தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை திசைதிருப்பும், மழுங்கடிக்கும் இனவாத, வெள்ளாளிய கருத்துக்கள் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும் இந்திய துணைக்கண்ட அளவில குறிப் பாக நமது தமிழ்த் தேசத்தில் “இந்துத்துவா பாசிச அபாயம்” வளர்ந்து வரும் நிலையில், இந்துத் துவா குறித்தும், இந்துத்துவா அரசியலுக்கு மாற்று என்றும் பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப் படுகின்றன. இந்நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளும் சரியான புரிதலை வந்தடைய வேண்டிய தேவை உள்ளது. அதற்கான முயற்சியின் முதல் படியாக நாம் முக்கியமாக கணக்கில் கொள்ள வேண்டிய விவாதங்களை உங்கள் முன்வைக்கின்றேன்.

இந்துத்துவா பாசிசத்திற்கு எதிரான போராட் டத்தில் மிக அபாயகரமான திசை விலகலானது, “இந்துத்துவா அரசியலுக்கு மாற்று” என்று கூறிக்கொண்டே இந்துத்துவாவிற்கு சேவை செய்யும் “வெள்ளாளிய கருத்தியல் முன் வைக்கப் படுவதுதான். இந்துத்துவாவிற்கு எதிரான தமிழ்த்தேச மக்களின் போராட் டத்தை இந்துத்துவா பாசிசத்திற்கு பலியாக்கும் கருத்தியலானது முன்வைக்கப் படுகின்றது. இதில் முதன்மையாக நாம் முறியடிக்க வேண்டியது தமிழ்த்தேசிய பேரியக்கத்தின்” தோழர்கள் பெ. மணியரசன், கி. வெங்கட் ராமன் ஆகியோரின் கருத்தியலே ஆகும்.

இனவாத அணுகுமுறை

இந்திய துணைக்கண்ட அளவில் முதலில் வரலாற்றை தொகுத்தவர்கள் ஐரோப்பியர்களே. உலகம் முழுவதையும் ஒடுக்கிக் கொண்டிருந்த அய்ரோப்பிய மேலாதிக்கத்தை நியாயப் படுத்தும் நோக்கிலேயே கருத்துக்கள் வெளியிடப் பட்டன. இதில் அதிக முக்கியமானது ஆரிய இனவாத மேன்மையை முன்னிறுத்தியதே. நாகரீகங்களே ஆரியர்களால்தான் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது என பெருமையடித் தனர். இதனால் தங்களது ஆட்சி இந்திய துணைக் கண்ட பகுதி மக்களுக்கு சொர்க்க வாசலை திறந்து வைக்கும் என்று கதையளந்தனர். “மேடம் பிளாவட்ஸ்கிதான்” இத்தகைய ஆரிய இனவாத கருத்தை முன்வைத்தவர்.

இதையட்டியே பிராமணர்கள் தங்களின் ஆரிய மேன்மையை உயர்த்தி பிடித்து ஆரிய இனவாத அடிப்படையிலான வரலாற்றை கட்டியமைத்தனர். இதற்கு எதிராக திராவிட மேன்மையை உயர்த்தி பிடிக்கும் வரலாறு தந்தை பெரியாரால் கட்டமைக்கப்பட்டது.

இராமன் ஆரியர்; இராவணன் திராவிடன், ஆரிய இனத்தை ஒழிப்பதில்தான் திராவிட இனத்தின் மேன்மை உள்ளது என்ற கருத்துக் கள் முன்வைக்கப்பட்டன. ஆரிய இனத்தின் எதிர்ப்பாக பார்ப்பன எதிர்ப்பு முன்வைக்கப் பட்டது. அனைத்து சிக்கல்களும் ஆரியன்& திராவிடர் என்ற மரபினவாத கண்ணோட் டத்தில் அனுகப்பட்டது.

தோழர் மணியரசன் தனது பெரியார் எதிர்ப்பில் அடிப்படையாக முன்வைத்ததே திராவிட மரபினவாதத்தால் தமிழ்த் தேசிய சிக்கல் திட்டமிட்டே புறந்தள்ளப்பட்டது என்பதுதான். திராவிட மரபினவாதத்தை எதிர்த்த தோழர் மணியரசன் ஆரிய இனத் திற்கு எதிராக தமிழினவாதத்தை முன்வைக்க தொடங்கவிட்டார்.

இந்துத்துவா அரசியலுக்கு மாற்று தமிழ்த் தேசியமே- எனும் தமது நூலில் பெ. மணியரசன் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்.

“இந்துத்துவா என்பது வெறும் மதவாதம் மட்டுமல்ல; ஆரிய இனவாதமும் ஆகும்”. (பக்கம்.14)

“ஆரியத்தை முறியடிக்க நாம் தமிழினத் தை முன்வைக்க வேண்டும். பார்ப்பனீயத் தை வீழ்த்த தமிழர் அறத்தை ஏந்த வேண்டும்” (பக்கம். 62) என்று முழக்கமிடும் மணியரசன் கடைசியில் அதே மரபினவாத சகதியில் தமிழ்த் தேசிய மக்களை தள்ள துணிந்துவிட்டார்.

“திராவிடர்கள் என்ற பெயரில் இனம் கிடையாது. எனவே திராவிடர்கள், ஆரியத்தை எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பா.ச.க. அரசு இந்தியை திணிப்பதையும் சமஸ்கிருதத்தை திணிப்பதையும் மொழிச் சிக்கலாக மட்டும் பார்க்கக்கூடாது. இது அடிப்படையில் இனச்சிக்கல். நம்மைப் பொறுத்தவரை ஆரிய இனத்திற்கும் தமிழினத் திற்குமான சிக்கல்.” (பக்கம்.26) -என்று தமிழ்த் தேசியம் எதிர்கொள்ளும் அனைத்து சிக்கல் களுக்கும் சர்வரோக நிவாரணியாக ஆரிய இனத்திற்கும் தமிழினத்திற்குமான சிக்கல்தான் என்று மரபினவாத கண்ணோட்டத்தை, மரபினவாத அணுகுமுறையை முன்வைக் கிறார் தோழர் மணியரசன்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாணத்தின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா ஆகியவை இருந்ததாலும் தேசிய இனம் குறித்த கருத்தாக்கம் முன்னுக்கு வராத சூழலாலும் மரபினம் சார்ந்த கருத்தியல் முன் வைக்கப்பட்டது. மேடம் பிளாவட்ஸ்கி ஆரிய இனவாதத்தை முன்வைத்தார். அயோத்தி தாசப் பண்டிதர் ஆரிய இனவாதத்தை எதிர்த்து பூர்வ பௌத்தம் என்ற கருத்தியலை வைத்தார். தந்தை பெரியார் ஆரிய இனவாத கருத்தியலை எதிர்த்து முறியடிக்க திராவிட இன கருத்தாக் கத்தை முன்வைத்தார்.

மொழிவழி தேசிய இனங்களுக்கான, பழங்குடி தேசங்களுக்கான உரிமைப் போராட்டம் இந்திய துணைக்கண்டம் முழுக்க படிப்படியாக முன்னுக்கு வர நேரு தலைமையிலான இந்திய பிராந்திய பெரு முதலாளிகளின் அரசு தேசிய இனப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கி, தந்திரங்களை கையாண்டு இத்தேசங்களின் அனைத்து உரிமைகளையும் பறித்து மொழி வாரி தேசிய இனங்களின், பழங்குடி தேசங் களின் சிறைக்கூடமாக இந்திய ஒன்றிய அரசை நிறுவியதோடு எவ்வித அதிகாரமும் அற்ற மொழிவாரி மாநிலங்களை அமைத்தது.

மொழிவாரி மாநிலங்கள் அமைந்தவுடன் தந்தை பெரியார் “சுதந்திர தமிழகம்” என்ற முழக் கத்தை முன்வைத்தார். “சுதந்திர தமிழகம்” என்ற முழக்கத்தை அடிப்படையாக கொண்டு இந்திய ஒன்றிய அரசின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக் குகிறார். தமிழ்த்தேசிய சிக்கலை ஆழமாக முன்வைக்கிறார். தந்தை பெரியாரின் “சுதந்திர தமிழகம்” முழக்கத்தை இனவாதத்தை, வெள்ளா ளியத்தை முன்வைக்கும் தமிழ்த்தேசிய சக்தி களும் ஓட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் திராவிட கட்சிகளும் திட்டமிட்டே மறைக்கின்றன.

ஆரிய இனம் என்பது பார்ப்பனர்கள் என்ற அளவில் சுருங்கிவிட்டது. திராவிட இனம் என்பதும் தமிழ்நாடு என்று சுருங்கிவிட்டது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா தேசங்களில் திருவிடம் என்ற கருத்தாக்கமே காணாமல் போய்விட்டது. மரபினம் சார்ந்த கருத்தியல்கள் காலாவதியாகி வரும் நிலையில், இந்திய பெரு முதலாளிகளின் நலனுக்காக, இந்திய பிராந்திய சந்தையை சுரண்டலை கட்டிக் காக்க கட்டியமைக் கப்பட்ட “இந்திய தேசம்” என்ற கருத்தியலும் கட்டமைப்பும் வலுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தோழர் மணியரசன் தமிழ்த் தேசிய விடுதலைக்கான எதிரியாக “ஆரிய இனத்தை” அடையாளப்படுத்துகிறார். இது எந்த உள்நோக்கத்தில் என்பது அவருக்கே வெளிச்சம்.

தமிழ்த் தேசியச் சிக்கலின் உள்ளார்ந்த அடிப் படைகளை அலசி, ஆய்ந்து முடிவெடுப்பதற்கு தடையாக உள்ள அறிவு சோம்பேறித்தனம், தமிழ்த்தேசிய கருத்தியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்க கருத்தியல்களாகிய   ஆகியவற்றில் சாதியம், வெள்ளாளியம், பார்ப் பனியம், இனவாத கருத்தியல் இருந்து முறித்து கொள்வதற்கு பதில் ஆளும் வர்க்க கருத்திய லுக்கு பலியாகி தமிழ்த்தேசியச் சிக்கலை தீர்ப்பதற்கான இலகுவான குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ள பெ. மணியரசன் ஆரிய இனம்&தமிழினம் என்ற ஒற்றைச் சிக்கலில் தமிழ்த் தேசியச் சிக்கலை உள்ளடக்க முயற்சிக்கின்றார்.

“இந்திய தேசம்” என்ற கருத்தாக்கத்தை, கட்டமைப்பை உடைத்தத் தமிழ்த்தேச விடுதலைக்கான மையப்புள்ளி என்பதி லிருந்து தமிழ்த்தேசிய விடுதலைக்கான அரசியல் சக்திகளை திசை திருப்ப முயற்சிக் கின்றார். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட் டத்தில் நாம் களமாட வேண்டிய பல்வேறு அரசியல் போராட்டங்கலிருந்து நம்மை திசை திருப்பி ஆரிய இனம்&தமிழினம் என்ற ஒற்றைப் போராட்டத்தில் நம்மை தள்ளப்பார்க்கிறார் தோழர் மணியரசன்.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதற்கு, தமிழ்த்தேசிய சமூக கட்டமைப்பை, செம்மரக்கடத்தல் மாப்பியா கும்பலை பாசிச சந்திரபாபு நாயுடுவை எதிர்ப்பதற்கு பதில் ஆந்திர தேசிய இனத்தையே எதிரியாக காட்டு கிறார். காவிரி நதி நீர் சிக்கலை தீர்க்காமல் கர்நாடகா, தமிழ்த்தேசிய மக்களை தொடர்ந்து மோதவிடவும் தஞ்சையை பாலைவனமாக்கி, பெருமுதலாளிகள் கொள்ளைக்காடாக்கவும் வழிவகை செய்யும் இந்திய அரசு மற்றும் கர்நாடகா, தமிழக அரசின் கூட்டுச்சதியை எதிர்க்காமல் கர்நாடக தேசிய இனத்தையே எதிரியாக காட்டுகிறார். இது போல் முல்லைப்  பெரியாறு சிக்கலில் கேரள தேசிய இனத்தை எதிரியாக காட்டுகிறார்.

ஆந்திரா, கர்நாடகா, கேரள தேசிய இனங்கள் தமிழின விரோதிகளே என்று தமிழகத்தில் பரவலாக சுவரொட்டி ஒட்டி “இனவாத பாசிசத்துடன்” முழக்கமிடுகிறார் தோழர் மணியரசன். மிகப் பலம் வாய்ந்த இந்திய ஒன்றிய (சிறையை) அரசை தகர்க்க அனைத்து தேசிய இன மக்களுடன் (ஆளும் வர்க்கங் களுடன் அல்ல) ஐக்கியப்பட்டு போராட வேண்டியதன் அவசியத்தை மறுக்கும் தோழர் மணியரசன் தேசிய இனங்களுக்கிடையிலான பகையை வளர்ப்பதன் மூலம் “இந்திய தேசியத்திற்கு” சேவகம் செயகிறார்.

இந்துத்துவமானது ‘இந்திய தேசம்’, இந்தி& சமஸ்கிருத மொழித் திணிப்பு, இந்து மதவெறி, சாதியம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, ஆரிய இனவாதம், வெள்ளாளியம், பார்ப்பனியம் என்ற அனைத்து கூறுகளையும் கொண்டதாகும். இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டம் என்பது மேலே கூறப்பட்டுள்ள அனைத்து கூறுகளுக்கும் எதிரான போராட்டமாகும்.

இந்தியத் தேசியத்தை முறியடிக்க தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைத்து போராடுவது, இந்தி, சமஸ்கிருதம் (ஆங்கிலம் உட்பட) மொழித் திணிப்பை முறியடிக்க தமிழ் மொழியை, தாய் மொழியை முன்வைத்து போராடுவது, இந்து மதவெறியை முறியடிக்க மதச்சார்பின்மை (மதத்தை தனிநபர் உரிமையாக மட்டும் மாற்று வது) கொள்கையை முன்வைத்து போராடுவது, சாதியை முறியடிக்க சாதி ஒழிப்புப் போராட் டத்தை முன்னெடுப்பது, பெண்ணடிமைத் தனத்தை முறியடிக்க மூத்தோன் வழி ஆணாதிக் கத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பது, மூட நம்பிக்கையை முறியடிக்க பகுத்தறிவு ஆயுதத்தை ஏந்திப் போராடுவது, ஆரிய இன வாதம், பார்ப்பனியம், வெள்ளாளியப் பண் பாட்டை&கருத்தியலை ஒழிக்க அறிவியல் பூர்வ& சனநாயகபூர்வ பண்பாட்டை முன்வைத்து போ ராடுவது என்பனவே ஆகும்.

இந்துத்துவாவை வீழ்த்த பன்முகத் தன்மை யிலான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இந்துத்துவாவின் பன்முகத் தன்மை யையும், இந்துத்துவாவை வீழ்த்த நாம் முன் னெடுக்க வேண்டிய பன்முகத் தன்மையிலான போராட்டத்தையும் புறக்கணிக்கும் (அ) திசை திருப்பும் தோழர் மணியரசன் இந்துத்துவாவை ஆரிய இனவாதம் என்ற ஒற்றைப் பரிமாணத்தில் சுருக்குவதோடு, இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை ஆரிய இனவாதத்திற்கு எதிரான ஒற்றைப் போராட்டமாக சுருக்கப் பார்க்கிறார்.

தந்தை பெரியார் பார்ப்பனியத்திற்கு எதிராக சாதி ஒழிப்பு பெண் விடுதலை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று பண்பாட்டு தளத்தில் வெள்ளாளியத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் (இந்துத்துவாவிற்கு) ஆரிய இனவாத கருத்தியலுக்கும் எதிராக மிகச் சரியாக பதிலடி கொடுத்தார். ஆனால் ஆரியத் திற்கு எதிராய் தமிழினத்தை இனவாத கண்ணோட் டத்தில் முன்வைக்கும் தோழர். மணியரசன் பார்ப் பனியத்தை வீழ்த்த “தமிழர் ஆன்மீகம்”, தமிழர் மரபு ஏந்த வேண்டும் என்று இந்துத்துவாவின் இன்னொரு முகமான (ஒரு முகம் பார்ப்பனியம்) வெள்ளாளியத்தை முன்வைக்கிறார். இதை சற்று விரிவாக பார்ப்போம்.

தமிழர் அறம்&தமிழர் ஆன்மீகம்&-தமிழர் மரபு என்று வெள்ளாளியத்தை பிற்போக்கு சாதிய&நிலவுடமை கருத்தியலை முன்வைக்கும் பெ. மணியரசன்

இன்றைய தமிழ்த் தேசத்தில் தாய்வழிச் சமூகம் இருந்த காலத்தில் “கொற்றவையே” குலங்களின் கடவுளாக இருந்தார். முருகன் கொற்றவையின் பூசாரியாக இருந்தார். படிப் படியாக தந்தை வழிச் சமூகமாக மாறியபோது ஆண் கடவுள்கள் முன்னுக்கு வந்தனர். கொற்றவை ஓரங்கட்டப்பட்டு அவர் பாலைக் கடவுளாக மாற்றப்படுகிறார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை கடவுள்களாக முருகன், வருணன், திருமால், வேந்தன், கொற்றவை விளங்கினர்.

பிறகு சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் பரவுகின்றன. இதில் சமணம் அரசு மதமாக மாறியது. மக்களிடம் சிறு தெய்வ வழிபாடே நிலவி வந்தது. சமணம் குறைந்த அளவே மக்களிடம் சென்றது.

இந்திய துணைக்கண்டத்தின் வடக்கில் கி.பி. 200&-500-இல் குப்த பேரரசு ஆண்ட காலத்தில் சாதிய நிலவுடமை சமூகம் கட்டியமைக்கப் பட்டது. சாதிய நிலவுடமைச் சமூகத்தை கட்டி யமைப்பதற்கு, பிராமணர்களின் சைவ-&வைணவத்தை உட்செரித்த பார்ப்பனிய  கருத்தியலே ஆதாரமாக இருந்தது. பல்லவர் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக மகேந்திரவர்மன் என்ற அரசன் (கி.பி. 600&-630) சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறுகிறான். அப்பொழுது தமிழ கத்தில் ஆளும் வர்க்கமாக (நிலவுடமையாளர் களாக) இருந்த வெள்ளாளர்கள் பிராமணர் களுடன் கூட்டுச் சேர்ந்து சாதிய நிலவுடமைச் சமூகத்தை கட்டியமைத்தனர்.

பல்லவர் ஆட்சியிலும் பிற்காலச் சோழர் ஆட்சியிலும் ஆழ்வார்களாலும், நாயன்மார் களாலும் “முதல் பக்தி இயக்கம்” தொடங்கப் பட்டது. “சைவ சித்தாந்தமே” வெள்ளாளர்கள் -பிராமணர்களுடன் (பார்ப்பனியத்துடன்) கூட்டு சேர்ந்து உருவாக்கிய “வெள்ளாளிய கருத்தியலே” சாதிய நிலவுடமைச் சமூகத்தை தமிழகத்தில் கட்டியமைப்பதற்கான கருத்திய லாக அமைந்தது.

முதலாம் நரசிம்மவர்மனின் (கி.பி. 630&-668) படைத்தலைவன் பரஞ்சோதியே, பிறகு சிறுத் தொண்ட நாயனாராக திருத்தொண்டத் தொகையில் இடம் பெற்றார். தமிழகத்தில் சைவம் ஆட்சி மதமாகி, சைவம் மதநிறுவனமாக மாறிய நிலையில் சைவத்தின் எதிர்ப்பு குரலாக “சித்தர் மரபு” தோற்றம் பெற்றது.

15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜய நகர பேரரசு தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. விஜய நகரம் பேரரசின் ஆட்சி மதமாக வைணவம் இருந்ததால், தமிழகத்தில் உள்ள ஆளும் வர்க்கங் கள் சைவ&-வைணவத்தை இணைக்க முனைந் தனர். இம்முனைவின் விளைவே “இரண்டாம் பக்தி இயக்கம்”. இக்காலத்தில் விஷ்ணுவும் சிவனும் அரசருக்கான அதிகாரத்துவ அடையாள மாயினர். அருணகிரி நாதரும் குமரகுருபரரும் இரண்டாம் பக்தி இயக்கத்தை முன்னெடுத் தனர்.

சிவனையும் -விஷ்ணுவையும் இணைக்கும் பாலமாக திணைக் கடவுளான முருகனை பெருங் கடவுளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முருகனை சிவனுக்கு மகனாக்கி, விஷ்ணுவுக்கு மருமகனாக்கி, விநாயகருக்கு தம்பியாக்கி, தெய்வாணைக்கு கணவராக்கி, முருகனை இவ்வாறு பார்ப்பனியமயமாக்கியதன் மூலம் சைவ&-வைணவத்தை இணைக்கும் பாலமாக முருகக் கடவுளை முன்னிறுத்தினர். எனவே இரண்டாம் பக்தி இயக்கத்தின் பாடு பொருளாக முருகக்கடவுளே இருந்தார். ஐந்திணை கடவுளில் ஒருவரான திருமால் விஷ்ணுவின் அவதாரமாக மாற்றப்பட்டார். வேந்தன் சிவனாக உள்வாங்கப்பட்டார்.

பல்லவர், சோழர், பாண்டியர், விஜய நகரப் பேரரசுகளின் காலங்களில் முறையே சைவ&-வைணவ மதங்களே ஆட்சி மதமாக இருந்தது என்றாலும் மக்களிடம் பரவலாக குலதெய்வ, சிறுதெய்வ வழிபாடே மேலோங்கியிருந்தது.

வெள்ளாள&-பிராமணர் ஆதிக்கத்திற்கு 1894&-95- பிரிட்டிஷ் அரசு கணக்கெடுப்பு விவரம் சாட்சியாக விளங்குகிறது. செங்கற்பட்டு மாவட்ட மக்கள் தொகை 2,71,000. மிராசு தாரர் குடும்பங்கள் 8,000. வன்னியர், பறையர் களை மிக பெரும்பான்மையாகவுடைய இந்த மாவட்டத்தின் மிராசுதாரர்களில் 52% வெள்ளாளர்கள், 20% பிராமணர்கள் மீதி 23% ஆவர். ஏனைய சாதியினர், இஸ்லாமியர்  ஆட்சியில் வேறு சாதியினருக்கும் மிராசு உரிமை அனுமதிக்கப்பட்டிருந்தும், பிரிட்டிஷ் ஆட்சியில் மேலும் இது அதிகரித்த பின்னரும் இந்த நிலைமையெனில் வெள்ளாளர்& பிராமணர் அரசு அதிகாரம் கைவசம் கொண்டிருந்த பல்லவர், சோழர், பாண்டியர், நாயக்கர் ஆட்சிக் காலத்தில் வெள்ளாளரும், பிராமணரும் நிலவுட மையில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்தியிருப் பார்கள் என்பதை எண்ணிப்பார்க்க முடியும்.

கிறித்துவமும், ஆங்கிலக் கல்வியும், ஆங்கிலேயர் ஆட்சியும் சைவ&-வைணவ மதங்களை ஆட்டங்காண வைத்துவிடுமோ என்று உணர்ந்த இங்குள்ள ஆளும் வர்க்கத் திற்கும் சைவ&-வைணவங்களை உள்ளடக்கிய “இந்து பண்பாடு” என்று சமூக, சமய இயக்கங் களை முடுக்கி விட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ‘இந்து பண்பாடு’ என்ற கருத்தாக் கத்தின் வாயிலாக இந்து மதவெறி அடிப்படை யிலான இந்து பாசிச இந்து இராஷ்டிராவை அமைக்கும் முகமாக இந்து தேசம் என்ற ஒன்றை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியமைத்தான். என்ற புனைவின்மூலம் அவரை திருவுருவாக்கி இந்து பாசிச அரசியலுக்கு சுதந்திரப் போராட்ட காலத்தி லேயே அடித்தளமிட்டனர் வீர சாவர்க்கரும் பால கங்காதர திலகரும்.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்து மதத்தை மக்களிடம் கொண்டு செல்ல தமிழகத்தில் “ஈழத்து ஆறுமுக நாவலரும்”, பஞ்சாபில் ஆரிய சமா ஜத்தை தோற்றுவித்த தயானந்த சரஸ்வதியும் “ஆரிய சமாஜமும்” இந்து மதத்தை  நிறுவுவதற் கான முயற்சியை மேற்கொண்டனர். இதே நேரத்தில் மற்றும் ஒரு கூறாக தமிழகத்தில் வள்ள லாரால் சுத்த சமரச சன்மார்க்கம், வங்காளத்தில் பிரம்மசமாஜம் போன்ற சமய -சமூக சீர்திருத்த இயக்கங்களும் தோன்றின.  பிரிட்டிஷ் எதிர்ப்பு போராட்டத்திலும், கிறித்துவத்திற்கெதிரான போராட்டத்திலும் சைவ&-வைணவத்தை உட்செரிக்கும் முயற்சியின் ஊடாக “இந்து மத உணர்வும்” “இந்தியத் தேசியம்” என்ற உணர்வும் கட்டியமைக்கப்பட்டது. இந்து மத உணர்வு என்பது ஆரிய இனவாதத்தை, பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டியமைக்கப் பட்டன. இந்தியப் பெரு முதலாளி வர்க்கம் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தங்களின் சந்தை, சுரண்டல் நலனுக்காக சுதந்திர போராட் டத்தின் ஊடாக கட்டியமைக்கப்பட்ட “இந்தியத் தேசிய” கருத்துருவாக்கத்தை பயன்படுத்திக் கொண்டது. இந்தியத் தேசியத்தின் மதமாக “இந்து மதத்தை” உருவாக்க முயன்று வருகின்றது. (இதற்கு எதிராகவே பெரியார் திராவிட தேசியத் தையும், அம்பேத்கார் தலித் தேசியத்தையும் உருவாக்க முயன்றனர்)

பௌத்தம், இசுலாமியம், கிறித்துவம் போன்று தனக்கான ஒரு கருத்தை முன்வைத்து உருவான மதமாக இந்து மதம் தோன்றவில்லை. இந்தியப் பெரு முதலாளிகள் தங்கள் நலனுக்காக சமஸ் கிருதத்தையும், தேவநாகரி வரிவடிவத்தையும் இணைத்து இந்தி மொழியை எப்படி உருவாக்கி னார்களோ அனைத்து மொழிவழி தேசங்களை, பழங்குடி தேசங்களை சிறைப்படுத்தி “இந்தியத் தேசத்தை” எப்படி கட்டியமைத்தார்களோ அதே தந்திரத்தில் இந்திய துணைக்கண்டம் முழுக்க அரசு மதமாக இருந்த சைவ&வைணவத்தை உள்ளடக்கி இந்து மதத்தை கட்டியமைக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் இன்று வரை இந்து மதம் என்பது மக்கள் மீது வலிய திணிக்கப் பட்ட மதமாகவே இருக்கிறது. மக்கள் பெரும் பாலும் குலதெய்வ வழிபாடு, சிறு தெய்வ வழிபாட்டையே பின்பற்றி வருகின்றனர். மேலும் சைவ&-வைணவ மதத்தை பின்பற்றுபவர் களாகவுமே உள்ளனர்.

தொகுத்து பார்த்தால் இனக்குழு தாய் வழிச் சமூகக் கடவுளாக கொற்றவையும், ஐந்திணைகளாக தமிழகம் வளரும் போது ஐந்தினை கடவுள்களாக முருகன், வருணன், வேந்தன், திருமால், கொற்றவையும் சாதி-நிலவுடமைச் சமூகத்தை கட்டியமைக்க “சைவ சித்தாந்தம்” (சைவ மதம்) விஜய நகர பேரரசு காலத்தில் சைவ- வைணவ இணைப் புக்காக முருகன் பெருங்கடவுளாக கட்டி யமைக்கப் படுவதும், இந்திய பெரு முதலாளிகள் இந்திய துணைக்கண்டம் முழுக்க சந்தையை, சுரண்டலை நிறுவ “இந்து மதத்தை” கட்டி யமைக்க முயற்சித்து வருவதும் அடுத்தடுத்த வரலாற்று போக்குகளாகும். இது அவ்வப் போதைய ஆளும் வர்க்கங்களின் தேவை யிலிருந்து கட்டியமைக்கப்பட்டது.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியை உள்வாங்கிக் கொள்வதன் மூலமே தமிழகத்தின் தற்போதைய நிலைமையாக ஒவ்வொரு கிராமத்திலும் கெங்கையம்மன், மாரியம்மன் கோயில்களே இன்னமும் உள்ளன. பல ஊர்கள் சேர்ந்து வழிபடும் முனியப்பனும், அய்யனாருமே உள்ளனர். முருகன், சிவன், விஷ்ணு ஆகியன பெருங்கடவுள்களாக உள்ளனர். இவையனைத் தையும் விழுங்கி (அ) உட்செரித்து இந்து மதத்தை உருவாக்க இந்திய பெருமுதலாளி வர்க்கம் இந்துத் துவாவின் மூலம் முயற்சித்து வருகின்றது என்ற யதார்த்த நிலைமையை நாம் புரிந்து கொள்வதன் மூலமுமே இந்து மதவெறிக்கு எதிரான போ ராட்டத்தை நம்மால் கட்டியமைக்க முடியும்.

இந்திய துணைக்கண்டம் முழுவதும் சைவம்&- வைணவம் தான் சாதி&நிலவுடமைச் சமூகத்தை கட்டியமைத்தது. இத்தகைய சைவ&-வைணவ மதங்களைத்தான் தோழர் மணியரசனும், தமிழர் முன்னணி இதழும் இந்துத்துவாவிற்கு மாற்றாக “தமிழர் ஆன்மீகம்” என்று முன்வைக்கின்றனர்.

தமிழர் முன்னணி இதழானது ஒரு படி மேலே போய்... “இஸ்லாமின் உலகளாவிய சகோதரத் துவம், கிருத்துவத்தின் மன்னிப்பும், அன்பும் சிவனிய (சைவ), மாலிய (வைணவ) சமயங்களின் சிறப்பாக புரிந்துக் கொள்ளப்பட்டும் முதிர்ச்சி யாக எதிர் கொள்ளப்பட்டும் வந்துள்ளன”.

(தமிழர் முன்னணி- இதழ்- 2 பக்கம். 6)

மனிதனை மனிதனாகக்கூட மதிக்காத சாதி யத்தை கட்டியமைத்த, பெண்ணடிமைத் தனத்தை கட்டியமைத்த சைவ, வைணவ மதத் தையும் சகோதரத்துவம், மன்னிப்பையும், அன்பையும் வளர்த்த மதங்கள் என்று நம் காதில் பூச்சுற்றுகின்றனர்.

மணியரசன் சுந்தரர் சிவபெருமானை தம்முடைய தோழர் என்பதை தமிழர் ஆன்மீகத் தின் உயர்ந்த பண்பு என்கிறார் (பக்கம்.25)

பெரியாரும் அம்பேத்காரும் இருந்திருந்தால் இவர்களுக்கு தமது சவுக்கடிப் பதிலை கொடுத் திருப்பார்கள். சாதியத்தை கட்டியமைத்து, கட்டிக் காக்கும் சைவ&-வைணவத்தை தோழமை உணர்வை வளர்த்த மதங்கள் என்று புகழாரம் சூட்டுகிறார் தோழர். மணியரசன். மணியரசன் கூறும் தோழமை “சாதியத் தோழமை” என்றால் அந்த தோழமையை சுடுகாட்டுக்கு (சாதியை) அனுப்புவதே தமிழரின் மாற்றுப் பண்பாடாக இருக்கும்.

நாம் தமிழ்த் தேசிய விடுதலையை சாதித்து அமைக்கப்போகும் “சுதந்திர தமிழ்த்தேசிய மக்கள் சனநாயக குடியரசில் முதலாளியச் சமூகத்தை தூக்கியெறிவதன் மூலம் இந்து மதவெறி பாசிசத்திற்கு முடிவு கட்டப்படும். (முதலாளியச் சமூகம் இருக்கும் வரை பாசிச அபாயம் தவிர்க்க முடியாததே ஆகும்) மத அடிப்படைவாதங்கள் மக்கள் எழுச்சியின் மூலம் முறியடிக்கப்படும். மதமானது தனி மனித உரிமை என்ற அடிப்படையில் மட்டுமே அனுமதிக்கப்படும்.”

இதுவே இந்து மதவெறிக்கு சனநாயகப் பூர்வ மான ஒரே மாற்று ஆகும். இதை விட்டு விட்டு இந்து மதவெறிக்கு மாற்றாக, வைணவத்தை தமிழர் ஆன்மீகம், தமிழர் மதம் என்று முன் வைப்பது, இந்துத்துவாவிற்கு சேவை செய்யவே உதவும்.

தமிழகத்தில் மக்களிடம் நிலவும் ஆன்மீக நம்பிக்கையை நாம் செயல் உத்திரீதியாக இந்துத்துவாவிற்கு எதிராகத் திருப்ப முடியும். அதாவது தமிழக மக்களிடம் காலம் காலமாக  உள்ள குலதெய்வ வழபாட்டை, சிறுதெய்வ வழிபாட்டை மற்றும் சைவ&-வைணவ மதங்களை நாம் இந்துத்துவாவிற்கு எதிராக மாற்ற முடியும்.

சான்றிதழ்களில் மதம் என்ற பந்தயத்தில் “இந்து” என்று பதிவதை எதிர்த்து, இந்து என்ற அடை யாளத்தை ஒழிக்கும் விதமாக, சிறுதெய்வங்களை சான்றிதழில் அடையாளமாக பதிவது, சைவம், வைணவ மதத்தை பதிவது என்ற இத்தகைய பதிவு உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

குலதெய்வ வழிபாட்டை, சிறுதெய்வ வழிபாட்டைக் கொண்டு மக்களிடம் “அதையே தனித்த அடையாளமாக்கி” “இந்து அடை யாளத்தை” புறக்கணிக்க வைப்பது (அ) மறுக்க வைப்பது, இதையே சைவ, வைணவ மத நம்பிக்கை கொண்டுள்ள மக்களிடமும் செய்ய வைப்பது, இந்துமதம் சிறுதெய்வ, குலதெய்வ, சைவ, வைணவ தனியடையாளத்தை, இருத்தலை அழிப்பதை எதிர்த்து போராட்டங்களை முன்னெடுப்பது, இதன் மூலம் இந்து மத அடை யாளத்தை பெருவாரியான மக்களிடம் அழித்து இந்து மதவெறிக்கெதிராக மக்களின் ஆன்மீக நம்பிக்கையை நாம் உள்வாங்கி கொள்ளலாம்.

ஐந்திணை கடவுளாக முருகனை முன்னிறுத் தும் சீமான் (நாம் தமிழர் கட்சி) விஜயநகரப் பேரரசு காலத்திலிருந்து முருகனை வெள்ளாளிய பார்ப்பனியமயமாக்கி பெருங்கடவுளாக மாற்றப் பட்டதை பார்க்கத் தவறுகிறார். வெள்ளாளிய -பார்ப்பனியமும் முருகனை பார்ப்பனியமய மாக்கியதை நாம் தெட்டத் தெளிவாக அம்பலப் படுத்தி பார்ப்பனியமயமாக்கத்திற்கு முன்பிருந்த ஐந்திணை கடவுள் முருகனை “இந்து மதத்திற்கு” எதிராய் முன்னிறுத்தலாம். சீமானின் கோமாளித் தனமான சினிமா உதாரணங்களைத் தூக்கி யெறிந்து வரலாற்றியியல் நோக்கில் இதை அணுகவேண்டும்.

இந்து மதவெறிக்கெதிராய் மக்களிடம் உள்ள ஆன்மீக நம்பிக்கையை ஆயுதமாய் நாம் கையில் எடுக்கும்போது எக்காரணத்தை கொண்டும் சாதியம், மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனத்தின் மொத்த அடை யாளமாக உள்ள பார்ப்பனியம், வெள்ளாளி யத்திற்கு பலியாகாமலும் இசுலாமியர், கிருத்துவ மக்களை இந்து மதவெறிக்கு எதிராய் அணிதிரட்டும்போது மத அடிப்படை வாதத்திற்கு பலியாகாமலும் கையாள வேண்டும்.

சாதியச் சமூகத்தின் அழிவிலிருந்தே தமிழ்த் தேசம் மலரும். தமிழ்த் தேசிய பண்பாடானது சாதியச் சமூகத்தைக் கட்டிக் காக்கும் பார்ப்பனிய, வெள்ளாளிய கருத்தியல் அழிவிலிருந்தே புத்துயிர் பெற்று வளரும். தமிழ்த்தேசியக் குடியர சானது ஏகாதிபத்திய, முதலாளித்துவச் சுரண் டலுக்கு எப்படி முடிவுகட்டுமோ, அதுபோல் ஏகாதிபத்திய, முதலாளியப் பண்பாட்டிற்கும் முடிவுகட்டும். புதிய தமிழ்த்தேசிய பண்பாடாக அறிவியல்-சனநாயகப்பூர்வ பண்பாட்டைப் படைக்கும்.

தமிழர் மரபு, தமிழர் அறம் என்று கூறும் தோழர் மணியரசனின் கூற்றின் பின்னுள்ள கருத்தியலை ஆய்வதற்கு முன்,

தோழர் லெனினின் எச்சரிக்கையை கவனிக்க வேண்டியுள்ளது.

“பொதுவான “தேசிய இனக் கலாச்சாரம்” என்பது நிலப்பிரபுக்கள், சமய குருமார்கள், முதலாளிய வர்க்கத்தார், ஆகியோரது கலாச் சாரமாகும்”.

லெனினின் இக்கோட்பாட்டை கேட்டதும் உடனே இனவாதிகளிடமிருந்து ஒரு கேள்வி நம்முன் எழும்! தமிழ்த்தேசிய இனப் பண்பாட் டிலிருந்து நாம் எடுத்துக் கொள்வதற்கு எதுவுமே இல்லையா? அதற்கும் லெனின் மிக அழகாக தன் கருத்தை முன் வைக்கிறார்.

“தேசிய இனக்கலாச்சாரம் ஒவ்வொன்றின் இடமிருந்தும் அதன் சனநாயக, சோசலிச கூறு களை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறோம்.”

தமிழர் மரபு, தமிழர் அறம் என்று பொத்தாம் பொதுவாக முன்வைப்பது பிற்போக்கு சாதிய நிலவுடமை மற்றும் முதலாளித்துவ மரபை, அறத்தை முன்வைப்பதே ஆகும்.

தமிழ்த்தேசிய இனப் பண்பாடாக நாம் உயர்த்திப் பிடிக்க, பின்பற்ற வேண்டிய அதன் சனநாயக அறிவியல் கூறுகளை மட்டுமே சாதியம், மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், முதலாளியப் பண்பாடு... போன்ற எந்த பிற்போக்கு கருத்தியலையும் தமிழர் பண்பாடு என்ற பெயரில் நாம் அனுமதிக்க முடியாது.

தோழர் மணியரசன்- “தமிழ்த் தேசியம் என்பது மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகியவற்றின் கலவையல்ல. தமிழ்த் தேசியம் தனித்துவமானது. அது தமிழர் அறம் என்ற மெய்யியல் மேல் நிற்கிறது. தமிழர்களுக்கென்று இன அரசியல், மொழி அரசியல் இருக்கின்றது. தமிழர்களுக்கென சக மனிதர்களோடு சமத்துவ மாக வாழ்வதற்கான அறக்கோட்பாடு இருக்கிறது. இவற்றை மேலும் வலுப்படுத்த புதிய கருத்தியல் களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுதும் தமிழுக்கும் தமிழினத்திற்கும் இருந்து வந்திருக்கிறது. அந்தப் புரிதலோடுதான்  தமிழ்த்தேசியம் ஒரு தனிச் சித்தாந்தம் என்று நாம் சொல்கிறோம்.” (பக்கம்:34) என்று போகிற போக்கில் திருமண நிகழ்வின் வாழ்த்துரையில் கூறுகிறார்.

கி.பி. 600-லிருந்து இன்று வரை சாதியத்தைக் கட்டிக்காக்கும் சாதியக் கருத்தியல் நீடித்து வருகிறது. பெண்ணடிமைத் தனத்திற்கு அடிப் படையான மூத்தோன் வழி ஆணாதிக்கக் கருத் தியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதலாளி தொழிலாளியை மிகக் கடுமையாகச் சுரண்டு வதை நியாயப்படுத்தும் முதலாளியக் கருத்தியல் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆங்கில ஆதிக்கத்தாலும் இந்தி, சமஸ்கிருத திணிப்பாலும் தமிழ் மொழி அழிக்கப்பட்டு வருகிறது. பகுத்தறிவற்ற மூடநம்பிக் கையே மக்களிடம் மேலோங்கியிருக்கிறது.... இதுதான் சக மனிதர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான அறக்கோட்பாடா? இதுதான் புதிய கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலா? இதுதான் தமிழ்த்தேசியத்தின் தனிச் சித்தாந்தமா?

தமிழ்த் தேசியத்தின் மேற்கூறிய அனைத்து சிக்கல்களையும் தீர்ப்பதற்கு நாம் கையில் ஏந்த வேண்டிய ஆயுதம் மார்க்சியம், பெரியார்&-அம்பேத்கர் சிந்தனைகளே!

இனவாத, வெள்ளாளிய, கருத்தியலை ஏந்தி நிற்கும் தோழர் மணியரசனுக்கு மார்க்சியம், பெரியார்&அம்பேத்கார் கருத்து களும் சுமையாகவும் விரோதமாகவும்தான் இருக்கும். அதனால்தான் அவற்றை கைவிடச் சொல்கிறார். தமிழர் அறம், தமிழ்த்தேசிய தனிச் சித்தாந்தம் என்று பிற்போக்கு சாதிய நிலவுடைமைக் கருத்தியலை (வெள்ளாளி யத்தை) கையில் ஏந்தச் சொல்கிறார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் நம்மை (கருத்தியல்) நிராயுதபாணியாக்கி, தமிழ்த்தேசிய விரோதிகளுக்கு, தமிழ்த்தேசியத்தை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் இந்தியப் பெருமுதலா ளிக்கு துணைப்போகிறார் தோழர் மணியரசன்.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டக் களத்தில் களமாடும் அனைத்துச் சக்திகளும் கையில் ஏந்த வேண்டிய ஆயுதம் மார்க்சியமும் பெரியார்&-அம்பேத்கார் கருத்துகளும்தான்.  இவற்றைப் புறந்தள்ளும் எந்தக் கருத்தியலும் பிற்போக்குச் சாதிய நிலவுடமைக் கருத்திய லுக்கும், முதலாளியக் கருத்தியலுக்குமே சேவை செய்யும். அது எந்த வடிவத்தில் வந்தாலும் சரி!

இந்தியப் புரட்சியை முன்னெடுக்கும் கட்சி களாகட்டும், தமிழ்த்தேசிய விடுதலையை முன்வைக்கும் கட்சிகளாகட்டும் மார்க்சியத்தின் அடிப்படையில் சமூக ஆய்வை மேற்கொண்டு தமிழ்த்தேசிய நிலைமைகளுக்கு ஏற்ப திட்டத்தை வரையறுத்து செயல்படுவதற்கு பதில் மார்க்சி யத்தை வரட்டுக் கோட்பாடாகவே பிரயோகிக் கின்றனர். மார்க்சிஸ்டுகளின் இத்தகையப் போக்கே தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் இனவாதம், வெள்ளாளியம் போன்ற கருத்தியல் கள் முன்வைக்கப்படுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

மார்க்சியம் வரட்டுக் கோட்பாடல்ல; தமிழ்த் தேசிய விடுதலைக்கான வழியை வகுப்பதற்கான ஒளிக்கீற்றாகும்.

தோழர் டிமிட்ரோவின் கருத்தும் இதற்கு மிகச் சான்றாக அமையும்

“நாம் முன்கூட்டி வகுக்கப்பட்ட செயற்கை சூத்திரங்களுக்கு எதிரிகள், ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஸ்தூலமான நிலைமையை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். எந்த இடத்திலும், எல்லா இடத்திலும் ஒரே வார்ப்பிலான ஒரே மாதிரியான முறைகளைக் கையாளக்கூடாது. வேறுபட்ட நிலைமைகளில் கம்யூனிஸ்டுகளின் நிலை ஒரே மாதிரியாக இருக்கக்கூடாது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.”