louis Gluckலூயிஸ் கிளக் 1943 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் பிறந்தார். லாங் ஐலண்ட் பகுதியில் வளர்ந்தார். சாரா லாரன்ஸ் கல்லூரி, கொலம்பியாப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். ஆனால் பட்டம் பெறவில்லை. இளவயதில் அவருக்குப் பட்டினி மனநோய். சாப்பிடாமல் பட்டினி கிடக்கும் நோய் அது. அதிலிருந்து மீண்டார்.

கிளக்கிற்கு நோபெல் பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அவர் பற்றித் தெரிந்து கொள்ள நம்மைப் போன்றவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது. கண்ணில்பட்ட சிறுகவிதைகளைப் படித்துவிட்டு, தமிழில் மொழிபெயர்த்தால் இவற்றிற்கா நோபெல் என்ற வினா, திறனாய்வுடன் வாசிக்கும் வாசகர்களுக்கு எழுந்தது.

நமது கவனமெல்லாம் தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, கிழக்காசியப் படைப்புகளில் இருந்ததால் அமெரிக்கக் கவிஞரான லூயிஸ் கிளக்கை விட்டுவிட்டோம். ஆனால் அவர் அரை நூற்றாண்டு காலமாக உயர்தரமான கவிதைகளைப் படைத்து வருகிறார். பதின்மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

தேசியப் புத்தக விருது (Faithful and Virtuous Nights, 2014), புலிட்சர் பரிசு (The Wild Iris ) முதலான பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இப்போது நோபெல் அவரை அடைந்திருக்கிறது. அவருடைய ஒவ்வொரு கவிதையும் தனித்தன்மை வாய்ந்தது என்றாலும், பொதுவான சில கருப்பொருள்கள் அவற்றை ஒன்றாக இணைக்கின்றன.

பிறப்பு, இறப்பு, மீள்பிறப்பு எனும் கருப்பொருள் பலகவிஞர்களிடமும் காணப்பட்டாலும் க்ளக் அதனை நம்பிக்கை - நம்பிக்கையின்மை ஆகிய இரண்டுக்குமுள்ள இறுக்கத்தையும் அதனைத் தீர்த்தலையும் தனிச்சிறப்புடன் தருகிறார். தனிமனித விசாரங்கள், மன அழுத்தங்கள் ஆகியவை பலவேளைகளில் உழவுத்தொழிலின் நசிவோடும் தொன்மக் கதைகளின் பின்புலத்தோடும் பின்னப்பட்டுத் தரப்படுகின்றன.

அண்மைக்காலக் கவிதைகளில் தனிமனித சமுதாய அவலங்களுக்கு இடையில் காணப்படும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று பிரகாசமாகப் பதிவு செய்யப்படுகிறது. அவர் பயன்படுத்தும் வித்தியாசமான படிமங்களும் கவிதைகளின் இசைப்பாடல் இசைவும் இந்தக் கருப்பொருள்களுக்கு மெருகூட்டுகின்றன. 

கிளக்கினுடைய கவிதைகளின் யாப்புத் துல்லியம், அவற்றில் காணப்படும் உணர்வு, தனிமை, குடும்ப உறவுகள், மணமுறிவு, இறப்பு ஆகியவை அவருடைய படைப்புக்களுக்கு உள்ளளி தருகின்றன என்று ஒரு திறனாய்வாளர் குறிப்பிடுகிறார்.

எளிய அழகுடன் தனிமனித இருத்தலைப் பொதுமைப்படுத்தும் தெளிவான அவருடைய குரலுக்காக நோபெல் பரிசு வழங்கப் பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருடைய தொடக்க காலக் கவிதைகளில் காதல் தோல்வியின் பின்விளைவுகள், இடர்ப்பாடுகளின் முடிவு, குடும்ப மோதல்கள், இருத்தலின் சோகம் ஆகியவை வெளிப்படுகின்றன.

பின்னர் வந்த கவிதைகள் ‘தான்’ என்பதன் துன்பத்தினை ஆராய்கின்றன. காட்டுப்பூ என்ற கவிதை ஆழமான மிகநெருக்கமான உணர்ச்சிகளை பகுத்துச் சொல்வதன் மூலம் வாசகர்களைத் தன்னுள்ளான பயணத்திற்கு இட்டுச்செல்கிறது. இக்கவிதையைப் பின்னர் விரிவாகப் பார்ப்போம்.

வெளித்தோற்றத்திற்கு யாரும் புரிந்துகொள்ளக் கூடியனவாகவும், நீங்களும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடியவையாகவும் இருக்கும் கிளக்கின் கவிதைகள் ஆழமான உள்மனத்தில் அனுபவிக்கக் கூடியவையாக இருக்கின்றன. இது அவருடைய எளிமையான மொழிநடையாலும் கவிதைக்குரலாலும் சாத்தியமாகிறது என்று கூறுகிறார்கள்.

அவருடைய கவிதைகள் பற்றிப் பலரும் குறிப்பிடுவது இதுதான்: அவர் ஏமாற்றம், தள்ளப்படுதல், இழப்பு, தனிமை பற்றி எழுதுகிறார். அவை இருண்மையுடன், நம்பிக்கை தராதவையாக இருக்கின்றன (இதுபற்றிப் பேசலாம்). அவருடைய அடிப்படை அக்கறை எல்லாம் ஏமாற்றம், இறப்பு, காதல், காதலோடு வருகின்ற இழப்பு ஆகியவை.

அவருடைய ஆழ் மனத்தில் வீழ்ந்த உலகின் கவிஞர். சில்வியா பிளாத்தை விட்டுவிட்டுப் பார்த்தால் இவர் போன்று அந்நியமாக்கப்பட்டதால் ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படுத்தியவர்கள் வெகுசிலரே. அந்த அந்நியமாக்கலை அவர் அழகியலாக ஆக்குகிறார்.

இனி லூயிஸ் கிளக்கின் தலைசிறந்த படைப்புகளாகக் கருதப்படுகிற இரண்டு கவிதைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்திக் கொள்வோம்: அவை Averno, A Village Life ஆகியவை.

அவெர்னோ என்ற கவிதை கீழ் உலகிற்கு நுழைவாயிலாக ரோமானியர்கள் கருதிய ஏரியின் பெயரைக் கொண்டது. கிரேக்கத் தொன்மத்தில், தொன்மைக் கதையில், பூமித் தெய்வமான டெமிட்டாரின் மகள் பெர்சிபோனேயை சாவின் தெய்வமான ஹேடீஸ் கவர்ந்து கீழுலகிற்குக் கொண்டு சென்றுவிடுகிறான். அங்குப் போனவர்கள் யாரும் திரும்பி வர முடியாது.

லூயிஸ் கிளக்கின் கவிதையில் திரும்ப வர முடியாத, பனிக்காலத்திற்கு மாறிய நிலவெளியில் அது ஒரு நுழைவாயில், உலகங்களுக்கு இடையே போக்குவரத்தை அழைக்கிறது; ஆனால் சமாதானத்தை எதிர்க்கிறது.

கவிதை ஒரு நீட்டப்பட்ட நீண்ட கையறு நிலைப்பாடல், வழக்கமான தீர்வையோ ஆறுதலையோ தரவில்லை; கொடூரமாய் துயரம் பொதிந்து இருக்கிறது. அவெர்னோ வருவதற்கோ போவதற்கோ ஆன வரைபடம் தரவில்லை; நாம் அதில் எங்கிருக்கிறோம் என்ற அச்சத்தைத் தரும், என்றும் இருக்கும் இன்றைக்கான ஒரு படம்.

காதலனுக்கும், தாய்க்கும் இடையேயான - சாவுக்கும் நிலத்திற்கும் இடையேயான - உரையாடலாக இக்கவிதையைப் பார்க்க வேண்டுமென்று கவிஞர் விரும்புகிறார். ஹேடிஸ் பூமியின் மறுபதிப்பான ஒன்றைக் கீழ் உலகில் கட்டுகிறான். ஒரே மாதிரியாக இரண்டும் இருந்தன, புல்வெளி உட்பட. ஆனால் அதில் அவன் ஒரு படுக்கையையும் சேர்த்துக் கொண்டான்.

வாழ்க்கைக்கே உரியது என்று கட்டமைக்கப்படாத ஆவியின் பிளவை கவிஞர் ஆராய்கிறார். வாழ்க்கையின் பல்வகை இன்பங்களான, மலைச் சாம்பலில் சிகப்புக் கனிகளும், பறவைகளின் இரவு வலசைகளும் நிரந்தரமாகப் போய்விட்டன என்று தெரிந்தும் அதனுடைய உடல் இறத்தலுக்குப் பின்னும் உயிர் வாழும் ஆன்மா எப்படி ஆறுதல் பெற முடியும் என்று கேட்கிறார்.

கவிதை நாம் போக விரும்பாத இடத்திற்கு நம்மைக் கொண்டு சென்று நாம் முன்னர் இருந்திராத இடத்திற்குத் திரும்பக் கொண்டு வர வேண்டும். வெளிச்சம் எப்போதும் ஏமாற்றத்தின் ஒரு வகை. நாம் தெளிவாகக் காண அனுமதிக்கும் ஆன்ம விழிப்பு நம்பிக்கையின்மையில் முடிந்துவிடும். ஆவெர்னோ இதைப் படம்பிடிக்கிறது; அதில் சில வரிகள்:

உங்கள் ஆவி இறக்கும்போது நீங்கள் இறக்கிறீர்கள்.
இல்லையென்றால் நீங்கள் வாழ்கிறீர்கள்.
உங்களால் உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய இயலாது போகலாம் - ஆனால் நீங்கள் இயங்குகிறீர்கள்.
உங்களுக்கு வேறு போக்கிடம் இல்லாத ஒன்று அது.
என்னுடைய குழந்தைகளிடம் இதைச் சொன்னால்
அவர்கள் அதைக் கவனிப்பதில்லை.
முதியோர் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
அப்படித்தான் இவர்கள் எப்போதும் செய்கிறார்கள்.
இவர்கள் தங்கள் மூளை செல்களை இழப்பதை மறைக்க
யாரும் பார்க்க முடியாதவற்றைப் பேசுகிறார்கள் என்கிறார்கள்
ஒருவருக்கொருவர் கண்ணடித்துக் கொள்கிறார்கள்,
கிழவர் சொல்வதை ஆவியைப் பற்றிப் பேசுவதைக் கேள்
ஏனென்றால் அவரால் நாற்காலிக்கான பெயரைக் கூட நினைவுபடுத்த முடியாது.
தனியாக இருப்பது பயங்கரம்.
தனியாக வாழ்வதைச் சொல்லவில்லை
யாருக்கும் கேட்காத இடத்தில் தனியாக இருப்பதை
எனக்கு நாற்காலியின் பெயர் ஞாபகம் இருக்கிறது.
நான் சொல்ல விரும்புவது - எனக்கு எதிலும் ஆர்வம் இல்லை.
நீ தயாராக இருக்க வேண்டும்
என்று எண்ணி விழித்தெழுகிறேன்.
விரைவில் ஆவி கைவிட்டு விடும்.
உலகின் எல்லா நாற்காலிகளும் உனக்கு உதவமாட்டா.

லூயிஸ் கிளக்கின் பதினோராவது தொகுதியான அவெர்னோ இரண்டு பகுதிகளைக் கொண்டது. மொத்தம் பதினெட்டுக் கவிதைகள் . ஒவ்வொன்றிலும் உட்கிளைகள்.

41 கவிதைகள் கொண்ட தொகுப்பான A Village Life மத்திய தரைக் கிராமம் ஒன்றின் வாழ்க்கை பற்றியது. கிராம அனுபவத்தின் பல வீச்சுக்களை எளிய முறையில் விளக்குகிறது. அது கதையாடல்களின் தொகுப்பு. கிளக் உன்னதமான கதைகளை கவிதை நடையில் செய்கிறார்.

பொழுது சாயும் நேரம்
கதிரவன் மறையும் அதேவேளையில்
உழவுத் தொழிலாளி இலைகளை எரித்துக் கொண்டிருக்கிறான்.
இது, இந்த நெருப்பு, ஒன்றுமில்லை.
கட்டுப்பாட்டுக்குள் உள்ள சிறிய விஷயம்,
ஒரு சர்வாதிகாரியால் நடத்தப்படும் குடும்பம் போல.
எனினும, அது கொழுந்து விட்டு எரியும்போது உழவன் மறைகிறார்
சாலையிலிருந்து மறைகிறார், கண்ணுக்குத் தெரியமாட்டார்.
கதிரவனோடு ஒப்பிடும்போது, எல்லா நெருப்புகளுக்கும்
குறுகிய காலம்தான்; தொழில்முறை சாராதவை
இலைகள் எரிந்துமுடிந்தபோது அவையும் முடியும்.
அப்போது உழவன் மீண்டும் தோன்றுகிறார், சாம்பல்களைக் கிளறிக் கொண்டு.
ஆனால் சாவு உண்மையானது.
கதிரவன் எதற்காக வந்ததோ அதனை முடித்து விட்டது
விதையை வளரச் செய்து, பிறகு
நிலத்தை எரிக்கத் தூண்டியது போல.
எனவே இப்போது அது மறையலாம்.

அந்தக் கிராமம் மனித ஆன்மாவைப் போலவே தோன்றுகிறது. நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைகள், உடைந்த நம்பிக்கைகள், விடுவிப்பற்ற கனவுகள், தாமதமாக நம்மிடம் திரும்பி விடும் நமது நினைவுகள் - கிராமத்தில் மாறி விழும்.

இருளும், ஒளியும் போல இவை வருகின்றன – Griffith Poetry Prize 2010... - நடுவரின் சான்றிதழ் - கதைபோல இருக்கிறது - ஆனால் நிகழ்வு முக்கியத்துவம் பெறவில்லை, நிறுத்தங்கள், இடைவேளைகள் - இடைநிறுத்த நேரங்கள்.

காலம் பற்றி, காலம் வேக வேகமாகக் கழிந்து போனது பற்றி அவரது கவிதை பேசுகிறது. மனிதர்கள் காலத்தின் இரக்கமற்ற பயணத்தை எதிர்க்கிறார்கள், வெறுக்கிறார்கள். பிறப்பதற்கு உங்கள் உடல் இறப்போடு உடன்படிக்கை செய்து கொள்கிறது. அக்கணத்திலிருந்து அது செய்ய முயல்வதில்லை, ஏமாற்றுதல்தான்.

எல்லா உயிர்களின் மாறும் தன்மை, நிலையற்ற தன்மை நூலில் மையம் பெறுகிறது. இளமை, முதுமை, குழந்தைப் பருவம் எல்லாமே சாவை நோக்கி வேகமாக ஓடுகின்றன. சாவின் இலச்சினைகள் இளமையின் படிவங்களை விட்டுவிடுவது அதிகத் தொலைவில் இல்லை.

நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் மாறி மாறிக் காட்டப்படுகின்றன. ஒரு கவிதையில் ஒரு பெண் தனது பக்கத்து வீட்டுக்காரர் எப்படி வசந்த கால முதல் நாளில் தனது துவைத்த துணியை உலர்த்துகிறாள் என்று விவரிக்கிறார். ‘பறவைகள் மீண்டும் வந்து விட்டன, கவிதைகளின் மேல் தொற்றிக் கொள்கின்றன.

நாங்கள் சூரிய ஒளியில் நிற்கிறோம்; குணம் பெறுகிறோம்’ என்று சொல்லிவிட்டு, இந்த நம்பிக்கை அறிக்கையின் இறுதியில், தனது கைகளை அவள் பார்க்கிறாள்; எவ்வளவு வயதாகி விட்டது என்று பார்க்கிறாள். அது தொடக்கமில்லை, முடிவு. வயது வந்தவர்களெல்லாம் இறந்து விட்டார்கள், குழந்தைகள் மட்டுமே தனியாக விடப்பட்டிருக்கிறார்கள், முதுமையை அடைகிறார்கள்.

வாழ்க்கை முறை மாறுகிறது; பாத்திரங்கள் தாங்களே இதன் அடையாளங்கள் என்று காண்கிறார்கள். அலைகளாய் தலைமுறைகள் ஓடுகின்றன. கிராமம் மட்டும் உண்மை; மக்கள் அதன் மேற்பரப்பின் விவரங்கள், கவிதைகளின் குரல்களும், கதைகளும் ஒன்றாகும்போது கிராமமும் அதனைத் தாங்கி நின்ற சமூகமும் நலிந்து சிதைந்து போகின்றன என்று தோன்றுகிறது.

உழவர்கள், கடைக்காரர்கள், முதியோர், காபிக் கடை அரட்டைகள், இரவில் வெளியேற்றப்பட்ட பூனைகள், காதலில் விழுந்த இளையோர், கிறிஸ்துமஸ் நடனம் - இவையெல்லாம் கிளக் சொல்லும் கதைகள்.

இக்கவிதையில் லூயிஸ் கிளக் குரல்களின் ஒத்திசைவைத் தருகிறார். இந்தக் குரல்களின் பாடல் நாம் ஏற்க மறுக்கும் அதே மகிழ்ச்சிக்கான மனிதத் தேடலை நடித்துக் காட்டுகிறது, ஆழ்ந்த சிந்தனைக்கு உட்படுத்துகிறது. நம்மைவிட்டு நீங்காத அமைதியின்மை இதன் விளைவு.

இவ்வுலகம் சலித்துப் போவது இயற்கை,
இவ்வளவு காலம் இறந்து போயிருந்தால்,
விண்ணகமும் உனக்குச் சலித்துப் போகலாம்
ஓரிடத்தில் உன்னால் செய்ய முடிவதைச்
செய்கிறாய், சிறிது காலத்தில் அவ்விடத்தைத் தீர்த்துவிட்ட பிறகு
உன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று ஏங்குகிறாய்

A Village Life வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து டேனா லெவின் லூயிஸ் கிளக்கை நேர்காணல் செய்தார். அதன் ஒரு பகுதி:

டேனா லெவின்: A Village Lifelife என்ற உங்கள் நூலைப் பற்றிக் கேள்வி கேட்பதிலிருந்து தொடங்க விரும்பினேன். காலம் இந்நூலில் வெளியை உணர்கிறது. ஒரே நேரத்தில் நூலின் பலதரப்பட்ட குரல்களும் பேசுவது போல, நிகழ்வதுபோல இருக்கிறது.

லூயிஸ் கிளக்: இந்தக் கவிதைகளில் விநோதமான ஏதோ ஒன்று இருக்கிறது. என்னால் அதை என்ன என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. அது வேண்டுமென்றே கொண்டு வந்த தன்மை இல்லை. ஆனால் அது ஒரே நேரத்தில் நடப்பது (simultaneity) பற்றியது. ‘Averno’ உள்ளத்தின் நிலக் காட்சி போல, நிலவெளிபோல இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

அதில் வாழ்க்கையின் நிலைகள் தனித்தனிப் பகுதிகளில் காட்டப்படுகின்றன. ஆனால் கதைக் கூறுகளும், பார்க்கும் கோணங்களும்கூட பகுதிக்குப் பகுதி மாறிக்கொண்டே இருக்கின்றன. எனினும் காட்சிப்படுத்தப்படுவது வாழ்க்கையின் முழுமைதான்.

உங்கள் வாழ்க்கையின் முடிவில், நீங்கள் இறந்து கொண்டிருக்கும் வேளையில், உங்கள் வாழ்க்கை முழுவதும் வெள்ளமாகத் திரும்புகிறது என்ற பயங்கரத்தை A village life சொல்கிறது என்று எனக்குத் தோன்றியது.

அப்படித்தான் நான் அந்த நூலை உணர்கிறேன்; வாழ்க்கை முழுவதும், முன்னேறிப் போவதை அல்ல; கதையாடலை அல்ல; ஒரே நேரத்து நிகழ்ச்சியை உணர்த்துகிறது. இறப்பு எனும் கருத்தியலில் சேர்ந்தே வரும் நாடகம் எதுவும் இல்லை. உலகு இழத்தலின் நாடகத்துக்கு அப்பாற்பட்டது; அது ஒரு நீண்ட பெருமகிழ்ச்சி.

டேனா லெவின்: உங்களுக்கு அந்த நூல் அழகுணர்வு பற்றி என்ன கற்றுத்தந்தது?

லூயிஸ் கிளக்: Averno - வுக்குப் பிறகு நான் ரிச்சர்ட் நிக்சனிடம் பேசியது நினைவுக்கு வருகிறது. நான் அப்போது எதுவும் எழுதவில்லை. எழுதாமலிருக்கும் நீண்ட காலங்கள் எனக்கு ஏற்படும். அது பற்றிய கவலை எனக்கு இல்லை. ஆனால் நான் திடீரென்று எனது அமைதி பற்றிச் சிந்திக்கத் தொடங்குகிறேன்; எனக்கு அச்சம் ஏற்படுகிறது.

அப்படிப்பட்ட நேரத்தில் தான் ரிச்சர்ட், “உங்களது அடுத்த நூல் முழுவதும் வித்தியாசமாக இருக்க வேண்டும், மண்ணில் விளையாடுவதுபோல இருக்க வேண்டும்,” என்றார். அதுதான் நான் உணர்ந்து கொண்டிருந்தது. சோகமும், அனைத்தையும் கடக்கப் போதுமான செங்குத்துக் கோட்டில் நான் என்னுடைய கவிதைகளில் செய்யக் கூடியவற்றைச் செய்து விட்டேன்.

என்னுடைய புதிய படைப்பு பரந்த காட்சியாக (panoramic) அவற்றை மேற்தளத்துடன் சேர்ப்பது தற்செயல் நிகழ்வாக இருக்க வேண்டும். எத்தகைய வெற்றி! நீண்ட கவிதையை எழுதுவது சுவையானது தான். இக்கவிதைகளை எழுதும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி இருந்தது. அவ்வுலகில் இருப்பது எனக்கு விருப்பம். அங்கே எந்த முயற்சியுமில்லாமல் நான் போக முடியும்.

டேனா லெவின்: உங்களுடைய நூல்கள் ஒவ்வொன்றிலும் அடையாளம் கண்டுகொள்ளப்படாமல் உங்களுடைய குரல் இருக்கும்; ஆனால் ஒரு தொகுப்பிலிருந்து இன்னொன்றுக்குப் போகும்போது சில மாறுதல்கள் இருக்கும். அத்தகைய மாறுதல்கள் உங்களுடைய நினைவு நிலையில் ஏற்படும் நோக்கமா?

லூயிஸ் கிளக்: என்னுடைய நினைவு நிலையில் எனக்குள்ள ஒரே நோக்கம் ஆச்சரியப்பட விரும்புவது. என்னைப் போன்றே நான் ஒலிப்பது ஒரு சாபம்போலத் தோன்றுகிறது.

டேனா லெவின்: எனக்கு வாலேஸ் ஷான் கூறுவது நினைவுக்கு வருகிறது. “இந்த ‘நான்’ என்பதில் ஒரு முட்டாள்தனம் இருப்பதாக எண்ணுகிறேன், ஒவ்வொரு காலையிலும் விழித்தெழும்போது அதே ஆளாக இருப்பது.”

லூயிஸ் கிளக்: ஆமாம். அதேதான் குறை. ஆனால் அதுவே ஒரு புண்ணியமாக இருந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்.

இனி, லூயிஸ் கிளக்கின் இரண்டு சிறு கவிதைகளைப் படிக்க எடுத்துக் கொள்வோம். அவற்றில் நம்பிக்கையின் கீற்று எப்படி வலுப்பெறுகிறது என்று காணலாம். கடைசிக் கவிதை புலிட்சர் பரிசு பெற்ற The wild Iris.

அனைத்து ஆத்துமாக்களும்
இப்போதும்கூட இந்த நிலத்தின் காட்சி திரண்டு கொண்டிருக்கிறது
மலைகள் இருளுகின்றன;
ஒழுங்கற்ற வடிவ நிலவு எழும் நேரம்
வயல்கள் சுத்தமாக வழிக்கப்பட்டு
கதிர்க்கட்டுகள் பக்குவமாய்க் கட்டப்பட்டு, சாலையோரம்
ஐவிதழ் மஞ்சள் பூக்கள் மத்தியில் அடைந்து வைக்கப்பட்டிருக்க
காளைகள் தம் நீலநுகத்தடியில் தூங்குகின்றன.
இது அறுவடையின் அல்லது பஞ்சத்தின் தரிசு.
மாலையில் கூலி வாங்குவதைப்போல
கைகளை நீட்டி சன்னல் வழியாய்
இல்லத்துப் பெண் எட்டிப்பார்க்க
விதைகள், தனித்துவமாய், பொன்னிறத்தில் இங்கே வா,
இங்கே வா, சின்னதே என்றழைக்க
ஆன்மா மரத்திலிருந்து நகர்ந்து வருகிறது.

ஒரு விவசாயியின் பணிமுடிந்ததைப் பட்டியல் இடுவதுபோலத் தோன்றும் இப்பாடல் அதன் தலைப்பைக் கொண்டே புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஹாலோவின் என்பது கிறிஸ்துவ நாடுகளில், அல்லது கிறிஸ்துவ மக்களால் கொண்டாடப்படுகிற பண்டிகை.

எல்லாப் புனிதர்களுக்கும் எடுக்கப்படும் விழாவாயினும் எல்லா ஆன்மாக்களுக்குமான விழாவும் இதில் சேர்ந்துகொள்கிறது. நமது நாட்டில் கல்லறைத் திருவிழாவென்று அழைக்கப்படுகிறது.

நிலம் தரிசாகி விட்டது. அறுவடை முடிந்ததால் மட்டுமல்ல; விளை நிலம் முழுவதுமாய் நலிந்து அடைந்து போயிற்று போலும். தாமஸ் கிரேயின் கல்லறைத்தோட்டக் கையறுநிலைப் பாடலை முதற்பகுதி நினைவூட்டலாம். அதனைவிட சோகமான பின்புலம் இங்கே காட்சிப்படுத்தப் படுகிறது.

இரண்டாவது பகுதியில் துயரமிக்க பெண் ஏக்கத்துடன் கையை நீட்டி அழைக்கிறாள். யாரை? மரித்த தனது குழந்தையையா? என்ன பயன்? இறந்த உயிர் மீளுமா? கிறிஸ்துவ நம்பிக்கை, ஆன்மா மீண்டும் உயிர் பெறும் என்பது. அதுதான் மரத்திலிருந்து ஊர்ந்துவரும் ஆன்மாவோ? மீண்டும் முதல்பகுதிக்கு வருவோம். கட்டாகக் கட்டப்பட்ட கதிர்கள் முடிவின் அடையாளமா?

மஞ்சள் நிற மலர்களுக்கு இடையே ஏன் கிடக்கின்றன. மூலப் பாடலில் அந்த மலர்கள் cinquefoil என்று இருக்கிறது. இந்த மலர்கள் பலவண்ணங்களில் சாலையோரம் காணப்படும்.

அவை நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் குறியீடுகள். அதேபோல இரண்டாம் பகுதியில் வரும் விதைகள் -தங்கநிற விதைகள் - பிறப்பின் அடையாளங்கள். அந்த ஜன்னல் என்ன படிமம்? கவிதை பல அடுக்குகளில் பல பொருள்களைத் தரும். உண்மையான சரியான பொருள் தள்ளிப்போகிறது. Deferred, postponed.

காட்டு ஐரிஸ் மலர்
எனது துன்பத்தின் இறுதியில்
ஒரு கதவு இருந்தது.
நீங்கள் முழுவதுமாகக் கேளுங்கள்:
நீங்கள் சாவு என்று அழைப்பதை நான் நினைத்துப் பார்ப்பதை
மேலே ஓசைகள், பைன் மரத்தில் கிளைகளின் நகர்வுகள்
பிறகு ஒன்றுமில்லை, மெலிந்த கதிரவன்
காய்ந்த மேற்பரப்பில் சிமிட்டிற்று.
உயிர் பிழைப்பது பயங்கரமானது
நினைவுநிலை இருண்ட நிலத்தில்
புதையுண்டிருக்கும்போது
பிறகு எல்லாம் முடிந்தது: நீங்கள் அச்சப்படுவது
ஆன்மாவாக இருந்து பேச முடியுமானால்,
சடக்கென்று முடிந்து விரைத்த நிலம்
சிறிது வளைய
நான் பறவைகளாகக் கருதியவை
தாழ்ந்த புதர்களில் தாவிச் சென்றன
அந்த உலகிலிருந்து வந்த பயணத்தை
நினைவுபடுத்த முடியாத உங்களுக்கு,
நான் மீண்டும் பேச முடியும் என்று சொல்கிறேன்:
மறதி உலகிலிருந்து வருவதெல்லாம்
ஒரு குரலைப் பெற வருகிறது.
எனது வாழ்க்கையின் மையத்திலிருந்து
பெரிய ஊற்றொன்று பிறந்தது
நீலக் கடல்நீரில்
கருநீல நிழல்கள்.

இப்பாடல் ஆங்கிலத்தில் 23 வரிகளே கொண்டது. வாழ்தல், இறத்தல், மீண்டும் பிறத்தலுக்கான பொருளென்ன என்று கதை சொல்லி விவரிக்கிறார். அவை மலரைப் போல எண்ணற்ற தடவைகள் சுழற்சி பெறுகின்றன. அந்தத்துன்பத்தின் முடிவில் ஒரு கதவு இருக்கிறது.

பாதையின் முடிவில் ஒளி இருக்கிறது. இம்மலருக்கு உயிரோடு புதைக்கப்பட்டு, குரலின்றி வாழ்வது, மீண்டும் குரலைப் பெறுவது என்னவென்று தெரியும்... இக்கவிதை மலரின் வாழ்க்கையை மலரே சொல்வதுபோலத் தோன்றுகிறது. ஆனால் அது மனிதத்தோடும் ஆன்மாவோடும் தொடர்புடையது. அது மனித உயிரின் மறுபிறப்பைக் குறிக்கலாம். அறிவுசார் சிந்தனைகளும் உணர்வுகளூம் மீண்டும் உயிர்பெற்றுப் பிறப்பதைக் காட்சிப்படுத்தலாம்.

கவிதையின் தலைப்பு The Wild Iris என்பது. ஐரிஸ் என்ற மலர்ச்செடி பலவண்ணப் பூக்களைப் பூக்கும். எனவேதான் வானவில் என்ற பொருளுடைய ஐரிஸ் என்று பெயர் தரப்பட்டிருக்கிறது. சுயமகரந்தச் சேர்க்கை வழியாகவும் இனப்பெருக்கம் செய்யும் மொட்டவிழ்ந்து மலர்ந்து விழுந்து மடிந்து மீண்டும் உயிர்பெறும். இந்தக் கவிதையில் பேசுவது ஐரிஸ் மலராகவே இருக்கலாம்.

அல்லது கவிஞராகவும் இருக்கலாம். பேசுபவர் முதல் வரிகளில் ஒரு கூற்றினை முன்வைக்கிறார். இருளையும் ஒளியையும் குறிப்பிட்டுவிட்டு, கதவை முன்னிலைப் படுத்துகிறார். கதவு நம்பிக்கை, மகிழ்ச்சி, அமைதி ஆகியவற்றின் குறியீடு. சாவு பற்றி கேட்பவருக்குத்தெரியும். ஆனால் அவர்களது கண்ணோட்டத்தில் போல அது இருப்பதில்லை.

இப்போது கவிதை உருவக உலகிலிருந்து இயற்கை உலகிற்குப் போகிறது. மேலே ஓசைகள், மரக்கிளை நகர்வுகள், மெலிந்த கதிரவன்... இறுதியில் ஒன்றுமில்லை. அது சாவைக் குறிக்கிறதா. அல்லது பேசுபவரின் மனத்தின் வெறுமையையா? இனி உயிர் வாழ்வதும் பிழைப்பதும் பயங்கரம் தான், அதுவும் புதையுண்டு கிடக்கும்போது. குரலில்லைதான்.

ஆனால் மலர் மண்ணை வளைத்து, தள்ளிக் கொண்டு வெளியில் வருகிறது. மலர் மேலே கேட்ட குரல்கள் பறவையினுடையவை. பறவை மனிதனின் ஆன்மாவை, விடுதலையை, அமைதியைக் குறிக்கும் குறியீடு. எனவே கவிதை சாவின் கதையைச் சொன்னாலும் இருளிலிருந்து (சாவிலிருந்து) ஒளிக்கு (வாழ்வுக்கு) வந்த பயணம் கேட்பவருக்கு நினைவில் இல்லாவிட்டாலும் பேசுபவருக்குத் தெரியும். அந்த மறதி உலகம் நிரந்தரமானது இல்லை.

மீண்டும் உயிர்பெறுவது என்ன என்று பேசுபவருக்குத் தெரியும். நீர்ச்சுனை அவர்கள் வாழ்க்கையின் மையத்­திலிருந்து வருகிறது. நீலக்கடல் நம்பிக்கையின் சின்னம். நிழல்? மலர் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்பாடல் நம்பிக்கையின் கீதம்.

ஆங்கில இலக்கியத்தில் இசைப்பாடல்கள் பலவும் புலம்பலையும், இரங்கலையும், கொடூரமான நீதியற்ற மரணங்களையும் சொல்ல மொழியைத் தேடுகின்றன. கறுப்பர் வாழ்க்கை அவலங்களையும், பருவநிலை மாற்றப் பேரழிவுகளையும் இன்றைய அமெரிக்க இலக்கியம் இரங்கற்பாக்களில் சொல்கின்றது. கிளக்கின் கவிதை மரபு சார்ந்த கையறுநிலைப் பாடல் இல்லை.

ஆனால் உலகம் உடைந்து போவதை - சிதறிப் போவதைப் பயங்கரத் தொடுவானத்தில் தொட்டுக் காட்டுகிறது. அவெர்னோ போன்ற கவிதைகளில் புதிய தொடக்கத்தில் நம்பிக்கையைத் தொட்டாலும், அழிவில்தான் கவிஞர் மீண்டும் கற்றுக்கொள்ள விதிக்கப்படுகிறார் என்ற உட்கரு பரவலாக இருக்கிறது.

ஆனால் கிளக்கின் இறுதி நோக்கு நம்பிக்கையின்மையோ, வெறுமையோ இல்லை. ஒரு திறனாய்வாளர் குறிப்பிடுவது போல, “வரவிருக்கும் துயரம் தெரிந்திருந்தாலும் நம்பிக்கை உணர்வோடு தொடங்குவதன் மூலம், இறுதி முடிவு என்னவென்று தெரிந்திருந்தாலும் ஏதோ ஒன்று தொடர்கிறது, அதில் வியப்படைய விரும்புகிறோம் என்பதை கிளக்கின் கவிதை சான்று பகர்கிறது.”

- ச.வின்சென்ட்