periyar 254தமிழ்நாட்டிலும் சத்தியாக்கிரகம் துவக்க யோசனை

சகோதரர்களே! நமது தமிழ் நாட்டில் சுயமரியாதை மகாநாடு நடந்து 8, 9 மாதங்கள் ஆகிவிட்டன. அடுத்த பம்பாயில் சுயமரியாதை மகாநாடு நடந்து 3, 4 மாதமே ஆயின. ஆனால் பம்பாய்காரர்கள் இதற்குள் சத்தியாக்கிரகம் துவக்கி விட்டார்கள். சத்தியாக்கிரகம் அன்றியும் வடநாட்டில் இல்லாமலும் பல கோயில்கள் எல்லோருக்கும் திறந்து விடப்பட்டு விட்டன.

நாமோ மற்றொருவர் செய்த சத்தியாக்கிரகத்தைப் பாராட்டுவதில் முனைந்திருக்கின்றோம். இதை நினைக்கும்போது நம்மை நாம் வாய்ப்பேச்சு வீரர்கள் என்றே சொல்லிக் கொள்ள வேண்டும்.

நிற்க, சிலர் நம்மை “உங்களுக்குத் தான் இந்தமாதிரி கடவுள்களிடத்தில் நம்பிக்கையே இல்லையே, அப்படி இருக்க எதற்காக கோயிலுக்குள் போக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும்” என்று கேட்கின்றார்கள். ஆனால் சகோதரர்களே! நாம் மாத்திரமல்ல; இப்போது எங்கு பார்த்தாலும் ஆஸ்திகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்கூட நம்மைப்போலவேதான்.

அதாவது, கோயில் இருப்பது கல்லும் செம்புமே ஒழிய அவை கடவுள்கள் அல்லவென்பதை தாராளமாய் ஒப்புக் கொள்ளுகின்றார்கள். ஆனால் கடவுளை மனிதன் நினைக்க ஞாபகம் வருவதற்காகவே கோயிலும் அதனுள் இருக்கும் கல், செம்பு, காரை, மரம், படம் முதலிய சிலை உருவங்களும், பெரியோர்களால் செய்துவைத்த ஏற்பாடுகளாகும் என்றும் பாமர மக்களுக்கு இதைச் சொன்னால் புரியாதென்றும், அதையே கடவுள் வீடு என்றும், உள்ளிருப்பவைகளே கடவுள்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது என்பதாக தத்துவார்த்தம் சொல்லுகின்றார்கள்.

இந்த தத்துவார்த்தம் சொல்லுகின்றவர்களைப் பற்றி நான் என்ன நினைக்கின்றேன் என்றால் ஒன்று இவர்கள் கடவுளை மிகக் கேவலப் படுத்துபவர்களாயிருக்க வேண்டும்; அல்லது கடவுள் தன்மை இன்னது என்பதை அறியாத மூடர்களாயிருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாவிட்டால் பொதுஜனங்களை ஏமாற்றும் அயோக்கியர்களாயிருக்க வேண்டும் என்பதேயாகும்.

ஏனெனில், எல்லாம் வல்லவரும் எங்கும் இருப்பவரும். சர்வ இயங்குதலுக்கும் காரணமான கடவுள் என்பவரை ஆறறிவுள்ள மனிதனுக்கு ஞாபகப்படுத்த மற்றொரு மனிதன் முயற்சி வேண்டுமென்றால், அதுவும் அதற்கு ஒரு கட்டடமும் கல் உருவமும் வேண்டுமென்று ஒருவன் சொல்வானானால்.

அவன் கடவுள் என்பதற்கு மேல்கண்ட எல்லாம் வல்ல சக்தியும் எங்கும் உள்ள சக்தியும் ஒப்புக் கொண்டவனாவானா என்று கேட்கின்றேன். (சிரிப்பும் கரகோஷமும்) ஆதலால் ஒரு சமயம் கோயில்கள் மூடர்களால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் நமக்கு ஆட்சேபனை இல்லை.

அப்படிக்கில்லாமல் கோயில்கள் அறிவாளிகளால் கட்டப்பட்டது என்று சொல்வதானால் கண்டிப்பாய் அந்த அறிவாளி என்பவர்கள் சூழ்ச்சியும் வஞ்சகமும் நிறைந்தவர்களாகத் தானிருக்க வேண்டும். ஏனெனில், அந்தக் கோயில்கள் இப்போது அந்த பெரியோர்கள் என்பவர்களின் ஆதாரப்படி (ஆகமப்படி) நடந்து வருவதாகவே இருக்கின்றது.

அந்த ஆகமங்கள் என்பவைகளே மனிதன் அந்தக் கோயிலுக்குள் போகவும் அங்குள்ள சாமியை வணங்கவும் பல நிபந்தனைகளைக் கொண்டதாக இருக்கின்றது. அந்த நிபந்தனைகள் மனிதத் தன்மைக்கு சிறிதும் பொருத்தமில்லாததாயிருக்கின்றன.

அதில் ஒரு சிறிதும் ஒழுக்கத்திற்கும் பக்திக்கும் ஆதாரமானதும் கடவுள் ஞாபகம் வருவதற்கு ஆதாரமானதுமான காரியங்கள் இல்லவே இல்லை. அங்குள்ள கடவுள்களைப் பார்த்தால் கடவுள் ஞாபகம் வருமென்றால் அங்குள்ள தாசிகளைப் பார்த்தால் தாசிகள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன்.

மற்றும் அங்கு கடவுளை வணங்க வரும் மற்ற பெண்களை பார்த்தால் பெண்கள் ஞாபகம் வராதா என்று கேட்கின்றேன். உணர்ச்சியற்ற குழவிக் கல்லை பார்த்த மாத்திரத்தில் கடவுள் ஞாபகம் வருவதானால், உயிருள்ள ஜீவன்கள், பெண்கள், தங்களை பிறர் பார்க்க வேண்டுமென்று அலங்கரித்துக் கொண்டுவந்து நின்றால் ஏன் அந்த ஞாபகம் வராது? அன்றியும் அங்கு கடவுளுக்கு நடக்கும் மற்ற காரியங்களையும் பார்த்தால் ஏன் பார்க்கின்ற மனிதனுக்கு மற்ற ஞாபகமும் வராது என்று கேட்கின்றேன்.

கோயிலைப் பற்றி என்னுடைய கண்ணியமான அபிப்பிராயமெல்லாம் கோயில்கள் கண்டிப்பாக பாதைக்கும் ஒழுக்கத்திற்கும் ஏற்பட்டது அல்லவென்றும் மக்களை மூடர்களாக அடிமைப்படுத்தவும் உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்கின்ற ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்தவும் ஒரு கூட்டத்தார் பாடுபடாமல் இருந்து கொண்டு சோம்பேறித்தனமாய் வயிறு வளர்க்க வேண்டி பொதுஜனங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை கொள்ளை அடிக்கவும் வசதி செய்து கொள்வதற்காகவே ஏற்பட்டதாகும்.

முன் காலத்தில் இருந்த அரசர்கள் மூடர்களும் அயோக்கியவர்களுமாயிருந்ததால் இம்மாதிரி கோயில் சூழ்ச்சிக்கு அவர்களும் அனுகூலமாயிருந்து வந்திருக்கின்றார்கள். சில அரசர்களுக்கு இம்மாதிரியான கோயில் மூலமாகவே ஆக்ஷியும் அனுகூலமும் ஏற்பட்டிருக்கின்றது.

ஆகையால் கோயில்கள் என்பது சோம்பேறிக் கூட்டமும் அரசர்களும் சேர்ந்து தங்கள் சுயநலத்திற்காக பாமர மக்களை ஏமாற்றுவதற்கு செய்த சூழ்ச்சியேயாகும். அவ்வித சூழ்ச்சியை ஒழிக்கவே நாம் எல்லோருக்கும் கோயில் பிரவேசம் கேட்கின்றோம்.

இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, சாவடி, பள்ளிக்கூடம் முதலியவைகள் எல்லாம் ஒரு விதமாக மாற்றப்பட்டு வந்து கொண்டிருந்தாலும் இந்த கோயில்கள்தான் சிறிது மாற்றுவதற்கு இடம் தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது.

ஆதலால்தான், நான் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோவிலுக்குள் போய்த் தீர வேண்டுமென்கின்றேனே ஒழிய, பக்திக்காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவ மன்னிப்புக்காகவோ அல்லவே அல்ல. கோவிலில் சமத்துவமடைந்து விட்டால் மற்ற காரியங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது.

கோவிலில் பிரவேசிக்க நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்கச் செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை. இன்றைய தினம் எல்லோரும் கோவிலுக்குள் ஜாதி வித்தியாசமின்றி விடப்பட்டு விட்டார்கள் என்று ஏற்பட்டு விட்டால், நாளைய தினமே நான் அங்கு எதற்காகப் போகின்றீர்கள்? அங்கு என்ன இருக்கின்றது? அங்கு போனதால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படுகின்றது? ஏன் உங்கள் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் அறிவையும் பாழாக்குகிறீர்கள்? என்று சொல்லி தடுக்கவே முயற்சிப்பேன்.

ஏனென்றால் கோவிலில் உள்ள ஜாதி வித்தியாசம் காரணமாகவே சில மூடர்கள் கோயில்களை புனிதமான இடம் என்று கருதிக் கொண்டு தங்கள் பணத்தையும் புத்தியையும் பாழாக்கி வருகின்றார்கள்.

நம் நாட்டின் வறுமைக்கும் முட்டாள் தனத்திற்கும் கோயில் வரியும் புரோகிதர்கள் வரியும் ஆகமங்களுமே காரணமாகும் என்பது எனது உறுதியான எண்ணம். தரித்திர மும், ஜாதி வித்தியாசமும் ஒழிந்து நமது நாட்டில் அறிவும் செல்வமும், பெருக வேண்டுமானால் இந்தக் கோவில்களும் புரோகிதர்களும் அடியோடு அழிக்கப்பட்டாக வேண்டும்.

எனவே, இம்முயற்சிகள் பலாத்காரத்தின் மூலம் துவக்குவது என்பது எனக்கு ஒரு சிறிதும் நம்பிக்கை இல்லாததும் பிடிக்காததுமான காரியமாகும். ஏனெனில், நூற்றுக்கு தொண்ணூறு மனிதர்கள் உண்மையாகவே தீண்டாமையை நம்பிக் கொண்டு ஆட்சேபிக்கும்படியான பாமரத்தன்மையில் இருக்கின்றார்கள்.

அவர்களிடம் பலாத்காரம் செய்வது நியாயமற்றதும் பாதகமானதுமாகும். சத்தியாக்கிரகத்தின் மூலம் இவர்களுக்கு தானாகவே தீண்டாமை என்பது புரட்டு என்று வெளிப்பட்டுவிடும். பிறகு பொதுஜன அபிப்பிராயம் நமக்கு அனுகூலமாக திரும்பிவிடும்.

அப்போதுதான் எதிரிகள் பலாத்கார மேற்பட்டுவிடுமோ என பயந்துவிடுவார்கள். நாம் இப்போது பலாத்காரமாரம்பித்தால் பாமர மக்கள் தொல்லையும் சர்க்கார் தொல்லையும் எதிரிகள் சூழ்ச்சியும் நம்மை தோல்வியிலேயே கொண்டுபோய் விட்டுவிடும்.

நாம் சத்தியாக்கிரகம் செய்வதில் கூட மிக்க ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில் நாம் எந்தக் கோவிலிலாவது சத்தியாக்கிரகம் ஆரம்பித்தால், அந்தக் கோயிலால் பொறுக்கித் தின்னும் படியான அர்ச்சகர்கள் கோயிலைப் பூட்டி சாவியைக் கொண்டுபோய் நமது மூட சிகாமணிகளாகிய தர்மகர்த்தாக்களிடம் கொடுத்து “உங்கள் பெரியவர்களால் கட்டப்பட்டு எவ்வளவோ சக்தியுடன் இருந்து வந்த கோயிலின் பெருமையை அழிக்க வந்துவிட்டார்கள்; அதை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், இல்லாவிட்டால் உலகமே முழுகிப்போகும்” என்று சொல்லி அவனுக்கும் நன்றாக சாவி கொடுத்துவிட்டுப் போய் விடுவார்கள், கடைசியாக தர்மகர்த்தாவாயிருப்பவன் பாமர மக்களை ஏவிவிடுவான்.

அவர்கள் முரட்டுத் தனமாய் பலாத்காரத்தில் இறங்கும் ஆத்திரத்துடன் வருவார்கள். அந்த சமயத்தில் நாம் ஜாக்கிரதையாய் இருந்து சிறிதும் பொறுமையை இழக்காமல் அவர்களால் ஏற்படும் துன்பங்களை சகித்துக் கொண்டு இருந்துவிட்டோமானால் நாம் வெற்றி அடைந்துவிடுவோம் என்பது உறுதி.

நல்ல வேளையாய் நம்மில் ஒருவர் இருவர் பாமர மக்கள் பலாத்காரத்தால் உயிர்விட நேர்ந்துவிட்டால் கண்டிப்பாய் நமக்கு வெற்றி என்பது திண்ணம், வைக்கம் சத்தியாக்கிரக வெற்றிக்கு முக்கிய காரணம் எல்லாம் நமது பொறுமையும் சகிப்புமேயாகும்.

அங்குள்ள பாமர மக்கள் நம்மை அடித்தார்கள், கத்தியால் குத்தினார்கள், கண்களில் சுண்ணாம்பு பூசினார்கள், 2, 3 தடவை தண்டித்தார்கள். இவ்வளவுக்கும் சத்தியாக்கிரகிகள் பொறுமையாய் இருந்து சகித்துக் கொண்டிருந்ததால் நாம் வெற்றியடைந்தோம். ஆதலால் பொறுமையும் சகிப்பும் இல்லாத சத்தியாக்கிரகம் வெற்றி தராது.

நாம் சாத்வீகத்துக்கும் உறுதியுடனிருந்தால் சர்க்காரும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்கள் எத்தனை பேர்களை ஜெயிலில் வைக்க முடியும்? நம்மில் ஒரு ஆள் பாமர மக்களால் அடிபட்டு இறந்தவுடன் சர்க்கார் நூற்றுக்கணக்கான போலீஸ் காரர்களைக் கொண்டு வந்து போட்டு நமக்கு அடி விழுகாமல் காப்பாற்ற அங்கு காவல் காப்பார்கள். இல்லாவிட்டால் நம்மை கைதி செய்வார்கள்.

எத்தனை பேரைதான் கைதி செய்ய முடியும் என்பதை பார்த்து விடலாம். ஆகையால், நாம் சாத்வீகத்துடன் சத்தியாக்கிரகம் தொடங்கினால் நமக்குப் பணமும் ஆள்களும் வந்து குவிந்தவண்ணமாய் இருக்கும். திருவாளர்கள் சவுந்திர பாண்டியன், சிவராஜ், பாலகுருசிவம், முனிசாமிப்பிள்ளை முதலியவர்கள் எல்லாம் இதில் முனைந்து நிற்பதாக வாக்குக் கொடுத்திருக்கையில் உங்களுக்கு பணத்திற்காவது ஆள்களுக்காவது பஞ்சம் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகையால் பம்பாய் மாகாண நமது சகோதரர் பூனாவில் சத்தியாக் கிரகம் ஆரம்பித்து நம்மைத் தட்டி எழுப்பியதற்காக நாம் அவர்களுக்கு நம்முடைய நன்றியறிதலை தெரிவித்துக் கொள்வதுடன் அவர்களுக்கு ஊக்கமும் தைரியமும் வரும்படி நாம் அவர்களை மனமார பாராட்டக் கடமைப் பட்டிருக்கின்றோம் என்று பேசி முடித்தார். உடனே தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டு பெருத்த கரகோஷத்துடன் நிறைவேறிற்று. அக்கிராசனர் யாருக்காவது ஆட்ஷோபனை உண்டா என்றுக் கேட்டார். ஒருவர்கூட ஆட்ஷோபிக்கவே இல்லை.

பிறகு அக்கிராசனர் தனது முடிவுரையாக சில வார்த்தைகள் சாத்வீகத்தைப் பற்றி பேசினார்.

பிறகு கடைசியாக திரு.சாமி சகஜாநந்தம் தலைவருக்கும் உபன்யாசகர்களுக்கும் வந்தனோபசாரம் சொல்லுகின்றேன் என்று எழுந்து, சத்தியாக் கிரகம் உயர்ந்த சாதி இந்துக்களால் செய்ய வேண்டுமே ஒழிய நாம் செய்ய வேண்டியதில்லை என்றும், ஜெயிலுக்குப் போனால் பெண்டு பிள்ளைகளுக்கு யார் சாப்பாடு போடுவார்கள் என்றும், திரு.ராமசாமி பல தடவை ஜெயிலுக்குப் போய் அனுபோகமிருப்பதாலும், அவருக்கு சாப்பாட்டிற்கு இருப்பதாலும், அவர் எத்தனை தடவை வேண்டுமானாலும் போகலாம் என்றும், வைக்கம் முதலிய சத்தியாக்கிரகத்தில் ஜெயிலுக்குப் போனவர்கள் இன்னமும் கஞ்சிக்கு அலைகின்றார்கள் என்றும், நாம் நன்றாகப் படித்த பிறகு தான் இவ்வித உரிமைக்கு யோக்கியதை உடையவர்களாவோம் என்றும், இவர்களுக்கு அக்கரை இருக்குமானால் சட்டசபையில் ஒரு சட்டம் செய்யட்டும் என்றும், சட்டசபையில் தனக்குப் பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதார்களும் ஆதரவாயில்லை என்றும், ஆதலால் முதலில் பார்ப்பனர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் போய் பிரசாரம் செய்யட்டும் என்றும் சொன்னார். அக்கிராசனர் இதற்கு விடை அளிக்கும்படி திரு.ஈ.வெ.ராமசாமியைக் கூப்பிட்டார்.

இறுதியில் பேசிய சாமி சகஜாநந்தம் அவர்களுக்கும் பதிலளிக்கும் வகையில் பேசியது:-

“சகோதரர்களே! சாமி சகஜாநந்தம் பேசி இருப்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. உங்கள் சமூகத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் இழிவை நீக்க வேறு சமூகத்தார், அதிலும் உங்களை கொடுமைப்படுத்தி அதினால் வாழும் சமூகத்தார் பாடுபட வேண்டும் என்று சொல்லுவது பரிகசிக்கத்தக்கதாகும்.

அந்தப்படி நீங்கள் எதிர்பார்ப்பதும் மிக்க அறியாமையேயாகும். மேல் ஜாதிக்காரர் என்பவர் எப்போதும் உங்களுக்கு நன்மை புரிய வரமாட்டார்கள். அன்றியும் உங்கள் முன்னேற்றத்தில் தடை செய்யாமல் இருக்கவும் மாட்டார்கள்.

தவிரவும் உங்கள் சுயமரியாதைக் குறைவுக்கு நீங்கள் பாடுபடாமல் வேறு யார் பாடுபடுவார்கள் ?

தவிர, நீங்கள் ஜெயிலுக்குப் போனால் உங்கள் பெண்டு பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள் என்று சொல்லுவது கோழைத்தனமேயாகும். தனது பெண்டு பிள்ளையைக் காப்பாற்றவே உலகத்தில் இருக்கும் மனிதன், ஒரு நாளும் சுயமரியாதை அடைய முடியாது. நமது நாட்டுப் பொது அடிமைத் தனத்திற்கே இதுதான் காரணம்.

“நாம் செத்துப் போனால் நமது பெண்டு பிள்ளைகளை யார் காப்பாற்றுவார்கள்” என்று எண்ணுவது அடிமைத்தனத்திலெல்லாம் முதலாவது அடிமைத்தனம். நீங்களும் உங்கள் பெண்டு பிள்ளைகளும் வாழ வேண்டியது முக்கியமா அல்லது உங்களை ஈனஜாதி என்றும் சொல்லி கழுதைகளும் நாய்களும் மலம் தின்னும் பன்றிகளும் நடக்கும் தெருவில் உங்களை நடக்கக் கூடாதென்றும், மலம் கழுவும் குளங்களில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்றும், மலத்தை தொடுவதைவிட உங்களைத் தொடுவது கேவலமென்றும் பிறர் சொல்லுவதிலிருந்தும் அந்தப்படி இன்றும் நீங்கள் நடத்தப்படுவதிலிருந்தும் மீளுவது முக்கியமா என்றுதான் உங்களைக் கேட்கின்றேன்.

மேல்கண்ட இழிவை நீக்கிக் கொள்வதற்கு உதவாத உயிரும் அறிவும் எதற்காக உங்களுக்கு வேண்டும்? இந்த நிலையில் உள்ள உங்களுக்கு பெண்டுபிள்ளைகள்தான் எதற்காக வேண்டும். நீங்கள் ஒவ்வொரு வரும் என்ன இழிவும் அவமானமும் உங்களுக்கு இருந்தாலும் இருக்கட்டும்.

உங்கள் பெண்டு பிள்ளைகள் மாத்திரம் சவுக்கியமாய் இருந்தால் போதும் என்று நினைத்தீர்களானால் என்றுதான் நீங்கள் மனிதர்களாகப் போகிறீர்கள். சுயமரியாதை உணர்ச்சி கடுகளவாவது இருந்தால் பெண்டுபிள்ளைகளோடு வாழ வேண்டும் என்கின்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றுமா என்று கேட்கின்றேன்.

தவிர, ஜெயிலுக்குப் போகின்றவர்களின் பெண்டுபிள்ளை களுக்கு வேறு ஒருவன் சாப்பாடு போடுவதாயிருந்தால் இன்றைய தினம் நமது நாட்டில் 100க்கு தொண்ணூறு பேர்கள் ஜெயிலிலேயே வசிக்க விரும்புவார்கள்.

பெண்டு பிள்ளைகளுக்கு வேறு ஒருவரின் சாப்பாட்டை எதிர்பார்த்து ஜெயிலுக்குப் போவதில் தியாகமென்ன இருக்கின்றது என்று கேட்கின்றேன். தவிர, நீங்கள் நன்றாகப் படித்த பிறகுதான் இவ்வித உரிமைக்கு அருகர்களாவீர்கள் என்று அவர் சொல்லுகிறார்.

இதைக் கேட்க எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கின்றது. இந்த நாட்டில் 100-க்கு 90பேர் கொஞ்சம் கூட படிக்காதவர்கள், அப்படியானால் அவர்கள் எல்லாம் நாயிலும் பன்றியிலும் கடையாய் இருக்கின்றார்களா என்று கேட்கின்றேன்.

இன்றைய தினம் உங்களை தெருவில் நடக்க வேண்டாம் என்று தடுத்துவிட்டு நடக்கும் மற்றவர்கள் எல்லாம் படித்தவர்களா? அன்றியும் உங்களைத் தவிர மற்றபடி நடக்கும் நாய் பன்றிகள் படித்தவைகளா என்று கேட்கின்றேன்.

தவிர உங்களில் ரிக்ஷாவண்டி இழுப்பவர்கள் முதல் மலம் எடுத்து ஜீவிக்க நிர்ப்பந்தப்பட்டிருப்பவர்கள் வரை எந்தக் காலத்திற்குப் படித்து முடிவது? நீங்கள் எந்த காலத்தில் தெருவில் நடப்பது? கோயிலுக்குள் போவது? எந்தக் காலத்திற்கு இழிவை விலக்கிக் கொள்வது என்பது எனக்குச் சிறிதும் விளங்கவில்லை.

தவிரவும், ஒருவன், படித்ததினாலேயே யோக்கியனாய் விடுவானா? மேல்ஜாதியாய் விடுவானா? என்றே கேட்கின்றேன். என்னைப் பொறுத்த வரையில் நான் படித்தவர்களில் அநேகரை அயோக்கியர்கள் என்றே அறிகிறேன்.

பெரிய பண்டிதர்களும் பெரிய வித்வான்களும் தேவாரபிரபந்தம் ஆகமம் சாஸ்திரம் திருக்குறள் முதலியவைகள் படித்த மதப் பித்தர்களும் அயோக்கியர்களாகவே காணப்படுகின்றார்கள். பெரிய பெரிய ஆங்கிலேயர் பட்டம் பெற்றவர்கள் அதைவிட மோசமாயிருக்கிறார்கள்.

மதப்படிப்போ ஆங்கிலப் படிப்போ சாஸ்திரப் புராணப் படிப்போ படித்தவர்களில் யாராவது ஒரு யோக்கியர் இருக்கிறார் என்று சாமி சகஜாநந்தம் அவர்கள் சொல்லுவாரா என்று வணக்கமாய்க் கேட்கின்றேன். படிப்புக்கும் சுயமரியாதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றேன்.

மனிதன் சுயமரியாதை பெறுவதற்கு எதைப் படிக்கவேண்டும் என்று சாமி சகஜாநந்தம் சொல்லுகின்றார் என்பது எனக்கு விளங்கவில்லை. இந்த நிலையில் கணக்குப் போடவும் கையெழுத்துப் போடவும் தெரிந்துவிட்டால் வயிறு வளர்க்க அது ஒரு வழியாகுமே தவிர, இழிவை ஒழித்து விடுமா?

சுயமரியாதையில் கவலையும் உணர்ச்சியும் இருந்தால் எந்தப் படிப்பு இல்லாவிட்டாலும் மனிதனாக இருக்க முடியும். அதில்லாதவன் எந்தப் படிப்பு படித்தாலும் நடைப்பிணமாகத்தான் சுயநலக்காரனாய்த்தான் வாழ முடியும். இதில் ஒன்றும் சந்தேகமில்லை. என்னுடைய அனுபவத்தையே நான் சொல்லுகின்றேன். தவிர தமக்கு அக்கரை இருக்கு மானால் சட்டசபையில் ஒரு சட்டம் செய்யட்டுமே என்கிறார்.

சட்டசபையின் யோக்கியதையை அறிந்த இவர் இப்படிப் பேசுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. சட்டசபையில் யார் இருக்கிறார்கள்? சர்க்காருக்கும், அதிகாரிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும், நம்பிக்கை உள்ள அடிமையாக எவர் நடந்து கொள்ளுகின்றார்களோ அவர்களே பெரிதும் நியமனம் பெறுகிறார்கள்.

22 ஆயிரம் 30 ஆயிரம் 50 ஆயிரம் ரூபாய் எவர் செலவு செய்கின்றார்களோ அவர்களே பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தக் கூட்டத்திற்கு சுயபுத்தியோ, சுயமரியாதை உணர்ச்சியோ, பொதுநல ஆசையோ இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன்.

சாமி சகஜானந்தம் இந்தத் தடவை ஒரு சட்டம் கொண்டு போனால் அடுத்த தடவை இவரை சர்க்காரும் பார்ப்பன அதிகாரிகளும் பார்ப்பனரல்லாத மேல் ஜாதியார் என்னும் அதிகாரிகளும் கண்டிப்பாய் நியமிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.

இவ்வளவையும் மீறி யாராவது சட்டம் கொண்டு போவதாயிருந்தாலும் அச்சட்டத்தை சட்டசபைக்குக் கொண்டுவர ராஜப்பிரதிநிதி அனுமதி கொடுப்பாரா என்கின்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஏனெனில் மக்கள் பல ஜாதிகளாய் உயர்வு தாழ்வாய் ஒருவரோடு ஒருவர் போராடிக்கொண்டு இருந்தால்தான் நமது சர்க்கார் நிம்மதியாய் இருக்க முடியும்.

இல்லாவிட்டால் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து சர்க்காரின் மீது பாய்ந்து விடுவோம் என்கின்ற பயம் சர்க்காருக்கு எப்போதும் உண்டு. ஆகையால், சுலபத்தில் சர்க்காரார் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். நாம் தகுந்த கிளர்ச்சி செய்து, தக்க தியாகம் செய்வதின் மூலம் பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் திருப்பிக் கொண்டு செல்வாக்குடன் இருக்கின்றோம் என்றால் சர்க்கார் ஒரு சமயம் இணங்கிவரக் கூடும்.

25 வருஷமாய் விவகாரத்தில் இருந்த சாரதா மசோதாவுக்கு இதுவரை சாக்குப் போக்கு சொல்லி வந்த சர்க்கார் இன்று இணங்கியதின் கருத்து நம்முடைய கிளர்ச்சியேயாகும். மிஸ். மேயோ எழுதின புஸ்தகமும் சிவா என்கின்ற புஸ்தகமும் சைமன் கமிஷனை ஆதரித்ததற்கு கூலியும், வெளி அரசாங்கங்கள் நமது அரசாங்கத்தைப் பார்த்து நகைக்குமே என்கின்ற பயமும் “இனிமேல் நீங்கள் எங்களுக்கு விரோதமாயிருந்தால் உங்கள் சாஸ்திரத்தில் இதுவரை கை வைக்காமல் இருந்து உங்களுக்கு அனுகூலம் செய்து கொண்டு வந்ததிலிருந்து விலகிக் கொள்வோம்” என்பதை பார்ப்பனர்களுக்கு காட்டி, அவர்களை மிரட்டுவதற்காகவுமே சர்க்கார் அனுகூலமாயிருந்தார்கள் என்று நினைக்கின்றேன்.

ஆகையால் சட்டம் செய்வது என்பது சுலபமான வேலையல்ல. இன்றைய சர்க்கார் வெள்ளைக்காரர், பார்ப்பனர், பணக்காரர் ஆகிய மூவர்களுடைய கூட்டு வியாபாரமாய் நடை பெறுகின்றது. இம்மூன்று கூட்டமும் ஏழைகளுக்கு நன்மை செய்யவோ தீண்டாமையை விலக்கவோ சுலபத்தில் சம்மதிக்குமா என்று கேட்கின்றேன்.

தவிரவும் சீர்திருத்தமும் சுயமரியாதையும் சட்டம் கொண்டுவந்து ஓட்டு வாங்கி நிறைவேற்றி பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒருநாளும் முடியாத காரியம். ஓட்டு என்பது கூட்டுக் கொள்ளையே தவிர வேறில்லை. என்னுடைய உரிமையை கொடுக்கின்றாயா அதற்காக உயிர்விடட்டுமா என்கின்ற கொள்கையுடைய மக்கள் தான் எங்கும் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.

இந்தப் படி நடக்கின்றாயா? அல்லது ஜெயிலில் பிடித்து போடட்டுமா என்று சொல்லும் அரசாங்கம் தான் சீர்திருத்தங்கள் செய்திருக்கின்றது. அதை விடுத்து இம்மாதிரி காரியங்களுக்கு ஓட்டும் சட்டசபையும் ஜாலவேடிக்கையும் வேடிக்கை பார்க்கும் விளையாட்டுப் பிள்ளை நிலையங்களேயாகும்.

தவிர, இங்கு செய்யும் பிரசாரத்தைப் பார்ப்பனர்களுக்கும் அல்லாதவர்களுக்கும் போய் செய்யட்டும் என்று சொல்லுகின்றார். பார்ப்பனர்கள் நமது பிரசாரத்தினால் புத்தி திருந்தி விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது சுத்தப் பயித்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாய் இருந்தால் நியாயம் சொல்லலாம்.

நன்றாய் தெரிந்தே எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய் விடுகின்றதோ என்று சுயநலங்கருதி குரங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்தப் பிரசாரத்தால் எப்படி மாற்றக் கூடும்? பார்ப்பனரல்லாதவர்களோ முக்கால் வாசிப்பேர் பார்ப்பனரைப் பின்பற்றுபவர்களாகவும் பார்ப்பனருக்கு தாசிமகனாயிருந்தாலும் சரி நாம் பறையனுக்கு மேலாயிருந்தால் போதும் என்று முட்டாள் தனமாய் கருதிக் கொண்டிருக்கின்றவர்கள் என்றாலும் நம்மால் கூடியதை செய்துதான் வருகின்றோம்.

எதற்கும் உங்கள் முயற்சியும் சுயமரியாதை உணர்ச்சியும் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடவாது. தவிரவும் இத்தீண்டாமை ஒழிவதற்கு இது ஒரே ஒரு மார்க்கம் தான் என்று நான் சொல்லவரவில்லை. தீண்டாமை ஒழிய வேண்டுமானால் மதத்தைவிட்டு விடுங்கள், அல்லது ஏதாவது ஒரு மதம் வேண்டுமானால் தீண்டாமை இல்லாத மதத்தைத் தழுவலாம்.

உதாரணமாக மகமதிய மதத்தில் மனிதனில் உயர்வு தாழ்மையும் தீண்டாமையும் இல்லை. இனியும் உங்களுக்குத் தோன்றுகின்ற மதத்தை தழுவலாம். ஆகவே நீங்கள் தயவு செய்து நான் சொல்லுவதையும் சாமி சகஜானந்தம் சொல்லுவதையும் பொருமையுடனும் சுய புத்தியுடனும் ஆராய்ச்சி செய்து பார்த்து உங்களுக்கு சரி என்று தோன்றியபடி நடவுங்கள்.

குறிப்பு : 22.10.1929 இல் சென்னை நேப்பியர் பூங்காவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் - சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 27.10.1929)