கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இரா.சிவக்குமார்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்
வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
நாடு மிகப் பெரும் தண்ணீர்ச் சிக்கலை எதிர் கொள்ளப் போகிறது. இதுவரை காணாத அவலத்தை தமிழகமும் சந்திக்கவிருக்கிறது. கோடை காலம் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கவிருக்கும் நிலையில், தமிழகத்தைச் சூழும் தண்ணீர் ஆபத்து பல்வேறு விதமான சமூகப் பிரச்சனைகளுக்கு வித்திடப் போகும் ஆபத்தும் நெருங்கி வருகிறது. நீரின் அவசியத்தை உணர்ந்து அதனை பல்வேறு சடங்குகளிலும், பண்பாட்டிலும் முக்கியமான ஒன்றாக ஏற்றிப் போற்றிய தமிழர் மரபு இன்று பெரும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. 'நீரின்றமையாது உலகு' என்று பாடிய வள்ளுவப் பெருந்தகையின் வழியைப் பின்பற்றாது விலகிச் சென்று வாழ்கின்ற தமிழ்ப்பெருங்குடி இன்றைக்கு நீர்நிலைகளையெல்லாம் இழந்து கடுமையான வாழ்வியல் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. காலங்காலமாய் தமிழ் நிலத்திற்குள் ஓடி, இந்த மண்ணை வளப்படுத்திய ஆறுகள் எல்லாம் அண்டை மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. எஞ்சிய நீரை மட்டுமே தமிழகத்திற்குப் பிச்சையிடும் 'திராவிட' இனங்களின் சகோதரப் பாசம் வேறு புல்லரிக்கச் செய்கிறது. தமிழகத்திற்கு உரிமையான நீரை நடுவணரசு அண்டை மாநிலங்களிலிருந்து பெற்றுத் தரும் என்று நம்புவதற்கில்லை. தமிழகத்தின் பக்கமிருக்கும் நியாயத்தை ஓரளவேனும் உணர்ந்து பொறுப்புடன் நீதியை வழங்க நீதிமன்றங்கள் முயற்சி செய்தாலும், அதனை அந்த மாநிலங்கள் சற்றும் மதிக்காத போக்கே நிலவுகிறது. இந்நிலையில் தனக்கான தண்ணீர்த் தேவைக்கு தனது முயற்சி ஒன்றையே முழுவதும் நம்பத் தலைப்பட்டுள்ளான் தமிழன்.
'உலக நாடுகள் பலவற்றில் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அத்தகைய நாடுகளில், இந்தியாவும் ஒன்று. எனவே, தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க, மாற்று வழிகள் குறித்து இப்போதே முடிவெடுக்க வேண்டும். குறிப்பாக, கடல் நீரை குடிநீராக மாற்றுவது, மழை நீரை, குடிநீராகப் பயன்படுத்துவது, தண்ணீர் எங்கே இருக்கிறது என்பதை ஆராய்வது, இருக்கும் நீரை சிக்கனமாக செலவிடுவது போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இது குறித்த நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்ற வேண்டும்' என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், திட்ட கமிஷனின் தற்போதைய உறுப்பினருமான, கே.கஸ்தூரிரங்கன் கூறியுள்ளார். இந்திய நாட்டின் தண்ணீர் எதிர்காலம் குறித்து விடப்பட்ட எச்சரிக்கையாக இருந்தாலும், எழுத்து மாறாமல் இது தமிழகத்திற்கும் அப்படியே பொருந்தும்.
தமிழகத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. பெரும்பாலான ஆண்டுகளில் தமிழகம் இச்சராசரியை எட்டிப்பிடிப்பதே மிகவும் அதிசயம். கடந்தாண்டு, சராசரியில் பாதிக்கும் குறைவான அளவே மழை பெய்துள்ள நிலையில், அணைகளின் நீர் இருப்பு கவலைக்குரிய வகையில் குறைந்து விட்டது. புதர்மண்டி தூர்ந்து கிடக்கும் நீராதாரங்களுக்கு நடுவில், நீரைத் தேக்கி வைப்பதற்காக இருந்த சில ஆயிரக்கணக்கான நீர்நிலைகளும் தற்போது நீரின்றி முற்றுமாக வறண்டு கிடக்கின்றன. சங்கிலித் தொடராய் நீர்நிலைகளை இணைத்த கால்வாய்களும் வன்கைப்பற்றலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. மழையின்மையின் பக்க விளைவுகளாய் விளைச்சலின்மை, விலைவாசி உயர்வு, உணவுப் பற்றாக்குறை, இடப்பெயர்வு, நகர்ப்புற மக்கள் தொகைப் பெருக்கம், நிலத்தடிநீர்ச்சுரண்டல், ஏக போக தண்ணீர் வணிகம், சுற்றுச்சூழல் கேடு, இறையாண்மைக்குக் குந்தகம் ஆகிய தொடர் சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் வருமாண்டில் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.
தமிழகத்தில் 365 நாட்களில் சராசரியாக 35 நாட்கள் மட்டுமே 30 மணித்துளிகளில் 13 மி.ஹெக்டேரில் 923 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இது 120000 கனகோடி மீட்டராகும். இதில் தென்மேற்கு பருவக்காற்று மூலம் 32 விழுக்காடு மழையும் வடகிழக்கு பருவக்காற்று மூலம் 48 விழுக்காடு மழையும் கிடைக்கிறது. மீதி கோடை மழையாகப் பெய்வதன் மூலம் கிடைக்கிறது. இது இந்தியாவில் கிடைக்கும் நீரில் 3 விழுக்காடே ஆகும். கங்கையில் ஒரு ஆண்டுக்கு 5 நாள் ஓடும் வெள்ள நீரின் அளவு தமிழகத்தின் ஓர் ஆண்டு தேவையாகும். தமிழ்நாட்டில் நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 800 கன மீட்டர் தண்ணீர் கிடைக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டபடி நபர் ஒருவருக்கு கிடைக்கும் அளவு 1000 கன மீட்டருக்குக் குறைந்தால், அது நீர் தட்டுப்பாடான பகுதி என்பதை இங்கு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். இந்த கணக்குப்படி இந்தியா 2025ல் நீர் தட்டுப்பாடான பகுதியாக மாறும் என்றால் தமிழ்நாடு இப்போதே மிகவும் தண்ணீர் தட்டுப்பாடான மாநிலமாக மாறும் அபாயம் உள்ளது. இன்னும் 20லிருந்து 25 ஆண்டுக்குள் இது மிகவும் மோசமடைந்து நீர் கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது (நன்றி: திரு.சேதுராமலிங்கம், கட்டுரையாளர்)
உலகத்தில் நிலவும் தண்ணீர்ப்பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அய்.நா.அவை, 'வாழ்விற்கான தண்ணீர்' எனும் முழக்கத்தை முன் வைத்து கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை கூடும் உலக தண்ணீர்ப் பேரவையும் கடந்தாண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டில் கூடியது. நீரியல் சார்ந்து பணியாற்றும் உலக வல்லுநர்கள் 800 பேருடன், உலக நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் 140 பேரும் இதில் பங்கேற்று கலந்துரையாடினர். இதன்போது அய்.நா.அவை வெளியிட்ட அறிக்கையில், 'உலகில் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விசயமாக இருக்கும். 2050ம் ஆண்டளவில் உலகின் மக்கள் தொகை 900 கோடியாக உயரும். எனவே உணவுப் பொருள்களின் தேவை, கழிவறை வசதிகளின் தேவை அதிகரிக்கும். இதனால் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கும். தற்போது 250 கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை. அத்துடன், பத்தில் ஒருவருக்கு நல்ல குடிநீருக்கான வாய்ப்பும் கிடையாது. உலகில் ஏழு நாடுகளுக்கு ஒரு நாடு வீதம், தனது நாட்டின் தண்ணீர்த் தேவையில் 50 விழுக்காட்டுக்கு அண்டை நாட்டைச் சார்ந்துள்ளன. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு வெளியிட்ட அறிக்கையின்படி, அந்நாட்டில் ஒவ்வொருவரும் ஒரு நாளில் 4,200 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். இதில் 82 விழுக்காட்டுத் தண்ணீர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் சுவிட்சர்லாந்தில்தான் தண்ணீர் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், உலகில் நிலத்தடி நீர்மட்டமும் கடந்த 50 ஆண்டுகளில் மும்மடங்கு வேகத்தில் குறைந்துள்ளது' என எச்சரித்துள்ளது.
இனி வரும் ஆண்டுகளில் தூய்மையான குடிநீர் கிடைப்பதும் கூட அரிதிலும் அரிதான விசயமாகும் ஆபத்தும் நெருங்கி வருகிறது. தூய்மையான தண்ணீர் என்பதை மனிதனின் அடிப்படை உரிமையாக அய்.நா. அவை அறிவித்திருந்தாலும், உலக நடப்பு அதற்கு மாறாகவே உள்ளது. ஜெர்மன் நாட்டின் தூதுவர் விட்டிங், 'ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் 2 மில்லியன் மக்கள் இறக்க நேரிடுகிறது. அதில் பெரும்பாலானோர் குழந்தைகளாக உள்ளனர். உலக அளவில் வாழும் 884 மில்லியன் மக்கள் நல்ல குடிநீரைப் பெறும் நிலையில் உள்ளனர். சுகாதாரக்கேடுகளால் 2.6 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்' என்கிறார். உலகிலுள்ள மொத்த நீர்வளமான 130 கோடி கனமீட்டரில் 97 விழுக்காடு, உவர் நீர். வடக்கு மற்றும் தெற்கு துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகள் இரண்டு விழுக்காடாக உள்ளன. மீதியுள்ள ஒரு விழுக்காட்டு நீரைத்தான் மனிதர்கள் உட்பட உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் பயன்படுத்த வேண்டும். கடந்த 1998ஆம் ஆண்டு கடுமையான நீர்ப்பஞ்சத்தை எதிர்கொண்ட நாடுகள் 28. இந்த எண்ணிக்கை வருகின்ற 2050இல் 56ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு வரை போதிய அளவு நீரில்லாத நாடுகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 131 மில்லியனிலிருந்து 817 மில்லியனாக அதிகரிக்கும் என புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. விரைவில் இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேரக்கூடும்.
தண்ணீர் குறித்த அச்சம் உலகளவில் கடுமையாக இருக்கும் சூழலில், இந்தியாவில் வாழ்கின்ற ஒவ்வொரு தனிநபருக்கும் கிடைக்கும் சராசரி நீரின் அளவு சற்றேறக்குறைய இரண்டாயிரம் கன மீட்டர். கிடைக்கும் மொத்த நீரிலிருந்து மக்கள் தொகையால் வகுத்தால் அதுதான் தனிநபரின் சராசரி. தமிழ்நாட்டையும் கணக்கிலெடுத்துக் கொண்டு பார்த்தால், சராசரியாக வெறும் 650 கனமீட்டர் நீரே கிடைக்கிறது. நீர்த்தட்டுப்பாடுள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் மிக முக்கிய ஒன்றாகும். அதனால்தான் இங்கு தண்ணீருக்கான மோதல்களும், சண்டைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. காவிரியிலிருந்து முல்லைப் பெரியாறு வரை போராடிப் போராடியே தமிழகம் தனக்கான தண்ணீர் உரிமையை நிலைநாட்ட வேண்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திரா 4 ஆயிரம் டி.எம்.சி, கர்நாடகம் 2 ஆயிரம் டி.எம்.சி, கேரளம் ஆயிரம் டி.எம்.சி தண்ணீரை குடிமைப் பயன்பாட்டிற்கன்றி கடலில் கலக்கின்றன.
குடிநீருக்கே மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், வேளாண்மை குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. நெல் சாகுபடிக்குத் தேவையான உயிர்நீர் இன்மையால், சரக்குந்துகளில் தண்ணீர் எடுத்துச் சென்று, கருகும் பயிர்களைக் காப்பாற்ற உழவர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் இப்போது நாளேடுகளில் மிகச் சாதாரணமாக நிழற்படத்துடன் செய்திகள் வெளியாகின்றன. தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 130 லட்சம் ஹெக்டேர்கள். இதில் பாதியில் அதாவது ஏறக்குறைய 65 லட்சம் ஹெக்டேர்களில் விவசாயம் நடைபெறுகிறது. அதில் பாதி மானாவாரி விவசாயம். மிச்சம் பாதி பாசன விவசாயம். பாசனத்திற்கு வேண்டிய நீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது. ஆற்றுப்பாசனம், குளத்துப்பாசனம், கிணற்றுப்பாசனம் ஆகியவையே அந்த மூன்று வகைகள். மூன்றும் சம பங்கு பரப்பு நிலங்களுக்கு நீர் வழங்குகின்றன. இப்படியாக கிணற்றுப்பாசனம் மொத்தம் 12 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம் வழங்குகின்றது. தற்போதைய நிலவரப்படி மொத்த கிணறுகளின் எண்ணிக்கை 18 லட்சம். அதாவது ஒரு கிணறு 2/3 ஹெக்டேர் நிலத்தைத்தான் பாசனம் செய்கிறது. ஏறக்குறைய ஒண்ணேமுக்கால் ஏக்கர். இது ஒரு சராசரி கணக்கு. சில கிணறுகள் அதிக நிலத்தைப் பாசனம் செய்யலாம். அதே மாதிரி சில கிணறுகள் குறைவான நிலத்தைப் பாசனம் செய்யலாம். கடந்த 20 ஆண்டுகளில் கிணறுகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே தவிர, அவற்றால் பாசனம் பெறும் நிலத்தின் அளவு கூடவில்லை. இதே நிலை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது (நன்றி கட்டுரை: அருகி வரும் நிலத்தடி நீரால் சந்திக்கவிருக்கும் சிக்கல்களும் அறிவியல் தீர்வும் - பழனியப்பன் கந்தசாமி)
தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் சற்றே குறைவான நீர்நிலைகள் உள்ளன. இதில் 26 ஆயிரத்து 300 நீர்நிலைகள் 100 ஏக்கருக்கும் குறைவான பாசன வசதியைக் கொண்டவை. பதின்மூன்றாயிரத்து 702 கண்மாய்கள், குளங்கள் 100 ஏக்கருக்கும் அதிகமான பாசன வசதியைக் கொண்டவையாகும். முன்னது ஊராட்சி அமைப்புகளின் கண்காணிப்பிலும், பின்னது பொதுப்பணித்துறையின் கண்காணிப்பின் கீழும் உள்ளன. பெரும்பாலான நீராதாரங்கள் ஏதேனும் ஒரு வகையில் வன்கைப்பற்றலுக்கு ஆளாகியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் நீர்நிலை வன்கைப்பற்றலைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிமான்கள் எம்.யூசுப் இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அளித்த தீர்ப்பு சூழல் வரலாற்றில் மகத்தான ஒன்றாகும். வன்கைப்பற்றலுக்கு ஆளாகியுள்ள நீர்நிலைகளைக் கணக்கெடுத்து அதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதுடன் அந்நீர்நிலைகள் அனைத்தும் பழைய நிலைக்கே கொண்டு வரப்பட வேண்டும் என்றும் இதனைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வது அவசியம் என்றும் தீர்ப்பளித்திருந்தனர். நமது நீர்நிலைகளைக் காக்கும்பொருட்டு அந்நீதிமான்கள் அளித்த தீர்ப்பு இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை தொடர்புள்ள அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நேரமிது.
சோழர் காலத்தில் உருவாக்கப் பெற்ற வீரநாராயணம் (இன்றைய வீராணம்) ஏரி தமிழகத்தின் புகழ்பெற்ற நீர்நிலைகளுள் ஒன்று. 1923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அளவீட்டின்படி இவ்வேரியின் கொள்ளளவு 41 மில்லியன் கனமீட்டர். 1991ஆம் ஆண்டு 28 மில்லியன் கனமீட்டராகக் குறைந்து போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்றுப் பெருமை மிக்க வீரநாராயணம் ஏரிக்கே இந்நிலையென்றால், தமிழகத்திலுள்ள பிற கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்து சொல்லத் தேவையில்லை. தற்போது பொதுப்பணித்துறையால் கணக்கெடுக்கப்பட்டுள்ள 39,202 கண்மாய்/ஏரி/குளங்களின் மொத்தக் கொள்ளளவு 390 ஆயிரம் மில்லியன் கன அடி. நீர்த்தேக்கங்களின் கொள்ளளவோ 248 ஆயிரம் மில்லியன் கன அடி. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நீர்த்தேக்கங்களைக் காட்டிலும் நீர்நிலைகளின் பராமரிப்பு தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் அவசியம் என்பதுதான். கடந்த இருபது ஆண்டுகளில் சில நூறு எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் நீர்நிலைகளை பழுது பார்க்க முடிந்துள்ளதென்பதை அறியும்போது, நீர்நிலைப் பராமரிப்பில் நாம் காட்ட வேண்டிய அக்கறை இன்னும் கூடுதலாக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை. இனி வருங்காலங்களில் புதிதாக நீர்நிலைகளை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால் எஞ்சியிருக்கின்ற நீர்நிலைகளைக் காக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும் உறுதியான கொள்கை முடிவுகளை நடுவண்-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
உறுதியற்ற விலை, போதுமான மழையின்மை, கூலியாட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய வேளாண்மை கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக தரிசாய்க் கிடக்கும் தங்கள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு விவசாயக் குடும்பங்கள் இடம் பெயர்கின்றன. விற்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் வீட்டடி மனைகளாக மாற்றம் செய்யப்பட்டு, அவ்விடத்திலெல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகளும், மாபெரும் மாளிகைகளும் முளைத்து வருகின்றன. ஆண்டொன்றுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிலங்கள் வீட்டடி மனைகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. அரசும் தனது பல்வேறு தேவைகளுக்காக நிலங்களைத் தொடர்ந்து கையகப்படுத்தி வரும் நிலையில், 2010ஆம் ஆண்டு நிலவரப்படி நாடு முழுவதும் 580 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 150 பொருளாதார மண்டலங்களுக்கு உடனடி அனுமதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் இடங்களில் வேளாண் நிலங்களும் உட்படும். இவற்றில் எத்தனை நீர்நிலைகளும், விளைநிலங்களும் உட்படப்போகின்றனவோ தெரியவில்லை.
வரைமுறையின்றி உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவு வருமாண்டுகளில் மிக வேகமாகக் கீழே செல்லும் நிலை ஏற்படும். தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் அளித்துள்ள புள்ளிவிபரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் ஐதராபாத் நகரமும், சென்னையும் வறண்ட நகரங்களாகி வருகின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த நகரங்களின் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்குப் போய்விடும். நிலத்தடி நீர் வெகுவாக உறிஞ்சப்படுவதால் சாக்கடை கழிவுகள் நிலத்தடிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சென்னையில் உள்ள நிலத்தடி நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல என்றும் இதனால் நோய் பரப்பும் தன்மை அதிகரித்துள்ளது என்றும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில், ஹைதராபாத், சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வரும் 3 ஆண்டுகளில் ஆந்திர பிரதேசத்தில் நிலத்தடி நீரே இல்லாமல் வறண்டு விடும். மழை பெய்யும்போது 16 சதவீத நீராவது நிலத்துக்குள் சென்றால் தான் நிலத்தடி நீர் மட்டம் சரியாக இருக்கும். ஆனால் மேற்சொன்ன பெருநகரங்களில் 8 சதவீத நீர் கூட நிலத்தடிக்குச் செல்லவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட 451 நகரங்களில் தண்ணீர் மாதிரி எடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 247 மாதிரிகளில் உயர்ந்த அளவில் குளோரைடு, புளோரைடு, நைட்ரேட் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான மதுரையில் பொதுப்பணித்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நிலத்தடி நீர் ஆய்வில் கடந்த 2012ஆம் ஆண்டு சனவரியில் 69 ஆழ்குழாய்க் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 3.5 மீட்டருக்குள் இருந்ததெனவும், இந்தாண்டு சனவரியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 9.2 மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர் மேலும் கீழிறங்கியுள்ளதென்றும், வரும் மாதங்களில் பெய்ய வேண்டிய மழையும் பொய்த்துப் போகும் பட்சத்தில் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக மாறுமென்றும் தெரியவந்துள்ளது. இதே நிலைதான் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலவுகிறது. தமிழகத்திற்கு மழை தருகின்ற வடகிழக்குப் பருவ மழையும், தென்மேற்குப் பருவ மழையும் பொய்த்து விட்டது. இதனால் தமிழகத்தின் அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீர்க்கொள்ளளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது. அணைகளில் எஞ்சியிருக்கும் நீர் கோடைக்காலத்தின் குடிநீர்த் தேவைக்கே போதுமானதாக இல்லாத நிலையில், வேளாண் பணிகளுக்கு கொஞ்சமும் வாய்ப்பில்லை. நிலத்தடி நீர் போட்டி போட்டு சுரண்டப்படுவதால், பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாகும் நிலையும் இனி சாத்தியமாகும். நிலத்தடியில் குறிப்பிட்ட அடிக்கு மேல் தண்ணீரில் ஆர்சனிக் என்றழைக்கப்படுகின்ற நச்சு வேதிப் பொருட்கள் அதிகளவில் கலந்திருக்கும். இதனால் எலும்புத் தேய்மானம், வயிற்றுக் கோளாறுகள், பல் நோய்கள், சிறுநீரகம் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகள் பழுதடையும் வாய்ப்பு அதிகமாகும்.
தமிழகத்தின் ஓராண்டு தேவைக்கான நீரின் அளவு 54 ஆயிரத்து 395 மி.க.மீட்டர். இதே அளவுடன் பெருகும் மக்கள் தொகையோடு கணக்கிட்டால் வரும் 2050ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 57 ஆயிரத்து 725 மில்லியன் கன மீட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாகத் தேவைப்படும் 3 மில்லியன் கன மீட்டர் நீருக்கும், பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் தேவைப்படும் நீருக்கும் இனிமேல் தமிழகம் என்ன செய்யப்போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. மழை குறைவாகப் பெறப்படும் இஸ்ரேல் நாடு நீர்மேலாண்மைக்கு எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறது. தமிழகத்தின் சராசரியை விட ஆண்டிற்கு 425 மி.மீட்டர் மழையை மட்டுமே இந்நாடு பெறுகிறது. ஆனால், அங்கு தண்ணீர்ப் பிரச்சனைகள் எழவில்லை. காரணம், அங்கு பின்பற்றப்படும் நீர்மேலாண்மை உத்திகள். நீரை மேலாண்மை செய்கின்ற முறைகள் குறித்து நம் சங்க இலக்கியங்கள் பலவும் சிறப்புடன் பதிவு செய்துள்ளன. திருக்குறளில் வள்ளுவரும் நீர்ப் பயன்பாடு குறித்து விளக்கியுள்ளார். அவற்றைப் பின்பற்றி வாழத் தொடங்கினாலே எப்பேர்ப்பட்ட தண்ணீர்ச்சிக்கலையும் நம்மால் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் தண்ணீர் குறித்த பார்வையில் நமது மக்களுக்கு இன்னமும் 'அந்தக்கால' நினைப்பே உள்ளது. தண்ணீர்ச்சிக்கனம் இனி வருங்காலத்தில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அடிப்படை பண்புக்கூறாக மாற்றம் பெற வேண்டும். எரிபொருளுக்கு இணையாக நீரைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளதால், தண்ணீரை வீணாக்கும் எவரும் மனித குலத்தின் முதல் எதிரியாகப் பார்க்கப்படுவர். நீராதாரங்களை வாழ்வியலுக்கான அடிப்படை ஆதாரங்களாகப் பார்த்தல் மிகவும் அவசியம்.
அரசுக்கு சில ஆலோசனைகள்
தமிழகத்திலுள்ள நீர்நிலைகள் மற்றும் அவற்றால் பாசனம் பெறும் நிலங்கள், அந்நீர்நிலைகளின் வாயிலாகப் பயன் பெறும் குடும்பங்கள் குறித்து தனித்தனியாக புள்ளிவிபரம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
ஒவ்வொரு நீர்நிலைகளையும் பொதுச்சொத்தாக அறிவித்து, அதனால் பயன்பெறும் பயனாளிகளைக் கொண்ட உள்ளூர்க் குழுக்களை அமைப்பதுடன், ஊராட்சி நிர்வாகக் குழுவையும் அதனோடு இணைக்க வேண்டும்.
நீர்நிலைகளில் மேற்கொள்ளப்பட்ட வன்கைப்பற்றல்களைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரமிக்க ஒருங்கிணைந்த குழுவொன்று அரசால் உருவாக்கப்படுதல் வேண்டும்.
அரசால் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளில் எந்தவிதத்திலும் நீர்நிலைகளோ, விளைநிலங்களோ இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனைக் கண்காணிப்பதும் அவசியம்.
வேளாண் பணிகள் நடைபெறாமல் புதர் மண்டியோ அல்லது தரிசாய்க் கிடக்கும் நிலங்களையோ அரசு கையப்படுத்தும் என்ற ஆணையினைப் பிறப்பிக்க வேண்டும்.
தமிழகத்தின் நீர்த்தேக்கங்களில் நடத்தப்பெற்ற ஆய்வொன்றில் 8 அணைகளில் 30 விழுக்காடும், இரண்டு அணைகளில் 50 விழுக்காடும், 4 அணைகளில் ஒரு விழுக்காடும் வண்டல் படிந்து நீர்க் கொள்ளளவு குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வண்டல் மண்ணை எடுப்பதற்கான திட்டத்தை வகுப்பதுடன், அணையின் நீர்க்கொள்ளளவை அதிகரிக்கவும் முயற்சி மேற்கொள்வது அவசியம்.
அதேபோன்று நூறு ஏக்கருக்கும் மேல் பாசன வசதி கொண்ட பொதுப்பணித்துறைக் கண்மாய்கள் அனைத்தையும் தூர்வாரி செப்பனிடுதல் வேண்டும். அதிலுள்ள வண்டல் மண்ணை உள்ளூர் உழவர்கள் எடுத்துச் செல்வதற்குரிய நடைமுறைகளை அரசு எளிதாக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அரைப்பங்கு நீர்நிலை மேம்பாட்டுப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆணையாக்க வேண்டும்.
தமிழகத்தில் ஓடும் அனைத்து ஆறுகளிலும் ஆய்வு மேற்கொண்டு, வாய்ப்புள்ள இடங்களில் சிறிய அளவில் தடுப்பணைகள் கட்டி நீரைத் தேக்குவதற்கு போர்க்கால அடிப்படையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள உழவர்களின் நலன் கருதி பண்ணைக்குட்டைகள் அமைக்கும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. அதே போன்று தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள உழவர்களுக்கும் பண்ணைக்குட்டைகள் அமைத்துத் தர தமிழக அரசு முன் வருதல் வேண்டும்.
வீட்டுக்கு வீடு மழைநீர் சேகரிப்பிற்கான திட்டத்திற்கு மிகுந்த முனைப்பு காட்டுவது மிகவும் அவசியம். அதற்குத் தமிழக அரசு கால வரையறையுடன் கூடிய அறிவிப்பினைச் செய்வது காலத்தின் கட்டாயம்.
- இரா.சிவக்குமார் (
- விவரங்கள்
- ஆர்.எஸ்.நாராயணன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
செர்னோபிலில் தொடங்கி புகுஷிமா வரை அழிந்த மனிதர்களின் கதைகள் மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணு விஞ்ஞானிகளுக்கு எந்தப் பாடமும் புகட்டவில்லை என்றால், பாவம் கூடங்குளத்து மக்கள். புகுஷிமா சுனாமியால் மட்டுமல்ல; சுனாமி ஏற்படாமலிருந்தாலும்கூட அணுமின் கழிவு மூலம் ஆபத்து என்றுமே உண்டென்று முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் தகவல் உண்டு. செர்னோபில் விபத்தால் ஏற்பட்ட கதிர்வீச்சில் பலிகொண்ட உயிர்கள் 75,000 இருக்குமென்றும் உயிர் போகாவிட்டாலும் நடைப்பிணமாக வாழ்வோர் சுமார் 75,000 என்றும் நியூயார்க் விஞ்ஞான அகாதெமி கூறுகிறது. செர்னோபிலுக்கு முன்பு பென்சில்வேனியா மாநிலத்தில் த்ரீமைல் ஐலேண்டு விபத்து நிகழ்ந்துள்ளது. விஞ்ஞானத்தில் வல்லவர்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் அமெரிக்காவில் மூன்று மைல் தீவில் நிகழ்ந்த 1979 விபத்துக்குப்பின் அமெரிக்க அணுசக்தித்துறை எதுவும் புதிய அணுஉலை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
உக்ரைனில் நிகழ்ந்த செர்னோபில் விபத்துக்குப் பின் ஐரோப்பிய அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறியுள்ள ஜப்பானின் புகுஷிமா விபத்தை சுனாமி மீது பழி சுமத்தி அணு விஞ்ஞானிகள் தப்பிக்க இயலாது.
தொழில்நுட்பக் கோளாறுகள் பற்றிய விஷயங்களையும் ஆராய்வது நன்று. புகுஷிமாவில் மிக அடிப்படையான அணுக்கருவின் சிதைவு - ஹைட்ரஜன் வெடித்து உயிரிழந்தவர் எத்தனை லட்சம் என்ற புள்ளிவிவரம் கிட்டவில்லை.
1979-ல் அமெரிக்காவில் மூன்று மைல் தீவு அணுமின் நிலைய விபத்துக்கு முன்பு 1967-ல் இங்கிலாந்தில் விண்ட்ஸ்கேல் விபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்பு 1952-ல் கனடாவில் சால்க் நதி விபத்துகள். அணுஉலைகளின் குளிர்நிலை இழப்பால் அணுக்கதிர் கசிவு ஏற்பட்டு மனித உயிர்களைப் பலி வாங்கிய எண்ணிக்கை எவ்வளவு ஆயிரங்களோ. உலகில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் உள்ள அடிப்படைக் கோளாறு எதுவென்றால் அணுஎரிபொருள்களை நீர்வெப்ப - நீராவிச் சாதனங்கள் குறைவாக உட்கொண்டு குறைந்த ஆற்றலில் செயல்பட்டு அதிக மின்கழிவுகளை - கதிர்வீச்சு ஆபத்துக்குரியவற்றை வெளியேற்றுகின்றன. அத்துடன் உள்கட்டமைப்பில் உள்ள இயந்திரக் கோளாறுகள், அவசர சிகிச்சையின்மை, மின்வெட்டு - மின் அழுத்த ஏற்ற இறக்கம் இவ்வளவுக்கும் மேல், பூகம்ப - சுனாமி ஆபத்து என்று ஆயிரம் விஷயங்கள் விஞ்ஞான மூளைக்கும் அப்பாற்பட்டு விடை அறியப்படாமல் உள்ளன.
உலக அணுசக்தித் தொழில் நிறுவனங்கள் கதிர்வீச்சு அபாயத்தைப் பற்றிய மதிப்பீட்டை எச்சரிக்கை உணர்வுடனோ, சிரத்தையுடனோ, மனித உயிர்களை மனத்திற்கொண்டோ செய்யாதது துரதிருஷ்டவசமானது. 1975-ல் ராஸ்முஸ்ஸன் அறிக்கை மிகவும் நம்பகத்தன்மையுள்ள அணுசக்தித் தொழில்நுட்ப ஆய்வு அறிக்கையாக நம்பப்படுகிறது. இன்னமும் அந்த அறிக்கையைத்தான் மூளைச்சலவையான அணுமின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த அறிக்கை அணுமின் நிலையங்களில் உள்ள பாதுகாப்புகளுக்கு 25,000 ஆண்டு உத்தரவாதம் வழங்கியுள்ளது. 25,000 ஆண்டுகளில் அணுஉலைகளில் ஒன்று மட்டும் பழுதுறலாம் என்று கூறியுள்ளது. ஆனால், நான்காவது ஆண்டில் த்ரீமைல் தீவு அணுமின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டது. பின்னர் செர்னோபில், புகுஷிமா உலகறிந்த கதை.
பெரிய அளவில் இல்லாவிடினும், இதுவரை 440 அணுஉலைகள் பழுதடைந்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன. புகுஷிமா விபத்துக்குப்பின் அமெரிக்காவில் கொதிநீர் அணுஉலைகள் ஜெனரல் எலக்ட்ரிக்குச் சொந்தமானவை. அதன்மீது கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதைக் கண்காணிக்க அரசு முன்வந்துள்ளது. 1990-க்குப்பின் 17 விபத்துகள் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளன. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, சீனா ஆகிய நாடுகள் ஒட்டுமொத்தமாக அணுமின் நிலையத் திட்டங்களைக் கைவிட்டுவிட்டன. ஜெர்மனியில் படிப்படியாக நாட்டில் உள்ள அனைத்து அணுமின் உலைகளை மூடுவிழா செய்ய முடிவு செய்துள்ளது. துருக்கி, சிரியா, ஜோர்டன், போலந்து, எகிப்து, இஸ்ரேல், சவூதி அரேபியா, நைஜீரியா, ஐக்கிய அரபுக் குடியரசு ஆகிய நாடுகள் அணுமின் நிலையத் திட்டத்தில் தலைவைத்துப் படுப்பதில்லை என்று முடிவு செய்துவிட்டன.
உலகிலேயே மிகப்பெரிய அணுசக்தி நிறுவனம் "அரீவா ஆஃப் பிரான்ஸ்''. புகுஷிமா விபத்து காரணமாக, பல்லாயிரம் கோடி டாலர் முதலீடுகள் கொண்ட ஐரோப்பிய அதிசக்தி அணுஉலைத் திட்டம் நீதிமன்ற வழக்கால் முடக்கப்பட்டுவிட்டது. யூரோப்பியன் பிரஷரைஸ்டு அணுஉலைத் திட்டம் பின்லாந்தில் செயல்படுவதாயிருந்தது. அரீவாவின் பிளேமன்வில்ய பிரெஞ்சு நாட்டுத் திட்டமும் அம்போவாகிவிட்டபோது. . . கூடங்குள முதலீடு பெரிய தொகை இல்லை. கூடங்குளத் திட்டத்தில் உள்ள ஆபத்தை மூளைச்சலவை செய்யப்பட்ட இந்திய அணுமின் துறை விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ளாத சூழ்நிலை வந்துவிட்டால், தில்லி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்துப் பொதுநல வழக்குத் தொடர்வது நன்று.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் புகுஷிமா விபத்தை நல்ல பாடமாக உணர்ந்து புதிய திட்டங்களை ஒத்திவைத்தும், செயல்பாட்டில் உள்ள அணு உலைகளின் பாதுகாப்பு பற்றிய நடவடிக்கைகளில் மறுபரிசீலனைகளையும் செய்யும்போது இந்திய விஞ்ஞானிகள் மிகவும் பொறுப்பற்ற முறையில் பேசுவதுடன் "உலகில் இல்லாத பாதுகாப்புகள் இந்திய அணுஉலைகளில் உள்ளதாகத் தங்கள் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்கின்றனர்.
இந்திய அணுமின் நிலையத் தலைவர் எஸ். கே. ஜெயின் கூறும்போது, "எங்களிடம் அணுஉலைகள் பற்றிய அறிவு முழுமையாக உள்ளது. இந்தியாவில் நிறுவப்பட்ட அணுஉலைகள் அனைத்தும் எப்படிப்பட்ட பூகம்பத்தையும் எப்படிப்பட்ட சுனாமியையும் தாங்கும் சக்தி படைத்தது'' என்று கூறியுள்ளார். இந்தியாவில் எப்படி அணு உலைகள் பத்திரமாக இயங்கி வரும் லட்சணத்தை அறிவது நன்று. மொத்த மின்சார உற்பத்தியில் 3 சதவீதம் மட்டுமே வழங்கும் அணுசக்தித்துறை விஞ்ஞானிகளின் அலட்டலுக்கு ஒரு குறையுமில்லை. தாராப்பூரில் மட்டும் 1980-களில் தொடங்கி இன்றுவரை சுமார் 400 தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியிலிருந்து 200 கி. மீ. தூரத்தில் உள்ள நாரோராவில் தீவிபத்து ஏற்பட்டு அணுஉலை கட்டடம் வரை தீ பரவியது. அப்போது அமைக்கப்பட்டிருந்த அவசரநிலை ஏற்பாடுகள் எதுவும் வேலை செய்யவில்லை. நல்லவேளையாக தீ தானாகவே அணைந்துவிட்டதால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கைகாவில் சோதனையின்போது தவறான வடிவமைப்பால், கட்டுமானம் சரிந்தது - நல்லவேளையாக அப்போது அணுஉலை வேலை செய்யாததால் மாபெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அவ்வப்போது விஞ்ஞானம் காப்பாற்றாமல் தெய்வம் காப்பாற்றியுள்ளதாம்.
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தின் கதிர்வீச்சுக் கழிவுகள் 1995-ல் ஏரியில் விடப்பட்டதை மூன்று மாதம் கடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003-ல் கல்பாக்கத்தில் ஆறு தொழிலாளர்கள் கூடுதல் கதிர்வீச்சுக்கு ஆளாகி மடிந்துள்ளனர். இந்திய அணு சக்தி வரலாற்றில் பணியாளர்கள் நேரிடையான கதிர்வீச்சுக்கு ஆளானது - அனுமதிக்கப்படும் அளவுக்குமேல் தாக்கப்பட்டதில் மோசமான ஒன்று.
கைகா அணுமின் நிலையத் தொழிலாளர்களின் சிறுநீர்ப் பரிசோதனையின்போது கூடுதல் அளவில் ட்ரைட்டியம் இருப்பது புலனானதைத் தொடர்ந்து 2009-ல் தொழிலாளர் போராட்டம் வெடித்தது. விசாரணையின்போது தெரியவந்த விவரம் குடிதண்ணீர்த் தொட்டியில் ட்ரைட்டியம் கலந்துள்ளதும் புலனாயிற்று. ட்ரைட்டியம் குருதியில் கலந்தால் புற்றுநோய் ஏற்படும்.
மேலே விவரிக்கப்பட்ட பல்வேறு அணுமின் நிலைய விபத்துகள் - தெய்வச் செயலால் தவிர்க்கப்பட்ட விபத்துகள் எல்லாமே இந்திய அணுமின்சக்தித் துறைச் செயலர் பெருமையுடன் கூறும் கதிர்வீச்சுப் பாதுகாப்பு - அவசரகால பாதுகாப்பின் லட்சணம். எந்த சுனாமியோ, பூகம்பமோ இல்லாத சூழ்நிலையில்கூட இந்தியாவின் அணுசக்தி நிலையக் கழிவுகளின் கதிர்வீச்சுகள் மனிதர்களின் உடற்கூறுகளுக்குச் சென்றவண்ணம் உள்ளன. இந்திய அணுசக்தித்துறை சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் செயல்படுகிறது.
1962-ல் இயற்றப்பட்ட அணு மின்சாரச் சட்டம், அணுசக்தித் துறைக்கு அவர்கள் விரும்பாத விஷயங்களைத் தெரியப்படுத்த வேண்டாம் என்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. உண்மையை மறைக்கும் அதிகாரம் - "நமது அணுசக்தி பலம் பாகிஸ்தானுக்கோ - சீனாவுக்கோ தெரிய வேண்டாம்'' என்பது சரி. ஆனால், இயந்திரக் கோளாறு - அவசரகால பாதுகாப்பு கோளாறு - கட்டுப்படுத்தப்படாத கதிர்வீச்சுக் கழிவு... பற்றிய செய்திகளை எப்படி மூடி மறைக்க முடியும்? எப்படியோ 2ஜி ஊழல்போல் கசிந்து விடுகிறது.
யுரேனியம் தோண்டி எடுப்பதிலிருந்து அணுஉலை செயல்படும்வரை நிகழ்த்தப்படும் அணு எரிசுழற்சியில் - ஒவ்வொரு கட்டத்திலும் கதிர்வீச்சுக் கழிவு ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. மண்ணில் சேரும் இக்கழிவின் கதிர்வீச்சு சக்தியின் ஆபத்து ஆயிரம் ஆண்டுகள் நீடிக்கும். அணுமின் கழிவு பற்றிய ஆபத்தைப் பற்றி அணுமின் துறை ஒப்புக்கொள்ளவே மறுக்கிறது.
வங்காள விரிகுடாவில் எந்தவிதமான சுனாமியும் ஏற்படாது என்றோ - கடல்நீர் பெருக்கெடுத்து கடற்கரை நகரை அழிக்காது என்றோ என்ன உத்தரவாதம் உள்ளது? பாண்டியர் துறைமுகம் கொற்கை அழிந்தது. சோழர் துறைமுகம் பூம்புகார் அழிந்தது. பல்லவர் துறைமுகம் மாமல்லபுரமும் அழிந்தது. அப்படி இருக்கும்போது, கல்பாக்கமும், கூடங்குளமும் அழிக்க முடியாத ஆயிரங்காலத்துப் பயிரா என்ன? ஒருக்கால் அப்படி அழியுமானால்... மக்களோ, மரமோ, பயிரோ எஞ்சினால் நமது அதிர்ஷ்டம். இவ்வளவு மக்கள் எதிர்ப்புகளைப் புறந்தள்ளிக் கூடங்குள அணுமின் உலைகள் நிறுவப்படுமானால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை.
- ஆர்.எஸ்.நாராயணன்
(நன்றி: தினமணி)
- விவரங்கள்
- வீராகலை.கண்ணன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்
இந்த உலகம் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்து உள்ளது
ஒன்று:
தாவரம், விலங்குகள், மண், காற்று, நீர், மலைகள், கடல், ஆறுகள், குளங்கள், ஏரிகள், காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள்,
இரண்டு: மனிதர்களால் உருவாக்கபட்ட அறிவியல் சமுதாய, நவீன உலகம்.
மேற்சொன்ன இரண்டுமே நம் சுற்றுச்சூழலினுள் வருபவை தான். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் இவை.
உலகத்தில் மனிதன் ஒரு அங்கம் என்ற நிலை மாறி, மனிதனுக்காக இந்த உலகம் என்ற எண்ணம் மனிதனுக்கு தோன்றிய கணம் முதல் ஒரு பெரும் அழிவுக்கான முதல் படி எடுத்துவைக்கபட்டது. மனிதனுக்குத் தேவையானதை இயற்கையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி தகர்த்தெறியப்பட்டு தனக்குத் தேவையானதைத்தான் இயற்கை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய அடுத்த நொடி அழிவின் பாதையை மனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக இயற்கை புன்முறுவல் புரிந்தது. மனிதன் இயற்கையை முற்றிலும் புரிந்து கொண்டதாகவும் அதை மாற்றி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போவதாக கர்ஜித்தான். தனக்குப் பின்னால் ஒரு சவக்குழி தோண்டப்படுவதை மறந்து போனான் (அ) பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உன்மை. இயற்கையே பெரும் சக்தி. அதை மாற்றவும், வெல்லவும் முடியாது என்று நம்ப மறுக்கிறான். விளைவு, நமக்கு மட்டும் இல்லை, நம்மைச் சுற்றி உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இயற்கையாக பூமி எப்படி இயங்கும்?
இதற்கு இயற்கையின் அடிப்படையை புரிந்து கொள்வது மிக முக்கியம். நாம் வாழும் பூமி, நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு இவைகளால் ஆனது. இதில் நீரும், காற்றும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நீரும் காற்றும் அமைந்ததால்தான் இங்கு உயிரினங்கள் தோன்றி, வாழ்கின்றன, பரிணமிக்கின்றன. உயிரினங்கள் வாழ்வதற்கு சூரிய சக்தி மிக முக்கியம். இந்த சூரிய சக்தி அனைத்து கிரகங்களுக்கும் கிடைத்தாலும் பூமிக்கு வடிகட்டி பூமியின் சூழலுக்கு தகுந்தாற்போல் தான் கிடைக்கும். பசுமைகுடில் வாயுக்களான ஓசோன், மீத்தேன், கரிமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, நீராவி போன்றவை நம் பூமிக்கு மேற்பரப்பில் சுற்றிப் படர்ந்துள்ளன. அதில் ஓசோன் 90% உள்ளது, பிற வாயுக்கள் 10% உள்ளது. இவையாவும் ஒன்று சேர்ந்து சூரிய சக்தியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும். இதுவே பசுமைக்குடில் வாயுக்களின் செயல்பாடு. ஆனால் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் ஒரு செயல்பாடு வருந்தத்தக்கது. ஏனென்றால் இந்த பசுமைக் குடில் வாயுக்களை மனித இனமே உற்பத்தி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குளிர் சாதனப் பெட்டியிலிருந்து வெளிப்படும் க்ளோரோ ஃபளோரோ கார்பன் போன்றவை ஓசோன் படலத்தின் மீது படர்ந்து வேதிவினை புரிந்து அதை சிறிது சிறிதாக அழிக்கத் தொடங்கி சுருக்கி விட்டன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி அண்டார்டிக் பகுதிக்கு நேர் மேலே இருக்கும் ஓசோன் அருகில் விழுந்த துளை, விரிந்து விரிந்து அமெரிக்க கண்டம் அளவுக்குப் பெரிதாகி விட்டது.
புவி வெப்பமயமாதல்
பூமிக்கு என்று ஒரு தன்மையுண்டு. சூரியனில் இருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களோடு சேர்ந்த சூரிய ஒளியை பசுமைக்குடில் வாயுக்கள் வடிகட்டி பூமியின் சூழலுக்குத் தகுந்தாற் போல் சூரிய ஒளியை மட்டும் கொடுக்கும். அப்படி பூமிக்கு வரும் சூரிய ஒளி இங்கு செயல்பட்டு, நம் பூமியை சூடாக்கும். பின் நம் பூமியானது அகச்சிவப்பு கதிர்களை வெளியே அனுப்பும். இந்த சூழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும். இந்த செயல் ஒரு குறிப்பிட்ட உஷ்ணநிலையில் நம் பூமி இருப்பதற்கு இயற்கை ஏற்படுத்திக் கொண்ட விதி. மேல் சொன்ன சுழற்சிக்கு துணை புரிகின்ற நோக்கில் பூமியில் உள்ள பனிமலையானது முற்றிலும் வெண்மைத் தன்மை காரணமாக சூரிய ஒளியை முற்றிலுமாகத் திருப்பி அனுப்பிவிடும்; உள்ளே வாங்கிக் கொள்ள அனுமதிக்காது. இது போன்ற செயல்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட உஷ்ணநிலையில், பூமி தன்னை தக்கவைத்துக் கொள்ளும். இப்போது என்ன நடக்கிறது?
தொழிற்புரட்சி என்ற சொல் நம் வாழ்க்கையில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. தொழிற்புரட்சியின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மனிதர்களின் வாழ்வுக்காக, வசதிக்காக என்று அனைவரும் கருதினாலும் ஒட்டுமொத்த இனத்தையே அழிக்கும் நோக்கில் இவை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கூற்றை மறுக்கமுடியாது. தொழிற்சாலையிலிருந்து வரும் புகை, கழிவுநீர், வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, புதைபடிவப் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை வெளிவிடும் மீத்தேன், கரியமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, க்ளோரோ ஃபளோரோ கார்பன் போன்றவை நம் பூமிக்கு மேற்பரப்பில் தங்கிவிட்டன. அதன்காரணமாக பூமி சூடானால் வெளிவிடும் அகச்சிவப்புக் கதிரை வெளியே விடாமல் தடுத்து, மேல் தங்கி உள்ள இந்த வாயுக்கள் மீண்டும் பூமிக்கே அனுப்பி விடுகின்றன. விளைவு பூமி மீண்டும் சூடாகும். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடப்பதால் பூமி சூடாகிக் கொண்டே வருகிறது.
இது ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி ஆகும் கரும் புகை அனைத்தும், பனிப்பாறையில் படிந்து அதன் வெண்மைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன. அதனால் பூமிக்கு வரும் சூரிய ஒளியை தடுத்து வெளியே அனுப்ப முடியாமல் பனிப்பாறைகள் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ள, ஏற்கனவே புவிவெப்பமயமாதலால் உருகும் பனிமலைகள் இதனால் மேலும் அதிகமாக உருகுகின்றன. இதன் விளைவால் ஏற்படப்போகும் அபாயம் என்ன தெரியுமா? கடல் நீர் மட்டம் அதிகரித்து ஒட்டுமொத்த உலகமும் நீரால் சூழப் போகிறது என்று எச்சரிக்கிறது அறிவியல்.
முதலாளித்துவ அரசியல் அறிவியல் என்ன சொல்கிறது?
"நாங்கள் உண்மையில் இந்த உலகத்தை செழித்து வளரச் செய்து கொண்டிருக்கிறோம். உலகைக் காப்பாற்ற வந்த தேவதைகள் நாங்கள். எங்களால் தான் பொருளாதாரம் இவ்வளவு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலியாளர்கள் எங்கள் மேல் கொண்ட பொறாமையினால் ஏதோ பிதற்றுகின்றனர். உண்மையில் புவிவெப்பமயமாவதற்கும் மனிதனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மனிதன் தான் காரணம் என்பதை நிருபிக்கவும் இல்லை. இந்த உலகம் பல லட்சம் வருடங்களாக சூடாகிக் கொண்டுதான் வருகிறது. அதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 15000 வருடங்களுக்கு முன்னால் எந்த தொழிற்புரட்சியும் ஏற்படவில்லை. ஆனால் அப்போது ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க கண்டங்களின்மேல் பெரும் பனிப்பாளங்கள் மூடியிருந்தன. அந்த காலகட்டம் பனிப்பாறை காலம் என்று அழைக்கபட்டது. பிறகு மெதுவாக அந்த பனிப்பாறை உருகி நிலப்பரப்பாக மாறியது. அங்கே இருந்த ஜீவராசிகள் அழிந்து போயின. பின் அதிலிருந்து தப்பித்த ஜீவராசிகள் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டன.
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்த கண்டங்களில் உயிர்கள் பெருகின. பின் 14ஆம் நூற்றாண்டில் ஒரு குட்டி பனிப்பாறை காலம் தொடங்கியது. பின் மறுபடியும் வெப்பநிலை அதிகரித்து நிலப்பரப்பாக மாறியது. எனவே வெப்பம் அதிகரிப்பதும் வீழ்வதும் நம் கையில் இல்லை. அது இயற்கையின் கையில்தான் உள்ளது. மேலும் மீத்தேன் போன்ற வாயுக்களை மாடுகள் ஏப்பம் விடுவதன் மூலம் வெளிவிடுகிறது. ஒரு மாடு ஒரு நாளைக்கு 280 லிட்டர் மீத்தேனை வெளிவிடுகிறது. நெல் வயல் நம் இந்தியாவில் அதிகம். அதன் மூலமாகவும் டன்கணக்கில் மீத்தேன் வெளிவருகிறது. மேலும் காடுகள் எரிவதால் வெளியாகும் கார்பன்டைஆக்ஸைடு என அனைத்துக்கும் காரணம் இயற்கை தான்; மனிதனில்லை. எனவே மனிதன் தான் காரணம் என்று சொல்லுவது அபத்தம்" என்று முதலளித்துவ அரசியல் அறிவியல் சொல்கிறது.
இந்த உலகம் எதை நோக்கிச் செல்கிறது?
நாம் வாழும் பூமிக்கு பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அது, சூரியனால் அழிவு, புவிசுற்றுப்பாதையிலிருந்து வட்ட விலகல், மனிதனால் ஏற்படும் புவிவெப்பமயமாதலின் விளைவு, விண் கல் பூமியைத் தாக்குவது என காரணங்கள் அடுக்கினாலும் மனிதனால் அழிவு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் அனைவரது கவலையுமே.
அதைத்தான் நாம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டோமே! இப்போதே நம்முடைய கடலோரங்கள் மாறிவருவதாக செயற்கைக்கோள்கள் காட்டுகின்றன. சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்கிறது. இயற்கையில் வழக்கத்துக்கு மாறாக நடக்கும் ஒன்று, மழை பெய்ய வேண்டிய இடத்தில் பொய்த்து விடுகிறது, வறண்ட இடத்தில் சக்கைப்போடு போடுகிறது. நம் சொந்த நாட்டிலேயே வண்ணத்துப் பூச்சிகளையும், குருவிகளையும், தேனீக்களையும் காணமுடிவதில்லை. மேலும், கடந்த ஒரு நூற்றாண்டில் வெப்பம் ஒரு டிகிரி வரை அதிகரித்துள்ளது. இவை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ விஷயங்கள் இயற்கை நமக்கு எதிராக திரும்பிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சாட்சி.
சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க என்ன செய்யலாம்?
தொழிற்சாலைகளை சீர்படுத்துவது, அதன் கழிவுநீர்களை சரியான முறையில் வெளியேற்றுவது, வாகனங்களுக்கு இயற்கையான மாற்று எரிபொருளை உருவாக்குவது, புதைபடிவ எரிபொருட்களை எரித்து அதன் மூலம் இயங்கும் தொழிற்சாலைகளை கட்டுபடுத்துவது, அணுமின் நிலையம், அணுஆயுதம் போன்றவற்றை குறைத்தல் அல்லது தடுத்தல், இவையாவையும் வெகுவிரைவில் செயல்படுத்த வேண்டும் என்றாலும் பொதுமக்களாகிய நாம் இதைச் செய்ய முடியாது. மேல் சொன்ன யாவும் அரசாங்கம் செய்ய வேண்டியவை. ஆனால் பொது மக்களாகிய நாம் அதை விட அதிகமாக செய்ய வேண்டிய கடமை உள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக உபயோகிப்பதை கைவிட வேண்டும். இந்த ப்ளாஸ்டிக் மக்க, 10000 வருடத்திற்கு மேலாக ஆகும். தலைமுறை தலைமுறையாக கேடு விளைவிக்கும் பொருட்களில் ஒன்று ப்ளாஸ்டிக். வீடுதோறும் செடிகள் வளர்ப்போம். தொட்டிகளில் சின்ன சின்ன செடிகள் இயற்கை முறையில் வளர்ப்பதன் மூலம் நமக்கு அன்றாடத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். எல்லாவற்றிலும் தன்னிறைவு பெரும் தேசம் தான் வையத் தலைமை கொள்ளும்.
இயற்கையை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இயற்கையிலிருந்து பெறப்படும் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உதாரணம். பெட்ரோல், டீசல் போன்றவை. தேவையான வரை சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை வாங்குவதும், அதை வாங்கி அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் நம் கையில் தான் உள்ளது. சமீபத்தில் தைவானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கோதுமையினால் ஆன சாப்பிடும் தட்டை கண்டுபிடித்தது. அதில் உணவு உட்கொண்ட பின் அந்தத் தட்டையும் சேர்த்தே சாப்பிட்டு விடலாம். இது கேடு விளைவிக்கும் ப்ளாஸ்டிக் தட்டிற்க்கு சிறந்த மாற்று. சிறு வயது முதல் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஊட்ட வேண்டியது கட்டாயம். அவர்கள்தான் நாளைய உலகை வழிநடத்தப் போகிறவர்கள். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்திருப்பது போலவே நம் தெருக்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் சேற்றில் உள்ள கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் கூட மீத்தேனை உற்பத்தி செய்யும். இயற்கையின் சிறுசிறு மாற்றங்கள் தான் பெரும் அழிவுக்கோ அல்லது பெரும் துவக்கத்திற்கோ வழிவகுக்கும். அதுபோல நாம் நம்மிடையே செய்யும் சிறு சிறு மாற்றம் கூட நம் தலைமுறையை செழித்து வளரச் செய்யும்.
- விவரங்கள்
- வான்முகில்
- பிரிவு: சுற்றுச்சூழல்
வட அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜேம்ஸ் ஹேன்ஸன் பருவநிலை மாற்றம், புவி வெப்பமடைதல், அவற்றின் தாக்கங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். புவி வெப்பமடைவதால் ஏற்படும் கடும் விளைவுகள் குறித்து தனது ஆய்வுகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அவரது ஆய்வின்படி, மிகையான- மிகக் கடுமையான- வெப்பநிலை கொண்ட கோடைப் பருவங்கள் தற் போது மிகவும் அதிகரித்துள்ளன.
பருவநிலை மாற்றங்களால் 1951 முதல் 1980 ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக உலகின் மொத்த நிலப்பரப்பில் 0.1 முதல் 2 விழுக்காடே பாதிப்பிற்குள்ளாயின. ஆனால் தற்போது 10 விழுக்காடு நிலம் பாதிப்பிற்குள்ளா கிறது. கடந்த 50 ஆண்டுகளில் என்றுமில்லாத அளவிற்கு இன்று வடஅமெரிக்காவில் மிகக் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. உணவு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. இத னால் உணவு தானியங்களின் விலை 17 விழுக் காடு அதிகரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில் கடும் பஞ்சம் தலைவிரித் தாடுகிறது. உலகின் பல பகுதிகளிலும் வறட்சியால் உணவு உற்பத்தி குறைந்துள்ளது.
பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரி பொருளைப் பயன்படுத்தும் மகிழுந்து, துள்ளுந்து போன்ற தானியங்கி வாகனங்களிலிருந்து வெளிப்படும் கரியமிலவாயு புவி வெப்பமடை தலுக்கு ஒரு முக்கியக் காரணியாகும். புவி வெப்ப மடைவதைக் தடுக்க துள்ளுந்து, மகிழுந்துகளின் உற்பத்தியைக் குறைக்க வேண்டும். மிதிவண்டி யின் பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த வேண்டும். ஆனால் உலகின் பெரும்பான்மை நாடுகள் தனியாளுக்கான தானியங்கி வாகனங் களின் உற்பத்தியை அதிகரித் துக் கொண்டே இருக்கின்றன.
மேற்குலக நாடுகளின் மிகை நுகர்வால் புவி வெப்பமடைந் துள்ளது. இந்நாடுகள் புவி வெப்பமடைதலைத் தடுக்க பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக “உயிரி எரிபொருள்” பயன்பாட்டைத் தீர் வாக முன்வைக்கின்றன. கரும்பு, சோயா, சோளம் போன்ற உண வுப் பயிர்களிலிருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்யப் படுகிறது. இதற்காக வறிய நாடுகளின் வேளாண்மை உயிரி எரிபொருள் பயிர்களுக்குத் திரும்பி விடப்படுகின்றது. மேற் குலக செல்வந்தர்கள் மகிழுந்துகளில் செல்ல மூன்றாம் உலக நாடுகளின் விளைநிலங்களும், உணவுப்பயிர்களும் கொள்ளை போகின்றன.
பணக்கார நாடுகளின் உயிரி எரிபொருள் தேவைக்காக உலகெங்கிலும் விளைநிலங்களின் அபகரிப்பு அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய கூட்டுக் குழுமங்கள் உயிரி எரிபொருள் உற்பத்திக்காக 125 இலட்சம் ஏக்கர் பரப்புள்ள விவசாய நிலத்தை மூன்றாம் உலக நாடு களிடமிருந்து அபகரித்துள் ளன. இக்குழுமங்கள் கைப் பற்றியுள்ள நிலத்தின் அளவு டென்மார்க் நாட்டின் பரப் பிற்கு சமமானதாகும். காடு களும், மேய்ச்சல் நிலங்களும் “பசுமை எரிபொருள்” உற்பத் திக்காக அழிக்கப்பட்டுள்ளன. உள்ளூர் சந்தைக்காக உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் நிலத் திலிருந்து துரத்தியடிக்கப் பட் டுள்ளனர்.
வட அமெரிக்காவில் மக்காச் சோள உற்பத்தியில் 40 விழுக் காடு உயிரி எரிபொருள் உற்பத் திக்குப் பயன்படுத்தப் பட்டுள் ளது. இந்த ஆண்டு உற்பத்திக் குறைந்துள்ளதால் இன்னும் அதிக விழுக்காடு மக்காச் சோளம் உயிரி எரிபொருள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். ஐரோப்பிய நாடுகளின், சீனா வின் தேவைக்காக இந்த ஐந்து நாடுகளிலும் மரபின மாற்ற சோயா என்ற ஒற்றைப்பயிர் பயிரிடப்படுகிறது. உள்நாட்டுத் தேவைக்காக உற்பத்தி செய்யும் சிறு விவசாயிகள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மரபீனி மாற்ற சோயா பயிரிடப்படுவதை எதிர்த்த பராகு வாய் அதிபர் பெர்டினாண்ட் டோ லூஹோவின் பதவி பறி போனது. இடதுசாரி சிந்தனை யுள்ள, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட இவர் பன்னாட்டுக் குழுமங்களின், வல்லரசுகளின் சதியால் பதவி இழந்தார்.
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளா தார இறையாண்மை மறுக்கப் படுகிறது; அழிக்கப்படுகிறது.
உயிரி எரிபொருள் உற்பத் திக்காக காடுகள், மேச்சல் நிலங்கள் அழிக்கப்படுவதையும், நைட்ரஜன் உரங்களின் பயன் பாட்டையும் கணக்கில் கொண் டால் பெட்ரோல் டீசல் போன்ற புதைபடிவ எரிபொரு ளைக் காட்டிலும், உயிரி எரி பொருள் உற்பத்தியால் வெளிப் படும் “பசுமை இல்ல வாயுக் களின்”அளவு அதிகம் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள் ளன. உயிரி எரிபொருள் உற் பத்தி புவியை மேலும் வெப்ப மடையச் செய்வதோடு உலகில் பட்டினியையும் பஞ்சத்தையும் அதிகரிக்கவே வழி செய்கிறது.
கடந்த முப்பதாண்டுகளில் உலகெங்கிலும் பணக்காரர் களிடம் அதிகப் பணம் குவிந் துள்ளது. ஏழை, பணக்காரர் களிடையே ஏற்றத் தாழ்வு அதிகரித்துள்ளது.பெரிதும் பணக்காரர்களின் தேவைகளுக் காகவே சந்தை உற்பத்தி நடக் கிறது. சந்தையில் எதை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் ஓட்டுரிமை பெரும்பான்மை மக்களிடம் இல்லை. பெரும்பான்மை மக் களிடம் வாங்கும்திறன் இல்லை. புதிய தாராளமயமும், உலக மயமும் பொருளாதாரத் தைத் தீர்மானிக்கும் உரிமையை பெரும்பான்மை மக்களிடமி ருந்து முற்றிலுமாகப் பறித்து விட்டது. பணக்காரர்களின் மிகை நுகர்வுக்கும் ஏழை மக்களின் உயிர் வாழ்தலுக்கு மிடையேயான போராட்டமாக வாழ்க்கை மாறிவிட்டது.
மூன்றாம் உலக நாடுகள் தங்களது அரசியல், பொருளாதார இறையாண்மையை இழந்துள்ளன. புவி வெப்ப மாதலும், சூழல் சீர்கேடும் தேசங்களின் பொருளியல் இறை யாண்மைப்பறிப்போடு இணைந்தே நிகழ்கிறது. உல கெங்கிலும் உலகமயத் தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஆப்பிரிக்க, அரபு நாடுகளிலும், இலத்தீன் அமெ ரிக்க நாடுகளிலும் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி என்பது அடிப்படையில் ஒரு அரசியல் பொருளாதார இறையாண்மை மீட்புப் போராட்டமே ஆகும்.
ஆதாரங்கள்:
1.Hunger Games by Georgo Monbiot Published in “ Guardian” 4th August 2012.
2. South America: Soy’s Great Homeland, Upside Down world, 6.09.2012.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 2012 இதழில் வெளியானது)
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு
- கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்
- மக்களைப் பாழ்படுத்தும் புதிய அனல் மின் நிலையங்களை நிறுத்துக
- வேதிக் கழிவுகளால் வெறுமையாகும் கடலூர்!
- காற்றினிலே வரும் மாசு!
- ஞெகிழியா? காகிதமா? எந்தப் பை நல்லது?
- உலகம் முழுவதும் தனக்கே சொந்தம் என்கிற தலைக்கனம்
- இந்தியாவில் அணுஉலை விபத்துகளும் அவசர தயாரிப்பு நிலையும்
- ஜெய்டபூர் அணு மின் நிலையம் - ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறோமா?
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!