காதரின் யங்: (2021) கிளர்ந்தெழுந்த மாற்றங்கள் (தமிழ்நாட்டின் சமயம், சாதி, அரசியலில் பிராமணர் அல்லாத தென்கலை வைணவர்களின் பங்களிப்பு).

katherine Young (2021) Turbulent Transformations. Non Brahmin srivaisnavas on Religion, Caste And Politics in Tamil Nadu. Orient Black Swan, Hyderabad. 500 029

சென்ற இதழின் தொடர்ச்சி...

இந்நூலிற்கான தரவுகளில் ஒரு பகுதி வாய்மொழித் தரவுகளாகும். நூலின் தலைப்பிற்கேற்ப இத்தரவுகள் பிராமணர் அல்லாதாரிடம் இருந்தே சேகரிக்கப் பட்டுள்ளன. இத் தரவுகள் சேகரிப்பிற்கான நேர்காணலை தென்கலை வைணவப் பிரிவைச் சேர்ந்த செட்டியார், தலித், இசை வேளாளர், நாயுடு, பிள்ளை, ரெட்டியார், சாத்தாதர், வன்னியர், யாதவர், வேளாளர் ஆகிய சாதியினரிடம் நிகழ்த்தியதாக நூலின் அறிமுக உரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர், வைஷ்ணவர் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்கள். அத்துடன் பாகவதர் (பக்தர்கள்) என்றும் இராமனுஜ தாசர் என்றும் இவர்கள் தம்மை அழைத்துக் கொள்கின்றனர். தம் நேர்காணல்களின் போது தலித்துகளும் தலித் அல்லாதாரும் தலித் என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தவில்லை என்கிறார். தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் பிரிவினரை வைணவர்களாக மாற்றிய இராமானுஜர் அவர்களுக்கு இட்ட பெயர் ‘திருக்குலத்தார்’ என்பதாகும். ஆனால் இவர் சந்தித்த தலித் வைணவர்கள் இச் சொல்லைப் பயன்படுத்தாது ஹரிஜன், ஆதி திராவிடர் என்ற சொற்களையே பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வாய்மொழி வரலாறு

நம் காலத்திய பிராமணர் அல்லாத வைணவர்களின் வரலாறு மறைந்து வருகிறது என்று கருதும் நூலாசிரியர் மரபு குறித்த நினைவுகளும் அறிவும் குறைபாடு உற்றதே காரணம் என்கிறார்.இதை ஈடு செய்யும் வகையில் பிராமணர் அல்லாத ஸ்ரீவைஷ்ணவர்களின் வாய்மொழி வரலாற்றைப் பயன்படுத்தியுள்ளார். வாய்மொழி வரலாறு என்பது குறித்த வரையறையாக சிறிய அளவிலான மேற்கோள் ஒன்றை இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த மேற்கோளின்படி, வாய்மொழி வரலாறு என்பது தனி மனித நினைவுகளைச் சேகரித்தும் பதிவுசெய்தும் வரலாற்று ஆவணமாக்குதல் ஆகும். இது மானுட அனுபவங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அறிய உதவுவதுடன் மட்டுமின்றி மக்களின் கடந்த காலம் எப்படி இருந்தது என்பதையும் அதை அவர்கள் எவ்வாறு எதிர் கொண்டார்கள் அல்லது உணர்ந்தார்கள் என்பதையும் அறிய உதவும் சிறந்த முறையாகும்.vaishnavitesவாய்மொழி வரலாற்றின் இப் பண்பாடானது ஆய்வுக்கு உதவிகரமானது என்றாலும் தம்மைப் பொறுத்த அளவில் பிராமணர் அல்லாத ஸ்ரீவைஷ்ணவர் குறித்த தமது ஆய்வுக்குப் போதாததாகவே இருந்தது என்கிறார். ஸ்ரீவைஷ்ணவம் ஆய்வுக்காக கல்வெட்டுகளின் துணையுடன் எழுதப்பட்ட வரலாற்று அரசியல் நூல்கள், காலனிய ஆட்சியின் போது வெளியான விவரச் சுவடிகள் (கெசட்டியர்) நீதிமன்றத் தீர்ப்புகள், பிராமணர் அல்லாதார் வெளியிட்ட சிறு நூல்கள், செய்தித்தாள்களில் வெளிவந்த கட்டுரைகள் என்ற அச்சுப் பனுவல்களைப் படித்தறிந்துவிட்டே இந் நூலாசிரியர் தகவலாளர்களிடம் நேர்காணல்களை நடத்தி உள்ளார். அவரது தகவலாளர்களும் நூலாசிரியர். படித்தறிந்த செய்திகளையே கூறியுள்ளனர் ஆவணங்களில் இடம் பெறாத செய்திகள் அவர்களிடமிருந்து கிடைக்கவில்லை.சமூகவியல் ஆய்வுகளில் எழுத்தாவணங்களின் போதாமையை நூலாசிரியர் உணர்ந்தமை இங்கு வெளிப்படுகிறது.

இருப்பினும் வாய்மொழித் தரவுகள் இந்நூலில் குறிப்பிடத் தக்க அளவில் இடம் பெற்றுள்ளன என்று கூற இயலும். மூன்றாவது இயலில் சென்னை அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நான்காவது இயலில் புதுச்சேரி அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஐந்தாவது இயலில் திருஅரங்கம், தஞ்சாவூர்ப் பகுதிகளிலும் நேரகாணல்கள் வழி அவர் கேட்டறிந்த வாய்மொழி வரலாற்றுச்செய்திகளைப் பயன்படுத்தி உள்ளார்.

ஏழாவது இயலில் கோவிலை மையமாகக் கொண்ட அரசியலையும் நீதிமன்ற வழக்குகளையும் குறிப்பிட்டுள்ளார். கோவில்கள் ஏராளமான விளைநிலங்களையும். பிற சொத்துக்களையும் வழிபடும் மக்களையும் கொண்டிருப்பதால் இதை நிர்வகித்தல் தொடர்பான முரண்பாடுகள் எழுவது இயல்பான ஒன்று. மேலும் வடகலை, தென்கலை என்ற இரு வைணவப் பிரிவினரும் ஒரே கோவிலை தம் வழிபாட்டிற்காகக் கொண்டிருக்கும் போது இது சற்று வீரியமாகவே வெளிப்படுவது இயல்பானதுதான்.பிராமணர் ஆதிக்கம் செலுத்தும் கோயில்களில் வழிபாடு, வழிபாட்டுப் பாடல் பாடுதல், குருக்களாகச் செயல்படல் என்பனவற்றை மையமாகக் கொண்டே சமத்துவம் இன்மை வெளிப்படுகிறது என்பது நூலாசிரியரின் கருத்தாகும். மேலும் வடகலை வைணவம் பிராமணர்களையும் தென்கலை வைணவம் மிகுதியான எண்ணிக்கையில் பிராமணர் அல்லாதாரையும் கொண்டிருக்கும் நிலையில் இம் முரண்பாடு சற்று ஆழமாகவே வெளிப்படும்.இவ்வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரத்தசாரதி கோயில் நடைமுறை உரிமைகள் தொடர்பாக வடகலையாருக்கும் தென்கலையாருக்கும் இடையே எழுந்த முரண்பாடுகளையும் நடந்த வழக்குகளையும் ஆய்வாளர் அர்ச்சுண் அப்பாத்துரையின் கட்டுரை ஒன்றை அடியொற்றி சில செயதிகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

வழிபாட்டில் சமத்துவம்:

பார்த்தசாரதி கோயில் நிர்வாகம் தொடர்பாக சில முடிவுகளை எடுக்கும் போது நிர்வாகிகளிடையே வாக்கெடுப்பு நடத்தும் முறை இருந்துள்ளது.இதில் பிராமணர் அல்லாதாரின் வாக்களிப்பு உரிமையைப் பறிப்பதன் வாயிலாக கோயில் நிர்வாகத்தில் அவர்களின் பங்களிப்பை இல்லாதாக்க பிராமணர்களான வடகலையார் முடிவு செய்தனர். இம்முடிவை நிறைவேற்றும் வழிமுறையாக உறுப்பினர்களுக்குக் கல்வித்தகுதித் தேர்வையும் கட்டணத்தையும் அறிமுகம் செய்தனர். இதை எதிர்த்துப் பிராமணர் அல்லாத தென்கலையார் நீதி மன்றம் சென்றனர். வழக்கில் இறதிவரை அவர்களால் வெற்றிபெற இயலவில்லை. இருப்பினும் பிராமணர் அல்லாதார் இயக்கம் தென்கலையாரை நிமிரச் செய்துள்ளது.

வைணவ பாகவதர்கள் (பக்தர்கள்) கோயிலுக்குள் எந்த வாயில் வழியாக நுழைய வேண்டும் எங்கு அமர வேண்டும் எங்கே எப்போது தீர்த்தம் பிரசாதம் சடகோபம் (இதை ‘சடாரி' என்றும் குறிப்பிடுவர். பெருமாள் கோயிலில் ஆசி வழங்குவதற்காகப் பக்தர்கள் தலையில் வைத்து எடுக்கப்படும் வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் ஆன திருமாலின் பாதம் பொறிக்கப்பட்ட சிறு கிரீடம்.) பெற வேண்டும் என்பதில் பாகுபாடு முன்பு இருந்துள்ளதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். 1944 க்கும் 1968க்கும் இடைப்பட்ட காலத்தில் நம்பிள்ளை சபா என்ற அமைப்பைச் சேர்ந்த நாயுடு இணைந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நிலவிய சாதிப் பாகுபாட்டிற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 1959இல் இந்து அறநிலையத் துறை கோயில்கள் மடங்கள், அறக்கட்டளைகள் ஆகியனவற்றின் நிரவாகத்தை கவனிக்கத் தொடங்கியது.சமூகத்தினர் பிற பிராமணர் அல்லாத சமூகத்தினருடன்

1964 இல் நாயுடு சமூகத்தினர் பார்த்தசாரதி கோயிலில் தீர்த்தம் வழங்க பிராமணருக்கும் பிராமணர் அல்லாதாருக்கும் தனித்தனிப் பாத்திரங்கள் பயன்படுத்துவதாகவும் தீர்த்தம், சடகோபம் இரண்டும் பிராமணருக்கு முதலில் வழங்கப்படுவதாகவும் சடகோபம் பிரமணர் அல்லாதாருக்கு அரிதாகவே பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இக் குற்றச்சாட்டை அறநிலையத் துறைக்கு அனுப்பினர்.இதை ஆராய்ந்த அறநிலையத்துறை ஆணையர் இப்பாகுபாட்டை நிறுத்தும்படி ஆணையிட்டார். அத்துடன் முதலில் தீர்த்தம் பெறும் மரபுரிமை பெற்றிருந்த ‘ஆதியபாகக் கோஷ்டி’என்ற பிராமணக் குழுவுடன் ஏனைய பிராமணர்கள் கலந்து நிற்கக் கூடாது என்றும் ஆணை பிறப்பித்தார்.

பிராமணர் தரப்பினர் இதற்கு மறுப்புத் தெரிவித்தனர். இவை நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தவை முன்னோர்களால் வழங்கப்பட்டவை. கல்வெட்டுக்களில் பதிவானவை என்றனர். அத்துடன் பிராமணத் துறவிகள் சிலருக்கும் அறங்காவலர் சிலருக்கும் சிறப்புரிமைகள் உண்டு என வாதிட்டனர். ஆனால் இந்துஅறநிலையத் துறையின் ஆணையர் இக் கருத்துக்களைப் புறந்தள்ளினார்.

குற்றச்சாட்டுகளை முன் வைத்த மனுதாரர்கள் மரபு சார்ந்த விதிவிலக்குகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.இங்கு சிக்கல் என்பது பிராமணர், பிராமணர் அல்லாத பக்தர்களுக்கு இடையில் காட்டப்படும் வேறுபாடுதான் என்று ஆணையர் சுட்டிக்காட்டினார்.இது ஒரு பொதுப் பிரச்சினை என்பது அவரது கருத்தாக வெளிப்பட்டது. இந்துஅறநிலையத் துறையின் 1959 ஆண்டுச் 106 ஆவது சட்டப் பிரிவானது பிரசாதம் அல்லது தீர்த்தம் வழங்கலில் சாதி, பாலினம் பிறந்த ஊர் என்பதன் அடிப்படையில் பாகுபாடு காட்டுதல் கூடாது என்று விதித்துள்ளதையும் எடுத்துரைத்தார்.

1964 இல் பார்த்தசாரதி கோயில் நிகழ்வைப்போல் 2014இல் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்கோயிலிலும் கோயில் வழிபாட்டில் சமத்துவம் இன்மைக்கு எதிரான குரல் ஒலித்தது.தென்கலையாரில் பிராமணர் அல்லாத பக்தர்கள் இக் கோயிலின் வழிபாட்டில் சமத்துவம் நிலவுவதாகக் கூறி கோயிலுக்கு வெளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது ஒரு நீண்டகாலச் சிக்கலின் வெளிப்பாடாகும்.கோயில்வழிபாட்டில் சமத்துவம் இன்மைக்கு எதிராக பிராமணர் அல்லாதார் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இவ் வழக்கின் தீர்பபு 2008 இல் வழங்கப்பட்டது.வழிபாட்டில் கலந்து கொள்வோரிடையே பாகுபாடு காட்டக் கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இருப்பினும் மாற்றம் எதுவும் நிகழவில்லை.

பிராமணர் அல்லாதவர்கள் மணவாள மாமுனிவர் (தென்கலை ஸ்ரீவைஷணவ ஆச்சார்யார்களில் ஒருவர். கி.பி 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்). சந்ததியின் மைய வாசல் வழியாகச் சென்று வழிபடமுடியாது. அங்கு திவ்வியபிரபந்தம் ஓதலாகாது. வழிபாட்டின்போது பின் வரிசையிலேயே நிற்கவைக்கப்பட்டனர். இதை எதிர்த்தே இப்போராட்டம் நிகழ்ந்தது. இப்போரட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கங்கள் ஆகியன இப் போராட்டத்திற்கு ஆதரவு நல்கின. மையப் பாதை வழியாக பிராமணர் அல்லாதார் செல்வதைத் தடுத்ததாகக் கூறுவதை பிராமணர் தரப்பு மறுத்தது.ஆனால் புனித நூல்கள் ஓதுவது பிராமணர்களுக்கு நீண்ட காலமாக உள்ள உர்மை என்று கூறியது.

நூலாசிரியர் மேற்கொண்ட நேர்காணலின் போது பிராமணர் ஒருவர் திவ்விய பிரபந்தம் ஓதும் குழுவில் பிராமணர் அல்லாதாரைச் சேர்த்துக் கொள்வதில்லை என்று கூறியள்ளார். ஆனால் திருமலையில் உள்ள உடையவர்(இராமானுஜர்) சந்நதியில் சாத்தனியா (சாத்தாத) ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆழ்வார்களின் பாடல்களைப் பாடியதாக 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. கல்வெ எட்டு குறிப்பிடும் சாத்தானியார்கள் சூத்திரர்கள் என்று கோயில் ஒழுகு நூல் குறிப்பிட்டுள்ளது. இராமானுஜரின் (12 ஆவது நாற்றாண்டு) இறுதி ஊர்வலத்தில் 900 பூணூல் அணியாத ஸ்ரீவைஷ்ணவர்கள் கலந்து கொண்டு திவ்வியபிரபந்தத்தில் 3000 பாடல்களைப் பாடியதாக குருபரம்பரை (குருபரம்பரை பிரபாவம் 6000) நூல் குறிப்பிடுகிறது. எஞ்சிய 1000 பாடல்களை பிராமணர்கள் தாளத்துடன் பாடி உள்ளார்கள்.

திருஅரங்கம் வரலாறு கூறும், கோயில் ஒழுகு நூல் சூத்திரர்களான சாத்தானியர்களுக்கு திருஅரங்கம் கோயிலில் பிராமணர்களுக்குப் பின்னால் அமர்ந்து திவ்விய பிரபந்தம் பாடும் உரிமையை இராமானுஜர் வழங்கியிருந்ததைக் குறிப்பிட்டுள்ளது.இவ் உரிமையின்படி திவ்விய பிரபந்தத்தின் முதல் இரண்டு அடிகளைப் பிராமணர்களும் இறுதி இரண்டு அடிகளை சாத்தானியர்களும் பாடுவர்.இந் நடைமுறை 1942 வரை நடைமுறையில் இருந்துள்ளது. பின்னர் நீதிமன்றம் வழி இவ்வுரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திவ்விய பிரபந்தத்தை தமிழ் வேதம் என்றும் இது சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் உரிய புனித நூல் என்றும் வைணவ ஆச்சார்யார்கள் கூறிவந்த நிலையில் இவ்விரு பகுதியினரும் திவ்விய பிரபந்தம் பாட பெரிய வைணவக் கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டது என்கிறார் நூலாசிரியர்.

இந்நிகழ்வுகளை முன் நிறுத்தி அவர் கூறிச் செல்லும் செய்திகள் பண்பாட்டு ஆய்வுகளுடன் நெருக்கமான தொடர்புடையவை.

திருஅரங்கம், திருவல்லிக்கேணி கோயில்களில் திவ்விய பிரபந்தம் பாடும் உரிமை தங்களுக்கு மட்டுமே உரிமையானது என்பதில் தென்கலை வைணவப் பிராமணர்கள் ஏன் குறியாக இருந்தனர் என்ற வினாவை இந்நூலாசிரியர் எழுப்பி அதற்கு விடையும் பகர்ந்துள்ளார். இவை குறித்து அடுத்த இதழில் காண்போம்.

(தொடரும்)

- ஆ.சிவசுப்பிரமணியன், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர், மார்க்சிய சிந்தனையாளர்