சென்ற இதழ்த் தொடர்ச்சி...

1953 இல் இந்தியப் பிரதமர் நேருவும், மியான்மரின் பிரதமர் யூபனாவும் நாகாலாந்தின் சில பகுதிகளுக்குப் பயணம் செய்தனர். அப்போது NNC பிரதிநிதிகள் “நாகாலாந்தைப் பிரிக்கக் கூடாது” என்ற கோரிக்கையை முன்வைத்து மனு அளிக்க முயன்றனர். ஆனால் இரு பிரதமர்களும் அம்மனுவை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் நாகா மக்கள் இருபிரதமர்களின் வருகையையும் புறக்கணித்தனர். 12,000 பேர் கூட வேண்டிய விளையாட்டுத் திடலில் ஒரு சில அரசு அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் இல்லை.

இந்தப் புறக்கணிப்பிற்குப் பிறகும் இரு நாட்டுப் பிரதமர்களும் நாகாலாந்தை இரண்டாகப் பிரித்தனர். நாகாலாந்தின் பெரும்பகுதி மியான்மருக்குச் சென்றது. இந்தியாவில் மணிப்பூர், அசாம் மற்றும் அருணாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்கள் நாகாலாந்தில் இருந்தது.

இந்திய அரசு NNC தலைவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பின் தொடரவும், கைது செய்யவும் துணை இரானுவப்படையை அனுப்பியிருந்தது. 1958 இல் நாகாலாந்து மக்களுக்கு எதிராக இந்திய அரசு Armed Forces Special Power Act, ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையின் அட்டூழியம் அதிகமானது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். ஆண்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர். பலர்கொல்லப்பட்டனர். இதனால் வேறு வழியின்றி, இதுவரை மனுக்கள் மட்டும் அளித்து வந்த NNC தலைவர்கள் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டியிருந்தது. நாகாலாந்தில் வன்முறை தொடங்கியது. நாகா இனத்தை முற்றிலுமாக ஒழித்துவிடும் எண்ணத்தோடு துணை இரானுவம் செயல்பட்டது.

Article 371A:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வன் முறைக்குத் தீர்வு காண விரும்பிய சில படித்த நாகா மக்கள் ‘Naga People’s Convention’ (NPC) என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இந்திய அரசிற்கும், NNCக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தியது. 1960இல் NPC இந்திய அரசுடன் 16 அம்ச ஒப்பந்தம் ஒன்றைக் கையொப்பமிட்டது. இதன் படி நாகாலாந்து தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின் படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது.

ஆனால் 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1975இல் இந்திய அரசிற்கும் NNCக்கும் இடையே ஷில்லாங்கில் ஒரு உடன் படிக்கை கையெழுத்தானது. இதில் பலர்அதிருப்தி அடைந்தனர். அதனால் NNC ஒன்பது குழுக்களாக உடைந்தது. 1980இல் NSC-IN என்கிற வலுவான அமைப்பு உருவாகியது. இவ்வமைப்பை இந்திய அரசு அங்கீகரித்து பேச்சு வார்த்தை நடத்தியது. இப்படிப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

2012இல் நாகாலாந்தின் 60 சட்ட மன்ற உறுப்பினர்களும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினர். பல ஆண்டுகளாக போராடிவரும் தங்களுக்குத் தீர்வு வேண்டி இந்நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன. காங்கிரஸ் அரசைத் தொடர்ந்து பா.ஜ.க அரசிலும் இப் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 அன்று முதல் சட்டகம் (Framework 1) உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் அம்சங்கள் மிகவும் இரகசியமாகப் பேணப்பட்டு வருகிறது.

இதை போல் மியான்மரிலும் 1988 இல் NSC-IM என்ற அமைப்பு உருவானது. 2012 ஆம் ஆண்டு மியான்மர் அரசிற்கும் NSC-IM அமைப்பிற்கும் இடையே 6 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தங்கள் உரிமைப் போராட்டங்களில் இது வரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களை நாகா மக்கள் இழந்திருக்கின் றனர். தொடர்ந்து நம்பிக்கையோடு உரிமை மீட்பிற்காகத் தளராது குரல் எழுப்பி வருகிறார்கள்.

நிறைவாக கேள்வி பதில் அமர்வில், நாகா மக்கள் போராட்டத்தின் விழுமியமாக எது இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குத் திரு.வபாங் தோஷி அளித்த பதில் - மனிதநேயம்!                        

Pin It