கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

குடியரசு இதழ் தொகுப்புகளை தொகுதிகளாக வெளியிட பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்து முன் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ், பணம் அனுப்புவோருக்கு சலுகை விலையில் இவை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளேடான விடுதலையில் பெரியாரின் எழுத்துக்கள் மீதான அறிவுசார் சொத்துரிமை தங்களிடமே இருப்பதாக பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் கி.வீரமணி ஒரு அறிவிப்பினை விடுத்துள்ளார். இதையொட்டி குமுதம் ரிப்போட்டரில் ஒரு கட்டுரை, பெரியார் தி.க ஆதரவு வலைப்பதிவுகளில் பதிவுகள், தி.க ஆதரவு வலைப்பதிவொன்றில் இடுகைகள், விடுதலையில் கலி.பூங்குன்றன் அறிவிப்பு, மின்சாரம் கட்டுரை என இருதரப்பாரும் தம் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இதில் எனக்கு சில கேள்விகள்/ஐயங்கள் உள்ளன.

பெரியார் எழுத்துக்களுக்கு அவர் உயிலின்படி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் பதிப்புரிமை தங்களுக்கு என்று உரிமை கொண்டாட முடியும். ஆனால் குடியரசில், பெரியார் நடத்திய பிற இதழ்களில் எழுதியுள்ள பிறரின் படைப்புகளுக்கு அந்நிறுவனம் எப்படி பதிப்புரிமை தங்களுக்கு என்று கூற முடியும். அப்படிப்பட்ட படைப்புகளுக்கு உரியவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் இதுவரை குடியரசு தொகுப்புகள் நூற் தொகுப்பாகவும், குறுநதகடுகளாக வெளிவந்துள்ளனவா?

பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்று தெரிந்தும் உரிய அனுமதி பெறாமல் பெரியார் தி.க ஏன் இப்படி ஒரு திட்டத்தை முன்வைக்கிறது?. தெரிந்தே சட்டத்தை மீறுவது சரிதானா? வீரமணி நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றால் முன்பதிவு அடிப்படையில் பணம் கட்டியவர்களுக்கு பணம் திரும்பக் கிடைக்குமா?

பெரியார் எழுத்துக்களை காலவாரியாக, பொருள்வாரியாக வெளியிடும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஏன் இதனை இத்தனை ஆண்டுகளாக வெளியிட்டு வந்தாலும், அது முழுமையுறாமல் இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குள் எத்தனை தொகுப்புகளாக எத்தனை தலைப்புகளில் அவர்கள் வெளியிடப் போகிறார்கள்?

பெரியார் எழுத்துக்களை நாட்டுடமையாக்கினால் அதனால் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு என்ன நட்டம்? இழப்பீடாக ஒரு தொகை பெற்றுக் கொண்டு காந்தியின் எழுத்துக்கள், அம்பேத்கரின் எழுத்துக்கள் அரசு ஆதரவில் தொகுக்கப்பபட்டு வெளியானது போல் பெரியாரின் எழுத்துக்கள் வெளியானால் அது நல்லதுதானே. தி.க இதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை? திமுக அரசும் ஏன் இதைச் செய்யவில்லை?

அறிஞர் அண்ணா, பாரதிதாசன், பாரதியார், புதுமைப்பித்தன் உட்பட பலரின் எழுத்துக்கள் அரசால் நாட்டுடமையாக்கப்பட்டு பொதுக்களனில் இருக்கும் போது பெரியாரின் எழுத்துக்கள் ஏன் அவ்வாறு நாட்டுடமையாக்கப்படவில்லை? பெரியாரின் உரைகள், கட்டுரைகள் தவிர எழுதிய சிறு நூல்கள்/வெளியீடுகளின் முழுமையான பட்டியல் இருக்கிறதா? அவை அதாவது சிறு நூல்கள்/வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கின்றனவா?

பெரியார் தி.க வெளியிடவுள்ள தொகுப்புகள் குறுந்தகடுகளாக கிடைக்கின்றனவா? அப்படியாயின் அதை இப்போது நூற் தொகுதிகளாக கொண்டுவர வேண்டிய அவசரத் தேவை என்ன?

பெரியார் அனுமதியுடன் கொண்டுவரப்பட்ட ஆனைமுத்து தொகுத்த பெரியார் சிந்தனைகள் அது ஏன் கிடைப்பதில்லை. அதை மேம்படுத்தி, புதிதாக சேர்க்க வேண்டியவை எவை எனக் கண்டறிந்து சேர்த்து மீண்டும் கொண்டுவர யாரும் முயற்சிக்கவில்லையா. அதை ஏன் மக்கள் பதிப்பாக, குறுந்தகடுகளாக கொண்டுவரக் கூடாது?

பெரியாரின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க வேண்டும் என்று பெரியார் தி.க கோரியுள்ளது. இதை அரசு ஏற்குமா என்று தெரியவில்லை. ஏற்றாலும் பதிப்புரிமையின் உரிமையாளருக்கு ஒரு தொகை கொடுத்தால் தான் நாட்டுடமையாக்க முடியும். ஒரு வேளை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் அரசு பணம் தரத்தேவையில்லை என முடிவு செய்தால் அரசு பணம் தராமலே அதைச் செய்யலாம். அதை அரசுதான் செய்ய வேண்டும் என்பதில்லை. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனமே செய்யலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் அதே சமயம் பெரியாரின் படைப்புகள் பரவலாகக் கிடைக்க வகை செய்ய முடியும். நாட்டுடமையாக்காமல் இது சாத்தியம். அதாவது பதிப்புரிமையை முழுதும் விட்டுத்தராமல் அதே சமயம் பரவலாக பெரியாரின் எழுத்துக்கள் கிடைக்க செய்ய வகை செய்ய முடியும்.

கிரியேடிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் மூலம் இதைச் செய்யலாம். வணிக ரீதியாக பயன்படுத்தாமல் பெரியார் எழுத்துக்களை இணையத்தில் இடவும், தரவிறக்கிக் கொள்ளவும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் மூலம் அனுமதிக்க முடியும். கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்களில் பல வகை உள்ளன. நோக்கத்தைப் பொறுத்து தேவையான லைசென்ஸை தேர்வு செய்து பிறர் பயன்படுத்த அனுமதி அளிக்க முடியும். உதாரணமாக மொழி பெயர்த்து பிற மொழிகளில் வெளியிட உரிமை அளிக்க வகை செய்ய ஒரு லைசென்ஸை பயன்படுத்த முடியும்.

வணிக நோக்கங்களற்ற பயன்பாடுகளுக்கு கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் உகந்தவை. வணிக ரீதியாக பயன்படுத்தாமல் இலவசமாக பிரதிகள் எடுத்து விநியோகிப்பதை நான் தடுக்கவில்லை, ஆனால் வணிக ரீதியாக பயன்படுத்த அல்லது இதன் அடிப்படையில் இன்னொன்றை உருவாக்க (derivative works) உரிய அனுமதி பெற வேண்டும் என ஒரு படைப்பாளி அறிவிக்க விரும்பினால் அவர் செய்ய வேண்டியது இதற்கு வகை செய்யும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸின் கீழ் இதன் பயன்பாடு அனுமதிக்கப்படுகிறது என்று அறிவித்தால் போதும். வேறு தனியான ஒப்பந்தங்கள் தேவையில்லை.

இப்போதுள்ள நிலையில் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் ஒரு பொருத்தமான தீர்வாக இருக்கும். இதனால் பதிப்புரிமை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திடமே இருக்கும், அவர்கள் சில வழிகளில் பெரியார் எழுத்துக்களை பயன்படுத்த, குறிப்பாக வணிக நோக்கமற்ற பயன்பாட்டிற்கு அனுமதி அளிப்பதன் மூலம் பெரியாரின் கொள்கைகள் இன்னும் பரவலாக அறிமுகமாகும். உதாரணமாக இணையத்தில் பெரியாரின் எழுத்துக்களை மின் நூற்களாக்க அனுமதி உண்டு, ஆனால் அதை தரவிறக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனுமதிக்க முடியும்.

அதே போல் பெரியார் எழுத்துக்களை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்து இணையத்தில் இடலாம், ஆனால் அவற்றை தமிழில் மின் நூற்களாக்கி இணையத்தில் இடவோ அல்லது விற்கவோ அனுமதி இல்லை என்று அனுமதி தரலாம். அவ்வாறு உரிமை பெற்றவர் தமிழில் மின் நூலாக்கி இடும் உரிமையை இன்னொருவருக்குத் தர முடியாது. பெரியாரின் கருத்துக்களை விளக்கும் அனிமேஷன் படத்தை உருவாக்கும் போது பெரியாரின் குரல் பதிவுகளை, பெரியார் திரைப்படத்திலிருந்து சிலவற்றை, புகைப்படங்களை, எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அளிப்பது கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்களின் அடிப்படையில் சாத்தியம்.

இவ்வாறு அனுமதி தரும் போது பதிப்புரிமை யார் வசம் இருக்கிறதோ அவர் சில உரிமைகளைத் தருகிறார். பயன்படுத்துபவர் படைப்புகளை மாற்ற/சிதைக்கக் கூடாது, சுருக்கக் கூடாது, எதையும் அதில் சேர்க்கக் கூடாது, பதிப்புரிமை யாரிடம் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதிக்க முடியும்.

இப்படி கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்களை பயன்படுத்தும் தீர்வு இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல தீர்வு. ஏனெனில் இதில் பதிப்புரிமையாளர்தான் சில நிபந்தனைகளுடன் பெரியார் எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி தருகிறார், பதிப்புரிமை முற்றாக விட்டுத் தரப்படுவதில்லை. மேலும் நிபந்தனைகளை பின்பற்றாத போது அனுமதியை விலக்கிக் கொள்ளவும் முடியும். பதிப்புரிமையாளர் படைப்பாளியின் சார்பாக தார்மீக உரிமைகளையும் (moral rights) நிலை நாட்ட முடியும். வணிக பயன்பாடற்ற நோக்கங்களுக்கு என்று அனுமதியை லைசென்ஸ்கள் மூலம் தரும்போது அதை யாரும் பயன்படுத்த முடியும்,

அந்த லைசென்ஸின் கீழ் தரப்படும் விதிகள்/நிபந்தனைகளுட்டப்பட்டு, கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ளன. இசை அமைப்பாளர்கள், எழுத்தாளர்கள். புகைப்பட நிபுணர்கள், ஒவியர்கள், பேராசிரியர்கள் என்று பல்வேறு தரப்பாரும் இவற்றைப் பயன்படுத்துகின்றனர். பாடங்களை, பாட நூற்களை, ஆய்வுக் கட்டுரைகளை இதன் கீழ் பரவலாக கிடைக்கச் செய்ய முடிகிறது.

எனவே பெரியாரின் எழுத்துக்களையும், குரல் பதிவுகளையும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் மூலம் பயன்படுத்த குறிப்பாக வணிக நோக்கமற்ற பயன்பாடுகளுக்கு அனுமதிப்பது ஒரு தீர்வாக இருக்கும். இதை முதலில் ஒரிரு உரிமைகளை தரக்கூடிய லைசென்ஸ்கள் மூலம் பரிசோதித்துப் பார்க்கலாம். இந்தியாவிலும் கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ்கள் பயன்படுத்தப்படுவதால் இவை செல்லுமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை.

இந்த சிறு கட்டுரையில் சில சாத்தியப்பாடுகளை உதாரணமாகக் காட்டியுள்ளேன். இந்த லைசென்ஸ்களை பல வகைகளில் பிற படைப்பாளிகள் தம் படைப்புகளில் பயன்படுத்த உதவ பயன்படுத்த முடியும். பகிர்ந்து கொள்ள, பரவலாக்க, பயன்படுத்த என பலவகை பயன்களுக்கு இதன் மூலம் அனுமதி தர முடியும். தாங்கள் இதை எதற்காக பயன்படுத்த விரும்புகிறோம் என்பது குறித்த தெளிவு வேண்டும். மேலும் துவக்கத்தில் ஒரு சில பயன்பாடுகளை மட்டும் அனுமதித்து அதில் கிடைத்த பலன்கள்/அனுபவங்களின் அடிப்படையில் இந்த லைசென்ஸ்களின் கீழ் தரப்படும் உரிமைகள் (நிபந்தனைகளுடன்) விரிவாக்கப்படலாம் அல்லது புதிய உரிமைகள் தரப்படலாம்.