாதித்துக் கொண்டனர். இப்போது, சகல அதிகாரங்களும் தனக்கே என்னும் சர்வாதிகாரச் சிந்தனையுள்ள மத்திய அரசும் அவர்களுக்கான அரசாக இருப்பதால், தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசிவிட்டு, சுதந்திரமாகத் தமிழ்நாட்டில் சுற்றித் திரிகின்றனர். இப்படி, எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாடு தமிழர்களுக்கானதாக இப்போது இல்லை.
இரண்டு நிகழ்வுகளை இங்கே ஒப்பிட்டுக் காட்டுவது இன்றைய சூழலை புரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஒன்று, லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தின் முன் நடைபெற்ற, தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவான போராட்டம். லண்டன் வாழ் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், தற்போது லண்டன் சென்றுள்ள, திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொள்ளக் கூடாது என, சில ‘தூய’ தமிழர்கள் எதிர்த்துள்ளனர். மக்களுக்கான போராட்டமே முகாமையானது என்று கருதிய பேரா. சுபவீ அதில் கலந்து கொள்ளவில்லை.
இரண்டாவது, அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில், தமிழ்நாடு ஃபவுண்டேசன் என்ற தமிழ்ச்சங்க அமைப்பின் கூட்டம். அதில், ‘தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்துவோம்’ என்று அறிவித்தவுடன், அரங்கில் இருந்த வெளிநாடு வாழ் ‘இந்தியப் பார்ப்பனர்’கள் கூச்சல் போட்டுக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழ்ச்சங்கக் கூட்டத்தில், தமிழர்களின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்துவது கைவிடப்பட்டுள்ளது.
கடல் கடந்து சென்றாலும், கட்சி மாச்சரியங்களையும், அரசியல் பகையையும் விடாமல் எடுத்துச் சென்று, உயிர்போகும் நிலையிலும், பிரிந்தே கிடக்கின்றனர் தமிழர்கள் என்பதற்கு முதலில் சொன்ன நிகழ்வு அண்மைக்கால சான்று. ஆனால், சொந்த நாடு என்ற ஒன்று இல்லாதபோதும், செல்லும் நாடுகளில் எல்லாம், பார்ப்பனர்கள், பார்ப்பனர்களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு இரண்டாவதாக சொன்ன நிகழ்வு சான்று.
“தமிழின்பேர் சொல்லிமிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில்
வாழ்ந்திட்டாலும்
தமிழழித்துத் தமிழர் தமை
தலைதூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்”
என்னும் திராவிடக் கவிஞர் பாரதிதாசனின் எச்சரிக்கையைத் தமிழறிந்த தமிழ்த் தலைவர்கள் மறந்தது எப்படி?
இந்த இடத்தில், ஈழத்தையும், இன்றைய தமிழகத்தையும் மீண்டும் ஒருமுறை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஈழத்தில், தேசிய இன விடுதலைக்காகப் போராடிய தமிழர்களை, பவுத்த நாடும், காந்தி தேசமும் முள்ளிவாய்க்கால் என்னும் சிறுபகுதிக்கு விரட்டியடித்து, கொத்துக் கொத்தாகக் கொன்றழித்தன. அம் மக்களின் விடுதலை முழக்கத்தை துப்பாக்கி முனையில் மவுனிக்க வைத்தனர். அது மே 19!
தமிழகத்தில், தங்களின் தலைமுறைகளுக்கு உயிர்வாழும் உரிமை கோரிப் போராடிய தூத்துக்குடி மக்களை, மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும், தாங்கள் குறித்து வைத்த எல்லைக்குள் வரவைத்து, துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாக்கி இருக்கின்றன. தமிழர்களின் போராட்ட உணர்வுகளை முடக்கிப் போடத் தூத்துக்குடியில் ஆயுத ஒத்திகை நடத்தியுள்ளனர். இது மே 22!
மொழியை அழிக்கப்பார்த்தார்கள் - முடியவில்லை.
தேசிய இன அடையாளத்தை சிதைக்கப் பார்த்தார்கள் - நடக்கவில்லை.
இன்னும் என்னென்னமோ குறுக்கு வழிகளைக் கையாண்டு பார்த்தார்கள் - பலிக்கவில்லை.
இப்போது, ஆட்சியும், அதிகாரம் கையில் இருக்கும் போதே தமிழர்களை அழித்து விட எண்ணி, மிருக பலத்துடன் பாயத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு மேலும், நாம் சாதித் தமிழர்களாகவும், கட்சித் தமிழர்களாகவும் பிளவுபட்டுக் கிடப்போமானால், குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.... தமிழ்நாடு தமிழருக்கில்லை.
- இரா.உமா