பார்ப்பனிய ஒட்டுண்ணிகளாய்.. எட்டப்பன் வழியில் எடப்பாடிகள், இராமதாசுகள், வாசன்கள், இரங்கசாமிகள், ஜான்பாண்டியன்கள், பச்சமுத்துகள், கிருஷ்ணசாமிகள், ஏ சி சண்முகங்கள் - என ஆரியப் பார்ப்பனிய அடிமைகள் குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர்..

அரசியலமைப்பை, சனநாயகத்தை, மதச்சார்பின்மையைக் காப்பாற்றுவதற்காக 26 கட்சிகள் இணைந்து `இண்டியா` -எனப் பாசிசத்தை வீழ்த்தப் போவதாக எதிர் நிற்கின்றன. 

மொழித் தேசங்கள் எனும் மாநில உரிமை முழக்கங்களை ஓங்கி முழங்காமல் பாசிச பார்ப்பனியம் வீழ்ந்து விடாது..

இந்தியப் பார்ப்பனிய அதிகார வெறியை நேரடியாக, வெளிப்படையாக எதிர்த்துக் களமாடவும், மாநிலங்களின் முற்றதிகாரங்களை மீட்டெடுக்கவும், இந்திய அரசு என்பது அதிகாரமற்ற ஒன்றியம் என்கிற அளவில் மட்டுமே இருக்க வேண்டும்..

ஆளுநர் அமைப்பை ஒழிப்பது.. சுங்கச்சாவடி எனும் வழிப்பறிகளை நிறுத்துவது.. ஜி. எஸ். டி. - வரிப் பிடுங்கல்களைத் தடுப்பது.. நீட் - உள்ளிட்ட பாசிசத் தேர்வு முறைகளையே இல்லாதொழிப்பது.. பல்கலைக்கழக மானியக் குழு என்கிற வாலாட்டங்களை நறுக்கி முழு அதிகாரங்களையும் மாநில அரசுகளே வைத்திருப்பது.. கல்வித்துறை அதிகாரங்கள் மாநிலங்களுக்கு மட்டுமே என வரையறுப்பது..

- இப்படியான எண்ணற்ற அனைத்து அதிகாரங்களையும் அந்தந்த மாநிலங்களே பெற்றிருக்கிற வகையில் அரசியல் அதிகார மாற்றங்கள் செய்தால்தான் பார்ப்பனியத்தை, பாசிச பாஜக-வை வீழ்த்த முடியும்.

அப்படியான நோக்கங்களையும் அமைத்துக் கொள்ளவில்லையானால் ஆரியப் பார்ப்பனியம் 'இண்டியா'வுக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ். வழி ஊடுருவவும்.. கூட்டணி உறவுகளை அறுத்துக் கூறுபிரிக்கவுமே செய்யும்.

அன்றைக்கு இந்திரா காந்தியின் பாசிசப் போக்கை எதிர்த்த ஜனதா-வை பாரதிய ஜனதாவாக மாற்றியது, பார்ப்பனிய பாசிசத்தை எதிர்த்த வி. பி. சிங்-கை வீழ்த்தியது என்ற படிப்பினைகள் மட்டுமல்ல.., சேர, சோழ, பாண்டியர் கால அரசர்களிடையே முரண்களையும் மோதல்களையும், அழிவுகளையும் தமிழ்கூர் நல்லுலகத்தைச் சிதைத்த படிப்பினைகளையும் ஆழ்ந்து உணர வேண்டும்..

இன்றைக்கு, பாஜக வை எதிர்க்கிற பல கட்சிகள் பார்ப்பனிய எதிர்ப்புக் கொள்கை கொண்டிருக்கவில்லை.. பலர் அந்த எதிர்ப்பின் முதன்மையை உணரவில்லை.. பலர் வல்லரசிய கார்ப்பரேட் முதலாளியத்தை எதிர்க்கும் கொள்கையோ திறனோ கொண்டிருக்கவில்லை. இத்தகைய மெலிவைப் பயன்படுத்தியே பாஜக வளர்க்கப்படுகிறது. தன்னை எதிர்ப்பவர்களின் மெலிவுகளைச் சரிகட்டியோ, கண்டித்தோ, மிரட்டியோ, அதிகார வெறியால் அடக்கியோதான் பாஜக வலுப்பெற்று வருகிறதேயல்லாமல்.. அதற்கொன்றும் மக்கள் செல்வாக்கு இல்லை.. நாட்டில் உள்ள அரம்பர்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு மிரட்டி அரட்டி ஆள்பிடித்து வருகின்றது..

மற்றபடி, ஆரியப் பார்ப்பனியத்தை, இந்திய அதிகாரக் குவியலை, பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் உணர்வு வெகு மக்களிடையே பரவலாக உருவெடுத்து வருகிற இன்றைய காலச் சூழலைப் பயன்படுத்தி பாசிச எதிர்ப்பாளர்கள், பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள், வல்லரசிய எதிர்ப்பாளர்கள், சாதிய எதிர்ப்பாளர்கள் தலைமை கொடுத்துப் போராட வேண்டிய காலம் இது..

2024 - இன் ஆட்சி மாற்றம் என்பது கட்சி மாற்றமாக மட்டுமல்லாது.. குறைந்த அளவிலாவது பாசிச அதிகாரக் குவியலை வீழ்த்தி அடிசாய்க்கிற அதிகார மாற்றமாகவும் அமைய வேண்டும்.

- தமிழ்நாடு ஆசிரியர் குழு

Pin It