கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பெரியார் நூல்களுக்கு - அறிவுசார் சொத்துடமை கோரி, கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிவிப்பு தொடர்பாக `வின்' தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த விவாதத்தில் எழுத்தாளர்கள் ஞாநி, சூரிய தீபன், ஓவியா, ஆகியோர் பங்கு கொண்டு, பெரியார் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினர். சி.ஆர்.பாஸ்கரன் நிகழ்ச்சியை வழி நடத்தினார். ஞாநி கூறுகையில், கல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதால், அவர் எழுதிய `பொன்னியின் செல்வன்' நாவல், புத்தக கண்காட்சியில் அனைத்து அரங்குகளிலும் விற்பனையாகிறது.

அதேபோல் பெரியார் நூல்களும் அனைத்து புத்தக விற்பனை நிலையங்களிலும் கிடைக்கக்கூடிய நிலை உருவாக வேண்டும். பெரியாரின் நூல்களை பரவலாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இந்த நிலையில், அதைக் கொண்டு செல்ல முன்வரும் பெரியார் திராவிடர் கழகத்தினரை ஏன் தடுக்க வேண்டும்? பெரியார் கொள்கைகளைப் பரப்பும் முயற்சியில் பல்வேறு இயக்கங்களும், பங்கேற்க முன் வந்தால், பெரியார் கொள்கைகளை இன்னும் வேகமாகப் பரப்ப முடியும்; அதைத் தடுப்பது சரியல்ல என்றார்.

திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளராக உள்ள துரை. சந்திரசேகர், தொலைபேசி வழியாக நிகழ்ச்சியில் பேசுகையில், பெரியார் தனது எழுத்துகளுக்கு, பதிவு உரிமை பெற்றுள்ளார் என்றும், பெரியார் கருத்துகளை திருத்தி வெளியிட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் தான், தமது கழகம் மற்றவர்கள் வெளியிடுவதை எதிர்க்கிறது என்றும் கூறினார்.

அதற்கு சி.ஆர். பாஸ்கரன், `நூல்களை வெளியிடும் பெரியார் திராவிடர் கழகமும், பெரியார் அமைப்பு தானே; அவர்களே பெரியார் கொள்கைகளைத் திருத்தி வெளியிடுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?' என்று கேட்டார். பதிலளித்த துரை. சந்திரசேகர், `பெரியார் திராவிடர் கழகம் வெளியிடுவதை நாங்கள் எதிர்க்கவில்லை; மற்றவர்கள் வெளியிடுவதைத்தான் கூறுகிறோம்' என்று கூறினார். (துரை. சந்திரசேகர் தெரிவித்த கருத்து, அவரது கட்சித் தலைமையின் கருத்தா என்பது நமக்குத் தெரியாது) அப்படி ஏதேனும் பெரியார் கருத்து திருத்தி வெளியிடப்பட்டால், அதை சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமே தவிர, அதற்காக எவருமே வெளியிடக் கூடாது என்று கூறுவது சரியல்ல என்று ஞாநி குறிப்பிட்டார்.

ஓவியா கூறுகையில், பெரியார் கருத்துகளை எவ்வளவோ பேர் திரித்து, பெரியாரை கொச்சைப்படுத்திய போதெல்லாம், இவர்கள் நீண்ட மவுனம் சாதித்தது ஏன் என்று கேட்டார். பெரியார் கருத்தை திரித்து பிரச்சாரம் செய்த போது மவுனம் சாதித்தவர்கள், இப்போது பெரியார் திராவிடர் கழகம், குடிஅரசை வெளியிடும்போது, அதே போல் மவுனமாவது சாதித்திருக்கலாம். ஆனால் இப்போது மவுனத்தைக் கலைத்துவிட்டு, தடுக்க முன் வருகிறார்கள் என்றார்.

சூரியதீபன் பேசுகையில், பாரதியின் பாடல்கள் மார்வாடியிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது; அதை திரைப்பட அதிபர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மீட்டு, பாரதியின் பாடல்களை இசைத் தட்டுகளாக வெளியிட்டார். பிறகு வல்லிக்கண்ணன் போன்ற தமிழறிஞர்கள் முயற்சியால் நாடு முழுதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, அன்றைய முதல்வர் ஓமந்தூர் ராமசாமி அவர்களிடம் அளித்து, நாட்டுடைமையாக்க வலியுறுத்தினர். அப்போதுதான் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான், இன்று அனைத்து பதிப்பகங்களும் பாரதி கவிதை நூல்களை வெளியிட்டு வருகின்றன என்றார்.

பெரியாருடைய கருத்துகளை தவறாக திரித்து விடுவார்கள் என்று இப்போது கூறுகிற வீரமணி போன்றவர்கள்தான், பெரியார் கொள்கைக்கு நேர் எதிரான ஜெயலலிதாவோடு பெரியாரையும் இணைத்து படங்களை வெளியிட்டு, பெரியாரின் கொள்கை எதிரிகளோடு கைகோர்த்து நின்றார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

தொலைபேசி வழியாக பேசிய பெரியார் திராவிடர் கழகத் தோழர் சிற்பிராசன் வீரமணி நடத்தும், நிறுவனங்கள், வர்த்தக மயமாகி விட்டன என்று கூறியதோடு, ஒரு கட்டத்தில் பெரியாரே, கல்வி நிறுவனங்களைத் தொடங்கக் கூடாது என்று முடிவெடுத்து - அரசிடம், கல்லூரி தொடங்குவதற்கான இடத்தையும், பணத்தையும் வழங்கினார். இப்படி முதல்வராக இருந்த பக்தவத்சலத்திடம், பெரியார் வழங்கிய இடம் நிதியால் உருவானதுதான்.

இப்போது திருச்சியிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா. அரசு கல்லூரி என்று குறிப்பிட்டார். விவாதத்தில் பங்கேற்ற அனைவருமே - பெரியார் திராவிடர் கழகத்தின் முயற்சியை ஆதரித்தும், பெரியார் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.