கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- உதயகுமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.
அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை?
உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரிமையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.
பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை.
அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.
2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்குகின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.
அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.
1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.
நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.
கருப்பான, அழுக்கான தமிழர்கள் என்று நம்மை வருணித்திருக்கும் ஓர் அமெரிக்க தூதர் சொல்வது போல நம்மை இந்திய அரசும் இழிவாக பார்க்கிறதோ என்னும் அச்சமும், சந்தேகமும் மனதில் எழுகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் நம்மைக் காப்பாற்ற முன்வருவார்கள் என எதிப்பார்த்து ஏங்கிக் கிடக்கிறோம்.
இறுதியாக ஒரு சில கேள்விகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.
மக்களுக்காக மின்சாரமா அல்லது மின்சாரத்திற்காக மக்களா?
ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா?
சிந்திப்பீர்! முடிவெடுப்பீர்!
- விவரங்கள்
- இளம்பரிதி
- பிரிவு: சுற்றுச்சூழல்
மின்பற்றாக்குறை, 2–ஜி ஸ்பெக்ட்ரம், ஈழத்தில் தமிழின அழிப்பு இவையே தி.மு.க. அரசு எதிர்க்கட்சி தகுதியைக் கூட சட்டப்பேரவையில் இழந்து நிற்பதற்கான முக்கிய மூன்று காரணிகள் எனக் கூறப்படுகிறது. இவற்றில் தமிழ்நாடு மக்களின் தன்னலன் சார்ந்த முதன்மைப் பிரச்சனையாக, ஊடகங்களிலும் அரசியல் கட்சி மேடைகளிலும் அதிகம் பேசப்பட்டது மின் பற்றாக் குறையே. தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கும் தேவைக்கும் இடையிலான பற்றாக்குறை, 3000 மெகாவாட் என இன்றளவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் பொறுப்பேற்றிருக்கும் புதிய அரசும், இப்பற்றாக்குறையை உடனடியாகப் போக்கும் வகையில் நடுவண் தொகுப்பிலிருந்து 1000 மெகாவாட் அளவிலான மின்சாரத்தை வழங்க வேண்டுமெனக் கேட்டுள்ளது.
தமிழகத்தில் தற்பொழுது நான்கு புதிய மின் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின்வாரியமும் இணைந்து சென்னை அருகேயுள்ள வல்லூரில், மூன்று யூனிட்கள் கொண்ட 1500 மெகாவாட் அனல் மின் நிலையத்தை அமைக்கிறது. இந்நிலையத்திலிருந்து அக்டோபர் முதல் 375 மெகாவாட் மின்சாரம் முதற்கட்டமாகப் பெறப்படவிருக்கிறது. மேட்டூரில் தமிழக மின்வாரியத்தின் சார்பில் 600 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது. இந்நிலையத்தின் உற்பத்தி டிசம்பர் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எண்ணுரில் 600 மெகாவாட் திறனுள்ள புதிய அனல்மின் நிலையமும், நடுவண் அரசுடன் தமிழக மின்வாரியமும் இணைந்து 9,083 கோடி ரூபாய் மதிப்பில் 1600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையம் உடன்குடியிலும் அமைக்கப்படவிருக்கின்றன. இத்திட்டங்கள் செயல்படத் தொடங்கினாலே, தேவைக்கு அதிகமான மின் உற்பத்தி 5100 மெகாவாட் கொண்ட மாநிலமாக தமிழகம் மாறும்.
இந்நிலையில் நடுவண் அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நடுவண் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை, அனல்மின் நிலையங்களில் நிலக்கரியின் பயன்பாட்டு அடிப்படையில் ஆய்வு நடத்தி, சில வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. கொதிகலன் செயல்பாடு, குளிர்விப்பில் வெளியேறும் தண்ணீரின் வெப்பநிலை மற்றும் வெளியேறும் புகை ஆகியவற்றில், நடுவண் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை வகுத்த அளவை விடக் குறைவான அளவை நடுவண் சுற்றுச் சூழல் துறை நிர்ணயித்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படி, நடுவண் வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை அனுமதிகளை நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய மின் நிலையங்களின் கொதிகலன்கள் (பாய்லர்கள்) 100 சதவிகிதம் இந்திய நிலக்கரி அல்லது 30 சதவிகிதம் வெளிநாட்டு நிலக்கரியுடன் சேர்த்து பயன்படுத்தும் திறனிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வடசென்னை அனல்மின் நிலையத்திற்கான 1200 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு யூனிட்டுகளுக்கும், மேட்டூரின் 600 மெகாவாட் யூனிட்டுக்கும் நடுவண் அரசு நிலக்கரி அனுமதிக்கான உறுதியளிப்புக் கடிதம் தந்திருந்தாலும், ஒரிசா மகாநதி நிலக்கரி சுரங்க நிறுவன கூட்டத்தில், உறுதியளிக்கப்பட்ட அளவில் 50 சதவிகிதம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, கொதிகலன்களின் திறன் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் சூழல் விதிமுறைகளைப் பாதிப்பதாக இருக்கும். நடுவண் அரசின் நிலக்கரி அனுமதியையும் சுற்றுச் சூழல் அனுமதியையும் சமன் செய்து பெற வேண்டிய நிலையில், 11 மற்றும் 12 ஆம் அய்ந்தாண்டு மின் உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் நடுவண் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி நடராஜன், இதற்கான அனுமதிகளை வழங்கி விடுவார். இன்னும் ஆறுமாத காலத்தில் மேற்கண்ட திட்டங்கள் நடைமுறைக்கு வருவதும், தமிழகத்தின் மின் பற்றாக்குறை நீங்கி உபரித் திறன் இருக்கும் என்பதும் கண்கூடு. நடைமுறையிலிருக்கும் அனல்மின் திட்டங்களால் சுற்றுக்சூழலும், மக்களின் ஆரோக்கியமும் சீர்கெட்டுப் போயிருக்கின்றன. மின் உற்பத்திக்கான மாற்று முறைகளைப் பற்றிய நடவடிக்கைகளில் மேற்கத்திய நாடுகள் இறங்கிவிட்டன. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளோ, சூரியஒளி, காற்றாலை போன்ற இயற்கை வழி உற்பத்திக்கான வாய்ப்புகள் அதிகமிருந்தும், அணு மற்றும் அனல் மின் திட்டங்களையே சார்ந்து நிற்கின்றன. புவிப்பரப்பிற்கும் வாழிட மக்களுக்கும் பேராபத்துகளைத் தருவிக்கும் தொழிற் நுட்பங்களையும் திட்டங்களையும் நம்பியே பாழ்படுகின்றன.
தமிழகத்தில் இயங்கி வரும் மின் உற்பத்தித் திட்டங்கள் தற்போதைய தேவைகளை நிறைவு செய்யும் நிலையில், எதிர்காலத் தேவைக்கான மின் ஆற்றலை – காற்றாலை, சூரிய ஒளி மற்றும் குப்பைக் கழிவுகளிலிருந்து உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளையும் நவீன தொழிற்நுட்பத் திட்டங்களையும் மட்டுமே நாட வேண்டும். நுகர்வோரான மக்களும் அரசுகளிடம் இதை வலியுறுத்த வேண்டும். மக்கள் நலனில் அக்கறையற்ற ஊழல் அரசுகள் ஒருபுறம், பொது நோக்கு சிந்தனையற்ற அசட்டையான மக்கள் மறுபுறம் என, தவறான கொள்கைத் திட்டங்களில் நாடு வீழ்ந்து கிடக்கிறது.
இந்த அவலமான சூழலில் தான் தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் 9 மற்றும் தூத்துக்குடியில் ஒன்று என புதிய அனல்மின் நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முதற்கட்ட அனுமதியை வழங்கியிருக்கின்றன. இத்திட்டங்களைக் கைவிடக் கோரியும், புதிய அனல் மின் நிலையங்களுக்கான அடுத்தகட்ட அனுமதிகளை வழங்கக் கூடாதென வலியுறுத்தியும் நாகை மாவட்ட மக்கள் போராடி வருகின்றனர். மாநில அரசு தொடர்ந்து அனல் மின் நிலைய முதலாளிகளுக்கு ஆதர வாகவே செயல்பட்டு வருகிறது.
மீனவர்கள், தலித்துகள் மற்றும் நாகை – காரைக்கால் வாழ் முஸ்லிம்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக ‘அனல் மின் நிலைய எதிர்ப்பு கூட்டியக்கம்' என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளின் கூட்டு முயற்சியில் மக்கள் அடுத்த கட்டப் போராட்டங்களுக்கு அணியமாகி வருகின்றனர். 19.07.2011 அன்று, மயிலாடுதுறையில் ஏறத்தாழ ஆயிரம் பேர் பங்கேற்ற ‘வாழ்வுரிமை மாநாடு' இக்கூட்டியக்கத்தினரால் நடத்தப்பட்டது. இதையொட்டி பகுதிவாழ் மக்கள் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகத்தின் கருத்தறிய உண்மையறியும் குழு ஒன்று, தான் ஆய்வில் கண்டவற்றிலிருந்து அளித்த அறிக்கையின் சாராம்சமான பகுதிகள் இங்கே தரப்படுகின்றன. இக்கட்டுரை அச்சில் இருக்கும் காலத்தில், நாகை மாவட்டத்தில் மூன்று அனல் மின் நிலையங்களுக்கு மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அனுமதி வழங்கியிருப்பதை அறிகிறோம். அவற்றில் ஒன்று மிகவும் பிரச்சனைக்குரிய, தரங்கம்பாடி பகுதி மீனவ மக்களின் வாழ்வை நிர்மூலமாக்கப் போகும் ‘செட்டிநாடு அனல்மின் கழகம்' நிறுவியிருக்கும் நிலையமாகும்.
‘செட்டிநாடு' முதலாளியான ஏ.சி. முத்தையா அண்மையில் அ.தி.மு.க. அரசினால், தமிழ்நாடு மாநில திட்டக் குழு (தொழிற்துறை) உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இவர், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய நட்பு வட்டத்திலும், அதிகார மய்யத்திலும் நீண்டகாலமாகக் கோலோச்சுபவர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவரைப் போன்றவர்கள் முறைகேடாக நிலங்களை மட்டுமல்ல, அரசாங்கத்தையே கூட விலைக்கு வாங்கலாம். துணிச்சலான மக்கள் போராட்டங்களை விலை பேச முடியுமா? தேவைக்கு அதிகமான உபரி மின்சாரத்தை உற்பத்தி செய்து, பிற மாநிலங்களுக்கு விற்று, கொள்ளை லாபம் ஈட்டும் நோக்கத்துடன் களம் இறங்கியிருக்கும் தனியார் முதலாளிகளுக்காக, விவசாய நிலங்கள் திட்டமிட்டே தரிசாக்கப்பட்டும் அடிமாட்டு விலைக்கு ஆக்கிரமிக்கப்பட்டும் வருகின்றன.
வரும் காலத்தில் 115 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (2011 – 12) கூறுகிறது. விவசாய நிலங்கள் மனைகளுக்கும் தொழிற் பூங்காக்களுக்கும் கையகப்படுத்தப்பட்டால், உணவு உற்பத்தி செய்யப்படுவது எப்படி? வேளாண் குடிகளான தலித் மக்களும், கடலோர வாழ் மீனவக் குடிகளும் தங்கள் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு, உள்நாட்டு அகதிகளாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுமா?
– இளம்பரிதி
****
கடலோர மக்களின் வாழ்வை சூறையாடும் அனல் மின் நிலையங்கள்
உண்மை அறியும் குழுவின் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்
சமய ஒற்றுமை, மீன்வளம், விவசாயம், சுற்றுலா ஆகியவற்றிற்குப் பெயர்போன மாவட்டம் நாகப்பட்டினம். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலுள்ள சுமார் 220 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை ஒட்டி 61 கிராமங்கள் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ளன. 16 நதிகள் கடலில் கலக்கும் கடைமடை விவசாய நிலங்களை நம்பி – ஏராளமான விவசாயிகளும், தலித் மக்களும் வாழ்கின்றனர். வேளாங்கன்னி, நாகூர், திருக்கடையூர் முதலான புகழ்மிக்க சமயத் தலங்களில் சுற்றுலாத் தொழில்களை நம்பிப் பல சிறு வணிகர்கள் வாழ்கின்றனர்.
வரலாற்று முக்கியத்துவமிக்க இம்மாவட்டத்தில் வாழ்கிற மக்கள் மத்தியில், இன்று தம் எதிர்காலம் குறித்த மிகப் பெரிய அச்சம் உருவாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாக திருக்கடையூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிள்ளை பெருமாள்நல்லூர் பவர் லிமிடெட்'இன் அனல்மின் நிலையம் தவிர, மேலும் ஒன்பது அனல்மின் நிலையங்கள் இங்கு வரப்போகின்றன. ஏற்கனவே காரைக்காலில் செயல்பட்டு வரும் ‘மார்க்' தனியார் துறைமுகம் தவிர, மேலும் மூன்று துறைமுகங்களும் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரியை ஏற்றிவரும் கப்பல்களிலிருந்து கரியை இறக்கும் பல ‘ஜெட்டி'களும் கட்டப்பட உள்ளன.
தமிழகத்தில் இன்று நிலவுகிற மின்சாரப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி – அரசும், கார்ப்பரேட்டுகளும் தமது செயல்பாடுகளை நியாயப்படுத்துகின்றனர். மீன்பிடித் தொழிலும், விவசாயமும் அழிந்தாலுங்கூட, புதிய மின் நிலையங்களில் வேலை வாய்ப்பளிக்கப்படும் என மக்கள் நடுவில் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
திருக்கடையூரில் செயல்பட்டு வரும் பி.பி.என். மின் நிலையத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் :
1998 முதல் பிள்ளைப்பெருமாள் நல்லூரிலிருந்து செயல்பட்டு வருகிற இம்மின் நிலையத்தில், 330 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாப்தலின் மற்றும் திரவ எரிவாயுவால் இது இயக்கப்படுகிறது. பரங்கிப்பேட்டையில் இருந்து கடல் ஊடாகச் சுமார் 75 கிலோ மீட்டர் நீளத்திற்கு நிறுவப்பட்டுள்ள குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரப்படுகிறது. மின் நிலைய இயக்கத்திற்கென கடலில் இருந்து குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுகிறது. பயன்படுத்தப்பட்டுச் சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலுக்குள் விடப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிற இம்மின் நிலையத்தால் தங்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள தாக வெள்ளக்கோயில் குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, மாணிக்கப்பங்கு, புதுப்பேட்டை முதலான ஊர்களைச் சேர்ந்த மீனவ மக்கள் எங்களிடம் கூறினர். இந்த ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் கூடியிருந்த மீனவ மக்களின் பிரதிநிதிகள் கோ. சரவணன், த. குமார், ஆ. பாஸ்கர், நா. தவமணி, ந. தங்கப் பொண்ணு, சு. தங்கவேலு, க. சித்திரவேலு, ர. பரசுராமன், சே. சிவகுமார், கு. விஜயேந்திரன், கி. குணசேகரன் ஆகியோர் கூறியவற்றிலிருந்து :
1. கடல் உள்ளே அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் சிக்கி வலைகள் கிழிந்து விடுகின்றன. டிராய்லர் படகுகள் குழாய்களைச் சுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது. நாப்தா கொண்டு வரும் கப்பல்களில் மாட்டியும் வலைகள் கிழிகின்றன. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை கிழிந்தால் ரூ. 10,000 என்ற அளவிலேயே அதுவும்கூட ஒரு சிலருக்கு மட்டும் இத்தகைய இழப்பீடுகள் தரப்பட்டுள்ளன. ‘ஸ்நேகா' என்கிற தொண்டு நிறுவனம் செய்துள்ள ஆய்வின்படி, 13 ஆண்டுகளில் தரங்கம்பாடியைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு 5.14 கோடி ரூபாய் இழப்பு இவ்வகையில் ஏற்பட்டுள்ளது.
2. சூடேற்றப்பட்ட நீர் மீண்டும் கடலில் கலக்கப்பட்டு வருவதால் பெரிய அளவில் மீன்வளம் குறைந்துள்ளது. தண்ணீர் கலக்கின்ற இடத்தைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மீன்களே கிடையாது. மீன்களின் கருவளத்தையும் இது பாதிக்கிறது. இறால் மற்றும் காணாங்கெழுத்தி, கட்லா முதலான மீன்கள் மிகவும் குறைந்துவிட்டன.
3. கடல் அரிப்பும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 100 வீடுகளாவது இடம்பெயர்ந்து செல்ல வேண்டியுள்ளது.
4. மழை அளவும்கூட இப்பகுதியில் குறைந்துள்ளது. 8 அடி ஆழத்தில் கிடைத்து வந்த நிலத்தடி நீர், தற்போது 20 அடி ஆழத்திற்கு இறங்கி உள்ளது. நிலத்தடி நீரின் உப்புத் தன்மையும் அதிகரித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாகக் காரைக்காலில் செயல்பட்டு வருகிற மார்க் துறைமுகம் கட்டப்படும்போது, நிலக்கரி இறக்குமதி செய்வதற்கு இது பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்படவில்லை. இன்று இந்தோனேசியாவிலிருந்து பெரிய அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு பெல்ட் முதலான கருவிகள் பயன்படுத்தப்படாமல், மனித உழைப்பின் மூலமாகவே கரைக்குக் கொண்டு வந்து வெட்ட வெளியில் கொட்டப்படுகிறது. காற்று வீசும் திசையில் நிலக்கரி தூசு பறந்து இயற்கை வளங்களையும், உப்பனாற்று மீன் வளத்தையும் பாதித்து உள்ளது. வாஞ்சூர், நாகூர், பட்டணம், நிரவி, பட்டினஞ்சேரி ஆகிய ஊர்மக்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு குறை வளர்ச்சியுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதாகவும், மரம், செடி, கொடிகள் அழிவதாகவும், இப்பகுதியில் விளையும் வாழை இலையில் உணவு உண்ண இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் – நாங்கள் சந்தித்த ஜா. சாதிக், அ. கப்பாபா ஆகியோர் கூறினர். எதிர்ப்புகளைக் காட்டும்போது உடனடியாக அழைத்துப் பேசி சில சலுகைகளைச் செய்வதை நிர்வாகம் தந்திரமாக மேற்கொள்கிறது. வரலாற்று முக்கியத்தும் மிக்க நாகூர் தர்கா நிலக்கரித்தூளால் பாழ்படுவதைப் பற்றி தர்கா நிர்வாகம் கவலை தெரிவித்தபோது, அக்கட்டடத்திற்கு வெள்ளை அடித் துத் தந்து நிர்வாகம் சமாதானம் செய்தது ஓர் எடுத்துக்காட்டு.
மேற்குறித்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள பி.பி.என். மின் நிலையம் 330 மெகாவாட் திறனுடையது. நாப்தா மற்றும் திரவ எரிவாயுவால் இயங்குவது. ஆனால், தற்போது அமைக்கப்பட உள்ள அனல் மின் நிலையங்கள் நிலக்கரியால் இயங்கக்கூடியவை. ஒவ்வொன்றும் சுமார் 1000 மெகாவாட் வரை திறனுடையவை.
நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின் நிலையங்கள் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்து மிக விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்துத் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுவதன் சுருக்கம் :
1. ஓசோன் படலம் துளையாதல், பூமி வெப்பமாதல் ஆகியவற்றிற்குக் காரணமான வாயுக்கள் பெரிய அளவில் உருவாகும். ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு 105 டன்கள் சல்பர்–டை–ஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்யும். இது, சுவாச மற்றும் இருதய நோயை மக்களுக்கு ஏற்படுத்தும். மேகங்களில் கலந்து அமில மழையை உருவாக்கி மரம், செடி, கொடிகளையும் விவசாயத்தையும் அழிக்கும்.
2. ஒவ்வொரு 500 மெகாவாட் திறனுள்ள அனல்மின் நிலையமும் நாள் ஒன்றுக்கு இரண்டு டன் தூசுகளை உருவாக்கும். உலோகத் தன்மையுடைய இத்தூசுகள் நுரையீரலைப் பாதிக்கும். இருதயத் துடிப்பையும் மாற்றி அமைக்கும். மண்ணின் சத்துக்களை அழிக்கும். மரம், செடி, கொடிகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
3. இதுதவிர, உடலில் மிகப்பெரிய தீங்குகளை விளைவிக்கக்கூடிய பாதரசம் வெளிப்படும். ஓராண்டில் நீரில் ஒரு கிராம் அளவு பாதரசம் கலந்தால் பத்து ஹெக்டேர் பரப்பில் உள்ள மீன்கள் விஷத்தன்மை அடையும். ஒவ்வொரு 100 மெகாவாட் அனல்மின் நிலையமும் ஆண்டொன்றுக்கு 11 கிராம் பாதரசத்தை வெளித்தள்ளும் என்றால், பாதிப்பைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
பரிந்துரைகள் :
1. அறிவிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்கள் மற்றும் துறைமுகத் திட்டங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பறிப்பு, அவற்றால் ஏற்பட்டுள்ள மக்கள் பாதிப்பு, திட்டங்களால் ஏற்படப்போகும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மீன் வளப் பாதிப்பு ஆகியவை குறித்து ஆராய நீதிபதி ஒருவர் தலைமையிலான விசாரணை ஆணையம் ஒன்றை நியமிக்க வேண்டும். நிலப்பறிப்பில் விதிகளை மீறி கார்ப்பரேட்டுகளுக்கு ஒத்துழைத்த அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும். சிதம்பரம்பாக்கம் என்கிற கிராமமே இல்லை எனச் சொன்ன ‘நீரி' நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. சாதி வெறியுடன் தலித் மக்களைத் தாக்கிய காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடர வேண்டும். எருக்கட்டாஞ்சேரியைச் சேர்ந்த 14 பேர்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்கைத் திரும்பப் பெற வேண்டும். அவ்வூர் மக்களுக்கும் ஊர்த் தலைவர் செல்வத்திற்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தொலைநோக்கில் :
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதும், தொடர்ந்து மின் தேவை அதிகரித்து வருவதும் எல்லோருக்கும் கவலை அளிக்கக்கூடிய ஒரு நிலையே. இதற்கு உடனடிப் பரிகாரம் அவசியம் என்பதும் உண்மையே. நம்முடைய தற்போதைய மின் தேவை சுமார் 11 ஆயிரம் மெகாவாட் எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்று தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ள மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 15,800 மெகாவாட். இந்த மின் நிலையங்களின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, பராமரிப்புப் பணிகளை ஒழுங்காகச் செய்தால், மின் சிக்கனம், விநியோகம் முதலியவற்றின் திறன் சார்ந்த முறைகளைக் கையாளுதல் ஆகியவற்றின் மூலம் உடனடி மின் பற்றாக்குறையைக் களைய முடியும். பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் நமது தற்போதைய மின் பற்றாக்குறையைக் கணக்கில் கொள்ளாமல், ஏராளமாக மின்சாரத்தை அளிக்க ஒப்புதல் கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்வதை அரசு நிறுத்த வேண்டும்.
உண்மை அறியும் குழுவினர்
பேராசிரியர் அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை
பேராசிரியர் அரசமுருகுபாண்டி யன், டி.பி.எம்.எல். கல்லூரி, பொறையார்
வழக்குரைஞர் தய். கந்தசாமி, தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
சமூக ஆய்வாளர், எழுத்தாளர் கா.இளம்பரிதி, மதுரை
பொறியாளர் மு. ஹரிஸ்முகம்மது
தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு
சமூக ஆர்வலர் செ. முகம்மது மரைக்காயர், நாகை
(தலித் முரசு ஜூலை 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழலால் மிகவும் சீர்கேடடைந்த இந்திய நாட்டின் 43 தொழிற்பகுதிகளில், தமிழகத்திலுள்ள வேலூர், கடலூர், சென்னை மணலி, கோயமுத்தூர் ஆகியனவும் உட்படும். நிலம், நீர், காற்று ஆகிய அனைத்திலும் மாசுபட்ட நகரங்களாக நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்தாண்டு இவைகளை வரையறை செய்துள்ளது. குறிப்பாக கடலூர் தொழிற்பேட்டைப் பகுதியில் இயங்கும் தொழிற்கூடங்களால் ஏற்படும் சூழல்கேடு பன்மடங்கு அதிகரித்து வருகிறது என சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடலூர் சிப்காட் தொழிற்சாலையின் அருகில் வசிக்கின்ற மக்களுக்கு புற்றுநோய் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நிஜாமுதீன் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் கடந்த சூன் மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கடலூர் தொழிற்பேட்டை பகுதியைச் சுற்றிலும் வாழ்கின்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு இரண்டாயிரம் மடங்கு அதிகமுள்ளது என தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பொதுவாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஆபத்தான வேதிப்பொருட்களை காற்றிலும், குடிநீரிலும், நிலத்தடியிலும் கலந்து விடுகின்ற முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இத் தொழிற்கூடங்களில் மழைநீர் வடிகாலாக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களின் வழியே ஆபத்தான வேதிக் கழிவுகள் கலந்து வருவதாக, பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதற்கொரு நிலையான தீர்வினை வழங்குவதில் போதுமான அக்கறை காட்டவில்லை.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் முறையான ஒப்புதலின்றி இயங்கி வரும் வேதிக் கழிவு நீரகற்று நிலையமான கியூசெக்ஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், அந்நிலையத்திற்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே பத்தாண்டுகளுக்கும் மேலாக வேதிக் கழிவு நீரகற்று நிலையம் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொழிற்பேட்டைக்குள் பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வண்ணச் சாயத்திற்கான மூலப்பொருட்கள், பி.வி.சி.க்கான மூலப்பொருட்கள், சாயங்கள் போன்ற வேதி தொடர்பான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கிருக்கும் ஆலைகள் அனைத்தும் நாளொன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால் தொழிற்பேட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர், காற்று, மண் ஆகியவை பெருமளவு சீர்கேடடைந்துள்ளன. இச்சூழல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு, மக்கள் நல அமைப்புகளும் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.
ஆலைகளிலிருந்து பெறப்படும் கழிவு நீர் அனைத்தையும் சுத்திகரிப்புச் செய்து கியூசெக்ஸ் நிலையம் முறைப்படி கடலுக்குள் கொட்டுகின்ற பணியைச் செய்து வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு இங்குள்ள ஆலைகளின் முயற்சியால் ரூ.5 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இக்கழிவு நீரகற்று நிலையம், நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவினைப் பெற்றுள்ளது. ஆனால் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையம் நாள்தோறும் 1.20 கோடி லிட்டர் வேதிக் கழிவுகளைச் சுத்திகரிப்புச் செய்து கடலில் சேர்க்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டாலும், பல வேளைகளில் முறையாய் சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்ளாது அப்படியே கொண்டு போய் கடலில் கழிவுகளைக் கலப்பதாகவும், இதனால் வங்கக்கடலிலும், உப்பனாற்றிலும் உள்ள நீர் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கியூசெக்ஸ் நிறுவனத்தின் அத்துமீறலைக் கணக்கிற் கொண்டே மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கடலில் கலந்து விடுவதை கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் கடந்த 2004ஆம் ஆண்டு சான்றுகளோடு மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு புகார் அளித்திருந்தது. நாளேடுகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் தானே முன்வந்து இவ்வழக்கினை எடுத்துக்கொண்டதுடன், பல தரப்பிலும் விசாரணைகளையும் மேற்கொண்டது. பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கியூசெக்ஸ் நிலையத்தை மூடுவதற்கு ஆணையிட்டது. கியூசெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட மேல் முறையீட்டு நடவடிக்கையால் ஒரு மாத மூடலுக்குப் பின்னர், அதே நீதிமன்றத்தின் உத்தரவோடு மறுபடியும் இயங்கத் தொடங்கியது. இறுதி ஆணையை உயர்நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்க உள்ள நிலையில், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி அளிக்கப்படாத இந் நிலையத்தினை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது சட்டவிரோதமான செயலென்றும், தொழிற்பேட்டைக்குள் இயங்கும் பல்வேறு ஆலைகளின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே மௌனச் சாமியாராக இருப்பது பெரும் குற்றமென்றும் முணுமுணுப்புகள் எழத் தொடங்கியுள்ளன. அது மட்டுமன்றி, திருப்பூர் சாயப்பட்டறைகளின் கழிவுகளையும் கியூசெக்ஸ் நிறுவனம் மூலமாக சுத்திகரிப்புச் செய்து கடலில் கலக்கும் அரசின் முடிவினையும் கடலூர் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் கடலூர் தொழிற்பேட்டையில் இயங்கும் சாஷன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து நள்ளிரவில், ஹைட்ரோ புரோமின் வாயு வெளியேறி காற்றில் வேகமாகப் பரவியதால், அதன் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாயினர். இதற்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களால் மாவட்ட நிர்வாக ஆணையின் பேரில், சாஷன் கெமிக்கல்ஸ் நிறுவனம் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியதால், மறு உத்தரவு வரும்வரை நிறுவனம் மூடப்படுகிறது என அறிவித்து, சீல் வைக்கப்பட்டது. சாஷன் கெமிக்கல்ஸ் நிறுவனம் வெளியேற்றிய விச வாயுவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணத்தொகையோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. சிலருக்கு இன்னமும் நுரையீரல் கோளாறு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23 இலட்சம். வேளாண்மை மற்றும் ஆலைத் தொழில்களைச் சார்ந்தே இம்மக்களில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் படித்த மற்றும் பாமர மக்களுக்கு கடலூர் தொழிற்பேட்டை குறிப்பிடத்தகுந்த வேலை வாய்ப்பினை வழங்குகிறதெனினும், ஆபத்தான வேதி ஆலைக்கூடங்கள் சுற்றுப்புற மக்களுக்கும், வேளாண்மைக்கும், நிலத்தடிநீருக்கும் பெரும் ஆபத்தினை விளைவித்து வருகிறது. கடலூர் தொழிற்பேட்டையிலுள்ள ஆலைகளை ஆய்வு செய்த நடுவண் நீரி அமைப்பு, தொழிற்பேட்டையிலிருந்து வெளியாகும் கழிவுகள் கடுமையான நச்சுப் பொருட்களைக் கொண்டவை என்றும், சுற்றுப்புறத்திலுள்ள 22 கிராம மக்களின் உடல் நலம் குறித்து பொதுவான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அறிக்கை அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், இன்னும் விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.
'கடலூர் பெரும் ஆபத்து மையமாக மாறி வருகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் மாசடைந்துள்ளது. இந்த ஆலைகளின் கழிவுகளால் சுற்றுப்புற மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என நீரி நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 ஆய்வு மாதிரிகளில், வெளியேறுகின்ற 25 வேதிக்கழிவுகளில் 12 கழிவுகள் புற்று நோய் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியவை என்ற விடையே கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பென்சீன் மற்ற எல்லாவற்றையும் விட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும். அதே போன்று டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் ஆகியவற்றோடு புற்றுநோயை உருவாக்கக்கூடிய காட்மியம், பெரிலியம், பேரியம் ஆகியவை உட்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வரை கடலூர் தொழிற்பேட்டையில் இயங்கக்கூடிய ஆலைகளில் 20 ஆலைகள் உரிமம் இன்றி இயங்கி வருகின்றன' என்கிறார் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுவேதா நாராயணன்.
மனிதர் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் கடலூர் 16ஆவது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ள நிலையில், கடலின் சீற்றத்திற்கு அரணாகவும், பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் திகழ்கின்ற பிச்சாவரம் அலையாத்திக் காடுகளுக்கு அருகே அனல் மின் நிலையம் அமைய நடுவண் அரசு ஒப்புதலளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். கடலூர் மாவட்டத்தின் ஒரே சொர்க்கபுரி பிச்சாவரத்திலுள்ள அலையாத்திக் காடுகளே. இதற்கும் உலை வைக்க அரசு துடிப்பது, கடலூரில் இனிமேல் மனிதர்கள் வாழவே கூடாது என்று நினைப்பில்தானா? பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற பிச்சாவரம், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இரண்டரை கோடி ரூபாயை வருமானமாக ஈட்டித் தந்துள்ளது. 1358 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து அமைந்துள்ள பிச்சாவரம் அலையாத்திக் காடு, அழகானதொரு சோலை. 18க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகளைக் கொண்ட காடு. ஒவ்வொரு ஆண்டும் பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இங்கு அனல் மின் நிலையம் அமைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
பெண்ணை மற்றும் கெடிலம் போன்ற மிகப் பழமையான ஆறுகள் கடலூர் மாநகரின் வளமைக்குச் சான்று. தமிழிலக்கியங்களும், அப்பர், சுந்தரர் போன்ற சமயக் குரவர்களின் இறைப்பாடல்களிலும் இடம் பெறுகின்ற இவ்வாறுகள் தற்போது வளம் குன்றி வருகின்றன. கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பெண்ணை, கெடிலம் ஆறுகளையும் விட்டுவைக்கவில்லை. மேற்காணும் இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னமும் அரசின் காதுகளில் விழவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக கடலூரின் குடிநீர்த் தேவைக்காக பெண்ணையாற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உவர்நீராக மாறிவிட்டது. காரணம், அதிகபட்ச நிலத்தடி நீர் உறிஞ்சுதலின் காரணமாக பெண்ணையாற்றிலிருந்து தேவையான நீரைப் பெற முடியவில்லை. அதே போன்று கெடிலம் ஆற்றின் குறுக்கே, தமிழக முதல்வராயிருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்ட திருவந்திபுரம், திருவதிகை அணைகள் தற்போது பெருமளவு தூர்ந்துவிட்டன. ஆற்றின் இரு மருங்கிலும் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கின்ற காரணத்தால், மேற்காணும் அணைகள் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
தற்போது கடலூரில் தண்ணீர்ச் சிக்கல் அதிகரித்துள்ள நிலையில், முன்னரே கட்டப்பட்டுள்ள மேற்காணும் அணைகள் மூலமாகத் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தூர்ந்து போயிருக்கும் அணைகளில் உள்ள மணலை கடலூர் மக்களின் பயன்பாட்டிற்கு எடுப்பதுடன், அணைகளை ஆழப்படுத்தி தொடர்ந்து தண்ணீரைத் தேக்க முயற்சி செய்வது மிகவும் அவசியம். கெடிலம் ஆறு, கல்வராயன் மலைப்பகுதியில் ஊற்றெடுத்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி உப்பனாற்றில் கலந்து இறுதியாக வங்கக்கடலைச் சென்று சேர்கிறது. நல்ல மழைக்காலங்களில் கெடிலமாற்றில் ஓடும் அதிகபட்ச நீர் பயன்பாடின்றி கடலில் போய் கலக்கிறது. இதற்கொரு தீர்வினைக் கண்டால், கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர், குடிநீர்ப் பற்றாக்குறைக்கும் முடிவு காண இயலும்.
பழமையான மனித நாகரிகத்தைத் தன்னுள்ளே கொண்டு, அவ்வப்போது அதற்குரிய சான்றுகளையும் வெளிக் கொணரும் கடலூர் மாவட்டம், நினைத்துப் பார்க்க முடியாத சூழல் சீரழிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகையான சூழல் கேட்டிற்கு ஆட்பட்டுள்ள கடலூர் மாநகரை, காப்பதென்பது தற்போது புதிதாய் அமைந்துள்ள தமிழக அரசின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். மக்கள் வாழவே தகுதியற்ற நகராக நடுவணரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கடலூர் வளம் கொழிக்கும் நகராக மாற்றப்பட வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் விருப்பம். கடலூரின் பண்டைய வரலாற்றுப் பெருமையை மீட்டெடுத்து, சூழலுக்குப் புறம்பான ஆலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, அங்கு வாழ்கின்ற மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழிகோல முயற்சி செய்வது நடுவண், மாநில அரசுகளின் பொறுப்பாகும். செய்ய முன் வருவார்களா..?
உழவர்கள் வழங்கிய நிலம்
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு கட்டமாக 1018 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலத்தில் மணிலா, முந்திரி, சவுக்கு என நல்ல வருமானம் தருகின்ற பயிர்களே நிறைய விளைந்தன. இதனால் உழவர்கள் பெரும் பயனடைந்தனர். ஆனாலும் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பகுதி உழவர்கள் தங்கள் நிலங்களை தொழிற்பேட்டைக்காக வழங்கினர். இங்கு தொழிற் அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு நிலங்கள் அரசால் வழங்கப்பட்டது. கடலூரின் தொழில் விரிவாக்கத்திற்காக ஏழை உழவர்களால் வழங்கப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பது ஒருபுறமென்றால், வேதித் தொழிற்கூடங்களால் நிகழும் மாசுபாடுகள் மற்றொருபுறம்.
வேதிக்கழிவுகளால் மீன்கள் இறப்பு
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூர் உப்பனாற்றங்கரையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. அதேபோன்று நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, இராசாப்பேட்டை, தம்பனாம்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டோயை, அய்யம்பேட்டை மற்றும் ரெட்டியார்பேட்டை ஆகிய கிராமங்களில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை கொத்துக் கொத்தாய் செத்து கரை ஒதுங்கின. இதற்கு முழு முதற்காரணம் உப்பனாற்றின் கரையில் அமைந்துள்ள சில தொழிற்கூடங்களின் நச்சுக் கழிவுகளே. வேதிக்கழிவுகளால் தாக்குப் பிடிக்கும் மீன்களே கூட தற்போது இறக்கத் தொடங்கியிருப்பது கடலூர் மீனவர்களை பெரும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.
வலிமை பெறும் கெடிலம், பெண்ணையாற்றின் இருபுறக் கரைகள்
கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்ற. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 13.72 கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் பாலத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் இரு கரையோர பகுதிகளையும் 20 கி.மீ., தூரத்திற்கு பலம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 4 மீ., உயரத்திற்கும், மேல் தளம் 5 மீ., அகலத்திற்கும் கரைகள் பலப்படுத்தப்டுகிறது. இப்பணிக்காக கடலூர் அடுத்த விலங்கல்பட்டு, ராமாபுரம், தோட்டப்பட்டு பகுதிகளில் இருந்து செம்மண் லாரிகள் மூலம் கெடிலம் ஆற்று கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொக்லைன் மூலம் சீரமைக்கப்படுகிறது. இப்பணிகள் 2012 ஜனவரி மாதம் முடிகிறது. அதே போன்று 9.73 கோடி ரூபாய் மதிப்பில் மேல்கங்கணாங்குப்பத்தில் இருந்து தாழங்குடா வரை பெண்ணையாற்றில் வலது பக்கத்தில் 2.6 கி.மீ., தூரத்திற்கும், சோனங்குப்பத்தில் இருந்து திருச்சோபுரம் வரை உப்பனாற்றின் இடது பக்கத்தில் 20.5 கி.மீ., தூரத்திற்கும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
- இரா.சிவக்குமார் (
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரு சக்கர வாகன ஓட்டிகளில் பெரும்பாலோர் முகமூடி அணிந்தோ அல்லது கைக்குட்டைகளால் மூக்கை இறுக பொத்திக் கொண்டோ பயணம் செய்வதை தமிழகத்தின் பெரும்பாலான நகர்ப்புறங்களில் மிக இயல்பாகக் காண முடிகிறது. நம்மைச் சுற்றிலும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கும் புகை மாசு, சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி, மனித வாழ்வியலின் இருப்பிற்கே உலை வைத்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மாசுபாடற்ற தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாமல், நகர்ப்புறவாசிகள் படுகின்ற பாடு சொல்லி முடிவதில்லை. இதனால்தான் தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்டால், குடும்பத்துடன் சிலர் மலைப்பகுதிகளுக்கோ அல்லது கிராமப்புறங்களுக்கோ படையெடுத்து சென்று விடுகின்றனர். தற்போதைய நகர்ப்புற வாழ்வியல், சூழல் சீர்கேட்டிற்கு பொதுமக்களை விரைந்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இந்தியக் கிராமங்களில் அடுப்பெரித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழைத் தாய்மார்களை, ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் தொடர்பான நோய்கள் தாக்குவதால், அதிலிருந்து மீட்டெடுக்க சமையல் எரிவாயுத் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பரவலாக அறிமுகப்படுத்தி புரட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், வாகன மற்றும் தொழிற்சாலை புகை மாசு காரணமாக, தமிழக நகர்ப்புற மக்களின் கவலை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.
வான்வெளியிலிருந்து புறப்பட்டு பூமியை வந்தடையும் எண்ணற்ற நுண் துகள்களோடு, மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைத் தூசுகளும், பல்வேறு வேதிப்பொருட்களால் ஆன புகைக் கரிமங்களும் மனிதர்களை மட்டுமன்றி, இம்மண்ணில் வாழும் எண்ணற்ற உயிர்களையும் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனால் தான் கடந்த 2010ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இதற்குரிய உறுதிமொழியை உறுப்பு நாடுகள் அனைத்தும் எடுத்துக் கொண்டன. 194 நாடுகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் இந்தியா கரிம புகை மாசு வெளியேற்றத்தை 2020ஆம் ஆண்டிற்குள் 20லிருந்து 25 விழுக்காடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அய்.நா.விடம் திட்ட அறிக்கையை அளித்தது. அதே போன்று அமெரிக்கா 17 விழுக்காடும், ஐரோப்பிய ஒன்றியம் 20 விழுக்காடும் குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிக்கை அளித்திருந்தன. ஆனாலும் நம்மைச் சுற்றி தொடர்ந்து புகை மாசு அதிகரிப்பதற்கான சூழல்களே மிகுந்து காணப்படுகின்றன.
புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலமே இந்த மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. ஆக்சிஜன் என்றழைக்கப்படும் உயிர்வளி இங்குதான் நிறைந்துள்ளது. சூரியனிலிருந்து வரும் அதிக வெப்பத்தை குளிர்விப்பதுடன், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சையும் தனக்குள்ளே வாங்கிக் கொண்டு புவியின் உயிர்ச்சூழலை தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. பல்வேறு வாயுக்களின் அடர்த்தியாகத் திகழும் இந்தப் பரப்பைத்தான் 'பசுங்குடில்' என்றழைக்கிறோம். வரைமுறையின்றி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழல் மாசுபாடுகளால், உயிர்களைப் பாதுகாக்கும் பசுங்குடிலில் தற்போது சேதாரம் ஏற்பட்டுள்ளது. முன்னெப்போதையும் விட பூமியில் வெப்ப அதிகரிப்பிற்கும், அதன் தொடர்ச்சியான பேரிடர்களுக்கும் முக்கியக் காரணமாய்த் திகழ்வது பசுங்குடிலில் ஏற்பட்டுள்ள வாயுக்களின் அதிகரிப்பே. இதனைக் குறைப்பற்குரிய ஆய்வுகளை மேற்கொள்ளும் அதே வேளையில், தற்போதுள்ள நிலையிலேயே அதனைப் பேணுவதற்கும் உலக நாடுகள் அனைத்தும் முன் வர வேண்டும். இதில் இந்தியாவிற்கு கூடுதல் பொறுப்புண்டு. சீனாவிற்கு அடுத்தபடியாக மிகப் பெரிய மக்கள் சக்தியைக் கொண்டுள்ள நாடு இந்தியா. தன் குடிமக்களின் நல வாழ்வில் தனக்கிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தியாக வேண்டிய நிலையில் தற்போது இந்திய நாடு உள்ளது.
பொதுவாக வாகனங்கள் வெளியிடும் புகையைச் சுவாசிக்கும் ஒருவர், இருபது சிகரெட்டுகளைப் புகைப்பதற்குச் சமமாகிறார். ஹைட்ரோகார்பன்கள், கார்பன் மோனாக்சைட், கார்பன் டையாக்சைட், ஈயம், பென்சீன் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சுவாசிப்பதால் பல்வேறு நுரையீரல் கோளாறுகளும், சுவாசச் சிக்கல்களும் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். குருதிப் புற்றுநோய், நரம்புத் தளர்ச்சி, செல்களில் சிதைவு, இதயம் தொடர்பான நோய்கள், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் நோய்கள் என பல்வேறு விளைவுகளுக்கும் ஆட்பட வேண்டியுள்ளது. புதை வடிவ எரிபொருட்களில் மிக ஆபத்தானது டீசல். இதனை எரிப்பதால் வெளியாகும் புகையில் உயிர்க்காற்றை நாசம் செய்யும் கார்பன் மோனாக்சைட் அதிகளவு உள்ளது. தற்போது சென்னையில் மட்டும் 11 இலட்சம் மோட்டார் வாகனங்கள் இயங்குகின்றன. அப்படியென்றால், வெளியாகும் கார்பனின் அளவைக் கணக்கிட்டுப் பாருங்கள். இப்போது புரியும் சென்னையில் ஏன் வெப்பம் அனலாகத் தகிக்கிறதென்று?
அதேபோன்று கடந்த 1951ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்த மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 30 இலட்சம். ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டு 12 கோடியாக உயர்ந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி வேகத்தோடு கணக்கிட்டுப் பார்த்தால், தற்போது 20 கோடிக்கும் மேலாக அதிகரித்திருக்கக்கூடும். ஒட்டு மொத்த இந்தியாவோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மும்பை, சென்னையில் மட்டும் 32 விழுக்காடு வாகனங்கள் ஒடுகின்றன. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு சூலை மாதம் வரை 1.26 கோடி வாகனங்கள் ஒடிக் கொண்டிருப்பதாக மோட்டார் வாகனங்கள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது. இது இந்திய அளவில் இரண்டாவது இடம். தமிழகத்தில் ஓடும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 24.34 இலட்சம். இது இந்திய அளவில் முதலிடம். (நன்றி தினகரன் 19.10.2010). சென்னையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கு ஈடாக வாகனத்திலிருந்து வெளியேற்றப்படும் புகையின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளது.
சென்னைப் பெருநகரத்திற்குள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவற்றை நிறுத்திப் பராமரிப்பதற்கான இடம் குறித்த மாநகராட்சியின் 'தேடல்' கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தால் கண்டிப்பிற்கு ஆளானது. சூழலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பூங்காவை அப்படியே மாற்றி வாகன நிறுத்துமிடமாக உருவாக்குவதற்கு பெரும் முயற்சி செய்த சென்னை மாநகராட்சியை உயர்நீதிமன்றம் கடுமையாய்க் கண்டித்துள்ளது. சுற்றுச்சூழலில் அக்கறையே இல்லாது, தனது வருமானத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கும் சென்னை மாநகராட்சியைப் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் இந்திய சனநாயக மாண்பின் அழகிற்கு சிறப்பான சான்றாகும். வணிகத்தையும், அதனால் பெறுகின்ற வருமானத்தையும் கணக்கிற் கொண்டு அரசு அமைப்புகளே சூழலுக்கு எதிராக இயங்குவது உலகில் வேறு எங்குமே காணாத ஒன்றாகும். பசுமைக் கட்டடங்கள், பசுமைக் கட்சிகள், பசுமை அமைப்புகள், பசுமைத் தொழிற்சாலைகள் என உலகெங்கும் பசுமை குறித்தும், சூழல் மேம்பாடு குறித்தும் விரிவாக ஆலோசனை செய்து, செயலில் இறங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா அதற்கு எதிர் திசையில் பயணம் செய்வது, உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டிற்கு அழகாகுமா?
தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை மற்றும கழிவு நீரால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்ட 88 நகரங்களில் வேலூர் மாவட்டம் 8ஆம் இடத்திலும், கடலூர், மணலி, கோவை, திருப்பூர், மேட்டூர், ஈரோடு ஆகியவை முறையே 16, 20, 34, 51, 56, 78ஆவது இடங்களில் உள்ளன. இது நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தயாரிக்கப்பட்ட புள்ளி விபரமாகும். தொழிற்சாலையிலிருந்து வெளியாகும் மாசினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இப்புள்ளிவிபரத்திலேயே தமிழகத்தின் ஏழு மாவட்டங்கள் இடம் பெறுகின்றன எனும்போது, வாகனங்கள் வெளியேற்றுகின்ற புகை மாசுபாடுகளால் பாதிக்கப்பட்ட தமிழக நகரங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாகக்கூடும். கடுமையான நச்சுப் புகை மாசுபாட்டின் காரணமாகத்தான் போபால் சம்பவத்தில் ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியை எதிர்கொள்ள நேரிட்டது. அதேபோன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப்புகையாலும் பல நூற்றுக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலுள்ள தொழிற்பேட்டைகளில் இது போன்ற நச்சு வாயுக்களை வெளியேற்றும் ஆபத்தான தொழிற்சாலைகள் தற்போதும் இயங்கிக் கொண்டுதானிருக்கின்றன.
1952ம் ஆண்டு இலண்டன் நகரில் ஏற்பட்ட புகை மண்டலம் காரணமாக 6 நாட்களில் 4000 முதல் 8000 பேர் வரை இறந்துள்ளனர். பழைய சோவியத் யூனியனில் 1979ம் ஆண்டு உயிர் வேதியல் சோதனைக் கூடத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் பல நூறு மக்கள் இறந்தனர். இதுபோன்று உலகம் முழுவதும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகையால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து கொண்டிருக்கின்றனர் அல்லது தொடர்ந்து பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதன் விளைவாக உலகின் பல்வேறு இடங்களில் அமில மழை பொழிவதற்கான சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது. தொல்லுயிர் எரிபொருட்களான நிலக்கரி, போன்றவை எரிதல், ஊர்திகளினின்று வெளிப்படும் கழிவுப்புகை, காடுகள் மற்றும் புல்வெளிகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் புகை, வேதி தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வாயுக்கள் போன்றவற்றால் அமில மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. இதனால் மண்ணின் அமிலத்தன்மை அதிகரிக்கிறது. தாவரங்கள் உயிர்வாழ முடிவதில்லை, மனிதர்களையும், நீர் வாழினங்களையும் அச்சுறுத்துகின்றது. காடுகள், பயிர்களை அழிக்கிறது, விவசாய உற்பத்தித் திறன் குறைகிறது, கட்டிடங்கள், நினைவு சின்னங்கள், சிலைகள், மேம்பாலங்கள், வேலிகள் மற்றும் இரயில் தண்டவாளங்கள் அரிக்கப்படுகின்றன. அமில மழை பொழிவதற்கான அனைத்துக் காரணிகளும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவில் தடையின்றித் தென்படுகின்றன என்பதுதான் வேதனைக்குரியது.
கடந்த ஏப்ரல் மாதம் திருவொற்றியூர் கத்திவாக்கத்தில் இயங்கி வந்த உரம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் வெளியேறிய புகையால் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டது அண்மைச் சான்று. இதனால், அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. சுவாச கோளாறு, ஆஸ்துமா போன்ற நோய்களால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளுக்கு தோல் நோய்கள் ஏற்படுகிறது. சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது போன்ற பல்வேறு தொழிற்சாலைகளும், பேட்டரி உள்ளிட்ட வேதிப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகளும் தமிழகமெங்கும் நிறைந்து காணப்படுகின்றன. அவ்வப்போது இத்தொழிற்கூடங்களிலிருந்து வெளியாகும் புகையால் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதும், அதனால் ஆங்காங்கே போராட்டம் நடைபெறுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
மாசுக் காற்றால் வருடத்திற்கு 2.4 மில்லியன் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1.5 மில்லியன் மக்கள் தூசுகளால் இறந்துள்ளனர். இது உலகில் வாகன விபத்திற்கு அடுத்த இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் நிகழ்ந்து வரும் தொழில் நுட்பப் புரட்சி வருமாண்டுகளில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து திட்டமிடுவது மிகவும் அவசியம். இந்தியா போன்ற வளரும் நாடுகள் காற்று மாசு விசயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதற்குரிய செயல்பாடுகளை இடையறாது செய்வதுடன், அரசு, தனியார், பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து பசுமைச் சூழலுக்கு உரிய நடவடிக்கைகளைத் தொடங்குவது காலத்தின் கட்டாயம்.
காற்றில் உருவாக்கப்படும் மாசுக்கேட்டை எவ்வாறு கணக்கிடுவது?
பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு ஓரிடத்தில் சேர்கிறது என்பதை நாம் கணிக்கலாம்.
அதைத்தவிர, எவ்வளவு மாசு இருக்கிறது என்பதையும் அளவிடலாம். இப்படி அளவிட்ட மாசை நன்கு ஆராய்ந்தால், அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கலாம். அதாவது, ”இந்த மாசில் சுமார் 25% வாகனங்களில் இருந்தும், 30% புழுதியில் இருந்தும், 20% தொழிற்சாலைகளில் இருந்தும் வருகின்றன. மீதி எங்கிருந்து என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை” என்ற அளவில் கண்டுபிடிக்கலாம். இது எப்படி என்பதை சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.
எடுத்துக்காட்டு 1: ஓர் இடத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் தூசியில் 25% சோடியமும், 50% இரும்பும் , மீதி 25% மற்ற பொருள்களும் இருக்கலாம். தெருவில் இருக்கும் புழுதியில் 25% அலுமினியமும், 10% இரும்பும் (சிலிக்கன் போல மற்றவை மீதி 65% என்றும்) இருக்கலாம். இங்கு இதர தனிமங்கள் என்பதில் சோடியம், அலுமினியம், இரும்பு ஆகியவை இல்லாமல் மற்ற பொருள்கள் என்று புரிந்து கொள்வோம்.
இப்போது, நாம் அந்த பகுதியில் சென்று அங்குள்ள காற்றில் இருக்கும் தூசிகளை சேகரிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கிராம் தூசி சேர்ந்ததும் அதை ஆராய்ச்சிக்கு அனுப்பி, அதில் இருக்கும் சோடியம், அலுமினியம் மற்றும் இரும்பின் அளவைக் கண்டுபிடித்து விடுகிறோம். இதில் ஒரு கிராமில், அலுமினியம் 0.25 கிராம், இரும்பு 0.1 கிராம், இதர பொருள்கள் 0.65 கிராம் என்று வந்தால், தூசி முழுவதும் புழுதிதான் என்று சொல்ல முடியும். ஒருவேளை தொழிற்சாலை அன்று வேலை செய்யாமல் இருக்கலாம். அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையில் தூசிகள் வடிகட்டப்பட்டு இருக்கலாம். மொத்தத்தில், தொழிற்சாலையால் காற்றில் தூசிகள் சேர்வதில்லை என்று சொல்ல முடியும்.
இன்னொரு நாள் ஒரு கிராம் தூசியில் ஆராய்ச்சி செய்தால், அதில் 0.5 கிராம் இரும்பு, 0.25 கிராம் சோடியம், இதர பொருள்கள் 0.25 கிராம் என்று வந்தால், அங்கு தூசி முழுவதும் தொழிற்சாலையில் இருந்துதான் வந்துள்ளது என்று சொல்லலாம். ஒருவேளை போக்குவரத்து குறைவாக இருப்பதால், காற்று வேகமாக அடிக்காததால், புழுதியானது காற்றில் கலக்காமல் இருக்கலாம். மொத்தத்தில் தொழிற்சாலைதான் காற்றில் மாசு சேர்க்கிறது என்று சொல்லலாம்.
ஒரு பேச்சுக்கு, 0.4 கிராம் தொழிற்சாலை தூசியும், 0.6 கிராம் புழுதியும் சேர்ந்து நமது Sample வருவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது, சோடியத்தின் அளவு 0.4 * 0.25 = 0.1 கிராம் ஆகும். இரும்பின் அள்வு: தொழிற்சாலை தூசியில் இருந்து, 0.4 * 0.5 = 0.2 கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.1 = 0.06 கிராம். மொத்தத்தில், 0.2 + 0.06 = 0.26 கிராம். அலுமினியத்தின் அளவு: 0.6 * 0.25 = 0.15 கிராம். இதர பொருள்கள்: தொழிற்சாலையில் இருந்து, 0.4 * 0.25 = 0.2கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.65 = 0.39 கிராம், மொத்தம் 0.2 + 0.39 = 0.59 கிராம்.
ஆக மொத்தம் தூசியில், 0.1 கிராம் சோடியம், 0. 26 கிராம் இரும்பு, 015 கிராம் அலுமினியம், இதர பொருள்கள் 0.59 கிராம் என்று இருக்கும். நமக்கு இந்த தூசியில் தொழிற்சாலையின் பங்களிப்பு எவ்வளவு, புழுதியின் பங்களிப்பு எவ்வளவு என்று கணிக்க முடியுமா? முடியும். உதாரணமாக, அலுமினியம், தொழிற்சாலை தூசியில் இருந்து வராது. எனவே, 0.15 கிராம் அலுமினியம், புழுதியில் இருந்துதான் வரும். ஒரு கிராம் புழுதியில் இருந்து 0.25 கிராம் அலுமினியம் வரும். எனவே, 0.15 கிராம் அலுமினியம் இருக்கிறது என்றால், 0.6 கிராம் புழுதியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.
அதைப்போலவே, சோடியம், தொழிற்சாலை தூசியில் இருந்துதான் வரும். புழுதியில் இருந்து வர முடியாது. அதையும் கணக்கிட்டால், 0.4 கிராம் தொழிற்சாலை தூசியாக இருக்கும் என்று கணிக்கலாம். இந்த எடுத்துக்காட்டில் சுலபமாக சொன்னாலும், பல விதமான தனிமங்களை ஆராய்வதன் மூலம், ஓரளவு சரியாக எந்த இடத்திலிருந்து தூசி எவ்வளவு வருகின்றது என்பதை கணிக்க முடியும். இன்னொருநாள் ஆராய்ச்சி செய்தால் ஒரு கிராம் தூசியில் சோடியம் 0.5 கிராம் வருகிறது. இரும்பு சுத்தமாக கிடையாது. அலுமினியமும் இல்லை. இப்பொழுது என்ன முடிவுக்கு வர முடியும்? ஒன்று நாம் செய்த ஆராய்ச்சி தவறு. சோடியம் இருக்கும் பொழுது இரும்பும் இருக்க வேண்டும். இரும்பு கணக்கிடும்பொழுது, ஆராய்ச்சியில் தவறு நடந்து இப்படி வந்திருக்கலாம். அல்லது சோடியம் கணக்கில் தவறு இருக்கலாம். இரண்டாவது, நாம் நினைத்தது, இந்த பகுதியில் தொழிற்சாலை மற்றும் புழுதி மட்டுமே தூசிக்கு காரணம் என்று. ஆனால், வேறு வகை தூசிகளும் இந்த பகுதியில் சேர்ந்து இருக்கலாம். அந்த தூசிகளில் சோடியம் இருந்து, இரும்பு இல்லாவிட்டால், ஆராய்ச்சி சரியாக இருக்கிறது, நம் நினைப்புதான் தவறு, நாம் மறுபடி அந்த பகுதிக்கு சென்று, வேறு என்ன வகையில் தூசிகள் சேரலாம் என்று அறிய வேண்டும்.
மேற்கண்ட கணக்கிற்கு Chemical Mass Balance அல்லது சுருக்கமாக சி.எம்.பி. (CMB) என்று பெயர். இது reverse calculation மூலம் ஒவ்வொரு மாசு மூலமும் (pollution source) எவ்வளவு பங்களிக்கிறது என கணக்கிட உதவும். (நன்றி: http://fuelcellintamil.blogspot.com/2008/06/7.html)
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்