கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
என்ன தலைப்பே புரியவில்லை! சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது என்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது; தொடர்ந்து பார்ப்போம். போக்ஸ்வாகனுக்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் இருக்கும் தொடர்பைப் பார்ப்பதற்கு முன்னர், போக்ஸ்வாகன் மோசடி என்பது என்ன என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுவோம்!
ஃபோக்ஸ்வாகன் மோசடி :
ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வாகன் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். டொயோட்டாவிற்கு அடுத்து உலகின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாகத் தொடர்ந்து பல ஆண்டுகளாக போக்ஸ்வாகன் இருந்து வருகிறது.
நிறுவனம் பெரிதாகப் பெரிதாகப் பணத்தாசை வருவதும், அந்த ஆசை பேராசையாகி நிறுவனத்தையே விழுங்குவதும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒன்றும் புதிதில்லை. இதே பணப்பேராசை தான் ஃபோக்ஸ்வாகனையும் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நம் ஊரில் இருப்பது போல ஏப்பை சாப்பையாக இல்லாமல் சுற்றுச்சூழல் விதிகள் ஓரளவு பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு காரும் இவ்வளவு புகையை வெளியிடலாம் என்றும் அதற்கு மேல் வெளியிட்டால் அந்த கார்களுக்கு அனுமதி கிடையாது என்பதும் அங்கு கடைபிடிக்கப்படும் சுற்றுச்சூழல் விதிகளாக உள்ளன.
பேராசை என்னும் பேய் இந்த விதிகளை எல்லாம் ஒழுங்காகக் கடைபிடிக்க விடுமா? அந்தப் பேய் ஃபோக்ஸ்வாகனைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டிவிட்டது அவ்வளவு தான்! ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் செய்த தவறு ஒன்றே ஒன்று தான் - இந்தப் புகை அளவைக் குறைத்துக் காட்டும் சிறிய மென்பொருளைத் தன்னுடைய கார்களில் நிறுவி அமெரிக்க அரசை நன்றாக ஏமாற்றி விட்டது. அதுவும் ஆண்டுக்கணக்கில்! சும்மா விடுவார்களா? விளைவு - ஏறத்தாழ 80 ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த ஃபோக்ஸ்வாகன் இன்று கோடிக்கணக்கான தன்னுடைய கார்களைத் திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறது. இந்தத் தவற்றால் ஃபோக்ஸ்வாகனுக்கு 6600 கோடி டாலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு 1800 கோடி டாலர் வரை அமெரிக்க அரசுக்குத் தண்டம் வேறு கட்ட வேண்டும்.
புகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் எப்படித் தப்பியது ?
புகை அளவுச் சோதனையை அரசாங்கத்திடம் நடத்தி ஒப்புதல் வாங்கித் தானே ஃபோக்ஸ்வாகன் தன்னுடைய கார்களைச் சந்தைக்குக் கொண்டு வந்திருக்கும்? அப்படியிருக்க ஃபோக்ஸ்வாகன் மீது என்ன தவறு இருக்க முடியும் என்கிறீர்களா? உங்கள் கேள்வி நியாயமானது தான்! இங்குத் தான் தன்னுடைய மென்பொறியாளர்களைப் பயன்படுத்தியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். அவர்கள் உருவாக்கிய ஒரு மென்பொருள் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து ஃபோக்ஸ்வாகன் கார்கள் தப்பியிருக்கின்றன.
என்ன தான் செய்தது அந்த மென்பொருள் ?
புகை அளவுச் சோதனையின் போது காரின் வட்டு(ஸ்டீரிங்) எப்படி இயங்கும், காரின் வேகம் எப்படி இருக்கும், இஞ்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பன போன்ற பல விவரங்களை உள்ளிட்டு ஒரு மென்பொருளை(சாப்ட்வேரை) உருவாக்கியிருக்கிறார்கள். இந்த மென்பொருளானது, மேல் சொன்ன விவரங்களைக் கொண்டு வண்டி புகை அளவுச் சோதனையில் இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடும். அப்படிக் கண்டுபிடித்து, புகை அளவுச் சோதனை என்றால், குறைவான அளவு கரியை வெளிவிடும். சாதாரணமாக, பிற நேரங்களில் சாலையில் செல்லும் போது புகை அளவுச் சோதனையைப் போல, 15 – 40 மடங்கு அதிகக் கரியை வெளிவிடும். இப்படிச் செய்வதன் மூலம் புகை அளவுச் சோதனையில் இருந்து எளிதில் தப்பி விடலாம் இல்லையா? இப்படித் தான் ஃபோக்ஸ்வாகன் கார்கள் அனைத்தும் புகை அளவுச் சோதனையில் இருந்து தப்பியிருக்கின்றன. இதைப் பார்த்துத் தான், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இது திட்டம் போட்டுச் செய்த திருட்டுத்தனம் என்று கொதித்து எழுந்து விட்டார்கள். பின்னே, அவர்கள் கொதிப்பிலும் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?
சரி, இதெல்லாம் புரிகிறது - இதற்கும் ஓபன் சோர்ஸ் மென்பொருளுக்கும் என்ன சம்பந்தம்? பார்த்து விடுவோம்.
ஓபன் சோர்ஸ் மென்பொருள் :
ஓபன் சோர்ஸ் மென்பொருள் என்பதைத் தமிழில் திறந்த மூல மென்பொருள் என்கிறார்கள். அதாவது, ஒரு மென்பொருளை உருவாக்கிய பிறகு, அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறது என்பதை எல்லோர் பார்வைக்கும் படும்படி கொடுத்து விடுவது! கிட்டத்தட்ட, சாப்பிடுவதற்கு இட்லியோ தோசையோ வாங்குகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த இட்லியிலும் தோசையிலும் என்னென்ன கலந்திருக்கிறது என்று கேட்டால் கடைக்காரர் சொல்ல வேண்டும் அல்லவா? இதே கதை தான்! ஒரு மென்பொருளை நாம் பயன்படுத்துகிறோம் என்றால், (அதுவும், இரகசிய ஒற்றர்களாகப் பல மென்பொருட்கள் உலாவி வரும் இன்றைய காலக்கட்டத்தில்) அந்த மென்பொருளில் என்னென்ன எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நம்முடைய உரிமை அல்லவா? இதைத் தான் திறந்த மூல (ஓபன் சோர்ஸ்) மென்பொருள் என்கிறார்கள்.
ஃபோக்ஸ்வாகன் மோசடியை ஓபன் சோர்ஸ் தடுத்திருக்குமா ?
ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் தன்னுடைய மிகப்பெரிய மோசடியை மிக எளிதாக ஒரு சிறிய மென்பொருளை எல்லா கார்களிலும் நிறுவிச் செய்து காட்டியிருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறிய மென்பொருள் மட்டும் ஓபன் சோர்ஸ் மென்பொருளாக இருந்திருந்தால்? இந்த மென்பொருள் எப்படி இயங்கும் என்பதையும் அதற்குரிய புரோகிராம்களை எப்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதையும் மென்பொறியாளர்கள் முன்னரே எளிதாகக் கண்டுபிடித்திருப்பார்கள்.
ஃபோக்ஸ்வாகன் கார்களில் இப்படிப்பட்ட தவறான காரணத்துக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் இருக்கிறது என்பது தொடக்கத்திலேயே தெரிந்திருக்கும். அதன் மூலம் அந்நிறுவனத்திற்குப் பல கோடிக் கணக்கில் தண்டமும் நட்டமும் கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது. இவை எல்லாவற்றையும் தாண்டி அந்த கார்களில் இருந்து அளவுக்கதிகமான கரி வெளிவந்து பூமி மாசு பட்டிருக்காது.
சரி தானே நான் சொல்வது? இது போன்ற தவறுகளையும் மோசடிகளையும் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் தான் திறந்த மூல மென்பொருளுக்காகப் (இதன் மற்றொரு பெயர் - கட்டற்ற மென்பொருள்) நல்ல பல மென்பொறியாளர்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்களால் முடிந்த அளவு அவர்களுள் ஒருவராகவோ அவர்களுக்கு உதவுபவராகவோ இருக்க முயலுங்களேன். (எனக்குத் தெரிந்தவரை, தமிழ்நாட்டில் கட்டற்ற மென்பொருளுக்காக உழைப்பவர்களைத் தொடர்பு கொள்ள http://fsftn.org/ தளத்தையோ http://www.kaniyam.com/ தளத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்.)
- முத்துக்குட்டி
(கட்டுரை – அக்டோபர் 16-31, 2015 ‘தமிழ் கம்ப்யூட்டர்’ இதழில் வெளிவந்தது)
- விவரங்கள்
- நீச்சல்காரன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இன்று தொலைத்தொடர்புத் துறையில் அதிகம் விவாதிக்கப்பட்டு, சர்ச்சையான ஒரு விசயம் இலவச இனையத்தளத் திட்டங்கள். அண்மையில் பிரி பேசிக்ஸ் என்ற பெயரில் பேஸ்புக் நிறுவனம் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அது இதற்குமுன் அறிமுகப்படுத்திய இண்டர்நெட் ஆர்க் போன்ற அம்சத்தையுடையது, அதாவது சில அடிப்படையான இணையத் தளங்கள் மட்டும் இலவசமாக (அதாவது டேட்டா கட்டணமின்றி) அணுகக்கூடியவகையில் மக்களுக்கு வழங்குவதாகும். பலர் விரும்பினர், பலர் விரும்பவில்லை. இதற்கிடையில் இது இணையச் சமநிலைக்கு எதிரானது அதாவது இத்திட்டம் இணையச் சமநிலையைப்(net neutrality) பாதிக்கும் என்று ஒரு பிரிவினர் எதிர்க்கத் தொடங்கியுள்ளனர். இது ஒருவகையில் தொழிற்நுட்பம் சார்ந்துள்ளதால் தொழிற்நுட்ப வல்லூனர்கள் எதைச் சொன்னாலும் ஏற்கும் போக்குவுள்ளது. கம்பசூத்திரமாக இருப்பதால் சாதாரண மக்களும் இவர்கள் சொல்வதைக் கேட்டு நம்பவேண்டிய நிலையில் உள்ளனர். உண்மையில் இது தொழிற்நுட்ப பின்புலம் என்றாலும் இது சமூகப் பொருளாதாரக் கொள்கை சார்ந்தது. ஒவ்வொருவரும் யோசித்து சரியான முடிவை எடுக்கவேண்டும்.
பேஸ்புக் மீதுள்ள ஆதரவு எதிர்ப்பு நிலையைத் தாண்டி அடிப்படையான விசயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இலவசத் தளச் சேவையை அனுமதிக்கும். அதைக் கொண்டு பல நிறுவனங்கள் சேவை அளிக்க முன்வரலாம். குறுகிய தளங்கள் மட்டும் தருவதால் புதியவர்களுக்கு வெளி இணைய உலகம் தெரியாது என்பதை ஏற்கமுடியாது. நியாயவிலை கடையில் அத்தியாவசிய அரிசியும் கோதுமையும் மட்டும் போடுவதால் முந்திரியும் பிஸ்தாவும் அறியமாட்டார்கள் என்பது போல உள்ளது. முதலில் இணையத்திற்கே வர செலவு செய்ய இயலாதவர்கள் குறைந்தபட்சம் பேஸ்புக் போன்ற சமூகத் தளத்திற்கு வந்தால்தானே சமூக மாற்றத்தைக் கற்றுக் கொடுக்க முடியும். பிற நாடுகளைவிட குறிப்பாகத் தமிழகத்தில் சமூகத் தளத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறோம். அரசியல் மாற்றங்கள் இங்கிருந்து உதயமாகிறது. இதையெல்லாம் யோசிக்காமல் இலவசங்களைத் தடுப்பதால் மேல்தட்டு மற்றும் இடைத்தட்டு மக்கள் பாதிக்கப்படுவதில்லை. கீழ்த்தட்டு மக்களுக்குக் கிடைக்கவிருக்கும் ஒரு வாய்ப்பை வறட்டு சமநிலை பேசி கெடுக்கிறோம்.
இணையச் சமநிலை என்பது எதிர்ப்போரைப் பொறுத்த மட்டில் என்னவென்றால் அனைத்து இணையத்தளங்களும் சமமான வேகத்திலும், சமமான கட்டணத்திலும் கிடைக்கவேண்டும் என்பதாகும். இணையத்தில் இடவொதிக்கீடு வேண்டாம் என்ற ஒற்றைவரி புரிதலாகவும் கொள்ளலாம். ஆனால் ஆழமாகவும் பார்க்கவேண்டும். ஒரு வணிக நிறுவனம் இலவசமாகச் சில தளங்களைத் தருகிறார்கள் என்றால் அதன் பின்னணியில் சூழ்ச்சி இருக்குமானால் அதை எதிர்க்கலாம் ஆனால் அத்திட்டமே சமநிலை பறிப்பு என்பது எப்படிச் சரியாகும்? நாட்டில் எத்தனையோ மக்கள் அடிப்படை இணைய வசதியின்றி இருப்பது கணினிக்கு முன் அமர்ந்து கருத்துச் சொல்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றுமே இல்லாமல் இருப்பதற்கு மாறாக ஒருசில தளங்கள் வழியாக இணையத்தை அனுபவிக்க முடியும். சில தளங்களை மட்டும் இலவசமாகத் தருவதால் மற்ற தளங்கள் பாதிக்கப்படும் என்பதால் எதிர்க்கிறோம் என்ற வாதமுண்டு. இலவசமாகக் கொடுத்தால் அனைத்துத் தளங்களையும் கொடு இல்லாவிட்டால் கொடுக்காதே என்பதாகும். இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணம், இலவச நூலகமே இல்லாத ஓர் ஊரில் நீங்கள் மக்கள் கல்வி/விழிப்புணர்வு அடைய நூலகம் ஒன்றைக் கட்டி இலவசமாக மக்களுக்குத் திறந்துவிடுகிறீர்கள். அங்கே உங்கள் பார்வையில் சிறப்பான நாளிதழ்களையும், வார இதழ்களையும் வாங்கிப் போடுகிறீர்கள். அப்போது ஒரு குழு எல்லா இதழ்களையும் சமமாக வாங்கிப் போடாவிட்டதால் அது பத்திரிக்கை சமநிலை பறிப்பு அதை எதிர்ப்போம் என்று கிளம்பினால் என்ன செய்வீர்களோ அதுதான் இன்றைய நிலை.
பிரிபேசிக்ஸ் திட்டமாகட்டும், ஏர்டெல் ஜீரோ திட்டமாகட்டும் அதில் திரைமறைவு தனிக்கையோ, கட்டுப்பாடோ இருந்தால் அந்நிறுவனத்தை எதிர்க்கலாம். அனைத்துத் தளங்களும் இலவசமாக வேண்டுமென்று அரசைக் கேட்கலாம். அதற்குமாறாக ஒரு சாதாரணப் பயனர் பலனைடையும் வகையில் வழங்கப்படும் இலவசத்தை எதிர்ப்பது ஆரோக்கியாமா என யோசிக்கவேண்டும். இலவசமாகக் கிடைக்கும் தளங்களை மக்கள் பயன்படுத்தத் தொடங்கினால் பிற நிறுவனத் தளங்களுக்குக் கட்டணம் கட்டி பயன்படுத்தமாட்டார்கள். இதனால் சிறு தளங்கள் பாதிக்கும் என்ற வாதமுண்டு. இது எப்படியுள்ளதெனில் கடலூர் வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற தன்னார்வலர்களைக் கொடுக்கவிடாமல் தடுத்து, "நீங்கள் கொடுத்தால் அரசியல்வாதியான எங்களை மக்கள் மதிக்கமாட்டார்கள்" என்றார்களாம் அதுபோலுள்ளது. பிரச்சனைகளைச் சீர்செய்ய வேண்டுமே தவிர காரணமானவர்களை விரட்டக் கூடாது.
இலவசத் தளங்களை எதிர்ப்பதை விட்டுவிட்டு வெளிப்படையான நிர்வாகத்திற்குக் குரல் கொடுப்பதே இணையச் சமநிலையாகும். காரணம் அதிகம் பொருளீட்டும் நிறுவனம் தங்களைத் தளத்தை விலையில்லாமல் அதாவது பயனரின் டேட்டா செலவைத் தாங்களே ஏற்றுக் கொண்டு இலவசமாகக் கொடுப்பது அவர்களின் விருப்பம். அதைப் பயன்படுத்துவதோ, தவிர்ப்பதோ மக்களின் உரிமை, இதற்கிடையில் இது இணையச் சமநிலை இல்லை என்று கொந்தளிப்பது தேவையற்றது. அனைவருக்கும் சம அளவிலா வருமானவரி கோரப்படுகிறது? அனைத்து உணவகங்களும் சமமான தரத்திலா உணவை வழங்குகின்றன? அனைத்து ஊர்களிலும் சமமான அளவிலா ரியல் எஸ்டேட் மதிப்புள்ளது? வெள்ள நிவாரணமாக அனைவருக்குமா வீடு கட்டிக் கொடுக்கிறோம்? வசதிக்கு ஏற்பவும், ஏழ்மைக்கு உதவவும், விருப்பத்திற்கு இணங்கவும், தேவைக்கு வழங்கவும் செய்யப்படுகின்றன. அதுதான் ஒரு சமூகத்திற்கு வளர்ச்ச்சியை அளிக்கும். லட்சம் சம்பாரிப்பவருகும், ஆயிரம் சம்பாரிப்பவருக்கும் சமமாக வரிவிதிக்கலாமா? எனவே பல்வேறு பொருளாதாரக் காரணங்களையும், சமூகக் காரணங்களையும் கணக்கில் கொண்டே சமநிலை தீர்மானிக்கப்படும் அதுபோல இணையச் சமநிலையும் அவ்வாறே இருக்கவேண்டும். அரசு தொலைக்காட்சி எப்படி கட்டணமின்றி செயல்படுகிறதோ அதுபோல அரசின் இணையத்தளங்கள் எல்லாம் இலவசமாக அரசே வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்படும் போது இந்த இணையச் சமநிலை என்ற வாதம் வலுயிழக்க நேரும். வெளிப்படையான நிர்வாகத்திற்கு இணையச் சமநிலை பயன்படவேண்டுமே தவிர இலவசங்களைத் தடுப்பதற்கல்ல என்பதைப் புரிந்து கொள்வோம்.
- நீச்சல்காரன்
- விவரங்கள்
- நந்தகுமார்
- பிரிவு: தொழில்நுட்பம்
சில மாதங்களுக்கு முன் சமூக வலைதளங்களிலும், இணைய பயன்பாட்டினர்களிடையேயும் “Net Neutrality”(இணைய சமத்துவம்) எனும் ஒரு புதிய சொல் புழங்கிக் கொண்டு இருந்தது. அப்பொழுது தான் இந்தியத் தொலை தொடர்பு ஒழுங்கு அமைப்பு வாரியம் (TRAI) Regulatory Framework for Over-the-top (OTT) services என்னும் புதிய ஆலோசனை அறிக்கையை வெளியிட்டது. அதில் நமக்கு இணைய சேவையை வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொரு வலைதளங்களும் தனித்தனியே விலையை நிர்ணயத்து வசூலிக்கலாம் என்று ஒரு கார்ப்பரேட் நல யோசனையை முன்வைக்க, மக்கள் தங்கள் எதிர்ப்பை முழுவேகத்தில் பதிவு செய்தார்கள்.
இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத இந்த அதிகார வர்க்கம் அடுத்து களத்தில் இறக்கிய சூப்பர் ஹீரோ(super hero) தான் facebook நிறுவனத்தின் நிறுவனரான Mark Zuckerberk. எப்படி இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அங்கு மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று சொல்ல சல்மான் கான், அசின், கமல்ஹாசன் போன்றோர்கள் களம் இறக்கப்பட்டார்களோ, கூடங்குளம் பாதுகாப்பானது, இந்த அரசாங்கம் பேரிடரை சமாளிக்கும் வல்லமை பெற்றது என்று கூற அப்துல்காலம் போன்றோர் களம் இறக்கப்பட்டார்களோ, அது போலத்தான் Mark Zuckerberk களம் இறக்கப்பட்டிருக்கிறார்.
ஏப்ரல் மாத இறுதியில் TRAI’இன் புதிய ஆலோசனையை மக்கள் காறித் துப்ப, அப்பொழுது களத்தில் இறக்கப்பட்ட Mark Zuckerberk பயன்படுத்திய ஆயுதம் தான் interner.org. “இந்த உலகம் முழுவதும் நான் இலவச இணையதள வசதியைத் தரப் போகிறேன், இந்த உலக முழுவதையும் நான் இணையத்தால் இணைக்கப் போகின்றேன்” என்று கொக்கரித்தார் Mark Zuckerberk. இலவச இணைய வசதி நல்லது தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஏன் அதை எதிர்க்க வேண்டும் என்றும் கேக்கலாம். இங்குதான் Mark Zuckerberk வைக்கிறார் ஒரு twist. அதாவது உலகம் முழுவதும் இணையம் இலவசம், ஆனால் Mark Zuckerberk சொல்லும் இணையதளங்களை மட்டும் தான் நீங்கள் பயன்படுத்த முடியும். மற்றவை internet.org முலம் பயன்படுத்த முடியாது. இதுதான் internet.org’இன் சுருக்கம்.
TRAI சொல்லும் ஒவ்வொரு வலை தளங்களுக்கும் தனித் தனி விலை என்பதற்கும், internet.org சொல்லும் சில வலைத் தளங்கள் இலவசம்; மற்ற வலைத்தளங்கள் விலை என்பதற்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை. “பூ” வை “பூ” வென்றும் சொல்லலாம், “புஷ்பம்” என்றும் சொல்லலாம் என்ற கதை தான். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் TRAI சொன்ன போது அதை எதிர்த்த சிலர் internet.org என்று சொன்னவுடன் அதை ஆதரிக்க ஆரம்பித்தனர். “இலவசம்” என்ற சொல் யாரைத்தான் விட்டுவைத்தது?
இந்த internet.org பிரச்சாரத்தின் அடுத்த கட்டம் தான், இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் மோடி Facebook அலுவலகம் சென்றதும், மூவர்ணக் கொடி Profile Picture’யும். internet.org இணைய சமத்துவத்துக்கு எதிரானது என்ற கருத்தை, மக்களிடத்தில் பலபேர் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவாக சில மக்களும் அதைத் எதிர்க்க தொடங்கினர். அதன் பிறகு internet.org வேறு ஒரு முகமூடியை அணிந்து மக்களிடத்தில் வந்தது. அந்த முகமூடி தான் “Digital India”. Facebook சமூக வலைத் தளங்களில் இயங்கிய பலர் தங்கள் முகப்பு படங்களை(Profile Picture) மூவர்ண சாயம் அடித்தது அப்பொழுதுதான். நமது நண்பர்கள் தங்கள் முகப்பு படங்களுக்கு சாயம் அடித்தவுடன் நாமும் அதை பின்பற்றத் தொடங்கினோம். அப்படி அடிக்கும் பொழுது அவர்கள் internet.org எனும் சேவையை ஏற்பதாக ஒத்துக் கொள்கின்றனர் என்று facebook தனது Source Code’இல் எழுதி இருந்தனர். இதை சிலர் கண்டு பிடித்துக் கேட்டதற்கு எழுத்துப் பிழை செய்து விட்டோம் என்று கூறியது facebook நிறுவனம். எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நாம் மந்தை போல் செயல் பட்டதைக் கொண்டு அதிகார வர்க்கம் நம் கையை வைத்து நம் கண்ணைக் குத்தியது.
இந்த internet.org மற்றும் Digital India நாடகங்களின் பொழுதுதான் TRAI இரண்டாம் கட்ட கருத்துக் கேட்டலை mygov.in எனும் வலை தளத்தில் நடத்தியது. இப்பொழுது TRAI மூன்றாம் முறையாக மக்களிடத்தில் இணையத்தின் வாயிலாக கேட்டலை நடத்திக் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் தான் உலக நாயகன் Mark Zuckerberg, “Act now to save Free Basics in India” என்று அடுத்த பெயரை இட்டு அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் . இதற்கு நம் இணைய சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் காக்கும் பொருட்டு நம் எதிர்ப்பினை பதிவு செய்தாக வேண்டும். மறுபடியும் “Free”, “இலவசம்” என்ற சொற்களுக்கு நாம் ஏமாறாமல் இருப்போம். அப்புறம் ஒன்றை நீங்கள் மறந்து விட வேண்டாம். இந்த Facebook தான் உங்களைப் பற்றிய தகவல்களை அமெரிக்காவின் NSA’வுக்கு உங்கள் அனுமதி இல்லாமல் கொடுத்த நல்லவர்கள்.
- நந்தகுமார், பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்
- விவரங்கள்
- மு.நாகேந்திர பிரபு
- பிரிவு: தொழில்நுட்பம்
எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியியல் முறையினால் மேலும் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும். இதுவரை 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுள் 92 தனிமங்கள் இயற்கையான வகையிலும் (உலோகங்கள் - 72, அலோகங்கள் - 16, உலோகப் போலிகள் - 4), 26 தனிமங்கள் செயற்கை முறையிலும் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் 112 தனிமங்களுக்கு மட்டுமே International Union of Pure and Applied Chemistry (IUPAC) அதிகார பூர்வமாகக் குறியீடு வெளியிட்டுள்ளது. மேற்சொன்னவைகளைத் தாண்டி பிரபஞ்ச பொருள் அத்தனையும் சேர்மங்களாலே ஆனது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் வேதியியல் முறையில் இணைந்து சேர்மத்தை உருவாக்குகிறது.
சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் மற்றும் கரிமச் சேர்மங்கள் என இருவகைப்படும். பாறை, தாதுக்கள் போன்ற உயிரற்ற மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கனிமச் சேர்மங்கள் ஆகும். தாவரங்கள், விலங்குகள் போன்ற உயிருள்ள மூலங்களிலிருந்து பெறப்படும் சேர்மங்கள் கரிமச் சேர்மங்கள் ஆகும். ஒரு சேர்மம் உருவாகும்போது வெப்பத்தை வெளியிடுதலோ, உறிஞ்சுதலோ நிகழ்கின்றது. ஒரு சேர்மம் அதற்கென்று தனியாக ஒரு குறிப்பிட்ட உருகுநிலை மற்றும் கொதிநிலையைப் பெற்றிருக்கிறது. சேர்மத்தின் பண்புகள் அதன் பகுதிப் பொருள்களின் பண்புகளிலிருந்து மாறுபடுகின்றது. ஒரு சேர்மத்தில் உள்ள பகுதிப்பொருள்களை இயற்பியல் முறைப்படி பிரிக்க இயலாது. சேர்மம் ஒரு படித்தானது. பிரித்து பார்க்க இயலாதது.
ஒரு மூலக்கூறு மற்றொரு மூலக்கூறை அது தன் கவர்ச்சிப் புலனுக்குள் இருந்தால் மட்டுமே கவர்ந்திழுக்கும். ஒரு மூலக்கூறினை நடுவாகவும், மூலக்கூறு கவர்ச்சி எல்லையை ஆரமாகவும் கொண்டு ஒரு கோளம் வரையப்படுமானால் அது அந்த மூலக்கூறின் கவர்ச்சிப் புலம் எனப்படும். ஒரு குவளை நீரில் கலக்கப்பட்ட நிற மையானது கலன் முழுவதுமாக பரவுகிறது என்பதன் மூலம் மூலக்கூறுகள் தொடர்ந்து நகர்ந்து ஒன்றோடொன்று கலக்கிறது என அறியலாம். எல்லா சேர்மங்களும் மூலக்கூறுகளுக்கிடையே இடைவெளியைக் கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளிகளை மட்டும் நிரம்பிவிடக்கூடியதாக ஒரு தனிமமோ அல்லது சேர்மமோ இருந்து சேர்ந்தால் அளவில் மாற்றம் அடைவது கிடையாது.
சோதனைக் குழாயில் இடப்பட்ட சர்க்கரையானது வெப்பப்படுத்தப்படும்போது உருகிப் பழுப்பு நிறமாக மாறும். மேலும் வெப்பப்படுத்தப்படும்போது கருகி கருப்பாக மாறுவதுடன் சோதனைக் குழாயின் விளிம்பில் நீர்த்துளிகள் தெரிவதைப் பார்க்கலாம். நீர்த்துளிகள் உருவான விதம் வெப்பப்படுத்துவதால் ஏற்பட்டனவே தவிர காற்று குளிர்வடைவதால் அன்று. எனவே, சர்க்கரை சிதைவுற்றே நீர் உருவாகியுள்ளது என்பது தெரிகிறது. எஞ்சியுள்ள கருமை நிறப்பொருள் கார்பனே. எனவே சர்க்கரை என்பது கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இணைந்து உருவாவது என்று அறியலாம். இவ்வாறே சேர்மங்களில் சிலவாக அம்மோனியா = நைட்ரஜன் + ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு = கார்பன் + ஆக்ஸிஜன், சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) = சோடியம் + குளோரின் என்பனவற்றின் கூட்டு விதியால் உருவானவையே.
நீர் ஓரு சேர்மம். ஹைட்ரஜன் (மூலக்கூறு எடை 1) மற்றும் ஆக்சிஜன் (மூலக்கூறு எடை 16) என்ற இரண்டு தனிமங்களின் விகித கூட்டு. நீரை உலகத்தின் எந்த மூலையிலிருந்து, சூழலிலிருந்து எடுத்தாலும் அது தன் சேர்ம விதியின்படி தான் இருக்கும். மழை காலங்களில் வாகனங்களின் உட்புற கண்ணாடியில் படியும் நீர்த்திவலை, குளிர்ந்த பொருள் வைக்கப்பட்ட கலனைச் சுற்றி சேரும் நீர்த்திவலை, இரவில் பொழியும் பணித்துளி என இவையாவும் காற்றில் உள்ள ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் வெப்பத் தன்மையை இழக்கும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து நீராக மாறுவதையும், வெப்பத்தை ஏற்கும் போது வாயு நிலைக்குச் சென்று விடுவதையும் உணர்த்துகிறது.
வெப்ப நிலை உயரும் போது மூலக்கூறுகளின் இயக்க ஆற்றல் அதிகரிக்கிறது. இயக்க ஆற்றல் அதிகரிப்பதால் துகள்கள் வேகமாக அதிர்வடைந்து மூலக்கூறுகளுக்கிடையே உள்ள இடைவெளி அதிகரிக்கிறது. இதன் மூலம் துகள்கள் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. பொருட்கள் ஒளியைப் பிரதிபலிக்கும் என்பதன் படி, பூமியின் மேற்பரப்பில் இருக்கும் வெப்ப அளவை விட சூரியனுக்கும் பூமிக்குமான இடைவெளி பகுதி குறைந்த அளவு வெப்பத்தையே கொண்டு இருக்கும்.
- மு.நாகேந்திர பிரபு (
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே
- இந்திய அணுசக்தி துறையின் திட்டமும் திண்டாட்டமும்
- இந்தியாவில் அணுசக்தி திட்டங்கள்
- அணு உலை எதிர்ப்பும் உலக நாடுகளும்
- செர்னோபில் அணு உலை விபத்து
- அமெரிக்காவும் அணுசக்தித் திட்டங்களும்
- அணுசக்தி - பொதுவான வாதங்கள்
- அணுசக்தி தூய்மையானதா? நம்பகமானதா?
- அணுசக்தி சாதகமும் - பாதகமும்
- கதிரியக்கத்தின் உயிரியல் விளைவுகள்
- அணுசக்தித் தொழில் நுட்பம்
- அணுகுண்டும் அணு உலையும்
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்