சிறீரங்கத்தில் நடந்த பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி இவ்வாறு பேசியிருக்கிறார்:

“தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்துக்கு ஏராளமான இளைஞர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தன் உயிரையே தரக்கூடிய தற்கொலைப் பட்டாளமாக இருக்கக்கூடிய இளைஞர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

தந்தை பெரியார் சிலை சேதப்பட்டதை அறிந்து நாடு தழுவிய அளவிலே கொந்தளிப்பு ஏற்பட்டது. பெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்.” - ‘விடுதலை’ 19.12.2006

நாடு முழுதும் கொந்தளிப்பு ஏற்பட்டது என்றும், பெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள் என்றும் பூரித்து உணர்ச்சி முழக்கமிட்ட, அதே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ‘குமுதம்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். இதை விடுதலை ஏடும் (டிசம்.15) வெளியிட்டிருக்கிறது.

கேள்வி : என்னதான் கோபமிருந்தாலும் கடவுள் சிலையை உடைப்பது நியாயமா?

கி.வீரமணி: திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை அந்தப் பணியை எங்கள் தோழர்களோ, தொண்டர்களோ யாரும் செய்யவில்லை. நாங்கள் அப்படிச் செய்வதென்றால், திட்டமிட்டு தீர்மானம் போட்டு, காவல்துறைக்குத் தகவல் கொடுத்து முறைப்படித் தான் செய்வோம். அதுதான் எங்கள் வரலாறு.

ஆக, வீரமணி அவர்களே கூறியிருப்பதுபோல், உயிரையே தரக்கூடிய - தற்கொலைப் பட்டாளமாக இருக்கக்கூடிய இளைஞர்கள் பெரியார் சிலை உடைப்பை அறிந்து நாடு முழுதும் கொந்தளித்தார்கள்; அத்தகைய பெரியார் தொண்டர்கள் எங்கும் இருப்பார்கள்; ஆனால், திராவிடர் கழகத்தில் இல்லை. இந்தப் பணியை திராவிடர் கழகத் தொண்டர்களோ, தோழர்களோ யாரும் செய்யவில்லை என்கிறார்.

அப்படியானால், இதைச் செய்தது யார்? முதல்வர் கலைஞர் திருச்சியில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்:

“பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீதும், அதற்குப் போட்டியாக சில கடவுளர் படங்களை உடைத்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு சாராரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால், வீரமணி குறிப்பிட்டிருப்பதைப்போல, கடவுளர் படங்களை எரித்தவர்கள் திராவிடர் கழகத்தினர் அல்ல; அவர்கள் பெரியார் திராவிடர் கழகம் என்ற வேறு ஓர் அமைப்பைச் சார்ந்தவர்கள். கலைஞர் பேட்டி ‘தினமணி’ (டிச.16)

ஆக, கொதித்தெழுந்து கொந்தளிக்க வைக்கக்கூடிய பெரியார் தொண்டர்கள், எங்கும் இருப்பார்கள். ஆனால் திராவிடர் கழகத்தில் மட்டும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்கிறார் தி.க. தலைவர் கி.வீரமணி.

அவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் என்கிறார் முதல்வர் கலைஞர்!

தன்னெழுச்சி “தாக்குதல்கள்” இயற்கையானவையே!

“நான் பலாத்காரத்தை வெறுப்பவன்; அகிம்சைவாதியுமாவேன். உதாரணம், இதுவரை நான் பலாத்காரத்தைத் தூண்டியதில்லை. இம்சையை ஆதரித்ததில்லை. இனியும் அப்படியேதான் இருக்க விரும்புகின்றேன். ஆனால், பலாத்காரம்-இம்சை என்பது இரண்டு விதமாக ஏற்படுபவை என்பதை மக்களும், அரசாங்கமும் உணர வேண்டும்.

அவையாவன :-

ஒன்று செயற்கையால் ஏற்படுவது;

அதாவது ‘பழி தீர்த்துக் கொள்வதற்கு வேறு வழியில்லாததால்’ என்ற கருத்தில் கையாள்வது.

மற்றொன்று திடீரென்று ஏற்பட்ட உணர்ச்சியால் இயற்கையில் ஏற்படுவது.

அதாவது முன்பின் யோசனை இல்லாமல், காரண காரியங்களைக்கூட சிந்தியாமல், ஆடை நழுவுவதாக உணர்ந்தவுடன் கை எப்படி உடனே ஆடையைப் பிடிக்கத் தானாகவே வருகிறதோ, அது போல், சில சந்தர்ப்பங்களில் திட்டம் இல்லாமலும், தன் சக்தியைப் பற்றிச் சிந்தியாமலும், பலனை இலட்சியம் செய்யாமலும் இம்சைக்குத் துணிந்துவிடுவது. இதற்கு கிரிமினல் சட்டம் இடம் கொடுப்பதைக் கொண்டும் உணரலாம்.

அதாவது, கொலை வழக்குகளைச் சர்க்கார் இரண்டு விதமாகப் பிரித்து இருக்கிறார்கள்.

ஒன்று பழி வாங்கும் எண்ணத்தோடு, முன் யோசனையுடன் கொலை செய்வதாகக் கொள்ளுவதாகும்.

மற்றொன்று திடீரென்று ஏற்பட்ட - காணப்பட்ட சம்பவத்தால் புத்தி நிலையற்று சமாளிக்க முடியாத நிலையில் கொலை செய்ததாகும்.

முன்னையதற்கு சட்டத்தில் மரண தண்டனை; பின்னையதற்கு வாழ்நாள் தண்டனை. இது ஆயுள் தண்டனை முதல் - மாத தண்டனை, அபராதத் தண்டனை; சில வழக்குகளில் மன்னிப்பும் விடுதலையும் கூட உண்டு.

இந்த இரண்டாவது இம்சை கொலை என்பதைத் தான் இயற்கையாக எந்தவித தூண்டுகோலும் இன்றி மனித சுபாவ ஆத்திரத்தில் ஏற்படும் இயற்கை இம்சை என்கிறேன்.

இதே காரணத்தால்தான் பல படு கொலை சம்பவங்கள் எல்லாம் சாதாரண சம்பவங்களாகக் கருதப்படுவதாகும்.

ஒரு பலவீனமானவனுடைய மனைவியை, மகளை ஒரு பலமுள்ளவன் திடீரென்று கற்பழிக்க எண்ணிகையைப் பிடித்து இழுப்பதை, தூக்கிச் செல்ல வருவதை கணவன் அல்லது தந்தை கண்டால், கையில் கத்தி இருந்தால் 100க்கு 90 சம்பவங்களில் குத்தியே விடுவான்.

மற்றும் வீடு கூட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு கற்பில் லட்சியமுடைய ஒரு பெண்ணை துர் ஆக்கிரகம் செய்ய தொடுவானேயானால், அந்தப் பெண் முன்பின் சிந்தியாமல் துடைப்பத்தை உபயோகித்து சமாளித்துக் கொள்ள முயற்சிப்பாள்; இது இயற்கை.

இப்படியாக உள்ள பலாத்காரம் - இம்சை ஆகிய காரியங்களில் (முதலில் குறிப்பிட்ட) செயற்கையில் ஏற்படுவதைத் தான் எந்த அகிம்சைவாதியும் தடுக்க முடியும்.

இயற்கைத் தூண்டுதல் இம்சையையாராலும், இம்சை செய்பவனாலும்கூட பல சம்பவங்களில் தடுக்க முடியாது. வெறி பிடித்தவர்களும் அதாவது ஒரு காரியத்தில் உள்ள பற்றினால் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்ற வேண்டும் என்கின்ற உணர்ச்சி கொண்டவர்கள் (உதாரணமாக மதவெறி கொண்ட வர்கள்; சாதி வெறி கொண்டவர்கள்; பண வெறி கொண்டவர்கள் முதலிய உணர்ச்சியாளர்கள்) காதில் கேட்ட மாத்திரத்தில் 4 பேர் இந்தப்படி செத் தார்கள் என்பதைத் தெரிந்த மாத்திரத்தில் பலாத்காரத்தில் - இம்சையில் இறங்கிவிடுவார்கள். இதுவும் இயற்கை பலாத்காரத்தில், இம்சையில் சேர்ந்ததேயாகும். இதையும் யாராலும் தடுக்க முடியாது.

கண்கொண்ட மாடு, மிரண்ட மாடு, சண்டி மாடு, குதிரை முதலியவை தண்டிப்பதைக்கூட, அடிப்பதைக்கூட இலட்சியம் செய்யாமல் தொல்லை கொடுப்பது போலும், துப்பாக்கிக் குண்டு அடியைப் பெற்றுக் கொண்டு புலி முதலிய மிருகங்கள் பாய்வது போலும் இம்சைகள், பலாத்காரங்கள் இயற்கையாகவே ஏற்படுவது உண்டு. இதுவும் சட்டங்களால் தடுத்துவிடக் கூடியதல்ல. முயற்சிகளால் தடுக்கக் கூடியதுமல்ல.

இவைக் குறிப்பிட்ட ஒரு காரியத்தில், ஒரு இடத்தில் ஏற்பட்டால் ஏற்பட்ட பின்பு போலீசு பட்டாளம் கொண்டு அடக்கலாம்.

ஆனால், ஊர்தோறும், தெருக்கள் தோறும், வீடுகள் தோறும் ஏற்படும்படியான இயற்கை பலாத்காரம் ஏற்பட்டால் யாரால் தான் என்ன செய்ய முடியும்? ஜாலியன் வாலாபாக்கூட அல்ல; டையர் ஓட்வியர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள் உருண்டபின் இராணுவ சட்டத்தினால் அமைதி ஏற்படுத்தலாம்; காரியம் நடந்து போனது போனதுதான்.

பிற்பழி வாங்குவதும் இக் காலத்தில் அவ்வளவு சுலபமானதல்ல. வேண்டு மானால் நம் வீட்டில், நமது வீரதீரத்தால் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அடக்கி புகழ் பெற்றுக் கொள்ளலாம் ஆனால் நம் பின் சந்ததிகளுக்கு கல்லில் எழுத்துப் போல் அழியாப் பழி தேடி வைத்ததாகும்.

ஆகவே இம்சையைத் தடுப்பவர்களும், இம்சைக்குப் பழி வாங்குபவர்களும் இதை நன்றாக யோசிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆராய்ச்சியின் கருத்து ஆகும். தூண்டுதலுக்கு அல்ல.”

பெரியார், ‘விடுதலை’ 23.7.1953; பக்.2.

குறிப்பு: காந்தியார் பயன்படுத்திய ‘அகிம்சை’ என்ற சொல்லுக்கு நேர் எதிரானதாக ‘இம்சை’ என்ற சொல்லை பெரியார் பயன்படுத்துகிறார்.

ஏன் இந்தக் கட்டுரை?

1953 ஆம் ஆண்டு ஜூலை மாதம்! தமிழ்நாட்டில் ராஜகோபாலாச்சாரி குலக்கல்வித் திட்டத்தைப் புகுத்திய நேரம்! பெரியார் போர்ச்சங்கு ஊதினார். தி.மு.க.வும், போராட்டக் களத்தில் குதித்தது. திராவிடர் கழகத்தினர் மீதும், தி.மு.க.வினர் மீதும் - ஆச்சாரியார் ஆட்சி அடக்கு முறைகளை ஏவியது. ஆட்சிக்கு எதிராக நாடெங்கும் கலவரம் வெடித்தது.

தூத்துக்குடி, கல்லக்குடியில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் பலியானார்கள்; போலீஸ் தடியடியில் பலர் உடல் உறுப்புகளை இழந்தனர்; கொந்தளிப்பான அந்தச் சூழலில் - பெரியார் வெளியிட்ட அறிக்கையை இங்கு வெளியிடுகிறோம். அறிக்கையின் தலைப்பு ‘பலாத்காரம் அல்லது இம்சையின் தத்துவம்’ என்பதாகும். ஆச்சாரியார் திட்டமிட்டுப் புகுத்திய குலக்கல்விக்கு எதிராக - தன்னெழுச்சியாக ஆங்காங்கே எதிர் வினைகள் வெடித்துக் கிளம்பிய சூழலில் - பெரியார் இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பார்த்தார்.

தன்னெழுச்சியாக நிகழ்த்தப்படும் எதிர் வினைகளையும் - திட்டமிட்டு உருவாக்கப்படும் கலவரத்தையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்று கூறும் பெரியார், எதிர்வினைகள் இயற்கையானவை; சட்டம் கூட இதை வன்முறையாகப் பார்க்காமல் விதிவிலக்கு தருவதை பெரியார் எடுத்துக் காட்டுகிறார்.

பிற்போக்குக் கொள்கைக்காக நடக்கும் எதிர்வினைகளைக் கூட இயற்கையானதுதான் என்று கூறும் பெரியார் - “எந்த எதிர்வினைகளையும் அடக்கி புகழ் பெற்றுக் கொள்ளலாம் என்று கருதலாம்; ஆனால், நம் பின் சந்ததிகளுக்கு கல்லில் எழுத்துப் போல் அழியாப் பழி தேடி வைத்ததாகும்” என்கிறார்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுவது; பெரியார் இயக்கப் பிரச்சாரங்களைத் தடுப்பது என்ற திட்டமிடப்பட்டு நடக்கும் வன்முறையில் பார்ப்பனர் தூண்டுதலில் மதவெறி சக்திகள் ஈடுபட்டு வரும் நிலையில் - அதன் தொடர்ச்சியாக சிறீரங்கத்தில் பெரியார் சிலை தகர்ப்பும் நிகழ்ந்தது. கொதித்தெழுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சில இடங்களில் எதிர்வினைகளில் இறங்கினர். இரண்டுமே ‘தேச விரோதம்’ என்கிறார், தமிழக முதல்வர் கலைஞர். திட்டமிட்ட வன்முறையையும் - தன்னெழுச்சியான எதிர்வினைகளையும் - சமமாகவே தனது ஆட்சி கருதும் என்கிறார்.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 7 கழகச் செயல்வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அது போலவே இது வன்முறை; பெரியார் கொள்கைக்கு எதிரானது என்று பேசி வருகிறார் வீரமணி! அவரது ‘தொண்டரடிப் பொடிகளும்’ - பெரியார் தி.க.வின் இந்த எதிர்வினைகளை வன்முறை என்றும், தங்களுக்கு இதில் எந்தத் தொடர்பும் கிடையாது. இது சத்தியம் என்றும் தொலைக்காட்சிப் பேட்டியில் ‘வீரமுழக்க’மிடுகிறார்கள்.

தேசபக்தியின் எல்லையில் நிற்கும் கலைஞருக்கும் - ஆரியத்தை மகிழ்விக்க கழகத்தினரை காட்டிக் கொடுத்து அகிம்சா மூர்த்திகளாகக் காட்டிக் கொள்ளும் வீரமணியின் “போர்ப்படை”க்கும் பெரியாரின் இந்தக் கட்டுரையை முன் வைக்கிறோம்.)