கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பரிமளா
- பிரிவு: சுற்றுச்சூழல்
கடந்த ஜுலை மாதம் 23-28, 2012 வரையான ஒரு வார காலம், ஆந்திர கடலோர மாவட்டங்களான விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு பத்திரிக்கையாளர் செந்தளிர், புகைப்பட பத்திரிக்கையாளர் ஸ்டீபன் ஆகியோருடன் சென்றிருந்தேன். ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொவ்வாடா என்ற கிராமத்தில் அமைய உள்ள அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் பற்றியும், லக்ஷ்மிபேட்டா என்ற ஊரில் உயர் சாதி இந்துக்களால் ஐந்து தலித் மக்கள் கொல்லப்பட்டது பற்றியும் பதிவு செய்யும் நோக்கத்தோடு இந்தப் பயணம் திட்டமிடப்பட்டது. இறுதியில், அனல், அணு மின் நிலையங்களை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் விதமாக சில காரணங்களால் மாற்றப்பட்டது.
குறிப்பாக இந்தப் பயணத்தில் நான் கலந்து கொள்ள இரண்டு காரணம் இருந்தது. கடந்த ஓராண்டாக அரசியல் செயல்பாடு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களை பல முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் நான் அங்கு கண்ட அந்த மக்களின் அரசியல் எழுச்சியும், போராட்ட குணமும் அம்மக்களின் மீதும், அவர்களின் போராட்டங்களின் மீது இயல்பாகவே ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இரண்டு, கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு கொண்டதின் காரணமாக ஆந்திராவில் அணு உலையை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டத்தைப் பற்றி அறியும் ஆர்வம்.
ஜூலை 23, 2012 அன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 6.30 மணியளவில் விசாகப்பட்டினம் சென்று சேர்ந்தேன். விசாகப்பட்டினத்திற்கு இதுதான் என்னுடைய முதல் பயணம். தொடருந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்தபோது, லேசான தூறலுடனும் மிதமான குளிருடனும் நகரம் அழகாகத் தோன்றியது. பிறகு, அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு அன்னபூர்ணா என்ற தோழர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றேன். அன்று மாலை, செந்தளிர், ஸ்டீபன் உடன் திரு.ரத்னம் அவர்களை சந்திக்க மூவரும் கிளம்பினோம். திரு.ரத்னம், சூழலியல் மாத இதழ் ஒன்றை நடத்திக்கொண்டு இருப்பவர். களப்பணி செய்து சூழலியல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மக்கள் போராட்டம், அரசின் ஒடுக்குமுறை பற்றி மக்களிடம் தன் இதழ் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர். எங்களின் ஒரு வார பயணம் வெற்றிகரமாகவும், பயனுள்ளதாகவும் அமைய உதவியவர்களில் ரத்னம் முக்கியமானவர்.
ஜுலை 24, 2012 அன்று மாலை இரண்டு முக்கிய அரசியல், சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்க ரத்னம் ஏற்பாடு செய்திருந்தார். முதலில் நாங்கள் சந்தித்தது, முன்னாள் இந்திய அரசுப் பணி, திரு. இ.எ.எஸ்.ஷர்மா அவர்களை. இவர் தொடர்ச்சியாக அணு ஆற்றலின் ஆபத்துகள் பற்றி பத்திரிக்கைகளிலும், வலை தளத்திலும் எழுதி வருபவர். அணு உலை எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரிப்பவர். அவருடன் பேசும்போது, தரமில்லாத மின்பகிர்மான கட்டமைப்பினால் 35-37% மின்சாரம் வீணாவதாகவும், மின்பகிர்மான கட்டமைப்பை தரமானதாக மாற்றுவதன் மூலம் 60,000 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்று கூறினார். மேலும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மாற்று எரிசக்தி சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டிற்கு சாத்தியமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற தன்னுடைய கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.
மேலும் அவர், இந்திய அரசு செய்து கொண்டுள்ள அணு உலை சார்ந்த வியாபார ஒப்பந்தங்கள் வழியாக இரண்டாம் அலைக்கற்றைக்கு இணையான மற்றுமொரு ஊழல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். கூடங்குளம் மக்கள் தங்கள் அறவழியிலான போராட்டங்களையே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மக்கள் போராட்டங்கள் செல்ல வேண்டிய திசை பற்றிய தன்னுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டார். இவரின் பதிவுகளை www.eassharma.in என்ற வலை தளத்தில் காணலாம். ஷர்மா அவர்களிடம் இருந்து விடைபெற்று, திரு. கிருஷ்ணா, மனித உரிமை மன்றம் (HRF) அவர்களை சந்திக்கப் புறப்பட்டோம்.
திரு.கிருஷ்ணாவை ஏற்கனவே ஈழத்தில் நடந்த போர்க்குற்றம் பற்றி பேச ஹைதராபாத் சென்றிருந்தபோது சந்தித்த அறிமுகம் இருந்ததால், சிறிது நேரம் ஈழத்து மக்களின் இன்றைய நிலை பற்றி பேசினோம். பிறகு ஆந்திர மக்கள் போராட்டங்கள் பற்றி எங்கள் உரையாடல் நகர்ந்தது. கடற்கரையை ஒட்டிய தொழிற்சாலை பகுதி (Industrial Coastal Corridor) அமைக்க 2005 இல் போடப்பட்ட ஆந்திர அரசின் அரசாணை 34 மூலம், ஆந்திராவின் தெற்கில் நெல்லூரிலிருந்து, வடக்கில் ஸ்ரீகாகுளம் மாவட்டங்கள் வரையான கடற்கரை ஒட்டிய 972 கி.மீ பகுதிகளில் மட்டும் சுமார் 107 அனல் மின் நிலையங்கள் கொண்டு வர மாநில அரசு திட்டம் தீட்டியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக நெல்லூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு மண்டல்களில்(தாலுக்காவை விட சிறிய பரப்பளவை கொண்டவை) மட்டும் 28 அனல் மின் நிலையங்கள் கொண்டு வர உள்ளதாகவும், அதற்காக ஏராளமான விளைநிலங்கள் கையகப்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதனை எதிர்த்து உள்ளூர் மக்களால் வலுவான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
பெரும் எண்ணிக்கையிலான அனல் மின் நிலையங்கள் சிறிய நிலப்பரப்பில் கொண்டு வரப்பட உள்ளதை கேட்டபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரு லட்சம் மெகா வாட் மின் உற்பத்தி என்ற இலக்குடன், ஆந்திராவின் கடற்கரையோர பகுதிகளில் பெரும் முதலாளிகளுக்கு அனல் மின் நிலையங்கள் அமைக்க ஆந்திர அரசு அனுமதி அளிக்கும் திட்டத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். ஆந்திர கடற்கரையோரப் பகுதிகள் தான் ஆந்திராவின் நெற்களஞ்சியங்களாக அறியப்படுகின்றன. இந்தப் பகுதி விவசாயிகள், மீனவர்களை அழித்து விடும் திட்டமாகவே அனல் மின் நிலையத் திட்டங்கள் பார்க்கப்படுகின்றன. மேலும், அடிப்படைத் தேவையான மின்சாரம், ஒரு சந்தைப்பொருளாக மாறுவதையும், அதை தனியார் மயப்படுத்துவதன் மூலம், பெரு முதலாளிகள் தங்கள் லாப வேட்டைக்குத் தயாராவதையும், ஆயிரக்கணக்கான விவசாயிகளின்/மீனவர்களின் வாழ்வாதாரமும், ஆந்திர மாநிலத்தின் அடிப்படை உணவு பாதுகாப்பும் கேள்விகுறியாகப் போவதையும் உணர முடிந்தது. அன்று இரவு கிருஷ்ணா அவர்களின் வீட்டிலேயே தங்கினோம்.
பரவாடா அனல் மின்நிலையத்தின் பாதிப்பு:
ஜூலை 25, 2012 காலை விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 40 கி. மீ தொலைவில் அமைந்துள்ள என்.டி.பி.சி.யின் அனல் மின் நிலையத்தை நோக்கி மகிழுந்தில் பயணமானோம். விசாகப்பட்டினத்தைக் கடந்து அதன் புறநகர் பகுதி வழியாக செல்லும்போது பரவலாக தொழிற்சாலைகளைப் பார்க்க முடிந்தது. இரும்புத்தாது மற்றும் உரத்தொழிற்சாலைகளால் அப்பகுதியின் சுற்றுசூழல் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதைக் காண முடிந்தது. அந்தப்பகுதியில் இருந்த உரத்தொழிற்சாலையை கடந்தபோது ஒரு வித மணத்தை நுகர நேர்ந்தது. அது அமிலத்தன்மை வாய்ந்தது என்று ரத்னம் கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் - பரவாடா அனல் மின் நிலையம்
சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு என்.டி.பி.சி.யின் அனல் மின்நிலையம் அருகில் உள்ள சுயம்புபுரம் என்ற கிராமத்தை அடைந்தோம். சுமார் 140 வீடுகளை கொண்ட சிறிய கிராமம். இக்கிராம மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாகவும், சிலர் அனல் மின்நிலையத்திற்கு கூலி வேலைக்கும் செல்கின்றனர். இங்குள்ள நிலத்தடி நீர், அனல் மின்நிலையம் வருவதற்கு முன் நல்ல குடிநீராக பயன்பட்டதாகவும், பிறகு சிறிது சிறிதாக மாசுபட்டு, இப்போது குடிநீராகப் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளதாகவும், இக்கிராமப் பெண்கள் தெரிவித்தனர். அனல் மின்னிலையத்திற்குள்ளே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதாகவும், தங்களுக்கான குடிநீரை அங்கிருந்து எடுத்து வருவதாகவும் கூறினார். 40 வயதுக்கு கீழ் உள்ள 12 பெண்களுக்கு அதிகப்படியான உதிரப்போக்கு காரணமாக கருப்பை நீக்கப்பட்டதாகவும், நிறைய பெண்களுக்கு கருக்கலைதல் நடப்பதாகவும் கிராமப் பெண்களோடு உரையாடும்போது தெரிவித்தனர்.
இங்கிருந்து அருகில் உள்ள பிட்டவானிபாலம் என்ற மற்றொரு சிறிய கிராமத்திற்கு சென்றோம். இங்கு சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கும் குடிநீர் பிரச்சினை உள்ளதாக மக்கள் கூறினார். இங்கு சிலருக்கு சுவாசக்கோளாறு, நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். மூளைப் புற்று ஏற்பட்டு நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இறந்துள்ளார். இந்த ஊருக்கு மிக அருகில், அனல் மின்நிலையத்தில் எரிக்கப்படும் நிலக்கரியிலிருந்து உண்டாகும் கழிவான சாம்பல் கொட்டப்படும் மிகப்பெரிய குளம்(Ash Pond) உள்ளது. அந்த குளத்திற்கு வெளியேயும் சாம்பல் கொட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இந்த ஊரில் ஏற்படும் சுவாசக்கோளாறு, நுரையீரல், மூளைப் புற்று போன்ற நோய்களுக்கு இந்த சாம்பல் கழிவுதான் காரணம் என்று வாய் மொழியாக மருத்துவர்கள் கூறியதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த காரணங்களை மருத்துவர்கள் தங்கள் மருத்துவ அறிக்கையில் கொடுப்பதில்லை என்று ரத்னம் கூறினார்.
நாங்கள் அங்கு சென்றிருந்த அன்று கூட, நடுத்தர வயதைச் சேர்ந்த ஒருவர் சுவாசக்கோளாறு காரணமாக இறந்துவிட்டதாக மக்கள் கூறினார். நரம்புக் கோளாறு காரணமாக நடக்க முடியாமல் போன ஒரு சிறுவன், ஒரு நடுத்தர வயதுக்காரர், ஒரு பெரியவரைப் பார்த்தோம். ஒரு முதியவருக்கு நரம்புப் பிரச்சினை காரணமாக, கால்களில் ஆங்காங்கு பெரிய தடிப்புகள் இருந்தன. இங்கும் பரவலாக பெண்களுக்கு கருக்கலைதல் நடப்பதாக பெண்கள் கூறினார். ஒரு பெண்ணுக்கு கால்களில் தோல் பிரச்சினை காணப்பட்டது. 20-30 பேர் கண்பார்வை இழந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
நரம்புகள் பாதிக்கப்பட்ட முதியவர்
1000 பேருக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட இந்த கிராமங்களில் இத்தனை உடல் நலக்கோளாறு என்பது சற்று அதிகப்படியானதாகத் தோன்றுகிறது. மேலும் மருத்துவர்கள் அனல் மின் நிலையத்தின் கழிவுகளால் தான் நோய் உண்டாகியிருப்பதாக வாய் மொழியாக மட்டும் மக்களிடம் கூறியிருப்பதை வைத்தே இந்த அனல் மின் நிலையத்தின் கழிவுகளின் பாதிப்பை நாம் உணர முடிகிறது. தொழிற்சாலைகளால் அப்பகுதிகள் வளர்ச்சி அடைவதாக நம்முடைய அரசாங்கங்கள் தொடர்ந்து கூப்பாடு போடுகின்றன. என்.டி.பி.சி. இப்பகுதியில் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பார்த்தால் இதன் உண்மை முகம் தெரியும். இந்த கிராமங்களுக்கு சுடுகாடு கட்டிகொடுக்கப்பட்டுள்ளது. (அவசியம் என்று கருதியிருப்பார்கள் போல!) பள்ளிக் கட்டிடம், பென்ச், நாற்காலி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களை கூலிக்கு பணியில் அமர்த்தியுள்ளனர். இந்த கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர். அனல் மின்நிலையத்தில் வேலை செய்பவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் என்.டி.பி. சி நிர்வாகம், அதே நீரை குழாய் வழியாக இக்கிராமங்களுக்கு வழங்க ஏன் ஏற்பாடு செய்யவில்லை?
பரவாடா மின் நிலையத்தை ஒட்டி உள்ள கிராமத்தின் தண்ணீர் விநியோகம்
இந்த கிராமங்களின் அடிப்படை கட்டமைப்பான சாலை, கழிவுநீர் வெளியேற்றும் வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற எதுவுமே முன்னேற்றம் காணவில்லை. இக்கிராமங்களை விட்டு திரும்பும் வழியில் உப்பளங்களைப் பார்த்தோம். இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பிலும் அனல் மின்நிலையத்தின் கழிவுகளால் பாதிப்பு ஏற்படுவதாக ரத்னம் கூறினார். இந்த கிராம மக்களிடம் இருந்து விடைபெற்று, மீண்டும் விசாகப்பட்டினம் நோக்கி பயணமானோம்.
புடுமுறு பயணம்:
மறுநாள் ஜூலை 26, 2012 , ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொவ்வாடா என்ற மீனவ கிராமப் பகுதியில் அமைய உள்ள அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தைப் பற்றி அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களிடமும், போராட்டக் குழுவிடமும் கேட்டு அறிவதாகத் திட்டம். விசாகப்பட்டினத்திலிருந்து கொவ்வாடா சுமார் 70 கி.மீ. தொலைவு இருக்கும். அதனால், கொவ்வாடாவிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள புடுமுறு என்ற ஊரில் ரத்னம் அவர்களின் அமைப்பான மக்கள் போராட்டங்களின் தேசிய கூட்டமைப்பைச் (NAPM) சேர்ந்த திரு. ராமு அவர்களின் வீட்டில் இன்று இரவு சென்று தங்குவதாக முடிவு செய்யப்பட்டது. ரத்னத்திடம் விடைபெற்றுக்கொண்டு மாலை விசாகப்பட்டினத்திலிருந்து புடுமுறுவுக்குப் புறப்பட்டோம். சுமார் 1.30 நேரப் பயணம். அன்று இரவு திரு.ராமுவின் நண்பர் வீட்டில் தங்கினோம். மறுநாள் நிகழ்ச்சி நிரலையும் பேசி முடிவு செய்து கொண்டோம்.
ஜூலை 26, 2012 காலை கொவ்வாடா புறப்படத் தயாரானோம். ராமு கொவ்வாடா பயணத்திற்காக ஒரு ஆட்டோவையும், திரு. கோபால் என்பவரை எங்களுக்கு வழிகாட்டியாகவும் ஏற்பாடு செய்திருந்தார். கொவ்வாடா செல்லும் வழியெல்லாம் முந்திரித் தோட்டங்களும், பனைமரங்களும், சிறுதானிய பயிர்களுமாக பச்சைப் பசேல் என்று இருந்தது. இந்தியாவின் கிராமங்களில் போக்குவரத்து வாகனம் பங்கு தானிகள்தான்(share auto) போலும். எங்கு பார்த்தாலும் தானிகளில், தானியின் மேல் கூரைகளில் என்று மக்கள் பெரும்பாலும் பங்கு தானியிலேயே பயணம் செய்வதைப் பார்க்க முடிந்தது. ஒரு அரசு பேருந்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை. வழியில் இருந்த கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பான நல்ல சாலையோ, கழிவு நீர் வெளியேற்றும் வசதியோ காண முடியவில்லை. ஆங்கில வழி தனியார் பள்ளி பேருந்துகளை மட்டும் காண முடிந்தது. குறைந்தது 30-40 நிமிட பயணத்திற்குப் பிறகு பெரிய கொவ்வாடா என்ற மீனவ கிராமத்தைச் சென்றடைந்தோம்.
இடிந்தகரை கிராமத்தையும், மக்களையும் பார்த்து விட்டுச் சென்ற எனக்கு, கொவ்வாடா மக்களின் வாழ்க்கை மிகவும் பின் தங்கிய நிலையில் இருப்பதாகப் பட்டது. இங்கு போரட்டக் குழுவைச் சேர்ந்த திரு.அல்லிபில்லி ராமுடு முன்னாள் கிராமத்தலைவர் (Ex. MPTC, Mandal Parishad Territorial Constituency Member) அவர்களைச் சந்தித்தோம். கொவ்வாடா போராட்டம் பற்றிய அவருடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஒரே பஞ்சாயத்தைச் சேர்ந்த பெரிய கொவ்வாடா, சின்ன கொவ்வாடா, ராமச்சந்திரபுரம் என்ற மூன்று கிராமங்களை உள்ளிட்ட 2000 ஏக்கர் நிலம் அணு உலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறினார். இந்த மூன்று கிராமங்களில் சுமார் 1250 வீடுகள் உள்ளன.
2011 கணக்குப்படி சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் நிலங்கள் எதற்கும் பட்டா கிடையாது. 1992லிருந்து போராட்டம் நடப்பதாக கூறுகின்றனர். 2007 தேர்தல் பிரசாரத்திற்காக ரணஸ்தளம் வந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி புலிவேந்தல் என்ற வேறொரு பகுதியை அணு உலைக்காக தேர்ந்தெடுக்கப் போவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் 2009 இல் ரோசையா தலைமையிலான அரசு மக்களிடம் எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் கொவ்வாடா பகுதியில் அணு உலை அமைய இருப்பதாக செய்தித்தாள்களில் அறிவிப்பு செய்துள்ளது. மக்களிடம் எந்த கருத்துக்கணிப்பும் செய்யாமலேயே இந்த பகுதியில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. மக்கள் அதிகாரிகளை அணுகியபோது, குரவிபேட்டா என்ற மற்றொரு கடலோர பகுதிக்கு இவர்களை மீள்குடி அமர்த்துவதாக கூறியுள்ளனர்.
ஏன் அணு உலையை எதிர்க்கிறீர்கள் என்று கேட்டதற்கு, ஒன்று வேறொரு கடலோர பகுதிக்கு மீள்குடி அமர்த்தப்பட்டால் அங்கு மீன்வளம் நிறைந்த பகுதிகள் பற்றி தெரியாது, அதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இரண்டாவது, இவர்களின் நிலங்களுக்கு பட்டா கிடையாது. எனவே இடப்பெயர்வு செய்யப்பட்டால் இழப்பீடு எதுவும் கிடைக்காது என்று கூறினார். இங்கு அமைய உள்ள அணு உலை பற்றி பரவலாக மண்டல், மாவட்ட அளவில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களால் செய்யப்பட்டுள்ளது. ரணஸ்தளம் மண்டலில் உள்ள 30 கிராமங்களில் அணு உலையை எதிர்த்து தீர்மானம் போடப்பட்டுள்ளது. லவேரு, இச்செர்லா, ரணஸ்தளம் ஆகிய மண்டல் அளவிலும், ஸ்ரீகாகுளம் மாவட்ட அளவிலும் தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன.
அடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் மண்டல் செயலர் திரு. மைலபிள்ள போலிசு என்பவரைச் சந்தித்தோம். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அணு உலை திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் பற்றிய விவரங்களை தரச் சொல்லி ஸ்ரீகாகுளம் மாவட்ட வட்டாசியரை அணுகியுள்ளார். ஆனால், ஒரு லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் இருந்தால்தான், தகவல் பெற முடியும் என்று வட்டாச்சியரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டுள்ளது. திரும்பவும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை அணுகப்போவதாக கூறினார். இங்கிருந்த மக்களில் 80% பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், மீதம் உள்ள மக்களில் 30% பேர்களுக்கு அரசு வீடுகள் வழங்கி உள்ளதாகவும், 70% மக்கள் குடிசை வீடுகளிலேயே வாழ்வதாகவும் கூறினார். ரணஸ்தள மண்டலில் உள்ள 115 கிராமங்களில், 110 கிராமங்கள் மீனவ கிராமங்கள். இதில், 3 லட்சம் மீனவர்கள் வாழ்கின்றனர். பெரிய கொவ்வாடாவிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் 5 கிராமங்கள் உள்ளன. ஸ்ரீகாகுளம் கொவ்வாடாவிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு கட்டப்படும் அணு உலை உலகில் எங்குமே நடைமுறையில் இல்லாத அமெரிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போகிறது. இந்த தொழில்நுட்பம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக போலிசு கூறினார். மேலும், கொவ்வாடாவில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைப்பதில்லை என்றும், அரசு வேலையில் யாருமே இல்லை என்றும் ஆதங்கப்பட்டார்.
அடுத்ததாக, ராமச்சந்திரபுரம் சென்றோம். இங்கிருந்த பொதுமக்கள் சிலரிடம் உரையாடினோம். கொவ்வாடா பகுதியில் மீன்வளம் சொல்லிக்கொள்ளும் படி இல்லையாதலால், தாங்கள் கூலி வேலையை நம்பி உள்ளதாகக் கூறினர். அரசு மாற்று இடம் கொடுத்தால் போகத் தயாராக இருப்பதாகக் கூறினர். பிறகு, அருகிலிருந்த கடற்கரைப் பகுதியை நோக்கிச் சென்றோம். அங்கிருந்த ஒரு முதியவரிடம் பேசினோம். அவர், கொவ்வாடா மக்களில் ஒரு பகுதியினர், மீன் பிடி தொழிலுக்கு மாற்றாக பிளாஸ்டிக் கயிற்றில் ஊஞ்சல், தொப்பி போன்றவற்றைச் செய்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று பல மாதங்கள் தங்கி விற்பனை செய்வதாகக் கூறினார். இதனால் அவர்களின் குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுவதாகக் கூறினார். தமிழகத்தின் சாலையோரங்களில் தொப்பி, ஊஞ்சல் போன்ற பொருட்களை விற்பனை செய்பவர்கள் இந்த கிராம மக்கள்தான் என்றார் அந்த முதியவர். இதனால் இந்த கிராம மக்களில் சிலருக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் என்றார். இந்த பாரம்பரிய மீனவர்கள் தங்கள் தொழிலை, வாழ்விடங்களை விட்டு இடம்பெயர என்ன காரணம் என வினவினோம். இந்த கடலோர பகுதியில் கடந்த 20 வருடங்களாகவே மீன்வளம் குறைந்து விட்டதாகக் கூறினார். இதற்கு காரணம், இந்த பகுதிக்கு அருகில் உள்ள பைதபீமாவரம் என்ற இடத்தில உள்ள வேதிப்பொருட்கள் தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகள் பல ஆண்டுகளாக கடலில் கலக்கப்படுவதுதான் என செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கடற்கரையில் மக்களோடு பேசிக்கொண்டு இருக்கும்போது, அணு சக்திக் கழகத்தை(NPCIL) சேர்ந்த சில அதிகாரிகள் அங்கு வந்தனர். நாங்கள் அணு உலை மூலம் மின்சாரம் என்ற விளம்பரத்தில்/அரசியலில் உள்ள ஆபத்துக்கள் பற்றிய கேள்விகளை முன்வைக்க, அவர்கள் அணு உலைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைக்க, சிறிது நேரம் விவாதம் நடந்தது. பிறகு அவர்கள் எங்களிடம் விடைபெற்றுச் சென்றனர். அவர்கள் சென்றபிறகு, அங்கிருந்து மீனவர்கள், புது வீடு கட்டித்தர ஏற்பாடு செய்வதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தருவதாகவும், பிரியாணி அரிசி தருவதாகவும் சொல்லிக்கொண்டு இந்த அதிகாரிகள் அடிக்கடி இந்த கிராமங்களுக்கு வருவதாக கோவத்தோடு கூறினார்கள்.
கொவ்வாடா அணு உலையை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத்தைப் பற்றி அந்தப் பகுதி மக்களையும், அரசியல், சமூக செயற்பாட்டாளர்களையும் சந்தித்துப் பேசியதில் இருந்து நான் அறிந்துகொண்டது இதுதான். கொவ்வாடா பகுதி மீனவர்களின் மீன்வளம் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந்து விட்டது. அதனால், ஒரு பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி வேறு பகுதிகளுக்கு, மாநிலங்களுக்கு குடியேறுகின்றனர். இதனால் அவர்களின் பிள்ளைகளின் கல்வி கேள்விக்குரியாக உள்ளது. ஆனால், ஜப்பானில் புகுஷிமா விபத்துக்குப் பிறகு இங்கு அணு உலை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதற்கு அரசியல், சமூக இயக்கங்களின்/செயற்பாட்டாளர்களின் பிரச்சாரங்கள் முக்கிய காரணம். இதன் காரணமாகவே, ரணஸ்தளம் மண்டலத்தில் 30 கிராமங்களும், லவேறு, இந்தெர்லா மண்டலங்களிலும், ஸ்ரீகாகுளம் மாவட்ட அளவிலும் அணு உலைக்கு எதிரான தீர்மானங்கள் போடப்பட்டுள்ளன. மேலும், அணு உலைத் திட்டம் மிக மிக ஆரம்ப கட்டமான நிலம் கையக்கப்படுத்தல் என்ற நிலையிலேயே இருப்பதால், போராட்டம் இன்னும் தீவிரம் அடையவில்லை என நினைக்கிறேன். கொவ்வாடா பயணத்தை முடித்துக்கொண்டு, அன்று இரவு புடுமுருவில் தங்கி தங்கினோம்.
காக்ராபள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டம் :
மறுநாள் ஜூலை 27, 2012 காலை திரு. ராமு மற்றும் அவரின் நண்பரின் குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு காக்ராப்பள்ளி நோக்கி பயணமானோம். ராமு அவர்கள் எங்களுக்கு உதவியாக காக்ராப்பள்ளியில் திரு. சிரஞ்சீவி அவர்களை ஏற்பாடு செய்திருந்தார்.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை ஒட்டி உள்ள விவசாய பூமி
சுமார் இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு கொட்ட பேட்டா என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில், அனல் மின் நிலையத்தில் வேலை செய்யும் பொறியாளர் ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் அனல் மின் நிலையத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் பற்றி வினவினோம். அவர் ஒரே ஒரு கிராம மக்கள் மட்டுமே போராடுவதாகவும், மக்கள் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் என்றும், காக்ராப்பள்ளி அனல் மின் நிலையம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு கிடையாது என்று கூறினார். பிறகு அனல் மின் நிலைய நிர்வாகம், மின் நிலையத்தைச் சுற்றியுள்ள விவசாயிகளுக்கு போகத்திற்கு 10,000 ரூபாய் நிறுவனத்தின் - சமூக கடமை(CSR) என்ற நடவடிக்கையின் கீழ் வழங்குவதாகவும் கூறினார். இது பற்றி மக்களிடம் விசாரிக்க மறந்து விட்டோம். கொட்ட பேட்டா பேருந்து நிலையத்தில் சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு, ஒரு தானியில் அனல் மின் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு திரு.சிரஞ்சீவி எங்களை அழைத்துச் சென்றார். 2640 மெகா வாட் காக்ராப்பள்ளி அனல் மின் நிலையம் ஈஸ்ட் கோஸ்ட் எனெர்ஜி லிமிடெட்(East Coast Energy Limited) என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதில் ஜெகன் மோகன் ரெட்டியின் மைத்துனர் ஒரு பங்குதாரராக உள்ளார் என்று இங்குள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர்.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை ஒட்டி உள்ள உள்ளூர் மீன் பிடி பகுதி
2000 ஏக்கர் நிலம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கையில் இவை தரிசு நிலங்களாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் பல்லுயிர் சூழல் கொண்ட வளமான சதுப்பு நிலம் (wetland) என வனத்துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறுகின்றனர். இங்குள்ள ஒட்டிதன்றா என்ற கிராமத்திற்குச் சென்றோம். இங்குள்ள மீனவ சங்கத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து அனல் மின் நிலையத்தை எதிர்ப்பதற்கான காரணத்தை கேட்டோம். மீனவ சங்கத்தின் தலைவர் காருண்ய கெத்று கூறியதிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டது இதுதான். அனல் மின் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட இடம் நிறைய நீர்நிலைகளை கொண்ட பகுதி. ஒட்டிதான்றா, கொள்ளுறு, சந்தபொம்மாளி போன்ற கிராமங்களைச் சேர்ந்த 6000 மீனவர்கள் பல ஆண்டுகளாக உள்நாட்டு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மேலும் பெரும்பான்மையான மக்களுக்கு உப்பளத் தொழில் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த கையக்கபடுத்தப்பட்ட நிலத்தைச் சுற்றி 2400 ஹெக்டர் விவசாய நிலங்கள் உள்ளது. இங்குள்ள நீர்நிலைகளில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு 1948லிருந்து மீன்பிடி உரிமம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. 2009இல் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மீனவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளனர். ஆனால், அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லாது போகவே, ஆகஸ்ட் 15, 2009 தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர்.
ஆனால், மின் நிலையத்தைச் சுற்றி உள்ள நீர்நிலைகளை மண் கொண்டு நிரப்பியுள்ளனர். இதனால், இங்கிருந்த நீர்நிலைகளின் இயற்கையான நீரின் ஓட்டம் தடைபட்டு வெள்ளம் உண்டாகி 10,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த நீர்நிலைகளில் இருந்த மீன்கள் நஞ்சு வைத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்த அனல் மின்நிலையத்திற்கு அருகில் 3.5 கி.மீ தொலைவில் உள்ள தேல்நீலாபுரம் என்ற இடத்தில சிறிய பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு சைபீரிய பறவைகள் உட்பட பல இடங்களில் இருந்து பறவைகள் வருகின்றன. இந்தப் பறவைகளுக்கு இந்தப் பகுதியில் உள்ள மீன்கள் போன்றவையே உணவாகும். ஆனால், இந்த நீர்நிலையைத் தேடி வரும் பறவைகள் துரத்தியடிக்கப்பட்டுள்ளன.
இதனால், கிராமமக்கள் அனல் மின் நிலையத்திற்கு மரக்கட்டைகளை (டிம்பர்) ஏற்றிச் சென்ற லாரிகளை ஜனவரி, 2011 வழிமறித்து போராட்டம் செய்துள்ளனர். இதனால், ஒரு மாதம் அனல் மின் நிலைய வேலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சௌம்யா மிஸ்ரா என்ற ஸ்ரீகாகுளம் மாவட்ட ஆட்சியர் இப்பகுதிகளுக்கு பார்வை இட வந்துள்ளார். பிப்ரவரி 16, 2011 அன்று இந்தப்பகுதியில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளது. பிப்ரவரி 25, 2011 அன்று தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒட்டிதான்றா வரக்கூடிய கொட்ட பேட்டா, தெக்கேலி என்ற கிராமங்களின் சாலை முழுவதும் 3000 காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அனல் மின் நிலையத்தை ஒட்டிச் செல்லும் ரயில் பாதையில் 250 காவல் துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு மக்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி அனல் மின் நிலையத்திற்கான கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சிறையில் வைக்கப்பட்ட மூதாட்டிகள்
இதனால் வெகுண்டெழுந்த கிராமமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டம் பெருமளவிலான பெண்களால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிட வேண்டிய செய்தியாகும். பகல் 12 மணிக்கு ஒட்டிதான்றாவில் மின் நிலையத்திற்குச் செல்லும் வாகனங்கள் வழிமறிக்கப்பட்டுள்ளன. காவல் துறைக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளது. காவல் துறை வீடு புகுந்து ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள் என்றும் பாராமல் 100-150 பேர் வரை கைது செய்து கொண்டு சென்றிருக்கிறது. 2000 பேருக்கும் மேலான மக்கள் மீது கொலை செய்ய முயற்சி(307) என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 92 வயது பாட்டி, ஆனந்த மாணிக்கம்மா என்பவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீகாகுளம் சிறையில் 16 நாட்கள் வைக்கப்பட்டுள்ளார் என்ற கேட்ட நொடியில் நாம் அதிர்ச்சியாகி விட்டோம்.
பிப்ரவரி 28, 2011, அனல் மின் நிலையத்தால் தங்கள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்ற காரணத்தால் அருகில் இருந்து ஹனுமந்த நாயுடு பேட்டா என்ற பகுதியில் விவசாய குடிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். காவல் துறைக்கு சுடச்சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இரண்டு பேர் அதே இடத்திலும், ஒருவர் மருத்துவ மனையிலும் இறந்துள்ளனர். சுற்றுபட்டு கிராமங்களின் நெல் சேமிப்பு கிடங்கு ஒன்று காவல் துறையினரால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. ஒட்டிதான்றாவில் 25 வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. (போலீசா, பொறுக்கியா? என்ற கேள்விதான் எழுகிறது) முதலாளிகளுக்கான இந்த ஆட்சி ஒரு கோர தாண்டவத்தை எளிய மக்களின் மீது நடத்தி முடித்திருக்கிறது என்பதை எங்களால் உணர முடிந்தது.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலையத்தை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்தின் கலவர காட்சி
மீனவ சங்கத் தலைவரோடு பேச்சை முடித்துக்கொண்டு, நாங்கள் ஒட்டிதான்றா சாலை சந்திப்பில் சிறிய பந்தலில் 712 நாளாக நடக்கும் தொடர் உண்ணாவிரதத்தில் பங்குபெற்றிருந்த நான்கு பெண்களை சந்தித்தோம். இவர்கள் கொள்ளுறு, ஒட்டிதான்றா, சந்தபொம்மாளி என்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள். முதலாளித்துவத்தின் லாப வேட்டைக்குத் துணை போகும் அரச பயங்கரவாதத்திற்கு மூன்று உயிர்களை பலிகொடுத்த பின்னும், தங்கள் ஜனநாயக உரிமைக்காக, தங்கள் அறவழிப்போராட்டத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கும் இம்மக்களின் மன உறுதியும், போராட்ட குணமும் நிச்சயமாக போற்றத்தக்கது, வரலாற்றில் பதியப்படவேண்டியது. கடைசியாக, தங்களுக்கு மீன்பிடி உரிமம் மீண்டும் கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், அது இப்போது நிலுவையில் உள்ளதாகவும் மீனவ சங்கத்தினர் கூறினர். மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டதால் பெரியவர்கள் வேறு வேலைகளைத் தேடி வெளியூர் சென்று வருவதால், அவர்களின் பிள்ளைகளின் பராமரிப்பு, கல்வி பாதிக்கப்படுவதாகக் கூறினர்.
பிறகு அனல் மின்நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளுக்குச் சென்று பார்த்தோம். இவை நெய்தலும், மருதமும் கலந்த பகுதியாக கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பசுமையான வயல்களும், நீர் நிலைகளுமாக இருந்தன. நம் சங்ககால இலக்கியங்களில் வயல்களில் மீன்கள் துள்ளித் திரிந்ததாகவும், அல்லி மலர்கள் பூத்திருந்ததாகவும் வரும் வர்ணனைகள்தான் ஞாபகம் வந்தது. துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு ஹனுமந்த நாயுடு பேட்டாவில் ஒரு நினைவுத் தூண் எழுப்பி உள்ளனர். இறந்தவர்களுக்கு அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காக்ராப்பள்ளி அனல் மின் நிலைய போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவு தூண்
மாலை தானியில் தெக்கேலி சென்று சேர்ந்தோம். பிறகு, சிரஞ்சீவி மற்றும் தானி ஓட்டுனரிடம் நன்றி கூறி விசாகப்பட்டினம் நோக்கி பயணமானோம். அன்று இரவு ரத்னம் அவர்களின் அலுவலகத்தில் தங்கினோம். மறுநாள் ஜூலை 28, 2012 பிற்பகல், மீண்டும் சில அரசியல் செயற்பாட்டாளர்களுடன் ஒரு சந்திப்பை ரத்னம் ஏற்பாடு செய்திருந்தார். ஆந்திராவில் வளர்ச்சி என்ற பெயரில் தொடங்கப்படும் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு தரும் தொழிற்சாலைகள் பற்றியும், பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் நடக்கும் பாக்சைட் சுரங்கம் பற்றியும், கடற்கரைப் பகுதியைக் குறிவைத்து தொடங்கப்படும் தொழிற்சாலைகளால் 80 லட்சம் மீனவர்கள் பாதிக்கப்படுவது பற்றியும் செய்திகளை பகிர்ந்து கொண்டனர். மாலையில் லக்ஷ்மிபெட்டா தலித்மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நடந்த அரங்கக் கூட்டத்திற்குச் சென்றோம். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு பிறகு, ரத்னம் அவர்களுடன் சென்னைக்கு போகும் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றோம். மாலை ஆறு மணிக்கு பேருந்து வந்தது. ரத்னம் அவர்களிடம் நன்றி கூறி செந்தளிரும், நானும் பேருந்தில் சென்னையை நோக்கி பயணமானோம்.
விவசாயம், மீன்பிடி, உப்பளம், முந்திரிக்காடு, கால்நடை வளர்ப்பு என்று சுயசார்புடன் உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை ஒழித்துக் கட்டிவிட்டு, வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்விடங்களை விட்டு துரத்தியடிப்பதும், அடுத்தவரிடம் கைகட்டி நிற்பவராகவும், கையேந்துபவராகவும் மாற்றுவதுதான் இன்றைய இந்தியாவின் வளர்ச்சிக் கொள்கை. இதுதான் தேசிய இனங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து இந்திய தேசத்தில் வாழுகிற அனைத்து மக்களும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை.
- பரிமளா, தமிழர் பாதுகாப்பு இயக்கம் (
- விவரங்கள்
- சேது ராமலிங்கம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இன்று நாடு முழுவதும் மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளையும் அழித்து, கட்டப்பட்டு வரும் பிரம்மாண்டமான மெகா திட்டங்களையும் குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் எதிர்த்து போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டத்தின் படி சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை சமர்பிக்க வேண்டி இந்தத் திட்டங்களை ஆய்வு செய்யும் தேசிய அளவிலான ஆய்வு நிறுவனங்களும் தேசிய அளவிலான விஞ்ஞானிகளும் சில சமயங்களில் மாசு கட்டுபாட்டு வாரியத்தின் அதிகாரிகளும், 'மக்கள் எதிர்த்துப் போராடும் திட்டங்களினால் யாருக்கும் எந்த பாதிப்புகளும் இல்லை; சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்று அறிக்கைகளை சமர்ப்பிக்கின்றனர். அந்த அறிக்கைகளில் தங்களின் கூற்றுகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் வாதிடுகின்றனர். பின்னர் மக்கள் அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் ஆய்வுகளிலிருந்தும் சொந்த அனுபவங்களிலிருந்தும், அந்த விஞ்ஞானிகளின் அறிக்கைகளுக்கு மாற்றான அறிக்கைகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தவுடன் இந்த அறிக்கைகள் போன இடம் தெரிவதில்லை. உதாரணங்களாக இறால் பண்ணைகள் குறித்து நீரி அமைப்பின் அறிக்கை சேது சமுத்திரத்திட்டம் குறித்த அதே அமைப்பின் அறிக்கை என்று பலவற்றை சுட்டிக்காட்டலாம். ஏன் இவ்வாறு நிகழ்கின்றன? இந்த விஞ்ஞானிகளின் பார்வை சரியில்லையா? அல்லது விஞ்ஞானமே தவறாக உள்ளதா? என்பதை அறிய சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியுள்ளது.
கடலூர் சிப்காட் பாதிப்புகளின் அறிக்கைகளிலிருந்து நமது ஆய்வைத் தொடங்குவோம். சிப்காட்டை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிப்காட்டிலுள்ள பல தொழிற்சாலைகளிலிருந்து பல்வேறு கடுமையான, பொறுத்துக் கொள்ள முடியாத துர்நாற்றங்கள் வருவதாகப் புகார் கூறி வந்தனர். இன்று நேற்றல்ல, கடந்த 20 ஆண்டுகளாக அந்தத் தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கியதிலிருந்தே மக்கள் புகார் கூறி வருகின்றனர். ஸ்பிக் பார்மா என்ற தொழிற்சாலையிலிருந்து மலத்தின் துர்நாற்றம் வருவதாகவும், டாக்ரோ என்ற தொழிற்சாலையிலிருந்து மருத்துவமைனையின் நாற்றம் வருவதாகவும், சாசுன் என்ற தொழிற்சாலையிலிருந்து அழுகிய முட்டையின் துர்நாற்றம் வருவதாகவும், பயனீர் மியாகி என்ற தொழிற்சாலையிலிருந்து அழுகிய பிணத்தின் வாடை அடிப்பதாகவும், ஆசியன் பெயின்ட்ஸ் தொழிற்சாலையிலிருந்து அழுகிய பழங்களிலிருந்து வீசும் துர்நாற்றம் வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதே போல நகப்பூச்சு, வெல்லப்பாகு மற்றும் பொது கழிப்பறையிலிருந்து வரும் துர்நாற்றங்கள் வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
கடந்த 2004ல் இந்தப் புகார்களை ஆய்வு செய்தபோது கிட்டத்தட்ட 36 வகை துர்நாற்றங்கள் வீசுவதாக கண்டறியப்பட்டது. அந்தப் பகுதியில் வீசிய காற்றை ஆய்வுக்குட்படுத்தியபோது புற்றுநோயை உருவாக்கும் 8 வகை கார்சினோஜென்கள் உட்பட 22 வகை நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்திருப்பது தெரிய வந்தது. இதில் 13 வகை இரசாயனங்கள் இத்தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுபவை. ஒட்டு மொத்தமாக இந்த ஆய்வாளர்கள் இந்த நச்சுப் பொருள்கள் தொழிற்சாலைகளிலிருந்து கழிவுப்பொருட்களாகவும் தொழிற்சாலை இயங்கும்போது வெளியே சிதறியவை அல்லது கசிந்தவை என்று உறுதிப்படுத்தினர். இதில் முக்கிய விசயமே இந்த ஆய்வுகளை எல்லாம் மாசுக் கட்டுபாட்டு வாரியம் மேற்கொள்ளவில்லை. தமிழக மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அதிகாரிகளும் அறிவியல் ஆய்வாளர்களும் நேரடியாக சென்று பார்த்து விட்டு கிராமத்து மக்களின் புகார்களை நிரகரித்து விட்டனர். அது மட்டுமின்றி இது போன்று துர்நாற்றம் என்பது சிறிய அளவிலான தொந்திரவுதான் என்றும் கூறிவிட்டனர். அப்படியானால் இந்த ஆய்வுகளை மேற்கொண்டது யார்? சாதாரண மக்கள்தான்.
2004ல் துர்நாற்றம் குறித்து சாதாரண மக்களின் பிரதிநிதியாக செயல்பட்ட ஒரு மீனவர், ஒரு ஆலைத் தொழிலாளர், ஒரு மின்சாதனப் பழுதுபார்ப்பவர், ஒரு பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த குழாய்த் தொழிலாளர், சேமியா விற்கும் ஒரு சிறிய வியாபாரி ஆகியோரைக் கொண்ட ஒரு குழுதான் இந்த விஞ்ஞான ஆய்வை மேற்கொண்டு பல வலிமையான ஆதாரங்களுடன் மக்கள் முன் சமர்ப்பித்தது. இத்தனைக்கும் தமிழகத்தின் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் 182 அறிவியல் ஆய்வாளர்களும் 143 பொறியாளர்களும் உள்ளனர். மக்களின் புகார்களை இவர்கள் கண்டு கொள்ளவில்லை. அதற்காக ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. ஆனால் ஆய்வு செய்வதற்கான எந்த அடிப்படை வசதியும் இல்லாதவர்கள் அதற்கான தனியான மேற்படிப்பும் படிக்காதவர்கள் எந்த நிபுணத்துவமும் இல்லாதவர்கள் மிகவும் அறிவுப்பூர்வமாக இந்த ஆய்வறிக்கையை பாதிக்கப்பட்ட தங்கள் சொந்த அனுபவங்களிலிருந்து தயாரித்துள்ளனர்.
அவர்களின் அறிக்கையின்படி இந்த துர்நாற்றங்களில் அழுகிய முட்டையிலிருந்து வீசும் துர்நாற்றம் ஹைடிரஜன் சல்பைடு வாயுவிலிருந்து வருவது என்றும் நகப்பூச்சு துர்நாற்றம் ஆசிடோன் வேதியல் பொருளிலிருந்து வருவது என்றும் மெதில் அழுகிய காய்கறிகளிருந்து வீசும் துர்நாற்றம் போன்று வருவது மெர்கேப்டன் என்ற வேதியல் பொருளிலிருந்து என்றும் வரிசைப்படுத்தி அனைத்து துர்நாற்றங்களுக்கும் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கும், இடையிலான உறவை ஆணித்தரமாக நிறுவியிருந்தனர். ஆனால் அரசோ மெத்தப் படித்த நிபுணர்களோ விஞ்ஞானிகளோ இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் மெத்தப் படித்த விஞ்ஞானிகள் நிபுணர்கள் நிரம்பியிருக்கும் தேசிய அளவிலான ஆய்வுக்கூடங்கள் அங்கீகரித்தால் மட்டுமே பொது மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையும் அறிவியல்பூர்வமாக முடியும். இல்லாவிட்டால் தங்களைப் பாதிக்கும் எந்த பிரச்சினையையும் சாதாரண எளிய மக்கள் முன்வைத்தால் அறிவியல் பூர்வமானது அல்ல என்று நிராகரிப்பார்கள். ஏனெனில் அறிவியல் ஆள்பவர்களின், ஆளும் வர்க்கங்களின் அரசியல் அதிகாரத்தையும் மற்றும் அவர்களின் அரசு கட்டமைப்பின் அதிகாரத்தையும் நிறுவுவதற்கான கருவியாக தொன்று தொட்டு எப்போதுமே செயல்பட்டு வந்துள்ளது. இன்றைக்கும் வருகிறது. இதன் தொடர்ச்சிதான் இது.
இன்னொரு பிரச்சினையையும் உதாரணமாக பார்ப்போம். கொடைக்கானலில் ஹெச்.யூ.எல் என்ற நிறுவனம் பாதரசத்தைக் கொட்டிய வழக்கு. கடந்த 2001ல் கொடைக்கானலில் செயல்பட்டு வந்த இந்துஸ்தான் லீவர் தொழிற்சாலையை மூடுவதற்கு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்துஸ்தான் லீவர் கம்பெனி பாதரசத்தில் இயங்கும் தெர்மோமீட்டரை உற்பத்தி செய்து வந்தது. அந்த தொழிற்சாலையின் அருகிலிருந்தவர்களும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களும் தொழிற்சாலையானது டன் கணக்கில் பாதரசக் கழிவைக் கொட்டி நிலங்களையும் சுற்றுச்சூழலையும் எப்படி நாசப்படுத்தியிருந்தது என்பதை பல வகைகளிலும் அம்பலப்படுத்தி போராடி வந்தனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பு உபகரணங்களோ அல்லது பயிற்சியோ அளிக்கப்படவில்லை என்பதும் முக்கிய விசயம்.
அந்த தொழிற்சாலை மூடப்படும்போதே தாங்கள் நரம்பு மண்டலத்தை கடுமையாகப் பாதிக்கும் நச்சுப்பொருளை கையாண்டிருக்கிறோம் என்பதைத் தொழிலாளர்களும் உணர்ந்தனர். அதற்குள் பல தொழிலாளர்களுக்கு நரம்பு தளர்ச்சி, நடுக்கம், வலிப்பு, சிறுநீரகப்பாதிப்பு, கட்டிகள், தோல் நோய்கள் மற்றும் மனநோய்களாக மனச்சிதைவு நோய்கள், நினைவு இழத்தல் போன்றவை ஏற்பட்டன. இதைக் கண்ட ஏற்கனவே பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உடனடியாக ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் இறுதியில் பாதரசத்தினை எந்த வித பாதுகாப்பும் இன்றி கையாண்டதால், பல தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான கடுமையான நோய்கள் ஏற்பட்டன என்பது தெரிய வந்தது. அந்த தொழிற்சாலை மூடப்பட்டதிலிருந்து வெகு விரைவில் இன்னும் பலர் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்ததும் கண்டறியப்பட்டது. இதனால் அச்சமடைந்த தொழிலாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நட்டஈடும் மருத்துவ சிகிச்சை உதவி கோரியும் வழக்கு தொடந்தனர்.
நீதிமன்றம் சும்மா இருக்குமா? நீதிமன்றம் வழக்கம்போல கற்றறிந்த நிபுணர்களின் கருத்துகளைத்தானே கேட்கும்? இதற்கிடையில், வழக்கு தொடரப்பட்டவுடன் யூனிலிவர் கம்பெனி நாட்டின் உயர்தர நிபுணர்களும் அறிவியலாளர்களும் அடங்கிய தேசிய தொழிற்சாலை நஞ்சியல் ஆராய்ச்சி மையத்தையும், தேசிய பணி சுகாதரா நிறுவனத்தையும், அனைத்திந்திய மருத்துவ நிறுவனத்தையும் நிபுணத்துவக் கருத்துகளுக்கு அணுகியது. இந்த மூன்று நிறுவனங்களும் கடுமையான வாக்கியங்கள் அடங்கிய அறிக்கைகளை அளித்தன. பாதரசத்திற்கும் தொழிலாளர்களின் ஆரோக்கியப் பிரச்னைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தொழிற்சாலையே மூடப்பட்டு மூன்று ஆண்டுகளாகி விட்டதால் இனி எந்த விசாரணையும் தேவையில்லை என்றும் கூறப்பட்டிருந்தது. இத்தனைக்கும் ஒரு தொழிலாளர் கூட விசாரிக்கப்படவில்லை.
சில மாதங்களுக்குப் பின்னர், இதே அமைப்புகளின் நிபுணர்கள் கொண்ட ஒரு நிபுணர் குழுவை உயர்நீதி மன்றமும் அமைத்தது! எந்த அமைப்பு கம்பெனிக்கு நற்சான்றிதழ் அளித்ததோ அதே அமைப்பான தொழிற்சாலை நஞ்சியல் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர். ஏ.கே.சீனிவாசனை தலைவராகக் கொண்டு அந்த குழு அமைக்கப்பட்டது. பிறகென்ன அந்தக் குழு யூனிலீவர் கம்பெனியை வழக்கிலிருந்து விடுவித்ததோடு பாராட்டும் தெரிவித்தது. கம்பெனியில் சுகாதார நடைமுறைகள் நன்றாக கடைப்பிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்பும் பிரமாதமாக கடைபிடிக்கப்பட்டதாகவும் பாதரசத்தினால் எந்த தொழிலாளரும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் அந்த கம்பெனியே எதிர்பார்க்காத அளவுக்கு பாராட்டுகளை அள்ளி வழங்கியது. இதன் பின்னர், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற தகவலின் அடிப்படையில் அந்தக் கம்பெனி அது தொடங்கிய நாளிலிருந்து கடந்த 18 ஆண்டுகளாக எந்த ஒரு பாதுகாப்பு முகமூடியும் தொழிலாளர்களுக்கு வாங்கியதில்லை என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அந்த தொழிலாளர்கள் கொடைக்கானலில் சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள ஏதாவது ஒரு நிறுவனத்திடம் உதவி கேட்டபடி உள்ளனர். இதுவரை ஒருவர் கூட உதவவில்லை.
இன்னொரு அனைவரும் அறிந்து உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் கம்பெனியின் நச்சுக் கழிவுகளுக்கு எதிராக பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முதலில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை பின்னர் திறக்கப்பட்டு இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கான கைங்கரியத்தை செய்தது வேறு யார்? தேசிய சுற்றுச் சூழல் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனமான நீரிதான். இதில் நீரி அடித்த பல்டிகள், செய்த தில்லுமுல்லுகள் ஏராளம். அதை இங்கு பார்ப்போம்.
1998ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையின் நச்சுக் கழிவுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உயர் நீதிமன்றம் நீரியை, ஸ்டெர்லைட்டின் செயல்பாட்டை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்திரவிட்டது. இந்த உத்திரவின்படி நீரி அறிக்கையை சமர்ப்பித்தது. அறிக்கையில் ஆலை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் தவறான இடமாகும்; ஆலையிலிருந்து வெளிவரும் கழிவு நீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படவில்லை; இதன் விளைவாக நிலத்தடி நீர் அசுத்தமாகிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடிட உத்திரவிட்டது. ஆனால் அடுத்த ஆண்டே நீரி அடுத்த அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் பாதுகாப்பான முறையில் உள்ளதாக நற்சான்றிதழும் அளித்தது.
இரண்டாவதாக அளித்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலை, அதன் கழிவு சுத்திகரிப்பு நிலையத்தை சிறப்பாக செயல்படுத்துவதாகவும், அதனால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் ஆர்செனிக், செலினியம் மற்றும் துத்தநாகம் போன்ற வேதியியல் மற்றும் கழிவு உலோகப் பொருள்களின் அளவு குறைந்துள்ளதாகவும் தமிழக மாசு கட்டுபாட்டு வாரியம் நிர்ணயித்தபடி இருந்ததாகவும் கூறியிருந்தது. ஆனால் அந்த அறிக்கையின் இணைப்பிலோ கரையக்கூடிய திடப்பொருள்களான குளோரைடு, சல்பேட்டுகள், ஆர்செனிக், செலினியம், குரோமியம் மற்றும் துத்தநாகம் போன்றவை மாசுக்கட்டுபாட்டு வாரியம் நிர்ணயித்த அளவுகளை விட அதிக அளவில் இருந்தது. இதன் பின்னணியில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியும் வெளியானது. தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி நீரியிடமிருந்து பெற்ற தகவலின்படி ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து நீரி அமைப்பு 1.22 கோடி ரூபாயை ஆய்வுகளுக்காக பெற்றிருந்தது தெரிய வந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
பிரச்சினை என்னவெனில் இது எப்போதுமே சாதாரணமாக நடைபெறும் நிகழ்வாகும். தேசிய ஆய்வு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட நிறுவனங்கள் தனியார் கம்பெனிகளின் நிதியைக் கொண்டே இயங்குகின்றன. அவர்களைச் சார்ந்து அவர்களின் நிதியில் இயங்கும் நிறுவனம் அவர்களின் ஆலைகள் அல்லது கம்பெனிகள் குறித்து சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயாரிக்கின்றன. அதை அரசு முக்கியத்துவமாக எடுத்துக்கொள்கிறது. இந்த அறிக்கைகள் ஒருதலைப்பட்சமாகவே இருக்கும் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். இந்த அறிக்கைகள் தான் நீதிமன்றங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில் இவை அறிவியல் பூர்வமானவையாம். ஆனால் அதே சமயத்தில் மக்கள் தங்கள் சொந்த அறிவிலிருந்தும் அனுபவங்களிலிருந்தும் தயாரிக்கும் அறிக்கைகள் அறிவியல் பூர்வமற்றவையாம்.
எது அறிவியல் பூர்வமானது? என்ற பிரச்சினை காலனிய காலத்திலிருந்தே தொடங்குகிறது. தொழிற்புரட்சி தொடங்கிய பின் முதலாளிய பொருளாதாரம் தழைத்தோங்கிய பின்னர், அவர்கள் ஏராளமான அறிவியல் பரிசோதனை ஆய்வுக் கூடங்களை நிறுவினர். இந்த பரிசோதனைக்கூடங்களில் சோதனை செய்து நிரூபிக்கப்பட்டவையே அறிவியலானது. மக்களின், விவசாயிகளின், தொழிலாளர்களின், பெண்களின், பல்வேறு தேசிய இனங்களின், ஒடுக்கப்பட்ட மக்களின் சொந்த அனுபவங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற அறிவு மாபெரும் வளமாகும். இந்த தொன்மையான அறிவு, அறிவியல் இல்லை என நிராகரிக்கப்பட்டு விட்டது. இதனால்தான் காலனியாதிக்கத்தினால் வாழ்வு பெற்ற ஆங்கிலம் சார்ந்த மருத்துவமுறைகள், விவசாய முறைகள், உணவு முறைகள் மற்றும் தொழில்கள்தான் இன்று மிகப்பெரும் முதலீட்டின் பின்னணியில் அறிவியலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பின்புலத்தில் ஆங்கிலேயக் கல்வி முறையில் ஒரு முனைவர் பட்டம் பெற்றால் மட்டும் போதுமானது. அவர் அறிவியலாளராக அவர் கூறும் எல்லாவற்றையும் விமர்சனப் பார்வையின்றி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு வந்து விடுகிறது. இந்த காலனிய மனப்பாங்குதான் மக்களின் அறிவை அறிவியல் அல்ல என்றும், சில சமயம் மூட நம்பிக்கை சார்ந்தது என்றும் எள்ளி நகையாடுகிறது. இதே அடிப்படையில்தான் விதிவிலக்காக ஒரு சிலர் தவிர்த்து பெரும்பாலான அறிவியலாளர்களும், நிபுணர்களும் மக்கள் விரோதமாக செயல்படுகிறார்கள்; ஆய்வுகளை வெளியிடுகிறார்கள். இதன் தவிர்க்க முடியாத விளைவாக மக்களுக்கு எதிரணியில் நின்று கொண்டிருக்கிறார்கள். மக்களின் அறிவு எப்போது அறிவியலாக ஏற்றுக்கொள்ளப்படுமோ அப்போதே பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
- சேது ராமலிங்கம்
- விவரங்கள்
- கொளஞ்சி
- பிரிவு: சுற்றுச்சூழல்
நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கை வளம் நிரம்பிய மரங்கள், காய்கள் பயிர்கள், வயல்வெளிகள், பூக்களென்று நம்முடைய சுற்றுப்புறம், நம்முடைய கண்களை விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வருகிறது. கிராமத்திலுள்ள சின்னச்சின்ன ஊர்கள், ஊருக்குள்ளே வாழும் மனிதர்கள், மனிதர்களோடு தோழமை கொண்டு துள்ளித்திரிந்த ஆடு மாடுகள், நாய்கள், பூனைகள், வீட்டுக்குள்ளே கூடுகட்டி வாழ்ந்த சிட்டுக்குருவிகள், மழைக்காலத்தில் உள்ளுக்குள்ளே தலைநீட்டிப் பார்க்கும் தவளை போன்ற எண்ணற்ற உயிரினங்கள் அனைத்துக்கும் சோறு போட்டு மகிழ்வித்த சுற்றுப்புறத்துடைய இயற்கை வளம், காலப்போக்கில் அதன்மீது அக்கறை காட்டாமையாலும், பராமரிப்பு எடுத்துக் கொள்ளாமையாலும், கவனிப்பாரற்று சீரழிந்து கொண்டு வருகிறது. வருங்காலத்தில் இந்தப் சீரழிவு ஒரு பிரம்மராட்சசனைப் போல விசுவரூபமெடுத்துக் கொண்டு வருகிறது.
முன்னேற்றம் அதனுடனே பயணிக்கிற நாகரீகம் ஆகியவைகளுடைய ஆதிக்கத்தால் காடுகள் அழிந்து கொண்டு வந்தது. காடுகளிலுள்ள மரங்கள், மலைகளிலுள்ள மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டதாலும், சுற்றுப்புறத்தின் பசுமை அழிந்ததாலும், பெய்யும் மழை குறைந்ததாலும், அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. செழிப்பான மழை காடுகளுக்குள்ளேயிருக்கும் உலர்சருகுகள், மக்குகளென்று இயற்கையான உரங்களை சுமந்து கொண்டு ஆறுகளின் படுகைகளில் படியச்செய்து அவைகளுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து வந்தது. ஆறுகளை சுற்றியிருக்கிற வயல்வெளிகள் படுகைகளிலுள்ள ஊட்டச்சத்தை உறிஞ்சிக் கொண்டதோடு, வயல்வரப்புகளுடைய செழுமை நிறைந்த மண், எண்ணற்ற உயிரினங்களுக்கு உணவுக் களஞ்சியமாக இருந்து வந்தது. முன்னேற்றம் என்கிற பெயரில் வனமரங்கள் வெட்டப்படுவதாலும், முட்செடிகள் அறுக்கப்படுவதாலும், மூலிகைச்செடிகள் வேரோடு பிடுங்கப்படுவதாலும், வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாலும், காட்டுநிலங்கள் அபகரிக்கப்படுவதாலும் இயற்கை தன் அழகை மட்டுமல்ல தன் உடைமையையும் சிறிது சிறிதாக இழந்து கொண்டிருக்கிறது. இந்த சட்டவிரோதமான செயல்களால் காடுகளுடைய பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. இயற்கையின் அருமையை புரிந்து கொள்ளாமல் இந்தப் பேரழிப்பினால் மனிதன் ஈடுகட்ட முடியாத செல்வங்களை இழந்து கொண்டு வருகிறான்.
1980ஆம் ஆண்டு காடுகளுடைய பராமரிப்பு, பாதுகாப்புச் சட்டத்தை இந்திய அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. காடுகளின் பரப்பளவு குன்றாமலிருப்பதற்கும், அதனுடைய வளம் சீரழிக்கப்படாமலிருப்பதற்கும், அரசாங்கம் அதற்குரிய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து திறமையாக செயல்படுத்தியிருக்கிறது.
1. காடுகளில் செயல்படும் சட்டவிரோதமான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். அவ்வாறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
2. காடுகளிலுள்ள மரங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காடுகளுடைய செழிப்புத்தன்மை சீரழிந்து போகாமலிருக்க ஆங்காங்கே காணப்படுகிற காலியான நிலங்களில் புதிய மரங்களை வளர்க்க வேண்டும்.
3. காடுகளுடைய பரப்பளவு குறையாமலிருக்க, அழிந்து போன மரங்களை அப்புறப்படுத்தி அந்த இடங்களில் இன்னொரு மரங்களை வளர்க்க வேண்டும். அவைகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் காடுகளை அடர்த்தியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
4. காடுகளில் தீ பற்றிக் கொள்வது இயற்கை, இந்த தீவிபத்து நிகழ்வைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
5. பன்முகத்தன்மையைக் கொண்ட உயிரினங்கள் அழிந்து போகாமலிருக்க, காடுகளுடைய செழிப்புத் தன்மை பாழாகாமலிருப்பதற்கும், அதனைப் பேணிக்காப்பதற்குமுரிய தகுந்த நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஆகிய செயல் திட்டங்களை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்திய அரசு அனைத்து செயல் திட்டங்களையும் திறமையாகச் செயல்படுத்தியதோடு, விளம்பரங்கள், போஸ்டர்கள் மூலம் சுற்றுப்புறச் சூழலுக்கான விழிப்புணர்வின் அருமையை மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறது. மேலும் மக்களுக்கு, இயற்கை வளத்தை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்களை நடைமுறையில் திறைமையோடு செயல்படுத்துவதற்குரிய பயிற்சிக் கூடங்களையும் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
1972ஆம் ஆண்டு வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுமென்ற சட்டத்தை இந்திய அரசாங்கம் அமல்படுத்தி, அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமையையும் பெற்றிருக்கிறது.
1. வனவிலங்குகளை வேட்டையாடும் சட்டவிரோதமான செயலுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமென்றும், அவ்வாறு சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடுபவருக்கு கடுமையான தண்டனை உடனடியாக விதிக்கபட வேண்டும். அவைகளுடைய சுதந்திரம் பறிபோகாமலிருக்க தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
2. நோய் நொடிகள் பீடிக்கப்படாமலிருப்பதற்கு வனவிலங்குகளுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவ்வாறு நோய் பீடிக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.
3. அழிவின் விளிம்பிலிருக்கும் வனவிலங்கினங்களுக்கு அதிகமான அக்கறையும், கவனமும் கொடுத்து பாதுகாக்கப்பட வேண்டும்.
4. நோயினால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுவதற்கு வேண்டிய ஊர்திகளை வனத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டும்
ஆகிய செயல்திட்டங்களை இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது. மேலும் புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருவதால் அவைகளுடைய எண்ணிக்கையை பெருக்க வேண்டுமென்பதற்காக இந்திய அரசாங்கம் பல அருமையான செயல்திட்டங்களை வடிவமைத்ததோடு அவைகளை நடைமுறையிலும் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது. புதுமை, நவீனத்துவம், முன்னேற்றம், மாற்றம், வல்லரசாகுதல், உலகமயமாக்குதல் ஆகிய முயற்சிகள் புவியின் இயற்கைவளத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நசித்துக் கொண்டு வருகிறது. இத்தகைய முயற்சிகள் இயற்கைக்கு எத்தகைய பாதிப்பைக் கொடுத்திருக்கும் என்பதை அதனுடைய சீற்றத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். இந்த முயற்சிகளை விட்டுக் கொடுக்காமல் கைப்பற்றிக் கொண்டிருந்தால், மனிதன் எண்ணற்ற உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறுகிற கரியமில வாயு பூமியின் மேல்மட்டத்தில் பரவிக் கொண்டு வருவதாலும், புவியினுடைய வெப்பத்தை அதிகரித்து, மேல்மட்டத்திலுள்ள காற்று மாசுபடுத்தப்பட்டிருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் நிலத்துடைய செழிப்புத்தன்மையை சீரழிந்திருக்கிறது, மேலும் கடலோரப்பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகையால் உருவாகியுள்ள சத்தங்கள் புவியை அதிர வைத்திருக்கிறது. இனி வருங்காலத்தில் நதிகளும் மற்றும் ஆறுகளும் வற்றிப் போவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதால் உணவுப் பொருட்கள் கிடைக்காமல், குடிநீர் கிடைக்காமல், பட்டினி, பஞ்சம் போன்ற கொடிய நோய்கள் பீடிக்கப்பட்டு அதிகமான பேரிழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். தொழிற்சாலைகளுடைய முன்னேற்றம் நதிகளை மாசுபடுத்தியிருக்கிறது. காற்றை மாசுபடுத்தியிருக்கிறது, நம்மை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை மாசுபடுத்தியிருக்கிறது. சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க வேண்டுமென்பதற்காக அரசு பல வழிகளை திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறது. அவை;
1. தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறுகிற கழிவுப் பொருட்களால் விளையக்கூடிய அபாயத்தின் தீவிரத்தை ஆராய்வதற்கு பல ஆய்வுக்கூடங்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது.
2. தொழிற்சாலைகளுடைய கழிவுகள் அதிகபட்சமான அபாயத்தை விளைவிக்கக் கூடியதாகயிருந்தால் அவைகளுடைய செயல்பாடு வேகத்தை குறைப்பதற்கான வழிகளை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
3. மாசுபடிந்த நதிகளை சுத்தமாக்குவதற்கும், மாசுபடிந்த காற்றைச் சுத்தமாக்குவதற்கும் தகுந்த வழிமுறைகளை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.
4. புவியிலுள்ள சத்தங்களை குறைப்பதற்கான விதிமுறைகளை, போஸ்டர்கள், விளம்பரங்கள் மூலம் மக்களுக்கு புரியும்படி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது .
5. கடலோரப்பகுதிகளின் செழிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக பல பாதுகாப்பு திட்டங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறது.
இயற்கையோடு தோழமை கொள்வோம், இயற்கையை அரவணைத்து கொண்டு செயல்படுவோம், இயற்கையின் தோள்களில் தலைசாய்த்து இளைப்பாறுவோம், இதனைப் புரிந்து கொண்டு நடந்தால் நாளைய தலைமுறைக்கு ஒரு அழகிய, அருமையான புவியைக் கொடுக்க முடியும்.
வாருங்கள் சுற்றுப்புறத்தை பாதுகாப்போம்! இயற்கையை நேசிப்போம்!! இந்த பூமியைக் காப்பாற்றுவோம்!!!
- விவரங்கள்
- சு.தளபதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
1. அணுஉலை என்றால் என்ன? அணு மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது?
உலகெங்கும் மின்சாரம் என்பது ஒரே ஒரு முறையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ஏறக்குறைய நமது மிதி வண்டி(dynamo) ‘டைனமோ’வில் பயன்படுத்தப்படும் மின் காந்தப் புலம் தொழில் நுட்பம் தான். இது போன்ற பெரிய டைனமோக்களை சுற்றுவதன் மூலம் மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணையில் நீரைத் தேக்கி மேலிருந்து கீழே வரும் நீரின் விசையால் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது நீர் மின்சாரம். காற்றின் மூலம் சுற்றச் செய்து தயாரிக்கப்படுவது காற்றாலை மின்சாரம். நீரைக் கொதிக்க வைத்து, நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழலச் செய்து தயாரிக்கப்படுவது அனல் மின்சாரம். (இதற்கு நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது). டீசல், பெட்ரோல், எரிவாயு மூலமும் சுழலச் செய்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்குவதற்கு நிலக்கரிக்குப் பதிலாக அணுவின் உட்கருவைப் பிளப்பதால் உருவாகும் வெப்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுதான் அணு மின்சாரம்.
யுரேனியம் போன்ற சில தனிமங்கள் பிளக்கப்படுவதால் அதிக வெப்பமும் ஆற்றலும் கிடைக்கின்றன. அவற்றை முறைப்படுத்தி அதைத் தொடர் நிகழ்வாக மாற்றி நீரைக் கொதிக்க வைத்து நீராவியாக்கி அதன் மூலம் டைனமோவைச் சுழல வைத்துப் பெறப்படுவது தான் அணு மின்சாரம்.
2. சூரிய ஒளி (Solar) மின்சாரமும் இதே போன்றது தானா?
இல்லை. சூரிய ஒளியின் ஆற்றல் மூலம் வெப்ப நிலை தூண்டப்படும் பலகைகள் (Panels) சிறிய அளவில் மின்சாரத்தை உருவாக்கின்றன. அதன் மூலம் மின்கலன்களை (Batteries) மின்னூட்டம் (Charge) செய்ய முடியும். அந்த மின்கலன்கள் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது.
3. கூடங்குளம் அணு உலையின் தொழில் நுட்பம் என்ன?
கூடங்குளம் அணு உலை இரசிய நாட்டின் வி.வி.இ.ஆர் 1000 என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. யுரேனியம் என்ற தனிமம் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அணு பிளக்கப்படும் போது சுமார் 2000 oC வெப்பம் உருவாகிறது. இது நீரின் கொதி நிலையான 100 oC -ஐ விட 20 மடங்கு அதிகம். இந்த வெப்பத்தைப் பயன்படுத்தி நீராவி உருவாக்கப்பட்டு, அந்த நீராவி மூலம் டைனமோக்கள் சுழற்றப்பட்டு மின்சாரம் உருவாக்கப்படுகிறது. மிக அதிக வெப்பம் உருவாவதால், இந்த அணு உலையைக் குளிர்விக்க கடலிலிருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரித்து உப்பு அகற்றி, நன்னீராக மாற்றி இந்த உலையில் பயன்படுத்தப்படுகிறது.
யுரேனியம் அணுவைப் பிளக்கும் போது அது வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன், புளுட்டோனியமாக மாறுகிறது. மேலும் கடுமையான கதிரியக்கமும் (Radiation) ஏற்படுகிறது. இந்த கதிரியக்கத்திலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கான்கிரீட் சுவர்களும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன.
4. அணு உலைத் தொழிற்நுட்பத்தின் நன்மை மின்சாரம். அதனால் தீமைகள் உண்டா? அவை யாவை?
கண்டிப்பாகத் தீமைகள் உண்டு. அவை முதன்மையானது கதிரியக்கம் (Radiation). இந்த கதிரியக்கம் மிகமிக அபாயகரமானது. இந்தக் கதிர்வீச்சினால் தைராய்டு பாதிப்பு, காசநோய், நீரிழிவு நோய், மலட்டுத் தன்மை, மூளை வளாச்சிக் குறைவு, புண்கள் என பல்வேறு நோய்கள் மனிதருக்கு ஏற்படும்.
இரண்டாவது - கழிவுகள். இந்த பிளக்கப்பட்ட யுரேனியத்தின் கழிவான புளுட்டோனியம் என்பது அணுகுண்டு செய்யப் பயன்படும் மூலப்பொருள். அணுகுண்டு ஏற்படுத்திய நாசங்களை நாம் ஏற்கனவே சப்பான் நாட்டின் கிரோசிமா, நாகசாகி நகரங்களில் பார்த்துவிட்டோம். இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது, எப்படிப் பாதுகாப்பது என்பதை உலக விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இந்தக் கழிவுகளின் கதிரியக்கம் கிட்டத்தட்ட 45ஆயிரம் ஆண்டுகளுக்கு வீரியத்துடன் இருக்கும்.
மூன்றாவது - விபத்துக்கள். மற்ற தொழிற்சாலைகளைப் போல் சிறிய அளவிலான விபத்துக்கள் என இதைக் கருத முடியாது. அணு உலையின் சிறிய விபத்தே மிகப் பெரிய மனிதப் பேரழிவை ஏற்படுத்தும். உயிரிழப்பு லட்சக் கணக்கில் இருப்பதுடன் அதன் பாதிப்பு பல தலைமுறைகளுக்கும் தொடரும். நாம் கற்பனை செய்வதை விட இழப்புக்கள் மிகமிக அதிகமானதாகவே இருக்கும்.
நான்காவது - சுற்றுப்புற சீர்கேடு. அணு உலை அமையும் இடம் மிக பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதனால் அதைச் சுற்றி வாழும் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடும். கடலிலிருந்து ஒரு நாளைக்கு 32 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அணு உலைளைக் குளிர்வித்தவுடன் அந்த வெந்நீர் கடலில் மீண்டும் கொட்டப்படுகின்றது. இதனால் கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடல்வாழ் உயிரினங்கள் அழிக்கப்பட்டு, உயிர்ப் பெருக்கம் பாதிப்படைவதுடன், அதை நம்பியுள்ள மீனவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிறது.
ஐந்தாவது - பாதுகாப்பு. ஏறக்குறைய ஒவ்வொரு அணு உலையும் ஒரு அணு குண்டுக்குச் சமமானது. தீவிரவாதிகளாலோ அல்லது எதிரி நாட்டினராலோ தாக்கப்படும் அபாயம் உள்ளது. மடியில் அணு குண்டைக் கட்டிக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ முடியும். அவ்வாறு தாக்கப்பட்டால் அது மிகப் பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். மேலும் பாதுகாப்புக் கருதி அப்பகுதி ராணுவமயமாக ஆக்கப்படுவதால் பொது மக்கள் சராசரி வாழ்க்கை வாழ முடியாமல் இடர்ப்பட நேரிடும்.
5. தமிழகத்தின் மின் பற்றாக்குறையைப் போக்க அணு மின்சாரம் அவசியம் தானே?
கண்டிப்பாக இல்லை. முதலில் தமிழகம் மின் பற்றாக்குறை உள்ள மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாட்டின் தேவைகளுக்கு போதுமானது மட்டுமின்றி மிகுதியானதாகும். (தமிழ்நாட்டின் மின் தேவை 12,500 மெகாவாட்)
பொதுவாக இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தமது மின் தேவையில் 65 விழுக்காட்டை தாங்களே உற்பத்தி செய்துகொள்ளும். அத்துடன் மிகச் சிறு அளவை தனியாரிடமிருந்து விலைக்கு வாங்கிக்கொள்ளும். மீதி 35 விழுக்காட்டை மத்திய அரசு தனது மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும்.
மாநிலங்கள் தாங்கள் சொந்தமாக நடத்தும் மின் உற்பத்தி திட்டங்களின் மூலம் கிடைக்கும் மின்சாரம் தேவைக்கு மேல் மிகுதியாக உள்ள போது அவற்றை வெளியே விற்று லாபம் ஈட்டிக் கொள்ளலாம். இவ்வாறு 1992 வரை தமிழ்நாட்டின் மிகுதி மின்சாரத்தில் வருடத்திற்கு 3,500 கோடி ரூபாய் லாபம் கிடைத்துவந்தது.
ஆனால் 1992-ல் இந்திய நடுவண் அரசு (மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும், மாண்டேக் சிங் அலுவாலியா நிதித் துறைச் செயலாளராகவும் இருந்த போது) மாநில அரசின் மின் திட்டத்திற்கான அனுமதிகளை முடக்கியது. ஆனால் தனியார் மின் ஆலைகளுக்கு அனுமதி வழங்கியது. அந்த தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநில அரசுகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கும்படி நிர்ப்பந்தித்தது. மேலும் மத்திய மின் தொகுப்பிலிருந்து கொடுக்கும் மின்சாரத்தின் அளவையும் குறைத்தது.
எடுத்துக்காட்டாக 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் எண்ணூர் மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து பிடுங்கப்பட்டு வீடியோகானுக்குத் தாரைவார்க்கப்பட்டது. நெய்வேலியில் ST-CMS என்ற அமெரிக்க தனியார் தயாரிக்கும் மின்சாரத்தை யூனிட் ரூ.3.70-க்கு வாங்க வேண்டிய நிர்ப்பந்தம். ஆனால் அருகிலுள்ள என்.எல்.சி-யில் மின்சாரம் யூனிட் விலை 1.72 காசு. இதன் மூலம் பெரும் நட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.
மேலும் தன் பங்குக்கு தமிழ்நாடு அரசும் பொது மக்களுக்கு வழங்கி வந்த மின்சாரத்தை போர்டு, குண்டாய், கணிணி (ஐடி) நிறுவனங்கள் ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியார் முதலாளிகளுக்கும் திருப்பிவிட்டன. பொது மக்களுக்கு தட்டுப்பாட்டை உருவாக்கி தனியார் முதலாளிகளுக்கு தடையற்ற மலிவான மின்சாரம் தருகின்றனா.
வீடுகளுக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு ஏற்படுத்தும் அரசு தனியார் (ஐடி) நிறுவனங்களுக்கு 2 நிமிடத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்பட்டால் அதற்கு இழப்பீட்டுத் தொகை கொடுக்கிறது. மேலும் வீட்டிற்கு யூனிட் ரூ.3.50-க்கு விற்பனை செய்யும் மின் வாரியம் ஐ.டி நிறுவனங்களுக்கு ரூ.2.50-க்குத் தான் கொடுக்கிறது. தமிழ்நாட்டின் 40% மின்சாரத்தை இந்த நிறுவனங்கள் தான் உபயோகிக்கின்றன.
நெய்வேலியிலிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவற்றிற்குத் தரும் மின்சாரத்திலிருந்து தலா ஆயிரம் மெகாவாட்டை நமக்குத் தந்தாலே போதும். தமிழகத்தின் பற்றாக்குறை வெறும் 2,600 மெகாவாட்டுகள் மட்டுமே. மின் உற்பத்தியின் படி உபரி மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் மின்சாரம் இப்படி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதால் நாம் மின்வெட்டுப் பிரச்சினையில் மாட்டித் தவிக்கிறோம். நமக்கு அணு மின்சாரம் தேவையே இல்லை.
6. இந்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறீர்கள். ஆனால் எட்டு மணி நேர மின் வெட்டால் அவதிப்படுவது மக்கள் தானே. இப்போது கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரம் நமக்குக் கிடைத்தால் இந்த மின் தடைப் பிரச்சினை குறையுமே?
கூடங்குளம் அணு உலையின் மொத்த உற்பத்தித் திறனே 1,000 மெகாவாட் தான். இரண்டாவது அணு உலை செயல்படத் துவங்கிய பின்னரே இன்னொரு ஆயிரம் மெகாவாட் கிடைக்கும். இதுவரை இந்தியாவின் அணு உலைகள் 100 விழுக்காடு உற்பத்தித் திறனை எட்டியதில்லை. அணு உலைகளின் உற்பத்தித் திறன் 50 விழுக்காட்டுக்குக் கீழ்தான். ஒரு வேளை 1,000 மெகாவாட் உற்பத்தி ஆவதாக எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு வெறும் 280 மெகாவாட் மட்டுமே. இதில் மின் கடத்தல் பகிர்மானத்தில் இழப்பு (transmission) 30 விழுக்காடு போக 190 மெகாவாட்கள் மட்டுமே கிடைக்கும். அதிலும் தொழிற்சாலைகளுக்குப் போக வீட்டுக்கு வந்து சேருவது சொற்பமே. வெறும் 190 மெகாவாட்டிற்காக அணு உலை என்னும் பேராபத்தை வரவேற்பது கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிவதற்குச் சமம். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே. கூடங்குளம் அணு உலை திறக்கப்பட்டால் பாலாறும், தேனாறும் பெருக்கெடுத்து ஓடும் என்பது காங்கிரசின் வழக்கமான மாய்மாலம்.
7. நீங்களோ அணு உலைகள் பேராபத்து என்கிறீர்கள். ஆனால் விஞ்ஞானிகளோ பாதுகாப்பானது என்கிறார்களே இவற்றில் எது உண்மை?
அணு உலை பாதுகாப்பாக இருக்குமானால் ஒரு வேளை விபத்தை வேண்டுமானால் தடுக்கலாம். ஆனால் அதிலிருந்து தினசரி வரும் கதிரியக்கத்தால் கண்டிப்பாக பாதிப்பு வரும் என விபரமறிந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் தான் அணு உலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமைக்கப்படுகின்றன. ஆனால் கூடங்குளம் அதைப் போன்று இல்லை. அங்கு சுமார் 7 கிலோ மீட்டருக்குள் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். மேலும் 20 கிலோ மீட்டருக்குள் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். கண்டிப்பாக கதிரியக்கத்தால் இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
மேலும் விபத்து ஏற்படாது, இந்த அணு உலை பாதுகாப்பானது என்பதை வாய்மொழியாகச் சொல்கிறார்களே தவிர, அவை அறிவியல் பூர்வமாக இது வரை உறுதி செய்யப்படவில்லை என்பது தான் உண்மை.
8. உண்மையில் உறுதி செய்யப்படவில்லையா? ஆனால் மத்திய அரசின் வல்லுநர் குழு பாதுகாப்பை உறுதி செய்ததே?
பாதுகாப்பு அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது தான் ஆணித்தரமான உண்மை. மத்திய அரசின் வல்லுநர் குழு தமக்குக் கொடுக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நிர்வாகத்தின் அறிக்கையின்படி, அது பாதுகாப்பானது என்ற முடிவை எடுத்ததேயொழிய, எந்தவித ஆய்வும் மேற்கொள்ளவில்லை என்பது தான் உண்மை. அவர்கள் மத்திய அரசுக்கும், கூடங்குளம் அணு உலை நிர்வாகத்திற்கும் ஒருபக்கச் சார்பாகவே நடந்து கொண்டார்கள்.
9. அப்படியானால் எந்த முறைகளில் அணு உலையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்?
முதலில் அணு உலை அமைந்துள்ள இடம் புவியியல் ரீதியாக பாதுகாப்பானதா என்பது உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக இந்த அணு உலைத் தொழில்நுட்பம் வெற்றிகரமானதா என்பதை முன் அனுபவங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மூன்றாவதாக இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
10. இந்த மூன்றுமே கூடங்குளம் அணு உலையில் பின்பற்றப்படவில்லை என்கிறீர்களா?
ஆமாம். நிச்சயமாக.
முதலில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய புவியியல் ஆய்வுகளே அணு உலை நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால் இந்த இடம் அணு உலைக்கு ஒரு சதவீதம் கூட ஏற்ற இடமல்ல என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கும். மாறாக எரிமலைப் பாறைகள் மீது இந்த அணு உலையை அமைத்துவிட்டு இப்போது பாதுகாப்பை எப்படி உறுதி செய்ய முடியும்!
11. என்ன இது? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சாதாரணமாகக் கூறுகிறீர்கள்!
ஆமாம். அதிர்ச்சியடைய வேண்டாம். பொதுவாக அணு உலை அமைந்திருக்கும் தரை கெட்டியான பாறைகளால் உருவானதாக இருக்க வேண்டும். ஆனால் கூடங்குளத்தில் தரை அப்படி இல்லை. அங்கு இருப்பவை ஒழுங்கற்ற எரிமலைப் பிதுக்கப்பாறைகள்.
12. எரிமலைப் பாறைகளா?
ஆமாம்! கூடங்குளம் அணு உலைக்கு அடித்தளம் தோண்டும் போதுதான் அந்த உண்மை அவர்களுக்குத் தெரிந்தது. எனவே காங்கிரீட்டைக் கொட்டி அதன் மேல் அடித்தளத்தை அமைத்தனர்.
மேலும் பூ மியின் மேலோடு கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டர் தடிமனாக உள்ள இடங்களில்தான் அணு உலை அமைக்கப்பட வேண்டும். ஆனால் கூடங்குளம் அருகிலுள்ள பகுதிகளில் வெறும் 110 மீட்டர்கள் தான் புவியோடு தடிமன் உள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
13. இதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?
பூ மியின் அடியிலுள்ள மிகச் சூடான மாக்மா என்ற பாறைக் குழம்பு பூமியின் மேலோடு மெலிதாக உள்ள இடங்களில் வெடிப்பை ஏற்படுத்தி எரிமலையாக வெளிக்கிளம்பும். அது மேற்பரப்பையும், அதன் மீதுள்ள கட்டுமானங்களையும் குறிப்பாக அணு உலையையும் நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.
14. இது தவிர வேறென்ன குறைபாடுகள் உள்ளன?
இரண்டாவதாக இயற்கைப் பேரிடர்களான சுனாமி, பூகம்பம் போன்றவை உருவாகும் வாய்ப்பு குறித்த ஆய்வும் நடத்தப்படவில்லை. அப்படி நடத்தியிருந்தால் கூடங்குளத்திலிருந்து வெறும் 90 கி.மி. தொலைவில் மன்னார் வளைகுடாவில் கடல் தரையில் எரிமலை முகவாய் (volcanic vent) இருப்பதை முன்னரே கண்டுபிடித்திருக்கலாம்.
மேலும் மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் வண்டல் குவியல்கள் இரண்டு பெரிய அளவில் உள்ளன. இவற்றின் பெயர் கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள். இதோடு இந்திராணி நிலப்பிளவு என்னும் நீளமான நிலப்பிளவும் கடலுக்கடியில் காணப்படுகிறது. இதன் மூலம் கடலுக்கடியில் பூகம்பமும், அதனால் பெரும் சுனாமி அலைகளும் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சியாளாகள் நிறுவியிருக்கிறார்கள்.
இதுபோக அவ்வப்போது கடல் அரிப்பு, கடல் உள்வாங்கல் ஆகிய நிகழ்வுகளும் கன்னியாகுமரிக் கடலோரத்தில் நடந்துள்ளது. இவையும் அணு உலையைப் பாதிக்கும் மிக முதன்மையான காரணிகளாகும்.
ஒரு சிறு திருத்தம். திரு. அப்துல்கலாம் அணு விஞ்ஞானி அல்ல. அவர் வானூர்திக்கான (auronautical) விஞ்ஞானி. அவருக்கு நிலவியல் (geology), கடலியல் (marine) தொடர்பான ஆராய்ச்சிகளோடு தொடர்பு கிடையாது. மேலும் அவர் அணுகுண்டுத் தொழிற்நுட்பத்திற்கு ஆதரவான கருத்துடையவா. பூகம்பம் வரும் என்றோ, சுனாமி வரும் என்றோ இதுவரை எந்த விஞ்ஞானிகள் முன்னறிவிப்புத் தந்திருக்கிறார்கள். வந்த பின்னர் தான் வந்தது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டி அறிந்து சொல்வதில் நம் அறிவியல் துறை பெரும் தோல்வியையே கண்டுள்ளது.
16. அப்படியானால் அப்துல்கலாம் சமூக அக்கறையுடன் செயல்படவில்லை என்கிறீர்களா?
நிச்சயமாக. அணுகுண்டு வெடித்து அதைப் பார்த்து பரவசப்படும் ஒரு மனிதர், எவ்வளவு பெரிய அறிவாளியாக, விஞ்ஞானியாக இருந்தாலும் அவர் மக்கள் விரோதியே.
இந்தியா நல்லரசாக இருப்பதைவிட அதை வல்லரசாக ஆக்குவதற்காக கனவு கண்டவர் அப்துல்கலாம். அணு உலையைத் திறப்பதற்காக உடனடியாக ஓடோடி வந்து பார்வையிட்டு, அது பாதுகாப்பானது என்று கருத்துச் சொன்ன அவர், சொந்த ஊரான இராமேசுவரம் மீனவர்கள் காக்கை குருவியைப் போல சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதைக் கண்டித்து ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கிறாரா?
சிங்கள அரசின் கலை நிகழ்வுக்கு நடிகை அசின், பாடகர் மனோ முதலானவர்கள் சென்றதற்கே உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்கள் கண்டித்தனர். இலங்கை அரசை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் புறக்கணியுங்கள் என்று தமிழக முதல்வர் தீர்மானமே நிறைவேற்றியுள்ளார். ஆனால் கொழும்பில் நடைபெற்ற சிங்கள அரசு விழாவில் அப்துல்கலாம் பங்கேற்று சிறப்பித்துள்ளார். நடிகை அசின் செய்தால் தவறு. அப்துல்கலாம் செய்தால் சரியா?
இலங்கையில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போது மறந்தும் ஒரு வார்த்தை கண்டிக்காத அப்துல்கலாம், கொழும்பு அரசு விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தது என்ன நியாயம்? இதுதான் அவரது இன உணர்வு, மனித நேயம். அவர் உண்மை பேசுவார் என்று இனிமேலும் எப்படி நம்புவது?
17. சரி! புவியியல் ரீதியாக கூடங்குளம் இடம் தவறான தேர்வு என்கிறீர்கள். ஆனாலும் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டதன் பின்னணி என்ன?
முதலில் இந்த அணு உலை ஆந்திராவில் நாகார்சுனசாகரில் தான் அமைவதாக இருந்தது. ஆந்திர அரசு ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் கர்நாடகாவில் கைக்கா என்ற இடத்தை முடிவு செய்தனர் . இதற்கு கர்நாடக அரசும் ஒப்புக்கொள்ளவில்லை. பின் கேரளாவில் பூதகான்கெட்டு என்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக கடைசியில் தமிழ்நாட்டுக்குத் தள்ளிவிடப்பட்டது.
18. ஆக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுத்த ஒரு திட்டத்தை தமிழ்நாட்டு மக்களின் தலையில் கட்டியிருக்கிறார்கள் என்கிறீர்களா?
ஆமாம். தமிழர்கள்தானே எந்த பாதிப்பு வந்தாலும் பொறுமையாக இருக்கும் இளித்தவாயர்கள்.
ஆனால் கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தில் சமபங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்குக் கொடுக்கப்படும். தமிழகத்திற்கு பாலாறை, காவிரியை, முல்லைபெரியாறு நீரைக் கொடுக்க மறுக்கும் அந்த மாநிலங்களுக்கும் இங்கிருந்து மின்சாரம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.
இதைவிடப் பெரிய கொடுமை. இலங்கையின் கொழும்பு நகரத்திற்கு மின்சாரம் கொடுப்பதற்காக கடலுக்கடியில் மின் கேபிள்கள் போடப்பட்டு தயாராக உள்ளன. சிங்கள சகோதரர்களுக்கு எத்தனை மெகாவாட் கொடுக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.
19. சரி! இந்த அணு உலைத் தொழில்நுட்பத்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா?
நிறைய உள்ளன. இந்த வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசியாவின் தொழில்நுட்பம் நிறைய குறைபாடுகளைக் கொண்டது. இதை நாம் சொல்லவில்லை. சப்பானில் புகுசிமா அணு உலை வெடித்தற்குப் பின் இரசிய அதிபர் தம் நாட்டு விஞ்ஞானிகளிடம் இரசிய அணு உலைகள் பற்றி ஒரு ஆய்வு நடத்த ஆணையிட்டார். அதன்படி ஆய்வு செய்த இரசிய விஞ்ஞானிகள் இந்த வி.வி.இ.ஆர் 1000 அணு உலைத் தொழிற்நுட்பம் குறித்த 31 குறைபாடுகளை பட்டியலிட்டுள்ளனர்.
குறிப்பாக இந்த கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தமட்டில் குளிர்விக்கும் தொழிற்நுட்பம் மிகவும் பலவீனமாக உள்ளது. கடல் நீரை உப்பகற்றி நன்னீராக்கி குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு உப்பகற்றும் இயந்திரங்கள் இசுரேல் நாட்டிலிருந்து டாட்டா நிறுவனத்தின் மூலம் தருவிக்கப்பட்டவை. இதைத் தவிர வேறு எந்த நீராதாரமும் இல்லை.
1989ம் ஆண்டு இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு எந்தக் காரணங்களைக் கொண்டும் அணு உலைகளைக் குளிர்விக்க ஒரே ஒரு நீராதாரத்தை மட்டும் நம்பியிருக்கக்கூடாதென்று வலியுறுத்திய போதும், கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை.
ஒரு வேளை உப்பகற்றும் தொழிற்நுட்பத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் இசுரேல் நாட்டிலிருந்து தான் தொழில்நுட்ப நிபுணர்கள் வரவேண்டும். அணுஉலை வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நீர் வெறும் இரண்டரை நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும். இந்த நீரின் அளவு 6 கோடி லிட்டராக இருக்கவேண்டும் என இந்திய அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்திய போதும் கூட அங்கு வெறும் 1.2 கோடி லிட்டர் நீர் மட்டுமே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது அணு உலை நிர்வாகத்தின் அசிரத்தையைக் காட்டுகிறது.
சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வரும் காலங்களில் கூட உலையின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று அப்துல்கலாம் போன்றவர்கள் திரும்பத்திரும்பச் சொன்னாலும் கூட ஒரு உண்மையை அவர்கள் தாங்களே ஒப்புக் கொண்டுள்ளனர். பேரிடர் காலங்களில் சமாளிக்கத் தேவையான ஜெனரேட்டர் முதலான உபகரணங்கள் கடல்மட்டத்திலிருந்து வெறும் 13 மீட்டர் உயரத்தில்தான் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. எனவே சுனாமி அலைகள் 13 மீட்டருக்குமேல் உயரமாக வந்தால் என்ன செய்வது என்ற கேள்விக்கு அவர்களிடத்தில் பதில் இல்லை.
அதுபோன்று 5.2 ரிக்டர் வரையிலும் வரும் பூகம்பத்தால் பாதிப்பு இல்லை என்று சொல்கின்றனர். சமீபத்தில் குஜராத்தில் வந்த பூகம்பத்தின் அளவு 8 ரிக்டர். அப்படி கூடங்குளத்தில் ஏற்பட்டால் என்ன விளைவு என்பதையும் கூற மறுக்கின்றனர்.
20. கூடங்குளம் அணு உலை பற்றி இவ்வளவு குறைபாடுகள் சொல்கிறீர்கள். இவற்றை அரசாங்கத்திடமோ, நீதிமன்றத்திடமோ தெரிவித்தால் அவர்களே இத்திட்டத்தை நிறுத்திவிடமாட்டார்களா?
அதுதான் வேதனையான செய்தி. இந்தக் குறைபாடுகளை இந்திய அணுசக்தித் துறை கண்டு கொள்ளவோ, இது குறித்துப் பேசவோ தயாராக இல்லை. இதற்காக மறுக்க முடியாத அறிவியல் ஆதாரங்களோடு 2002 மே 20ல் உச்சநீதிமன்றத்தை நாடிய போது, வாதத்தை மறுக்க முடியாத தலைமை நீதிபதி பி.என். கிர்பால், மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தாம் தலையிட முடியாதென்றும், மக்கள் சார்பின் வழக்குத் தொடர்ந்த காந்திகிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் மார்க்கண்டனுக்கும், நாகர்கோவில் விஞ்ஞானி டாக்டர் லால் மோகனுக்கும் அபராதமும் விதித்தார். இதுதான் அரசின், நீதிமன்றங்களின் நிலைப்பாடு.
21. விபத்துக்கள் ஏற்படும் என்பதற்காக விமானம், இரயில் பயணங்களைத் தவிர்க்க முடியாது. ஒருவேளை விபத்து ஏற்பட்டாலும் கூட ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக சிலர் தியாகம் செய்வது தவிர்க்க முடியாது என்கிறார்களே?
விமான விபத்துக்களையோ, இரயில் விபத்துக்களையோ, அணு உலை விபத்துடன் ஒப்பிடக் கூடாது. விமானம், இரயில் விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் வெறும் நூற்றுக்கணக்கில்தான் இருக்கும். விபத்தின் பாதிப்புகள் தொடராது. ஆனால் அணு உலை விபத்தில் உயிரிழப்பு லட்சக்கணக்கில் ஏற்படும். பல லட்சம் பேர் கதிரியக்கத்தால் நோய்வாய்ப்பட நேரிடும். மேலும் அந்தக் கதிரியக்கப் பாதிப்புகள் பல தலைமுறைகளுக்குத் தொடரும். கண்ணிழந்து, உறுப்புகளை இழந்து குழந்தைகள் பிறக்க நேரிடும். மொத்தத்தில் அணு விபத்து என்பது கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும்.
விபத்து ஏற்பட்டால் கூடங்குளத்திலிருந்து குறைந்த பட்சம் 140கி.மீட்டருக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும். விபத்திற்குப்பின் 77கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும், 115கி.மீ. வரை 5 ஆண்டுகளுக்கும், 140கி.மீ. வரை ஓராண்டு காலத்திற்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிப் போக முடியாது. மொத்தத்தில் தென்தமிழகம் மக்கள் குடியிருக்க இயலாத நஞ்சுக்காடாகிவிடும்.
கூடங்குளம் மக்கள் போராடுவது தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமில்லை. நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் சேர்த்துதான்.
22. ஆனால் உலகெங்கும் அணு உலைகள் பாதுகாப்பாகத்தானே இயங்கி வருகின்றன. விபத்துகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லையே?
யார் சொன்னது? இரசியாவில் 1986ம் ஆண்டில் செர்நோபில் என்ற இடத்தில் ஒரு அணு உலை விபத்து ஏற்பட்டது. இவ்வளவுக்கும் அப்போது அந்த அணுஉலை இயங்கிக் கொண்டிருக்கவில்லை. மூடப்பட்டிருந்தது. ஆனால் அந்த விபத்தின் காரணமாக 2004 வரை கிட்டத்தட்ட 9,85,000 போ புற்றுநோய் கண்டு உயிரிழந்ததாக இரசிய அரசே உறுதி செய்துள்ளது.
மேலும் செர்நோபில் உலையிலிருந்து 2700 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இங்கிலாந்தில் அந்த அணுக்கதிர்வீச்சு உணரப்பட்டு 2,26,500 கால்நடைகளை உடனடியாகக் கொன்று புதைக்க இங்கிலாந்து அரசு உத்தரவிட்டது. மீன்கள், மிருகங்கள், மரங்கள் தண்ணீர் என ஒரு நொடிப்பொழுதில் அனைத்தும் நஞ்சாக மாறிப் போயின.
சொனோபிலில் நடந்ததை ஒரு குறிப்பிட்ட நாட்டில் நடந்த பேரழிவாகக் கொள்ள முடியாது. இது மொத்த உலகத்தையே பாதித்த ஒரு விசயம் என்பதை இரசிய அதிபர் கோர்ப்பசேவ் நேர்மையாக ஒத்துக்கொண்டார்.
ஆனால் இந்த விபத்து நடந்த மறு ஆண்டுதான் அதாவது 1987ல்தான் இந்தியாவில் அணுஉலைகள் அமைக்க இரசியாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு முன் 1979ல் அமெரிக்காவில் மூன்றுமைல் தீவு என்னுமிடத்தில் அணுஉலை ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்திலும் கணிசமான எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்ததோடு அந்தப்பகுதி மீண்டும் பயன்படுத்தமுடியாத அளவிற்கு நஞ்சாக மாறியது.
சமீபத்தில் சப்பானில் புகுசிமாவில் நடந்த அணுஉலை விபத்தில் ஏற்பட்ட சேதங்களை தொலைக்காட்சியில் நாம் நேரடியாகவே பார்த்தோம். இவ்வளவுக்கும் அது அமெரிக்காவின் ஜெனரல் எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தின் நேரடி மேற்பார்வையில் இருந்தது. இந்த புகுசிமா அணுஉலையை மூடுவதற்கு கிட்டத்தட்ட 75ஆயிரம் கோடி செலவாகும் என்றும் 45 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
23. ஒன்றிரண்டு விபத்துக்கள் நடக்கின்றன என்பதற்காக அணுஉலைகளே வேண்டாம் என்று சொல்லமுடியுமா? மற்ற நாடுகளில் அணு உலைகள் இயங்கத்தானே செய்கின்றன?
மூன்றுமைல் தீவு அணு உலை விபத்துக்குப் பின்னர் அமெரிக்காவும், 1986ல் செர்நோபில் விபத்துக்குப்பின் இரசியாவும் இது நாள் வரை தன் நாட்டில் ஒரு அணுஉலை கூட புதிதாகத் திறக்கவில்லை.
எல்லா நாடுகளுக்கும் யுரேனியம் விற்பதில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் ஒரு அணுஉலை கூட கட்டப்படவில்லை.
சப்பானில் புகுசிமா விபத்திற்குப் பின் 28 அணுஉலைகள் உடனடியாக மூடப்பட்டு விட்டன. கட்டப்பட்டுக்கொண்டிருந்த 10 அணு உலைகளின் வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன.
செர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட உள்ளதாக அறித்துள்ளது. ஆஸ்திரியா, அயர்லாந்து, கிரேக்கம் போன்ற நாடுகள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்து அதை மூடும் முடிவில் உள்ளன.
24. மற்ற நாடுகளை விடுங்கள். இந்தியாவில் உள்ள அணு உலைகள் நன்றாகத்தானே உள்ளன. குறிப்பாக கல்பாக்கம் அணுஉலை நன்கு செயல்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது?
கல்பாக்கம் அணுஉலை ஒன்றும் பிரமாதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கவில்லை. அதன் திறன் வெறும் 170 மெகாவாட்தான். 1987 மே 4ம் தேதி அதன் உலைத்தண்டு சிதைந்து 2 ஆண்டுகாலம் மூடப்பட்டுக்கிடந்தது. 300 மில்லியன் டாலர் செலவு செய்து அது சீரமைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அக்டோபா 22ல் சோடியம் கதிர்வீச்சு ஏற்பட்டு அதைச் சரிசெய்ய 30 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. 1999 மார்ச் 26ல் 40 டன் எடையுள்ள கன நீர் கொட்டி அதைச் சுத்தம் செய்த தொழிலாளி உயிரிழந்தார். 2000 சனவரி 24 அன்று பெரும் கதிரியக்கக் கசிவு ஏற்பட்டு அதை இந்திய விஞ்ஞானிகளால் சரிசெய்ய இயலாமல் வெளிநாட்டிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
கல்பாக்கம் அணு உலைக்கும் ஆபத்துக்கள் எந்த நேரமும் வரலாம். அதன் தென்கிழக்கே 104கி.மீல் 03051 என்ற எண் கொண்ட எரிமலை ஒன்று கடலுக்கடியில் குமுறிக்கொண்டிருக்கிறது. அது வெடிக்கும்போது பெரும் சுனாமி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இவை ஒருபுறம் இருக்க கல்பாக்கம் உலையின் கழிவு நீர் கடலில் கொட்டப்படுவதால் கடல் வெப்பம் 80டிகிரி வரை அதிகரித்து மீன் வளம் குறைந்தது. மீனவர்கள் இடம் பெயர்ந்தனர். அங்கு வசிக்கும் மக்கள் நோயால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அப்பகுதி மருத்துவர்கள் ஆதாரங்களுடன் விளக்குகிறார்கள்.
அதே போல் தாராப்பூர் அணு உலை கட்டப்படும் போது அங்கு இருந்த மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 700. இப்போதோ வெறும் 20 மட்டுமே. அப்பகுதியில் பிடிபடும் மீன்களில் கதிரியக்கம் இருப்பதை மும்பை உயர்நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 1989 செப்டம்பர் 10-ல் அங்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 700 மடங்கு கதிர்வீச்சு ஏற்பட்டது. அதை சரிசெய்ய ஆன செலவு 78 மில்லியன் டாலர் .
1995 பிப்ரவரி 3ம் தேதி ராஜஸ்தான் கோட்டா அணு உலையில் ஹீலியம் கன நீர் கசிவு ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் உலை மூடப்பட்டது. சரி செய்ய ஆன செலவு 280 மில்லியன் டாலர் . எனவே அணு உலைகளால் பாதிப்புகள் இல்லை என்பது அப்பட்டமான பொய்.
25. ஒருவேளை விபத்துக்கள் நடந்தால் நம் அரசுகள் நம்மைக் காப்பாற்றாது என்று கூறுகிறீர்களா?
நிச்சயமாக, இந்த அரசுகள் போன 2004 சுனாமியின் போது எப்படி நம்மைப் பாதுகாத்தன என்பதைக் கண் முன்னால் பார்த்தோம். சுனாமி இந்தோனேசியாவைத் தாக்கி 5 மணி நேரம் கழித்தே இந்தியக் கடலைத் தொட்டது. இதை மக்களுக்கு எச்சரிக்கை செய்யாமல் விட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருந்ததுதான் இந்தியாவின் நிலை. இந்தியாவின் பேரிடர் மேலாண்மை உலகறிந்த செய்தி.
இந்திய அரசின் மக்கள் மீதான அக்கறைக்கு ஒரு எடுத்துக்காட்டு போபால் சம்பவம். போபாலில் கடந்த 1984ம் ஆண்டு டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் யூனியன் கார்பைடு (எவெரெடி) நிறவனத்திலிருந்து மீதைல் ஐசோ சயனைடு என்ற விசவாயு கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த 5000க்கு மேற்பட்ட மக்கள் உடனடியாக இறந்து போனார்கள். பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 20,000 பேர் இறந்து போனார்கள்.
காங்கிரசு தலைமையிலான அரசு உடனே என்ன செய்தது தெரியுமா, அந்த அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் அண்டர்சனை தனி விமானத்தில் ஏற்றி டெல்லி வழியாக அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். 26 வருடங்கள் நடத்திய வழக்கில் அண்டர்சன் ஆஜராகவே இல்லை. இத்தனை ஆண்டுகள் கழித்த பின்னரும் குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு முழுமையாக வழங்கப்படவில்லை. இதுதான் இந்திய அரசு மக்களைக் காக்கும் லட்சணம்.
இன்னும் தமிழர்கள் பிரச்சினை என்று வந்துவிட்டால் இந்தியாவிற்கு கொண்டாட்டமாகிவிடும். கேரள மீனவர்கள் சுடப்பட்டதால் இத்தாலி கப்பல் கேப்டனை கைது செய்பவர்கள், கப்பலை சிறைபிடிப்பவர்கள் இராமேசுவரம் மீனவர்கள் சுடப்படும் பொழுது எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது நமக்குத் தெரிந்ததுதானே.
26. இப்போது சமீபத்தில் விபத்து நட்டஈடு சட்டமெல்லாம் நிறைவேற்றினார்களே! அதில் கூட நியாயம் கிடைக்காதா?
அந்த சட்டமே அவர்களாகப் போட்ட சட்டமில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அவர்களைக் காப்பாற்றுவதற்காக அரசு நிறைவேற்றிய சட்டம். இதன் மூலம் இழப்பீட்டுத் தொகையின் உச்சவரம்பு 2500 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும் அதிகபட்சமாக 2500 கோடியைக் கொடுத்துவிட்டு அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ஒதுக்கிக் கொள்ளும். மீதியை நாம்தான் சுமக்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை விசயத்திலோ இன்னும் கொடுமை. விபத்து நடந்தால் அந்த இரசிய நிறுவனம் எந்தப் பொறுப்பும் ஏற்காது. எல்லாம் இந்திய அரசுதான் ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தம் உள்ளது.
அது சரி! விபத்தே நடக்காது என்றால் நட்ட ஈடு சட்டம் எதற்கு என்பதுதான் விளங்கவில்லை.
27. இப்படியெல்லாம் பயந்தால் வரலாறு படைக்க முடியுமா? நாடு முன்னேறுவது எப்படி?
அஞ்சுவது அஞ்சாமை பேதமை. கண்டிப்பாக பெரு விபத்துக்கள் நடக்கும், பேரழிவுகள் ஏற்படும் என்று தெரிந்த பின்னரும் அதைத் தொடர்வது முட்டாள்தனம்.
நாட்டு முன்னேற்றத்திற்கு மின்சாரம் அவசியம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் மின்சாரம் தயாரிக்க பல நல்ல வழிகள் உள்ள போது அணு உலை மூலமாகத்தான் மின்சாரம் தயாரிப்போம் என்று பிடிவாதம் பிடிப்பதற்கு நாட்டு முன்னேற்றம் காரணம் அல்ல.
28. அப்படியானால் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைச் சமாளிக்க என்னதான் வழி என்று கேட்கிறார்களே?
அன்னியச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள், அவர்களுக்கான தடையற்ற மலிவு விலை மின்சாரம், உலக மயம் தோற்றுவிக்கும் நுகர்பொருள் கலாச்சாரம், கேளிக்கை விடுதிகள், முழுக்கக் குளிரூட்டப்பட்ட மால்கள், நகரிய வேடிக்கைகள் என்று பெரும்பான்மை மக்களாகிய நம்மைச் சுரண்டும், புறந்தள்ளும் ஒரு பாதையை வளர்ச்சி என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அதற்கு மின் வினியோகம் செய்வதற்கு மட்டும் ஆலோசனையை நம்மிடமே கேட்பது அயோக்கியத்தனம். காற்றாலை, சூரிய ஒளி என மாற்றுவழிகள் குறித்து நாம் அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருப்பது இளிச்சவாய்த்தனம்.
29. பிற வழிகளில் மின்சாரம் தயாரித்தால் அதிக செலவாகும். அணுமின்சாரம்தான் மலிவானது. சுத்தமானது என்று சொல்கிறார்களே?
மின்சாரம் தயாரிப்பில் அதற்கான மொத்த செலவுகளையும் கணக்கிடவேண்டும். அணுஉலை கட்டுவதற்கான செலவு, அதை இயக்குவதற்கான செலவு, பிறகு அதை மூடுவதற்கான செலவு என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். இந்த உலைக்காக அரசு வழக்கும் 200 விழுக்காடு மானியத்தையும் கணக்கிட்டோமானால் அணு மின்சாரத்தின் விலை மிகவும் அதிகம்.
மேலும் இந்த அணு உலைகள் மற்ற திட்டங்களைப் போல் காலங்காலமாக பலன்தரக் கூடியவை அல்ல. இவற்றின் ஆயுள் வெறும் 30 ஆண்டுகள் மட்டுமே. பின் இந்த உலைகளை மூடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்.
அணு மின்சாரம் சுத்தமானது என்று சொல்வது கேலிக்குரியது. கடல்நீரை ஒரு நாளைக்கு 32லட்சம் லிட்டர் உறிஞ்சி அதை உப்பு அகற்றி உலையைக் குளிர்விக்கப் பயன்படுத்துகிறார்கள். அந்த உப்புக் கழிவுகளை மீண்டும் கடலில்தான் கொட்டுவார்கள். குளிர்வித்த நீர் வெந்நீராக திருப்பி கடலில்தான் கொட்டப்படுகிறது. கடலில் கொட்டப்படும் வெந்நீரால் அப்பகுதி மீன்வளம் பாதிக்கப்படும். சுமார் 4 டிகிரி வெப்பம் உயாந்தாலே நீரில் ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்க நேரிடும். அணு உலையின் கதிரியக்கச் செயல்பாடுகளால் சுற்றுப்புறமும் சீர்கெடும். மக்கள் நோய்க்கு உள்ளாவார்கள். இவை எல்லாவற்றையும் விட மிக ஆபத்தானது அணுக்கழிவுகள். அணுக்கழிவுகளை என்ன செய்யப்போகிறோம் என்பதை அணுஉலை நிர்வாகம் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
30. அணுஉலையின் விஞ்ஞானி சிரிகுமார் பானர்ஜி பேசுகையில் அணுக்கழிவு சிறிய அளவில் தான் இருக்கும். அதை மறுசுழற்சி செய்து ஆபத்தில்லாததாக மாற்றி எங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்துக்கொள்வோம் என்று கூறினாரே?
இதுதான் அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம். அவர் சொன்ன சிறிய அளவு என்பது எவ்வளவு தெரியுமா? சுமார் 30 முதல் 50 டன்கள். 30 ஆண்டுகளில் 1500 டன்கள் வரை இந்த அணுக்கழிவுகள் உருவாகும். உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இந்த அணுக்கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரகசியமாக வேற்று நாட்டு கடலுக்குள்ளும், மலைகளுக்குள்ளும் புதைத்து வருகிறார்கள்.
அணுக்கழிவுகளை ஆபத்தில்லாததாக மாற்றுவதற்கு எந்த தொழில்நுட்பமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றை பெட்டகங்களில் இட்டு பூமிக்குள் புதைப்பதுதான் இதுவரை நடைமுறையாக உள்ளது.
கூடங்குளம் அணுஉலையின் கழிவுகள் முதலில் இரசியாவிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறினார்கள். பின் கல்பாக்கம் எடுத்துச் செல்வோம் என்று கூறினார்கள். இப்போது கூடங்குளத்திலேயே புதைப்போம் என்கிறார்கள். மிகப்பெரிய கதிரியக்கத்தை உருவாக்கும் அணுக்கழிவுகளை நம் நிலத்தில் புதைத்து நஞ்சாக்குவதை நாம் எப்படி அனுமதிப்பது. பானர்ஜி சொன்னது மாதிரி புளுட்டோனியத்தை ஒரு உருண்டை உருட்டி அவர் வீட்டில் வரவேற்பறையில் வைக்கட்டும். பிறகு நாமே அணுஉலைகளை வரவேற்போம்.
31. அப்படியானால் 13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு உலையை மூடுவதுதான் தீர்வா? இத்தனை கோடி ரூபாய்களை வீணாக்குவதா?
அணு உலையை அனல்மின் உலையாக மாற்றலாம். அணுவிற்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கலாம். அவ்வாறு மாற்றிய முன்னுதாரணங்கள் பல வெளிநாட்டில் உண்டு. அப்படி முடியாவிட்டால் உலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 1,78,000 கோடி. சேதுசமுத்திரத் திட்டத்தில் கடலில் தூர்வாரி பின் அதை மதவாத சக்திகளுக்குப் பணிந்து பாதியிலேயே கைவிட்டதில் வீணானது பல ஆயிரம் கோடி. காமன்வெல்த் விளையாட்டு அரங்கம் நிர்மாணித்ததில் செய்த ஊழல் பல ஆயிரம் கோடி. இந்திய அரசியல்வாதிகள் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடிகளை ஒப்பிடும்போது இது வெறும் கொசு.
32. நீங்கள் இந்த விபரங்களை அணுஉலை கட்டுமுன்னரே வெளிப்படுத்தியிருக்கலாமே? கட்டும் வரை பேசாமல் இருந்துவிட்டு இப்போது போராட்டம் நடத்துவது என்ன நியாயம்?
கட்டும்வரை பேசாமல் இருந்ததாக அரசியல்வாதிகள் கூறுவது முழுப்பொய். ஊடகங்கள் பெரிதாக பேசவில்லை அல்லது நமக்குத் தெரியவில்லை என்பதற்காக போராட்டம் நடக்கவில்லை என்று கருதக்கூடாது.
1987லிருந்து தொடர்ந்து போராட்டம் அங்கு நடந்து கொண்டிருக்கிறது. 1987 செப்டம்பர் 22ல் இடிந்தகரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 1988ல் இந்தியாவுக்கு வந்த இரசிய அதிபர் கார்ப்பசேவுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. 1989-ல் நெல்லையில் ஒரு பெரிய பேரணி நடத்தப்பட்டது. 1989 மார்ச் 20 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற பெரிய பேரணியில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார்.
1989 மே 1ம் தேதி தேசிய மீனவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கன்னியாகுமரி பேரணியில் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது.
இந்த கூடங்குளம் அணுஉலையின் அடிக்கல் நாட்டு விழா தொடர் எதிர்ப்பின் காரணமாக மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி, ஆர். வெங்கட்ராமன், கருணாநிதி ஆகியோர் அதில் கலந்து கொள்ள முடியாத அளவிற்குப் போராட்டம் நடைபெற்றது.
ஒருமுறை இசையமைப்பாளர் இளையராசா அணு உலை எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்டபோது உடனடியாக அவரது வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது.
2002ல் அணுஉலையை நிலவியல் ரீதியாக ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டு வழக்குத் தொடர்ந்த காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் முன்னால் துணைவேந்தருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இப்படி அரசின் கடுமையான அடக்குமுறைகளை மீறி தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஊடகங்கள் வழக்கம்போல் மக்கள் போராட்டங்களை இருட்டடிப்புச் செய்கின்றன.
இடையில் சோவியத் இரசியா உடைந்த காரணத்தால் 10 ஆண்டுகளுக்கு அணுஉலை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. 2001-ல் இருந்துதான் மீண்டும் கட்டத்தொடங்கினார்கள். அணுமின் நிலையத்தைப் போலவே படிப்படியாக போராட்டமும் வளர்ந்து நிற்கிறது. புகுசிமா விபத்திற்குப்பிறகு மக்களிடையே அணுஉலையின் நாசங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகவே இப்போராட்டங்கள் வலுப்பெற்றன.
33. அந்நிய நாட்டில் சதி காரணமாக நீங்கள் அணுஉலையை எதிர்ப்பதாகவும், உங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவதாகவும் மத்திய அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர் மன்மோகன்சிங்கும் குற்றம் சாட்டுகிறார்களே?
கூடங்குளம் அணுஉலை இரசிய தொழிற்நுட்பம் என்பதால் அமெரிக்க சதி பின்னணியில் இருப்பதாக குற்றம் சுமத்துகிறார்கள். ஆனால், அமெரிக்க தொழிற்நுட்பத்துடன் நடக்கும் தாராப்பூர் அணு உலையையும் எதிர்த்து இதே போன்று போராட்டங்கள் நடக்கிறதே. அங்கு எந்த நாட்டு சதி பின்னணியில் இருக்கிறது? இன்னும் சொல்லப்போனால் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. உதயகுமாரை அமெரிக்கக் கைக்கூலி என்றே விமர்சிக்கிறார்கள். ஆனால் இதே போன்று மேற்கு வங்கத்தில் ஹரிப்பூரில் ஒரு அணுஉலையை மூடினாரே அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. அவர் பின்னால் எந்த அந்நிய நாடு உள்ளது? அவர் எந்த நாட்டு கைக்கூலி? அவர் எந்த நாட்டிடமிருந்து பணம் வாங்கிக்கொண்டு அதை மூடினார்.
கூடங்குளம் மட்டுமல்ல, மகராசுடிராவின் ஜெய்தாபூரிலும் ஏன் ஆந்திரா, கர்நாடகாவிலும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டங்கள் நடக்கின்றனவே. அங்கு எந்த அன்னிய சதி உள்ளது. தைரியமிருந்தால் இதே காங்கிரசுக் கட்சி தான் ஆட்சி செய்யும் கேரளாவில் வேண்டுமனால் ஒரு அணுஉலை திறந்து பார்க்கட்டுமே.
வெறும் காசுக்காக வேலை செய்வது அரசியல்வாதிகளின் பாணி. ஆனால் மக்களுக்காக உழைக்கும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மூன்றாந்தர அரசியல் பாணியில் இழிவுபடுத்திப் பேசுவதும் மன்மோகன், நாராயணசாமியின் அரசியல்.
இவ்வளவுக்கும் மன்மோகன், நாராயணசாமியின் கைகளில் அதிகாரம் உள்ளது. ஆட்சி உள்ளது. காவல்துறை உள்ளது. ஏதாவது தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். அதை விட்டு மக்கள் போராட்டத்தை இழிவுபடுத்துவது மிகவும் கேவலமான ஒரு செயல்.
34. சில தொண்டு நிறுவனங்கள் தான் இந்தப் போராட்டத்தை நடத்துவதாக குற்றம் சுமத்துகிறார்களே?
மக்கள் பங்களிப்பு இல்லாமல் வெறும் தொண்டு நிறுவனங்கள் மட்டுமே ஒரு போராட்டத்தை நடத்திவிடமுடியாது. அல்லது காசு கொடுத்து மட்டும் ஒரு எழுச்சியை உருவாக்கிவிட முடியாது. 100 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்தப் போராட்டத்தை மக்கள் அர்ப்பணிப்பு இல்லாமல் யாராலும் நடத்திவிட முடியாது. மேலும் நியாயமான மக்கள் போராட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்கக்கூடாதா என்ன?
35. கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை தீவிரமாக எதிர்க்கிறார்கள். ஆனால் வெளி மாவட்ட மக்களோ அணு உலையை ஆதரிக்கிறார்களே?
உண்மைகளை அறிந்த, அறிவியலை அறிந்த எல்லோருமே அணு உலையை எதிர்க்கத்தான் செய்கிறார்கள். மத்திய அரசு, காங்கிரசு கட்சி, பிஜேபி, இந்து முன்னணி போன்ற சிலர் தம் கட்சிக்காரர்களை விட்டு ஆதரவுப் போராட்டம் நடத்துகிறார்கள். உண்மைகளை அப்பாவி மக்கள் தெரிந்து கொள்ளா வண்ணம் தடுக்கிறார்கள். மின்வெட்டை அதிகப்படுத்தி, கூடங்குளம் அணு உலை வந்தால்தான் மின்வெட்டுத் தீரும் என்று பொய்ப்பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் மின்வெட்டுப்பிரச்சினை வேறு, அணுஉலைப் பிரச்சினை வேறு. இரண்டையும் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடாது. மின் பற்றாக்குறைக்கு அணு உலை தீர்வு ஆகாது. தவறான மின் பகிர்மானக் கொள்கையாலும், தனியாருக்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டதாலும் தான் மின்தடைப் பிரச்சினையேயொழிய அணுஉலை திறக்கப்படாமலிருப்பது அதற்குக் காரணம் அல்ல.
மின்சாரம் தயாரிப்பதற்கு பல மாற்று வழிகள் இருந்தாலும் அணு உலை மூலமாகத்தான் நாங்கள் மின்சாரம் தயாரிப்போம். அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மின்தடைதான் என்று மிரட்டுவது அரசின் பிடிவாதத்தைக் காட்டுகிறது.
மக்கள் கேட்பது எங்களின் பிணக்குவியலிலிருந்துதான் மின்சாரம் பெறப்பட வேண்டுமா? எங்கள் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழித்துத்தான் மின்சாரம் தயாரிக்க வேண்டுமா? என்பதுதான்.
நீங்கள் எக்கேடும் கெட்டுப்போங்கள், எங்களுக்குத்தேவை 2 விளக்கு, ஒரு மின்விசிறி என்று பதிலளித்தால் அது சுயநலத்தின் உச்சம்.
36. மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொள்ளாமல் அரசு ஏன் அணுஉலை வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறது?
அதில்தான் அவர்கள் மக்களுக்குச் சொல்லாத உள்குத்து அரசியல் இருக்கிறது. இந்த அணுஉலை மட்டுமல்ல. இது போன்று 80 அணுஉலைகளை வாங்குவதற்கு வெளிநாடுகளோடு ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு. இதில் கைமாறும் இந்திய பணம் எவ்வளவு தெரியுமா? மொத்தம் 8 லட்சம் கோடி. இப்போது தெரிகிறதா இந்த அரசியல்வாதிகள் ஏன் இதில் வெகு ஆர்வமாயிருக்கிறார்கள் என்பது. நம் வரிப்பணம் 8 லட்சம் கோடியைத் தூக்கி அந்நிய நாட்டினருக்குக் கொடுத்துவிட்டு பதிலாக எமனாய் அணுஉலையை நம் தலையில் கட்டுகிறார்கள். இதுதான் இவர்களின் தேசபக்தியின் கதை. அணுஉலை மூடப்பட்டால் அணு வியாபாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் இழப்பேயொழிய மக்களுக்கு அல்ல.
இரசிய, அமெரிக்க தனியார் முதலாளிகளின் இலாபம் முக்கியமா அல்லது மக்களின் உயிரும், சந்ததியின் எதிர்காலமும் முக்கியமா.
37. இது கிறித்தவ மக்களின் போராட்டம் என்றும், சர்ச் பாதிரியார்கள் பின்னணியில் இருப்பதாகவும் குற்றம் சாட்டுகிறார்களே?
அந்தப்பகுதி கிராமங்கள் பெரும்பாலும் மீனவ கிராமங்கள். அங்கு அதிக எண்ணிக்கையில் கிறித்தவர்கள் வாழ்கிறார்கள் என்பது உண்மை. அவர்கள் கிறித்தவர்களாயிருப்பதால் தம் வாழ்வை அழிக்கும் அணு உலையை எதிர்த்துப் போராடக் கூடாது என்கிறீர்களா?
கிறித்தவப் பாதிரியார்கள் பின்னணியில் இல்லை. நேரடியாகவே மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். அதிலென்ன தவறு. இன்னும் கணிசமான அளவில் இந்துக்களும், இசுலாமியாகளும் ஏன் கேரள மீனவ மக்கள் கூட இப்போராட்டத்தில் இருக்கிறார்கள்.
38. இந்து முன்னணி, பிஜேபி ஆகியோர் அணு உலையை ஆதரிப்பதன் மர்மம் இதுதானா?
சரியாகப் புரிந்து கொண்டீர்கள். சேது சமுத்திரத் திட்டத்தை ராமர்பாலம் கடலுக்குள் இருப்பதாகக் கூறி நிறுத்திய கட்சி பிஜேபி. அவர்களுக்கு அணுஉலையைத் திறக்கச் சொல்லிக் கேட்பதற்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது.
39. அணு உலையை உடனே திறக்க வேண்டும் என்று காங்கிரசுக் கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே?
ஆமாம். இந்த நாட்டை ஏறத்தாழ 50 ஆண்டுக்காலம் மத்தியில் ஆட்சி செய்த கட்சி காங்கிரசுதான். இத்தனை ஆண்டுகளில் காங்கிரசு, மக்களுக்கான ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருக்கிறதா? சத்தியமூர்த்தி பவனில் வேட்டி கிழிய சண்டையிடுவதைத் தவிர வேறென்ன செய்திருக்கிறார்கள் தமிழக காங்கிரசார். மக்களைப்பற்றி இப்போதென்ன புதிதாக அக்கறை!
40. சி.பி.எம் முதலான கட்சிகள் கூட அணுஉலையை ஆதரிக்கின்றனவே?
ஈழப்பிரச்சினை நடந்தபோது சி.பி.எம். என்ன செய்தது என்பது நாமெல்லோரும் அறிந்ததுதான். ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் சி.பி.எம்.மின் புத்ததேவ் பட்டாச்சார்யா நந்திகிராம், சிங்கூரில் முதலாளி டாடாவிற்கு அனுசரணையாக மக்களை எப்படி இரும்புக்கரம் கொண்டு அடக்கினார் என்பதெல்லாம் நாடறிந்த செய்தி. சி.பி.எம். கட்சி மார்க்சியக் கொள்கைக்கு ஒரு தேசிய அவமானம்.
41. அணு உலை எதிர்ப்பாளர்கள் தேசத்துரோகிகள். நாட்டின் வளர்ச்சிக்கு, தொழில் முன்னேற்றத்திற்கு தடை செய்பவர்கள் என்று சொல்கிறார்களே?
இந்த நாட்டை கொள்ளையடித்து, சுரண்டி, இயற்கை வளத்தை வெளிநாட்டினருக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து அதில் கமிசன், லஞ்சம் பெற்று, அந்தப் பணத்தை சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணமாகப் பதுக்கி வைத்திருக்கும் இந்த அரசியல்வாதிகள், தங்களின் வாழ்வாதாரத்திற்காகவும், தம் சந்ததியரின் நலம் காக்கவும், தம் சொந்த நிலத்தைக் காக்கவும் போராடும் மக்களைப் பார்த்து தேசத் துரோகிகள் என்று சொல்வது மகா அயோக்கியத்தனம்.
அரசியல்வாதிகளில் யோக்கியர் எத்தனை சதவீதம் இருக்கிறார்கள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே. நாட்டின் நீர்வளத்தை கொக்கோகோலா, பெப்சி நிறுவனத்திற்கு விற்றவர்கள், அரசு நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்த்தவர்கள், சுதேசி உள்நாட்டு நிறுவனங்களை கொன்றவர்கள், மான்சான்டோ விதைகளை அனுமதித்து நிலத்தை மலடாக்கியவர்கள் தான் இந்த புதிய உலகப் பொருளாதார மேதைகள். இவர்கள் நாட்டின் தொழில்வளத்தைப் பற்றி கவலைப்படுவதாக கூறுவது, ஆடு நனைகிறதே என்று அழுத ஓநாயின் கதைதான்.
ஏற்கனவே 1,82,000 மெகாவாட் தயாரிக்கப்படும் இந்த நாட்டில் 42% கிராமங்களுக்க மின் இணைப்பு இல்லை. சென்னையின் வெறும் 500 நிறுவனங்கள் மட்டுமே தமிழக மின் உபயோகத்தின் 40%-ஐ செலவு செய்கின்றன. சிறு குறு தொழில்கள், விவசாயத்திற்கு 8 மணி நேர மின் வெட்டு. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம். இதுதான் இந்தியாவின் தொழிற்கொள்கை.
42. இறுதியாக என்னதான் சொல்கிறீர்கள்?
மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் மீது திணிக்கக்கூடாது. அது அராஜகம். சென்ற தலைமுறை நமக்கு விட்டுச் சென்ற இயற்கையை வரும் தலைமுறைக்கு பாதுகாப்பாக விட்டுச் செல்ல வேண்டிய தார்மீகக் கடமை நமக்கு உண்டு. இயற்கையை நஞ்சாக்க யாருக்கும் உரிமை இல்லை. மக்கள் நலனை மறுக்கின்ற அறிவியல் அறிவியலே அல்ல. மக்களுக்காகத்தான் எல்லாமே, அவர்களை அழித்து அல்ல.
மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு அரசுகள் பதில் சொல்லட்டும். ஒரு திறந்த விவாதத்திற்கு அரசுகள் வரட்டும். அதை விட்டுவிட்டு வெளிநாட்டு பணம் என்றும், தேசத் துரோகம் என்றும், அந்நிய சதி என்றும் மூன்றாந்தரக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது மக்கள் பக்கமிருக்கும் நேர்மையை கொச்சைப்படுத்துவதாகும்.
மின்சாரத் தேவைக்கும் அணுஉலைக்கும் சம்பந்தம் இல்லை. இரண்டும் வேறுவேறு பிரச்சினைகள். மக்களுக்கு இதைத் தெளிவாக்க வேண்டியது நம் கடமை.
மின் தடையை நீக்கக் கோரி மக்களோடு இணைந்து நாமும் போராடுவோம். ஆனால் அதற்காக கொலைகார அணுஉலையை அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் மக்கள் நடமாட்டம் இல்லாத ராஜஸ்தான் பாலைவனங்களில் அவர்களது அணு சோதனைகளை நடத்திக்கொள்ளட்டும் அல்லது பாதுகாப்பானது என்ற தைரியமான நம்பிக்கை இருந்தால் டெல்லியில் கொண்டுபோய் வைத்துக்கொள்ளட்டும்.
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?