கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தமிழில் நாவல்கள் உருவாகத் தொடங்கிய காலத்திலிருந்தே இல்லற வாழ்வின் சிக்கல்கள் ஒரு பேசுபொருளாக மாறிவிட்டது. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து கொண்டதையும் சிக்கலில் சிக்கிக் கொண்டதையும் பிறகு மீண்டு வந்து இணைந்து வாழ்வாங்கு வாழ்ந்த கதையோடுதான் தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் அமைந்திருக்கிறது. இல்லற வாழ்க்கையைக் களமாகக் கொண்ட பல நாவல்கள், சிக்கல்கள், துன்பங்கள், இறுதியில் இணைந்து நிம்மதியை நாடுதல் என்னும் மூன்று புள்ளிகளுக்கு இடையிலான உலகத்திற்குள்ளேயே உலவி வந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலம் வரைக்கும் இதுதான் நிலைமை. புத்தாயிரத்தாண்டில் நிலைமை சற்றே மாறத் தொடங்கியது.

பெருமாள் முருகன் எழுதிய கங்கணம் என்னும் நாவல் 2007ஆம் ஆண்டில் வெளிவந்தது. விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த பள்ளிப்படிப்பு மட்டுமே படித்துமுடித்த இளைஞனொருவனுக்கு ஆண்டுக்கணக்கில் திருமண வாய்ப்புகள் தள்ளித்தள்ளிப் போகும் தருணங்களை அந்த நாவல் அவலச்சுவையுடன் காட்சிப்படுத்தியிருந்தது. திருமணம் என்னும் குடும்ப நிகழ்ச்சி தமிழ்ச் சமூகத்தில் திடீரென சிக்கல் நிறைந்ததாகவும் எளிதில் தீர்மானிக்க முடியாத ஒன்றாகவும் மாறிவிட்டதை உணர்த்தும் முதல் படைப்பாக அது விளங்கியது. 2018ஆம் ஆண்டில் வெளிவந்த எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி என்னும் நாவல் திருமணம் புரிந்து கொண்ட தம்பதியினர் சேர்ந்து வாழ முடியாதபடி எதிர்கொள்ளும் நெருக்கடிகளையே களமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு மெல்ல மெல்ல ஏவுகணைக்கூடமாக மாறிவிட்ட அவலத்தையும் இனிய இல்லறத்துக்கு வழியில்லாத வகையில் சமூக அமைப்பில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களின் சுவட்டையும் அடையாளப்படுத்தும் படைப்பாக அது விளங்கியது.

கருத்தொருமித்து காதலோடு வாழ்வது என்பது இன்றைய நவீன சமூக அமைப்பில் மிகப் பெரிய சவாலாக மாறிவிட்டது. கருத்தொருமித்தவர்களிடையில் காதல் இல்லை. அரும்பும் காதலும் அதிக காலம் நிலைத்திருப்பதில்லை.காதல் இருப்பவர்களிடையில் கருத்தொற்றுமை உருவாக வழியில்லாமல் இருக்கிறது. இன்றைய இளந்தலைமுறையினர் தினந்தினமும் சந்திக்கும் மிகப் பெரிய எரியும் பிரச்சினையாக இது மாறியுள்ளது. தனித்தனி தீவாக ஒவ்வொருவரும் மாறிவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை என்னும் அச்சம் எல்லோரிடமும் குடியிருக்கிறது. அந்த அச்சத்தின் விளைவாகவே இந்தப் பிரச்சினையை முன்வைத்து நாவல்களை நாவலாசிரியர்கள் எழுதுகிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

illaravasigalஇப்படிப்பட்ட பிரச்சினை தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் மட்டுமே நிலவுவதாக ஒருசிலருக்குத் தோன்றலாம்.இன்னும் சிலர் இவையனைத்தும் நம் நாட்டில் நவீன கல்வியைப் பெற்று வேலை வாய்ப்பில் வெற்றி பெற்ற புதிய தலைமுறையினரின் பிரச்சினை என்றும் நினைக்கக்கூடும். அதில் துளியும் உண்மையில்லை. இன்றைய தேதியில் இல்லற வாழ்க்கை என்பது உலகளாவிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. எது இனிய இல்லறம் என்பது வகுத்துக் கொள்வதற்கு இயலாத ஒன்றாக உள்ளது.இல்லறம் என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் அதைச் சுமையென கருதும் மனநிலை எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது. ‘அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பதில்லாயின் நன்று’ என இன்று ஒருவரிடமும் சொல்ல முடியாது.

எது இனிய இல்லறம் என்று வரையறுக்கமுடியாத தடுமாற்றத்தை லியோ தல்ஸ்தோய் எழுதிய அன்னா கரினினா நாவலிலேயே நாம் காணமுடியும். கூடுதலான வயது வித்தியாசம் கொண்ட தன் கணவனோடும் அன்னாவால் வாழ முடியவில்லை. தன் மனம் கவர்ந்த காதலனோடும் அன்னாவால் வாழ முடியவில்லை. எது இனிய இல்லறம் என்பதை அவளால் தீர்மானிக்கமுடியவில்லை. எப்போதும் அவள் இரு விளிம்புகளுக்கிடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறாள். அந்த ஊசலாட்டமே அவள் உயிரைப் பலி வாங்கிவிடுகிறது. தமிழ்ச்சூழலில் மொழிபெயர்ப்புக்கென ஒரு மதிப்பும் பெருமையும் நிலவிய காலகட்டத்திலேயே இந்த நாவல் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு விட்டது.

இடையில் ஏற்பட்ட அரைநூற்றாண்டு கால தேக்கத்துக்குப் பிறகு மொழிபெயர்ப்புச் சூழலில் மீண்டுமொரு எழுச்சி உருவாகியிருக்கிறது. துருக்கி, அரபி, பிரெஞ்சு என பல மொழிகளிலிருந்தும் நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தபடி இருக்கின்றன. சமகாலத்திய நாவல்களின் பேசுபொருள் என்ன என்பதை ஓரளவுக்கேனும் இன்று நம்மால் ஊகித்துக் கொள்ள முடிகிறது. பிரெஞ்சு மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிரெஞ்சு எழுத்தாளரான (வட ஆப்பிரிக்காவில் அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்) தஹர் பென் ஜெலூனின் ’இல்லறவாசிகள்’ என்னும் நாவலை, தொடர்ச்சியாக பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வெங்கட சுப்புராய நாயகர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இந்த நாவலும் அன்னா கரினினாவைப் போலவே எது இனிய இல்லறம் என முடிவெடுக்க முடியாத தடுமாற்றத்தையே களமாகக் கொண்டிருக்கிறது. தல்ஸ்தோய் தலைமுறையிலிருந்து தஹர் பென் ஜெலூன் வரைக்கும் இந்தத் தடுமாற்றத்தை வெவ்வேறு காலகட்டப் பின்னணியோடு இலக்கியப் படைப்புகளாக முன்வைத்த எழுத்தாளர்கள் பலர்.

அன்னா கரினினா நாவலில் எழுத்தாளர் தல்ஸ்தோய் எந்த இடத்திலும் பாத்திரத்தின் மீது ஒரு சந்தேகத்தை உருவாக்கவில்லை. விருப்பத்தைச் சொல்லும்போதும் சரி, எரிச்சலையும் கோபத்தையும் வெளிப்படுத்தும்போதும் சரி, சந்தேகத்துக்கு இடமில்லாத வகையிலேயே நம்மை உணரச் செய்கிறார். ஆனால் தஹர் பென் ஜெலூன் தன் நாவலில் அப்படி ஒரு சாதகமான நிலைபாட்டை எடுக்கவில்லை. பாத்திரங்களின் உரையாடல்களையும் எண்ணங்களையும் தொகுத்து முன்வைக்கும்போது, அது அவரவர் தரப்புகளென வரிசைப்படுத்திவிட்டு நிறுத்தி விடுகிறார். நீதிமன்றத்தில் சாட்சிக் கூண்டில் நிற்பவர்களின் உரைகளைப் பதிவு செய்து தொகுப்பதுபோல தொகுத்துக்கொண்டே செல்கிறார். எதையும் உண்மை என்றோ, உண்மையில்லை என்றோ வகுத்துச் சொல்லாமல் தொகுத்து முன்வைக்கும் வேலையை மட்டுமே செய்கிறார். இதனால் இருவிதமான வாக்குமூலங்களின் தொகுப்பு போன்ற தோற்றத்தை நாவல் அடைந்து விடுகிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக இணைந்து வாழ்ந்தவர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்களா, இதுதான் இல்லறமா என்னும் கேள்வியை ஒரு வாசகன் தனக்குள் கேட்டபடியே இந்த வாக்குமூலங்களின் நகல்களைப் படிக்கும் நிலைக்கு ஆளாகிறான்.

முப்பத்தெட்டு வயதுள்ள ஓவியன் ஒருவனுக்கும் இருபத்துநான்கு வயதுள்ள ஓர் இளம்பெண்ணுக்கும் திருமணம் நிகழ்கிறது. ஓவியன் மேல்தட்டைச் சேர்ந்தவன். செல்வச் செழிப்பானவன்.நகர வாழ்க்கைக்குப் பழகியவன். கலைஞன் என்னும் புகழ்வளையத்தில் இருப்பவன். அவனுடைய ஓவியங்கள் நல்ல சந்தை மதிப்பு கொண்டவை. ஆனால் அவன் மனைவியோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவள். வறுமை இல்லை என்றபோதும் அடித்தட்டைச் சேர்ந்தவள். கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல இடங்களில் பல குடும்பங்களில் தங்கி, பலருடைய ஆதரவைப் பெற்று படிப்பில் தேறியவள். ஓவியக் கலையைப் பற்றி அவளிடம் உயர்வான எண்ணமும் இல்லை. தாழ்வான எண்ணமும் இல்லை.

ஒரு நல்ல வாழ்க்கை தனக்குக் கிடைக்கப்போகிறது என்கிற எண்ணமே அவளை அந்தத் திருமணத்துக்கு உடன்படச் செய்கிறது. கள்ளமற்ற ஓர் இளம்பெண்ணின் துணை தனக்குக் கிடைக்கப்போகிறது என்கிற எண்ணமே அவனை அந்தத் திருமணத்துக்கு உடன்படச் செய்கிறது. காலம் செல்லச் செல்ல இருவருடைய கனவுகளும் நொறுங்கி விடுகின்றன. ஒருவரைக் கண்டால் இன்னொருவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. நகர வாழ்வில் மிகவும் இயல்பாக நிகழும் பிறழ் உறவுகளை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் அவர்களிடையிலான புரிதலில் எந்த இணக்கமும் உருவாகவில்லை. இருபதாண்டு காலம் இணைந்து வாழ்ந்தாலும் அவர்கள் வாழ்வில் இனிமை இல்லை.

இப்படிப்பட்ட சூழலில் அவன் பக்கவாத நோயால் படுத்த படுக்கையாகி விடுகிறான்.செயலிழந்த பகுதிகள் இடைவிடாத மருத்துவத்தாலும் உதவியாளர்களின் கவனிப்பாலும் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படத் தொடங்குகின்றன.விரல்களையும் கையையும் அசைக்கும் நிலைக்கு வந்ததும் மீண்டும் ஓவியம் தீட்டுகிறான். வீட்டுக்கே செல்லாமல் ஓவியக்கூடத்திலேயே தங்கி விடுகிறான். அவன் மீது சந்தேகம் கொள்ளும் அவன் மனைவி அடிக்கடி கூடத்துக்கு வந்து சோதனை செய்துவிட்டுச் செல்கிறாள்.அவனைச் சுற்றியிருக்கும் அனைவரையும் அவள் சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறாள்.

இப்படிப்பட்ட சூழலில் ஓவியன் தன் மனைவியை விவாகரத்து செய்ய விரும்புகிறான்.அதற்கான காரணங்களையும் தன்னுடைய முடிவுக்கான பின்னணியையும் விரிவாகப் பதிவு செய்து வழக்கறிஞருக்கு அனுப்பி வைக்க நினைக்கிறான்.ஆனால் தன் நேர்க்கூற்றாக பதிவு செய்யாமல் யாரோ ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் வழக்கின் கோணத்தையும் முன்வைப்பதுபோல முன்வைக்கிறான். மேலோட்டமாக படிப்பவர்களுக்கு யாரோ ஒருவருடைய கதை என்ற எண்ணமே முதலில் எழும். அந்த எண்ணத்துக்கு வலுவூட்டும் வகையிலேயே தன் மொத்த ஆவணத்துக்கும் ’பெண்களை அதிகமாக நேசித்தவன்’என்னும் தலைப்பைச் சூட்டியிருக்கிறான்.

ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் தன் மனைவியை விவாகரத்து செய்வதற்கு முப்பத்தெட்டு காரணங்களை வரிசைப்படுத்தி எழுதி வைத்திருக்கிறான் அவன். அந்தப் பட்டியலைப் படிப்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. குற்றம் சுமத்தும் எண்ணம் ஒரு நெஞ்சில் புகுந்ததுமே, அதன் பார்வையில் படும் ஒவ்வொன்றும் எப்படி குற்றமாக மாறிப் போகிறது என்பதை உணர முடிகிறது. காதல் என்பது ஒரு முடிவான கருத்தோ, ஒரு விருப்பமோ அல்ல என்றும் அது எப்படி வருமோ அதேபோல அது நம்மைவிட்டு விலகியும் சென்றுவிடும் என்றும் தனக்கு உகந்த வகையில் ஒரு கருத்தை உருவாக்கி அனைவரையும் நம்பவைக்க முயற்சி செய்கிறான்.

ஓவியனின் திட்டத்தை முதலில் மறைமுகமாகவும் பிறகு நேரிடையாகவும் அறிந்துகொள்ளும் அவன் மனைவிக்கும் அவனோடு வாழ விருப்பமில்லை. அவனுடைய பிழையான உறவுகளிலிருந்து அவனை விலக்கியெடுத்து எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட முடியும் என்றுதான் அவள் முதலில் முயற்சி செய்கிறாள். குழந்தைப் பருவத்திலிருந்தே பலவித துன்பங்களையும் தடைகளையும் தன் மன உறுதியால் கடந்து வந்தவளுக்கு, திருமண உறவில் ஏற்பட்டிருக்கும் தடையையும் கடந்து எல்லாவற்றையும் சரிப்படுத்திவிட முடியும் என்னும் எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் எண்ணற்ற தந்திரங்கள் வழியாக தனக்கு விருப்பமான விதத்திலேயே வாழ விரும்பும் அவனுடைய சுயநலத்தை அவள் வெகுவிரைவில் புரிந்து கொள்கிறாள். அவள் முயற்சிகள் பயனின்றி வீணாகின்றன.அதனால் வெகுண்டெழுந்து அவனை சொற்களால் வதைக்கிறாள். அவனுடைய முகத்திரையைக் கிழித்து அம்பலப்படுத்துகிறாள். எண்ணற்ற நெருக்கடிகளைக் கொடுக்கிறாள். அமைதியைக் குலைக்கிறாள். அவனுக்குத் தெரியாமல் அவன் எழுதி வைத்திருக்கும் ஆவணத்தை எடுத்து வந்து படிக்கிறாள். அவனுடைய உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டதுபோல, தன் வாக்குமூலத்தையும் தனியாக எழுதி வைக்கிறாள்.

அவனைப்போல சுயசரிதை பாவனை ஏதுமின்றி, நேர்க்கூற்றாகவே அனைத்தையும் எழுதி வைக்கிறாள் அவள். ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் கணவனிடமிருந்து ஏன் விவாகரத்து வேண்டும் என்பதற்கு அவளும் முப்பதுக்கும் மேற்பட்ட காரணங்களை தனியாகப் பட்டியலிடுகிறாள். சட்டத்தின் உதவியோடு தன்னை ஒரு ஈயை விரட்டி அப்புறப்படுத்துவதுபோல அப்புறப்படுத்திவிட முடியாது என்பதை அவனுக்கு உணர்த்தும் வகையில் ஒரு பழங்குடியினப் பெண்ணுக்கே உரிய உறுதியோடு அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பல மடங்கு இழப்பீட்டுத் தொகையைக் கேட்கிறாள். தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு அந்தத் தொகை தேவைப்படும் என்று அவள் நினைக்கிறாள். அவன் அந்தத் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டதும் அவள் சற்றே யோசனையில் மூழ்கி விடுகிறாள்.

ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகு, விவாகரத்து விஷயத்தை கைவிட்டு, அவனோடு சேர்ந்து இருக்கும் முடிவைப் பற்றி யோசிக்கிறாள். அவனுக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்து அவனை எப்போதும் தன் கண்காணிப்பு வளையத்திலேயே வைத்துக் கொள்ள நினைக்கிறாள். சேர்ந்து வாழ்வதையே ஒரு புதுவிதமான தண்டனையாக மாற்றி அவனுக்கு அளிக்க வேண்டும் என அவள் நினைக்கிறாள். இழப்பீடு கொடுத்துவிட்டு ஒரு உறவுச்சிக்கலை நேர்செய்து விடலாம் என்னும் அவனுடைய கணக்கை தப்புக்கணக்காக மாற்ற நினைக்கிறாள்.

இப்படிப்பட்ட இருவித வாக்குமூலங்கள் மட்டுமே இந்த நாவலின் உள்ளடக்கமாக இருக்கிறது. இந்த வாக்குமூலங்களைப் படிக்கும் ஒவ்வொரு வாசகனுக்கும் அவற்றை மதிப்பிட்டு தீர்ப்புரைக்கும் பொறுப்பு தானாகவே ஏற்பட்டு விடுகிறது. கசப்பான இல்லறத்தை இனிய இல்லறமாக மாற்றக்கூடிய ரகசியத்தை அல்லது வழிமுறையை வாசகனே கண்டுரைக்க வேண்டும். சேர்ந்து வாழ்வதையே ஒரு தண்டனையாக வழங்க இருப்பதாக அவள் தன் வாக்குமூலத்தில் பதிவு செய்த பிறகு விவாகரத்து என்னும் பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது. ஆயினும் யார் பக்கம் நியாயமிருக்கிறது என்னும் கேள்விக்கு வாசகன் பதிலைத் தேட வேண்டியிருக்கிறது.

ஒரு வாசகனாக, இரு வாக்குமூலங்களையும் ஒன்றுக்கு இரண்டு முறையாகப் படித்து விட்டேன். உடனடியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஆனால், இங்கொரு காட்சியையும் அங்கொரு காட்சியையும் இணைத்தும் பிரித்தும் அலசிக் கொண்டு செல்லும் போக்கில் என்னால் சில உண்மைகளைக் கண்டுணர முடிந்தது. அதை முன்வைத்து இனிய இல்லறம் பற்றி ஜெலூன் வரையறுக்க நினைக்கும் புள்ளி வரைக்கும் செல்ல முடிந்தது.

இரு வாக்குமூலங்களும் தொடங்கும் முன்பாக நாவலில் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கிறது. அக்காட்சியில் ஒருவர் தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து மொய்க்கிற ஒரு ஈயை அருவருப்புடன் விரட்டியடிக்கிறார். மனத்தில் காதலில்லாத கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் வெறுத்து உதறிவிட முயற்சி செய்வதையே அக்காட்சியின் உட்பொருளாக எடுத்துக் கொள்ளலாம். வாக்குமூலத்தை எழுதுவதற்கு முன்னால் அதை ஒரு முன்னோட்டமாகவும் எடுத்துக் கொள்ளலாம். அந்த வெறுப்பில் உண்மை வெளிப்படுகிறது. ஆனால் அந்த உண்மை, அதைத் தொடர்ந்து கூறப்பட்ட வாக்குமூலத்தில் இல்லை.அதில் இருப்பதெல்லாம் அரைகுறை உண்மைகள்.அல்லது திரிக்கப்பட்ட உண்மைகள்.

ஓவியன் தன் வாக்குமூலத்தை ஒரு புனைகதையைப்போல எழுதி வைத்திருப்பதே ஒரு தப்பித்தல் முயற்சிதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் தன் வாக்குமூலத்துக்கு வைத்திருக்கும் தலைப்பே, அவன் கூற்றில் உண்மையில்லை என்பதற்கு ஒரு பெரிய சாட்சியாகும். THE MAN WHO LOVED WOMEN என்னும் பிரெஞ்சுத் திரைப்படத்தின் தலைப்பையே அந்த ஓவியன் தன் வாக்குமூலத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறான். அத்தலைப்பு, அந்த ஓவியன் தன்னை ஏதோ ஒரு வகையில் அத்திரைப்படத்தின் கதாநாயகனுக்கு நிகரானவனாக நினைத்துக் கொள்கிறான் என்று ஊகிக்க இடமளிக்கிறது. அது பிரெஞ்சு மொழியின் புது அலை இயக்குநரான த்ரூஃபோ இயக்கிய படம். எவ்விதமான குடும்பப் பொறுப்பையோ, சமூகப் பொறுப்பையோ ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத ஒருவன் அவன். கண்ணில் தென்படும் பெண்கள் பின்னால் தொடர்ந்து சென்று அவர்களிடம் பேசி, அவர்களை தன் வலையில் விழவைத்து, வாய்ப்பு கிடைத்தால் அவளோடு ஒரு பொழுதை இன்பமாகக் கழித்துவிட்டு திரும்பிவிடும் தன்மையுள்ளவன் அவன்.

அவனைப் பொறுத்தவரையில் எந்த உறவுக்கும் பொருளில்லை. எந்த உறவுக்கும் அவன் கட்டுப்பட்டவனல்லன். எந்த உறவிலும் அவன் நம்பிக்கை கொண்டவனும் அல்லன். பெண்களை நேசிப்பதையும் அவர்கள் பின்னால் சுற்றுவதையும் ஒரு பொழுதுபோக்காகக் கொண்டவன் அவன். அவனை ஒரு முன்மாதிரியாக நினைத்துக் கொள்பவனாக அந்த ஓவியன் இருக்கக்கூடும் என்பதையே அந்தத் தலைப்பு உணர்த்துகிறது. அந்த வாக்குமூலத்தில் அவனே எடுத்துரைக்கிற பல பெண் நட்புகளும் உறவுகளும் அதையே உறுதிப்படுத்துகிறது. அவன் தன்னையறியாமலேயே தன் வாக்குமூலத்துக்குச் சூட்டிய தலைப்பு அவனுடைய ஆழ்மன விருப்பத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. எல்லாப் பெண்களிடமிருந்தும் தொடர்ச்சியாக தப்பித்து வந்தவனால், திருமணம் என்னும் உறவின் காரணமாக அந்த நாட்டுப்புறப் பெண்ணிடமிருந்து தப்பிக்க வழி தெரியவில்லை. தப்பிக்கும் தந்திரமாகவே அவன் அந்த விவாகரத்து கோரிக்கையைப் பயன்படுத்திக் கொள்கிறான் என்று கருத இடமிருக்கிறது.

பெண்களை அதிகமாக நேசித்தவனுக்கு ஓர் எதிர்வினை என்னும் தலைப்பில் எழுதிவைக்கப்பட்ட அவளுடைய வாக்குமூலத்திலும் முழு உண்மை வெளிப்படுவதாகத் தோன்றவில்லை. தனக்குச் சாதகமான சிற்சில தருணங்களை மட்டுமே அவள் முன்வைக்கிறாள். ஓர் ஓவியனின் மனைவியாக வாழ்வதற்கு ஏற்ற வகையில் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள அவள் எடுத்த முயற்சிகள் பற்றி எதையும் அவள் சொல்லவில்லை. தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமாவது அவளுக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. ஓவியனுக்கு விவாகரத்து வழங்க விரும்பவில்லை என்பதைத் தெரியப்படுத்திய பிறகு எந்த அலசலுக்கும் ஆய்வுக்கும் அவசியமில்லாமல் போய்விட்டது.

கண்முன்னாலேயே ஒரு வழக்கு உருவாகித் திரண்டு வந்து தானாகவே பின்வாங்கி கரைந்து போய்விட்ட நிலையில், அந்த வாக்குமூலங்கள் மனத்தைத் தொந்தரவு செய்தபடி உள்ளன. கணவன் மனைவி உறவு ஏன் இப்படி சீர்குலைந்ததாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அவர்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துரைக்க, எது இனிய இல்லறம் என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. எது இனிய இல்லறம் என்று தெரியாமல் இருப்பதுதான் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய பிரச்சினை. அந்த உண்மையைத்தான் தஹர் பென் ஜெலூன் வாக்குமூலங்களின் கதை முன்வைத்திருக்கிறது. மிக முக்கியமானதொரு நாவலை பிரெஞ்சு நாவல் வெளிவந்த ஒருசில ஆண்டுகளுக்குள்ளாகவே தமிழில் மொழிபெயர்த்திருக்கும் வெங்கட சுப்புராய நாயகருக்கு தமிழ் வாசக உலகம் கடமைப்பட்டிருக்கிறது. அவருடைய தெளிவான தமிழ்நடை மொழிபெயர்ப்புக்கு அழகு சேர்ப்பதாக உள்ளது.

-  பாவண்ணன்