அதிகாரமற்ற ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள். கடலும் மலைகளும் வனமும் சூழ்ந்து, கோடி கோடி மனிதர்கள் வாழும் இவ்வுலகில் அதிகாரம் எனும் வேட்டை நடைபெறாத இடம் எதுவெனத் தேடுங்கள்! அதிகாரமற்ற உலகு எப்படிப்பட்டதாக இருக்குமென நினைத்துப் பார்ப்பது, நமக்கு முடியாத செயலாகப் போகலாம். காரணம், அப்படிப்பட்டதொரு வாழ்சூழலுக்குப் பழக்கமற்றவர்கள் நாம். நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்டவராகவோ, பெண்ணாகவோ இருப்பீர்களானால், இந்தக் கருத்தின் வலிமை புரியக் கூடும்.

உயர எழும்பி நின்று கையில் கோலை ஏந்தி, ‘நானே வலியவன்; சகல அதிகாரமும் படைத்தவன்' என முதலில் கூவிய ஆணின் அதிகாரக் குரல், இவ்வுலகம் முழுவதும் எதிரொலியாக எந்நேரமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கூடவே அடக்கப்பட்டவர்களின் ஓலமும் குரல்வளை நசுக்கப்பட்ட நிலையிலும் விடாது கேட்கிறது.

இதுவொரு போர். அதிகாரத்திற்கும் விடுதலைக்குமான ஓயாத போர். அதிகாரத்தின் குரல் தடித்ததாகவும் ஒற்றைத் தன்மையுடையதாகவும் இருக்கிறது. அதற்கு மாறாக, விடுதலையின் ஓலம் கூரியதாகவும் பன்மைத்தன்மை கொண்டதாகவும் கிளர்ந்தெழுகிறது.

அதிகாரம் என்பது அதிக சுவையுடையதாக இருப்பதால், ஆண்கள் அதை எப்போதுமே களிப்புற மேய்ந்து கொண்டேயிருக்கிறார்கள். இந்த மேய்ச்சல் அவர்களுக்கு அலுப்பூட்டாத விளையாட்டு. உலகில் யார் எந்த மூலையில் இந்த விளையாட்டைத் தொடங்கினாலும் நடத்தினாலும் எட்டுத் திக்கிலிருந்தும் பாய்ந்து பெருக்கெடுத்து வரும் அதிகார ஆதரவு, விளையாட்டின் வீரியத்தைப் பன்மடங்கு பெருக்குகிறது. ஆக, ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இது விடுதலையை இலக்காகக் கொண்ட போர். போரை விளையாட்டாகப் பார்க்கிறவர்களுக்கு வெற்றியே குறி. வெற்றிக்கும் விடுதலைக்குமான வேறுபாடு புரியாதவர்கள் இடையில் நின்று கைதட்டுகிறார்கள் – தலையில் விழும் பிணங்களைப் பொருட்படுத்தாமல்...

உகாண்டாவில் பிறந்து இன்றைய தேதியில் டென்மார்க்கில் அகதியாக வாழும் சைனா கெய்ரெற்சி, வலி மிகுதியோடு நினைவடுக்குகளைக் கிளறி – ஞாபகத்திலிருக்கும் முதல் நிகழ்விலிருந்து தன் வாழ்வை மிக உக்கிரமாகப் பதிவு செய்திருக்கிறார், "குழந்தைப் போராளி' என்ற வாழ்க்கை வரலாற்று நூலில். சில கணங்கள் மறக்கக் கூடாததாக நம்மில் தேங்கிவிடும் இல்லையா? சில நிகழ்வுகள் கடக்க முடியாததாக நம்மைத் தேக்கிவிடும் அல்லவா!

முன்னூறு பக்கங்களில் அடங்கிய சைனா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கை, அப்படியொரு நிகழ்வாகவும் கணமாகவும் வாசிக்கிற யார் மனதிலும் காலத்திற்கும் அழியாமல் தேங்கிப் போகும். இனி, கொடுமையான பொழுதுகளை, துன்பியல் அனுபவங்களை, சகிக்க முடியாத அநீதிகளை சந்திக்க நேரும் போதெல்லாம் சைனாவின் வாழ்வு நினைவில் பாய்ந்து வலிமையோடு எதையாவது உணர்த்தும் என்பது உறுதி.

நல்ல உடல் வலிமையும் ஆரோக்கியமும் கொண்ட கறுப்பினத்தவர்கள் சராசரியாக நூறு வயது வரை வாழ்வார்கள் என்று வைத்துக் கொண்டாலும், தன் ஆயுட்காலத்தின் கால் பகுதி வாழ்வை சைனா கடந்திருக்கும் விதத்தை மனித நேயம் கொண்ட எவரும் வெறுத்தே தீர வேண்டும். மனிதருக்கு வாழ்நாளில் மிக எளிதான ஒன்றாக இருப்பது குழந்தைப் பருவமே! ஆனால் பெருகும் சமூக அநீதிகள், குழந்தைகளிடமிருந்து குழந்தைமையையும் இனிமைகளையும் பறித்து வீசி எறிகின்றன. குடும்ப வன்முறைகளும், சமூக வன்மங்களும் பேரலையைப் போல மூர்க்கமாகத் தாக்குவதால் அடைக்கலங்களைத் தொலைத்து, சிதையும் குழந்தை மனம் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்திற்காக எந்த எல்லை வரை சென்று, எத்தகைய கொடுமைகளையெல்லாம் சகித்துக் கொள்கிறது என்பதை சைனா தன் வீரியமிக்க வார்த்தைகளால் எடுத்துரைக்கிறார்.

பெண் குழந்தைகளை பெற்றுப் போடுவதை குற்றமாகக் கருதும் தந்தைக்குப் பிறந்தது, சைனாவின் முதல் துயரம். பெண்ணைப் பெற்றதற்காக வீட்டிலிருந்து விரட்டப்படும் சைனாவின் தாய், அதிகாரமும் ஆணவமும் நிறைந்த கணவனிடம் மகளை விடுவதன் மூலம், அந்த சிறுமிக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளையும் அமைதியான நல்வாழ்வையும் புதைத்துவிட்டுச் செல்கிறார்.

முதலில் பாட்டியிடமும் அடுத்தடுத்த மாற்றாந்தாய்களிடமும் வளரும் சைனா தான் யார் என்பதுவும், தன் வயது, பாலினம் பற்றி எந்தப் புரிதலும் இல்லாமலே வளர்கிறார். அவருடைய கேள்விகளுக்கு பதில் தரவோ, அய்யங்களைத் தீர்க்கவோ, அன்பு செலுத்தவோ வாழ்வின் வழியில் யாருமே வரவில்லை. பண்ணை வீட்டில் ஒரு நாய்க்குட்டியைப் போன்றோ, பூனையைப் போலவோ அச்சிறுமி திரிந்து கொண்டிருக்கிறாள். தெரிந்தோ தெரியாமலோ இழைத்துவிடும் சிறுசிறு தவறுகளுக்காக மூர்க்கமாகத் தாக்கப்படும் கொடூரத்தை சைனா ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவிக்கிறார்.

சைனாவிடம் மட்டுமின்றி தன் பிற பெண் குழந்தைகளிடமும், மனைவிகளிடமும், தன் வேலையாட்களிடமும் சைனாவின் தந்தை – அதிகாரத்தோடும் எதிரியைப் போலவும் நடந்து கொள்கிறார். "ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவில், பலம் பொருந்தியவர்களின் சட்டங்களே செல்லுபடியாகும்' என்று சைனாவே குறிப்பிடுவது போல ஆண் தன்னைச் சார்ந்த பெண்ணையும், பெண் தன்னைச் சார்ந்த ஆணையும் எப்போதும் வன்மம் தீர்த்துக் கொள்வதும்; ஆணும் பெண்ணும் சேர்ந்து பலவீனமானவர்களாக தங்களை அண்டியிருக்கும் குழந்தைகளிடம் வெறுப்பையும் கோபத்தையும் விதைக்கின்றவர்களாகவுமே இருக்கிறார்கள்.

இப்படியொரு சகிக்க முடியாத அடிமைச் சூழலில் வளரும் குழந்தைகள், குறிப்பாக பெண்கள் ஒவ்வொருவராக வீட்டை விட்டு ஓடுகிறார்கள். சிலர் திரும்பி வருவதும் திருப்பி ஓடுவதுமாக இருக்கிறார்கள். காதலனோடு சென்று திரும்பி வரும் சகோதரி ஒருவரை தந்தை அடித்து நொறுக்கும் கொடுமையைத் தாங்க முடியாமல், "இனி இங்கு வராதே' என்று சைனா கூறுவதும், "அது முடியாது; பெண்களுக்கு செல்வதற்கு இடமில்லை என்று தெரிந்தால், ஆண்களுக்கு அதுவே பலம்' என அவருடைய சகோதரி குறிப்பிடுவதும் – இப்படி நூல் முழுவதும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான சமூக உண்மைகளை உரக்க உரைக்கிறார் சைனா.

ஒரு நாள் சைனாவும் தன் வீட்டை விட்டு வெளியேறும் சூழல் உருவாகிறது. தந்தையின் அடி உதைக்கும், வெறுப்பைக் கக்கும் பார்வைக்கும் அஞ்சி, தன் தாயை கண்டுபிடிக்கும் எண்ணத்தோடு வீட்டை விட்டு வெளியேறுகிறார். தாயை கண்டுபிடித்த போதும், திடீரென சந்திக்கும் புதிய நபரோடு பழகத் தடுமாறும் நிலையே சைனாவுக்கு உண்டாகிறது. அதனால் அங்கிருந்தும் ஓடி வருகிறார். இப்படி உறவுகளிடமிருந்து விலகி ஓடியோடி, அந்த ஓட்டத்தின் முடிவில் அவர் வந்து சேரும் இடம் ராணுவமாக இருக்கிறது.

எந்தக் கேள்விகளுமின்றியே மந்தையில் ஓர் ஆட்டைப் போல சைனா ராணுவ அணியில் இணைக்கப்படுகிறார். அங்கு சைனாவைப் போலவே பத்து வயது கூட ஆகாத சிறுவர்களும் சிறுமிகளும் கையில் ஆயுதமேந்தி கண்களில் இன்னதென்று கணிக்க முடியாத தீர்க்கத்தோடு திரிகிறார்கள். அதிகாரிகளின் மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டு, உயிரை எடுக்கவும் இழக்கவும் எந்நிலையிலும் தயாராக இருக்கிறார்கள். ராணுவத்தில் சேர்ந்த இரண்டொரு நாட்களிலேயே எந்தப் பயிற்சியும் இல்லாத நிலையிலும் சைனா போர் முனைக்கு அனுப்பப்படுகிறார்.

பெரியவர்கள் எதை கற்பிக்கிறார்களோ அதையே குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அன்பைக் கொடுத்தால் அன்பையும், வன்முறையைப் பழக்கினால் வன்முறையையும் குழந்தைகள் எந்தக் கேள்விகளுமின்றி ஏற்றுக் கொள்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறும் / துரத்தப்படும் குழந்தைகளுக்குப் போராளிகளாவதில் எந்த சிரமமும் இருப்பதில்லை. வீடுகளில் தங்கள் உறவுகளிடம் வளர்த்துக் கொண்ட குரூரங்களை போராளியாகும் போது "கைகாட்டப்படும்' எதிரிகள் மீது செலுத்துவதில் குழந்தைகளுக்கு எந்தத் தடையும் ஏற்படுவதில்லை.

மனதில் அடைந்து கிடக்கும் வன்மங்களை கொலைகளின் மூலமாகவும் சித்ரவதைகளின் மூலமாகவும் குழந்தைப் போராளிகள் தீர்த்துக் கொள்ள முடியும். கொலைகளும் சித்ரவதைகளும் பெரியவர்களைப் போலவே குழந்தைகளுக்கும் விளையாட்டாக கற்பிக்கப்படுகிறது. எவ்வளவு கொலைகள் செய்கிறோமோ அவ்வளவு வேகமாக தங்களின் தகுதியும் தளபதிகளிடம் நன்மதிப்பும் கூடும் என்பதால், குழந்தைப் போராளிகள் மிக நேர்த்தியாகவும் புதிய உற்சாகத்தோடும் கொலைகளில் ஈடுபடுவதாக சைனா குறிப்பிடுகிறார்.

குழந்தைப் போராளிகள் உருவாகும் முறையையும், அவர்கள் வளர்த்தெடுக்கப்படும் வழிகளையும் நூலில் படிக்கும் போது எழும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ராணுவத் தலைவரான முசேவெனியின் விடுதலை உரைகளைக் கேட்டு நரம்புகள் முறுக்கேறி போருக்குப் போகும் குழந்தைகள் நிலை குறித்து, சைனா மிக நுணுக்கமான பல தகவல்களையும் கேள்விகளையும் முன் வைக்கிறார். சாதாரண குழந்தைகளைப் போல மணலில் விளையாடியபடியே எதிரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ராணுவத்தினர் குழந்தைப் போராளிகளை ஒரு கேடயம் போல பயன்படுத்துகிறார்கள். இதனால் ராணுவத்தினரின் உயிர் சேதம் பெரிதளவில் தடுக்கப்படுகிறது. ஆனால் குழந்தைகள் கொத்துக் கொத்தாக செத்து விழுவது குறித்த எந்த சலனத்தையும் அது ராணுவத்தினரிடையே ஏற்படுத்தவில்லை.

தேர்ந்த போராளியாக முன்னேறினாலும் சைனாவிற்குள் பொங்கி வழியும் மனிதநேயம் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரே நின்று கேள்வி எழுப்புகிறது. இதனால் சைனா எந்த நிலையிலும் வரம்புகளை மீறத் துணியவில்லை. இதுதான் விடுதலையா என்ற கேள்வியும் விடுதலையை இப்படித்தானா அடைய வேண்டுமென்ற வினாவும் அவரை துளைத்தெடுக்கின்றன. பிடிபட்ட ராணுவத்தினர் மீது செலுத்தப்படும் சித்ரவதைகள் மனித மாண்புக்கு துளியும் தொடர்பற்று இருப்பது கண்டு, "தன் அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டோரை துன்புறுத்துவது தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக இன்பத்தைக் கொடுக்கும்' என விரக்தியோடு கூறுகிறார் சைனா.

எத்தனையோ முறை தப்பிப் போக நினைத்தும் வேறு போக்கிடம் இல்லாததால் சைனாவின் வாழ்வு ராணுவத்திலேயே கழிகிறது. ராணுவ வீராங்கனையாக தெருவில் நடந்து போகும்போது பொது மக்கள் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தால் கிடைக்காது. மீண்டும் தான் பழைய கொடுமைகளை அனுபவிக்க நேரிடும் என்ற அச்சம், சைனாவை ராணுவ முகாம்களில் கட்டிப் போடுகிறது. உயிர் வாழ்தல் என்பது சாதாரண விஷயமல்ல. திரும்புகிற இடமெல்லாம் உயிர் வேட்டை நடக்கிற இது போன்ற சூழலில் உயிரைத் தாக்குப் பிடிப்பது

சாகசம்தான். சைனா தன் திறமையான போர் சாகசங்களால் எதிரிகளிடமிருந்து உயிரைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் ராணுவ அதிகாரிகளால் தான் வன்புணர்வு செய்யப்படுவதும், அதற்கு சம்மதிக்காத சூழல்களில் சூழ்ச்சிகளுக்கு ஆளாகி கடுமையான தண்டனைகளை அனுபவிக்க நேர்வதும் ஒரு பெண்ணாக சைனாவுக்கு கிடைத்த கூடுதல் துயரங்கள்.

பெண் போராளிகளின் குழந்தைகள் பெரும்பாலும் தகப்பன் பெயர் தெரியாதவர்களாகவே பிறப்பதையும், எந்த ராணுவ வீரனும் "இது தன் குழந்தை'யென பொறுப்பேற்கத் துணிவதில்லை என்பதையும் சைனா வேதனையோடு பதிவு செய்கிறார். எங்கே இருந்தால் என்ன? எத்தனை சாகசங்களை புரிகிறவர்களாக இருந்தால்தான் என்ன? விடுதலையை உருவாக்குகிறவர்களே ஆனாலும் ஒரு பெண்ணை அவள் ஒப்புதலின்றி தொடக்கூடாது என்ற நாகரிகத்தை மட்டும் ஆண்கள் கற்றுக் கொள்வதில்லை.

ராணுவத்தில் யாரும் யார் மீதான ஆதரவையும் வெறுப்பையும் வெளிப்படையாகக் காட்டிவிட முடியாது. இன்று பொறுப்பிலிருக்கும் ஓர் அதிகாரி எந்நேரமும் சூழ்ச்சிக்கு இரையாகி கைது செய்யப்பட்டு சாகடிக்கப்படலாம். அப்போது அந்த அதிகாரியை சார்ந்திருந்த எல்லோருமே வலையில் விழ வேண்டியிருக்கும்.

வலியும் அயர்ச்சியும் மிகுந்த பல போராட்டங்களுக்குப் பின் சைனா விழுவது இந்த வலையில்தான். கசிலிங்கி என்ற அதிகாரியின் கீழ் வேலை பார்த்ததற்காக, அவர் இன்று ராணுவ எதிரியாக்கப்பட்டதால் சைனாவிற்கும் அந்தப் பட்டம் வந்து சேர்கிறது. விடுதலை என்ற ஒற்றைச் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உயிரைப் பொருட்படுத்தாமல் போராடியதற்காக சைனாவிற்கும் கடைசியில் விலை வைக்கப்படுகிறது.

விடுதலையை இலக்காக நிர்ணயித்த முசேவெனி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துவிட்ட போதும் அவர் உருவாக்கிவிட்ட எண்ணற்ற குழந்தைப் போராளிகளின் வாழ்விலோ, சமூகத்திலோ எந்த மாற்றத்தையும் சைனாவால் காண முடியவில்லை. உண்மையில் கைகளுக்குக் கிடைக்காத, அனுபவிக்க வாய்க்காத "விடுதலை' சைனாவை தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளியது ஒன்றுதான் மிச்சம். இதற்கிடையில் வன்முறையும் வன்புணர்வுமாக தொடரும் போராளி வாழ்வில் சைனாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. ஒன்று டிராகோ என்ற ராணுவ வீரனின் மீதான அவரின் காதலுக்கு கிடைத்த பரிசு. இன்னொரு குழந்தைக்கு தந்தை யாரெனத் தெரியாது. ஆனால் உயிருக்கு அஞ்சிய இந்த ஓட்டத்தில் குழந்தைகளை இணைத்துக் கொள்ள முடியாமல் ஒன்றை காதலனின் மனைவியிடமும், இன்னொன்றை தோழியிடமும் விட்டுவிடுகிறார்.

ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியைப் போல, சைனா உகாண்டா உளவுப் படையினரால் கடத்தப்படுகிறார். அதற்குப் பிறகு தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சொல்லவோ, எழுதவோ அவர் விரும்பவில்லை. அவமானத்தின் காலமாக சைனா அதைக் குறிப்பிடும் போதே அந்தக் கொடுமைகள் எப்படிப்பட்டவையாக இருந்திருக்கும் என்று உணர முடிகிறது. சில மாதங்கள் நீடித்த உளவுப் படையினரின் சித்ரவதைகள், சைனாவின் உருவத்தையும் உள்ளத்தையும் சிதைத்திருந்தன. வதை முகாமிலிருந்து வாகனத்தில் எங்கோ அழைத்துச் செல்லப்படும் வழியில் சைனா வாகன நெருக்கடியான சாலையில் விழுந்து ஓடித் தப்பிக்கிறார். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சகத்தில் இருக்கும் பெண் அதிகாரி ஒருவரின் வழிகாட்டுதல்படி அகதிகளுக்கான சர்வதேச உயர் மட்ட ஆணையத்திடம் தஞ்சம் புகுவதோடு அவரின் ஓட்டம் முடிவுக்கு வருகிறது.

கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்ட சைனா தீவிரமான கவுன்சலிங் மற்றும் சிகிச்சையால் ஓரளவுக்கு தேறிய நிலையில் டென்மார்க்கில் தற்பொழுது அகதியாக வாழ்கிறார். நம் எல்லோரையும் போல சைனா விரும்பியது ஓர் அமைதியான, துரத்தல்களற்ற நல்வாழ்வைதான். அதைப் பெற அவர் தன் வாழ்வின் 25 ஆண்டுகளை தொலைக்க வேண்டியிருந்தது. வன்முறையற்ற வாழ்வை வாழ சைனா கொடுத்திருக்கும் விலை மிக மிக அதிகம்.

நாம் எத்தனைதான் நியாயங்களை கற்பித்துக் கொண்டாலும் சண்டையும் போரும் வன்மமும் குழந்தைகளுக்கானது அல்ல. அந்த சுமை குழந்தைகளால் சுமக்கக் கூடியதுமல்ல. போர் மற்றும் வன்முறையின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாத யாரும் அதற்கு பயிற்றுவிக்கப்படவோ பழக்கப்படுத்தப்படவோ கூடாது. மணல் வீடுகளை கட்டுகிற வயதில் வெடிகுண்டுகளை இயக்கப் பழக்குவது அநீதியின் உச்சமேயன்றி வேறில்லை. தசைகள் இறுகியிராத பிஞ்சுக் கைகளிலும் தோள்களிலும் சுமக்க முடியாத ஆயுதங்களை ஏந்தும் காட்சி நினைக்கவே ஒவ்வாததாக இருக்கிறது.

சைனா குறிப்பிடுவது போலவும் அனுபவித்தது போலவும் போராளிக் குழந்தைகள் கடுமையான மனச் சிதைவுக்கு ஆளாவது நிச்சயம். விடுதலையை அடைந்த பிறகு மனநிலை பாதிக்கப்பட்ட சின்னஞ்சிறுப் போராளிகள், சமூகத்தின் ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக இருப்பார்கள் என்பதில் அய்யமில்லை. இன்று மீட்கப்பட்டு விட்டாலும் சைனாவின் நினைவுகளும் கனவுகளும் எத்தனைக் கொடியவையாக இருக்கும் என்பது கணிக்கக் கூடியதே! சைனாவை போன்ற ஒரு குழந்தை தன் வாழ்வில் எப்போதுமே அன்பை அனுபவிக்காமல் செத்துப் போவதை விடவும் அநீதி வேறெதுவும் இவ்வுலகில் உண்டா? இந்நூலில் இரண்டு முக்கியமான கடிதங்கள் இருக்கின்றன. ஒன்று சைனாவின் சகோதரி ஹெலன் தன் தந்தைக்கு எழுதியது:

“அப்பா, நீ எனக்கு தந்த குழந்தைப் பருவம் மகிழச்சியற்றது. அதற்கான தண்டனையை நீ பெறுவாய்... உலகில் இலக்கின்றி நான் அலையப் போகிறேன். அன்பே காட்டாத நீ என்னை உனது ரத்தமும் சதையுமெனச் சொல்கிறாய்... நான் துயரத்துடன்தான் மரிப்பேன். நீ இறக்கும் போது கூட உன் குற்றங்களை ஒருமுறையேனும் கேள்விக்குள்ளாக்காமலேயே இறப்பாய். நீ எனக்களித்த வலியினை நீயும் உன் வாழ்வில் கட்டாயம் அனுபவிப்பாய்''

இன்னொன்று சைனா முசேவெனிக்கு எழுதியது: “மேதகு முசேவெனி! ... என்னை கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கே உன் முகம்தான் எனக்கு தெரிகிறது... நீ என் கைகளில் திணித்த புதிய வாழ்க்கையும் ஒளிரும் எதிர்காலமும் அளிப்பதாக நீ வாக்குக் கொடுத்த அந்த குழந்தைகளை உனக்கு ஞாபமிருக்கிறதா? ... களங்களிலும் காடுகளிலும் மாண்டு போன குழந்தைகளின் எண்ணிக்கையாவது உனக்குத் தெரியுமா? தங்களது குழந்தைகளைத் தேடி அலையும் பெற்றோருக்கு நீ என்ன பதிலைச் சொல்லப் போகிறாய்?''

இரண்டு கடிதங்களும் வஞ்சிக்கப்பட்ட இரண்டு பெண்களால் ஆண்களுக்கு எழுதப்பட்டவை. ஒன்று தந்தைக்கும், இன்னொன்று தலைவனுக்கும் எழுதப்பட்டிருந்தாலும் இரண்டின் சாராம்சமும் ஒன்றையே வலியுறுத்துகின்றன. களவாடப்பட்ட தங்கள் வாழ்வைக் கோரும் வார்த்தைகள் அவை. குடும்பமும் சமூகமும் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இழைக்கும் துரோகத்தை "குழந்தைப் போராளி' எந்தத் தடையுமின்றி எடுத்துரைக்கிறது. எங்கோ ஆப்பிரிக்கக் கண்டத்தில் சைனாவுக்கு இழைக்கப்பட்ட துரோகம் உலகம் முழுக்க மொழி, இனம், நிறம் என்ற பாகுபாடுகளைக் கடந்து எல்லா பெண்களும் அனுபவிப்பதுதான். குடும்பம் மற்றும் சமூக வன்முறைகள் இந்தியப் பெண்களுக்கு அன்றாட நிகழ்வு. இந்த நூலை ஒவ்வொரு பெண்ணும் வாசிக்க வேண்டும். ஆண்களுக்கு இந்த நூல் ஒரு கண்ணாடியைப் போல அமையலாம்.

தீராத மனச் சிக்கலிலும் துயரங்களிலும் சைனாவால் அத்தனை வலிமையான மொழியில் தேர்ந்த இலக்கியப் படைப்பாக "குழந்தைப் போராளி'யை உருவாக்க முடிந்தது, வியப்பிற்கும் பாராட்டிற்கும் உரியது. இவ்வுலகிற்கு அவர் ஆற்றியிருக்கும் பெருந்தொண்டாகவே இதை நாம் கொண்டாட வேண்டும். சைனாவின் மொழி ஆளுமை அவரது வேதனைகளிலிருந்து பிறந்தது.

"பார்வைக் கொல்லுமாயின் அப்பா எரிந்து சாம்பலாகியிருப்பார்' என்பது போன்ற வாக்கியங்கள், வெகு காலத்திற்கு உள்ளத்தில் கிடந்து அழுத்தும். அதிகார வெறி கொண்ட எவருடைய கண்களை சந்திக்கும் போதும் அந்த வரி நினைவிற்கு வந்து உசுப்பேற்றும். இச்சமூக அமைப்பில் வன்முறை எனும் சுமை திணிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வை எழுதியாக வேண்டிய தேவை இருக்கிறது. நாளை வலி மிகுந்த வாழ்வைப் பதிவு செய்ய விரும்பும் யாருக்கும் சைனாவின் "குழந்தைப் போராளி' ஓர் ஈடற்ற உந்துதலாக இருந்து ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும்... உறங்க விடாமல்.

Pin It