பெரியார் திராவிடர் கழகம் நடத்திய பெரியார் எழுத்துக்களை நாட்டுடைமையாக்கக் கோரி 25.8.2008 அன்று சென்னையில் நடந்த கழக ஆர்ப்பாட்டத்தில் வாலாசா வல்லவன் நிகழ்த்திய உரை.

கார்ல்மார்க்சின் நூல்களை காரல் மார்க்சின் உண்மை தொண்டர் லெனின் தலைமையில் சோவியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு மார்க்சின் கொள்கை உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்பதற்காக மார்க்சின் நூல்களை உலக மொழிகள் அனைத்திலும் அச்சிட்டு இலவசமாக அந்தந்த நாட்டுக்கும் அனுப்பி வைத்தார்கள். தமிழ்மொழி பெயர்ப்பு சென்னை துறைமுகத்தில் வந்து இறங்கிய பிறகு அவற்றைக் கொண்டு வந்து விற்பனை செய்த நியுசெஞ்சுரி புத்தக நிலையம் குறைந்த விலையில் அந்த நூல்களை விற்பனைச் செய்தது.

அதேபோல் தான் லெனின் நூல்களும், ஸ்டாலின் நூல்களும் உலக மொழிகள் அனைத்தி லும் இலவசமாக இரஷிய அரசே வெளியிட்டு பரப்பியது. சீனாவிலும், மாசேதுங் (மாவோ) கொள்கைகள் பரவ வேண்டும் என்பதற்காக பீஜிகிலிருந்து அயல்துறை மூலமாக பல மொழிகளில் மாவோவின் சிந்தனைகளை குறைந்த விலையில் சீன அரசே வெளியிட்டு பரப்பியது. இந்திய அரசு காந்தியின் நூல்களை ஆங்கிலத்தில 100 தொகுதிகள் 40000 பக்கங்களை வெறும் ரூ.8000-க்கு வெளியிட்டு தற்போதும் விற்பனை செய்து வருகிறது.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மராட்டியத்தை சேர்ந்தவர் என்பதால் அந்த மாநில அரசு அம்பேத்கரின் நூல்களை 1979 முதல் ஆங்கிலத்தில் வெளியிட்டு வருகிறது. இது வரை ஆங்கிலத்தில் 23 தொகுதிகள் வெளிவந்துள்ளன. அதில் காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்கு செய்தது தான் என்ன? என்ற நூலில் காந்தியையும், காங்கிரசையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அந்த நூலையும் காங்கிரசு அரசுதான் வெளியிட்டது. அதே போல நான்காவது தொகுதி ‘இந்து மதத்தின் புதிர்கள்’ என்பது இந்த நூல் அம்பேத்கரால் எழுதப்பட்டு அச்சிடப்படாமல் கைபிரதியாக இருந்ததாகும். குடும்பத் தகராறு வழக்கு காரணமாக பெட்டியில் சீல் வைக்கப்பட்டு, வழக்கு மன்றத்தில் இருந்தது. அம்பேத்கரின் நூல் தொகுப்பாளர் வசந்த் மூன் அவர்கள் குடும்பத்தினரின் அனுமதி பெற்று நீதிமன்றத்தை அணுகி பெற்று அதை வெளியிட்டார்.

அதில் இராமன், கிருஷ்ணன் புதிர்கள் என்பது ஒரு பகுதி. இராமனையும், கிருஷ்ணனையும் அம்பேத்கர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நூலை வெளியிடக் கூடாது என இந்த மதவெறியர்களும், பார்ப்பனர்களும் மிகப் பெரிய போராட்டம் நடத்தினர். இதையெல்லாம் மீறிக் தான் மராட்டிய அரசு அவற்றை வெளியிட்டது.

அம்பேத்கர் நூற்றாண்டின் போது வி.பி.சிங் பிரதமராக இருந்த காரணத்தால் அவர் அம்பேத்கரின் நூல்கள் முழுமையாக அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட நிதி ஒதுக்கீடு செய்து இன்று வரையில் தமிழில் அம்பேத்கரின் பேச்சுகளும், எழுத்துகளும் மிகக் குறைந்த விலையில் 38 தொகுதிகள் வெளி வந்துள்ளன.

தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லும் திராவிடக் கட்சிகள் 1967 முதல் ஆட்சியில் இருந்தும் இன்று வரையில் பெரியாரின் பேச்சுக் களையும், எழுத்துக்களையும் ஒரு தொகுதிகூட வெளியிடவில்லை. பெரியார் நூற்றாண்டின்போது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் பெரியாரின் புரட்சி மொழிகள் என்ற ஒரு சிறு நூல் மட்டுமே அரசின் சார்பில் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார், 1952 இல் தான் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை கூட்டுறவுச் சட்ட விதிகளின்படி பதிவு செய்தார். ஒரு அணா சந்தா கட்டக் கூடியவரும், சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்த எவரும் அதில் உறுப்பினராக வழிவகைச் செய்திருந்தார்.

கி.வீரமணி, அப்போது அதில் சாதாரண உறுப்பினர்கூட இல்லை. பெரியார் டிரஸ்ட்டாக பதிவு செய்யவில்லை. டிரஸ்ட் என்றால் அதில் உறுப்பினர்களாக உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் கேள்வி கேட்கவோ, உரிமைக் கொண் டாடவோ முடியாது. எனவே தான் ஜனநாயகத் தன்மையில் அதை கூட்டுறவு சொசைட்டியாக பெரியார் நிறுவினார். பெரியாரை கொச்சைப் படுத்தியது இவர் தான்.

ஒரு பார்ப்பன பெண்ணைப் பார்த்து உங்களைப் போன்ற பெண்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும் என்று பெரியார் விரும்பினார் என ஜெயலலிதாவைப் பார்த்துச் சொன்னார். இவரை விட பெரியாரை வேறு யாரும் கொச்சைப்படுத்திட முடியாது.

பெரியார் உயிரோடு இருக்கும் வரை அவர் எந்த புத்தகத்திலும் பதிப்புரிமை கோரவில்லை. யார் அச்சடித்து பரப்பினாலும் அவர் பாராட்டவே செய்தார். வாழ்க்கைத் துணை நலம் என்ற தலைப்பில் சேலம் மகுடம்சாவடி கிள்ளிவளவன் பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் திரட்டிக் கொண்டு வந்து பெரியாரிடம் கொடுத்து அணிந்துரை கேட்டார். பெரியார் மிகவும் மகிழ்ச்சியோடு அதற்கு அணிந்துரை எழுதிக் கொடுத்தார். இது 1960 இல் வெளி வந்தது.

1973 இல் தந்தை பெரியார் மறைந்த பிறகு இன்று 2008 வரை ஓர் ஆண்டுக்கு ஒரு தொகுதிகூட இல்லை. அதுவும் இப்போது சில ஆண்டுகளாகத்தான் அதிக தொகுதிகள் வெளி வந்துள்ளன. ஆனால் புதிதாக தொடங்கி சில ஆண்டுகளேயான பெரியார் திராவிடர் கழகம் முன்பு குடிஅரசு 3 தொகுதிகளை வெளியிட்டது. இப்போது ஒரே நேரத்தில் குடிஅரசு 27 தொகுதிகளை மிகவும் பொருளாதார நெருக்கடி யில் வெளியிடச் செய்து வருவது பாராட்டுக்குரியது. கோடி கோடியாக பணம் உள்ளவர்களால்கூட செய்ய முடியாததை செய்து காட்டும் உங்களை பாராட்டுகிறேன்.

இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் உண்மையில் பெரியாரின் தொண்டர் என்றால் பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்கு வதோடு நில்லாமல், தமிழக அரசே பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு பரப்பிட முன்வரவேண்டும் என்று அன்போடு அவரை நான் இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Pin It