இரவை மினுக்கிய நட்சத்திரங்கள்
உன் வானூர்திகளும்
அவை கழித்த குண்டுகளும் பெருக்கிய
புகையடர்ந்து தூர்ந்து போயின
பள்ளத்தாக்குகளில் புதர்புதராய் செழித்திருந்த
தேன்நிறைந்த லில்லிபூக்களின் நிழலில்
உறங்கிய சில்வண்டுகளை
உன் குண்டுகள் வீழ்ந்து தகர்த்தன
மலைச்சரிவுகளில் நெடிய வளர்ந்த
தேவதாரு மரங்களைப் பிளந்த குண்டின் அழிவால்
பறவைகளின் பாடல்கள் சிதைந்தன
நிலத்தின் நறுமணத்தை தீவாசமாக்கிவிட்டு
திரும்பிவிட்டன உன் போர்விமானங்கள்
தோகையெரிந்த மயில்கள் அடவுகளற்று
ஆடமுடியாமல் தேம்புகின்றன
ரத்தச் சான்றென உறைந்த எம்மக்களின்
உடல்களைக் கிடத்தி உரக்கக் கத்துகிறோம்
உலகின் திசையெங்கும் விடுதலை வேள்வியில்
எரிக்கப்படும் விலா எலும்புகளில் முளைக்கும்
ஆலிவ் மரக்கிளையொன்றை அலகில் பற்றி
புறாக்கள் பறக்க எத்தனிக்கின்றன
ஈழம் எனினும் பாலஸ் தீனம் எனினும்
ஆதிக்க நெருப்பெரியும் குண்டுகளைத் தாண்டி
தெரிகிறது விடுதலை
அவை எரித்த அதே வானில்