கேள்வி : பெரியாரின் கருத்துகளும், கொள்கைகளும் பரவ வேண்டும் என்பதுதான் நோக்கம் என்றால், மற்றவர்களும், அதை வெளியிடுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் என்ன?

கி. வீரமணி : பெரியாரின் எழுத்துக்களைப் பதிப்பிக்கிறோம் என்ற போர்வையில், அவரது எழுத்துக்களைச் சிலர் மாற்றி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. தவிர மொத்தமாகப் பதிப்பிக்கும்போது, கொள்கைக் குழப்பங்கள் ஏற்படும். அதனால் தான் இந்த அறிவிப்பு. - `ஆனந்த விகடன்' (கி.வீரமணி பேட்டி) 27.8.2008

ஆக, பெரியார் கருத்துகளை மாற்றி, சிதைத்து விடக்கூடாது என்பதால், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மட்டுமே, இதை வெளியிடும் உரிமைக் கோருவதாக கி.வீரமணி கூறுகிறார். இதன் மூலம், அரசு பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு, தனது மறைமுக எதிர்ப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

காரணம், அரசு நாட்டுடைமையாக்கிவிட்டால், பெரியார் நூல்களை வெளியிடும் உரிமை, எல்லோருக்கும் கிடைத்து விடுமே! இந்த நிலையில் பெரியாருடைய நூல்களை நாட்டுமையாக்குவதை எதிர்க்கிறோம் என்று வெளிப்படையாகக் கூற வேண்டியது தானே! அந்தக் கேள்வியை எழுப்பும் போது, `அது அரசாங்கம் எடுக்க வேண்டிய முடிவு' என்கிறார். அரசாங்கம் அப்படி ஒரு முடிவை எடுத்தால், அப்போது, பெரியார் கொள்கைகளை பலரும் வெளியிட அனுமதிக்கக் கூடாது; பெரியாரின் கருத்துகளை திருத்தி விடுவார்கள் என்று இவர் அப்போதும் சுட்டிக் காட்டுவாரா?

அண்ணாவின் நூல்கள் கூட நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. அப்படியானால், அண்ணாவின் கருத்துகளைத் திருத்தி நூல்கள் வந்து கொண்டிருக்கிறதா? அல்லது அண்ணாவின் கருத்துகளை திருத்தி விடுவார்கள் என்று கூறி, அண்ணாவின் நூல்களை நாட்டுடைமையாக்காமல் போய் விட்டனவா? இரண்டுமே நடக்கவில்லை என்பதே உண்மை. அண்ணாவின் ஆரிய மாயை, தீ பரவட்டும், நிலையும் நினைப்பும் என்று பல புரட்சிகரமான நூல்கள் பல்வேறு பதிப்பகங்களால் வெளியிடப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.

அப்படி கருத்துத் திரிபுகள், வந்தால், அதை சுட்டிக்காட்டி திருத்துவதே பெரியார் இயக்கங்களின் கடமைகளில் ஒன்றாகும். வால்மீகி ராமாயணத்தின் ஆபாசங்களை, தந்தை பெரியார் தோலுரிக்கத் தொடங்கிய பிறகு, அந்த ஆபாசங்களை நீக்கிவிட்டு, அதன் பிறகு, இராமாயண பதிப்புகள் வெளிவரத் தொடங்கியபோது, பெரியாரே அதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தி வந்தார்.

கி.வீரமணியின் வாதப்படி, தலைவர்களின் நூல்கள் அந்தந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் வெளியிட முடியும். இதிலாவது, வீரமணிக்கு நேர்மையிருந்தால், `நாட்டுடையாக்குவதே கூடாது' என்ற கருத்தை முன் வைத்திருக்க வேண்டாமா? எப்போதாவது முன் வைத்திருக்கிறாரா? மாறாக, கலைஞர் வேறு பலரின் நூல்களை நாட்டுடைமையாக்கும் அறிவிப்புகளை வெளியிட்ட போதெல்லாம் இவர் பாராட்டி வரவேற்றவர் தானே?

எந்தக் கருத்தையும், ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக எடுத்துச் சொல்வதுதான் பெரியார் அணுகுமுறை; உள்ளத்துக்குள் ஒரு கருத்தை ஒளித்து வைத்துக் கொண்டு, வெளிப்படுத்திவிடக் கூடாது என்று மறைக்கும் `பார்ப்பனிய சூழ்ச்சிகள்', பெரியாரிடம் இருந்ததே கிடையாது.

அதனால் தான், அவர் பெரியார். ஆனால் வீரமணியின் சிந்தனைக்குள் `பார்ப்பனியம்' பதுங்கி நிற்கிறது. திரைமறைவு பேச்சுகள், சூழ்ச்சித் திட்டங்கள், வஞ்சக வலைகள் என்ற திசையில், அவர் பயணிப்பதால், அவரிடம் நேர்மையான, உறுதியான பதில்கள் வெளிப்படாமல் போய்விடுகின்றன. `பெரியாரின் எழுத்துகளை வேறு எவரும் பதிப்பித்துக் கருத்துகளை மாற்றி விடுவார்கள்' என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு, `ஆனால் தேச உடைமையாக்குவது அரசின் முடிவு' என்று, பதுங்கிக் கொள்வது ஏன்?

பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்குவதை எதிர்க்கிறோம் என்று நாணயமாக அறிவிக்க மறுப்பது ஏன்? ப.அறிவு நாணயம்' பற்றி அடுத்தவர்களுக்கு `அறிவுரை' வழங்கும் கி.வீரமணியின், அறிவு நாணயம் இதுதானா? பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்கக்கூடாது என்று அறிவித்தால் - மக்கள் மன்றத்தில் அம்பலமாகிவிடுவோம் என்பதால் தானே, இந்த கபட நாடகம்! இதில் மறைந்திருக்கும் உண்மை என்ன? தமிழக அரசிடம், `தேசவுடைமையாக்கக் கூடாது என்று ரகசியமாகக் கூறி, காரியத்தை சாதித்துக் கொள்வேன்; ஆனால் அதை வெளிப்படுத்த மாட்டேன்' அப்படிக் கூறிவிட்டால் மக்கள் மன்றத்தில் தனது முகத்திரை கிழிந்துவிடும் என்பது தானே? இப்படிப்பட்ட சூதுமதியாளர்கள், ஒளிவுமறைவற்ற, சமரசமற்ற வெளிப்படையான, பெரியாரியல் சிந்தனைகளை நேர்மையாகப் பரப்புவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் என்ற கேள்வியை தமிழின உணர்வாளர்கள் சிந்தனைக்கு வைக்கிறோம்.

கி.வீரமணி அதே பேட்டியில் தெரிவித்த மற்றொரு கருத்தையும் முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும். `பெரியாரின் கருத்துகளை மொத்தமாகப் பதிப்பிக்கும்போது கொள்கைக் குழப்பங்கள் ஏற்பட்டு விடும். அதனால் தான் இந்த அறிவிப்பு' என்று கூறியுள்ளார்.

1925 ஆம் ஆண்டிலிருந்து 1938 ஆம் ஆண்டு வரை பெரியார் `குடிஅரசில்' எழுதியவற்றையும், அவரது பேச்சுக்களையும், காலவரிசைப்படி தொகுத்து வெளியிடும் முயற்சியைத்தான் ‘மொத்தமாகப் பதிப்பிக்கும் ஆபத்து' என்கிறார் கி.வீரமணி. பெரியாரின் எழுத்துக்களை அப்படியே உள்ளது உள்ளபடியே வெளியிடாது மாற்றி விடுவார்களே என்று வாதிடும் அதே வீரமணி தான், பெரியாரின் எழுத்துக்களை கால வரிசைப்படி தொகுத்து மொத்தமாக வெளியிடுவதால் `கொள்கைக் குழப்பம்' ஏற்பட்டு விடும் என்று கூறுவது, அவரது முரண்பாட்டையே காட்டுகிறது.

ஆக, பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி தொகுத்தாலே அது கொள்கைக் குழப்பமாகிவிடும் என்று கூறுவதன் மூலம், பெரியாருக்கே குழப்பவாதி என்ற முத்திரை குத்த விரும்புகிறாரா என்பது நமக்குப் புரியவில்லை. காலவரிசைப்படி, பெரியாரின் கருத்துகளைத் தொகுப்பதன் அடிப்படையான நோக்கமே - ஒவ்வொரு சமூக, அரசியல், சூழல்களில் பெரியார் எடுத்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் தான். எத்தகைய அக-புறச் சூழல்களில் பெரியார் எத்தகைய பிரச்சினைக்கு முதன்மை தந்து, இயக்கத்தை வழி நடத்தினார் என்ற உண்மைகளை கால வரிசைப்படி வெளியிடுவதன் வழியாக நாட்டுக்கு விளக்குவதைக் கண்டு - கி. வீரமணிகள் ஏன் பயப்படுகிறார்கள்?

பயப்படுவதற்கு காரணம் என்ன தெரியுமா? வீரமணியின் கொள்கைக் குழப்பங்களை அம்பலப்படுத்திவிடும். இதுதான் உண்மை. அதனால் தான், ‘கடவுள், மதம், பெண்ணுரிமை, சாதி, தீண்டாமை’ ஆகிய தலைப்புகளின் கீழ் பெரியார் சிந்தனைகளை தங்கள் அமைப்பு தொகுத்து வெளியிடுவதாக - கி. வீரமணி, இதே பேட்டியில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், தி.மு.க. ஆட்சி காலத்திலும் கி. வீரமணி, எந்தெந்தக் கருத்துகளை முன் வைத்தார்; அறிக்கைகளை வெளியிட்டார்; என்று கால வரிசைப்படி இவரது கருத்துகளைத் தொகுக்க ஆரம்பித்தால், இவரது முகத்திரை சுக்கு நூறாக கிழிந்து போய்விடும். அந்த அச்சமும், நடுக்கமும் தான் பெரியாரின் கருத்துகளை கால வரிசைப்படி தொகுத்துவிடக் கூடாது என்ற பதைபதைப்பிலும், பதட்டத்திலும், இவரைக் கொண்டு போய் நிறுத்தி வைத்துள்ளது.

காலவரிசைப்படி `குடிஅரசு' தொகுப்புகள் வரும்போது - பெரியாரின் ஊசலாட்டமற்ற கொள்கை உறுதி புலனாகும். தான் ஆதரித்தவர்களையேகூட - கண்மூடித் தனமாக ஆதரிக்காமல், குறைகளை துணிவோடு சுட்டிக்காட்டினார் என்ற உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும். பெரியாரின் எதிர்ப்பும், ஆதரவும், நிபந்தனை களுக்கு உட்பட்டே இருந்திருக்கிறது என்பது - புரிய ஆரம்பித்துவிடும். அதிகார அமைப்புகளையும், இந்திய தேசியத்தையும், பெரியார் உறுதியோடு எதிர்த்தது வெளிச்சமாகும்.

பெரியார் எந்த காலத்திலும், தனித் தமிழ்நாடு கேட்டதே இல்லை என்று வீரமணிகள் விஷப் பிரச்சாரம் செய்ய முடியாது. கால வரிசைப்படி தொகுப்பு வெளியிடுவதை எதிர்க்கும் பின்னணி இது தான். கி.வீரமணி எப்போதும், கலைஞரிலிருந்து - மாயாவதி - சோனியா காந்தி வரை பாராட்டுகளையும், ஆலோசனைகளையும் வண்டி வண்டியாக முன் வைத்து அறிக்கைகள் எழுதிக் குவிப்பதை தமிழ் கூறும் நல் உலகம் நன்றாகவே அறியும்.

ஆனால், ஒரே ஒரு பிரச்சினையில் மட்டும், இவர் ஆலோசனையைத் தாமாக முன் வந்து வைக்கத் தயாராகவே இல்லை. பெரியார் நூல்களை `அரசுடைமையாக்க வேண்டும் என்பதில் உங்களது கருத்து என்ன?' என்று `ஆனந்த விகடன்' செய்தியாளர் கேட்ட கேள்விக்கு - கி. வீரமணி தந்துள்ள பதில், `அரசாங்கம் கேட்டால் அப்போது சொல்கிறோம்' என்பதாகும்.

அரசாங்கம் கேட்ட பிறகு, தனது `விலை மதிப்பு மிக்க' ஆலோசனையை வழங்குவதற்காக, கி. வீரமணி அவர்கள் ஒதுக்கி வைத்திருக்கும் ஒரே பிரச்சினை, பெரியாரின் நூல்களை தேசவுடைமையாக்குதல் பற்றியது தான். `நாங்கள் திறந்த புத்தகம், எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் வெளிப்படையாகவே செய்வோம்' என்று கி.வீரமணி அடிக்கடி உச்சரிக்கும் வசனத்துக்கு அர்த்தம் `கேட்டால் தான் சொல்வோம்' என்பது தானோ?

Pin It