திரு.பண்டிதர் மதன்மோகன மாளவியா சென்னை மாகாணத்திற்குள் கால் வைத்தது முதல் சமயத்திற்குத் தகுந்தபடி பேசி, ஜனங்களை ஏமாற்றி வந்ததும், அந்த புரட்டுகளை பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாதார்களும் வெளிப்படுத்தியதும் “மித்திரனிலும்”, “திராவிடனிலும்” பார்த்திருக்கலாம்.
அவர் சென்ற இடங்களிலெல்லாம் கோவிலுக்குள் தீண்டத்தகாதவர் என்கிறவர்கள் போவதற்கு இந்து சாஸ்திரங்கள் இடங்கொடுக்கிறதென்று சொல்லிக் கொண்டே வந்துவிட்டு, தாம் அதிக சாஸ்திரம் பார்த்திருப்பதாயும் சொல்லிவிட்டு, கடைசியாக சென்னையில் 22 தேதி கூடிய சாஸ்திரிகள் கூட்டமொன்றில் சிக்கி, 'தீண்டத்தகாதவர்கள் என்பவர்கள் கோவிலுக்குள் பிரவேசிப்பதற்கு சாஸ்திரத்தில் இடமில்லை' என்று சொல்லித் தப்பித்துக் கொண்டாராம். எனவே திரு.மாளவியாவின் பித்தலாட்டம் பார்ப்பனர்களின் அசல் அயோக்கியத்தனத்திற்கு ஒரு உதாரணமாகும்.
(குடி அரசு - கட்டுரை - 26.05.1929)