கி.வீரமணியின் பெரியார் கொள்கைப் புரட்டுகள் அம்பலமாகத் தொடங்கியவுடன், ‘விடுதலை’யின் இணையதளத்தில் இடம் பெற்றிருந்த பழைய ‘விடுதலை நாளேடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக அறிவிப்பு வெளிவந்துவிட்டது. பழைய ஏடுகளைப் புரட்டினால், இவர்களின் புரட்டுகளும், முரண்பாடுகளும் வெளிச்சத்துக்கு வந்து விடுமே என்று அஞ்சு கிறார்கள் போலும்! எவரேனும் குறிப்பிட்ட ‘விடுதலை’ நாளேடு தேவை என்று மின்னஞ்சல் வழியாக கேட்டால், அவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டார்கள்.
பெரியார் கொள்கை பரப்புவதற்காகவே உருவாக்கப்பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் கொள்கைப் பரப்பும் ‘லட்சணம்’ இது தானா? பரப்பவேண்டிய பணியை செய்ய வேண்டி யவர்கள், பதுக்கும் வேலையை செய்கிறார்கள். பழைய ‘குடிஅரசு’ பத்திரிகை கருத்துகளும் வெளிவந்துவிடக் கூடாது என்று பதைபதைக்கிறார்கள். இதுதான் பிரச்சார நிறுவனத்தின் வேலையா? வெட்கம்! மகா வெட்கம்! இது மட்டுமா?
பெரியார் நூலை அரசுடைமையாக்கினால் பெரியார் கருத்துகளை திரித்து விடுவார்கள் என்று எழுதியது ‘விடுதலை. அப்படி எவராவது பெரியாரின் பழைய நூல்களை பார்க்க விரும்பினால், பெரியார் திடல் நூலகத்துக்கு வந்து, உரிய அனுமதியோடு பார்க்கலாம் என்று ‘விடுதலை’யில் ‘மின்சாரம்’ கட்டுரை எழுதினார். அந்தப் பெரியார் நூலகத்துக்குள், பழைய இதழ்களைப் பார்வையிடச் சென்ற வாலாஜா வல்லவனை நூலகத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார்கள்.
வாலாஜா வல்லவன், திராவிட இயக்கத்தின் பழைய நூல்களை தேடிப் பிடித்து வெளியிட்டு வருகிற ஒரு ஏழை பதிப்பாளர்; கொள்கை உணர்வாளர்.
பெரியார் சுயமரியாதை - சமதர்மம்’ என்ற, மிகச் சிறந்த பெரியாரிய பெட்டகத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியவர்கள், தோழர் எஸ்.வி.ஆர். - வ.கீதா. அந்த நூலின் முன்னுரையில் பெரியார் நூலக ஆய்வகத்தில் பல நூல்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமல் இருந்ததை சுட்டிக்காட்டியிருந்தார்கள்.
அதற்காக, ‘பெரியாரின் சுயமரியாதை சமதர்ம’ நூலைக் கேவலமாக விமர்சித்து, ‘விடுதலை’யில், பழனியைச் சார்ந்த காளிமுத்து என்ற பேராசிரியரின் நூல் “திறனாய்வை” ‘விடுதலை’ வெளியிட்டு, ‘விடுதலை’ தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொண்டது. ‘பெரியார் சுயமரியாதை சமதர்மம்’ நூல் இன்று வரை பெரியார் இயக்கம் பற்றிய ஆய்வுகளுக்கு மிகச் சிறந்த அடிப்படை ஆதார நூலாக பலராலும் எடுத்தாளப்படுகிறது. அதற்கு இணையாக ஏதேனும் ஒரு நூலை கி.வீரமணியோ அல்லது அவரது இயக்கத்தினரோ வெளியிட்டதாக விரலை நீட்ட முடியுமா?
‘விடுதலை’ நாளேட்டின் முகப்பில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம், பெரியார் மறைவுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 1976 ஆம் ஆண்டு அவசர நிலை காலத்தில் பத்திரிகை முன் தணிக்கை அமுலில் இருந்தபோது, பார்ப்பன அதிகாரிகள் அதை நீக்குமாறு உத்தரவிட்டார்கள். அந்த நிலையில் ஆத்திரமடைந்த திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார், ‘தமிழ்நாடு பார்ப்பனருக்கே’ என்று அச்சிட்டு, அந்த பார்ப்பன அதிகாரிகளிடம் கொண்டு போடுங்கள் என்று ‘விடுதலை’ ஆசிரியர் குழுவினரிடம் கோபத்துடன் கூறினார்.
பார்ப்பன அதிகாரிகள் அந்த முழக்கத்தை நீக்கா விடில், பத்திரிகை வெளிவருவதை அனுமதிக்க முடியாது என்று கூறிய நிலையில் தான் அந்த முழக்கம் எடுக்கப்பட்டது. இது பற்றி வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம் பெரியார் காலத்திலேயே, விடுதலையிலிருந்து நீக்கப்பட்டது என்று பதில் கூறினார்.
இது எவ்வளவு பெரிய புரட்டு?
(புரட்டுகள் உடைப்பு தொடரும்)