உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள சுமார் 5 நீதிபதி பதவிகளை நிரப்ப, உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் (Collegium) என்ற நான்கு மூத்த நீதிபதிகள் அமர்ந்து, நான்கு நீதிபதிகளை பரிந்துரைத்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஒவ்வொரு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளாக (Chief Justices in many Highcourt) பணியாற்றுகிறவர்கள். இவர்களில் தாழ்த்தப்பட்ட சிறுபான்மை வகுப்பினைச் சேர்ந்த, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக மிகவும் திறம்படப் பணியாற்றியவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய மூத்த நீதிபதிகளில் ஒருவருமான ஜஸ்டிஸ் திரு. பி.டி. தினகரன் அவர்கள் சுமார் 10 மாதங்களுக்கு முன் கர்நாடக மாநிலத் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று சிறப்பாக பணிபுரியும் நிலையில், பணிமூப்பு மற்றும் திறமையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரைத்திருக்கின்றது.

வீண்பழி சுமத்தும் பார்ப்பனர்கள்

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் நுழைய முடியாத கோயில் கர்ப்பக்கிரகம் போல வைத்திருந்த உச்ச நீதிமன்றத்தின் தன்மை மாறுகிறதே, தம் இனத்தவருக்கு உள்ள ஏகபோகம் குறைகிறதே என்பதற்காக வீண் பழி தூற்றி, சேற்றை வாரி இறைத்து ஜஸ்டிஸ் பி.டி. தினகரன் உச்சநீதிமன்ற நீதிபதியாகப் போகாமல் தடுப்பது எப்படி என்பதில் பார்ப்பனக் கூட்டம்  அவர்களில் சில உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் சில ஊடகங்கள், ஆங்கில, தமிழ் நாளேடுகள், வார ஏடுகள் ஈடுபட்டுள்ளன.

சாந்திபூஷன் என்ற டில்லியில் வாழும் ஒரு பார்ப்பன வழக்கறிஞர் இதை தனது பெரும் பணியாக எடுத்துக்கொண்டு, அளவுக்கு மீறி நீதியரசர் தினகரன் சொத்து சேர்த்தார் என்று ஒரு பொய்க் குற்றச்சாற்றை, வீண் பழியை அள்ளி வீசி, அவரது நியமனத்திற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் என்பதால், இன்னமும் அவாளின் வெறுப்புப் போகவில்லையே! அவர்மீது ஆதாரபூர்வமாக_ அவர் லஞ்சம் வாங்கினார் என்றோ, ஒழுக்கக்கேடாக நடந்து சொத்து சேர்த்தார் என்றோ நிரூபிக்க முடியுமா?

பார்ப்பனர்களின் உள்நோக்கம்

அவருக்குள்ள சொத்துகள் பற்றிய விவரங்களை, 48 ஏக்கர் நிலங்கள் அவரது பூர்வீக சொத்து  அதன் விரிவாக்கம் குறித்து அவரே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து சொத்து விவரங்களை அளித்து, அவரது வங்கிக் கணக்குகள் முதலியவற்றை ஆதாரபூர்வமாக நேரில் விளக்கி தன்மீது வேண்டுமென்றே அபாண்டமாகக் குற்றச்சாற்றுகளை ஒரு சிலர் கூறுகின்றனர் என்று கூறியுள்ளதோடு, தான் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பிறகு, எந்த சொத்தும் சேர்க்கவில்லை என்றும் திட்டவட்டமாக குற்றச்சாற்றுகளை மறுத்துள்ளார். அவரது சொத்து விவரங்கள் குறித்து பெங்களூர் மிரர் என்ற ஆங்கில ஏட்டின் இணைய தளத்தில் வெளியான தகவல் தனியே தரப்பட்டுள்ளது.

இவர்களது உள்நோக்கம், அவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக வராமல் தடுத்தால், சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு பார்ப்பன நீதிபதிக்கு அதுவும் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை என்ற ஒரு காரணத்தைக் காட்டி, சீனியாரிட்டியில் 5 ஆவது, 6 ஆவது இடத்தில் உள்ளவர், மற்ற உயர்நீதிமன்ற பெண் நீதிபதிகளின் சீனியாரிட்டியைவிடக் குறைந்தவர் இவர் என்ற போதிலும், ஒரு பகீரதப் பிரயத்தனம் நடக்கிறது போலும் என்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன.

சாந்திபூஷன் என்ற பார்ப்பனரின் அபாண்ட பழி

சாந்தி பூஷன் என்ற உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர், மிக மோசமான ஒரு குற்றச்சாற்றை வீசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் (17.9.2009) வெளிவந்துள்ள செய்தியை அப்படியே தருகிறோம்.

Former law minister Shanti Bhushan on wednesday (16.9.2009) delivered a below: the beltremark when he accused the CJI (ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன்) of having a “soft corner’’ for Dinakaran as like him, the Karnataka CJ was also a “Dalit’’.

முன்னாள் மத்திய சட்ட அமைச்சரான சாந்திபூஷன் மிகவும் நியாயமற்ற ஒரு குற்றசாற்றினை புதன்கிழமை அன்று (16.9.2009) கூறினார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி (ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன்) ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் (தலித்) என்பதால், மற்றொரு தலித்தான பி.டி. தினகரன்மீது மிகவும் ஆதரவான போக்கைக் கடைபிடிக்கிறார் என்று கூறியுள்ளார். (டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு, 17.9.2009 சென்னை பதிப்பு, பக்கம் 11).

இது எவ்வளவு மோசமான உள்நோக்கம் கொண்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைக் கொச்சைப்படுத்தும் ஆதாரமற்ற குற்றச்சாற்று? ஒரு கல்லில் இரண்டு பறவைகளைக் கொல்லுவது போன்ற செயல் அல்லவா?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பல ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்கவேண்டிய ஜஸ்டிஸ் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களைத் தடுத்துத் தடுத்துப் பார்த்து அதையும் மீறி அவர் அப்பொறுப்பேற்றவுடன், அவர்மீதும் இதே கூட்டம் வம்பு வல்லடி வழக்குப் போட்டு கடைசியில் அம்முயற்சியில் தோற்றன. இப்போது அவர் தலித் - தாழ்த்தப்பட்டவர் என்பதால், அவருக்கு இப்படி ஒரு உள்நோக்கம் கற்பிப்பதைவிட மிக மோசமான செயல் உண்டா? தலைமை நீதிபதியைப்பற்றி ஒரு மூத்த வழக்குரைஞர் இப்படிப் பேசினால், அது உச்சநீதிமன்ற நீதி பரிபாலனத்தினையே கேவலப்படுத்துவதாகாதா?

நான்கு நீதிபதிகளும் தாழ்த்தப்பட்டவர்களா?

அவர் மட்டும் தனியாகவா பரிந்துரை செய்தார்? அந்த கொலிஜியத்தின் குழுவில் மற்ற 4 நீதிபதிகளில் யாராவது தாழ்த்தப்பட்ட தலித் உண்டா? ஜஸ்டிஸ்கள் பி.என். அகர்வால், எஸ்.எச். கபாடியா, தருண் சாட்டர்ஜி, அல்தாமா கபீர் ஆகியவர்களுடன் கலந்து தானே (கொலிஜியம்) அந்தப் பரிந்துரை நடந்துள்ளது?

பார்ப்பன ஆணவம் காரணமாக தலித் - தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் கேட்க நாதியற்ற சமுதாயத்தவர் என்ற நினைப்பா? எவ்வளவு பெரிய நிலைக்குச் சென்றிருந்தாலும் அவர்களைப்பற்றி தாறுமாறாக இப்படிப் பேசுவது பச்சைப் பார்ப்பனத்தனம் அல்லவா? வாய்ப்பற்ற சமூகம் வரக்கூடாதா?

கர்நாடக வழக்கறிஞர்களில் ஒரு சிலர் அதிருப்தியாளர்களாக இருக்கலாம்; அவர்களில் எவராவது மொட்டை கடிதங்களைப்போல ஏதாவது கூறினால் அதை உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ பொருட்படுத்தலாமா? பி.டி. தினகரன் தலைமை நீதிபதியாக வந்து விடுவார் என்பதால் இந்தப் பழிதூற்றலா?

இன்னொரு சிந்தனையும் முக்கியம் என்கிறார்கள்! பல வழக்கறிஞர்கள். இப்படி இவர்களில் சிலர் பழிதூற்றி, பழி தூற்றி தடுப்பதற்குக் காரணம், திரு. கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, வேறு ஒரு நீதிபதி சில மாதங்கள் தலைமை நீதிபதியாக வரக்கூடும். அதற்குப்பின் ஜஸ்டிஸ் சதாசிவம் தலைமை நீதிபதியாக வரும் வாய்ப்பு உண்டு. அவர் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தவர்; அவரது நேர்மையும், திறமையும் எவராலும் குறைகூற முடியாது.

அதற்கு அடுத்தபடியாக ஒருவருக்குப்பின் பி.டி. தினகரன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக வரும் வாய்ப்பும் இருப்பதால், இப்போதே இதைத் தடுத்துவிடவேண்டும். வயதில் மிகவும் குறைந்த ஒரு மராத்திப் பார்ப்பனரை உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு வந்தால் அவர் தலைமை நீதிபதியாக பல ஆண்டுகாலம் இருக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதும் காரணமாக இருக்கலாம் என்ற பேச்சும் சென்னை வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசப்படுவதாகத் தெரிகிறது.

சென்னையிலும், மதுரையிலும் ஆர்ப்பாட்டம்

எனவே, இந்த அநீதியைக் கண்டித்து, பார்ப்பன வழக்குரைஞர்கள், ஊடகங்களின் போக்கைக் கண்டித்து வரும் 25.9.2009 அன்று சென்னையிலும், மதுரையிலும் கண்டன ஆர்ப்பாட்டம்_ நடைபெறும். தலித் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் கொடுமையைத் தடுப்பது என்பதோடு, உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ இப்படிப்பட்ட அவதூறுகளைத் தூக்கி எறியவேண்டும் என்று வற்புறுத்தவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. சமூகநீதியில் நம்பிக்கை உள்ள அனைவரும் இதில் கலந்துகொள்ள முன் வரவேண்டும்.

இது ஜஸ்டிஸ் பி.டி. தினகரன் என்கிற ஒரு தனி நபர் உச்சநீதிமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் அறப்போர் அல்ல; ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமையை நிலை நாட்டிட பொங்கி எழவேண்டிய கடமை என்ற முறையில் சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் நடத்துகிறோம்.

(கருநாடக மாநில தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் பி.டி. தினகரன் அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்படும் ஒரு சூழலில், அவர்மீது வீண் பழி சுமத்தி அவரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக வராமல் தடுக்கும் பார்ப்பன சக்திகளைக் கண்டித்தும், அவதூறுகளைப் புறந் தள்ளி, அவரை உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிப்பதில் எந்தவித மாற்றமும் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தியும் திராவிடர் கழகம் இதற்காக நடத்த இருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை)

Pin It