கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கோ.ராஜாராம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
‘நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவன் வாக்கினை மெய்பிப்பது குற்றாலம் எனலாம். ஆம் குற்றாலம் என்றவுடன் நினைவிற்கு வருவது கொஞ்சி, கும்மாளமிட்டு ஆர்ப்பரிக்கும் அருவிகளே. இந்த அருவிகளில் குளிக்கும்போது உற்சாகம் பிறப்பதுடன் மன நிறைவும் ஏற்படுவதை அனைவரும் உணர்வர்.
குற்றாலம் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டும் ஏற்ற இடமன்று, இயற்கை ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், விவசாயிகள், ஆன்மீகவாதிகள், நாட்டுமருத்துவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்ற தலமாக விளங்குகிறது. பெல்ஜியத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத்தலம் ‘ஸ்பா’. ‘தென்னகத்தின் ஸ்பா” என அழைக்கப்படும் சிறப்புடையது நமது குற்றாலம்.
இயற்கைவளம் பொருந்திய மேற்குதொடர்ச்சி மலையில் மூன்று சிகரங்களை கொண்ட திரிகூடமலையின் ஒரு பகுதியில் உருவாகும் ஆற்றின் பெயர் சிற்றாறு. இந்த சிற்றாறு குற்றாலம் பகுதியில் இயற்கைபுடைசூழ பல அருவிகளாக வீழ்ந்து வளம் சேர்க்கின்றன.
ஆர்ப்பரிக்கும் முரசு போல ஒலி எழுப்பி 200அடி உயரத்திலிருந்து விழும் பேரருவி, சிறார்களுக்கு உகந்த சிற்றருவி, புலிவாய் போன்ற பாறைப்பகுதியிலிருந்து விழும் புலியருவி, ஐந்து பாகங்களாகப் பிரிந்து விழும் ஐந்தருவி, செண்பகமரங்கள் சூழ்ந்த அடர் வனப்பகுதியில் விழும் செண்பகா அருவி, வானளாவ உயர்ந்த மரங்களில் தேனடைகள் நிறைந்த மலைகளின் உட்பகுதியில் விழும் தேனருவி, வனத்துறைக்கு உரிய பழத்தோட்டப்பகுதியில் விழும் பழத்தோட்ட அருவி, மலைஅடுக்குப் பாறைகளில் தவழ்ந்து வரும் பழைய குற்றால அருவி என குற்றாலப் பகுதிகளில் பல்வேறு அருவிகள் அழகு சேர்க்கின்றன. அதே சமயம் வளமும் சேர்க்கின்றன.
இம்மலையின் அழகினை திரிகூடராசப்பக் கவிராயர் குற்றாலக் குறவஞ்சி எனும் நூலில் மலை வளத்தினை பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியரு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவான்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
கனக சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பர்
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பாரிக்காலும் வழுகும்
கூனலினம் பிறை முடித்த வேணி அலங்கார்
குற்றாலத் திரிகூடமலை எங்கள் மலையே”
சிங்கனும் சிங்கியும் சுற்றித்திரிந்த இம் மலையில் இல்லாத மூலிகைகளே இல்லை எனலாம். தீராத நோய்களை எல்லாம் தீர்த்துவைக்கும் மூலிகைகளின் தாயகமாக குற்றால மலையருவிகள், உடலுக்கும், மனத்திற்கும் நலம் சேர்கின்றன.
இத்தகைய சிறப்புடைய அருவிகளின் நீரானது நிலத்தில் சிற்றாறாக உருவெடுத்து தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களை வளப்படுத்தி சீவலப்பேரியில் (முக்கூடல்) தாமிரபரணி ஆற்றுடன் இணைந்து கடலில் சங்கமமாகிறது.
இந்த சிற்றாற்றின் இடையே, தலையணை, அடிவெட்டான் பாறை, வாழ்விலாங்குடி, புலியூர், பாவூர், திருச்சிற்றம்பலம், மாறாந்தை, வீராணம், மானூர், நெட்டூர், பள்ளிக்கோட்டை, உக்கிரன் கோட்டை, அழகியபாண்டியபுரம், பிள்ளையார்குளம், செழியநல்லூர், பிராஞ்சோர், கங்கைகொண்டான் பகுதிகளில் சிறுசிறு அணைக்கட்டுகள் உள்ளன. இதனால் சுமார் 120 குளங்கள் பயன்பெறுகின்றன.
சிற்றாற்றின் மூலமாக நேரடியாக 2074 ஹெக்டேர் விவசாய நிலங்களும், 120 குளங்கள் மூலம் மறைமுகமாக 7570 ஹெக்டேர் நிலங்களும் பாசனவசதியைப் பெறுகின்றன. குற்றால அருவிகளின் நீரே இப்பகுதியின் ஜீவநீராக உயிர்நாடியாக விளங்குகின்றது.
இத்தகைய சிறப்பும், அழகும், இலக்கிய வளமும், விவசாய நலனும், மருத்துவக் குணமும் கொண்ட அருவிகள் இயற்கைச் சீரழிவை எதிர்நோக்கி தனது பயணத்தை வேகமாக மேற் கொள்கின்றன.
குற்றாலத்திற்கு பருவ காலத்தில் (சீஸன்) பல லட்சம் மக்கள் வருகின்றனர். இவர்களால் பயன்படுத்தப்படும், தூக்கி எறியப்படும் பல்வேறு கழிவுப் பொருட்கள் இயற்கை சீரழிவை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக நெகிழிகள் (பிளாஸ்டிக்) காரக்கட்டிகள் (சோப் வகைகள்) மென்காரக்கூழ் (ஷாம்பூ) கழிவுப் பொருட்கள் போன்றன மூலிகை வளம் பொருந்திய இயற்கையைச் சீரழிக்கின்றன.
மக்கள் குளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயணப் பொருட்களின் கலவையில் (சோப், ஷாம்பூ) கார்சினோஜென்ஸ் எனப்படும் சோடியம் லாரல்சல்பேட், சோடியம் எத்தில் லாரல் சல்பேட் உள்ளிட்ட இரசாயன வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. இதில் கார்சினோஜென்ஸ் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் ஊக்கியாகும். இந்த வகையான இராசயணப் பொருள் அதிக நுரைவருவதற்காக சேர்க்கப்படுகிறது. இது அனுமதிக்கப்பட்ட சதவீதம் 6 % மட்டுமே. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பில் இதனை 15% வரை சேர்க்கின்றன. இத்தகைய வேதிப்பொருட்கள் சதவீதம் 1% அதிகமானால் கூட அது பெருந்தீங்கினை விளைவிக்கும், பல மேலை நாடுகளின் இந்த வேதிப் பொருளை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை தனியார் மற்றும் உலக நிறுவனங்கள் தங்கள் பொருட்களை கடைவிரித்து விற்பனை செய்யும் சந்தைகளாகவும், கழிவுகளை கொட்டும் குப்பைப் பகுதிகளாகவும் கருதுவதால் தடைவிதித்தல் என்பதும், சட்டங்கள் என்பதும் காகித அளவிலேயே நின்று விடுகின்றன. இதற்கு நமது மத்திய, மாநில அரசுகளும் துணை நிற்பது துர் பாக்கியமே.
அருவிகளில் பல லட்சம் மக்கள் பயன்படுத்தும் கார்சினோஜென்கள் (சோப், ஷாம்பூ) நீரில் கலக்கும் போது அந்நீர் அதிகமான காரத் தன்மை உடையதாக மாறுகின்றது. இதனால் நீரில் உள்ள நுண்ணுயிர்கள், சிறு உயிரினங்கள் மற்றும் அதனுடைய முட்டைகள் அழிக்கப்படுகிறன்றன. எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல் இரசாயணப் பொருட்கள் நீரில் கலப்பதால் இந்நீர் விவசாயத்திற்கு உகந்ததாக இல்லாமல் போகிறது.
சிற்றாற்றால் பயனடையும் சுமார் 9,000 ஹெக்டேர் நிலங்களும் உப்பு மற்றும் காரத் தன்மை உடையதாக மாறுகின்றது. அதுமட்டுமின்றி இந்நீரைப் பருகினாலோ, அல்லது இந்நீரின் மூலம் விளைவிக்கப்படுகின்ற பொருட்களை உண்பதாலோ புற்றுநோய் மற்றும் தோல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்கள் இப்பகுதி மக்களைத் தாக்குகின்றன.
இப்பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களை ஏற்கனவே தனியார் நில உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். குப்பைக் கழிவுகள் ஆற்றின் கரைகளில் குவிக்கப்படுகின்றன. நீர் வழிந்தோடும் கால்வாய்களும் தூர் வாரப்படாமல் பராமரிப்பு இன்றி அமலைச் செடிகளால் நீக்கமற நிறைந்துள்ளன.
இச்சூழலில் அருவிநீர் நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், அனைத்துப் பாதிப்புகளும் இப்பகுதி மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படுகின்றன.
அரசாங்கம் குற்றால அருவிகளில் இரசாயன வேதிப் பொருட்களைப் பயன்படுத்த உடனடியாகத் தடை செய்ய வேண்டும். குறிஞ்சி மண்ணையும் மக்களையும் இயற்கையோடு ஒத்துவாழ வழிவகை செய்ய வேண்டியது காலத்தின் அவசியமாகிறது.
(பூவுலகு மே 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ப.நற்றமிழன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்தியா போன்ற நாடுகளில் அதி நவீனத் தொடர்பு, மின்னணு கருவிகளை பெரும்பான்மையானோர் மிக ஆர்வமாக வரவேற்கின்றனர். குறிப்பாக அதிநவீன அலைபேசிகள், அதிநவீனக் கணிணிகள், அதிநவீன குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற பொருட்களை வரவேற்று பயன்படுத்தும் அதே நேரத்தில், பழைய பொருட்களான மின்னணு கழிவுகளை அப்புறப்படுத்துவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் புதிதாக ஒரு அலைபேசியையோ (அ) கணிணியையோ வாங்கினால், தன்னிடம் உள்ள பழைய பொருளை வெறுமனே எங்காவது வைத்து விடுகிறார்கள். அது நமது பார்வைக்கு தட்டுபடாமல் போனாலும்கூட, இதுவும் சூழியலை பாதிக்கும் காரணியாகும்.
பிப்ரவரி 24லிருந்து 26 வரை இந்தோனேசியாவிலுள்ள பாலியில் நடைபெற்ற ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழு கூட்டம் இந்த ஆண்டுக்கான மின்னணுக் கழிவுகள் தொடர்பான அறிக்கையை "மின்னணுகழிவுகளின் மறு சுழற்சியும், வாழ்வா தாரமும்" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. மின்னணு தொழிலகங்களில் இருந்தோ, வீடுகளில் இருந்தோ வெளியேற்றப்படும் பயன்படாத மின்னணு பொருட்கள், 'மின்னணு கழிவுகள்' எனப்படுகின்றன. தொழில் புரட்சி நடைபெற்றதற்கு பின், இதுபோன்ற பொருட்கள் இல்லாமல் நவீன கால வாழ்க்கை நிறைவு பெறுவதில்லை. மருத்துவம், கல்வி, உணவு பொருட்களை பாதுகாத்தல் மற்றும் வழங்குதல், தொலைத் தொடர்பு துறை, பாதுகாப்பு, சூழியல் பாதுகாப்பு மற்றும் பண்பாடு என பல இடங்களில் மின்னணு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதன பெட்டி, குளிர்பதனப் பெட்டி, சலவை இயந்திரம், அலைபேசி, கணிணி, மின்னணு அச்சு இயந்திரங்கள், பொம்மை, தொலைகாட்சிப் பெட்டி உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.
பதினொன்று வளரும் நாடுகளில் கிடைத்த தரவுகளை வைத்து நிகழ்கால மற்றும் எதிர்கால மின்னணு கழிவை இந்த அறிக்கை கணித்துள்ளது. பயன்படுத்தப் படாத பழைய கணிணிகள், மடிக் கணிணிகள், அலைபேசி, கணிணி, மின்னணு அச்சு இயந்திரங்கள், பொம்மை, தொலைக்காட்சி, அதிநவீன ஒளிவாங்கி, இசைக் கருவிகள் இதில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த பொருட்களின் விற்பனை பெரிதும் அதிரித்து வருவதால், அடுத்து வரும் ஆண்டுகளில் இந்த மின்னணு கழிவுகளின் அளவும் பல மடங்கு அதிகரிக்கும்.
வளரும் நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதற்குக் காரணம், வளர்ந்த நாடுகளில் மின்னணு கழிவுகள் வெளியேற்றுதல், மறுசுழற்சி செய்தல் தொடர்பாக பல விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. வளரும் மற்றும் சந்தை அளவு விரிவடைந்து வரும் நாடுகளில் இந்த பொருட்களுக்கான சந்தை பெருகி வருவதும் மற்றொரு காரணமாகும். ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழு வளரும் நாடுகளில் மின்னணு கழிவுகள் வெளியேற்றுதல் மற்றும் மறுசுழற்சி செய்தலுக்கான விதிமுறைகள் உண்டா என்றும், அந்த நாட்டு அரசுகள் சிறப்பு துறைகள் அமைத்து மறுசுழற்சியில் புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்கின்றனவா என்பதையும் இந்த ஆய்வில் கண்டறிய முயற்சித்தது. 2006ல் இந்தியா 500 கோடி கணிணிகளை கொண்டிருந்தது. இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு 25 விழுக்காடு அதிகரிக்கிறது. 2020ல் பழைய கணிணிகள் மூலம் தோன்றும் மின்னணு கழிவுகள் 2007ல் இருந்ததைவிட 500 விழுக்காடு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2020ல் அலைபேசிகள் மூலம் தோன்றும் மின்னணு கழிவுகள் 2007ல் இருந்ததைவிட 18 மடங்கு அதிகரிக்கும், தொலைக்காட்சி கழிவு 1.5லிருந்து 2 மடங்கு வரையும், குளிர்சாதன பெட்டி கழிவுகள் இரண்டு (அ) மூன்று மடங்கும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் சூழியல் திட்டக்குழுவின் நிர்வாக இயக்குனர் மற்றும் ஐ.நா.வின் தலைமைச் செயலக நிர்வாகக் குழுவில் ஒருவருமான அச்சீம் ச்டீனர் இந்த அறிக்கை வெளியீட்டின்போது கூறியது "சீனா மட்டுமல்ல, இந்தியா, பிரேசில், மெக்சிகோ, இன்னும் பல நாடுகள் இந்த மின்னணு கழிவு சவாலை சந்திக்கின்றன. மின்னணு கழிவுகள் மூலம் ஏற்படும் சூழியல் விளைவுகள், உடல்நல பிரச்சனைகள், மின்னணு கழிவுகளை மறு சுழற்சிக்கு உட்படுத்தும் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களின் மூலம் ஏற்படும் உடல்நல பிரச்சினைகளை குறைப் பதற்கு ஒரு வழியாக, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் மூலமாக மறுசுழற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் மின்னணு கழிவுகளின் மறுசுழற்சி விகிதாச்சாரத்தை அதிகரித்து நல்ல வேலைவாய்ப்பையும், பசுமையில்ல வாயு உமிழ் அளவை குறைக்கவும், அரிய தனிமங்களான தங்கம், வெள்ளி, பல்லேடியம், தாமிரம், இந்தியம் போன்ற பொருட்களை திரும்பப் பெறவும் முடியும். அதற்காக இந்த நாடுகள் மின்னணு கழிவு சவாலை மின்னணு சந்தர்ப்பமாக மாற்ற நல்ல திட்டமிடுதலும், உடனே அதை செயல்படுத்தலும் மிக அவசியம்" என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் உலகளவில் மின்னணு கழிவின் அளவு 400 லட்சம் கல்லெடைகள் (கல்லெடை = 1000 கிலோ) அதிகரிக்கின்றது. அலைபேசி, கணிணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உலகளவில் சுரங்கங்களிருந்து எடுக்கப்படும் தங்கம், வெள்ளியில் மூன்று விழுக்காடை உபயோகப் படுத்துகின்றன. இதில் 13 விழுக்காடு பல்லேடியம், 15 விழுக்காடு கோபால்ட்டும் அடங்கும். நவீன மின்னணு பொருட்கள் கிட்டதட்ட 60 வகை தனிமங்களை கொண்டுள்ளன. இதில் பல அரிதானவை. சில ஆபத்தானவை மற்றும் சில இரண்டு குணநலன்களையும் கொண்டவை.
மின் மற்றும் மின்னணு பொருட்களில் பயன்படுத்தப்படும் தாமிரம், பல அரிய தனிமங்களை எடுப்பதற்காக நடைபெறும் சுரங்க வேலைகளில் மட்டும் 230 இலட்சம் கல்லெடை கார்பன் உமிழப்படுகிறது. இது உலக மொத்த கார்பன் உமிழ்வில் 0.1 விழுக்காடு அளவாகும். (இதில் இரும்பு, அலுமினியம் (அ) நிக்கல் போன்ற பொருட்களின் உற்பத்தி மூலம் வெளியிடப்படும் கார்பன் உமிழ்வின் அளவு சேர்க்கப்படவில்லை)
அமெரிக்க நாடே இந்த மின்னணு கழிவில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. அங்கு 2008ல் மட்டும் 15 கோடி அலைபேசிகள் விற்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டில் ஒருவர் புதிய அலைபேசி வாங்கியுள்ளதாக இதை எண்ணலாம். இது 2003ல் 9 கோடி என்ற அளவில் இருந்தது. உலகளவில் 2007ல் 100 கோடி அலைபேசிகள் விற்றுள்ளன. ஆறில் ஒருவர் புதிய அலைபேசி வாங்கியுள்ளதாக இதை எண்ணலாம். இந்த அளவு 2006ல் 90 கோடி என்ற அளவிலிருந்தது.
புதிய தொழில்நுட்பங்கள்:
ஐ.நா.வின் தலைமைச் செயலக நிர்வாகக் குழுவில் ஒருவரும் ஐ.நா. பல்கலைக்கழக நிர்வாகியுமான கொன்ராட் ஓசுட்டர் வால்டரின் கூற்றுப்படி "ஒரு மனிதன் குப்பை என கருதும் ஒரு பொருள் இன்னொரு மனிதனுக்கு மூலப்பொருளாகலாம்". மின்னணு கழிவு சவாலை சரியாக எதிர்கொள்வதன் மூலம் ஒரு பசுமை பொருளாதாரத்தை உருவாக்க முடியும். புதிய தொழில்நுட்பங்களின் மூலம் இந்த மின்னணு கழிவை சொத்தாக மாற்றவும், புதிய சூழியல் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடியும். இந்த கழிவுகளிலிருந்து தனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம், இந்த தனிமங்களை மீண்டும் சுரங்கங்களிருந்து எடுத்து, உற்பத்தி செய்ய தேவையான கார்பன் உமிழ்வை குறைக்க முடியும்.
இந்த புதிய தொழில்நுட்பம் பல படி நிலைகளை கொண்டது.
1) மின்னணு கழிவுகளை சேகரித்தல், அதன் மூலம் மூலப்பொருட்கள் பற்றாக்குறையை போக்கி, நல்ல பாதுகாப்பான, பொருளாதார நிலையில் மறுசுழற்சி நிறுவனங்கள் செயல்பட உதவும்.
2) பிரித்தல் மற்றும் முதல் நிலை வேலைகளை செய்தல். இந்த நிலையில் தீங்கு விளைவிக்க கூடிய தனிமங்களைப் பிரித்து பாதுகாப்பான இடங்களில் வைப்பது, தனிமங்கள் பிரித்தெடுத்தலும் நிகழ்கின்றது. உதாரணமாக மின்கலன்கள் பிரிக்கப்பட்டு அதிலுள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம் போன்ற தனிமங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.
3) இதன் மூலமாக பிரித்தெடுக்கப்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய வுடன் அவை இரும்பு ஆலைகளுக்கும், அலு மினிய கதவுகள் தயாரிக்கும் ஆலைகளுக்கும் அனுப்பப்படுகின்றன
இந்தியாவின் மின்னணு கழிவு மறுசுழற்சியில் அதிகாரபூர்வமற்ற துறையே ஆதிக்கம் செலுத்துகின்றது என இந்த அறிக்கை கூறுகின்றது. மேலும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் தனிமங்களை பிரித்தெடுப்பதன் மூலம் வாழ்க்கையை நகர்த்துவதாகக் கூறுகிறது. இந்த முறைப்படுத்தப்படாத துறையை நெறிப்படுத்து வதற்கான பல முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இதற்குத் தடையாக உள்ள காரணிகளை அரசு சட்டம் வகுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவில் மின்னணு கழிவுகளுக்கென தனிச் சட்டம் எதுவுமில்லை. மின்னணு கழிவு சட்டங்கள் வகுக்கும்போது கீழ்காணும் காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும்: சூழியல், நீர், காற்று, நகர கழிவுகள், ஆபத்தான கழிவுகளே அவை. மின்னணு கழிவுகளைக் கையாளும் முறை தற்பொழுது மிக ஆபத்தான கழிவுகள் கையாளுதல் என்ற பிரிவின் கீழ் உள்ளது. மின்னணு கழிவில் சில சிறப்பு பகுதிகளை ஏற்றுமதி செய்வதற்கான உரிமம் வழங்கும் முறையும் தெளிவில்லாமல் உள்ளது. இது இன்றும் ஆபத்தான கழிவுகள் பிரிவின் கீழே உள்ளது.
இந்தச் சட்டத்தை வளைப்பதற்கு அதிக அளவிலான கையூட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம் அதன் பங்குதாரர்களுக்கு ஒரு தெளிவான பணி, இடத்தை வழங்கவில்லை.
முன்பே கூறியது போல மின்னணு கழிவுகள் மறுசுழற்சியில் அங்கீகரிக்கப்படாத துறையே ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கு பல சாதாரண, மோசமான தொழில் நுட்பங்களே பயன் படுத்தப்படுகின்றன. இது திறமை குறைந்த பணியாளர்களையும் கொண்டுள்ளது. இவை திறந்த வெளியில் நடப்பதால் தீ விபத்துக்கும், உடல், சூழியல் தீங்குகள் ஏற்படவும் வாய்ப் பளிக்கிறது. மேலும் மின்னணு கழிவில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய பொருட்களை நீக்குவதற்கு சரியான வழிமுறையும் அவர்களிடம் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் புதுதில்லியில் நடைபெற்ற "வாத்தாவரன்" சூழியல் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ஒரு ஆவண படம், தலைநகரான தில்லியில் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலையில் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையை எடுத்துரைத்தது. பெரும்பான்மையானதொழிலாளர்கள் அங்கிருந்த தீங்கு விளைவிக்கும் பொருட்கள் என்ன என்றுகூட அறிந்திருக்க வில்லை.
அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சி துறைக்கு முக்கியமான சவாலாக திகழ்வது மின்னணு கழிவுகளை சேகரித்தல், அதை நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுதவதேயாகும். அங்கீகரிக்கப் படாத துறையின் நேரடி போட்டியே இதற்கு முக்கிய காரணம். கழிவுகளை சேகரித்தல், நிறுவனங்களுக்கு கொண்டு செல்லுதல், தீங்கான பொருட்கள், அரிய தனிமங்களை நீக்குதல் என எல்லா செலவும் மறுசுழற்சி செய்யும் நிறுவனத்தையே சார்ந்துள்ளது. இதனால் தெளிவான பொருளாதார நிலையை மறுசுழற்சி நிறுவனங்கள் கொண்டிருப்பதில்லை.
பெங்களூரின் வெற்றி கதைகள்:
பெங்களூரில் உள்ள மின்னணு கழிவு மறுசுழற்சி நிறுவனங்களை மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இந்த அறிக்கை எடுத்துகாட்டுகின்றது. இந்த அவை மின், மின்னணு கருவிகளையே பெரிதும் நம்பியுள்ளன. இதில் ஏற்படும் மின்னணு கழிவை நீக்குவதற்காக இந்த மின்னணு நகரக் கூட்டமைப்பு "சுத்தமான மின்னணு கழிவு முறை" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இங்கு உள்ள எல்லா நிறுவனங்களும் தங்களது மின்னணு கழிவுகளை நல்ல, சூழியலுக்கு தீங்கு விளைவிக்காத முறையில் வெளியேற்றுகின்றன.
இங்குள்ள இ.பெரிசாரா என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் மின்னணு கழிவு மறு சுழற்சி நிறுவனமாகும். இது பெங்களூரின் புறநகர் பகுதியில் உள்ளது. இந்த நிறுவனம்தான் இந்தியாவின் முதல் அறிவியல்பூர்வமான மின்னணு கழிவு மறுசுழற்சி நிறுவனமாகும். சூழியலை பாதுகாத்தல், நிலத்தில் புதைக்கப்படும் மின்னணு கழிவின் அளவை குறைத்தல், பல அரிதான தனிமங்கள், ஞெகிழி (பிளாஸ்டிக்), கண்ணாடி, பல பொருட்களை பாதுகாப்பான முறையில் திரும்பப் பெறுதல் போன்றவைதான் இந்நிறுவனத்தின் நோக்கம். இந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆய்வு செய்து மின்னணு கழிவை வாங்கி, அதிலுள்ள பொருட்களை பிரித்து அரிய தனிமங்கள், பொருட்களை பிரித்தவுடன் அழித்து, தேவை யெனில் சான்றிதழும் அளிக்கிறது.
பெங்களூரை மையமாக கொண்ட ஒரு மின்னணு கழிவு மறுசுழற்சி கூட்டமைப்பும் உள்ளது. இது அங்கீகாரமற்ற துறையில் உள்ள நிறுவனங்களுடன் நல்ல உறவை கொண்டுள் ளது. "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்" ஆகியவற்றுக்காக இந்த அமைப்பு அறியப்பட்டது. இந்த அமைப்பு கர்நாடக மாநில மாசு கட்டுபாட்டு வாரியத் க்ஷ்திடம் 2007ல் தனது வேலைகளை தொடங்குவதற்கு முறைப்படி அனுமதி கேட்டது. அந்த நேரத்தில் இதுபோன்ற ஒரு கோரிக்கை இந்தியாவில் முதன்மையானதும், முக்கியமானதுமாகும். "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்' அமைப்பு அதிகாரபூர்வமற்ற நிறுவனங்களுடன் இன்னமும் நல்ல உறவை கொண்டுள்ளது. இதன்மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் முக்கிய பிரச்சினையான மூலப்பொருள் பற்றாக்குறையை இதற்கு இல்லாமல் போனது.
அறிவியல் மற்றும் சூழியல் மைய அமைப்பின் கூற்றுப்படி "மின், மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல் மற்றும் வெளியேற்றுதல்" அமைப்பு 2008ல், அதன் முதல் பெரிய நிறுவன வாடிக்கையாளரான டைட்டனுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒவ்வோர் ஆண்டும் கழிவின் விலை, பழைய கடிகாரங்களுக்கு புதிய கடிகாரங்கள் கொடுக்கும் முறையில் பழைய கடிகாரங்கள் பெறப்படுகின்றன. பிறகு பழைய கடிகாரங்கள் இந்த அமைப்புக்கு கொடுக்கப்படுகின்றன. கடந்த வருடம் 6 லட்சத்திலிருந்து 7 லட்சம் வரை பழைய கடிகாரங்களை நிலத்தில் குப்பையாக புதைப்பதை தடுத்து, மறுசுழற்சிக்காக இந்த அமைப்பிடம் டைட்டன் கொடுத்துள்ளது. தான் தயாரிக்கும் நவீன தொழில்நுட்ப கடிகாரங்களும் மின்கழிவின் கீழ் வரும் என்பதை டைட்டன் நிறுவனம் நன்கு அறியும். இந்த அமைப்பு தாங்கள் வாங்குகிற மின்னணு கழிவை பெங்களூரை சேர்ந்த சாகாஸ் நிறுவனத்துடன் சேர்ந்து கையாளுகிறது. சாகாஸ் ஒரு மறுசுழற்சி நிறுவனமாகும். சாகாஸ் அமைப்பு, அதிலுள்ள பல அரிய தனிமங்களை பிரித்துவிட்டு தீங்குவிளைவிக்கும் பொருட்களை நிலத்தில் பாதுகாப்பாக புதைத்து விடுகின்றன.
எம்பா என்ற ஸ்விஸ் நாட்டு ஆய்வகம் ஒன்று வேதியல் பொருட்கள் மூலம் தனிமங்களை பிரித்தெடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் அந்த முறை ஆபத்தானது என்று தவிர்க்கப்பட்டு, நல்ல கருவிகளைப் பயன்படுத்தி தனிமங்களை பிரித்தெடுக்கும் முறையைத் தொடங்க இது ஒரு முன்னுதாரனமாக இருந்தது. அங்கீகரிக்கப்படாத மறுசுழற்சி துறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்களது வேலை செய்யும் முறையை மாற்றிக் கொள்ளவேன்டும், வெறும் தங்கத்தை பிரித்தெடுப்பதற்காக மட்டும் இல்லாமல் எல்லா தனிமங்களை பிரித்து ஆலைகளின் மூலப்பொருளாக்க வேண்டும் என்பதே இதன் கருத்து. இதில் "மின் மற்றும் மின்னணு கழிவுகள் மறுசுழற்சி, பிரித்தல், வெளியேற்றுதல்' அமைப்பு ஒரு முக்கிய கண்டுபிடிப்பு மையமாகவும் விளங்குகிறது.
மின்னணு கழிவை பாதுகாப்பாக, மிகச் சரியான முறையில் பிரித்தவுடன் இது உமிகோர் போன்ற நிறுவனத்துக்கு அனுப்பப்படுகின்றது. இங்கு தனிமங்களை பிரித்து தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அழிக்கப்படுகின்றன. நடைமுறையில் பொருட்களை அனுப்பியதிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பின்தான் இவர்களுக்கு மறு சுழற்சி செய்ததற்கான பணம் கிடைக்கிறது. இதனால் மறுசுழற்சி நிறுவனங்கள் நிதி பிரச்சனைக்கு ஆளாகின்றன. இதனால் இந்த மறுசுழற்சி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஒரு நிதி நிறுவனத்தை நிறுவி அவர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
மின்னணு கழிவு : உயிருக்கு ஆபத்து
இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு 4,00,000 டன் மின்னணு கழிவு உருவாகிறது.
இதில் பெருமளவு கணினிகள், கை பேசிகள், இதர மின்னணு கருவிகள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. ஒரு கணினியைச் செய்யப் பயன்படும் பொருள்கள்: ஞெகிழி (பிளாஸ்டிக்), ஈயம், அலுமினியம், இரும்பு, செம்பு, தகரம், நிக்கல், துத்தநாகம்,தங்கம், மாங்கனீஸ், வெள்ளி, நியோபியம், பாதரசம், பிளாட்டினம், குரோமியம் உள்ளிட்டவை.
இவை நமக்கு ஏற்படுத்தும் ஆபத்துகள்:
ஈயம்: மைய நரம்பு மண்டலம், புற எல்லை நரம்புகள், ரத்த நகர்வு, சிறுநீரகம், இனப்பெருக்க உறுப்புகள் போன்றவற்றை பாதிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் குறைபாட்டை உருவாகும். இறப்பும் நேரலாம்.
காட்மியம்: புற்றுநோய் ஏற்படுத்தும். சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும், எலும்புகளை மென்மையாக்கும். சுவாசம், உணவு மூலம் உடலில் சேர்கிறது.
பாதரசம்: மூளை, சிறுநீரகத்தைத் தாக்கும். கரு வளர்ச்சி பாதிப்பு, குழந்தைகளுக்கு பாதிப்பு.
கைபேசி முதல் கணினி வரை பயன் படுத்தப்படுகிறது. உள்ளுறுப்புகள்,உணவுப் பாதை மூலம் மூளையைச் சென்றடை கிறது.
குரோமியம்: கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் புற்றுநோய், சுவாசக் குழாய்
(டேரில் டி‘மாண்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் மும்பை ஆசிரியர். இவர் இந்திய சூழியல் பத்திரிகையாளர் அமைப்பின் தலைவரும், சர்வதேச சூழியல் பத்திரிகையாளர் அமைப்பை தோற்றுவித்தவருமாவார்.)
தமிழில்: ப.நற்றமிழன்
(பூவுலகு மே 2010 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- பா.சதீஸ் முத்து கோபால்
- பிரிவு: சுற்றுச்சூழல்

- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
நம்மைச் சுற்றி நிகழும் பல்வேறு மாசுகளைப் போன்றே ஒலி மாசும் மனித வாழ்நிலையைப் பெருமளவு பாதிக்கின்ற காரணியாகத் திகழ்கிறது. உலகத்தில் மனிதர்களால் பேசப்படும் மொழிகள் அனைத்தும் ஒலிகளை அடிப்படையாகக் கொண்டே தொடங்கின. பறவைகள், விலங்குகள், பூச்சிகள், வாகனங்கள், தொழிற்சாலைகள் என ஒலிகளின் பிறப்பினை எத்தனையோ வடிவங்களில் நாம் அன்றாடம் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். செவிக்கும், புலனுக்கும் இனிமை தருகின்ற இசை, பாடல் ஆகியவையும் ஒலியிலிருந்தே பிறக்கின்றன. ஏதோ ஒரு சூழலில் ஏதுமற்ற அமைதி நிலவினால் கூட, நம்மால் அதனைச் சகித்துக் கொள்ள இயலுவதில்லை.
நம்மைச் சுற்றி ஏதேனும் ஒலித்துக் கொண்டிருப்பதை மனித மனம் எப்போதும் விரும்புகிறது. அந்த அளவிற்கு சத்தங்களோடு பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே நேரம் அளவுக்கு மீறிய ஒலியையும் நம்மால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இசையின் ஒலியில் மயங்கிப் போகின்ற நமது மனம், அதே இசை பெரும் இரைச்சலோடு வெளிப்படும்போது முகம் சுழித்துக் கொள்கிறது. காதொலிக் கருவியின் மூலம் பண்பலை வானொலியில் பாடல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். அதே பாடல் கூம்புக் குழாயில் நம் வீட்டுத் தெரு முனையில் ஒலிபரப்பானால், நம்மால் கேட்க முடிவதில்லை. இதற்குக் காரணம் ஒலியின் அளவு. நம் காதால் கேட்கப்படும் இசையானது, அளவினை மீறும்பட்சத்தில் இரைச்சலாக மாறிவிடுகிறது. உடனே இரு காதுகளையும் இறுகப் பொத்திக் கொண்டு, அந்த ஒலி கேட்கும் அளவைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்கிறோம்.
ஒலிகளின் நூற்றாண்டு எனுமளவிற்குத் தற்போது நம்மைச் சுற்றி ஒலிகளின் அத்துமீறல் மிகக் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் தொலைக்காட்சி, வானொலி ஆகியவை பல்வேறு புதிய வடிவங்களில் நமக்குள் ஊடுருவிக் கொண்டேயிருக்கின்றன. இன்று பண்பலை ஒலிக்காத வீடுகளே இல்லை, தொலைக்காட்சியின் தொடர்கள் ஒளிக்காத இல்லங்களைக் காணுவது அரிது என்ற நிலைக்கு ஒலி-ஒளியின் அத்துமீறல் மிகப் பெரும் வீச்சில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சமூக, கோவில் விழாக்கள் நிகழ்கின்ற காலங்களிலோ, தேர்தல் பரப்புரையின்போதோ அல்லது அரசியல் கட்சியினர் நடத்தும் பொதுக்கூட்டங்களிலோ பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால், நமது காதுகளின் சவ்வு கிழியாமல் இருந்தால் அது மிகப் பெரிய வியப்பே!
கூம்புக்குழாய்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்னமும் பெரும்பாலான பகுதிகளில் செல்வாக்கு மிக்க நபர்களின் செல்வாக்கில் பெரும் வீச்சில் ஒலித்துக் கொண்டுதானிருக்கின்றன. காவல்துறையும் தங்கள் காதுகளைப் பொத்திக் கொண்டு செல்வாக்குகளுக்கே சேவகம் செய்து கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்களின் படிப்பு, உடம்பிற்கு இயலாமல் படுத்துக் கிடக்கும் முதியவர்கள், மருத்துவமனைப் பகுதிகள், குடியிருப்புகள், பள்ளிகள், கோவில்கள் ஆகியவை அதிகபட்ச ஒலிச்சூழலால் தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. வாகனத்தில் இயங்கும் 'மின்னனு ஒலிப்பான்கள்' தடை செய்யப்பட்ட இடங்களிலெல்லாம் தற்போது மிக இயல்பாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
ஒலி அத்துமீறல் நிகழ்கின்ற களங்களின் எண்ணிக்கையும், சராசரியான ஒலி அளவும் தற்போது மிகவும் அதிகரித்துவிட்டது. உலக நலவாழ்வு நடுவம் அண்மையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, உலகிலுள்ள 10 வயதிற்குட்பட்ட சிறார்களில் 5 விழுக்காட்டினர் ஒலி மாசு காரணமாக தங்களது செவியின் கேட்புத்திறனை இழந்துள்ளனர். உச்ச அளவான 75 டெசிபல்லுக்கும் மேலாக இரைச்சலை உணரும் அனைவரும் தலைவலி, சோர்வு, தலைசுற்றல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இயந்திரத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவோரில் நான்கில் ஒரு பகுதியினர் செவித்திறனை இழந்து, பல்வேறு நோய்களால் அவதிப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. தற்போது இந்தியாவில் ஆயிரத்தில் 35 பேருக்கு காது இரைச்சல் நோய் உள்ளதாகவும், புறநகர்ப் பகுதிகளில் வசிப்போரில் 10 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில் வசிப்போரில் 7 விழுக்காட்டினரும் ஒலியுணரும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர். ஒலியளவு அதிகரித்துள்ள பகுதிகளில் வாழ்கின்ற நபர்களில் பெரும்பாலானோருக்கு நரம்புத்தளர்ச்சி மற்றும் இதயநோய் பாதிப்புகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தொடரும் இரைச்சல் நிலை மனித இறப்புக்கும் கூட வித்திடக்கூடும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 டெசிபல், அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 டெசிபல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 டெசிபல், பரபரப்பான கடைத்தெருவில் ஏற்படும் இரைச்சல் 80 டெசிபல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 டெசிபல், சத்தத்துடன் பொழியும் மழையின் அளவு 50 டெசிபல், அமைதியாகக் காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 டெசிபல் (நன்றி தினகரன், அக்டோபர் 19 2010) பொதுவாக 50லிருந்து 75 டெசிபல் வரை நம் காதுகள் கேட்கும் சராசரி அளவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த அளவைக் காட்டிலும் அதிகமாகவே ஒலி மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகிலுள்ள பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் 84 விழுக்காடு ஆசிரியர்களுக்கும், 92 விழுக்காடு மாணவர்களுக்கும் செவித்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்து நடைபெறும் இடங்களைக் காட்டிலும் கடைத்தெருக்களில் இரைச்சலின் அளவு அதிகமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 55 டெசிபல் அளவை பகலிலும், 45 டெசிபல் அளவை இரவிலும் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு (2009) தீபாவளியின்போதே அதற்கு முந்தைய ஆண்டினை (2008) ஒப்பிடும்போது அதிக அளவான ஒலி மாசு சென்னையில் இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது. 2008ஆம் ஆண்டைக் காட்டிலும் 2009ஆம் ஆண்டு சராசரி அளவிலிருந்து 3.9 டெசிபல் அளவிற்கு சென்னை முழுவதும் ஒலி மாசு அதிகரித்தது. வாரியத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 20 டெசிபல் அதிகமாகவே ஒலி மாசு பதிவாகியிருந்தது. அது இந்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது அதிகரிக்குமா அல்லது அதே அளவில் பேணப்படுமா என்பது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கைகளில்தான் உள்ளது. அதிகபட்ச வரம்பிற்கு மேல் ஒலி அளவு வெளியிடப்படுவதைக் கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள ஏழு நகரங்களில் ஒலி மாசு கண்காணிப்பு நடுவம் அமைக்கப்படும் என நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த சனவரி மாதம் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு நகரத்திலும் 5 எண்ணிக்கையில் இந்நடுவங்கள் அமைக்கப்பட்டு ஒலி மாசின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் இது அக்டோபர் 12 முதல் செயல்படத்தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. வருகின்ற 2011ஆம் ஆண்டிற்குள் மேலும் 18 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் நடுவண் மாசுக் காட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கௌதம் தெரிவித்திருந்தார். தற்போதைய நிலையில் மிகவும் அவசியமான, தேவையான ஒன்றாகக் கருதப்படும் இந்த ஒலி மாசு நடுவங்கள், தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் விரைந்து உருவாக்கப்படுதல் வேண்டும். இதன் மூலம் ஒலி அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், வரையறுக்கப்பட்ட ஒலி அளவை அந்தந்த இடங்களில் எச்சரிக்கைப் பலகையாக அமைத்து வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் அறிவுறுத்துதல் மிகவும் அவசியம்.
ஒலி மாசு தொடர்பான தேசிய மற்றும் மண்டல அளவிலான கொள்கையினை வகுப்பதற்கு இந்த ஒலி மாசுக் கண்காணிப்பு நடுவங்கள் பேருதவியாக இருக்கும். ஒலி மாசு ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் கடந்த 2000ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. மிக அண்மையில் அதில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் இச்சட்டத்தை திறம்படச் செயல்படுத்தவும், மாநில அரசுகளை ஊக்குவிக்கவும் ஒலி மாசு கண்காணிப்பு நடுவங்கள் உதவியாக இருக்கும் என்று நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. விரைந்த நகர்மயமாதல், தொழில்மயமாதல் ஆகியவற்றின் பக்க விளைவுகளாக நிலம், நீர், காற்று, ஒலி ஆகியவற்றில் கட்டுக்கடங்காத வகையில் மாசு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தவும், மேலும் தொடர்ந்து கண்காணிக்கவும் ஒருங்கிணைந்த சட்டம் மற்றும் நிர்வாக முறை அவசியமாகிறது.
இந்தியாவின் மென்பொருள் தயாரிப்பில் முக்கியமான நகரமாகக் கருதப்படும் பெங்களூருவில் ஒலி மாசு மற்றும் சூழல் மாசு ஆகியவற்றின் காரணமாக ஒவவொரு ஆண்டும் 10 போக்குவரத்துக் காவலர்கள் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தற்போது நகருக்குள் ஓடும் வாகனங்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தைத் தாண்டிவிட்டன. பெங்களூரு நகருக்குள் அலுவல் நாட்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கவே இயலாத ஒன்றாகிவிட்டது. போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் மட்டும் ஏறக்குறைய மூவாயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாகனங்களின் இடைவிடாத ஒலி, தொடர்ந்த இரைச்சல், பரபரப்பு ஆகியவற்றால் மூச்சுவிடுதலில் கோளாறு, காதுகேளாமை, மந்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த அழுத்தம் போன்ற உடற்கோளாறுகள் இயல்பாகிவிட்டன.
போக்குவரத்தினை ஒழுங்கு செய்யும் காவலர்களுக்கே இந்தப் பாதிப்பென்றால், ஒலி மாசு நிகழும் இடங்களுக்கு அருகே வாழ்கின்ற பொதுமக்களின் நிலை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இங்குள்ள வாகனங்கள் 100 டெசிபலுக்கும் மேலான ஒலியை எழுப்புவதால், போக்குவரத்துக் காவலர் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர் என்று பெங்களூரு மாநகராட்சியின் மேற்கு மண்டல துணை போக்குவரத்து ஆணையர் இராணே தெரிவிக்கிறார். இது பெங்களூருக்கு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநகராட்சிகளிலும் இந்த நிலைதான்.
போக்குவரத்து வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்னனு ஒலிப்பான்களை போக்குவரத்துக் காவல் துறை திட்டவட்டமாக வரையறை செய்ய வேண்டும். அவரவர் விருப்பம்போல் பயன்படுத்துவதை உடனடியாகத் தடை செய்து, 80லிருந்து 85 டெசிபலுக்கு மேற்படாத அளவினைக் கொண்ட மின்னனு ஒலிப்பான்களைப் பயன்படுத்த கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். தொழிற்சாலைப் பகுதிகளில் 75 டெசிபல், வணிகப்பகுதிகளில் 65 டெசிபல், குடியிருப்புப் பகுதிகளில் 55 டெசிபல், அமைதிப்பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களில் 50 டெசிபல் என மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் ஒலியின் அளவை இடத்திற்கேற்ப இசைவளித்துள்ளது. இந்த அளவினை மீறும் தனிநபர்களையும், அமைப்புகளையும் கடும் தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.
'ஓரிடத்தில் ஒலியளவு அதிகரிப்பதால் மனித நடத்தையிலேயே மாற்றம் ஏற்படுகிறது. அதிகபட்ச ஒலி மாசு, போதிய உறக்கமின்மை, எரிச்சல், செரிமானக்கோளாறு, நெஞ்சுஎரிச்சல், உயர்ரத்த அழுத்தம், அல்சர், இதயநோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் குறைந்தபட்ச ஒலியளவு கூட மேற்கண்ட பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை படைத்தவை' என மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் துறை நடத்திய ஒலி மாசு குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துறையின் பேராசிரியர் முத்துச்செழியன் 'ஒலியளவைக் கட்டுப்படுத்த ஐரோப்பா போன்ற நாடுகளில் உள்ளதைப் போல, வாகனங்களில் 'மின்னனு காற்று ஒலிப்பான்களை' அறவே தடை செய்ய வேண்டும். சாலை ஓரங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதன் மூலம் ஒலி மாசின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்' என்கிறார். மதுரை நகருக்குள் ஒலி மாசு தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2004ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2010இல் பல்வேறு இடங்களில் ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 25 டெசிபலுக்கும் கூடுதலாகவே அதிகரித்துள்ளதை மதுரை காமராசர் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை கண்டறிந்துள்ளது.
'சுற்றுச்சூழல் என்பது தனி மனித சொத்து அல்ல. பொதுச்சொத்து. மனித வாழ்க்கையை ஆரோக்கியமாக பேணிக் காக்க சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கும் நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கும். ஆனால் பல்வேறு காரணிகளால் இன்று சுற்றுச்சூழல் மாசடையும் நிலை உள்ளது. காற்று வெளி மாசு, நீர் மாசு, மண் மாசு, கடல் மாசு, உணவு மாசு, கதிரியக்க மாசு, ஒலி மாசு எனப் பல உதாரணங்களைக் கூற முடியும். சுற்றுச்சூழலில் மாசு ஏற்படாதவாறு கட்டுப்படுத்துவது அல்லது கண்காணிப்பது முழுக்க முழுக்க அரசின் கடமை என எண்ணிவிடக்கூடாது. தனி மனிதன் ஒவவொருவருக்கும் சுற்றுச்சூழலைக் காக்கும் கடமை உள்ளது. குறிப்பாக இரைச்சல் மிகுந்த இன்றைய சூழலில் ஒலி மாசை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள், மின்னனு காற்று ஒலிப்பான்களை தேவையான அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். தடை செய்யப்பட்ட இடங்களில் அதனைப் பயன்படுத்துவதில்லை என்ற உறுதியேற்பும் மிக அவசியம்.
ஒலி மாசு மனிதனை மட்டுமன்றி, இயற்கையையும், அந்த இயற்கையைப் பெரிதும் சார்ந்து வாழும் உயிரினங்களையும் பாதிக்கிறது. குறிப்பாக பறவை இனங்களின் வாழ்க்கைத் திறனை ஒலி மாசு அதிகளவில் பாதிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வாசிங்டனிலுள்ள கொலாராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் பிரான்சிஸ் தலைமையிலான ஆய்வுக்குழு, 32 வகையான பறவையினங்களை சத்தம் இல்லாத அமைதியான சூழலில் வைத்து வளர்த்தது. 21 வகையான பறவையினங்களை ஒலி மாசு அதிமுள்ள இடங்களில் வைத்து வளர்த்தது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர், இந்தப் பறவை இனங்களை ஆய்வு செய்தபோது, ஒலி மாசு அதிகம் உள்ள இடங்களில் 3 வகையான பறவையினங்கள் மட்டுமே இருந்தன. மற்றவை வேறிடம் நோக்கிப் பறந்து விட்டன. ஆனால் ஒலி மாசு தொந்தரவு இல்லாத அமைதியான சூழலில் வளர்க்கப்பட்ட பறவைகளில் 14 இனங்கள் அங்கேயே வசித்து வந்தன.
இந்த ஆய்வின் வாயிலாக ஒலி மாசு பறவைகளின் வாழ்நிலையைத் தீர்மானிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதே போன்று கடல் பகுதியில் மனிதர்களால் நிகழ்த்தப்படும் ஒலி மாசின் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், சில நேரங்களில் இறந்துபோகின்ற நிலைக்கும் கூட தள்ளப்படுகின்றன. அண்மையில் அமெரிக்கக் கடற்பகுதியில் ஆயுதக்கப்பல்களால் எழுப்பப்பட்ட மிகு ஒலியின் காரணமாய், அக்கடல் பகுதியில் வாழ்ந்த திமிங்கலங்கள் அதிர்ச்சியில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் கடற்கரையோரம் படையெடுத்து ஒட்டுமொத்தமாய் இறந்து கரை ஒதுங்கின. கடலில் பெருகிவிட்ட கப்பல் போக்குவரத்தால் கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் தங்களின் சுதந்திரத்தை இழந்து தவிக்கின்றன. தங்களுக்குள் தகவல்களைக் கூட பரிமாறிக் கொள்ள முடியாமல் பல்வேறு இடர்ப்பாடுகளுடன் வாழ்கின்றன.
சுற்றுலா என்ற பெயரில் காடுகளுக்குள்ளும், மலை வாழிடங்களிலும் நடைபெறும் ஒலி மாசால் அங்குள்ள காட்டு விலங்குகள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகின்றன. அமைதியான சூழலில் வாழ விரும்பும் அனைத்து காட்டுயிர்களின் நிம்மதி மனிதர் நடமாட்டத்தால் குலைக்கப்படுகிறது. இதனால் பல்லுயிர்ச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. மனிதன் தனது சுயநலத்தால் பிற உயிர்களை மட்டுமன்றி, தன்னையும் அழித்துக் கொள்கின்ற பேரவலம் ஒலி மாசின் காரணமாக நிகழ்த்தப்படுகிறது. இதனைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை நடுவண் மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும் மட்டுமன்றி தனி நபர்களும் முன் வருதல் வேண்டும். அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலுள்ள ஆடியோ மற்றும வீடியோ வசதிகளை உடனடியாக நீக்கம் செய்திட வேண்டும்.
வாகனங்களின் மின்னனு ஒலிப்பான்களை வாகனங்களுக்கு ஏற்றாற் போல், ஒவ்வொரு வாகன வகைகளுக்கும் 75 டெசிபல் அளவை மீறாத வகையில் ஒலிப்பான்களை வரையறை செய்தல் வேண்டும். அதனை மட்டுமே பொருத்துவதற்கு வாகனத் தயாரிப்பு நிறுவனங்களை அறிவுறுத்த வேண்டும். பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களை நகருக்குள் அனுமதித்தல் கூடாது. பள்ளி, கல்லூரி, வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பேரணி நடத்தவோ, பொதுக்கூட்டம் நடத்தவோ இசைவளிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இயற்கை சார்ந்த சுற்றுலாவை குறிப்பாக வனச் சுற்றுலாவை ஊக்குவிப்பது சிறிதுசிறிதாகக் குறைக்கப்பட வேண்டும். பொதுவாக அனைத்து நகர்ப்பகுதியிலும் மரங்கள் பெருமளவில் நடப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்படுதல் வேண்டும். கடல் பகுதியில் நடைபெறும் கப்பல் போக்குவரத்து கண்காணிக்கப்பட்டு, சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்குட்படுத்தப்பட வேண்டும். கடல் வாழ் உயிரினங்களுக்கும் பல்லுயிர்ச் சூழலுக்குக் குந்தகம் நேராத வகையில் கப்பல் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது அவசர அவசியம்.
-இரா.சிவக்குமார்
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....
- பச்சை நிழல்
- நியூட்ரினோ ஆய்வகம் - வரமா? சாபமா?
- பட்டாசு வெடிக்கலாமா?
- சமையல் அறையிலும் சூழலை காக்கலாம்