கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பூவுலகு ஆசிரியர் குழு
- பிரிவு: சுற்றுச்சூழல்
ஞெகிழி (பிளாஸ்டிக்) பைகள் மிகப் பெரிய சூழல் கேட்டை உருவாக்குகின்றன என்பது தெரிந்த விஷயம்தான். இதற்கு எதிராக காகித பைகளை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. ஆனால் இரண்டுமே இயற்கை வளத்தை அழித்து, சூழலை சீரழிக்கின்றன என்பதுதான் உண்மை. அப்படியானால் இந்த இரண்டில் நாம் எதைத் தேர்ந்தெடுப்பது? மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான், இவற்றின் பயன் பாட்டை குறைப்பதற்கான நல்ல வழி என்று தோன்றுகிறது.
இரண்டையும் பற்றி ஓர் ஒப்பீடு:
உலகம் முழுவதும் 400 கோடி பிளாஸ்டிக் பைகள் ஒவ்வோர் ஆண்டும் கழிவாக்கப்படுகின்றன. இவற்றை தொடர்ச்சியாகக் கோர்த்தால், பூமியை 63 முறை சுற்றலாம்.
உற்பத்தி
மரங்களை அழித்தே காகிதம் தயாரிக்கப் படுகிறது.
ஞெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கப்படும்போது, பாலிஎதிலின் என்ற துணைப்பொருளாகக் கிடைக்கிறது. ஞெகிழிப் பையை தயாரிக்க ஆகும் எரிபொருளை விட 4 மடங்கு அதிக எரிபொருள் காகித பையை உருவாக்க பயன்படுகிறது.
மூலப்பொருள்
காகித பை உருவாக்க பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்கள் காற்று மாசு, அமில மழை, நீர் மாசுபாட்டை உருவாக்கலாம்.
ஞெகிழி உற்பத்தியில் பயன்படுத்தப்படும் ஆறு பொருள்களில் ஐந்து மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.
ஞெகிழிப் பைகளை உண்டு ஆயிரக்கணக்கான காட்டுயிர், கடலுயிர்கள் ஆண்டுதோறும் அழிகின்றன. கடலாமைகள் இவற்றை இழுதுமீன் என்று கருதுகின்றன. உணவுக்குழலில் சிக்கி இறந்துபோகின்றன.
மறுசுழற்சி
மறுசுழற்சி செய்ய காகிதத்தை கூழாக்கி, வெளுப் பேற்ற பிளீச் செய்தாக வேண்டும். ஞெகிழியைவிட காகித மறுசுழற்சி எளிது என்றாலும், காகித பைகள், காகிதங்கள் புதிய மரங்களை அழித்தே செய்யப் படுகின்றன. அப்பொழுதுதான் இழுவைத்தன்மை, வலு கிடைக்கும். மறுசுழற்சி காகிதம் அட்டைப்பெட்டி தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் காகிதத்தை மறுசுழற்சி செய்வதற்கு அதிக எரி பொருள் தேவைப்படுகிறது. பெரும்பாலான நேரம் மறுசுழற்சிக்காக வாங்கப்படும் ஞெகிழி பைகள், அதைச் செய்யாமல், வேறு நாடுகளுக்கு அனுப் பப்பட்டு எரிக்கப்படுகின்றன.
மக்குமா, மக்காதா?
காகிதம் மக்கக்கூடியது. ஆனால் இன்றைக்குள்ள குப்பை கொட்டும் முறை காரணமாக, தண்ணீர், ஒளி, ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் அவற்றால் மக்க முடிவதில்லை.
பிளாஸ்டிக் என்பது எக்காலத்திலும் மக்காதது.
நாம் என்ன செய்யலாம்?
மறு பயன்பாட்டுக்கு உரிய தரமான துணிப் பைகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஆயிரக் கணக்கான ஞெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடுக்கலாம்.
எளிதாக கையில் எடுத்துச்செல்லும் பொருளுக்கு ஏன் ஒரு ஞெகிழிப் பையை வீணாக்கத் தேவை யில்லையே.
பழைய ஞெகிழிப் பைகளை குப்பை பெட்டி களில் பயன்படுத்தலாம். அதற்கென தனி ஞெகிழிப் பை வாங்காமல் தவிர்க்கலாம்.
மேலும், எப்பொழு தெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ, அப்போது மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். குறைந்தபட்சம் நம்மிடம் ஏற்கெனவே உள்ள ஞெகிழிப் பைகளையாவது எடுத்துச் செல்லுங்கள்.
பிளாஸ்டிக் எமன்
அதிநவீன அறிவியல் வசதிகள் பெருகிய இன்றைய வாழ்வில், அதன் பலன்களில் ஒன்றாக நம்மிடையே புற்றுநோய் பல்கிப் பெருகிவிட்டது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், ஞெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பெரும் பங்காற்றுகிறது என்கின்றன ஆராய்ச்சிகள். இது தொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையின் சுற்றறிக்கை கூறும் தகவல்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
மைக்ரோவேவ் அவனில் ஞெகிழி பாத்திரங்களைப் பயன்படுத்தாதீர்கள். குளிர்பதனப் பெட்டியின் ஃபிரீசரில் தண்ணீர் குப்பிகளை வைக்காதீர்கள். மைக்ரோவேவ் அவனுக்குள் உணவுப்பண்டத்தை வைக்கும்போது அதன் மீது ஞெகிழி தாளை சுற்றாதீர்கள் என்கிறது அந்த எச்சரிக்கை.
காரணம்: டையாக்சின் எனப்படும் புற்றீணி புற்றுநோயை, குறிப்பாக மார்பகப் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. ஞெகிழி குப்பிகளை ஃபிரீசரில் வைக்கும்போது, ஞெகிழியில் இருந்து டையாக்சின் தண்ணீரில் கலக்கிறது. அதேபோல, ஞெகிழி பாத்திரங்களில் உணவுப்பண்டங்களை வைத்து மைக்ரோவேவ் அவனில் சூடேற்றக் கூடாது என்று கேஸ்டில் மருத்துவமனை மருத்துவர் எட்வர்ட் ஃபியூஜிமாட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் சூடேற்றப்படும்போது, ஞெகிழி டையாக்சினை வெளியிடுகிறது. இது நாம் சாப்பிடும்போது உடலில் சேர்கிறது.
இதற்கு பதிலாக கண்ணாடி, மங்கு பாத்திரங்களை சூடேற்றுவதற்கு பயன்படுத்தலாம். அதேபோல துரித உணவுகளையும் ஞெகிழித்தாள் சுற்றி சூடேற்றக் கூடாது.
(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- தியடோர் பாஸ்கரன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இந்த உலகம் முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தம் என்கிற தலைக்கனத்தில், பேராசையில், சுயநலத்தில், அறியாமையில் தன் தலையில் தானே தீ வைத்துக் கொள்கிறான் மனிதன். எல்லா உயிர்களைப் போலவும் மனிதனும் இந்த பூமி உருண்டையில் வாழப்பிறந்தவன். அவ்வளவுதான்! இந்த நினைப்பு அவனிடம் இருந் திருந்தால், ஓசோனின் ஓட்டை விழுந்திருக்காது. ஜீவ நதிகள் வறண்டிருக்காது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். பஞ்சம் ஏற்பட்டிருக்காது. குடிநீருக்காகக் குடங்களைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாகத் திரிய வேண்டிய நிலைமை வந்திருக்காது.
தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை... தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர் களும் இல்லை. ஐந்து வகை நிலங்களைப் பிரித்து அங்கு உயிர் வாழும் பறவைகள். விலங்குகள், தாவரங்கள், பருவ காலங்கள் என்று மனிதன் வாழ்வதற்குத் தேவையான இயற்கையைக் ‘கருப் பொருள்’ பெயரிட்டு அழைத்தனர் நம் முன்னோர். முல்லைக்குத் தேர் கொடுத்ததும், மயிலுக்குப் போர்வை தந்ததும் இயற்கையை நேசிப் பதன் அடையாளமன்றி வேறென்ன? இன்று தமிழகத்தின் இயற்கை வனத்தைத் தொலைத்து விட்டு ஏதிலிகளாக அண்டை மாநிலங்களிடம் தண்ணீர் வேண்டுமென்று கையேந்திநிற்கிறோம். முன்னோர்கள் வளர்த்த தாவரங்களின் பெயர்களைக் கூட நாம் மறந்து விட்டோம். அரணைக்கும், ஓணானுக்கும் வித்தி யாசம் தெரியாமல் வளர்கிறார்கள் நம் பிள்ளைகள். பாட்டுப்பாடி தும்பிப் பிடிக்கத் தெரியாமல் வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் நம் குழந்தைகள்.
மனிதன் வாழ்வதற்கு அடித்தளமான சுத்தமான காற்று, சுத்தமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, இயற்கை சூழ்ந்த கூடு போன்றவைதான் நம் சுற்றுப்புறச் சூழ்நிலைகள். சுத்தமான காற்றுக்கு மரங்கள் அடர்ந்திருக்க வேண்டும். ஆறுகளின் வறட்சிக்கும், மணல் கொள்ளைக்கும் நேரடிச் சம்பந்தம் உண்டு. ஆற்றில் மணலைக் கொள்ளை யடிப்பதற்கும் தாய்ப்பாலைத் திருடி விற்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
“மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழ்ந்து விட முடியும். பறவைகள் இல்லாமல் மனிதர்களால் வாழவே முடியாது” என்றார் பறவையியலாளர் சலீம் அலி. பறவைகளற்ற ஒரே நாளில் பூச்சிகள் இந்த உலகில் மனிதர்களை இல்லாமல் செய்து விடும். இந்த இயற்கை சமநிலை தெரிந்துதான் ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ பற்றிய அவசியத்தை வலியுறுத்து கிறது திருக்குறள். ‘பல்லுயிரியம்’ என்பதுதான் உலகம் தழைப்பதற்கான தத்துவம். ஒவ்வொரு உயிருக்கும் இங்கே தேவை இருக்கிறது. கையில் அரிப்பெடுக்கிறது என்பதற்காக, கையை யாரும் வெட்டுவதில்லை. ஆனால், இலைகள் உதிர்ந்து குப்பைகள் வருவதாக மரங்களைக் கூசாமல் வெட்டுகிற மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் ஒரு யானையைக் கொன்று தந்தம் பிடுங்கி யானை பொம்மை செய்து அலங்காரமாக ஷோகேஸில் வைக்கிற ‘மேதை’களை இயற்கை எப்படி மன்னிக்கும்?
தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், மனிதன் உணவைக் கொஞ்சமாகவும் மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது. இயற்கை வளம் என்பது, வங்கியில் இருக்கும் பணம் போன்றது. அதன் வட்டியை மட்டும் எடுத்துக் கொள்வதுதான் நியாயம். பேராசையில் முதலிலேயே கை வைத்தால் மழைக்காலத்தில் கூட நூறு டிகிரி வெயிலைத் தவிர்க்க முடியாது. மரம் என்பது மனிதனைப் போல பூமிக்கு பாரமான உயிர் அல்ல. தன் ஒவ்வொரு உறுப்பாலும் இந்த பூமியை ஜீவனோடு வைத்திருக்க உதவும் கருப்பொருள், பறவைகளும், விலங்குகளும் இன்றும் ஒவ்வொரு உயிருமே அப்படித்தான்.
கொசுக்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்கும் ‘தலைப்பிட்டை’களைப் பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்துக் கொன்று விட்டோம். மலேரியா காட்டுத் தீ போன்று பரவி, ‘மலேரியா ஒழிப்பு’ பிரச்சாரம் நடத்த வேண்டியதாகிவிட்டது. இன்று பெரிய ஏரிகளிலும் குளங்களிலும் பறவைகள் தென்படாமல் போனால், அந்த நீர் அருந்து வதற்குத் தகுதியற்றது என்று பொருள். சாயக் கழிவுகளையும், தொழற்சாலைக் குப்பைகளையும் ஆற்றில் கொட்டினால் எப்படிப் பறவைகள் வரும்? இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.
வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே ‘பல்லு யிரியம் என்கிற’பயோடைவர்சிட்டிதான். மரங்கள், செடி கொடிகள், பாலூட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன. நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது. சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் மட்டும் 110 வகை தாவரங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் நீலகிரி, ஆனைமலை, பொதிகை மலை போன்ற மலைப் பிரதேசங்கள், புதர்க்காடுகள், ஏரிகள், ஆறுகள், கழிமுகங்கள், உப்பங்கழிகள், கடற்கரைகள், சதுப்பு நிலங்கள் என்கிற தம் விதவிதமான புவியியல் அமைப்பு எண்ணிலடங்கா உயிர்கள் வாழும் உறைவிடம். நம் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் கிடைப்பதற்கரிய இயற்கையை சர்வநாசம் செய்து விட்டோம் தமிழர்களே! இன்னும் கூட நாம் வெறி தீராமல் இருப்பதுதான் வேதனை.
தேயிலை, காபித் தோட்டங்களுக்காக, காகித உற்பத்திக் காக, அணைத் திட்டங்களுக்காக, தோல் பதனிடும் தொழிலுக் காக, வெட்டு மரத் தொழிலுக்காக நாம் காடுகளை அழித்து விட்டோம். நதிகளில் ரசாயன நச்சுப் பொருள்களின் கலப்பு, பூச்சிக் கொல்லி மருந்துகளின் தீய விளைவு, நில வேட்டையால் ஏரிகளின் சூறையாடல், உயிரற்ற அலங்காரப் பொருட்களுக்காகக் காட்டு உயிரினங் களைக் கொல்லுதல் என நம் அறியாமையும், சுயநலமும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகின்றன. சத்தியமங்கலம் புதர்காடுகளில் காணப்பட்ட சிவிங்கிப்புலியும், ஒகேனக்கல்லில் இருந்த வாருக்கோழியும், கழிமுகங்களில் வாழ்ந்த உப்புநீர் முதலையும், காவிரியில் இருந்த கறுப்புக் கெண்டை மீனும் அற்றுப் போய்விட்டன.
பிடி, கயிறு, வேழம், கொம்பன் என்று யானைகளின் விதவிதமான வகைகளைக் கண்டறிந்து ஒன்பது பெயர்களை வைத்த தமிழனின் பிள்ளைகள் அந்த மரபுச் செல்வம் பற்றி ஆங்கிலத்தில் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். அம்மொழியில் இங்கிலாந்தில் இல்லாத உயிரி னமாக யானைகளைக் குறிக்க ‘எலிஃபென்ட்’ என்ற ஒற்றைச் சொல்தான் இருக்கிறது. புலியைக் குறிக்க மட்டும் 11 சொற்கள் நம்மிடம் இருக்கிறது. புலியைக் குறிக்க மட்டும் 11 சொற்கள் நம்மிடம் இருக்கின்றன. நூறுக்கும் அதிகமாக பூச்சிகளின் பெயர்களை பட்டியலிட்டு குறிஞ்சிப்பாட்டு எழுதியவர்களுக்கு இன்று சுற்றுப்புறச் சூழலைத் தெரிந்து கொள்ள ‘துறைச் சொற்கள்’ இல்லாமல் ஆங்கிலத்திடம் கடனாளியாகக் கடன் வாங்குகிறோம். அறிவியல் பூர்வமாக இயற்கையைப் போற்றிய தமிழரின் பிள்ளைகள் இன்று ஷாப்பிங் காம்ப்ளெஸ்களுக்கும், தீம் பார்க்குகளுக்கும், பள்ளிச் சுற்றுலா போகும் அவலத்தை எங்கே போய் முறை யிடுவது? இயற்கையை அறிந்து கொள்ளாமல் இயந்திரங்களோடு வாழ்வதால் ‘உற்சாக பானங்கள்’ ஏராளமாக விற்பனை ஆகின்றன.
அடுத்த தலைமுறைக்கு உயிரினங்களை நேசிக்கக் கற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்த பட்சம் உயிரினங்களை வெறுக்காமல் இருக்கக் கற்றுக் கொடுத்தால் கூடப் போதும். இன்று குழந்தைகளுக்கான படங்களாக வருகிற ஹாலிவுட் படங்கள் பெரும்பாலும் விலங்குகளை மனித இனத்துக்கு எதிரானதாகவே சித்தரிக்கின்றன. மதிய சத்துணவுக் கூடங்கள் ஆரம்பிக்கும் முன்பு, தமிழகப் பல்லிகளுக்கு விஷம் இருநத்தில்லை.
பல்லி இனத்தின் பெரிய அண்ணனான உடும்பைச் சாப்பிடு கிறவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அழுகிய கற்களிகள், வெட்டுப்போன முட்டைகள் என குப்பைகளைக் கொட்டி ஈயமில்லாத பாத்திரங்களில் சமைத்து குழந்தைகளுக்கு மதிய உணவு பரிமாறும் பேராசைக் கான்ட்ராக்டர்கள்தான் குழந்தைகள் மயங்கி விழக்காரணமேயன்றி, பல்லிகள் அல்ல! பல்லிக்கு விஷமில்லை என்பது அறிவியல் பூர்வமான விஷயம். பல்லியின் மொழியை வைத்து ‘கௌலி சாஸ்திரம்’ படைத்திருக்கின்றனர் நம் முன்னோர். இன்று அதே பல்லி நமக்கு எதிரி! இன்றைய குழந்தையிடம் முட்டையிலிருந்து என்ன வரும் என்று கேட்டால் ‘ஆம்லெட்’ என்று சிரிக்கிறது. முட்டை, ஓர் உயிர் வளர்கிற இடம் என்பதை நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தருவதே இல்லை. டால்பினை வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான உயிராகப் பார்க்கிற நமக்கு, அதை ‘ஓங்கில்’ என்று நம் முன்னோர்கள் அழைத்த விபரம தெரியாது. காட்டில் வாழ்கிற உயிரினங்களைக் குறிப்பிடும் போது ‘கொடிய விலங்கு புலி’ என்று அறிமுகப் படுத்தப்பட்டால் எப்படி குழந்தைகளுக்கு விலங்கு கள் மேல் நேசம் வரும்? ‘கொடூரக்காடு’ என்று கதையை ஆரம்பிக்கிறார்கள் நம் கதாசிரியர்கள். சென்னையில் சாலையில் ஓரமாக நடந்து போனால், உயிருடன் திரும்புவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் அடர்ந்த நாடுகளில் பத்திரமாக, பாதுகாப்பாகச் சென்று திரும்ப முடியும். நம் மாநகரங்களைவிட ஆபத்தானவை அல்ல காடுகள்.
நாம் வீடுகள் கட்டுகிறோம் என்கிற பெயரில் சுவர்களையே கட்டுகிறோம். பல்வேறு உயிர்கள் வாழும் இடத்துக்குப் பெயர்தான் வீடு. ஒரு பறவை வந்து அமர மரம் இல்லாத வீடும், பட்டாம்பூச்சி வந்து தேனருந்த இல்லாத வீடும் எப்படி வீடாகும்? ஒரு நாடு அதன் மக்களால் கட்டடங்களால், தொழிற்சாலைகளால் மட்டும் ஆவதல்ல. அதன் ஆறுகள், குளங்கள், காடுகள், மலைகள், பாலை வனங்கள், பறவைகள், விலங்குகள், சின்னச் சின்ன உயிரினங்களாலும் ஆனது அடுத்த தலை முறைக்கு நம் சுற்றுப்புறச் சூழல் குறித்த அறிவை. இயற்கையின் மீதான அன்பே, ஆரோக்கிய வாழ்வு குறித்தான அக்கறையை உருவாக்குவதே உடனடித் தேவை. அதற்கு பள்ளிக்கூடங்களின் பொறுப்பு உணர்வே போதுமானது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் சரியான பாடநூல்களோ, ஆசிரியர்களோ பள்ளிகளில் இல்லை.
சுற்றுச் சூழல் சட்டங்கள் வெறும் சட்டப் புத்தகங்களில் மட்டும் தூங்காமல், அதனை நடைமுறைப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். இயற்கையைச் சுரண்டுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். மரம் வளர்ப்பதை ஓர் இயக்கமாகவே நடத்த வேண்டும். அதை மாணவர் களுக்கு மதிப்பெண் பாடமாக மாற்ற வேண்டும். இயற்கையைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடும். ‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண்’ எனும் திருக்குறள் காடும் உடையது அரண் எனும் திருக்குறள் மேற்கோளுக்காகப் பயன் படுத்தப்படாமல் குறிக்கோளாக மாற வேண்டும். இதில் எல்லோருக்கும் பங்கிருக்கிறது நண்பர்களே! காரணம். இயற்கையை அழித்ததில் நம் எல்லோருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பங்கு இருக்கிறது.
நன்றி:- சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம், தவுட்டுப் பாளையம் அந்தியூர்.
(பூவுலகு மார்ச் 2011 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- மு.வெற்றிச்செல்வன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
இங்கே நாம் முதன்மையாக கவனிக்கவேண்டியது இயற்கை சீற்றத்தையும் அதன் காரணமாக விளையக்கூடிய விபத்துகளையும் அழிவுகளையும் எதிர்கொள்ளும் ஜப்பானின் அவசர தயாரிப்பு நிலை (Emergency Preparedness) தான். அணுக்கதிர்கள் மக்களுக்கு ஆபத்தாக முடியும் என்னும் காரணத்தால் அணுஉலையின் சுற்றுப்புறத்தில் (சுமார் 25 கி.மீ.) வசித்து வந்த மக்களை சில மணிநேரத்தில் வெளியேற்றியுள்ளது ஜப்பான் அரசு. இந்தியா இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் விதம் நாம் அறிந்ததே. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக் கூடிய அளவிற்கு நாம் தயார் நிலையில் உள்ளோமா என்கிற கேள்வி இப்பொழுது மிகவும் அவசியமானது.
இந்திய அணுசக்தி துறை
1948 ஆம் ஆண்டு இந்திய அணுசக்தி ஆணையம் (Atomic Energy Commission) துவங்கப்பட்டது. பின்பு 1954 ஆம் ஆண்டில், பிரதம மந்திரியின் தலைமையில் இந்திய அணு சக்தித்துறை (Department of Atomic Energy) செயல்படத் துவங்கியது. அணுசக்தி ஆணையம் இதன் கீழாக செயல்பட்டு வந்தது. அணுசக்தித் துறையே அணுஉலைகளை கட்டுப்படுத்தும் அமைப்பாக உள்ளது. அணுசக்தி தொடர்பான செயல்பாடுகளை கண்காணிக்கும் அமைப்பாக அணுசக்தி நெறிப்படுத்தும் வாரியம் (Atomic Energy Regulatory Board) செயல்படுகிறது. இந்த அமைப்பை தற்சார்பு உடைய அமைப்பாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை இப்பொழுது எழுந்துள்ளது. அணுசக்தி ஆராய்ச்சி தொடர்பான பல ஆராய்ச்சி மையங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. Nuclear Power Corporation of India Ltd உள்ளிட்ட அணுசக்தி சார்ந்த சுமார் ஐந்து பொதுத் துறை நிறுவனங்களும் அணுசக்தித் துறை கீழாக இயங்குகின்றன. தற்போது அணுசக்தித் துறை கீழாக 18 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 8 அணுமின் நிலையங்கள் கட்டுமானமாகி வருகின்றன.
அணுஉலைகளின் கட்டுமானங்கள்
பலவிதமான அபாயங்கள் நிறைந்தவையாக அணுஉலைகள் உள்ள காரணத்தால் இவை கட்டப்படுகின்றபோது கடைப்பிடிக்க வேண்டிய பலவித கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அணுஉலைகளின் செயல்பாட்டை இடத்தேர்வு, கட்டுமான வடிவமைப்பு, கட்டுமானம், செயல்பாடு மற்றும் செயல்நிறுத்தம் எனப் பிரிக்கலாம்.
இடத்தேர்வு : இயற்கை சீற்ற ஆபத்து உள்ள பகுதியில் அணுஉலை கட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது விதி. ஜனத்தொகை குறைவான பகுதியே அணு உலை கட்டுமானத்திற்குத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதும் விதி. வரலாற்று சிறப்பு மிக்க நினைவுச் சின்னங்கள் மற்றும் முக்கிய உயிரின பாதுகாப்பு பகுதியாகவும் அது இருக்கக் கூடாது என்றும் விதியுள்ளது. இந்தியாவில் தற்போது இயங்கும் எல்லா அணு உலைகளும் நிலநடுக்கம் வரக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல அணுஉலைகள் கடலோரமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றால் சுனாமி ஆபத்தும் உள்ளது.
மேலும் இடத்தேர்வில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று இருக்க வேண்டும். அதாவது சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டப்படி அனுமதி பெற்று இருக்க வேண்டும். அனுமதி அளிக்கப்படுவதில் பொதுமக்களின் கருத்துகளும் அவசியம் கேட்கப்பட வேண்டும்.
கட்டுமான வடிவமைப்பு : அணு உலை கட்டப்படுவதிற்கான பல நெறிமுறைகளை அணுசக்தித் துறை வகுத்துள்ளது. குறிப்பாக அணு உலை கட்டுவதற்கு தேர்வு செய்யக்கூட வழிமுறைகளை Monograph on Siting Of Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான நெறிமுறைகளை Geotechnical Aspects and Safety of Foundation for Buildings and Structures Important to Safety of Nuclear Power Plants வழங்குகிறது. அணுக்கதிர் வெளியேறாமல் இருக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறையை Radiation Protection Aspects in Design for Pressurised Heavy Water Reactor Based Nuclear Power Plants வழங்குகிறது. அணு உலை கட்டுமானத்திற்கான தரத்திற்கான நெறிமுறைகளை Quality Assurance in Nuclear Power Plants வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட எல்லா நெறிமுறைகளும் 2000-ம் ஆண்டுக்கு பின்பாக இயற்றப்பட்ட காரணத்தால் புதிதாக கட்டப்படும் அணு உலைகளுக்கு மட்டுமே இவை பெருந்தும். தற்போது இயங்கி வரும் பல அணு உலைகள் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மேலும் இத்தகைய நெறிமுறைகளை பின்பற்றித்தான் அணு உலைகள் கட்டப்படுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு தற்சார்பு உடைய அமைப்புகள் இந்தியாவில் கிடையாது.
அணு உலை செயல்பாடு : யுரேனிய அணுக்கள் பிளக்கப்படும்போது, 3500- 4000 டிகிரி (செல்சியஸ்) வெப்பத்துடன் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அணு உலையில் இதே அணு பிளப்பின்போது நியூட்ரான் விழுங்கிகளைத் (Neutron Absorbers) தக்க சமயத்தில் நுழைவித்து, வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த வெப்பசக்தி காரணமாக வெளியாகும் நீராவி கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அணு உலையில் அணுகதிர் வெளியேற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. இவை மனிதர்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்களை உண்டாக வல்லது. எனவே இவை அணு உலையைவிட்டு வெளியேறாமல் பாதுகாக்க வேண்டியுள்ளது. ஒரு அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்ரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை (Radioactive Spent Fuel Wastes) உண்டாக்கும். இவையும் அணுக்கதிர் உடையவை. இவற்றை அழிக்க முடியாத காரணத்தால் இவற்றையும் பல ஆயிரம் ஆண்டுகள் நாம் பாதுகாக்க வேண்டும்.
செயல்நிறுத்தம் : ஒரு அணு உலையின் மொத்த ஆயுட்காலமே 40-50 வருடங்கள்தான். அதன்பிறகு அதை அப்படியே பெரிய, பெரிய கான்கிரீட் தொட்டியின் மூலம் பூமிக்கடியில் புதைத்துவிடவேண்டும். இப்படி அணு உலைகளை மூடுவதற்கு De-Commissioning என்று சொல்வார்கள். அதன்பிறகு அந்தப் பகுதி உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக மாறிவிடும். ஆக ஒவ்வொரு நாற்பதாண்டுக்கும் ஒரு தடவை அணு உலைகளை இடம்மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
அணு உலை விபத்துகள்
1979இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டியன.
இந்திய அணு உலைகளில் விபத்துகளே நேர்ந்தது இல்லையா என்றால் பல விபத்துகள் நிகழ்ந்து உள்ளன என்பதே பதில். இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.
அணுசக்தி துறையின் முன்னாள் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் நம் நாட்டில் உள்ள அணுசக்தி உலைகளில் பலவிதமான பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக 1995-ம் ஆண்டு ஓர் அறிக்கையில் கூறினார். இதனை அடிப்படையாகக் கொண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்பொழுது அணுசக்தித் துறை சார்பாக பல விளக்கங்கள் கூறப்பட்டது. மேலும் அணுஉலை பாதுகாப்பு என்பதே அணுசக்தி சட்டப் பிரிவு 18 கீழ் இரகசியமானது என்றும் உயிர் நீதிமன்றத்தில் பார்வைக்கு மட்டும் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யத் தயார் என்று கூறியது அணுசக்தி துறை. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம் ஆவணங்களை தாக்கல் செய்யத் தேவையில்லை என்றும் நம் நாட்டு அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றும் கூறியது. இதனைத் தொடர்ந்து பிரிவு 18 –யை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது [PUCL vs UOI (2004) 2 SCC 476].
கூடங்குளத்தில் உள்ள கான்கீரிட் ஆய்வுக் கூடம் ஐஎஸ்ஓ - 9001 தரச்சான்று பெற்றுள்ளது என்று அணுசக்தித் துறை பெருமைப்பட்டு கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் மின்னணு கட்டுப்பாட்டிற்கு என கூடங்குளத்தில் கட்டப்பட்டு வந்த இருமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
வெளிப்படையற்றதன்மை தான் இந்திய அணுசக்தி கொள்கையாக உள்ளது. எனவே அணு உலை விபத்துகள், அது குறித்த பல தகவல்கள் மக்களுக்கு மறுக்கப்படுகின்றன.
தமிழகத்தில் அணுசக்தி:
சென்னையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் கல்பாக்கத்தில் அமைந்துள்ளது சென்னை அணுமின் நிலையம் (Madras Atomic Power Station). இந்த உலையின் கட்டிடப்பணிகள், 1981 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ஆனால் போதிய அளவு கனநீர் இல்லாமையால் முதல் உலை 1983 ஆம் ஆண்டில் தான் செயல்படுத்தப்பட்டது. இரண்டாம் உலை 1985 ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டது. இங்கு 500 மெகா வாட் திறன் உள்ள இன்னும் ஒரு உலையை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் அணுமின் உலைகள் ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.
சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை புளுத்தோனியம் என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன் இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்றது இந்த உலை. இந்த உலை இந்திய வடிவமைத்த வேக ஈனுலை (Fast breeder reactor) வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளைக் கொண்டுள்ளது. உலையின் பாதுகாப்புக்காக இவ்வாலையைச் சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுகிறது.
அவசர தயாரிப்பு நிலை
1966–ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த அணுசக்தி சட்டம் (Atomic Energy Act, 1962) அணுஉலை காரணமாக உண்டாகும் சுற்றுச்சுழல் பாதிப்பு, அதனை தடுக்கும் முகாந்திரம், இழப்பீடு என எதைப்பற்றியும் பேசவில்லை. ஆனால் அணுசக்தி தொடர்பான அனைத்தும் இரகசியமானது என்றும் இச்சட்டத்தை மீறுவோர் மீது தண்டிக்க வகை செய்யும் கடும் தண்டனைப் பிரிவுகளை கொண்டுள்ளது இச்சட்டம்.
அணுசக்தி சட்டம் மூலமாக சில விதிகள் இயற்றப்பட்டுள்ன. அதில் Atomic Energy (Safe Disposal of Radioactive Wastes) Rules, 1987 கதிரியக்க எருக்கழிவை பாதுகாப்பைப் பற்றி கூறுகிறது. மேலும் அணுசக்தி கதிர்வீச்சு பாதுகாப்பு தொடர்பான [Atomic Energy (Radiation Protection) Rules, 2004] சட்ட விதியும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவிதி அணுவிபத்து நேர்ந்தால் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்புநிலைக்கான (Emergency Preparedness) செயல்பாடுகளைப் பற்றி திட்டம் வரையப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. Convention on Assistance in the Case of a Nuclear Accident or Radiological Emergency ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
அணுவிபத்து நேருகின்ற போது அணுஉலை நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை செயல்பாடுகளைப் பற்றிய திட்டமும் (Site Emergency Preparedness Plans) மற்றும் அணு உலை சுற்றுப்புறத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசர தயாரிப்பு நிலை குறித்த திட்டமும் (Off-site Emergency Preparedness Plans) ஒவ்வொரு அணுஉலை சார்ந்து இயற்றப்பட வேண்டும் என்று மேற்கூறிய சட்டவிதி கூறுகிறது. இந்த தயாரிப்பு நிலை குறித்தான திட்டம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authourity) அணு உலை விபத்து குறித்த அவசர தயாரிப்பு நிலைக்கான திட்ட அறிக்கையை (Management of Nuclear and Radiological Emergencies) 2009-ம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு தயாரிப்பு நிலையின் தேவை மற்றும் செயல்படும் முறை பற்றிய குறிப்புகள் உள்ளன.
கடந்த 2004-ம் ஆண்டு கல்பாக்கம் அணு உலையை சுனாமி தாக்கியபோது அணு உலை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே உடனடியாக அணு உலை அருகாமையில் இருந்து வெளியேற்றப்பட்டனரே தவிர சுற்றுபுறப் பகுதியில் வாழும் சாமானிய மக்களைப் பற்றி யாரும் கவலை கொள்ளவில்லை. இதற்கு பின்பாகவும் நிலைமை மாறியுள்ளதா? மேற்கூறிய அவசர தயாரிப்பு திட்டப்படி விபத்தை எதிர்கொள்ள கூடிய அளவில் கல்பாக்கம் அணு உலை உள்ளதா என்பதைக் காண்போம்.
(i) கல்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை அணு மின் நிலையத்தில் 16 கி.மி சுற்றளவில் சுமார் 70 கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார ஜனத்தொகை சுமார் 1 லட்சமாகும். அணு உலை விபத்து நேர்ந்தால் இவ்வளவு மக்களையும் பாதுகாப்பான பகுதிக்கு இடப்பெயர்வு செய்ய சரியான சாலை வசதியோ வாகன வசதியோ இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை.
(ii) அடுத்து கல்பாக்க சுற்றுப்புற மக்களிடம் அணு உலையின் ஆபத்து மற்றும் அணுக்கதிர் ஆபத்து பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே ஒரு விபத்து நேருகின்றபோது தாமாகவே பாதுகாப்பு பகுதிக்கு செல்லும் வாய்ப்பு இம்மக்களிடம் குறைவு.
(iii) அடுத்து மருத்துவ அவசர தயாரிப்பு நிலை மிகவும் மோசமாக உள்ளது. கல்பாக்கத்தைச் சுற்றி 16 கி.மி. தொலைவில் மூன்று ஆரம்ப சுகாதார மையங்களே உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையில் மருத்துவர்களும் செலிவியர்களும் உள்ளனர். இவர்களுக்கு அணுக்கதிரினால் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு முதலுதவி செய்வதற்கான போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. மேலும் முதலுதவிக்கான மருந்துகள் போதிய அளவு இங்கு உள்ளதா என்பதும் மிகப் பெரிய கேள்வியே. அணுக்கதிர் பாதிப்புகளை கண்டறியக் கூடிய கருவிகளும் இங்கு இல்லை.
(iv) கல்பாக்க பகுதி மக்களை எச்சரிக்கை செய்வதற்கான சரியான தொலைத்தொடர்பு வசதியும் இல்லை. வட்டார அரசு அதிகாரிகள் மூலமாக மக்கள் எச்சரிக்கை செய்யப்படுவர் என்று அணுசக்தித் துறை கூறுகிறது. நடைமுறையில் இது எந்த அளவிற்கு உதவக் கூடும் என்பது கேள்விக்குறியே.
(v) விபத்து பின்பாக மக்களை குடியமர்த்தக் கூடிய மாற்றுப் பகுதியும் இதுவரை கண்டறியப்படவில்லை. அணு உலை விபத்து பின்பாக ஜப்பான் அரசு இதுவரை வெளியேற்றப்பட்ட மக்களை மாற்று இடத்தில் குடியமர்த்தி அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளது. இத்தகைய பண்பு நம் அரசுக்கு இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே.
அணு உலை விபத்து காரணமாக வெளியேறக் கூடிய அணுக்கதிர்கள் இவ்வளவு தொலைவு தான் பயணிக்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஆக கல்பாக்கத்தில் அணு உலை விபத்து நேர்ந்தால் அது 25 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் தொகை மிகுந்த மாமல்லபுரம், 75 கி.மீ. தொலைவில் உள்ள சென்னை போன்ற இடங்களைத் தாக்கக் கூடும்.
முடிவாக...
அணு உலை விபத்து என்று இல்லாமல் கல்பாக்க பகுதி மக்கள் பல நோய்களால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அணு உலை சுற்றுப்புற பகுதிகள் தொடர்ச்சியாக அணுசக்தித் துறையினால் ஆய்வு மேற்கொள்ள அணுசக்தி சட்டம் வலியுறுத்துகின்ற போதும் இத்தகைய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவே இல்லை. கல்பாக்கம் அருகே உள்ள பல கிராமங்களுக்கு இதுவரை சரியான மின்சார வசதி இல்லை என்பதே யாதார்த்த நிலை. அணு உலையில் இருந்து கிடைக்கப்பெறும் கழிவுகளைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகின்றன. இதுவே அணு உலைகள் கட்டப்படுவதற்கான முக்கிய காரணம். இந்தியாவின் வல்லரசுக் கனவு காரணமாக உண்டான கதி இது. மேலும் அணு உலை கட்டுமான செலவுத்தொகைக்கு எவ்வித தணிக்கை கட்டுப்பாடுகளும் இல்லை. இதில் மின்சார தயாரிப்பு என்பதெல்லாம் சுத்தப் பொய். இழப்புகள்தான் அதிகம். இறுதியில் பாதிப்புக்குள்ளாவது மக்கள்தான்.
- விவரங்கள்
- அழகிய இளவேனில் (என்கிற) நாசா
- பிரிவு: சுற்றுச்சூழல்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜெய்டபூரில் 9,900 MW அணு மின் நிலையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் அமைக்கப்படும் Evolutionary Pressurized Reactors (EPR) இதுவரை உலகில் வேறு எங்கும் பயன்படுத்தியது இல்லை (not commissioned yet) . அதனால் இது செயல்படும்போது ஏற்படும் பிரச்னைகளை இதை வடிவமைத்து தரும் AREVA விற்கே முழுமையாக தெரியாதபோதும், இந்த Reactorகளின் நம்பகத் தன்மையும் பாதுகாப்பும் கேள்விக்குறியாக இருக்கும்போது அரசு எப்படி ஒப்புக் கொண்டது என்பது ஆச்சர்யமாக உள்ளது .
ஒரு லட்சம் கோடி செலவு திட்டத்தை எந்த மாதிரி இடத்தில் தொடங்கப் போகிறார்கள் தெரியுமா? SEISMIC ZONE 3 நிலையில் உள்ள 1985 முதல் 2005 வரை சுமார் 92 சிறிய நில நடுக்கங்களைக் கண்ட இடத்தில். அதிகபட்சமாக 1993ல் ரிக்டர் 6 .2 பதிவாகி உள்ளது. நில நடுக்கங்களை சமாளிக்கும் திறன் கொண்ட அதிக பாதுகாப்பு வசதி கொண்ட அணு மின் நிலையங்கள் அமைத்த ஜப்பானே புகுஷிமாவில் தடுமாறும்போது நாம் எந்த நம்பிக்கையில் இந்த திட்டத்தை பாதுகாப்பாக செயல்படுத்துவோம் அதுவும் நில நடுக்க பாதிப்பு அதிகம் உள்ள பகுதியில் ?
மேலும் இந்தியா சொந்தமாகவே 18 PHWR களை (pressurised heavy water reactor) தயாரித்து அதை வெற்றிகரமாக சமாளித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் PHWR முறையில் தயாரிக்காமல் புதிய முறையான EPR முறையில் தயாரிக்க வேண்டும் ? மேலும் 1 MWe க்கு EPR முறையில் இருபது ௦ கோடி செலவாகும். ஆனால் PHWR முறையிலோ 1 MWeக்கு எட்டு கோடிதான் செலவாகும். எதற்கு அரசாங்கம் அதிக செலவில் ரிஸ்க் எடுக்கிறது ?
எனினும் இந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளான கொங்கன் பசாவ் சமிதி மற்றும் ஜனஹிட் சேவா சமிதி முதலியன இத்திட்டத்தை எதிர்த்து போராடுகின்றன. வழக்கம் போல மகாராஷ்டிரா முதல்வரும் மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சரும் இந்த திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று சூளுரைத்துள்ளனர்.
மொத்தமுள்ள 2400 குடும்பங்களில் வெறும் 154 குடும்பங்கள் மட்டுமே இதுவரை நிலத்தை ஒப்படைத்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு BNP பரிபாஸ் மற்றும் HSBC வங்கிகள் பெருமளவு நிதி தர சம்மதித்துள்ளன. அந்த வங்கிகள் இந்த திட்டத்திற்கு பணம் கொடுக்க கூடாது என்று GREEN PEACE என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளனர். நீங்களும் அதில் பங்கு பெறுங்கள்.
http://greenpeace.in/take-action/stop-dangerous-nuclear-power-in-jaitapur/mail-the-banks.php?tyf=2
இதற்கு பதிலாக சூரிய ஒளி மற்றும் BIOMASS போன்ற ஆபத்தற்ற மின் உற்பத்தி திட்டங்களுக்கு இவர்கள் முக்கியத்துவம் தரலாமே.
மிகுந்த ஆபத்தினை உடைய அணு மின் திட்டங்களை செயல்படுவதில் இந்த அரசு காட்டும் ஆர்வம் மக்கள் நலம் பற்றிய எந்த அக்கறையும் இவர்களுக்கு இல்லை என்பது வெளிப்படுத்துகிறது.
- குற்றாலத்தில் குளித்தால்... நச்சு ஆறாகும் சிற்றாறு
- ஐ.நா.வின் மின்னணு கழிவு அறிக்கையில் இந்தியாவின் நிலை என்ன?
- ஒலி மாசு
- உயிர் வாங்கும் ஒலி மாசு!
- திருப்பூர் சாய ஆலை பிரச்சனைக்கான தீர்வு என்ன?
- பூமியை சூடாக்கும் பச்சைப் புரட்சி
- புவி வெப்ப உயர்வில் வரலாறு படைத்த 2010
- பட்டாசு வெடிப்பதால் யாருக்கு ஆபத்து?
- வளிமண்டலத்திலும் துப்புரவுப்பணி
- பூவுலகின் பெரிய குப்பைத் தொட்டி
- தலைவலியாகும் மின்னணுக் கழிவுகள்
- அச்சுறுத்தும் புவி வெப்பமடைதல்
- மனிதனை மட்டுமல்ல சுற்றுச்சூழலையும் அழிக்கும் புகையிலை
- கைகாவில் கதிரியக்க கசிவு-அணுசக்தியின் ஆபத்து நிரூபணம்
- மழைக்காடுகளின் மரணம் - அழிவின் வாசலைப் பற்றி ஒரு நேரடி சாட்சியம்
- தமிழகம்-கர்நாடக தண்ணீர் பிரச்சினைக்கு பசுமைப் புரட்சியின் வன்முறைதான் காரணம்
- அவசரக் கத்தரியும் அறிவியல் அநீதியும்
- வற்றிப் போகும் காவிரி
- கடலின் மீது ஒரு சுமை
- கார்பன் டை ஆக்சைடை கைப்பற்ற....