அண்மைக் காலத்தில் அனைவரது கவனத்தையும் சிதம்பரம் கோயில் ஈர்த்திருக்கிறது. சிதம்பரம் கோயிலில் உள்ள தீட்சிதர்கள் கோயில் தங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருவதோடு, இன்றளவும் தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கோயிலில் சிற்றம்பல மேடையில் பிறசாதிகள் எவரும் ஏறக்கூடாது என்று தடை விதிக்கிறார்கள். தமிழில் தேவாரம் பாடுவதை எதிர்க்கிறார்கள்; தடுக்கிறார்கள். கோயிலுக்கு வந்த பெண்களைத் தாக்குகிறார்கள். ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களை இழிவாகப் பேசி வன்கொடுமைச் சட்டத்தின் கீழான குற்றங்களைத் தொடர்ந்து செய்து வருகிறார்கள். கோயிலில் உள்ள பொதுச் சொத்துக்கும், கோயில் வருமானத்திற்கும் கணக்குத் தர மறுக்கிறார்கள். பல்வேறு ஒழுக்கக்கேடான செயல்பாடுகள் அங்கே நடைபெறுவது பற்றிய செய்திகள் வருகின்றன. இந்நிலையில், கோயிலின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும், சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கவும், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிகளைத் தீட்சிதர்கள் எதிர்க்கிறார்கள்.
இந்தியா முழுவதும் நிலைபெற்றிருக்கும் பார்ப்பன சக்திகளையும், அவர்களின் அதிகார வலிமையையும் , இந்திய நடுவண் அரசில் அதிகாரம் செலுத்தும் பா.ஜ.க.வின் அதிகாரத்தையும், அதிகார வர்க்கத்தில் இருக்கும் பார்ப்பன பெரிய மனிதர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தியும், உச்சநீதிமன்றத்தில் செல்வாக்குள்ள பார்ப்பனர்களைக் கொண்டு வழக்காடியும், உச்சநீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் பார்ப்பனச் சார்புத் தன்மையை உசுப்பிவிட்டும், சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுத் தில்லைக் கோயிலைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு செயல் அலுவலர்களை நியமிக்கும் போதெல்லாம் நீதிமன்றத்தின் உதவியோடு அதைத் தீட்சிதர் கும்பல் முறியடிக்கிறது. இதற்குப் பார்ப்பன அரசியல்வாதிகளும், பார்ப்பன வழக்கறிஞர்களும், அனைத்துத் துறையிலும் இருக்கக்கூடிய பார்ப்பன சக்திகளும், சங்கங்களும், ஆர். எஸ். எஸ்சங் பரிவார் அமைப்புகளும் துணையாக நிற்கின்றன.
சிதம்பரம் கோயிலில் உள்ள சிற்றம்பலம் சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபம் தீட்சிதர்களின் மதுபான விடுதியாகவும், ராஜகோபுரம் பாலியல் செயல்பாட்டிடமாகவும் விளங்குவதாக நீண்ட காலத்திற்கு முன்பே விமர்சிக்கப்பட்டிருக்கின்றன. தீட்சிதர்களுக்கிடையே சண்டைகளும், கத்திக்குத்தும் எனப் பல கிரிமினல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. கோயிலுக்குள் இரண்டு கொலைகளும் கூட நடந்திருக்கின்றன. சோழ மன்னர்கள் வேய்ந்த பொற்கூரையில் சில ஓடுகளைக் காணவில்லை என்றும், நகைகள் குறைந்துள்ளன என்றும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
தில்லைக் கோயிலில் இன்றுவரை மொழித் தீண்டாமையும், மக்கள் மீது இனவொதுக்கல் தீண்டாமையும், பெண்கள் மீது இனப் பாகுபாடும் காட்டப்படுகிறது. கடந்த 2000 இல், சிற்றம்பலத்தில் மேடை ஏறி தேவாரம் பாடச் சென்ற ஆறுமுகசாமி ஓதுவார் அடித்து விரட்டப்பட்டார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழ்நாடு அரசு 2008 பிப்ரவரி 29ஆம் நாள் பக்தர்கள் அனைவரும் சிற்றம்பலத்தில் ஏறி தேவாரம் பாடலாம் என்ற ஆணை பிறப்பித்த பிறகும் எவரும் தீட்சிதர்களால் அனுமதிக்கப்படவில்லை. 2008 மார்ச் 2 ஆம் நாள் சிற்றம்பல மேடையில் தக்க துணையோடு மேடை ஏறித் தேவாரப் பாடலைப் பாட ஓதுவார் ஆறுமுகசாமி முற்பட்டபோது தீட்சிதர்கள் கருவறையை மூடினார்கள்; மாமிசமலைகளாக வரிசை கட்டி, நடராசரை மறைத்து மனித சுவர் அமைத்தார்கள். கத்தினார்கள்; ஊளையிட்டார்கள்; இழிவாகப் பேசினார்கள்; ஆறுமுகசாமியையும் காவல்துறையையும் கூட தாக்கினார்கள். அன்று கைது செய்யப்பட்ட ஆறுமுகசாமி உள்ளிட்டோர் மார்ச் 5 ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டு, மார்ச் 6-ஆம் நாள் மீண்டும் சிற்றம்பல மேடையேறி தேவாரம் பாடினார். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு இது சாத்தியமானது.
தமிழும் தமிழர்களும் திருச்சிற்றம்பல மேடை ஏறிப் பாடிய முக்கிய கட்டம் அது. ஆனாலும், பிரச்சினை முடிந்து விடவில்லை. இன்று வரை சிற்றம்பல மேடை ஏறுவது என்பது தீட்சிதர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒன்றாகவே இருக்கிறது. 2020 பிப்ரவரி 13 ஆம் நாள் சிதம்பரத்தைச் சேர்ந்த செயசீலா என்ற பெண்மணி சிற்றம்பல மேடையேறி வழிபட முற்பட்ட நிலையில், தீட்சிதர்கள் தகாத சொற்களால் வசைபாடி, அவரை வெளியேற்றினார்கள். தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 2022 மே 17 ஆம் நாள் சிற்றம்பலத்தில் ஏறி பக்தர்கள் பாடி வழிபடுவதை அனுமதித்து தமிழ்நாடு அரசு ஓர் அரசாணையை வெளியிட்டது. ஆனாலும் எதையும் மதிக்க தீட்சிதர்கள் தயார் இல்லை.
தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாடுகளை ஏற்கவும் தீட்சிதர்கள் தயாரில்லை. 2022 மே 26 அன்று, இந்து சமய அறநிலையத்துறை சூன் 7 மற்றும் 8 ம் நாள்களில் கணக்குத் தணிக்கை குறித்து ஆய்வு செய்ய வருவதாக ஒரு அறிவிக்கையை தீட்சிதர்களுக்கு அனுப்பியது. அதை ஏற்க மறுத்து, மறுப்பு அறிக்கையை அனுப்பினார்கள். 2014இல் அவர்கள் பெற்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு அரணாக இருப்பதாகவும், தமிழ்நாடு அரசின் அறிவிக்கை நீதிமன்ற அவமதிப்பு என்றும் கூறி, தங்கள் கோயில் நிர்வாகத்தை அரசு ஆய்வு செய்வதைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 7 6 2022 அன்று நேரில் சென்று தீட்சிதர்களிடம் நயமாகப் பேசி ஒத்துழைப்பு கொடுங்கள் என்று வேண்டினார். அதன்பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் பழனி கோயிலின் இணை ஆணையர், கடலூர் இணை ஆணையர் உள்ளிட்டு ஆறு பேர் சிதம்பரம் கோயிலின் கணக்குகளைப் பார்வையிடச் சென்றபோது தீட்சிதர்கள் கோயில் கணக்கைத் தர மறுத்து விட்டார்கள். அப்போதும் தங்களுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஆதரவாக இருக்கிறது என்றும், கணக்குகள் தரத் தேவையில்லை என்றும் கூறினார்கள்.
2023 ஆம் ஆண்டு ஆனி திருமஞ்சண விழாவையொட்டி, சூன் 24 முதல் சூன் 27 வரை சிற்றம்பலத்தில் வழிபட அனுமதி இல்லை என்று ஒரு பதாகையை தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத் துறையிடம் அனுமதி கேட்காமலே வைத்தார்கள். தமிழ்நாடு அரசின் அரசாணையை நடைமுறைப்படுத்தச் சென்ற இந்து சமய அறநிலையத்துறையின் தில்லை அம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் காவல்துறை பெண்காவலர்கள் இந்தப் பதாகையை நீக்க முற்பட்டபோது அவர்களை எதிர்த்துத் தீட்சிதர்கள் தகராறு செய்தார்கள். கற்பக கணேச தீட்சிதர் என்பவர் தன் பூணூலைத் தானே கழற்றித் தூக்கி எறிந்து விட்டு பூணூல் அறுந்து போகும் அளவுக்கு தன்னைத் தாக்கியதாக நான்கு பெண் போலீசார் மீது புகார் கொடுத்தார். அறநிலையத்துறை பெண் அதிகாரியின் கை தன் கணவர் மீது பட்டு விட்டதாகக் கூறி ஒரு தீட்சிதரின் மனைவி ஏக வசனத்தில் அதிகாரிகளை வசை பாடினார். இந்து அறநிலையத்துறை அதிகாரிகளும் காவல் துறையும் திரும்பிச் செல்ல நேர்ந்தது. அறநிலையத் துறை இணை ஆணையர் அனுமதி பெற்றுத் தான் பதாகை வைத்ததாக பொய் பேசினார்கள். கோயில் பூஜைகள் நிறைய இருப்பதால்தான் அனுமதிக்கவில்லை என்று விளக்கம் வேறு கூறினார்கள். பதாகையை சூன் 26 ஆம் நாள் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையுடன் வந்து நீக்கினார்கள்.
தீட்சிதர்களின் அடாவடித்தனத்தால் அதிகாரிகளே இந்தப் பாடுபட்டால், எளிய மக்களை தீட்சிதர்கள் என்ன பாடுபடுத்துவார்கள்? இந்தப் பதாகையை 26.06.2022 அன்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நீக்கினார்கள். அதே நாள் கோவிலில் சாமியை வழிபட வந்த சிவபுரி கிராமம் கார்வண்ணன் என்பவரை தீட்சிதர்கள் கன்னத்தில் அறைந்து தாக்கினர். அதற்கு வீடியோ பதிவும் உள்ளது. காவல்துறையிடம் இது குறித்துப் புகார் செய்யப்பட்டது. சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்றும், போனால் போகிறது என்றுதான் வழிபடுவதற்கு பொதுமக்களை அனுமதிக்கிறோம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தைத் திருமணங்களை நடத்தி வருகிறார்கள். 2022 அக்டோபா மாதம் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தன் 13 வயது மகளுக்குத் திருமணம் செய்வித்ததாகக் கைது செய்யப்பட்டார். மணமகள் தந்தை வெங்கடேச தீட்சிதரும் கைது செய்யப்பட்டார். ஒரே ஆண்டில் 4 தீட்சிதர் குழந்தைத் திருமணங்கள் நடந்துள்ளன. ஆனால், இதை மறைக்க அரசு அதிகாரிகளைக் குற்றவாளியாக்கும் வேலையைத் தீட்சிதர்கள் செய்கிறார்கள். கூடுதலாக, தமிழ்நாடு அரசை எதிர்த்துக் காழ்ப்புணர்வுடன் ஆளுநர் ஆர்.என். ரவி களமிறங்கினார். தீட்சிதர்கள் வீட்டுப் பெண்களை கன்னித்தன்மை பரிசோதனை நடத்தி தமிழ்நாடு அரசு கொடுமைப்படுத்தி விட்டதாக ஊடகங்களில் கருத்தைப் பதிவு செய்தார். மனித உரிமை கமிசனில் புகார் செய்தார்கள். ஆளுநரே நேரடியாக ஆள் அனுப்பி தீட்சிதர் குடும்பங்களுடன், அந்தப் பெண்களிடம் விசாரித்து செய்தி சேகரித்ததாகக் கூறினார். பார்ப்பன நலன் காப்பதையே அடிப்படை இலக்காகக் கொண்ட பார்ப்பன, பாஜக உள்ளிட்ட அமைப்புகள் களம் இறங்கி தமிழ்நாடு அரசை அவதூறு பேசின. சிதம்பரம் தீட்சிதர் மேலாதிக்கத்தை இவர்கள் தனித்துப் பார்க்கவில்லை. எதிர்கால இந்து ராஷ்டிரத்தின் ஒரு கூறாகவே பார்க்கிறார்கள். இந்நிலையில், சிதம்பரம் கோயிலைத் தீட்சிதர்களிடமிருந்து மீட்பதை இந்துத்துவ பார்ப்பனிய இந்துராஷ்டிர உருவாக்கத்திற்கு எதிரான போரின் ஒரு கூறாகவே கருத வேண்டும்.
தில்லைக் கோயிலில் தமிழர் உரிமை மறுப்புத் தொடர்கிறது. இப்படியே பிரச்சனை நீண்ட நாட்களுக்குத் தொடர முடியாது. ஆகவே தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமிருந்து மீட்க வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால்தான் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
இந்தக் கோயில் யாருக்குச் சொந்தமானது? தீட்சிதர்களுக்கு இக்கோயில் மீது உரிமை கொண்டாட ஏதாவது சான்றுகள் இருக்கின்றனவா?
சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுடையது என்று சொல்ல எந்த சான்றும் இல்லை என்பதை 1890 ஆம் ஆண்டு நீதிபதி சர். தி. முத்துசாமி ஐயர் மற்றும் நீதிபதி ஷே.ஷே.ஷெப்பர்டு ஆகியோர் தங்கள் தீர்ப்பில் தெளிவாகக் கூறியுள்ளனர். அதேபோன்று, தீட்சிதர்கள் தங்களுக்குச் சாதகமான உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று கூறும்2014 ஆம் ஆண்டு தீர்ப்பும் கூட கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று கூறவில்லை. கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது என்று கூற ஏதாவது சான்று உள்ளதா என்று நீதிபதிகள் கேட்டதற்குச் சுப்ரமணிய சுவாமி அப்படி எதுவும் இல்லை என்று கூறினார். ஆகவே, தில்லை கோயில் தீட்சிதர்களுக்கு உரிமையானது என்று சட்டப்படி கூற சான்றுகளும் இல்லை; தீர்ப்புகளும் இல்லை.
தீட்சிதர்கள் தமிழர்களும் இல்லை. தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் தில்லைவாழ் அந்தணர்களும் இவர்கள் இல்லை. கோயிலை இவர்கள் கட்டவும் இல்லை; இவர்கள் உரிமை கோருவதுபோல தில்லைக் கோயிலின் நிர்வாகம் 20 ஆம் நூற்றாண்டு பாதி வரை இவர்களிடம் இருந்ததும் இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டில் தொடர்ந்து நடந்த அரசியல் உறுதியற்றத் தன்மை தமிழ்நாட்டில் நிலவியபோது, அதைப் பயன்படுத்தி தங்களை கோயில் நிர்வாகத்துக்குள் நிலைப்படுத்திக் கொண்டார்கள். 1925 இல் இருந்துதான் இந்த கோயில் இவர்களது நிர்வாகத்தில் இருக்கிறது என்று கூறலாம். 2014 இல், உச்ச நீதிமன்றம்தீட்சிதர்களுக்குச் சார்பான ஒரு தீர்ப்பை வழங்கிய போதுகூட, கோயில் நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசின் தலையீட்டை அது மறுக்கவில்லை.தமிழ்நாட்டில் உள்ள சைவக் கோயில்களில் முக்கியமான கோயில்களில் ஒன்று சிதம்பரத்தில் உள்ள நடராசர் கோயில். இக்கோயிலிலிருந்து படி எடுக்கப்பட்ட 315 கல்வெட்டுகளும், 20 செப்பேடுகளும் உள்ளன. கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை சோழர்கள் காலத்தில் தில்லை முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன் பிறகு தஞ்சாவூர் முக்கியத்துவம் பெற்றது..
கடந்த காலத்தில் சோழர், பல்லவர், விஜய நகர அரசுகளால் இக்கோயில் கட்டப்பட்டு, புனரமைக்கப்பட்டு வந்துள்ளது. சோழ மன்னர்களில் ஆதித்ய சோழன் (கிபி 871 -907) முதலாம் பராந்தகன் (கி.பி.907- 955) முதலாம்குலோத்துங்கன் (கி.பி.1070 1122) விக்கிரமச் சோழன் (கி.பி.1118- 1135), முதலாம்குலோத்துங்க சோழனுடைய தளபதி நரலோக வீரன், மூன்றாம் குலோத்துங்கசோழன் ஆகியோரால் காலா காலமாக கட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது.சோழர்களின் ஆட்சியில் சிற்றரசனாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் காடவராயன் (கி.பி. 1216-1242) இக்கோயிலின் தெற்கு வாயிலைக் கட்டியதோடு பல்வேறு கோயிற்பணிகளைச் செய்தான். ஆதித்ய சோழனும், பராந்தக சோழனும்இக்கோயிலுக்குப் பொன் கூரை வேய்ந்தார்கள். முதலாம் ராஜேந்திர சோழனின் மகள் வயிற்றுப் பேரன் முதலாம் குலோத்துங்கன் மற்றும் அவனுடைய படைதளபதி நரலோக வீரன் இக்கோயிலின் பெரு வளர்ச்சிக்குப் பங்காற்றினார்கள்.
கிபி 12 மற்றும் 13ம் நூற்றாண்டுகளில் கோயிலின் கோபுரங்கள் கட்டப்பட்டன. கோயிலின் கிழக்குக் கோபுரத்தை விக்ரமச் சோழனும், மேற்குக் கோபுரத்தை சுந்தரபாண்டியனும், தெற்குக் கோபுரத்தை கோப்பெருஞ்சிங்கன் காடவராயனும், வடக்குக் கோபுரத்தை கிருஷ்ணதேவராயரும் கட்டினார்கள். இக்கோயிலின் முதல்பிரகாரம் விக்ரமச்சோழன் திருமாளிகை என்றும், இரண்டாம் பிரகாரம் குலோத்துங்கச் சோழன் திருமாளிகை என்றும், மூன்றாம் பிரகாரம் தம்பிரான் திருவீதி என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மதிலை நரலோக வீரன் கட்டினான்.இவ்வாறு சோழ, பாண்டிய, விஜயநகரப் பேரரசு மற்றும் சிற்றரசர்கள், தளபதிகள் ஆகியோருடைய பங்களிப்பால் இக்கோயில் பெருவளர்ச்சி பெற்றது. இச்செய்திகளிலிருந்து சிதம்பரம் கோயில் பல்வேறு மன்னர்களாலும் சிற்றரசர்களாலும் தளபதிகளாலும் கட்டப்பட்டது என்பதை ஐயமறத் தெரிந்து கொள்ளலாம்.
மன்னர்களால் கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்த இக்கோயில் 1925-க்கு பிறகு தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டது. 19- ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே கோயிலுக்குத் தீட்சிதர்கள் சொந்தம் கொண்டாடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு கோயில் உரிமை என்பது கிடையாது. அவர்கள் கோயிலில் பணியாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அரசர்களால் இத்தலத்திற்கு மானியங்களும் வழங்கப்பட்டுள்ளன.
தில்லை நடராசர் கோவில் தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்ததா?
தில்லை நடராசர் கோவில் மன்னர்களாலும், மன்னர்களால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தது. முதலில் சோழர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பின்னர் விஜயநகர மன்னர்களாலும், தஞ்சை நாயக்க மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில், நீதிக்கட்சியின் முதல்வரான பனகல் அரசர் ராமராயநிங்கர், 1922 ம் ஆண்டு `இந்து சமய அறக்கட்டளைச் சட்டம்’ (The Madras Hindu Religious Endowment Act) கொண்டு வந்தார். 1927 ம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் உருவாக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட கோயில் சொத்துகளை மீட்கவும், கணக்கு வழக்கற்ற சொத்துகளை ஆவணப்படுத்தி அரசு பதிவேட்டில் ஏற்றவும், கோயிலின் நிர்வாகத்தை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் நீதிக்கட்சி இந்த வாரியத்தை உருவாக்கியது. பின்னர், அது மாற்றியமைக்கப்பட்டு, தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறையாக 1960 முதல் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு 36,612 கோயில்களையும், 56 மடங்களையும், 1721 அறக்கட்டளைகளையும் இந்து அறநிலையத் துறையின் கீழ் நிர்வாகம் செய்து வருகிறது. ஆனால் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டை எதிர்த்து சிதம்பரம் பொதுக்கோயில் மீது சொந்தம் கொண்டாடி வருகிறார்கள்.
தீட்சிதர்கள் பொதுக் கோயிலான சிதம்பரம் கோயில் மீது தனிஉரிமை கோரி 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிரச்சினையை எழுப்பியுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை யார் நடத்துவது என்பது தொடர்பாக 1888ஆம் ஆண்டிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அப்போது இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் சர் தி. முத்துச்சாமி ஐயர் மற்றும் ஷே.ஷே.செப்பர்டு, “சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் தனிச் சொத்து என்று சொல்வதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை” என்று தீர்ப்பளித்தனர் (A.S.Nos.108 and 159 of 1888 Dt 17.3.1890).
அதுபோன்றே 1939இல் வெளியான மெட்ராஸ் உயர் நீதிமன்றத் தீர்ப்பு இக்கோயிலை நிர்வகிப்பதற்கு அரசாங்கம் வகுத்தத் திட்டம் என்பது செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது. அதன் பின்னர் 1951 ஆம் ஆண்டில் குமாரசாமி ராசா முதல்வராக இருந்தபோது, கோயிலை அரசின் சட்ட வரம்புக்குள் கொண்டு வருவதற்கெனப் பிறப்பிக்கப்பட்ட ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது. அவருக்குப் பிறகு பொறுப்பேற்ற இராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில், தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால், 1953 இல் அந்த மேல்முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டது. ஆகவே சென்னை மாகாண அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அந்தக் கோயிலின் நிர்வாகம் தீட்சிதர்கள் வசமே தொடர்ந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விதி 107 இன்படி ஒரு கோயில் "வகையறா கோயில்" (demomination temple) ஆக இருந்தால் அதை நிர்வகிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. இதையே சாதகமாகப் பயன்படுத்தி, தீட்சிதர்கள் தாங்கள் ஒரு இந்து சமயப் பிரிவினர் (Religious denomination) என்றும், சிதம்பரம் கோயில் ஒரு இந்து சமயப் பிரிவினருக்கான "வகையறா கோயில்" என்றும் நிறுவ முற்படுகின்றனர். அதற்காக பொய்யான வாதங்களை வைத்து வருகின்றனர்.
சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்களிடமிருந்து 1981 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. 1939 ஆம் ஆண்டின் திட்டத்தை செயல்படுத்த பார்வையாளர்களை நியமனம் செய்தது. தீட்சிதர்கள் இதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார்கள். 1987 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு சிதம்பரம் கோயிலை நிர்வகிக்க ஒரு செயல் அலுவலரை நியமித்தது. தமிழ்நாடு அரசின் இச்செயலை இரத்து செய்யக் கோரி, தீட்சிதர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். 10 ஆண்டுகளுக்குப் பின் தீட்சிதர்களின் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது (1997). தமிழ்நாடு அரசிடம் சீராய்வு மனு அளிக்குமாறு தீட்சிதர்களை நீதிமன்றம் நெறிப்படுத்தியது. 2004 இல் தீட்சிதர்கள் சீராய்வு மனு அளித்தனர். அதுவும் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே 2009 இல் இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் ரிட் மனு தாக்கல் செய்தார்கள். 2009 இல் ரிட் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. 2009 பிப்ரவரி 2 ஆம் நாள், தீட்சிதர்களின் ரிட் மனு தள்ளுபடி ஆன உடனேயே, இரவு எட்டு மணிக்கு நிர்வாக அதிகாரி கோயிலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த ரிட் மனு தள்ளுபடியை எதிர்த்து இரண்டு தீட்சிதர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அதன் மீது 2009 பிப்ரவரியில் தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, கோயில் நிர்வாக அதிகாரியைத் தமிழக அரசு நியமித்தது செல்லும் எனத் தெளிவுபடுத்தியதோடு, நிர்வாக அதிகாரிக்கு ஒத்துழைப்புத் தருமாறு தீட்சிதர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், அந்தத் தீர்ப்பையும் தீட்சிதர்கள் ஏற்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனு மீது 2014 இல் உச்ச நீதிமன்றம் மிகக் கோளாறான தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
சிதம்பரம் கோயிலுக்கான தமிழ்நாடு அரசின் செயல் அலுவலரின் நியமனத்தை எதிர்த்து, தீட்சிதர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் தனித் தனி மனுக்கள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதற்கிடையே தீட்சிதர்கள், இந்து சமய அறநிலையச் சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என்றும், ஏனென்றால் தாங்கள் இந்து சமயத்துக்குள்ளேயே தனியான சைவ சமய உட்பிரிவினர் என்றும் கூறி, ஒரு மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். எனவே இது குறித்து முடிவு எடுத்த பின்னரே இறுதித் தீர்ப்பு வழங்க இயலும் எனக் கூறி 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இந்த வழக்கை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் 7 சனவரி 2014 அன்று சிதம்பரம் நடராசர் கோயில் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்றும், அக்கோயிலுக்குத் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் நியமித்த செயல் அலுவலர் நியமனம் செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற அமர்வில் மேல் முறையீடு செய்தது. ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, சிதம்பரம் நடராசர் கோயிலை தீட்சிதர்களே நிர்வாகம் செய்து கொள்ளலாம் என்றும், கோயில் நிர்வாகத்தில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்யக்கூடாது என்றும் 8 ஏப்ரல் 2019 அன்று தீர்ப்பு வழங்கியது.
தமிழ்நாடு அரசு மீண்டும் 2014 தீர்ப்பை மறுத்து மேல்முறையீடு செய்ய வேண்டும். 2014 இல் தமிழ்நாடு அரசு உரிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரை அனுப்பி வழக்காடவில்லை. தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் தீட்சிதர்கள் வழக்குக்குப் போனார்கள். சுப்பிரமணியசாமி கூறிய திராவிட இயக்கத்திற்கு எதிரான அவதூறு கருத்துகளை செவிமடுத்த நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோரிடமிருந்து தங்களுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பைப் பெற்றார்கள். அதே நிலை இப்போதும் நீடிக்கும் என்று கூற முடியாது. அனைத்து ஆவணங்களும் இந்து சமய அறநிலையத்துறையிடம் உள்ளன. அவற்றை அனுபவம் வாய்ந்த வழக்கறிஞரின் மூலம் மேல்முறையீடு செய்தால் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வெற்றி பெறலாம் ஆகவே இந்த வழக்கை தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.
இன்று தில்லைக் கோயிலுக்குச் சொந்தம் கொண்டாடும் தீட்சிதர்கள் தில்லைவாழ் அந்தணர்கள் அல்லர். இன்றைய தீட்சிதர்கள் தமிழ் மண்ணுக்கு அந்நியர்களே என்பதை பல அறிஞர்கள் கூறியுள்ளனர். முனைவர் பி.ஜி.எல். சுவாமி, Chidambaram and Nataraja : Problems and Rationalization (1979) என்ற ஆய்வு நூலில் இன்றைய தீட்சிதர்கள் காஷ்மீரத்திலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்களது மூதாதையர்கள் சிறிய குழுவாக சிதம்பரத்தில் குடியமர்ந்தபோது அவர்களது காஷ்மீரத்து உறவினர்களுடனான உறவு அறுந்து போயிருக்க வேண்டும் என்றும், இதனால் சிதம்பரத்துக்குள் தங்களுக்குள்ளேயே அகமண உறவு கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். பிற இலக்கியச் சான்றுகளை ஆய்வு செய்யும்போது, அவர்கள் கங்கை, யமுனை ஆறுகளுக்கு இடைப்பட்ட தோவாப் பகுதியில் உள்ள 'அந்தர்வேதி'யில் இருந்து வந்தவர்கள் என்று அறிகிறோம். அந்தர்வேதி என்பது கோதாவரி டெல்டா பகுதி என்ற கருத்தும் நிலவுகிறது.
கிபி மூன்றாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் தமிழகத்துக்குள் புகுந்து மூன்று முடியுடை வேந்தர்களையும் தங்கள் அதிகாரத்துக்கு உட்படுத்தினார்கள். கொடும்பாளூர் பகுதியில் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்ட ஒரு களப்பாளர் கூற்றுவ நாயனார் என்ற சிவபக்தர் என்று அவரைப் பற்றி பெரிய புராணத்தில் சேக்கிழார் பேசுகிறார். சோழ மன்னர்களுக்குத் தில்லைவாழ் அந்தணர்களே முடி சூட்டும் மரபு இருந்தது என்றும், கூற்றுவநாயனார் தனக்கு முடி சூட வேண்டும் என்று கேட்டபோது, சோழர்களைத் தவிர வேறு எவருக்கும் முடி சூடுவதில்லை என்று கூறிவிட்டு, சோழர் மணிமுடியை ஒரு தில்லைவாழ் அந்தணர் குடும்பத்தவரிடம் மட்டும் ஒப்படைத்துவிட்டு, அனைத்துத் தில்லைவாழ் அந்தணர்களும் மலைநாடு (கேரளா) சென்று விட்டதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். கூற்றுவ நாயனார் என்ற அச்சுத களப்பாள மன்னன் சிவபெருமானின் அடியையே முடியாகச் சூட்டிக் கொண்டான் என்று பெரியபுராணம் கூறுகிறது. அவனுடைய காலம் கி.பி. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டாக இருக்கலாம். அதன்பின்னர், சிதம்பரம் கோயில் பற்றிய செய்தி கோச்செங்கணான் காலத்தில் வருகிறது, கோச்செங்கணானுடைய காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பதே சரியானதாக இருக்கும். இடைப்பட்ட காலத்தில் தில்லைக் கோயில் பற்றிய செய்தியோ தில்லை வாழ் அந்தணர்கள் பற்றிய செய்தியோ இல்லை. தில்லைவாழ் அந்தணர்களே மலைநாட்டிலிருந்து மீண்டும் திரும்ப வந்தார்கள் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், தீட்சிதர்கள் போற்றுகின்ற 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் புராணம் மற்றும் தொடர்புடைய நூல்களில், அவர்கள் அந்தர் வேதியில் இருந்து வந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
தில்லைவாழ் அந்தணர்கள் என்று தமிழ் இலக்கியங்கள் தில்லை பூசகர்களை அழைக்கின்றன. "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியார்" என்று ஏழாம் திருமுறை திருத்தொண்டர் திருத்தொகையில் சுந்தரர் தம்மைக் குறிப்பிடுகிறார். தீட்சிதர் என்ற சொல் எந்த தமிழ் இலக்கியத்திலும் மற்றும் எந்தக் கல்வெட்டிலும் வரவில்லை. தொடக்கத்தில் கோயில் பூசகர்களாக நியமிக்கப்பட்ட தில்லைவாழ் அந்தணர்கள் தில்லையை விட்டு ஓடிப் போயிருக்கிறார்கள். மீண்டும் பூசகர்கள் நியமனம் செய்யப்பட்டு மீண்டும் தில்லைக் கோயில் வழிபாடு புதுப்பிக்கப்பட்டது. ஆனால், சுல்தான்களின் படையெடுப்பால் சிதம்பரம் கோயிலில் வழிபாடு நீண்ட காலத்திற்கு நின்று விட்டது. தில்லைக் கோயில் பூசகர்கள் எங்கோ ஓடி மறைந்தனர். தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் முற்றிலும் புதிய வேத பார்ப்பனர்கள் இங்கே குடியமர்த்தப்பட்டு இருக்கின்றனர்.
கி.பி 14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுதப்பட்ட தில்லைக் கோயில் தொடர்புடைய புராணங்கள் மட்டும் தில்லை பார்ப்பனர்களுடன் நடராஜரும் ஒருவர் என புராணக்கதைப் பேசுகின்றன. தீட்சிதர் என்ற சொல் நீண்டகாலப் பயன்பாட்டில் இருந்ததில்லை. இச்சொல் சமீப காலமாகவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்நியர்களான வேற்றுநாட்டு வேதப் பார்ப்பனர்களுக்குத் தீட்சை கொடுத்து (தகுதி அளிக்கப்பட்டு) இங்கே நியமனம் செய்ததுதான்.
கிபி 14ஆம் நூற்றாண்டு முதல் இரண்யவர்மன் என்பவன் தில்லைக் கோயிலை கட்டியதாக புராணங்கள் கூறுகின்றன. உமாபதி சிவாச்சாரியார் என்னும் பூசகர் தம் கோயில் புராணம் என்னும் நூலில் இதை எழுதுகிறார். சமஸ்கிருத சார்புடையோர் எழுதிய நூல்களான சிதம்பர மகாத்மியம், பண்டரிகபுர மகாத்மியம், தில்வாவன மகாத்மியம், ஏம சபாநாத மகாத்மியம் போன்றவை தில்லையின் வரலாற்றைப் பற்றி கதை புனைகின்றன. இவை அந்தர் வேதியிலிருந்து தீட்சிதர்கள் வந்ததாகவும், அவர்களுள் நடராசரும் ஒருவர் என்றும், தர்மசாஸ்திரப்படி சிவனுக்கு வேதவிதிப்படிதான் பூசை செய்ய வேண்டும் என்றும், தங்கள் மேலாண்மையை நிறுவத் தேவையான கதைகளை நூல்களாக்கி பரவவிட்டிருக்கிறார்கள். தமிழகத்திலேயே வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்களும் அந்தர்வேதியிலிருந்து கொண்டு வரப்பட்ட பூசகர்களும் எப்படி ஒருவராகவே இருக்க முடியும்? தங்கள் மேலாதிக்கத்தை நிரந்தரமாக நிறுவுவதற்காகவே தீட்சிதப் பார்ப்பனர்கள் கதைகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
பல்வேறு காலகட்டங்களில் சிதம்பரம் கோயிலில் பூசை நீண்ட காலத்திற்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு முறை 76 ஆண்டுகள், மற்றொரு முறை 37 ஆண்டுகள் வரையிலும் பூசை செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இக்காலகட்டத்தில் கோயிலை விட்டு வெளியேறிய பூசகர்களே மீண்டும் திரும்பி வந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் புதிதாகச் சிலரை தீட்சைக் கொடுத்து தகுதியுள்ளோராக மாற்றி, 'தீட்சிதர்' என்ற பெயருடன் பூசகர்களாக நியமனம் செய்யப்பட்டனர் என்று கருதுவதே சரியானதாகும். ஆகவே இன்று தீட்சிதர்களாக இருக்கக்கூடியவர்கள் தில்லைவாழ் அந்தணர்களின் வழிவந்தவர்கள் அல்ல.*கோயில் நிர்வாகத்திற்கும், தீட்சிதர்களுக்கும் தொடர்பு இருந்ததில்லை*
தில்லை கோயில் நிர்வாகம், அதன் வருமானம், செலவு ஆகியவை தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இல்லை. சோழ மன்னர்கள் காலத்தில் கோயில்கள் அரசனுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அந்தந்த பகுதி குறுநிலத் தலைவர்கள் மற்றும் ஊர்அவைக்குக் கோயில் நிர்வாகத்தின் மீது அதிகாரம் இருந்தது.
கோயில் பூசகர்களே நிர்வாகம் செய்தல் என்பது வழக்கில் இல்லாத ஒன்று. சிதம்பரம் கோயிலில் 315 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 20 செப்பேடுகள் சிதம்பரம் கோயில் பற்றி பேசுகின்றன. இவற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளிலிருந்து அந்தந்த மன்னர்களின் காலத்தில் அரசு அலுவலர்களே நிர்வாகம் செய்தனர் என்று தெரிகிறது. ஸ்ரீ மகேஸ்வர கண்காணி செய்வார், கோயில் நாயகம் செய்வார், திருமாளிகை கூறு செய்வார், ஸ்ரீ காரியம் செய்வார், சமுதாயம் செய்வார், கோயில் கணக்கர் என்ற பெயர்கள் நிர்வாகம் தொடர்பாகக் காணக் கிடைக்கின்றன. இவர்களுக்கு அரசர்கள், சபையார், நாட்டார், நிர்வாகம் தொடர்பாக ஓலை அனுப்பி உள்ளனர். இவர்களில் எவரும் தீட்சிர்கள் அல்லது சிவப்பிராமணர்கள் கிடையாது. கோயிலில் பூசனை வேலை பார்த்தவர்களுக்கு பிராமண போசனம், தளிகை, சட்டிச்சோறு, பிரசாதம் ஆகியவையே வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
சோழமண்டல சதகம் (பாடல் 99) ஒரு முக்கிய குறிப்பைத் தருகிறது. அதன்படி டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்கபூர் படையெடுப்பு நிகழ்ந்த கி.பி.1311 க்கு பிறகு 76 ஆண்டுகள் தில்லை கோயிலில் பூசை நடைபெறவில்லை. பிறகு இரண்டாம் அரிகரர் என்ற மன்னரின் அமைச்சர் முத்தய்ய தண்டநாயகன் மீண்டும் நடராசரை எழுந்தருளச் செய்து பூசையைத் தொடங்கி வைத்தான். இந்த 76 ஆண்டுகளில் தில்லையில் இருந்தவர்கள் எங்கு ஓடினார்கள், என்ன ஆனார்கள் என்பதே தெரியாது. பூசகர்கள் புதிதாகவே நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி விஜயநகரப் பேரரசின் (கி.பி. 1336 1646) காலத்தில், மற்றும் மதுரை நாயக்கர்கள் (கி.பி.1529 1736), (தஞ்சை நாயக்கர்கள் கி.பி.1532 1673) காலத்தில் கோயில்களில் இருந்த தமிழ் அர்ச்சகர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டு அந்த இடங்களில் பிராமணர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. திருவாவடுதுறை ஆதீன வரலாறுக்கு 'அரசவனத்து அறநிலையம்' என்று பெயர். இது (பக்கம் 43) சிதம்பரம் கோயிலில் பூசை நின்று போனதை உறுதிப்படுத்துகிறது.
கிபி 17ஆம் நூற்றாண்டில் (கி.பி.1610) லிங்கம நாயக்கர் என்ற வீரசைவர் உதவியுடன் கும்பகோணம் சைவ வேளாளர் சிவப்பிரகாசம் சிதம்பரம் கோயில் பராமரிப்பு மற்றும் நிர்வாகம் ஆகியவற்றைச் செய்திருக்கிறார். அதுபோன்று கி.பி.1648 வரை சிதம்பரம் கோயிலில் துறையூர் பாளையக்கார ரெட்டியார்களின் நிர்வாகம் நடைபெற்று இருக்கிறது.
பிஜப்பூர் சுல்தான்கள் படையெடுப்பு காலத்தில், கி.பி.1648 இல் கோயிலில் இருந்த நடராசர் சிலை பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டு 40 மாதங்கள் குடுமியான்மலைக்கு அருகில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. பிறகு அங்கிருந்து அது மதுரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 38 ஆண்டுகள் மதுரையில் பத்திரப்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு, அப்போது செஞ்சியையும் தஞ்சையையும் மராட்டியர் ஆண்டு கொண்டு இருந்த நிலையில், செஞ்சியின் அரசனாகிய சாம்போஜியிடம் பரங்கிப்பேட்டை மராட்டிய அலுவலர் கோபால தாதாஜி முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, சாம்போஜியின் சிறிய தந்தையார் மகன் சகசி உதவியுடன், மதுரையிலிருந்து சிதம்பரத்திற்கு நடராசரைக் கொண்டு வந்து மீண்டும் இருக்கையில் நிறுத்தினர். இது 1684 இல் நிகழ்ந்தது. அப்போது குடமுழுக்கு நடத்தியவர் சிதம்பரம் திருச்சிற்றம்பல தவமுனிவர், இச்செய்தி திருவாரூர் கோயிலில் உள்ள நான்கு செப்பேடுகளில் சொல்லப்பட்டுள்ளது.
1702 ல் சிதம்பரம் கோயிலை மேற்பார்வை செய்தவர் பாத பூஜை அம்பலத்தாடும் பண்டாரம் என்பவர். 1711 இல் வேளூர் அம்பலவாண தம்பிரான் என்பவர் நிர்வாகம் செய்தார். அவரிடம் சீர்காழி சீமை ஏழு மாகாணத்தார் மற்றும் "பெரிய வகுப்பு சிறிய வகுப்பு குடியானபேர்" நெல் நன்கொடை அளித்து கோயில் நிர்வாகத்திற்கு உதவினர். இது குறித்த செப்பேட்டில் நடராசர், சிவகாமி அம்மை மட்டுமன்றி, நிர்வாகி அம்பலவாண தம்பிரான் பெயரும் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது என்று கல்வெட்டு ஆய்வாளர் செ. இராசு பதிவு செய்கிறார்.
1747 இல் சண்முக தம்பிரான் என்பவரிடம் கோயில் நிர்வாகத்திற்காக நன்கொடை அளிக்கப்பட்டிருக்கிறது. ஊரவர், வர்த்தகர், புடவைக்காரர் என்று சகலரும் ஆயிரங்கால் மண்டபம், நான்கு கோபுரங்கள், பஞ்சாட்சர மதில் திருப்பணிக்கு நன்கொடைகள் அளித்துள்ளனர். . இவை பற்றிய செய்திகளை சிதம்பரம் கோயிலுக்குரிய 10 செப்பேடுகளில் உள்ளன. அவை திருவாரூர் கோயிலில் உள்ளன. அவை மட்டுமின்றி அரியலூர் பாளையக்காரர் மழவராயரிடம் சில செப்பேடுகள் உள்ளன.
19ஆம் நூற்றாண்டு தொடக்கம் முதல் 20 ஆம் நூற்றாண்டு நடுப்பகுதி வரை, சிதம்பரம் கோயிலின் நிர்வாகம் பிச்சாவரம் பாளையக்காரரிடம் இருந்தன. சாமிதுரை சூரப்ப சோழனார் (கி.பி.1893 1911), தில்லைக் கண்ணு சூரப்ப சோழனார் (1911 1943), ஆண்டியப்ப சூரப்ப சோழனார் ஆகியோருடைய வீட்டு ஆவணங்கள் இதற்குச் சான்றாக உள்ளன. 1925 வரையிலும் கூட அன்றாடம் அர்த்த சாம பூசை முடித்து, கோயில் சாவி பல்லக்கில் வைத்து பிச்சாவரம் சமீந்தாரிடம் சேர்க்கப்பட்டது. விடியற்காலையில் மீண்டும் அந்த சாவி பல்லக்கின் மூலம் கொண்டுவரப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. இதில் காலதாமத இடர்பாடுகள் இருக்கவே, தீட்சிதர்களிடமே சாவி இருக்கட்டும் என்று பாளையக்காரர் அனுமதித்ததால், தீட்சிதர்கள் வசம் கோயிலின் சாவி வந்தது. இது 1911 இல் இருந்து 1925க்குள் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. சிதம்பரம் கோயிலின் வெள்ளிப்படியில் அமர்ந்து, .வெள்ளை பட்டுடுத்தி, வெள்ளி செங்கோல் ஏந்தி,தலையில் முடித்தரித்துக் கொள்ளும் பிச்சாவரம் பாளையக்காரரின் குடும்பத்தவர் இருக்கிறார்கள். சிதம்பரநாத சூரப்ப சோழனார் வரை இவ்வாறு முடிசூடும் விழா நடைபெற்று இருக்கிறது, அவருடைய துணைவியார் திருமிகு சாந்தி தேவி என்கிற ஜெலஜெகந்தி ஆயாள் அவர்களின் குடும்பம் பல வரலாற்றுப் பதிவுகளைக் கூறுகிறது.
அறிஞர் பெருமக்களும் கூட சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுடையது அல்ல, அது பொதுமக்களுடையது என்ற கருத்தை இதற்கு முன்னமே முன் வைத்திருக்கிறார்கள். சிதம்பரம் கோயில் யாருக்குச் சொந்தம்? என்ற கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது. அதில் நீதியரசர் கிருஷ்ணசாமி ரெட்டியார், நீதியரசர் சதாசிவம் மற்றும் துணைவேந்தர் சிட்டிபாபு, பேராசிரியர் வெள்ளைவாரனார், ம.பொ. சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்று, சிதம்பரம் கோயில் மக்களுக்கே சொந்தம் என்ற தீர்மானத்தை இயற்றி தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
தில்லைக் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல. அது மன்னர்களால் கட்டப்பட்டு, மக்கள் தலைவர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அது மக்களின் சார்பாக தமிழ்நாடு அரசால் நிர்வகிக்கப்பட வேண்டும். ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை தில்லைக் கோயிலைக் கையகப்படுத்துவது என்பது சரியானதும், தேவையானதும் ஆகும். 2014 இல் சுப்பிரமணியசாமியின் முன்னெடுப்பில் தமிழ்நாடு அரசு முறையாக ஆவணங்களை உச்ச நீதிமன்றத்துக்கு அளிக்காத நிலையில், தமிழ்நாட்டின் சார்பாக மூத்த வழக்கறிஞர் எவரும் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லாத நிலையில், அந்த வழக்கின் தீர்ப்பு தீட்சிதர்களின் சார்பாக அமைந்து விட்டது. இப்போது தமிழ்நாடு அரசு மீண்டும் மேல் முறையீடு செய்ய வேண்டும். இந்து சமய அறநிலையத் துறையிடம் ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றை முன்வைத்து, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து வழக்காட வேண்டும். சிதம்பரம் கோயில் மீட்டெடுக்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
- பேராசிரியர் த.செயராமன், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்