கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- பாரி
- பிரிவு: சுற்றுச்சூழல்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் பன்னாட்டு வல்லரசுகள் புதிய காலனியக் கொள்கையைப் பல துறைகளிலும் புகுத்தி வருகின்றன. வல்லரசு நாடுகள் தேசிய இன மக்களின் மரபு சார்ந்த உணவு, மருத்துவம், வேளாண்மை, தட்ப வெட்பம் போன்ற அனைத்து நிலைகளிலும் மாற்றம் செய்கின்றன. அதன்மூலம் இவற்றுக்கெல்லாம் தம்மைச் சார்ந்திருக்கும் நிலையை அவ்வரசுகள் தோற்றுவிக்கின்றன.
தமிழக மக்கள் தங்களது சொந்த மருத்துவ முறையான சித்தா, யோகா, வர்மம் ஆகியவற்றினை இழந்து அலோபதி மருத்துவத்தைச் சார்ந்து இருப்பதாலேயே பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுள்ளனர். காரணம், அம்மருத்துவம் நோய் நாடி நோய் முதல் நாடி எனும் அடிப்படையிலானது அன்று. அது நோயினை அப்போதைக்கு தணிக்கும், தள்ளிப் போடுமே தவிர அடியோடு களைவதில்லை என்பது இன்று புரிய வைக்க வேண்டிய செய்தியும் அன்று.
இந்திய அரசு பசுமைப் புரட்சி எனும் பெயரில் இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுத்தப்படாத ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் செறிவூட்டி வேதி உரங்கள் எனும் பெயரில் திணித்து நம் நிலத்தை நஞ்சாக்கியது. மரபணு மாற்றுப் பயிர் என்பதன் மூலம் நமது விதைகளை அழித்துப் பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்திவிட்டது. இதனால், தமிழக மக்களில் 80 விழுக்காட்டினர் தொடர்ந்து நோயுடன் வாழும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதில் வெற்றி கண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வல்லாதிக்கத்துடன் தொடர்ந்து இணைந்து தமிழர்களது நிலத்தினை முற்றுகை இட்டுள்ளன. அவை கட்டுப்படுத்தப்படாத தொழிற்சாலைகள், கெய்லின் எரிவாயுக் குழாய் பதிப்புத் திட்டம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஆற்று மணல் எடுப்பு, மலைகளை உடைத்து கிரேனைட் எடுத்தல், தாது மணல் எடுத்தல், கனிம வளங்கள் வெட்டி எடுத்தல், மலைகளைச் சுற்றுலாத் தலங்களாக மாற்றுதல், கூடங்குளம் அணுஉலை என்று தொடர்கிறது. இதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் வான்வழியாகத் தமிழகத்தில் நிறைந்துள்ள கனிம வளங்களை அடையாளம் கண்டுள்ளன. இவற்றின் ஒரு பகுதிதான் மீத்தேன் எரிவாயுத் திட்டம்.
தமிழகத்தில் மீத்தேன், பழுப்பு நிலக்கரி, இருப்பு!
தமிழ்நாடு புதுச்சேரி கடலோரப் பகுதியான பாகூரில் தொடங்கி நெய்வேலி, திருமுட்டம் (சிறிமுஷ்ணம்), ஜெயங்கொண்டம் வழியாக மன்னார்குடிக்குத் தெற்குப் பகுதி வரையான காவிரிப் படுகையில் பழுப்பு நிலக்கரியும் அத்தோடு சேர்ந்து மீத்தேன் என்ற எரிவாயுவும் இருக்கிறது. பழுப்பு நிலகரியின் மதிப்பீடு 27,389 மில்லியன் டன்னும், மீதேன் வாயுவின் மதிப்பீடு 98,000 கோடி கன அடியும் உள்ளன.
இந்திய தமிழக அரசுகளின் திட்டம்
மனித விலங்குக் கழிவுகள், அழுகிய காய்கறி, சாக்கடை, சகதி, குப்பைகள், நுண்ணுயிரிகளால் சிதைக்கப்படும் போது மீத்தேன் கிடைக்கிறது. தஞ்சாவூர் சாத்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திலும், நெல்லை மாவட்டம் சலவை சோப்பு தயாரிக்கும் தொழிற்சாலையிலும், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் இவ்வாறான மீத்தேன் தயாரித்து மின்சாரமும் சமையலும் செய்கின்றனர். இது நிலத்திற்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடில்லாத முறையாகும்.
இப்படி மீத்தேன் தயாரிக்கும் முறையினால் பன்னாட்டு நிறுவனங்களோ, இநதிய அரசியல் அதிகார வர்க்கங்களோ கோடிகோடியாகக் கொள்ளையடிக்க முடியாது. எப்படி மின்சாரம் தயாரிக்கப் பல முறைகள் இருந்தும் மக்களுக்குக் கொடிய ஆபத்தை உண்டுபண்ணும் அணுமின் நிலையங்களைத் திறக்கிறார்களோ அதேபோலத்தான் காவிரியை பாலைவனமாக்கப் போகும் மீத்தேன் எரிவாயுத் திட்டத்தையும் செயல்படுத்த உள்ளனர். அணுமின் நிலையங்களில் பல இலட்சம் கோடி புரள்கிறது என்றால் மீத்தேன் எரிவாயுத் திட்டத்திலும் இதே நிலைதான். அதனால்தான் மக்களின் போராட்டங்களைப் பற்றி கவலைப்படாமல் இத்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றனர்.
இந்திய அரசின் பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் 27.07.2010 அன்று “கிரேட் ஈஸ்டேர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் லிமிட்டெட்’ என்ற நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளது. அதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுடன் 04.01.2011 அன்று ஒப்பந்தமிட்டது.
மீத்தேன் எரிவாயுவின் குறைந்தபட்ச மதிப்பு ரூ 6 இலட்சம் கோடி.. இந்திய அரசு பெற்றுக்கொள்ளும் தொகையோ வெறும் ரூ. 5,000 கோடி மட்டுமே. முதற்கட்டமாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சில பகுதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. மொத்த நிலப்பரப்பு 691 சதுர கிலோமீட்டர். இதில் 24 ச.கி.மீ பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காகவும், 667 ச.கி.மீ பரப்பு மீத்தேன் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
மீத்தேன் எடுக்கும் முறையும் அவற்றினால் ஏற்படும் விளைவுகளும்
நிலக்கரிப் படுகை மீத்தேன் வாயு ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடர்த்தியாக இருப்பதில்லை. நிலக்கரி படிமத்தில் அதன் நுண்துளைகள், வெடிப்புகளில் நிலக்கரிப் பாறைகளின் தளப்பரப்பில் ஒட்டியிருக்கும். மன்னார்குடி பகுதியில் நிலக்கரி படிமங்கள் தரைமட்டத்திற்கு கீழே 500 அடிமுதல் 1650 அடி ஆழம் வரை காணப்படுகிறது. தற்போதுள்ள நிலத்தடி நீர் இந்தப் படிமங்களை அழுத்திக்கொண்டுள்ளது. இந்த அழுத்தத்தினால் அடர்த்தியற்றற மீத்தேன் வாயு நிலக்கரி பாறைகளிலிருந்து வெளியேற முடிவதில்லை. நிலக்கரிப் பாறையில் அழுத்தம் கொடுக்கும் நிலத்தடி நீரை இறைத்து வெளியேற்றிய பின்னரே மீத்தேன் வாயு வெளியேற முடியும்.
“நீரியல் விரிசல்” (Hydraulic fracturing) பயன்படுத்தப்படுகிறது. பூமியில் 2000 அடிவரை துளையிட்டு குழாய் அமைத்து அதிலிருந்து பக்கவாட்டில் பூமிக்கு அடியிலேயே இரண்டு கி.மீ தூரத்திற்கு எல்லா திசைகளிலும் குழாய் பதிக்கப்படுகிறது. நிலக்கரி படிமத்தை நொறுக்க நீரும் மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு கலவை அழுத்தத்துடன் உள்ளே செலுத்தப்படும். அப்போது நிலக்கரி படிமங்கள் நொறுங்கி இடுக்கில் உள்ள மீத்தேன் எரிவாயு நீரோடு உறிஞ்சப்பட்டுப் பிரிக்கப்படுகிறது. பூமியில் செலுத்தப்பட்ட வேதிக் கலவையில் 30 விழுக்காடு மட்டுமே வெளியே எடுக்க முடியும். மீதி பூமிக்குள்ளேயே தங்கி நீரினை நஞ்சாக்குகிறது. வெளியேற்றப்படும் நீர் கடல் நீரை விட 5 மடங்கு உப்பானது. இது பாசனக் கால்வாய் மூலம் வெளியேற்றப்பட உள்ளது. அக்கழிவுகளால் நீர் பாயும் நிலப்பகுதி விளைய முடியாத பொட்டல் காடாகும். மேலும் 500 முதல் 1,650 அடிவரை குழாய் வழியாக நீர் வெளியேற்றும் போது அதனை சமப்படுத்த கடல் நீர் உள்வாங்கப்படும். மேலேயுள்ள நன்னீரும் உள்வாங்கப்படும். 80 ஏக்கருக்கு ஒரு கிணறு வீதம் சுமார் 2,000 கிணறுகள் தோண்ட உள்ளனர். ஒரு கிணற்றிலிருந்து ஒரு நாளைக்கு 75,000 லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். இது 40 ஆண்டுகள் நடைபெறும். அடுத்து 100 ஆண்டுகள் நிலக்கரி எடுக்கப்படும்.
இதனால் இந்தப் படுகை மட்டும் பாதிக்கப்படப்போவதில்லை. சுற்றியுள்ள மாவட்டங்களின் நீர்த்தொகுப்புகள் (Aquifers) வறண்டு போகும். மேலும் நிலநடுக்கம், மண் உள்வாங்குதல் ஏற்பட்டு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், வீடுகள் விரைவில் பாதிக்கப்படுவதுடன் அழிந்தும் போகும். மக்களுக்கு புற்றுநோய், மரபணு மாற்றக் கோளாறுகள், மூளை,நரம்புக் கோளாறு, நாளமில்லாச் சுரப்பிகள் பாதிப்பு, தோல் நோய், கண் பார்வை இழப்பு, தொடு உணர்வு அழிவு, ஈரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு இவைகள் தொடர்பான பல்வேறு நோய்கள் ஏற்படும். மொத்தத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலமாக மாறிவிடும்.
காவிரிப் படுகையைப் பாதுகாப்போம்!
மத்தியிலுள்ள காங்கிரசு அரசும், மாநிலத்திலிருந்த திமுக அரசும் மக்கள் மீது துளியும் இரக்கமின்றி இத்திட்டத்திற்கு அனுமதி அளித்தன. இத்திட்டத்திற்கு எதிரான மக்களின் எழுச்சியைக் கண்ட அதிமுக ஓர் ஆய்வுக் குழுவை அமைத்தது. இக்குழு மூன்று மாதக் காலத்திற்குள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அளிக்கும் என அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடம் ஆன பிறகும் அறிக்கை வந்தபாடில்லை. விவசாயிகளுக்கு ஒரு சிறு பாதிப்பு என்றாலும் இத்திட்டத்தை செயல்பட விடமாட்டோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா 17.07.2013 இல் உறுதியளித்தார். நாகப்பட்டின தேர்தல் வாக்குறுதியிலும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மீத்தேன் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் தொடங்கிய போது திருவிடைமருதூர் வட்டத்தைச் சேர்ந்த நரசிங்கன்பேட்டை மற்றும் மதுக்கூர் வட்டத்தில் பாவாகி கோட்டை ஆகிய இடங்களில் மக்கள் திரண்டு முதல் கட்டப் பணியைத் தடுத்துள்ளனர். பல்வேறு வடிவிலானப் போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றன. தற்போது மத்திய அரசுக்கான நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் நயவஞ்சகமாக நாடகமாடுகிறார்கள். இதில் மக்கள் மதிமயங்கிவிடக் கூடாது.
“வேட்டைக்காரனைப் போலன்றி, ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்குக் குட்டிகளை உணவாக அளிக்கும் பெண்மானை விட்டு வைப்பதில்லை” என ஏங்கெல்ஸ் பொருளாதாரம் பற்றி வர்ணிப்பார். அதுபோல் எதிர்கால மக்களின் தேவைகளைக் கருதிப் பார்க்காமலும், நிலங்கள் பாலைவனமாகப் போவதைப் பற்றிய கவலை இல்லாமலும் இந்திய வல்லாதிக்க அரசு தனது சொந்த இலாப நோக்கத்திற்காக மக்களின் வாழ்வைச் சூறையாடுகின்றது.
நிலம், நீர், நெருப்பு, காற்று, விசும்பு ஆகியவற்றுக்கான இயற்கைச் சமநிலை பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் இயற்கை நம்மை அழித்துவிடும். இயற்கையில் பயனில்லாப் பொருள் என்று ஏதுமில்லை. அனைத்தும் மறுசுழற்சிக்கு உள்ளாகும் வகையிலானொரு சுழல் வட்டக் கட்டமைப்புடன் இயங்குகிறது. அத்தொடர்புகள் அழிந்தால் நாம் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை தமிழ் மக்களாகிய நாம் உணர வேண்டிய தருணமிது.
இன்றைய உலக அரசியல் சூழலில் இந்திய, பன்னாட்டு சுரண்டல் இரக்கமற்ற நிலையில் இருப்பதை உலக நடப்புகள் உணர்த்துகின்றன. எந்த ஒரு அரசியல் கட்சியையும் நாம் நம்பி இருக்க வேண்டியதில்லை. மலையை உடைத்து, கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்கு எதிரான போராட்டம், நந்தி கிராம மக்களின் போராட்டம், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசிய இனங்களின் போராட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் என இந்தியாவெங்கும் நடைபெற்று வரும் போராட்டங்களை இந்திய அரசு அடக்குமுறை கொண்டு நசுக்கி வருவதை நாமறிவோம்.
உள்ளாட்சி, மாநகராட்சி தேர்தல் வரும்போது கூடங்குளம் மக்களிடம் “உங்களில் ஒருத்தியாய் இருப்பேன்” எனக் கூறிய ஜெயலலிதா பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டு அம்மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவிவிட்டதை நாமறிவோம். அதே போல் இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாகப்பட்டினத்தில் “மீத்தேன் திட்டத்தை நாங்கள் பங்குபெறும் ஆட்சி வந்தால் தடுப்பேன்” என ஜெயலலிதா கூறியது மக்களை ஏமாற்றுவதற்கே!
தமிழக மக்களே, தமிழகம் பல்வேறு நிலையில் இந்திய, பன்னாட்டு வல்லரசுகளால் முற்றுகை இடப்பட்டுள்ளது, இதனை எந்த ஒரு தேர்தல் அரசியல் கட்சியும் முறியடிக்க சக்தியற்றதே. தமிழகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் ஒன்றுபட்டப் போராட்டமே வெற்றி தரும். அத்திசைவழியில் முன்னேறுவோம்.
(தமிழ்த் தேசம் - மே 2014 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ச.பாலமுருகன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
மேற்குத் தொடர்ச்சி மலையானது குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை 1600 கிலோ மீட்டர் நீளம் நீண்டுள்ளது. அது மொத்தத்தில் 129037 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது. ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் உலகின் பள்ளுயிர்ப் பெருக்கம் உள்ள 34 பாரம்பரிய மிக்க முக்கிய இடங்களில் (Bio diversity hot spot) மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று என அறிவித்துள்ளது. சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் கோண்டுவனா எனற பெருங்கண்டத்திலிருந்தும் ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதியிலிருந்து உடைந்து வந்து ஆசிய நிலப்பரப்பில் மோதியதால் இந்தியாவின் மேற்கு பீடபூமி பகுதியில் ஏற்பட்ட ஏற்றத்தால் இம் மலைத்தொடர் உருவாகியிருக்கும் என மியாமி பல்கலைக்கழக புவியியல் ஆய்வாளர்களான பேரன் மற்றும் ஹரிசன் கருதுகின்றனர். இதனால் மலைகளுக்குண்டான புவியல் விதிகளின் கீழ் இதனை மலை என அவர்கள் ஏற்பதில்லை. இம் மலைத்தொடர் தன்னகத்தே 39 பல்வேறுபட்ட கானுயிர் காப்பகங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மகாராஷ்டிராவில் 4, கர்நாடகாவில் 10, கேரளாவில் 20, தமிழகத்தில் 5 என கானுயிர் சரணாலயங்களும், தேசிய பூங்காக்களும் இம் மலைத்தொடர்ச்சி முழுதும் விரிந்துள்ளது. இம் மலைத்தொடர் தனக்கே உரிய சுமார் 5000க்கும் மேற்பட்ட அபூர்வ தாவரங்கள், 134 வகையான பலூட்டிகள், 508 வகையான பறவை இனங்கள், 325 வகையான அரிய உயிரினங்கள் வாழும் பகுதி என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, வைகை, குந்தியா போன்ற நதிகளின் பிறப்பிடமாகவும் இது உள்ளது.
அறிஞர் மாதவ் காட்கில் தனது அறிக்கையில் குறிபிடுவது போன்று, அகஸ்திய மலையினைத் தலையாகவும், நீலகிரியினையும், ஆனைமலையினையும் மார்புகளாகவும், கனரா முதல் கோவா வரை நீண்ட உதடுகளையும் கொண்டும், வடக்கு சகயதிரியினை கால்களாகவும் கொண்ட பெண் இம் மலைத்தொடர். ஒரு காலத்தில் பளபளக்கும் பச்சை உடையுடன் செழுத்திருந்த அவள் உடைகள் சுயநல சக்திகளால் கிழித்தெறியப்பட்டு அவமரியாதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணாக இன்று காட்சி தருகின்றாள்.
கோவா மாநிலத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் தொழிலில் சுமார் ரூபாய் 6,500 கோடி மதிப்புள்ள வளத்தினைத் திருடியுள்ளதாக அரசு கூறிய போது, இது குறித்து ஆய்வு செய்த ஷா கமிசன் இந்த திருட்டு ரூபாய் 35,000 கோடி என மதிப்பிட்டது. மகாராஷ்ட்ராவின் ரத்தனகிரி மாவட்டத்தில் லோட்-பரசுராம் தொழிற் பேட்டையின் ரசாயன தொழிற்சாலைக் கழிவினால் போஜ்ரா அணை நீர் செந்நிறமாகிப்போனது. கேத் நகரின் குடிநீர் ஆதாரமான அது, இன்று குடிக்க அருகதையற்றதாக மாறியுள்ளது. இதனால் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களின் வாழ்வாதரத்தை இழந்தார்கள். கேராளாவின் பாலக்காட்டில் பிளாச்சிமடாவில் கோக கோலா கம்பெனியால் உண்டான நிலத்தடி நீர் பாதிப்புக்கு எதிராக அங்கு மக்கள் போராடினர். அப் பகுதி பஞ்சாயத்து கோக கோலா ஆலையை மூட முடிவு தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தை எதிர்த்து கம்பெனி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பஞ்சாயத்துக்கு அந்த அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதிகார வர்க்கம் மற்றும் ஆட்சியாளர்களின் அக்கறையின்மை மற்றும் ஊழல் காரணமாக சட்டங்களுக்கும் விதிகளுக்கும் புறம்பாக மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏராளமான சுரங்கப் பணிகள் நடைபெற அனுமதிக்கப்பட்டது. இது பெரும் இயற்கை சீர்கேட்டுக்கு வித்திட்ட நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இது மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு(Western Ghats Ecology Expert Panel) என அழைக்கப்பட்டது.
இக் குழுவின் முக்கிய நோக்கமானது மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழல் குறித்து முழு தகவல்களை ஒருங்கிணைப்பது, இம் மலையில் உள்ள சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய,அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) பகுதிகளை வரையறுப்பது, ஆட்சியாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சூழல்வாதிகள் மற்றும் கிராம சபையின் ஒத்துழைப்புடன் இம் மலையினை காக்க வழி வகுப்பது ஆகியவையாக இருந்தது. இக் குழு மேற்குத் தொடர்ச்சி மலையினை ஒட்டி பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டு, 2011 ஆகஸ்ட் மாதம் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்பித்தது. ஆனால் மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையினை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா என்ற ஒருவரால் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒரு போராட்டத்திற்குப் பின் டெல்லி உயர்நீதிமன்ற உத்திரவினை அடுத்து இந்த அறிக்கையானது மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியானது.
மேற்குத்தொடர்ச்சி மலை சூழல் அறிஞர்கள் குழு (WGEEP) அல்லது மாதவ் காட்கில் குழு அறிக்கை
மாதவ் காட்கில் தலைமையிலான குழுவானது முழு மேற்குத்தொடர்ச்சி மலையினை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் (Ecologically Sensitive Zone) கொண்ட பகுதிகளாக கருதியது. அதன் சூழல் முக்கியத்துவம் கருதி மேற்குத்தொடர்ச்சி மலையினை மூன்று அதி நுட்ப சுற்றுச்சூழல் மண்டலங்களாகக் கருதியது. இதனை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3 என பிரித்தது. மேற்குத்தொடர்ச்சி மலையில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும் மேலும் புதிய கோடை வாழ்விடங்கள் அமைப்பதற்கும் தடை செய்தது. இம் மலைகளில் விவசாயம் சாராத செயல்களுக்கு நிலம் பயன்படுத்தப்படுவதற்கு தடை விதித்தது. ஆனால் மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களின் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப வசிப்பிட தேவைக்கு நிலம் எடுக்கும் செயல்களுக்கும், வன உரிமைச்சட்டம் 2006 கீழ் நிலம் பயன்படுத்தும் செயல்களுக்கு நிலம் எடுக்க அனுமதித்தது.
தண்ணீர் மேலாண்மை
தண்ணீர் மேலாண்மையினைப் பொருத்து அடுத்த 20 ஆண்டுகளுக்குள் உள்ளாட்சி அளவில் திட்டமிட்டு நீர் பகிர்மானம் செய்து கொள்ளும் நிலையினை ஊக்கப்படுத்தவும் தண்னீர் பகிர்மானங்களில் எழும் பிரச்சனைகளை எளிய முறையில் தீர்த்துக்கொள்ளும் வழி வகைகளை உருவாக்க வேண்டியது; மலைப்பகுதிகளில் பாரம்பரிய முறையில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முறையில் கசிவு நீர்க் கிணறுகள், சுரங்ககள் அமைப்பது; மலைச் சரிவுகளில் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுப்பது; மலைப்பகுதி மக்கள் அப் பகுதியில் நடைபெறும் மணல் அள்ளும் மையங்களை சமூக தணிக்கை செய்யவும் மேலும் அதன் அடிப்படையில் மணல் எடுக்கும் செயல்களுக்கு விடுமுறை வழங்கி விடுவது என்றும், மக்கள் இயற்கையினைப் பாதுகாக்க இணைந்து செயல்படவும் வலியுறுத்தியது. சுரங்கப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் அந்த கம்பனிகள் மற்றும் முகாமைகள் தண்ணீர் ஆதாராங்களைப் பாதுகாத்திட சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் என்றது. தேயிலை, காப்பி மற்றும் ஏலக்காய் பெருந்தோட்ட மலைச்சரிவுகளில் உள்ள பகுதிகளில் நீரோடைகளை உயிர்ப்பிப்பது மேலும் வன செயல்பாடுகளை உள்ளாட்சி நிர்வாகம், வனத்துறை மற்றும் தோட்ட அதிபர்களின் ஒத்துழைப்புடன் உருவாக்க வேண்டியது. நீர்ப் பிடிப்பு பகுதிகளில் உள்ள நீர் மின் திட்டங்கள், நீர் பாசனத் திட்டங்களின் வாழ் நாட்களை நீட்டிக்க நடவடிக்கை எடுப்பது. மக்கள் சமூகத்தின் ஒத்துழைப்புடன் அறிவியல் செயல்பாடுகள் வழி தண்ணீரைப் பாதுகாப்பது. மேலும் நதியினை சார்ந்து வாழும் மக்களின் நீர் பகிர்வுக்கு உத்திரவாதப்படுத்துவது. தண்ணிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை உரிய தொழில் நுட்ப வடிவில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படுத்துவது. மேற்குத்தொடர்ச்சி மலையில் நதிகளின் இயற்கையான போக்கை தடுத்து வேறு பகுதிககு திசை திருப்புவதை தடை செய்வது. நதி நீர் திட்டங்களில் அரசின் உரிய பல்வேறு துறையினர் ஒத்துழைப்பை பெற்று நிறைவேற்றுவது அல்லது அவர்களுக்கு தனித்தனி பொறுப்பு வழங்குவது. மலைப்பகுதிகளில் உள்ள காலாவதியாகி விட்ட அணைக்கட்டுக்களையும், தரமற்ற அணைகளையும் முழுதாக கைவிட்டுவிடுவது என்றும் பரிந்துரைத்தது.
விவசாயம்
இயற்கை விவசாயத்தை நடைமுறைப்படுத்துவது. அதனை ஊக்கப்படுத்த விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, பாரம்பரிய விவசாய முறையினை ஆதரிப்பது, மரபீனி மாற்றுப்பயிர்களை முற்றிலுமாக தடை செய்வது, மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் அனைத்து இரசாயன பூச்சிக் கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் மற்றும் இரசாயன உரங்களையும் ஐந்து ஆண்டுகளுக்குள் முற்றிலும் தடை செய்துவிடுவது, இதனை அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2ல் எட்டு ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டு வருவது, அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3ல் இதை பத்து ஆண்டுகளுக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து விடுவது.
மீன் வளம்
மீன்களை வெடி வைத்து பிடிப்பதற்கு தடை விதிப்பது, மீனவர்கள் பாரம்பரிய மிக்க மீன் இனங்களை உற்பத்தி செய்ய ஊக்கத் தொகை வழங்க பரிந்துரைப்பது, அது போன்ற மீன்களை மீன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இயற்கை மேலாண்மை குழு வழி விற்பனை செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்துவது என பரிந்துரைத்தது.
வன உரிமைச்சட்ட பலன்கள்
வன உரிமைச்சட்டத்தின் படி பழங்குடி மக்கள் மற்றும் மூன்று தலைமுறைக்கு மேல் வனம் சார்ந்து வாழும் பழங்குடி அல்லாத மக்களின் நலன்களைப் பாதுகாப்பது. தற்போது நடைமுறையில் உள்ள எல்லா வன மேலாண்மை திட்டங்களையும் வன உரிமைச்சட்டம் படி மாற்றுவது. மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் யூக்லிபிட்டஸ் மரங்கள் உள்ளிட்ட ஒற்றைத் தாவர வகைகளை தடை செய்வது, மருந்து தாவரங்களை சேகரிப்பதை முறைப்படுத்துவது. வன விலங்குகள் விவசாயப் பயிர்களை சேதப்படுத்துவதிலிருந்து விவசாயிகளைக் காக்க உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்வது.
சுரங்கங்களுக்கு தடை
மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் சுரங்கத் தொழில் தடை செய்யப்படுகின்றது. புதிய சுரங்க அனுமதி கிடையாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுரங்கங்களை 2016க்குள் முற்றிலும் தடை செய்வது. சட்ட விரோத சுரங்கங்கள் உடனடியாக தடை செய்யப்படுவது. பிற அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2ல் புதிய சுரங்கங்களுக்கு அனுமதி கிடையாது. நடைமுறையில் உள்ள சுரங்கங்களை தீவிரமாக கண்காணிப்பது. அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 3ல் உரிய கவனத்துடன் புதிய சுரங்கங்களை அமைக்க அனுமதிப்பது. உள்ள சுரங்கங்களை முறையே கண்காணிப்பது.
தொழிற்சாலைகள்
சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை வாய்ந்த தொழிற்சாலைகளை வகைப்படுத்த பயன்படுத்தும் சிகப்பு, ஆரஞ்சு, நீலம், பச்சை வண்ணங்களில் சிகப்பு மற்றும் ஆரஞ்சு வகை தொழிற்சாலைகளை மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 மற்றும் 2ல் நிறுவ தடை விதிக்க பரிந்துரைத்தது. தற்போது இப் பகுதியில் உள்ள இவ் வகை தொழிற்சாலைகள் 2016க்குள் நிறுத்திவிட முடிவு செய்தது. அதே சமயம் சூழல் பாதிப்பு குறைந்த நீலம், பச்சை வண்ண வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளை உரிய கண்காணிப்புக்கு பின் அனுமதிக்கலாம் என முடிவு செய்தது.
மின் நிலையங்கள்
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1 மற்றும் 2ல் புதிய பெரும் அணைக்கட்டு மின் நிலையங்களுக்கு தடை விதிப்பது. மேற்கண்ட சூழல் பகுதியில் கேரளாவின் சாலக்குடி மின்சாரத் திட்டம் மற்றும் கர்நாடகாவின் குண்டியா நீர் மின் திட்டம் வருவதால் இத் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அதே போன்று இப் பகுதியில் பெரும் காற்றாலைகள், சூரிய சக்தி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. சிறு மின் திட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மின்சாரத் திட்டங்கள் சிறு அளவில் ஆங்காங்கே நிறைவேற்ற ஊக்கப்படுத்த பரிந்துரைத்தது.
போக்குவரத்து
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் புதிய இரயில் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள் அமைக்க தடை செய்கிறது. அதே சமயம் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 மற்றும் 3 ஆகிய இடங்களில் தேவையினை கருதியும், சூழல் பாதிப்பை கணக்கில் கொண்டும், சமூக தணிக்கைக்குப் பின் சாலைகள், இரயில் பாதைகளுக்கு அனுமதி வழங்க முடிவு செய்தது.
சூழல் சுற்றுலா
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 1ல் எல்லாவகை சுற்றுலாக்களும் தடை விதிப்பது. சுற்றுலா குறித்து ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழி முறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டியது. அதே சமயம் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி 2 மற்றும் 3ல் உரிய கண்காணிப்புக்கும், சமூக தணிக்கைக்கும் பின் அனுமதி வழங்குவது.
கழிவுகள் மேலாண்மை
மலையின் எல்லா பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடை செய்யப்படுகிறது. பிற திடக் கழிவுகளை உரிய கவனத்துடன் அப்புறப்படுத்த வேண்டும். இதற்காக ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆபத்தான கழிவுகளை உற்பத்தி செய்யும் செயல்பாடுகளுக்கு தடை விதிப்பது.
சூழல் கல்வி
மலைப்பகுதி குழந்தைகளையும், இளைஞர்களையும் சூழல் காக்க ஊக்கப்படுத்தும் கல்வி அறிமுகப்படுத்த வேண்டும். நதி உள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளில் "நதி மன்றங்கள்" உருவாக்கி சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பகுதி மக்களிடம் சூழலை கண்காணிக்கும் ஆற்றலை வளர்க்கும் கல்வியை வழங்கி, சூழல் காப்பு பணியில் மக்களின் பங்கேற்பையும் உத்திரவாதப்படுத்தப்பட வேண்டும்.
சூழல் பாதிப்பு ஆய்வு
புதிய திட்டங்கள் எல்லாவற்றிக்கும் சூழல் பாதிப்பு குறித்த சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் படி, உரிய நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்திய பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இந்த ஆய்வில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள் மற்றும் பகுதி மக்கள் பங்கு அவசியம். புதிய திட்டங்களுக்கு கிராம சபை ஒப்புதல் அவசியம்.
தகவல் மேலாண்மை
மேற்குத் தொடர்ச்சி மலை குறித்த உரிய அறிவியல், தொழில் நுட்ப தகவல்களை வெளிப்படையாக வழங்கும் அமைப்பு உருவாக்கப்படவேண்டும். மாணவர்கள் மற்றும் பகுதி பொது மக்கள் இணைந்து இதில் செயல்பட ஊக்கப்படுத்த வேண்டும். நதி நீர் குறித்த தரவுகள், அணைகளின் நீர் அளவுகள் மற்றும் தண்ணீரில் உள்ள மீன் வகைகள் பற்றிய தகவல்கள், தண்ணீர் மற்றும் மண்ணில் உள்ள உப்புத்தன்மை குறித்தும், நீர்ப் பாசன நிலை குறித்தும் தகவல்கள் வழங்கும் மேலாண்மை தேவை என வலியுறுத்தியது.
மேற்குத்தொடர்ச்சி மலை ஆணையம்
உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் நாடு முழுவதம் மேற்குத் தொடர்ச்சி ஆணையம் அமைப்பது, அதே போல உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மாநில அளவில் ஓர் ஆணையம் மற்றும் மாவட்ட அளவில் ஓர் ஆணையம் ஏற்படுத்தவும் பரிந்துரை செய்தது. இந்த ஆணையங்கள் மனித உரிமை ஆணையங்களைப் போல சுதந்திரமாக செயல்பட்டு மேற்குத்தொடர்ச்சி மலைச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்த அறிக்கை 2011 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இது முழுவதும் அரசியலாக மாற்றப்பட்டது. குறிப்பாக கேரளாவின் மலைப்பகுதி விவசாயிகள் என அறியப்பட்ட சிரியன் கிருஸ்துவர்கள் மற்றும் கத்தோலிக்க திருச்சபையும், ரியல் எஸ்டேட் அரசியலும் இப் பிரச்சனையினை ஊதிப் பெரியதாக்கியது. அரசியல் இயக்கங்கள் இந்த ஓட்டத்தில் அரசியல் ஆதாயத்தை தக்கவைக்க மாதவ் காட்கில் அறிக்கையினை ஏற்க மறுத்தது. அறிக்கையின் முழு தரவுகளும் பொது மக்கள் முன் வைக்கப்படவில்லை. ஆறு மாநிலம் சார்ந்த பிரச்சனையான இது, அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிடக்கூட மத்திய, மாநில அரசுகள் முன் வரவில்லை. இந் நிலையில் கேரளா சட்டமன்றத்தில் ஏகமனதாக கொண்டுவரப்பட்ட தீர்மானம் மாதவ் காட்கில் தலைமையிலான அறிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாக அமைந்தது. கர்நாடகத்திலும் அரசு இக் கமிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. கமிட்டியின் அறிக்கை பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், வன உரிமைச்சட்டத்திற்கு முக்கியம் தருவதாக இருந்த போதும், பழங்குடி மக்கள் வனத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடும் என்ற கருத்தும் அதனால் அச்சமும் கட்டமைக்கப்பட்டது. வனத்துறையின் கடந்த கால அத்துமீறல்களும் மக்கள் விரோத செயல்பாடுகளும் அவ்வாறு நடக்க வாய்ப்புள்ளதாக கருத துணை நின்றது. இறுதியில் அரசியலாக மாற்றப்பட்டு எல்லோரும் கூத்தாடி கூத்தாடி இக் கமிட்டியின் வழிகாட்டுதல்களை போட்டுடைத்தனர்.
அதன் பின் மேற்குத்தொடர்ச்சி மலை உயர் மட்ட பணிக்குழு (High level working group on western ghat) என்ற ஒரு குழுவை முன்னால் இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 17.8.2012ல் அமைத்தது.இக் கமிட்டியின் முக்கிய நோக்கம் என்பது மேற்கு மலைத்தொடர்ச்சி மாநிலங்கள் மாதவ் காட்கில் தலைமையிலான குழுவின் அறிக்கைக்கு வழங்கிய எதிர் கருத்துக்களை கணக்கில் எடுத்துக்கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலையினைப் பாதுகாக்க ஒரு செயல் திட்டத்தை முன் வழங்குவதாக இருந்தது.
கஸ்தூரிரங்கன் கமிட்டி அறிக்கை
ஒட்டு மொத்த மேற்குத்தொடர்ச்சி மலையினையும் இயற்கை சூழல் மண்டலமாக கருத வேண்டியதில்லை. இம் மலையின் 40% மலைப்பகுதி மட்டுமே இயற்கை சூழல் பகுதிகளாக கருதலாம். 60% பகுதிகள் சுமார் 5 கோடி மக்கள் வாழும் கலாச்சார சூழல் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட 40% இயற்கை சூழல் பகுதியில் 37% மட்டுமே அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் ஆக கருத வேண்டும். இப் பகுதியில் வளர்ச்சித் திட்டங்கள் கட்டுப்படுத்தப்படவேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இப் பகுதி குறித்த வரைபடத்தை பொது மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இப் பகுதியில் சூழலுக்கு தீங்கிழைக்கும் செயல்பாடுகள் தடுக்கப்படவேண்டும். புதிய திட்டங்கள் உரிய சூழல் பாதிப்பு ஆய்வுக்கு பின் அனுமதிக்க வேண்டும். இப் பகுதியில் சுரங்கப் பணிகள் மற்றும் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும். தற்போது அனுமதி பெற்று செயல்பட்டு வரும் சுரங்கங்கள் ஐந்து ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டு வரப்படவேண்டும்.
இப் பகுதியில் அனல் மின்சார நிலையங்களை அனுமதிக்கக் கூடாது. ஆனால் நீர் மின்சாரத் திட்டங்களுக்கு உரிய பரிசீலனைக்குப் பின் அனுமதி வழங்கலாம். ஆற்றின் நீரோட்டத்தை 30% பாதிக்கக்கூடிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் சமயம் நதி மற்றும் வனத்திற்கு ஏற்படும் பாதிப்பு பரிசீலிக்கப்பட வேண்டும், ஆறுகள் உள்ள பகுதியில் அனுமதிக்கப்படும் திட்டங்கள் ஆற்றிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தள்ளி இருப்பது அவசியம். மேலும் 50% ஆற்றின் படுகையினை பாதிக்கின்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
இப் பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டங்களுக்கும் சூழல் பாதிப்பு அறிக்கை(Environment Impact Assessment ) கட்டாயம் பெற வேண்டும்.
சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சிகப்பு வகைப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. ஆனால் ஆரஞ்சு வகைத் தொழிற்சாலைகளில் உணவு மற்றும் பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கலாம். எனினும் இவையும் சூழல் பாதிப்பு ஏற்படுத்தாதது என்பது உறுதி செய்யப்பட வேண்டும். கட்டுமானப்பணிகள் 20,000 சதுர மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். நகரிய திட்டங்கள், பகுதி வளர்ச்சித் திட்டங்கள் தடை செய்யப்பட வேண்டும். எல்லாவகை வளர்ச்சி திட்டங்களுக்கும் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2006ல் அறிவித்தது போல சூழல் பாதிப்பு ஆய்வு அவசியமானது.
வனப்பகுதியிலிருந்து நிலம் வேறு திட்டங்களுக்கு எடுக்கப்படும் போது, அந்தத் திட்டம் குறித்த முழு விபரங்களையும் (அனுமதி கேட்டு விண்னப்பத்திலிருந்து திட்டம் அனுமதிக்கப்படும் வரை பல்வேறு கட்ட செயல்பாடு விபரமும்) மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையத்தில் வெளியிட்டு பொது வெளியில் திறந்த விவாதத்துக்கு வழி வகுக்க வேண்டும்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பாதுகாப்பு செயல்களில் முடிவு எடுப்பதில் தற்போது நடைமுறையில் உள்ள அதிகார அமைப்புக்களுடன் கூடுதலாக சூழல் தகவல்களை திரட்டுவதும் மேலும் இப் பகுதி வாழ் பொது மக்களை இச் செயல்பாடுகளை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ப்பதும், இப் பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வதும் அவசியம்.
அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் அமையப்பட்ட பகுதியில் வரும் கிராமங்களின் கிராம சபைகள் திட்டங்களை(project) அனுமதிப்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றதாக உள்ளது. ஒரு திட்டத்திற்கு முன் இக் கிராம சபை ஆட்சேபனை இல்லை என அனுமதித்தால் மட்டுமே திட்டப்பணி செயல்படுத்த முடியும். அதே போல வன உரிமைச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ளது போன்று திட்டங்களுக்கு முன்னரே கிராம சபை அனுமதி பெறுவதும் கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மாநில அரசுகள் வன விலங்கு வலசைப்பாதை குறித்த திட்டங்கள், செயல்பாடுகளின் போது அப் பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் செய்யப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வெறும் வன விலங்குகளின் வாழிடமாக மட்டுமின்றி மக்கள் வாழும் உயிர் சூழல் பகுதியான இந்த மலையில் மாநில அரசுகள் உடனடியாக சூழல் பாதுகாப்புக்கும் வளர்ச்சிப் பணிகளை கட்டுப்படுத்தவும் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். மலைகளையும், ஆறுகளையும், பல்லுயிர் பெருக்கத்தையும் பாதுகாக்கும் திட்டங்கள் அவசியமானது.
மாநில அரசுகள் மத்திய அரசிடம் மலையினைப் பாதுகாக்க கூடுதல் நிதி பெற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இயற்கை வனத்தைப் பாதுகாக்க போதிய கடன் மற்றும் நிதி உதவி அவசியம். இந்த நிதி, சூழல் பாதுகாப்புக்காக செலவிடப்பட வேண்டும். மேலும் வனப் பொருள் சேகரிப்புக்கும், இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கும் உதவ வேண்டும். இதற்காக 13வது நிதி கமிசன் நிதி ஒதுக்க வேண்டும். 14வது நிதி கமிசன் வனத்தைப் பாதுகாக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்க முன் வரவேண்டும். மேலும் நிதி நேரிடையாக அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதி மக்களுக்கு சேர வழிவகை செய்ய வேண்டும்.
இயற்கை சூழல் சேவையின் பலன்களைப் பெறும் மேற்குத்தொடர்ச்சி மலையின் வேறு பகுதி பஞ்சாயத்துகள், உள்ளாட்சி அமைப்புகள் அதற்காக சூழல் சேவைக் கட்டணத்தை (Eco system service) வழங்க பரிந்துரைக்கின்றது.
திட்டக் கமிசன் தனியே மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சி நிதி என்ற ஒன்றை உருவாக்கி அந்த நிதி அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் சூழல் மேம்பாட்டுக்காக பயன் படுத்தப்பட வேண்டும்.
திட்ட கமிசன் சூழல் பாதுகாக்கும் மாநிலத்திற்கு கூடுதல் நிதி உதவி வழங்குகின்றது. மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் அது போன்ற சூழல் நடவடிக்கைக்கு கூடுதல் தொகை (plus payment) நேரிடையாக கிராம சமூகத்திற்கு கிடைக்க வழி காண வேண்டும்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டம் மக்களின் ஒத்துழைப்புடன் சூழல் பாதுகாப்பு வடிவில் நடைமுறைபடுத்தப்பட வேண்டும். அதற்காக நிதியானது ரூ 1000 கோடியாக உயர்த்தப்பட வேண்டும். சிறப்பு திட்ட செயல்பாடுகளுக்கு மத்திய அரசு 90% பணமும் மாநில அரசு 10% பணமும் வழங்குவது தொடர வேண்டும். இதற்காக இக் குழுக்களில் மாநில முதல்வர்கள் பங்கு பெற வேண்டும். மேலும் மாநில அளவில் மேற்குத்தொடர்ச்சி மலை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு மாநில சுற்றுச்சூழல் நிர்வாகம், மாநில வனத்துறை மற்றும் மத்திய வனத்துறை மண்டல அலுவலகங்கள் இணைந்து செயல்பட வேண்டும்.
வன நிர்வாகம் என்பது பகுதி மக்களை உள்ளடக்கியதாகவும் மக்கள் பயன் பெறும் அளவிலும் இருக்க வேண்டும். வன உரிமைச்சட்டம் மக்களுக்கு சிறு வன மகசூல் பெற உரிமை வழங்கியுள்ளது. அதில் மூங்கிலும் அடக்கம் என்பதை உறுதி செய்கின்றது. எனவே வனம் சார்ந்த பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும்.
இயற்கை சார் விவசாயத்திற்கு உதவி வழங்கப்பட வேண்டும். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலையில் விளையும் பொருட்களுக்கென தனி முத்திரை (brand) உருவாக்கி, உலக சந்தையில் இப் பொருள்களுக்கென தனி இடம் பெற்றுத் தர வேண்டும்.
இப் பகுதியில் சுற்றுலா செயல்பாடுகளைப் பொருத்து சூழல் பாதிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சுற்றுலா நிர்வாகம் அமைய வேண்டும். சுற்றுலா கட்டுமானங்கள் என்பது இப் பகுதியில் உள்ள வளர்ச்சி கட்டுப்பாடுகளை மீறியதாக இருக்கக் கூடாது.
மேற்குத் தொடர்ச்சி மலை சூழல் பாதுகாப்புக்காக மாநில அரசுகள் மத்திய அரசுகளின் ஒத்துழைப்புடன் அறிவியல் தொழில்நுட்ப உதவிகள் மூலம் பயன் பெறும் வகையில் Decision Support and Monitoring Center for Western Ghats என்ற அமைப்பை உருவாக்கி பயன் பெற வேண்டும்.மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையில் நிகழும் காலநிலை மாற்றங்கள், உலக காலநில மாற்றம் மற்றும் பகுதிகளில் நிகழும் காலநிலை மாற்றங்கள், மழை அளவு, வெப்ப அளவு, காட்டுத் தீ பிடிக்கும் நிலை ஆகியவை உரிய கவனத்துடன் கண்காணிக்கப்பட வேண்டும். ஒரே பயிரினை நிலத்தில் பயிர் செய்வதற்கு பதில் பல பயிர்களைக் கலந்து பயிர் செய்வது மற்றும் நிலத்தடி நீரை உரியும் செடிகளைத் தவிர்ப்பது, தீ பரவலை தடுக்க முன் கூட்டியே செயல்திட்டங்களை வகுப்பது போன்றவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
கேரளாவின் அதிரப்பள்ளி சாலக்குடி நீர் மின் திட்டத்தினை உரிய சூழல் கவன நடவடிக்கையுடன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்று செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். கர்நாடகாவின் குண்டியா நீர்மின் திட்ட பகுதியில் மீண்டும் சூழல் பாதிப்பு குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு அதன் பின் செயல்படுத்த வேண்டும். அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் பகுதியில் நீர் மின் நிலையங்கள் கட்ட எந்தத் தடையும் விதிக்கவில்லை. ஆனால் சூழல் பாதிப்பை கணக்கில் கொண்டு செயல்படவேண்டியது அவசியம். கோவாவின் சுரங்கங்கள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மகாராஷ்டிராவின் சித்திர துர்க் மற்றும் ரத்தினகிரி மாவட்ட சூழல் பாதிப்பு பிரச்சனையினைப் பொருத்து மேற்குத்தொடர்ச்சி மலையின் அதிநுட்பமான சுற்றுச் சூழல் மண்டலம் அமைந்துள்ள பகுதியில் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்லா திட்டங்களுக்கும் சூழல் பாதுகாப்பு அனுமதி அவசியம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதனை கண்காணிக்க வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தப் பரிந்துரைகளை சட்டப்பூர்வமாக notify வெளியிட வேண்டும். மாநில அரசுகள் இப் பரிந்துரைகளை நிறைவேற்ற உரிய நடைமுறைப்படுத்தும் துறை மற்றும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். திட்டக்குழு மற்றும் அமைச்சகங்கள் மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக்காக உரிய நிதி ஒதுக்க வேண்டும். மேற்கண்டவை கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளாகும்.
அரசியலாக்கப்பட்ட பரிந்துரைகள்
இப் பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொள்கையளவில் 19.10.2013ல் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்தது. சுற்றுச்சூழல் அமைச்சகம் சூழல் மண்டலப் பகுதியில் புதிய சுரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது. இந்த அறிக்கை குறித்து மாநில அரசுகள் கருத்து கூறவும் மற்றும் பொது அரங்கில் விவாதிக்க உள்ளதாகவும் கூறியது. முன்பு மாதவ் காட்கில் அறிக்கையினை எதிர்த்து அதனை ரத்து செய்ததால் கஸ்தூரி ரங்கன் அறிக்கையினை ஏற்பதாக அறிவித்த கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திரும்பவும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளையும் எதிர்த்து பந்த் நடத்தியது. இடுக்கி மாவட்டத்தில் கத்தோலிக்க தேவாலயம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டது. கேரள அரசு இப் பரிந்துரைகளை ஆய்வு செய்ய மூவர் கொண்ட குழுவை அமைத்தார். கோவா மாநில அரசும் கேரளாவைத் தொடர்ந்து குழு பரிந்துரைகளை நிராகரித்தது. இப் பின்னணியில் 20.12.2013 தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் மாநில அரசுகளின் உரிய ஒப்புதல் பெற்றே சூழல் மண்டல எல்லைகள் நிர்ணயிக்கப்படும் என்றும் அதன் பின்பு மீண்டும் அமைச்சகம் அறிவிக்கும் என்றும் கூறியது. பத்திரிக்கையில் கால வரையறை இன்றி பரிந்துரைகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தமிழகத்தின் ஊட்டி, கொடைக்கானல் விடுபட்டதன் மர்மம் குறித்து கேரளாவில் அரசியல் சர்ச்சை கிளப்பப்பட்டது.
ஏற்கனவே சூழல் மண்டலப்பகுதியில் நடைமுறையில் உள்ள சூழல் பாதிப்பு திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு கூறவில்லை. பெருந்தோட்டங்களுக்கு இது எந்த பெரிய தடைகளையும் வழங்கவில்லை என விமர்சிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையின் 63% பகுதியினை சூழல் பாதிக்கும் சுரங்கம் உள்ளிட்ட பணிகளுக்கும் அனுமதித்ததும், 7% மட்டுமே அடர் வனப் பகுதியாக உள்ள நிலையில், பிற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதித்தும் மேலும் கட்டுமானப் பணிகள் 20,000 m2 (2, 15,000 sq feet) வரை அனுமதித்ததன் மூலம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும் கட்டிடங்கள் உருவாகி மலை பாதிக்கப்படுவதும் விமர்சனத்திற்கு உரியது. மேலும் ரயில்வே தடங்களுக்கு நிலம் எடுக்கப்படுவதற்கு இக் குழு குறிப்பாக தடை விதிக்கவில்லை எனவும் சூழல் ஆர்வலர்கள் குரல் எழுப்பினர். மொத்தத்தில் கஸ்துரிரங்கன் அறிக்கையானது மாதவ் காட்கில் குழு பரிந்துரையின் ஒப்பிடும்போது ஒரு நீர்த்த வடிவம், ஆனால் அதைக்கூட நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு இல்லை என்பதையும், சுரங்க முதலாளிகள், பணக்காரர்கள், நில ஆக்கிரமிப்பு ரியல் எஸ்டேட் சக்திகள் தங்களுக்கு சாதகமாக மேற்குத் தொடர்ச்சி மலையினை காக்க எடுக்கும் எல்லா நடவடிக்கைகளையும் தடுக்கும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பதையே தற்போதைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த பரிந்துரைகளையாவது நிறைவேற்ற குரல் கொடுப்பது சனநாயக சக்திகளின் கடமை.
மேற்குத் தொடர்ச்சி மலை வெறும் சூழல் மண்டலம் மட்டுமல்ல, அதன் நதிகளும், அது தரும் மழையும், காற்றும், சூழலும் நாடும் சமூகம் அமைதியாக இயங்க உதவுகிறது. மக்களின் வாழ்வாதாரத்தின் மையமாகவும் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை இரக்கமற்ற சுரண்டல்வாதிகளின் சூறையாடலால் பாதிக்கப்படும்போது நாட்டின் பொது ஒழுங்கும், அமைதியும் குலைந்துவிடும் என்ற எச்சரிக்கை ஆட்சியாளர்களுக்குத் தேவை. அந்த பாதிப்பு ஈடு செய்ய முடியாத இழப்புக்கு இட்டுச்சென்று விடும்.
- ச.பாலமுருகன் (
- விவரங்கள்
- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
- பிரிவு: சுற்றுச்சூழல்
Nuclear-Free Tamil Nadu Day - டிசம்பர் 21, 2013
தேசியக் கட்சிகளான காங்கிரசும், பாரதீய ஜனதா கட்சியும் “இந்தியாவை வல்லரசாக்கப் போகிறோம்” என்ற பெயரில் பெரும் தீங்கினை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகச் செலவாகும், அணுக்கழிவை உருவாக்கும், ஆபத்துக்களை வரவழைக்கும் அணுசக்தி வேண்டாம் என்று உலக நாடுகளெல்லாம் மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிக்க முனைகின்றன. ஆனால் ஒரு பேருந்து நிலைய கழிப்பறையைக்கூட பேணத் தெரியாத நமது ஆட்சியாளர்கள் அணுமின் நிலையங்கள் அமைத்து அளவற்ற மின்சாரம் தயாரிக்கப் போகிறார்களாம். வளரும் நாடான நமக்கு மின்சாரம் தேவைதான். ஆனால் மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் சிறு விபத்துக்கூட பேராபத்தை உருவாக்குமே? லஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடும் நமது நாட்டில் நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கு ஓர் ஆபத்து எழும்போது யார் வந்து நம்மைக் காப்பாற்றுவார்கள்?
மாற்றாந்தாய் மனப்பான்மையோடு தமிழர்களை நடத்துகிற தில்லி அதிகார வர்க்கம் ஆபத்தான அணுத் திட்டங்கள் பலவற்றை தமிழர்கள் தலையில் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை ஆண்டவர்களும், ஆள்கிறவர்களும் இதற்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள். கர்நாடகத்திலும், மராட்டியத்திலும், கேரளத்திலும் இம்மாதிரியான திட்டங்களைக் கடுமையாக எதிர்க்கும் சில அரசியல் கட்சிகள் தமிழகத்திலே அவற்றுக்குக் கட்டியம் கூறுகின்றன.
அதிகாரமிக்க முறையான கட்டுப்பாட்டு வாரியம் இல்லாதது மட்டுமல்ல, அணுக்கழிவு மேலாண்மைத் திட்டமும் இந்தியாவில் இல்லை. கூடங்குளம் அணுக் கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கச் சுரங்கங்களில் கொண்டு புதைப்போம் என்று அணுசக்தித் துறை உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தபோது, கர்நாடக மக்கள் வெகுண்டெழுந்துப் போராடினர். அப்போதைய கர்நாடக முதல்வர் பா.ஜ.க.வைச் சார்ந்த திரு. ஜெகதீஷ் ஷெட்டர் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். கோலாரில் மட்டுமல்ல, கர்நாடகத்தில் வேறு எங்குமே வைக்க முடியாது என்று கர்ஜித்தார். கர்நாடகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர் காங்கிரசுக்காரரான திரு. வீரப்ப மொய்லி இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று சூளுரைத்தார். கர்நாடக அ.தி.மு.க.வினரும் தெருக்களிலே இறங்கிப் போராடினர். இதன் விளைவாக வெறும் மூன்று நாட்களில் கோலார் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் தமிழகம் எதிர்கொள்ளும் அணுத் தீமைகளின் அட்டவணையைப் பாருங்கள்:
[1] கூடங்குளம் அணுமின் பூங்கா, கூடங்குளம், திருநெல்வேலி மாவட்டம்:
ரஷ்யாவின் உதவியோடு இந்தியாவிலேயே மிகப் பெரிய 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக்கூடிய இரண்டு அணுமின் நிலையங்களை கூடங்குளத்தில் கட்டியிருக்கிறார்கள். மேலும் நான்கு அணுமின் நிலையங்கள் கட்டுவதற்கான அரசச் சடங்குகளை முடித்து வைத்திருக்கிறார்கள். இன்னும் கூடுதலாக இரண்டு அசுர அணுமின் நிலையங்களையும், அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆபத்தான ஆலை ஒன்றையும் இங்கே அமைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். கூடங்குளம் திட்டம் பற்றிய தல ஆய்வறிக்கை (Site Evaluation Report), பாதுகாப்பு ஆய்வறிக்கை (Safety Analysis Report) போன்றவற்றை மக்களுக்குக் கொடுங்கள் என்று மத்திய தகவல் ஆணையம் கேட்டுக்கொண்ட பிறகும் மத்திய அரசும், அணுசக்தித் துறையும் தர மறுக்கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஜியோ-போடால்ஸ்க், இஷோர்ஸ்கி சவோடி போன்ற ஊழல் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட தரமற்றப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஏராளமான ஊழலும், குளறுபடிகளும் நடந்திருக்கின்றன. உலகத்திலேயே உன்னதமான அணுஉலை என்று அரசு தரப்பு சொன்னாலும், கூடங்குளம் அணுமின் நிலையம் முனகிக் கொண்டும் திணறிக்கொண்டும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கூடங்குளத்தில் ஒரு விபத்து நடந்தால் ரஷ்யா எந்தவித இழப்பீடும் தர வேண்டியதில்லை என்று 2008-ஆம் ஆண்டு ஓர் இரகசிய ஒப்பந்தமும் செய்து வைத்திருக்கிறது மத்திய அரசு. கூடங்குளம் வழக்கில் 2013-ஆம் ஆண்டு மே மாதம் 6-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் பாதுகாப்புத் தொடர்பாக 15 பரிந்துரைகளைத் தெரிவித்தது. ஆனால் அவற்றைக் கடுகளவும் கருத்தில் கொள்ளாமலேயே மத்திய அரசும், அணுசக்தித் துறையும் கூடங்குளம் திட்டத்தை இயக்க எத்தனிக்கின்றன.
[2] கல்பாக்கம் அணுமின் பூங்கா, கல்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்:
கல்பாக்கத்தில் 220 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு அணுஉலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. எரிபொருள் மறுசுழற்சி செய்யும் ஆலை (reprocessing plant) ஒன்றும், அணுக்கழிவு சுத்திகரிக்கும் ஆலை (waste treatment plant) ஒன்றும் இங்கே இயங்குகின்றன. இவற்றோடு இரண்டு அதிவேக ஈனுலைகள் (Prototype Fast Breeder Reactor – PFBR) அமைப்பதற்கான வேலைகள் 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டன. ஈனுலை என்பது தான் உட்கொள்ளும் எரிபொருளைவிட அதிக எரிபொருளை உருவாக்குகிற திறன் கொண்டது. இவற்றைத் தவிர அணுக்கழிவுகளைச் செயலிழக்கச் செய்யும் ஆலை (Waste Immobilization Plant) ஒன்று 2013 நவம்பர் மாதம் இந்திய குடியரசுத் தலைவரால் வீடியோ கான்ஃப்ரன்சிங்க் மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. கல்பாக்கத்தில் அணு ஆயுதங்கள் சம்பந்தமான வேலைகள் நடப்பதாகவும் செய்திகள் நிலவுகின்றன. கல்பாக்கத்துக்கு அருகே கடலில் எரிமலை ஒன்று இருப்பதாகவும், அதனால் கல்பாக்கம் அணுஉலைக்கு ஆபத்து வரலாம் என்ற செய்தியை முதலில் மறுத்த அணுசக்தித் துறை, தற்போது இதை ஆய்வு செய்வதற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது. கல்பாக்கம் பகுதியில் புற்றுநோய் எதுவுமே இல்லை என்று வாதிட்டுவந்த அணுசக்தித் துறை, 2012-ஆம் ஆண்டு அணுஉலை ஊழியர்கள் பலர் எலும்பு மஜ்ஜை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தது.
[3] நியூட்ரினோ திட்டம், தேவாரம், தேனி மாவட்டம்:
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, போடி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில், தேவாரம் பொட்டிபுரம் கிராமத்துக்கு அருகேயுள்ள அம்பரப்பர் மலை அல்லது அம்பரசர் கரடு எனப்படுகிற குன்றின் அடிப்பகுதியில் குகைகள் அமைத்து, நியூட்ரினோ அணுத்துகள் ஆய்வு செய்யும் திட்டம் ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ. பரப்பளவும், 3,18,181 கன மீட்டர் கொள்ளளவும் கொண்ட நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எட்டு லட்சம் டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்படவுள்ளன. இந்தத் திட்டம் 50 லட்சத்துக்கும் அதிகமான தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமைகளை பாதிக்கும். அந்தப் பகுதி விவசாயிகளையும், பயிர்களையும், கால்நடைகளையும், காட்டு உயிர்களையும் கதிர்வீச்சினால் அழிக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையும், மலை சார்ந்த சூழலும், அப்பகுதி அணைகளும் ஆபத்துக்குள் தள்ளப்படும். ஒருசில ஆண்டுகள் நியூட்ரினோ ஆய்வுகள் செய்து முடித்துவிட்டு, இந்தக் குகைகளை இந்தியாவெங்கிலுமிருந்து வந்து குவியும் அணுக்கழிவுகளை பாதுகாத்து வைக்கும் ஆழ்நிலக் கிடங்காக (Deep Geological Repository) மாற்றும் திட்டமும் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.
[4] அணுக்கழிவு ஆய்வு மையம், வடபழஞ்சி, மதுரை மாவட்டம்:
மதுரை மாவட்டம், மதுரை தெற்கு தாலுக்கா வடபழஞ்சி கிராமம் “உயராற்றல் இயற்பியல் மையம்” (International Conference on High Energy Physics - ICHEP) அமைக்கப்படும் இடத்தில் அணுக்கழிவு ஆய்வு மையம் அமைக்கப்படுகிறது. முப்பது ஏக்கர் பரப்பளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்கிறார்கள். தற்போது சுமார் 1.75 கோடி செலவில் சுற்றுச்சுவர், கம்பி வேலி அமைக்கப்படுகிறது. அடுத்தக் கட்டமாக 5.5 கோடி செலவில் அணுக்கழிவு ஆய்வு மையம் கட்டப்படும். “அணு உலைக்கழிவுகளை அழிப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அழிப்பது குறித்துக் கண்டறிவதே மதுரையில் அமையவிருக்கும் மையத்தின் முக்கியப் பணி” என்று பாபா அணுசக்தி ஆராய்ச்சி மைய அதிகாரிகள் கூறுகின்றனர். வடபழஞ்சி பஞ்சாயத்துத் தலைவர் திருமதி. விமலா வைரமணி வேதனையோடு சொல்கிறார்: “இங்கு சிறு கட்டடம் கட்டக்கூட ஊராட்சியின் அனுமதி தேவை. ஆனால், அவர்கள் அனுமதி கேட்கவும் இல்லை. என்ன செய்யப்போகிறோம் என்று சொல்லவும் இல்லை. நியூட்ரினோ என்று பேசிக்கொள்கிறார்கள். எதுவும் புரியவில்லை.” மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சுப்பிரமணியம், “திட்டம் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்” என்கிறார் (தி இந்து, செப்டம்பர் 16, 2013).
[5] சிர்க்கோனியம் திட்டம் (Zirconium Project), பழையகாயல், தூத்துக்குடி மாவட்டம்:
சிர்க்கோனியம் எனும் வேதியல் பொருள் சிர்க்கோன் எனும் அரியவகை மணலிலிருந்து தயாரிக்கப்படுகிறது. அணுமின் நிலையங்களுக்குத் தேவைப்படும் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் சிர்க்கோனியம் உறிஞ்சி (sponge) போன்றவைகளை தயாரிப்பதற்காக அணுசக்தி எரிபொருள் நிலையம் (Nuclear Fuel Complex) நடத்துகிற தொழிற்சாலைதான் தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் கிராமத்திலுள்ள சிர்க்கோனியம் திட்டம். இது 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் துவக்கி வைக்கப்பட்டது. ஆண்டு தோறும் சுமார் 500 டன் சிர்க்கோனியம் ஆக்ஸைட் மற்றும் 250 டன் சிர்க்கோனியம் உறிஞ்சியை (sponge) அணுமின் நிலையங்களுக்காக இந்த ஆலை உற்பத்தி செய்யும்.
[6] இந்திய அரும்மணல் நிலையம் (Indian Rare Earths Ltd.), மணவாளக்குறிச்சி, குமரி மாவட்டம்:
சிர்க்கோனியம் திட்டத்துக்குத் தேவையான சிர்கோன் மணல் இங்கே பிரித்தெடுக்கப்படுகிறது. அரியவகை மணல் நிலையம் கேரள மாநிலம் ஆலுவா எனுமிடத்தில் ஆகஸ்ட் 18, 1950 அன்று இந்திய அரசு மற்றும் திருவிதாங்கூர் அரசுகளால் ஒரு தனியார் நிறுவனமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1963-ம் ஆண்டு அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் மத்திய அரசின் நிறுவனமாக மாற்றப்பட்டது. அப்போது கேரளாவில் சவர எனுமிடத்திலும், குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியிலும் இரு நிலையங்கள் அமைக்கப்பட்டன. மணவாளக்குறிச்சி அரியவகை மணல் நிலையம் கன்னியாகுமரியிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இங்கே ஆண்டு தோறும் 90,000 டன் இல்மனைட் (Ilmenite), 3,500 டன் ரூட்டைல் (Rutile), 10,000 டன் சிர்கோன் (Zircon), 3,000 டன் மோனோசைட் (Monazite), 10,000 டன் கார்னெட் (Garnet) மணல்கள் கடற்கரையிலிருந்து தோண்டி எடுக்கப்படுகின்றன. அரியவகை மணல்கள் கொண்ட பகுதிகளிலிருந்து மணல் தோண்டி எடுக்கும் உரிமமும் பெற்றிருக்கிறது இந்த நிறுவனம். மணலைத் தோண்டி எடுப்பதோடு, தாது மணல்களைப் பிரித்தெடுக்கும் ஆலையும், சிர்கோனை மேம்படுத்தும் வேதியல் ஆலையும் இங்கே இயங்குகின்றன.
தமிழன் என்று சொல்லடா, தட்டிக்கேட்டு நில்லடா!
மேற்கண்ட அணுசக்தித் திட்டங்கள் அனைத்துமே தமிழர்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை மீறுகின்றன. நம்மை கடும் நோய் நொடிகளுக்குள் தள்ளுகின்றன. நமது வருங்காலத்தை, வரவிருக்கும் சந்ததிகளை அழிக்கின்றன. இந்தத் திட்டங்கள் பற்றிய முழு உண்மைகளை, முழுமையான தகவல்களை நமக்குத் தருவதில்லை. பிரதமரும், மத்திய அமைச்சர்களும், அணுசக்தித் துறை அதிகாரிகளும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கு, உணர்வுகளுக்குக் கடுகளவும் மரியாதை கொடுக்காமல், பொறுப்புணர்வின்றி பேசுகின்றனர்; அறிவிப்புகளை வெளியிடுகின்றனர். தமிழர்களின் வாக்குகளையும், ஆதரவையும் மட்டும் விரும்பும் சில அரசியல் கட்சிகள், மேற்கண்ட மக்கள் விரோதத் திட்டங்களை, தீமைகளை தட்டிக்கேட்பதில்லை.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் தமிழர்களே, உங்களின், உங்கள் குழந்தைகள்—பேரக்குழந்தைகளின் பாதுகாப்பு, நல்வாழ்வு, எதிர்காலம் கேள்விக்குறியாவதை கவனிக்கிறீர்களா? தமிழகம் வளர வேண்டும், அதற்கு மின்சாரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இயற்கையை அழிக்காத, மக்கள் உடல்நலத்தைக் கெடுக்காத பல வழிகள் இருக்கும்போது, ஏன் ஆபத்தான அணுத் தீமைகளை எங்கள்மீது சுமத்துகிறீர்கள் என்றுதான் கேட்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு லாபமும், உங்களுக்கு ஏராளமான கமிஷனும் கிடைக்கும் என்பதற்காக, எங்களை பலிகடா ஆக்காதீர்கள் என்கிறோம். தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் என்று எண்ணாதீர்கள், நடத்தாதீர்கள் என்று உரிமைக்குரல் எழுப்புகிறோம். அணுத் தீமையற்ற தமிழகம் அமைத்திட விழைந்து நிற்கிறோம்.
- அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் & கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
- விவரங்கள்
- சந்திரமோகன்
- பிரிவு: சுற்றுச்சூழல்
பிரபஞ்சத்தின் ரகசியத்தை கண்டறிய என்று இந்தியாவில், ஓர் ஆராய்ச்சி ஓசையில்லாமல் அரங்கேறிவருகிறது. தேனி மாவட்டம் போடி மேற்கு மலைப் பகுதியில் உத்தமபாளையம் தாலுகாவில், தேவாரம் - பொட்டிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ள அம்பரப்பர் மலை/அம்பரசர் கரடு எனப்படுகிற 1300 மீட்டர் உயரமுள்ள குன்றில் 1 கி.மீ. அடியில் மலையைக் குடைந்து ஒரு பாதாள ஆய்வுக் கூடம் அமைக்கப்படுகிறது. இந்திய அணுசக்தி துறை அமெரிக்க உதவியுடன் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைப்பதற்கான சாலைகள், வேலிகள், அமைக்கும் பணியை துவங்கிவிட்டது. கேரளாவில் எதிர்ப்புகளை உருவாக்கி இருக்கும், நீலகிரி ஊயிர்ச்சூழல் மண்டலத்திலிருந்தும் துரத்தப்பட்ட இத்திட்டம் தற்போது தேனி மாவட்ட மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சனையில் நீதி கோரி கொந்தளித்து எழுந்த விவசாய சமூகம், இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வடிவில் ஒரு பேராபத்தை எதிர் கொண்டுள்ளது.
நியூட்ரினோ என்றால் என்ன? ஆய்வு எதற்காக?:
நியூட்ரினோக்கள் என்பது எலக்ட்ரான்களைப் போல அடிப்படைத் துகள்களாகும். இனால் இவை அணுவின் பகுதி இல்லை; இவை பிரபஞ்சத்தில் பெருமளவு உள்ளன. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு காரணமான பெரு வெடிப்பின் பொழுது மிகப் பெரிய அளவில் இத்துகள்கள் வெளிப்பட்டன. மேலும், காற்று மண்டலத்துடன் காஸ்மிக் கதிர்கள் உறவாடும் பொழுது தொடர்ந்து நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன; மிகமிக எடைக் குறைந்த கதிர்களாக இவை பல்லாயிரக் கணக்கில் அன்றாடம் நமது உடலைக் கடந்து செல்கின்றன. இதைப் பற்றிய ஆய்வு என்பது இயற்கையின் இயங்காற்றல் பற்றி பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அறிந்து கொள்ள உதவும். இது முழுக்க முழுக்க வெறும் விஞ்ஞான நோக்கம் மிக்க ஆய்வே ஆகும். மானிடத்திற்கு இதனால் எந்த பாதிப்பும் கிடையாது. - இவையே இந்திய அரசாங்கத்தின் கருத்தாகும். நவீன (துகள்) இயற்பியல், ஏற்கனவே பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய அடிப்படை உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பிரபஞ்சத்தின் இரகசியத்தைத் தெளிவு படுத்தியதற்காக என்றே இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், பெருவெடிப்பின் (பிக் பேங்க்) விளைவாக பிரபஞ்சம் தோன்றிய பொழுது, அணுவின் பல துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டுப் பொருளான "கடவுள் துகள்'/ ‘ஹிக்ஸ் போஸன்’ என்பதை கண்டறிந்தது; பிரபஞ்சத்தின் எளிய தன்மையை, அணு துகள்கள் எப்படி நிறையைப் (Mass) பெருகின்றன என்பதை ஆய்வு மூலம் நிறுவியது போன்றவற்றிற்காக பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பிரான்கோயிஸ் ஆங்லெர் ஆகிய விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிக்ஸ் போசான் துகள் பிரபஞ்ச பாகு போல, புலமாகச் செயல்படுகிறது; நாம் கண்ணால் காண முடியாத காற்று போல, காந்தப் புலம் போல நிலவுகிறது. அணுத்துகள்கள் இந்த ஹிக்ஸ் புலத்துடன் உறவாடும்போதுதான் நிறையைப் பெறுகின்றன. இப்படியாக, நிறையைப் பெறுகின்ற எலெக்ட்ரான், அணுக்களின் உருவாக்கத்திற்கும், அணுக்களை ஒன்றுபடுத்தி வைத்திருப்பதிலும் முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது. பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதை ஹிக்ஸ் புலம் / ஹிக்ஸ் போஸான் துகள் விளக்கியதால்தான், ஊடகங்கள் ‘கடவுள் துகள்’ எனப் பெயரிட்டு பிரபலப்படுத்தின. இதற்கு மேலும் ஏன் நியூட்ரினோ பற்றிய ஆய்வு என்ற கேள்வி எழுகிறது.
போடி மலையில் ஆய்வுக் கூடம் எதற்காக?
கடந்த 2005ல் பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷினால் கையெழுத்திடப்பட்ட இந்திய-அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் ஓர் அங்கமே இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடத் திட்டமாகும். அணு சக்திக்கு அடிப்படையான நவீன ‘துகள்’ அறிவியலில் அமெரிக்கா வல்லமை பெற முயற்சிக்கிறது. சிகாகோவில் ஃபெர்மி லேப் என்ற இயற்பியல் கூடத்தை அமைத்து வருகிறது. ஆய்வுக் கூடம் அமெரிக்க அணு சக்தி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற ஆற்றல் மிக்க நியூட்ரினோ கற்றைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, புவி உருண்டையின் நேர் எதிர் பக்கத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆய்வுக் கூடம் தேவைப்படுகிறது. ஃபெர்மி லேப்பிற்கு பங்களிப்பு செய்வதே இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடமாகும். இதன் அதிகாரபூர்வ பேச்சாளர் N.K. மோண்டல், சர்வதேச நியூட்ரினோ கமிட்டி உறுப்பினராவார். ஃபெர்மி லேப்பின் வழிநடத்தும் குழு உறுப்பினரும் ஆவார். யாருக்காக இவர் பணியாற்றுவார்?
மேலும், இத்திட்டமானது, புவியியல் ரீதியாக, உயிரியல் ரீதியாக, கதிரியக்க ரீதியாக மானுடத்திற்கும், இயற்கைக்கும் கேடானதாகும். இத்திட்டத்திற்கு, புதியதொரு ஆயுதத்தை-அணு ஆயுதத்தை விடக் கொடியதான ஆற்றல்மிக்க அழிக்கமுடியாததொரு ஆயுதத்தை உருவாக்கும் வல்லமை உள்ளது. இத் திட்டத்திற்காக 4 ஆண்டுகளில் அகற்றப்படும் 8 லட்சம் டன் பாறைகள், வெடிவைத்து தகர்க்கப் பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின்கள், சுற்றுச் சூழலியல் ரீதியாக எளிதில் சேதமுறுகிற மண்டலமான மேற்கு மலைத் தொடரிலே நில நடுக்கங்களை தூண்டும், மாசுபடுத்தும். 400 கோடி கன மீட்டர் தண்ணீரை தேக்கி வைத்துள்ள கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள 12 அணைகளைப் பாதிக்கும்; 2018ல், திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், அமெரிக்காவின் சிகாகோ ஆய்வுக் கூடத்திலிருந்து (ஃபெர்மி லேப்) தயாரிக்கப்பட்டு போடி ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் உயர் சக்திமிக்க நியூட்ரினோ கற்றையானது இந்திய ஆய்வகத்தின் சுற்றுப் புறத்தில் கதிர் வீச்சையும், கழிவுகளையும் ஏற்படுத்தும்; 50 லட்சம் தமிழக, கேரள மக்களின் வாழ்வுரிமையில் பாதிப்பை ஏற்படுத்தும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், தாவரங்களுக்கும், காட்டு உயிர்களுக்கும், கேடுகளை உருவாக்கும். மேற்குத் தொடர் மலைகளை பேராபத்திற்குள் தள்ளிவிடும் - என்பதெல்லாம் அபாயங்களாகும்.
நியூட்ரினோ திட்டத்தின் அபாயகரமான பாதை:
2008ல் நீலகிரி மலையில் அமைக்கப்படுவதாக திட்டமிடப்பட்டது. முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகில் உள்ள சிங்காரா என்ற இடம் குறிவைக்கப்பட்டது. இது யானைகளின் முக்கியமானதொரு வழித்தடமும் ஆகும். பெரியளவிலான கட்டுமானப் பணிகள், அன்றாடம் நூற்றுக் கணக்கான சரக்கு வாகனங்களின் செயல்பாடு, வன விலங்குகளின் இயற்கை வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக மாறும் என்ற சுற்றுச் சூழல் அமைப்புகளின் எதிர்ப்பினால், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை மத்திய அமைச்சரகம் அனுமதி மறுத்தது. எனவே, இத் திட்டத்தை டாடா நிறுவனம் ஊள்ளிட்ட ஏழு விஞ்ஞான நிறுவனங்களின் சங்கமான "நியூட்ரினோ கூட்டுக்குழு' தேனி மாவட்டம் சுருளிக்கு மாற்றுவது என முடிவெடுத்தது. இப்பகுதியில் சுருளியாறு அணையும் மிக அருகாமையில் முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, ஆனை இறங்கல் அணை போன்ற பல அணைகளும் மேக மலை வனச் சரணாலயமும் இருந்ததாலும், யானைகள் நடமாடும் பகுதியாக இருந்ததாலும் கைவிடப்பட்டது. சுமார் 30 கி.மீ. வடக்கில் உள்ள போடி மேற்கு மலைப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. தேனி மாவட்டமும், கேரளாவின் இடுக்கி மாவட்டமும் சந்திக்கும் மலைப்பகுதி இதுவாகும்.
ரூ.1350 கோடி செலவாகும் என மதிப்பிடப்படுகிற இத்திட்டத்திற்கானத் தொகையை இந்திய அரசின் அணுசக்தி துறையும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் தருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மலைக்குன்றிற்குள் காஸ்மிக் கதிர்கள் நுழையாதவாறு பாதாள ஆய்வுக் கூடமானது சுற்றிலும் சுமார் 1 கி.மீ. அளவிற்கு மலைப்பகுதி இருக்குமாறு அமைக்கப்படுகிறது. சுமார் 2.5 கி.மீ. நீளமுள்ள 16,235 ச.மீ பரப்பளவுள்ள, 3,18,181 கன மீட்டர் கொள்ளளவு மிக்க நான்கு குகைகள் உருவாக்கப்படுகின்றன. 8 லட்சத்திற்கும் அதிகமான டன் எடையுள்ள பாறைகள் அகற்றப்பட உள்ளன. குகை ஆய்வகத்திற்குள் 50,000 டன் எடையுள்ள காந்த சக்தியூட்டப்பட்ட இரும்புக் கலோரி மீட்டர் கண்டுபிடிக்கும் அளவுமானி அமைக்கப்பட உள்ளது. இது 10,000 கி.மீ. தொலைவில் இருந்து வரும் நியூட்ரினோ துகள்களையும் கண்டறியக்கூடியது.
ஆய்வுக் கூடத்தை அமைக்க 1லட்சம் டன் இரும்பு, 35,000 டன் சிமெண்ட், மணல், உலோகங்கள் போன்ற கட்டுமானப் பொருட்கள் தேவைப்படுகின்றன. வேட்டு வைத்து குகையைக் குடைவதால் உருவாகும் பாறை இடிபாடுகளை அகற்றுவதற்கும், கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் 95,000 லாரிகள் நான்காண்டுகளில் இயக்கப்படவிருக்கின்றன. அதாவது, நாளொன்றுக்கு 130 லாரிகள் சாலையில் ஓடப் போகின்றன. பாறைகளை அகற்றி எடுத்துச் செல்லும் பணி தமிழக அரசாங்கத்திற்கு வழங்கப் பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைத் துறையானது இதற்கான சாலைகளை அமைத்திடும் பணிகளை செய்து வருகிறது.
2006ல் முன்வைக்கப்பட்ட (அய் என் ஓ) திட்ட அறிக்கையின்படி, நியூட்ரினோ ஆய்வு கூடமானது 2012ல் செயல்படத் துவங்கும். முதற்கட்டமாக 2012-17ல், காற்று மண்டலத்திலுள்ள நியூட்ரினோத் துகள்களிலிருந்து விபரங்களை சேகரிப்பது மேற்கொள்ளப்படும். 2018ல் இரண்டாம் கட்டம் துவங்கும். வெளிநாட்டு நியூட்ரினோ ஆலையில் தயாரிக்கப்படும் நியூட்ரினோக்கள் கற்றையாக இங்கு அனுப்பப்படும். நியூட்ரினோ ஆலை என்பது அமெரிக்காவின் எரிசக்தி துறையின் திட்டமாகும். இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்கு, புவி உருண்டையின் நேர் எதிர்ப்பக்கத்தில் உள்ள அமெரிக்காவின் சிகாகோ பகுதியின் உயர் சக்தி வாய்ந்த ஃபெர்மி இயற்பியல் பரிசோதனைச் சாலையிலிருந்து, பூமியின் நடுக் கண்டப் பகுதியையும் கடந்து வரும் நியூட்ரினோத் துகள்கள் பரிசோதிக்கப்படும்.
இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் தான் உலகிலேயே 7000 கி.மீ.க்கும் கூடுதலான தொலைவில் உள்ள ஆலைகளில் தயாரித்து அனுப்பப்படும் நியூட்ரினோக்களை பரிசோதிக்கும் ஆற்றல் மிக்க ஒரே ஆய்வுக் கூடம் ஆகும். பூமியின் நடுப்பகுதியை, அச்சைக் கடந்து ஒரு திசையிலிருந்து மற்றொரு பகுதிக்கு கற்றையாக நியூட்ரினோக்கள் வந்து சேர முடியுமென்றால்..., நவீனத் ‘துகள்’ இயற்பியல் மற்றும் அணு விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிக்கலான நவீன ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை அறிவியல் ரீதியாக மறுப்பதற்கில்லை. இந்தியாவிலும், அமெரிக்காவிலும், நியூட்ரினோ ஆராய்ச்சிகளை இரு நாட்டு அரசாங்கங்களுடைய அணு ஆயுதம் தயாரிக்கும் துறைகள் தான் கட்டுப்படுத்துகின்றன என்பது கவனத்திற்குரியதாகும். அமெரிக்காவுடன் அதிகரித்துவரும் இந்திய அணு, ஆயுத ஒப்பந்தங்கள் என்ற கவலையிலிருந்தும் இந்த திட்டத்தை அணுக வேண்டியுள்ளது.
இயற்கை பொக்கிஷத்திற்கு நேரிடும் பேராபத்துகள்:
2010 நவம்பரில், கோவை-சலீம்அலி பறவைகள் மய்யத்தினால், அவசர கதியில், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆய்வுக் கூடத்திலிருந்து வெறும் 5 கி.மீ. தூரத்தை மட்டுமே ஆரமாகக் கொண்ட வட்டப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வை மேற்கொண்டது. உத்தமபாளையம் தாலுக்காவின் பொட்டிபுரம், சங்கராபுரம், தேவாரம், ராசிங்கபுரம் மற்றும் கேரளாவின் தேவிகுளம், உடும்பன் சோழா தாலுக்காக்களின் சில பகுதிகளில் நிலவுகிற உயிரியியல் பன்மையை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது. ஆய்வகமானது 120 ஆண்டு காலம் செயல்படும் தன்மை வாய்ந்தது. நில அதிர்வுகளை தாக்குப்பிடிப்பது முக்கியமானதொரு காரணியாகும். அடிக்கடி நில அதிர்வுகளை எதிர்கொள்ளும் இடுக்கி மாவட்ட எல்லையில் ஆய்வகம் அமைகிறது என்பதைப் பற்றியும், குகைகளைக் குடைவதற்கு பயன்படுத்தப்படும் 1 லட்சம் கிலோ ஜெல்லட்டின் வெடிகளால், ஆய்வகப் பகுதியில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணை, 49 கி.மீ. தொலைவில் உள்ள முல்லைப் பெரியார் அணை பாதிக்கப்படுமா என்பதைப் பற்றியும் அறிக்கையானது பரிசீலிக்கவில்லை. மாறாக, மலைக்காடுகளைக் கொண்ட அப்பகுதியை ஆண்டிற்கு 1000 மி.மீ. குறைவான மழைப் பொழிவை மட்டுமே கொண்டதாகவும், குட்டையான புதர்காடுகளை மட்டுமே கொண்டதாகவும் சித்தரிக்க முயற்சிக்கிறது.
மேற்கு மலைத் தொடர் நமது நாட்டிற்கு கிடைத்த இயற்கை பொக்கிஷமாகும். இது இமாலய மலைத் தொடரைவிட புவியியல் வரலாற்றில் முந்தையது ஆகும். குஜராத்-மகாராஷ்ட்ரா எல்லையில் தொடங்கி குமரி வரை 1600 கி.மீ. நெடுக, பரவியிருக்கும் இத்தொடரை, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய கமிட்டியானது, பாரம்பரிய சின்னமாக 2012ல் தேர்வு செய்தது. தொடரின் 39 இடங்களை பாரம்பரிய சின்னங்களாகவும் அறிவித்தது. மேற்கு மலைத் தொடரானது பல்வேறு வகைப்பட்ட தனிச் சிறப்பான இயற்கை கூறுகளையும், தாவரங்களையும், பூச்சிகளையும், பறவைகளையும், காட்டு உயிர்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் வானிலைத் தன்மையை மாற்றுகிற அளவிற்கான உயர்ந்த மலைகளையும், அடர்த்தியான காடுகளையும் கொண்டுள்ளது. அரிய வகையிலான உயிரினங்களையும், தொல் பழங்குடிகளையும் உலகின் பிற பகுதிகளில் காணக்கிடைக்காத, அருகி வருகிற உயிர்களையும், தாவரங்களையும், சந்தன மரங்கள், உட்டி மரங்கள் என பலவற்றையும் கொண்டிருக்கிறது. மேற்கு மலைத் தொடரின் கேரளா, தமிழ் நாட்டிற்கு இடைப்பட்ட நீலகிரி, ஆனைமலை, பெரியார், அகஸ்திய மலை வனங்கள் மற்றும் (யானைகள், புலிகள், மான்கள், பறவைகள், அணில்கள்) வனச் சரணாலயங்கள் முக்கியத்துவம் மிக்கவையாகும்.
உலகிலேயே பல்லுயிரியம் அடர்த்தியாக உள்ள பதினெட்டு இடங்களில், மேற்கு மலைத் தொடரும் ஒன்றாகும். இதன் உயர் பகுதியில் மழைக்காடுகளும், அடிவாரத்தில் புதர்காடுகளும், மற்ற இடங்களில் இலையுதிர் காடுகளும், ஆங்காங்கே புல்வெளி பகுதிகளும் உள்ளன. மழைக்காடுகள் பல நதிகளின் தாயகமாகும். வெப்ப நாடுகளில், மழை நன்கு பெய்யும் பகுதிகளில், பல ஆயிரம் ஆண்டுகள் செழித்து வளர்ந்து நிற்கும் அடர்ந்த வனங்களே மழைக்காடுகள் எனப்படுவதாகும். மூன்றடுக்குகளாக அமைந்துள்ள இக்காடுகளில் உச்சாணிக் கிளைகளில், மத்தியில் உள்ள பகுதிகளில், தரைகள், புதர்களில் என வெவ்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மழைக்காட்டில் வாழ்வதற்கான தகவமைப்புக் கொண்ட சிங்கவால் குரங்கு, இலையுதிர் காடுகளில் உள்ள கருங்குரங்கு(நீலகிரி லங்கூர்), புல்வெளிகளில் வாழும் வரையாடுகள்(நீலகிரி தார்) போன்ற மூன்று அரிய காட்டுயிர்களின் உறைவிடமாகும்.
தேனி-இடுக்கி மாவட்டங்களில், தேயிலைத் தோட்டப் பயிர்களுக்காகவும், அணைகளுக்காகவும், மர வியாபாரத்திற்காகவும் மரங்களை வெட்டி அகற்றியதால் மழைக்காடுகள் பெரிதும் அழிக்கப்பட்டன. உறைவிடங்களை இழந்ததாலும், நாட்டு வைத்தியத்திற்காகவும் இந்த அரிய விலங்குகள் வேட்டையாடப்பட்டு அழிவின் விளிம்பில் உள்ளன. பலவகை பறவைகள், பாலூட்டிகள், மீன்கள், பூச்சிகள் தாவரங்கள் என இயற்கையின் கண்கவர் காட்சியாக இப்பகுதி திகழ்கிறது. தேனி வனச்சரக மண்டலத்தில் மட்டும் 30 யானைகளும், 360 வரையாடுகளும், பல்வகை விலங்குகளும், பறவைகளும் இருப்பதாக பட்டியல் உள்ளது. இந்தப் பின்னணியில் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திற்காக மலையடிவாரத்தில் 23 ஹெக்டேர் பரப்பளவில் காடுகளை அழிப்பது, வெடிகளை வெடித்து குகைகளை குடைவது, எடுக்கப்படும் பாறை இடிபாடுகளை கொட்டிக் குவிப்பது, அகற்றுவது, இடைவிடாத வாகன செயல்பாடுகளால், காற்று மாசுபடுத்தப்படுவது என இயற்கையை சீரழிக்கும் நடவடிக்கைகள் வரவுள்ளன; மொத்தத்தில், அப்பகுதியின் விவசாயம் அழிவைச் சந்திக்கப் போகிறது.
உலகின் உயிரிப் பல்வகைமையின் வனமான, மேற்கு மலைத் தொடர் என்ற இந்த இயற்கை மணியாரத்தை பாதுகாப்பது, பராமரிப்பது நாட்டின், இயற்கை அறிவியலின் கடமையும், கடப்பாடும் ஆகிறது. வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சரகத்தால் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட "மேற்கு மலைத் தொடர் சுற்றுச் சூழலியல் வல்லுனர் குழு மேற்கு மலைத் தொடரின் அபாயகரமான நில நடுக்க பகுதிகளையும், வகைகளையும் பட்டியலிட்டது. கோவாவில் நடைபெறுகிற கண்மூடித்தனமான சுரங்க செயல்பாடுகளையும், கர்நாடகாவின் குண்டியா மற்றும் கேரளாவின் அதிரப்பள்ளி நீர் மின் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதியை அளிக்க வேண்டாம் எனவும் பரிந்துரைத்தது. மேற்கு மலைத் தொடர் மொத்தமுமே சுற்றுச் சூழல் பதட்ட பகுதியாக சித்தரித்தது. இயற்கையின் சுற்றுச் சூழல் எளிதாக பாதிக்கப்படும் பகுதியே “சுற்றுச் சூழலியல் எளிதில் சேதமுறுகிற மண்டலம்” எனச் சொல்லப்படுகிறது. இப்படியாக (இஎஸ்இசட் - 1) என வரையறுக்கப்பட்டுள்ள பகுதியில் தான் உத்தமபாளையம் தாலுக்காவும், இடுக்கி மாவட்டத்தின் உடும்பன் சோழா, தேவிகுளம் தாலுக்காக்களும் வருகின்றன. இங்கு தான் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமையவுள்ளது.
எதிர்ப்புகளும், போராட்டங்களும்:
2008-09ல், சுற்றுச் சூழல் மற்றும் மக்கள் அமைப்புகளின் எதிர்ப்புகளின் காரணமாக, நீலகிரி மலை-சிங்காரா வனப்பகுதியில் இத்திட்டம் அனுமதியை பெறமுடியவில்லை. பிறகு, தேனி மாவட்டம்-சுருளியாறு மலைப் பகுதியை தேர்ந்தெடுத்தனர். பல்வேறு அணைகளுக்கு அருகாமையில் திட்டப் பகுதி இருந்ததால் அங்கும் அனுமதி கிடைக்கவில்லை. மேற்கு போடி மலைப் பகுதியை 2010ல் தேர்ந்தெடுத்தனர். சுற்றுச் சூழல் - வனத்துறை அமைச்சகத்திடமும் அனுமதி பெற்றனர். ஆய்வு கூடத்திற்கு நெருக்கமான நான்கு ஊராட்சிகளை(பொட்டியபுரம், தேவாரம், சங்கராபுரம், ராசிங்கபுரம்) சேர்ந்த 28,600 மக்களின் பெரும்பான்மையினர் விவசாயத்தை நம்பி உள்ளனர். விவசாயத் தொழிலாளர்கள் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினசரி ஜீப்புகள் மூலமாக வேலைக்குச் சென்று வருகின்றனர்.
கிராம மக்கள் ஆடுமாடுகளை மேய்ப்பதற்கும், புற்களை அறுப்பதற்கும், காய்ந்த விறகுகளை சேகரிப்பதற்கும் இந்த மலைப் பகுதிகளை சார்ந்தும் இருந்தனர். தற்போது ஆடுமாடுகளை, மனிதர்களை மலைப்பகுதிக்குள் அனுமதிப்பதில்லை. 2011ல் திட்டத்திற்காக நிலத்தை சர்வே செய்தபோது மக்கள் அணிதிரண்டு முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். தேவாரம் போலீஸ் வழக்கு போடப்பட்டுள்ளதாக மக்களை தொடர்நது மிரட்டி வருகிறது. நியூட்ரினோ திட்டத்தில் அபாயம் கிடையாது என்ற தொடர் பிரச்சாரத்தை அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷ அபியான்) செய்து வருகிறது. அணுக்கழிவுகளை புதைப்பதற்கான சுரங்கம் தோண்டப்படுகிறது என்ற அய்யமும் மக்களிடம் எழுந்துள்ளது. எதிர்ப்பு தெரிவித்த நான்கு ஊராட்சித் தலைவர்களும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டனர். 2012ல் ஏழு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீதும் பணிகளை தடுத்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு கேரளாவில் கடந்த 2012ன் இறுதியில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. எதிர் கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் அணுசக்தி விஞ்ஞானி வி.டி.பத்மநாபனும் செய்தி ஊடகங்கள் வாயிலாக திட்டத்தை அம்பலப்படுத்தினர். இடுக்கி மாவட்டத்திற்குள்ளும் ஆய்வுக் கூடம் அமைகிறது, கேரள அணைகளுக்கு பெரிதும் ஆபத்து ஏற்படும்- என்ற கோணத்தில் எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள சிபிஎம் கட்சியினரோ இத்திட்டத்தை ஆதரிக்கின்றனர்.
நாசகரமான நியூட்ரினோ திட்டத்தை முறியடிப்போம்!
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல், மக்களின் ஆரோக்கியம், மேற்கு மலைத் தொடர் இயற்கையை, உயிரினங்களை பாதுகாத்தல், சுற்றுச் சூழலியல் எளிதில் சேதமுறுகிற மண்டலத்திலுள்ள அணைகளை பாதுகாத்தல் என்பதெல்லாம் ஒரு சில விஞ்ஞானிகளின் கையில் வழங்கப்பட்டுவிட்டது. தாங்கள் பணியாற்றும் ஆய்வு கூடப் பகுதியின் புவிச் சூழலைப் பற்றி அறியாதவர்களாக, அவர்கள் கையாள உள்ள துகள்களின் ஆபத்தான பண்புகளைப் பற்றிக் கூட அறியாதவர்களாக, இந்திய அரசின் கைப்பாவையாக, இந்த விஞ்ஞானிகள் மாறிவிட்டனர். உலகமயம், தனியார்மயம், தாரளாமயம் என்ற மத்திய அரசின் பொருளாதாரப் பாதையானது, ஏகாதிபத்தியங்களின், பெருங்குழும நிறுவனங்களின் நலனுக்காகவே இருக்கிறது. ஏகாதிபத்திய சார்பு விஞ்ஞானமா? மக்கள் சார்பு விஞ்ஞானமா? - என்ற பிரச்சனையில் நாட்டிலுள்ள விஞ்ஞானிகள் சமூகம் மக்கள் பக்கம் நிற்க வேண்டும். மக்கள் நலன், மக்கள் ஆரோக்கியம், மக்கள் வாழ்வுரிமை மக்கள் சார்பு வளர்ச்சித் திட்டங்களுக்காகவே பணியாற்ற வேண்டும்.
இந்தப் பிரச்சனை சுற்றுச் சூழல் மட்டும் சார்ந்த பிரச்சனையாகவோ, தேனி மாவட்ட விவசாயிகள் பிரச்சனையாகவோ மட்டும் புரிந்துகொள்ளப்பட்டுவிடக் கூடாது. பல்வேறு அணுசக்தி, ஆயுத, பொருளாதார கூட்டு ஒப்பந்தங்கள், திட்டங்கள் மூலமாக மன்மோகன் சிங் தலைமையிலான அய்முகூ அரசாங்கம் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாக மாறுவதற்கு துடிக்கிறது. ஆயுதங்கள், அணு போன்ற கேந்திரமானத் துறைகளில் அமெரிக்கா நுழைவதற்கு பல வாய்ப்புகளை வழங்கி வருகிறது; அமெரிக்காவின் அணு ஆயுத வகைப்பட்ட ஒரு ரகசிய திட்டத்திற்கு, இந்திய நியூட்ரினோ ஆய்வுக் கூடம் வாயிலாக ஆபத்தான பாதையை அமைத்து தருகிறது; மக்களின் வாழ்வோடும் தேசத்தின் இறையாளுமையோடும் விளையாடுகிறது என்ற செய்தி விரிவாக எடுத்துச் செல்லப்பட வேண்டும். நியூட்ரினோ ஆய்வுக் கூட நாசகர திட்டத்திற்கு எதிராக தேனி மாவட்ட விவசாய சமூகத்தோடு, சனநாயக, நாட்டுப் பற்றுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்; முறியடித்திட வேண்டும்.
- சந்திரமோகன் (தொலைபேசி எண் : 9443243734 e mail:
- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் முழு அபாயம்
- கொல்லத் துளை(டி)க்கும் அரசு
- வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை ஏன் விரட்டப்பட வேண்டும்?
- உலக மயமாக்கலும், சுற்றுச்சூழல் பாதிப்புகளும்
- தாவரங்களின் எதிரி - பார்த்தீனியம்
- ஆபத்தை விளைவிக்கும் ஆஸ்பெஸ்டாஸ்!
- ஞெகிழியினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள்!
- மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்!
- வெறும் தண்ணீருக்கோ வரப்போகுது பஞ்சம்!
- அணுமின்சக்தி அழித்த உயிர்களின் வரலாறு
- புவி வெப்பமயமாதலும், முதலாளித்துவ அரசியலும்
- புவி வெப்பமயமும் தேசங்களின் இறையாண்மையும்
- இயற்கை வளங்களின் சூறையாடலும் ஆந்திர மக்களின் போராட்டமும்
- சுற்றுச்சூழல் வழக்குகள்/ஆராய்ச்சிகள் - நிபுணர்களும் விஞ்ஞானிகளும் யார் பக்கம்?
- பூமியைக் காப்பாற்றுவோம்!
- கூடங்குளம் அணுஉலை - ஆதரிப்பதா? எதிர்ப்பதா?
- பருவநிலை மாற்றம்
- உயிர் வாழும் உரிமைக்கு உலை வைக்கும் மரபணு தொழில்நுட்பம்
- ஞெகிழிக் குப்பைகளால் அழியும் மலை வனம்
- புவிவெப்ப உயர்வில் நமது பங்கு