ரொமிலா தாப்பர், புகழ் பெற்ற வரலாற்றுப் பேராசிரியர். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு, இந்த ஆண்டுக்கான ‘க்ளுக்' விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை அயர்லாந்து வரலாற்று அறிஞர் பீட்டர் ப்ரவுனுடன் இணைந்து பெற்றுக் கொண்டார் ரொமிலா தாப்பர். நோபல் பரிசுகளில் மானுடவியல் துறைக்கு இடமில்லாததால் ‘க்ளுக்' விருதை, ‘அமெரிக்க நோபல் பரிசு' என்றே குறிப்பிடுகின்றனர். அமெரிக்கா சென்று விருதைப் பெற்றுத் திரும்பியுள்ள ரொமிலா தாப்பர் – வரலாற்றைக் கற்பித்தல், வரலாற்று ஆய்வு, பாடநூல்களை கண்காணிக்க தன்னாட்சி நிறுவனங்கள் வேண்டும் எனப் பல தளங்களில் உரையாடியது – ஒரு கொடியைப் போல சமூகத்தின் மீது அக்கறையுடன் படர்ந்து செல்கிறது. "தி இந்து' இதழுக்காக அவருடன் கல்பனா சர்மா உரையாடினார்.
தமிழில் : அ. முத்துக்கிருஷ்ணன்
2002 இல் உங்களுடைய ஓர் உரையில் நீங்கள், “நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு வருங்காலம் நோக்கி நகர்வதற்கு, கடந்த காலம் குறித்த மதிப்பீடுகள் அவசியம். கூருணர்வு, பகுப்பாய்வு மற்றும் விமர்சனத்துடன் கூடிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மதிப்பீடாக அது இருக்க வேண்டும் என்றும் கூறினீர்கள்.'' நவம்பர் 26, 2008 அன்று மும்பை மீது நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அது குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் பற்றி எழுந்த விமர்சனங்கள் – ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் இம்மாதிரியான நிகழ்வுகள் குறித்து ஊடகங்களின் பார்வை மற்றும் செய்திகளில் எவ்விதக் கருத்துச் செரிவும் இல்லாதது குறித்து தங்கள் கருத்து என்ன?
ஒரு வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். நான் மட்டுமல்ல, பலரும் இது போன்ற நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளைக் கண்டு மன வேதனை அடைகிறோம். இந்திய அடையாளம் என்பது, பெரும்பான்மை சமூகம் என்று சொல்லப்படும் ஒன்றின் அடையாளமாக சுருக்கப்பட்டு வருகிறது. இதைக் கூறினால் அது நகைமுரணாகிவிடும்.
ஏனெனில், வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் இந்த அடையாளம் சார்ந்த புரிதல்கள் விரிவடைந்துள்ளன. இதற்கு ஒரு முக்கியக் காரணம், வரலாற்றினை உருவாக்குவதற்கு அடிப்படையான தரவுகள் பெருகியிருக்கின்றன. சான்றாக, அகழ்வாய்வை எடுத்துக் கொண்டால், சூழலியல் காரணங்கள் வரலாற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் போன்று, நமக்கு கிடைத்த அடிப்படைத் தகவல்களை, பல அறிவியல் முறைகளின் துணையுடன் பல புதிய கோணங்களில் ஆராய முடிகிறது.
வரலாறு குறித்த ஆய்வறிக்கைகள் மீதான நம் அணுகுமுறைகள்கூட வெகுவாக மாறி உள்ளன. அவ்வறிக்கைகளின் ஆசிரியர்கள் குறித்த கேள்விகளும், இந்த அறிக்கை ஏன் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது, இந்த ஆய்வுக்கு ஆதரவளிப்பவர்களின் நோக்கம் என்ன எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறோம். வரலாறு குறித்த ஆழமான புரிதலைப் பெற வரிகளைக் கடந்து பார்க்க வேண்டியுள்ளது. இதன் மூலம், கடந்த காலத்தை குறித்து – சான்றுகள் அளவிலும், அது எவ்வகையில் ஆராயப்பட்டுள்ளன என்ற அளவிலும் புதிய பரிமாணத்தை அது ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றாசிரியர்கள் கடந்த காலத்தை வெளிக்கொணரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வேளையில், அது குறித்த பெரும்பான்மை வெளிப்பாடுகள் அதன் பரிணாமத்தைக் குறுக்கியே வந்துள்ளன. பெரும்பான்மைக் குறியீடுகள், கடந்த காலத்துடன் ஏற்படுத்தியுள்ள தொடர்புகள் என்பன, இந்திய சமூகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் சமூகங்களையும், பண்பாடுகளையும் ஒதுக்கியே வைக்கின்றன.
இந்த தொடர்புகள் பெரும்பாலும் அரசியல் திட்டங்களின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. கடந்த 30–40 ஆண்டுகளாக நாம் பேசியும் எழுதியும் வந்துள்ளவை, நமது கடந்த காலம் குறித்த நமது அடையாளங்கள், நாம் நம் வாழ்க்கைக்கு முக்கியம் எனக் கருதும் அளவுகோல்கள் ஆகியவை குறித்து மக்களின் பார்வையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற கேள்வியை நாம் கேட்பது அவசியமாகிறது. தீவிரமான அரசியல் நடவடிக்கைகளுக்கான நமது எதிர்வினை போதுமான அளவு இல்லையோ என நாம் கருத வேண்டியிருக்கிறது. பண்பாடு மற்றும் வரலாறு குறித்த ஊடகங்களின் சித்தரிப்புகளை, ஊடகங்களின் அரசியல் சார்புகளைக் கூட நாம் விமர்சனப்பூர்வமாக போதிய அளவு பார்க்கவில்லை. இவைதான் இன்று நாம் பொது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய கேள்விகளாக உள்ளன.
நாம் வரலாற்றை இன்னும் அகவயப்பட்டதாக மாற்றவில்லை. தன்னைச் சுற்றி நடப்பவற்றை வரலாற்றுப் பூர்வமாகக் காண்பது என்பது போன்ற பரவலான நிறுவனங்கள் இன்னும் புறவயமான ஓர் அனுபவமாகவே உள்ளது. பல தளங்களில் இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் வரலாற்றை, அவற்றின் தொடர்புகளை, இடைவெளிகளை, உறவுகளை, அதில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை எனப் பலவற்றையும் ஒன்றிணைப்பதே வரலாற்றை ஆய்வுக்கு உட்படுத்தும் நடைமுறை. நம் மனங்களில் உள்ளது ஒரு நிலையான வரலாறு. அது பெரும்பாலும் காலனிய நோக்கில் எழுதப்பட்ட வரலாறாகவே இருக்கிறது. பல்வேறு காலகட்டங்கள் மற்றும் சமூகக் குழுக்களின் பரிமாணங்களைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வரலாற்று ஆய்வாளர்கள், இதைக் கேள்விக்குள்ளாக்கவே செய்கின்றனர். ஆனால் இந்தக் கேள்விகள் ஊடகங்கள் பால் நகர்வு பெறவில்லை.
சுதந்திரத்திற்குப் பிந்தைய தலைமுறையினர் உள்பட, பல தலைமுறைகளாக இந்தியர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுக்கப்பட்ட முறையானது, வரலாற்றின் நிகழ்வுகளைக் கண்டறிய இயலாத ஊடக வெளிப்பாடுகளுக்கும் அரசியல் வெளிப்பாடுகளுக்கும் எந்த அளவுக்கு காரணமாக இருந்தது என நினைக்கிறீர்கள்?
ஆமாம். அதற்கு பெரும் பங்கு உள்ளது. வரலாற்றை எந்தக் கேள்வியும் இன்றி அப்படியே ஏற்றுக் கொள்ளும் பெரும்பான்மை மனநிலை, நமக்கு வரலாறு கற்றுக் கொடுக்கப்பட்ட முறையுடன் தொடர்புடையது. வரலாறு மட்டுமல்ல, இன்று வரையிலும் அறிவு குறித்த நம் அணுகுமுறை வளர்ச்சியற்றதாகவே உள்ளது. இங்கே அறிவு தகவல்கள் உள்ளன. அதைப் படியுங்கள்; இதை மனப்பாடம் செய்யுங்கள் என்று மாணவர்கள் மீது ஏவப்படும் கட்டளையாகவே உள்ளது.
பொதுவாக உங்களிடம் ஒரு செய்தியோ, தகவலோ வழங்கப்படுகிறது என்றால், அதற்கு அர்த்தம் அதனை நீங்கள் பல கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தால் அதனை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த வேண்டும். ஆனால் இந்த மேற்கூறிய முறைமைக்கு நம் பயிற்று முறையில் இடமில்லை. நம்முடைய பாடத்திட்டம், பயிற்று முறை எல்லாமே சில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலும் அந்த எண்கள் அடுத்த கட்ட நகர்வை முடிவு செய்யும் ஒரு தேர்வில் பெறப்படும் எண்களைச் சுற்றிய போட்டியாகவே உள்ளது. கல்வியின் பங்கு இதுவாக இருக்கக் கூடாது.
நாங்கள் 1971இல் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்று கல்வியியல் மய்யத்தை நிறுவிய பொழுது, எங்கள் முன் சில முக்கிய கோரிக்கைகள் முன்னிறுத்தப்பட்டன. பாடத்திட்டமும், படிப்புகளும் மற்ற பல்கலைக் கழகங்களில் கற்றுக் கொடுப்பதன் மறு பதிப்பாக இருக்கக் கூடாது. வரலாற்றை முன்னிறுத்துவதற்கான புதிய வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்; பல்துறை சார்ந்த வழிமுறைகளின் துணையுடன் கடந்த காலத்தை ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை, நம் பாடத் திட்டங்கள் எதிரொலிப்பதாக இருக்க வேண்டும் என கோரப்பட்டது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழத்தில் நான் பணியாற்றிய 20 ஆண்டுகள், என் வாழ்வின் அறிவு செழுமைக்கான காலமாக இருந்தது. ஏனெனில், நாங்கள் பெற்ற மாணவர்கள் குழு அப்படி. நாங்கள் வழங்கிய படிப்புகள் புதுமையாக இருந்ததால், வழிமுறைகளும் புதுமையாக இருக்கும் என நம்பி வந்து சேர்ந்தார்கள். நான் எதற்காகவாவது பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமெனில், அது அந்த மாணவர்களுக்காகத்தான் இருக்க முடியும். அந்த மாணவர்கள் தான் இன்று வரலாற்றைப் பல இடங்களில் பயிற்றுவித்தும், அவர்களே வரலாற்று ஆய்வுகளை நடத்தியும் வருகிறார்கள்.
அதை அவர்கள் செய்வதற்குக் காரணம், அந்தப் பணி புதிய அறிவார்ந்த வெளிகள் நோக்கி அழைத்துச் செல்கிறது. நாம் வாழும் சமூகம் சார்ந்து புதிய பார்வைகளையும் அது வழங்குகிறது. கடந்த காலத்தை இந்த முறையில் பார்க்கும்போது, மாணவர்களுக்கு தங்களைச் சுற்றியுள்ள உலகம் குறித்து ஆர்வம் ஏற்படுகிறது. பாடத்திற்குள்ளேயே ஆய்வுக்கு தேவையானவற்றை வைக்கும்போது, மனப்பாடம் செய்யும் பழைய நடைமுறைகள் வழக்கொழிந்து சவாலான புதிய வெளிகள் மலர்கின்றன. சம்பவங்கள், பொருட்கள், மனிதர்கள், கொள்கைகள் என இந்த சமூகத்தின் பகுதிகள் எவை, யார் இதனை உருவாக்குகிறார்கள், ஆட்சி செய்கிறார்கள் என்பன போன்ற செயல்திறம் மிக்க புதிய சாளரங்கள் திறக்கின்றன.
ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் நிகழ்கின்ற போதும், வரலாற்றைக் கற்பித்தல் சார்ந்து நிகழும் ஊசலாட்டத்தைத் தவிர்க்க என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி பதவியேற்றபொழுது நான் இதைப் பற்றி "தி இந்து' நாளிதழில் ஒரு கட்டுரை எழுதினேன். மாதிரி பாடநூல்களை உருவாக்குகின்ற என்.சி.இ.ஆர்.டி. போன்ற நிறுவனங்கள், தன்னாட்சிப் பெற்றதாக மாற்றப்பட வேண்டும். இதைப் போன்ற நிறுவனங்கள் அப்பொழுதுதான் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் நிகழும் பொழுதெல்லாம் பாடநூல்களை திருத்தி எழுதும் அவலம், ஆபத்து ஏற்படாது. இது, வரலாறு மட்டுமல்ல அரசியல், மானுடவியல், புவியியல், சமூகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறை சார்ந்தும் நிகழ்கிறது. வேத கணிதத்தைப் பொருத்தவரை கூட, நாம் ஒரு பெரும் ஆபத்தை எதிர்கொண்டோம்.
ஒவ்வொரு துறை / பாடம் சார்ந்தும் சுதந்திரமாய் இயங்கும் தன்மையுடைய நிபுணர்களைக் கொண்ட குழுக்கள் அமைத்தல் அவசியம். அவர்களுக்கு அனைத்துப் பாடநூல்கள் சார்ந்தும் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்க வேண்டும். அப்படி ஒரு வாசல் வழியே குறைந்தபட்ச அளவுகோல்களை கடந்து வரும் பாடநூல்களை மட்டுமே அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத வேண்டும். இப்படி ஒரு ஏற்பாடு இந்த கணம் வரை நடைமுறையில் இல்லை. ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பாடநூல்களின் கல்வித் தரம் வெவ்வேறாகவே உள்ளது.
நீங்கள் உங்கள் பரிந்துரைகளை அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு வழங்கியபோது என்ன எதிர்வினை இருந்தது?
முற்றிலும் எதுவும் இல்லை. சில ஆசிரியர்கள், பாடநூல்கள் இவ்வாறு மாற்றப்படுவது பயிற்றுவிப்பவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்ற அடிப்படையில் அந்தப் பரிந்துரைகளை வரவேற்றார்கள். மற்ற சிலர் இந்த யோசனை நல்லதாக இருப்பினும் நிர்வாக ரீதியாக இது சாத்தியப்படுமா என தங்கள் அய்யத்தை வெளிப்படுத்தினர். நாம் 50 ஆண்டுகளாக சந்தித்து வரும் பிரச்சனையை தெரிவித்தும் அதனை சீர் செய்யும் யோசனைகளை தெரிவித்தும் எந்த எதிர்வினையும் இல்லாத பொழுது, ஒரு சுவற்றுடன் உரையாடுவது போலவே உள்ளது.
அரசு மானிய உதவி இல்லாது இயங்கும் துணிச்சல் பலருக்கு இல்லை. மறுபுறம் பல தனியார் பதிப்பிக்கும் பாடநூல்கள் பணம் குவிக்கும் தந்திரமாக உள்ளது. அதனால் அவர்கள் இந்த தரம் சார் நடைமுறைக்கு உட்படுத்த விரும்ப மாட்டார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் பண்பாட்டு நிறுவனங்கள் என தங்களை அழைப்பவர்கள் நடத்தும் பள்ளிகளில் நடத்தப்படும் கல்வியின் பின் இயங்கும் கொள்கைகள் ஆபத்தானவை. குறிப்பாக சமூகவியல் பாடபுத்தகங்கள்.
ஆனால் அரசாங்கத்திற்கு பொதுவாக கல்வி என்பது கவனம் பெறாத துறையாகவே உள்ளதே?
தரமான கல்வி என்கிற சொல் முதுகலைக் கல்வி, அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிலைகள் தொடர்புடையதாகவே உள்ளது. ஆனால் எங்களைப் போன்ற பலர், தொடக்கக் கல்வி மற்றும் உயர் நிலைக் கல்வியின் அடிப்படையை நன்கு நிலைப்படுத்தவும், வளர்க்கவும் வேண்டும் எனக் கருதுகிறோம். இந்த அடிப்படைகளை சரி செய்ய அரசியல் கட்சிகள் முன் வருவதில்லை.
ஏனெனில், படிப்பறிவு பெற்ற வாக்காளர்களை அவர்கள் விரும்பவில்லை. அவர்கள் கேள்வி கேட்பார்கள் என்ற அச்சமே கட்சிகளிடம் உள்ளது. பெரும் கட்சிக் கூட்டங்களை நடத்தி மக்களை மந்தைகளாக மாற்றுவது, ஊசலாட்டம் காணும் மக்கள் கேள்விகள் கேட்கத் தொடங்கி தங்களின் நிகழ்காலத்தையும் கடந்த காலத்தையும் தொடர்புபடுத்தி, வருங்காலத்திற்கான திட்டத்தை உருவாக்க முனையும் பொழுதே – அவர்கள் புதிய வாக்காளர் வர்க்கமாக மின்னத் தொடங்குவார்கள். அரசும் அரசியல்வாதிகளும் கல்வி பற்றி அதிகம் சிந்திக்காததை நான் கவனக்குறைவாக மட்டும் கருதவில்லை.
அடுத்தபடியாக, ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதில் நாம் இன்னும் அதிகம் திட்டமிட வேண்டும் என்று நினைக்கிறேன். இன்றைய உலகில் ஓர் ஆசிரியர் தனது துறையில் வல்லுநராகத் திகழ வேண்டியது மிகவும் அவசியம். அனைத்துத் துறைகளைப் பற்றியும் பொதுவான அறிவு கொண்ட விரிந்த கல்வி போதுமானது என்ற காலத்தைக் கடந்து விட்டோம். இன்று அந்தந்த துறைகளில் சிறப்புக் கல்வி பெற்றிருப்பது அவசியமாகிறது.
இந்தப் புதிய அறிவை, தகவல்களை, செய்திகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஆசிரியர்கள் அறிய வேண்டியது அவசியம். ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க மற்றும் அவர்களது சம்பளம் ஆகியவற்றுக்குப் பெரும் தொகை செலவிட வேண்டியது அவசியமாகிறது. அதன் பயனாக அவர்களைப் பொறுப்பேற்கச் செய்து, இவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்தி களத்தில் தீர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட காலம்வரை, இந்தியப் பண்பாடு ஒற்றைத் தன்மை உடையதாக சுருக்கப்படுவதைக் குறித்து நீங்கள் தொடர்ந்து பேசி வந்தீர்கள். இந்தக் கருத்தியல்கள் பல்வேறு அரசியல் மாற்றங்களால் நீர்த்துப் போனதாக நினைக்கிறீர்களா அல்லது இன்றளவும் இந்தியப் பண்பாட்டை ஒற்றைத் தன்மையுடையதாக சுருக்கும் ஆபத்து தொடர்வதாகவே நினைக்கிறீர்களா?
இந்த கேள்விக்கு இரு பக்கங்கள் உள்ளன. ஒன்று, இந்துத்துவா கொள்கைகளை வைத்து வாக்குகள் பெறுவதற்கான அரசியல் உத்தி. ராம ஜன்ம இயக்கத்தைச் சுற்றி அரசியல் அணி திரட்டலும் அதன் காரணமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலும் இந்த அரசியல் உத்தி கையாளப்பட்டதை காண்போம். இதன் எதிரொலி சேது சமுத்திரம் தொடர்பான விவாதத்திலும் மேலெழுந்தது. வாக்குகள் பெறுவதில் நெருக்கடி ஏற்படுவதை இந்துத்துவா அரசியல் உணரும் தருணங்களில் எல்லாம் இவை தலை தூக்கும். இந்த ஒரு தன்மைதான் தற்பொழுது சற்று நீர்த்துக் காணப்படுகிறது. ஆனால் இதைப் பற்றி அனுமானித்துக் கூற இயலாது.
ஆனால் எனக்கு அதிக கவலையை ஏற்படுத்துவது என்னவெனில், நடுத்தர வர்க்கத்தினரிடையே, இந்த நாடு ஒரு இந்து நாடாகத்தான் இருக்க வேண்டும் என்ற அளவுக்கு இந்துத்துவக் கொள்கை ஊடுறுவி இருப்பதுதான். பல சமூகக் குழுக்களை கொண்டதாகவே இருந்து வருகிற ஒரு சமூகத்தை நவீனப்படுத்துதல் என்ற பெரும் சிக்கலுக்கு, ஒரு எளிய பதிலை வழங்குவதாக உரிமை கோரும் ஒரு கொள்கையை யோசிக்கõமல் ஏற்றுக் கொள்வதாகவே இது இருக்கிறது. அதோடு, இந்த சிந்தனைப் போக்கு என்பது அந்த சிக்கல் குறித்து குறைந்தபட்ச தர்க்கமோ, அறிவுப்பூர்வ சிந்தனையோ இன்றி கேள்விக்குரிய தவறான அடிப்படைகள் மீது அமைந்ததாகவே இருக்கிறது.
பிற மதங்களை சார்ந்தவர்களை வேற்று கிரகத்தினர் போன்றும், நம்மோடு சேரவே முடியாதவர்கள் போன்றும் நடத்தும் மனப்பான்மையை என்னால் ஏற்க முடியவில்லை. இது, இந்தியர் என்ற சிந்தனைக்கே எதிரானது. இது, வரலாற்று ரீதியிலும் அடிப்படைகள் அற்றது. கல்வி வெற்றி பெறாத சூழலில் இந்த மனப்பான்மையை குடிமைச் சமூகம்தான் எதிர்த்து நிற்கும். அப்படி இந்த நிலையை குடிமைச் சமூகம் எதிர்க்கத் தவறினால், இந்த வகை அரசியல் தலைதூக்கி அது பாசிசத்தின் எல்லைக்கே இட்டுச் செல்லும்.