கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- மு.குருமூர்த்தி
- பிரிவு: தொழில்நுட்பம்
உயிர்களின் அடிப்படை அலகு செல். அனைத்து உயிர்களும் செல்களால் ஆனவை. உயிர் தோன்றக் காரணமாக இருக்கும் செல்களே ஸ்டெம் செல்கள் எனப்படும். முதல் அல்லது ஆதிசெல்கள் என்றும் இவற்றை அழைக்கலாம். நோய்க்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் உள்ள வெள்ளை அணுக்களும், உடலுக்குத் தேவையான பிராணவாயுவை இரத்த ஓட்டத்தின் மூலமாக அனைத்து உடல் பாகங்களுக்கும் கொண்டு செல்லும் சிவப்பு அணுக்களும், இரத்தம் உறையவும் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கவும் காரணமான பிளாட்டிலெட்ஸ் என்பவையும் இந்த ஸ்டெம் செல்களில் தான் உள்ளன. ஸ்டெம் செல்கள் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றல் உடையவை. தேவையான தருணத்தில் உடலில் உள்ள 210 வித்தியாசமான அணுக்களாக தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடியவை. ஸ்டெம் செல்களை நாம் குருத்தணுக்கள் என்று அழைக்கலாம்.
ஸ்டெம் செல்கள் இரு வகைப்படும். முதல்வகை சிசு ஸ்டெம் செல்கள் எனப்படும் Embryonic Stem Cells (ESC). இரண்டாவது வகை உடலின் சிலவகையான திசுக்களில் காணப்படும் Tissue Stem Cells/Adult Stem Cells. இவையன்றி Induced Pluripotent Stem Cells (IPS cells) எனும் தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் என்ற வகையும் உண்டு. நமது உடலில் உள்ள தோல், ரோமம் இவற்றின் அணுக்களை மரபணுவியல் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்டெம் செல்லாக மாற்றும் நிகழ்வே தூண்டப்பட்ட ஸ்டெம் செல்கள் எனப்படும். ஸ்டெம் செல்களை மூன்று வழிகளில் பெறலாம்.
1.கருக்கள் மூலம் (Embryonic)
2.ஆட்டோலொகஸ் (Autologous)
3.தொப்புள் கொடி மூலம் (Umbilical cord)
நோயுற்ற உடல்செல்களை அகற்றிவிட்டு புதிய செல்களை மனித உடலில் உருவாக்கும் முயற்சியே ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் நோக்கம். ஸ்டெம் செல்கள் வழியாக அனைத்து நோய்களுக்கும் தீர்வு காணமுடியும் என்று கூறுவதற்கு இயலாது. அதே நேரத்தில் இன்னும் பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளில் பல குறிப்பிடத்தக்க நோய்களை ஸ்டெம் செல்கள் மூலம் தீர்க்க இயலும் என்று ஜப்பானிய ஆய்வாளர் நோர் என்பவர் குறிப்பிடுகிறார்.
பால் பற்கள், ஞானப்பற்கள் இவற்றை பிடுங்க நேரும்போது அவற்றிலிருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கும் முயற்சிகள் பல்லாண்டுகளாக நடைபெற்றுவந்தன. ஆனால் அண்மையில் ஜப்பானிய ஆய்வாளர்கள் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர். ஞானப்பல்லின் (Wisdom Teeth) உட்புறம் இருக்கும் உயிருள்ள செல்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்க இயலும் என்று ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் ஸ்டெம் செல் வங்கிகளை உருவாக்கும் சாத்தியம் அதிகரித்திருக்கிறது.
பிடுங்கப்பட்ட பற்களின் பற்கூழில் இருந்து ஸ்டெம் செல் வங்கிகள் உருவாக்கப்பட்டன. அவை ஜப்பானியர்களுக்கு ஒத்துப்போகிறதா என்றும் ஆராயப்பட்டது. ஏறக்குறைய 20 சதவீத ஜப்பானியர்களின் மரபியலுக்கு இந்த ஸ்டெம் செல்கள் ஒத்துப்போவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சில நாட்களே வயதுடைய கருக்குழந்தையிடமிருந்து ஸ்டெம் செல்களைப் பெறுவது சரியா தவறா என்பதில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆனால் பற்களின் உட்கூழில் இருந்து எடுக்கப்படும் ஸ்டெம் செல்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்பதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
தகவல்:மு.குருமூர்த்தி (
இன்னும் படிக்க: http://news.discovery.com/human/teeth-stem-cells.html
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: தொழில்நுட்பம்
பேட்டரி காரின் பெட்ரோல் டேங்க்கை நிரப்பத் தேவையில்லை. அதைவிட சிறிய இடத்தை அடைத்துக்கொள்ளும் பேட்டரியை வைத்துவிட்டால் போதும் முழு டேங்க் நிரப்பினால் ஓடும் அதே வேகத்திற்கு தூரத்திற்கு காரை ஓட்டலாம் என்று அர்கோன் ரிசர்ச் விஞ்ஞானி லின் ட்ரயே தெரிவிக்கிறார்.
இந்த ஆய்வுக்கூடத்தில் சோதனை ஓட்டத்திலிருக்கும் அந்த அற்புத பேட்டரி பயன்படுத்தும் மின்முனைகளில் ஒன்று வழக்கமான லித்தியம் மற்றது ஆக்சிஜன் வாயு.
லித்திய-வாயு பேட்டரி என்று இதற்கு பெயர் வைத்திருக்கிறார்கள். வழக்கமான பேட்டரிகளைவிட 10 மடங்கு திறமையும், மலிவாகவும் இது இருக்கும் என்கிறார் இவர். சந்தைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- சுந்தரராஜன்
- பிரிவு: தொழில்நுட்பம்
உலகின் லாபகரமான வர்த்தகங்களில் ஒன்றாக மனித மரபணு வர்த்தகம் உருவாகி வருகிறது. மனித மரபணுக்களில் சுமார் 20 சதவீதம் பல்வேறு வர்த்தக நிறுவனங்களால் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன. மனித உடலின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரபணுக்கள் இவ்வாறு பன்னாட்டு நிறுவனங்களின் காப்புரிமை பதிவுபெற்ற சொத்தாக உள்ளது. மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பதிவு செய்து இந்த நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்ற கேள்வி எழலாம். மிகப்பெரிய வர்த்தக சூழ்ச்சியின் அடித்தளமாக இந்த காப்புரிமை பதிவு அமைகிறது. உதாரணத்திற்கு ஒன்றைப் பார்ப்போம்.
அமெரிக்காவின் உடா பகுதியில் அமைந்துள்ள உடா பல்கலைக்கழகம் ((UTAH UNIVERSITY), பெண்களின் மார்பகம் மற்றும் கருப்பையில் உருவாகும் புற்று நோய் குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்த ஆய்வுக்கான நிதியை மிரியாட் ஜெனடிக்ஸ் (MYRIAD GENETICS) என்ற தனியார் நிறுவனம் வழங்கி வந்தது. இந்த ஆய்வின்போது மார்பு மற்றும் கருப்பையில் புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்கள் கண்டறியப்பட்டன.
இந்த இரு மரபணுக்களுக்கான காப்புரிமையை அமெரிக்க பேடன்ட் மற்றும் டிரேட் மார்க் அலுவலகம், உடா பல்கலைக்கழகத்துக்கு கடந்த 1994ம் ஆண்டு வழங்கியது. இதன் பலனாக பெண்களில் உடலில் மார்பக புற்றுநோயை உருவாக்கும் இந்த மரபணுக்கள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனை செய்வதற்கான உரிமை, அந்த மரபணுக்களை பயன்படுத்தும் உரிமை, அந்த மரபணுக்களை கொண்டு மார்பக புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது உட்பட அனைத்து ஆய்வுகளையும் செய்யும் உரிமை ஆகியவை உடா பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
மனிதகுல வளர்ச்சிக்கு எதிரான இந்த காப்புரிமையை அந்த பல்கலைக்கழகம், ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு மிரியாட் ஜெனடிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. இதன்மூலம், மார்பு மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறியவதற்கான முழு உரிமையும் மிரியாட் ஜெனடிக்ஸ் நிறுவனத்திடமே முழுமையாக சென்று சேர்ந்தது. அமெரிக்காவில் மார்பு புற்று நோய் அல்லது கருப்பை புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மிரியாட் ஜெனடிக்ஸ் அங்கீகாரம் பெற்ற ஆய்வு மையங்களில் மட்டுமே சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வை வேறு நிறுவனங்கள் மேற்கொள்ள இயலாத நிலையில், மிரியாட் ஜெனடிக்ஸ் சொல்லும் தொகையே ஆய்வுக்கட்டணம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் பொருளாதார வசதியில்லாத ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சிவில் உரிமை ஒன்றியம் குறிப்பிடுகிறது. மேலும், இந்த வகை நோய்களை உருவாக்கும் மரபணுக்களை ஆய்வு செய்தால்தான் இந்த நோயை தீர்க்கக்கூடிய மருந்துகளையும், நோயைத் தடுக்கும் மருந்துகளையும் கண்டுபிடிக்க முடியும். மார்பக மற்றும் கருப்பை புற்றுநோயை உருவாக்கும் BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்களை அறிவுச் சொத்துரிமை என்ற பெயரில் உடமையாக்கிக் கொண்ட மிரியாட் ஜெனடிக்ஸ் நிறுவனத்தின் அனுமதியில்லாமல், இந்த நோயை குணப்படுத்தும் மருந்துகளை மற்ற நிறுவனங்கள் கண்டுபிடிக்க முடியாது.
எனவே மார்பக புற்று நோய்க்கு மிரியாட் ஜெனடிக்ஸைத் தவிர வேறு எந்த நிறுவனமும் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளை செய்ய முடியாது. எனவே மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்கள் அனைவரும் மிரியாட் ஜெனடிக்ஸ் நிறுவனத்தை மட்டுமே சார்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுவும்கூட அந்த நிறுவனம் நிர்ணயம் செய்யும் விலையை கொடுத்து சிகிச்சை பெறும் வசதியுடைய பெண்களுக்குத்தான்.
மனித உடலின் அங்கங்களை காப்புரிமை செய்ய முடியாது என்ற பொதுக் கொள்கைக்கு எதிராக BRCA1 மற்றும் BRCA2 ஆகிய இரு மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்கபட்டதை எதிர்த்து சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோர் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். மார்பக புற்றுநோய் மட்டுமல்லாமல், ஆஸ்துமா, அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கிய மனித மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய நோய்கள் அனைத்தும் தொழில்மயமாதல், அதன் காரணமாக ஏற்படும் சூழல் பாதிப்புகள் காரணமாக உருவாகி, பரவுவதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நோய்களுக்கான மருந்துகளும் ஒரு சில நிறுவனங்களின் கைகளிலேயே சிக்கி வருகிறது.
இந்தியாவின் காப்புரிமை சட்டங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்திலேயே உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இந்த சட்டங்களின் கீழ் இந்தியாவிலும், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு வர்த்தக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் பல மரபணுக்களுக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பித்து வருகின்றன. இது குறித்து பூவுலகின் நண்பர்கள் சார்பில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மனித மரபணுக்களுக்கு காப்புரிமை பதிவு செய்வது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும்.
(பூவுலகு ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)
- விவரங்கள்
- அருண்மொழி
- பிரிவு: தொழில்நுட்பம்
ஆல்பர்ட்டு ஐன்சுடீன் என்ற பெயரைக் கேட்டாலே நினைவுக்கு வருவது அவரது சார்பியல் கொள்கை('Relativity theory'). ஆனால் ஐன்சுடீன் சார்பியல் கொள்கைக்காக நோபல் பரிசு பெறவில்லை. அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது ஒளிமின் விளைவிற்கு அவர் கொடுத்த விளக்கமே ஆகும். அது என்ன ஒளிமின் விளைவு என்கிறீர்களா? 'ஒளிமின்விளைவு' என்னும் பெயரிலேயே அதற்கு விளக்கமுள்ளது.
ஒளிக்கற்றைகள் சில மாழைகளின்(உலோகங்களின்) மீது விழும்போது அந்த மாழைகள் எதிர்மின்னிகளை உமிழும். ஒளியால் மின்னோட்டம் விளைவதால் இது ஒளிமின்விளைவு எனப்படுகிறது.
சான்றாக நீங்கள் ஒரு குளத்தில் கல்லை விட்டு எறிகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உடனே நீர்த்துளிகள் சிதறும். நீர்த்துளிகள் சிதறுவதற்குத் தேவையான ஆற்றல் நீங்கள் கல்லை விட்டு எறியும் விசையில் இருந்து கிடைக்கிறது.
முதன்முதலில் ஒளிமின்விளைவு 1887ஆம் ஆண்டு எர்ட்சு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அது ‘எர்ட்சு விளைவு’ என்றே அழைக்கப்பட்டது. பின்னர் அது வழக்கொழிந்துவிட்டது. |
ஒவ்வொரு பொருளும் பல அணுக்களால் ஆனது. ஒவ்வோர் அணுவிலும் எதிர்மின்னிகள்('எலக்டிரான்கள்') பிணைக்கப்பட்டு இருக்கும். ஒளி ஆற்றல் இந்த எதிர்மின்னிகளின் மீது விழுகிறது என்று கருதுவோம். அந்த ஆற்றல் எதிர்மின்னிகளைப் பிணைப்பில் இருந்து விடுவிக்கத் தேவையான அளவிலோ அதற்கும் அதிகமாகவோ இருக்கும்போது எதிர்மின்னிகள் மாழையில் இருந்து உமிழப்படும். இதனை ஆற்றல் மாறாக் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.
முதலில் ஒளிமின்விளைவை ஒளியின் அலைப் பண்பைக் கொண்டு விளக்க முற்பட்டனர். (குறிப்பு: எய்சன்பர்க்கு என்பவர் முதன்முதலில் ஒளியின் அலைப் பண்பைப் பற்றிய கொள்கையை வெளியிட்டார்.) அதாவது மாழையின் மீது விழும் ஒளிக்கற்றையின் அடர்த்தியை(‘Intensity’) அதிகரிக்கும்பொழுது வெளிவரும் எதிர்மின்னிகளின் ஆற்றல் அதிகமாகும் என்றும் எதிர்மின்னிகளின் ஆற்றலுக்கும் ஒளியின் அதிர்வெண்ணுக்கும்('Frequency') எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் கருதப்பட்டது. ஆனால் ஆய்வின்பொழுது ஒளிக்கற்றையின் அடர்த்தியை அதிகரிக்கும்பொழுது அதிக அளவில் எதிர்மின்னிகள் வெளிவந்தன. ஆனால் எதிர்மின்னிகள் அடர்த்தியை அதிகரிப்பதற்கு முன்பு இருந்த அதே அளவிலான ஆற்றலுடன் தான் இருந்தன.
மேலும் ஒளிமின்விளைவை ஒளியின் அலைப்பண்பைக் கொண்டு விளக்க முற்படும்பொழுது, (அதாவது வெளிவரும் எதிர்மின்னிகளின் ஆற்றலுக்கும் ஒளியின் அதிர்வெண்ணுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனக் கொண்டால்) மஞ்சள், பச்சை என வெவ்வேறு நிறங்களைப் பயன்படுத்தும்பொழுதும் எதிர்மின்னிகளை ஆற்றலில் வேறுபாடு இருக்கக்கூடாது. ஆனால் ஒரே மாழையின் மீது அகச்சிவப்புக் கதிர்களைப்(‘Infrared rays’) பயன்படுத்தும்போதும் புற ஊதாக் கதிர்களைப் (‘Ultra Violet rays’) பயன்படுத்தும்போதும் (இரண்டும் அலைநீளத்திலும் அதிர்வெண்ணிலும் வெவ்வேறானவை.) வெளிவரும் எதிர்மின்னிகளின் ஆற்றலில் வேறுபாடு இருந்தது. இதனால் ஒளியின் அலைப்பண்பைக் கொண்டு ஒளிமின்விளைவை விளக்க முடியாமல் இருந்தது.
இதற்கு ஐன்சுடீன் ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்தார். ஒளியானது சிறு ஆற்றல் பொட்டலங்களாக பரவுகிறது. இந்த ஆற்றல் பொட்டலங்களை அவர் ஒளியன்கள் என்று அழைத்தார். |
எனவே ஒளிக்கற்றையின் அடர்த்தியை அதிகரிக்கும் பொழுது ஒளியன்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். உமிழப்படும் எதிர்மின்னிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். மேலும் ஒளியின் அதிர்வெண் அதிகமாக இருக்கும்பொழுது, ... எனும் சமன்பாட்டின் படி ஒளியன்களின் ஆற்றலும் அதிகமாக இருக்கும். எனவே உமிழப்படும் எதிர்மின்னிகளின் ஆற்றலும் அதிகமாக இருக்கும்.இவ்வாறு ஒளி மின் விளைவைக் குவாண்டம் கொள்கையைக் கொண்டு விளக்கியதற்காக ஆல்பர்ட்டு ஐன்சுடீனுக்கு 1921 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் ஐன்சுடீனின் இந்த விளக்கம் ஒளியின் இரட்டைப்பண்பை விளக்க உதவியது. அதாவது ஒளி சில நேரங்களில் அலையாகவும் சில நேரங்களில் துகள்களாகவும் பரவும். மேலும் ஐன்சுடீனின் இந்தக் கண்டுபிடிப்பு குவாண்டம் இயற்பியல் எனும் புதிய துறை தோன்ற வழிவகுத்தது.
- ஏறுநடை போடும் ஏழை நாடுகள்
- கற்றது நினைவில் நிற்க என்ன செய்யவேண்டும்?
- உடல் தூங்க உள்ளம் விழித்திருக்கிறது.
- மண்டையைப் பிளந்த பிறகும் பேசலாம்
- நினைவு வலுப்பெற மூக்கில் ஸ்ப்ரே
- உயிரி கார்பன்
- கார்பன் டை ஆக்சைடில் இருந்து எரிபொருள்
- நின்றொளிரும் விந்தை
- 2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள்
- மர எண்ணெயில் கார்கள் ஓடப் போகின்றன
- வைரஸ்களைக் கண்டறிய ஒரு கையடக்கக் கருவி
- ஆர்டரின் பேரில் உடல் உறுப்புகள்
- பளபளக்கும் நிக்கல் - டங்ஸ்டன்
- செயற்கையாக ஓர் உயிரினம்
- உலோக ரப்பர்
- கட்டுச்சோறை கெடாமல் பாதுகாக்க...
- இரைச்சலில் இருந்து பாதுகாக்கும் கருவி
- சிறிய ரோபோ... பெரிய உதவி..
- மனம் என்பது என்ன?
- பயோ-மிமடிக்ஸ் - பூக்களும் பூச்சிகளும் வழங்கும் புதிய தொழில்நுட்பங்கள்