பிராமணன், பசு இவைகளைக் காப்பாற்றுவதற்காக பாக்கியஜாதிகள் ( தாழ்த்தப் பட்டோர்) பொருளை வாங்காமலேயே உயிர்விட்டால் அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும். - மனுசாஸ்திரம் அத்தியாயம் 10, ஸ்லோகம் 62 பிராமணன் பசுக்களை அபகரித்தவனுக்கும், மலட்டுப்பசுக்களுக்கு சுமை எடுப்பதற்காக ( வண்டி இழுக்க, பாரம் சுமக்க, ஏர் ஓட்ட) மூக்கு குத்தியவனுக்கும் உடனடியாக பாதிக்கால்களை வெட்டவேண்டும். - மனுசாஸ்திரம் அத்தியாயம் 8, ஸ்லோகம் 325
“கறவை நின்ற மாடுகளை அடிமாட்டுக்காக விற்காமல் அது வாழும் காலம்வரை அவற்றைக் காப்பாற்ற வழி செய்யவேண்டியது நம் ஒவ்வொருவருக்கும் உள்ள கடமை - தாயாருக்குச் செய்யவேண்டிய கடமைக்கு சமமான கடமை. பகவத் ஸ்ருஷ்டியிலேயே தன் கன்றுக்கு வேண்டியதைவிட உபரியாக மற்றவர்களுக் கென்றும் பாலைச் சுரக்கிற பசு நமக்கெல்லாம் தாயார்தான்”.
- சந்திரசேகரேந்திர சங்கராச்சாரி, தெய்வத்தின் குரல், மூன்றாம் பாகம்‘திராவிடர் விவசாயம்’ என்ற தலைப்பில் பசுப்பாதுகாப்பு பற்றிய செய்திகள் எதற்காக என்றால், தற்போது புதிதாக இயற்கை விவசாயம் செய்யச் சொல்லும் பலர் மேற்கண்ட மனுசாஸ்திர வரிகளையும் சங்கராச்சாரி கனவு களையும் தான் பேசிவருகின்றனர்.
பார்ப்பன ஆதிக்கத்திற்கு முட்டுக்கொடுக்கும் நம்மாழ்வார்
“நவீன விவசாயம் என்ன செஞ்சுது? விவசாயியையும் மாட்டையும் பிரிச்சுது. மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏரை விட்டுட்டான்; டிராக்டர் வந்துச்சு; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி மாட்டு வண்டியை விட்டுட்டான்; பெட்ரோலும் டீசலும் இறக்குமதி ஆவுது; கம்பெனிக்காரன் பெருக்குறான். மாடு கசாப்புக் கடைக்குப் போவுது; விவசாயி ஏத்தம் இறைக்கிறதை மறந்துட்டான்; ஆழ்குழாய்க் கிணறு வந்துச்சு; மோட்டாரும் குழாயும் விக்குது; கம்பெனிக்காரன் பெருக்குறான். விவசாயி ஓட்டாண்டி ஆயிட்டான். நவீன விவசாயம் என்ன பண்ணுதுனு இப்பப் புரியுதுங்களா?”
2012 ல் ஐந்திணை விழா என்ற பெயரில் இயற்கை உணவுத்திருவிழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் அவர்கள் ஆற்றிய உரை,
இது ஒரு தவறான தகவல். தமிழ்நாட்டில் எந்த கிராமத்திலும் கசாப்புக்கடைக்கு அனுப்பப்படும் மாடுகள் எவையும் ஏர் உழவோ, வண்டி இழுக்கவோ, ஏற்றம் இறைக்கவோ, பால் கறவைக்காகவோ பயன்பட்டுக் கொண்டிருப்பவை அல்ல. இவை போன்ற எந்த பணிக்கும் இலாயக்கில்லாத மாடுகள் மட்டுமே அடிமாடாகப் போகின்றன. இதனால் ஒரு சாதாரண விவசாயிக்கு இலாபமே தவிர எவ்வகையிலும் நட்டமில்லை. இயற்கை விவசாயத்துக்கு எருவைத் தரும் என்றால்கூட மேலே சொல்லப்பட்டுள்ள வேறு எந்தப் பணிக்காவது பயன்பட்டுக் கொண்டிருந்தால் கூடுதலாக சாணி நமக்கு மிச்சம். இன்றைய சூழலில் மாடு வைத்திருப்பதில் சாணி மட்டுமே இலாபமாக மிச்சமாகிறது. ஆடு, மாடு இல்லாதவன் அடைமழைக்கு ராசா என்ற பழமொழியை நாங்கள் அனுபவித்து உணர்ந்தவர்கள். அடிமாட்டுக்கு அனுப்புவதுதான், விவசாயி அடிமாடாகமல் தப்பிப்பதற்கு ஒரேவழி.
ஏர் ஊழவுக்கு கலப்பை வேண்டும். மாட்டுவண்டிக்கு வண்டியும் சக்கரமும் வேண்டும். ஏற்றம் இறைக்க கமலை, சால், பரி, தோல் வேண்டும். நம்மாழ்வார் கூறும் அனைத்தும் இன்றும் வேண்டுமானால் தச்சரும், கொல்லரும் தமது குலத்தொழிலைத் தொடர்ந்து செய்துவர வேண்டும். பரிக்கும் தோலுக்கும் சக்கிலியர் வேண்டும். சக்கிலியர்கள் தம் குலத்தொழிலை தவறாமல் செய்து வரவேண்டும். இப்படி ஒவ்வொரு ஜாதியும் தத்தம் குலத்தொழிலை தவறாமல் செய்து வந்தால் நம்மாழ்வாரின் இயற்கை விவசாயம் நன்றாகத்தான் நடக்கும்.
பரிக்கும், தோலுக்கும் போக மிச்சமான மாட்டுத்தோல் பறைக்குப் பயன்படும். அதுவும் பறையர்களுக்குக் குலத்தொழிலை நினைவுபடுத்தும். இன்னும் விதைப்பு எந்திரம், அறுவடை எந்திரம் இவைகள் வராத கிராமங்களில் விதைப்புக்கும், அறுப்புக்கும் தாழ்த்தப்பட்ட மக்களே மிகுதியாகச் செல்கின்றனர். கதிரடிக்கும் களத்துமேடுகளில் இன்றும் ஒரு பார்ப்பானைக்கூட பார்க்கமுடியாது. இடைநிலைச்சாதிகளையும் அதிகமாகப் பார்க்கமுடியாது. ஆனால் மேல்மட்டத்தில், விவசாயம் தொடர்பாகத் திட்டமிடும் இடங்களில் பார்ப்பனர்கள்தான் குவிந்துள்ளனர்.
இந்திய அமெரிக்க வேளாண்மை அறிவு முனைப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவும், இந்தியாவும் ஒப்பந்தம் போட்டு, அமெரிக்க வேளாண் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேளாண்மையையும் ஒப்படைக்கும் முயற்சியில் எம்.எஸ்.சாமிநாதன் என்றொரு பார்ப்பனர் இருக்கிறார். அதை எதிர்க்கும் முயற்சியிலும் பார்ப்பன நலன்களே இருக்கின்றன. சுற்றுச்சூழல் புரட்சியாளர் என்றால் அது எக்ஸ்னோரா வின் எம்.பி. நிர்மல் என்ற பார்ப்பனர் இருக்கிறார். இயற்கை விவசாயம் என்றாலும் அதிலும் பார்ப்பன வந்தனா சிவாக்கள் தான் முன்னணியில் வருகிறார்கள். கோவையில் பார்ப்பனருக்கு மட்டுமே தனியாக மின்சாரச் சுடுகாடு அமைத்துள்ள கிருஸ்ணா ஸ்வீட்ஸ், கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய இந்து ஆன்மீகக் கண்காட்சியில்அரங்கு அமைத்த பார்ப்பன விகடன் குழுமம் இவையெல்லாம் இயற்கை விவசாய ஆர்வலர்கள்.
இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளையை வளர்க்கும் ஆர்கானிக்
இயற்கை விவசாயம், இயற்கை உணவு என்ற தளத்திலும் பார்ப்பன - இந்து தேசிய - பன்னாட்டுக் கொள்ளைதான் நடந்து வருகிறது. அமெரிக்காவைத் தலைமை யிடமாகக்கொண்டு அகில உலகமெங்கும் இயற்கை விவசாயம் பற்றி பிரச்சாரம் செய்து வருகிறது (Rodale) ரொடெல் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர் நம்மஊரில் பரம்பரை பரம்பரையாக இயற்கை விவசாயம் செய்துவரும் குப்புச்சாமியோ, முனுசாமியோ அல்ல. பார்ப்பன டாக்டர் வந்தனாசிவாவைத்தான் அழைக்கிறார்கள். சங்கராச்சாரியும், இராம கோபாலனும் கனவுகாணும் சமுதாயத்தை - அமெரிக்காவின் ரொடெல் நிறுவனம் கண்டங்களில், 65 நாடுகளில் செயல்படுத்தி வருகிறது.
ரொடெல் என்ற வெளிநாட்டு நிறுவனம் மட்டுமல்ல. உலகம் முழுதும் உணவு மற்றும் நுகர்வுப் பொருட்கள் விற்பனையில் பலஇலட்சம் கோடிகளை முதலீடு செய்து, கொள்ளை அடித்து வரும் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் தான் தற்போது இந்த ஆர்கானிக் உணவுப்பொருட்கள் விற்பனையிலும் கொடிகட்டிப் பறக்கின்றன.
GREEN & BLACK’S, COLEMAN NATURAL, BOLTHOUSE FARMS, STONYFIELD FARM, BEAR NAKED, EARTHBOUND FARMS, FOOD SHOULD TASTE GOOD, KASHI, NAKED JUICE, APPLEGATE FARMS, HONEST TEA, ANNIE’S HOMEGROWN போன்ற ப்ராண்டுகள் அனைத்தும், இயற்கை உணவுப் பொருட்களின் ப்ராண்டுகள் தான். ஆர்கானிக் ப்ராடக்டுகள் தான். இந்த ப்ராண்டுகளின் உரிமையாளர்கள் பெப்சி, கோக், கெல்லாக்ஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான்.
வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல; இந்தியா தேசிய முதலாளிகளால் தொடங்கப்பட்டு அகில உலகமெங்கும் கிளைபரப்பி, அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங் களோடு பல ஒப்பந்தங்களை மேற்கொண்டு வரும் சில நிறுவனங்களையும் பார்ப்போம். ஃப்யூச்சரா Futura, Organic Industries Pvt Ltd, Chambal Fertilizers and Chemicals, Vam Organic Chemicals, Schenectady India, Atul Ltd of Lalbhai Group, Deepak Fertilisers and Petrochemicals
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆர்கானிக் ஆடைகள் என்ற பெயரில் பெரும் வணிகக் கொள்ளையை நடத்தி வரும் இந்திய தேசிய நிறுவனங்கள் Indigreen, No nasties, Forty Red Bangles, Samtana, Tvach, Anokhi, UV & W, Bhu:sattva, Do you speak Green, Ethicus, Chlorophile
இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆர்கானிக் உணவுகள் என்ற பெயரில் வணிகக்கொள்ளை நடத்திவரும் நிறுவனங்கள் Down to Earth, Arya Farm, Abali Organic Tea, Deha Organic, Grenera, Woods and Petals, Vedantika Herbals, Organic India, Sunrise, Nature Organic, Natureland Organics.
மேற்கண்டவை போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தேசிய வணிகக்கொள்ளை நிறுவனங்களால் கிடைக்கும் ஏற்றுமதி வாய்ப்புகளையும், பெருநகரங்களில் பெரும் பொருட்செலவில் இயங்கும் வணிக நிறுவனங்கள் தரும் வணிக வாய்ப்புகளையும் நம்பித்தான் இங்கு இயற்கை விவசாயம் பெருமளவில் நடக்கிறது.
இயற்கை விவசாயம், ஆர்கானிக் வாழ்க்கை, பாரம்பரிய வாழ்க்கை என்றால் எளிமையானது - இயல்பானது - சுரண்டல்களுக்கு எதிரானது என்றெல்லாம் பேசிவந்த சில இயற்கை ஆர்வலர்களும், சுற்றுச்சூழல்காரர்களும், பார்ப்பன விகடனின் ஆஸ்தான லேகிய வியாபாரிகளும் இந்த ஆர்கானிக் வணிகக் கொள்ளைக்கு வழிவகுத்ததோடு, ஆரியப் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கும் வழி அமைத்து விட்டார்கள்.
யாரோ சிலர் இயற்கையாக உண்டு நீண்டகாலம் மற்றவர்களை அடக்கி வாழ - பெரும்பான்மை மக்கள் எதற்காக பள்ளனாக, பறையனாக, சக்கிலியனாக, தச்சனாக, ஆசாரியாக தொடர்ந்து இழிவோடு வாழவேண்டும்? சக்கிலியன் செருப்புத் தைத்துக் கொண்டே இருக்க வேண்டும். பள்ளர்கள் வயலில் கிடந்தே சாகவேண்டும். பறையர்கள் பறையடித்துக் கொண்டும் பறையர்களைவிட உயர்ந்தவர்கள் என்று கருதிக்கொண்டிருக்கும் மக்களுக்கு பண்ணை அடிமையாக உழைத்துக் கொண்டும் இருக்கவேண்டும். படிக்கக்கூடாது, வேறு தொழில்களில் இறங்கி பொருளீட்டக்கூடாது என்று மனுசாஸ்திரக் காவலர்களாக வாழ்ந்து வரும் ஆதிக்கஜாதி மக்களுக்கும் இயற்கை விவசாயப் பிரச்சார பீரங்கிகளின் உள்நோக்கத்துக்கும் என்ன வேறுபாடு?
இரசாயன உரங்களையும், கொடிய பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்திய தால்தான் தமிழ்நாட்டில் விவசாயம் அழிந்தது என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பு - செயற்கை உரங்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பு தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் பணக் காரர்களாக இருந்தார்களா? அக்ரஹார மாமாக்களைப் போல வயிறு வளர்த்துக்கொண்டி ருந்தார்களா? “காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்” என்ற நிலைதானே இருந்தது? “உழுதவன் கணக்குப் பாத்தா ஒளக்குக் கூட மிஞ்சாது” என்ற நிலைதானே இருந்தது?
மேலும், அரசாங்கத்தின் கொள்கைகள் விவசாயத்திற்கு எதிராகவே இருக்கின்றன. அமெரிக்காவில் விவசாயத்திற்கும் பலகோடி மானியம் அளிக்கப்படுகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்கா, தமது விவசாயிகளுக்கு 3890 பில்லியன் டாலர் அளவுக்கு மானியம் கொடுத் துள்ளது. குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது. விவசாயப் பொருட்கள் ஏற்றுமதிக்கு மானியம் வழங்குகிறது.
இப்படியெல்லாம் தமது நாட்டு விவசாயத்துக்கு மானியங்களையும், உதவிகளையும் வழங்கும் அமெரிக்கா - தனது கட்டுப்பாட்டில் உள்ள உலக வங்கிகள், சர்வதேச வளர்ச்சி வங்கிகள் மூலமாக இந்திய விவசாயிகளுக்கு மானியத்தை நிறுத்துகிறது. இலவச மின்சாரத்தை ரத்துசெய்யப் பணிக்கிறது. இந்தச் சர்வதேசச் சிக்கல்களைக் கணக்கில் கொள்ளாமல், இரசாயன முறையை நீக்கிவிட்டால் விவசாயம் செழிக்கும் எனப் பரப்புவது விவசாயிகளை முட்டாளாக்குவதாகும்.
நிலப்பிரபுத்துவம் அல்ல; இந்துத்துவம்
இந்தியா மிகநீண்டகாலமாகவே உற்பத்தித்துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாக விவசாய உற்பத்திக்கு போதிய நிதி ஆதாரங்களைத் தருவதில்லை. அதேசமயம் உற்பத்தி சாராத நிர்வாகத்துறைக்கு கோடிக்கணக்கில் மானியங்களை வழங்கி வருகிறது. ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக பல ஆயிரம் கோடிகளை ஒதுக்குகிறது மத்திய அரசு. ஆனால் இந்த நிறுவனங்களில் படித்து முடிப்பவர்கள் எவருமே இந்தியாவில் பணிபுரிவதே இல்லை. அமெரிக்கா விலும் , ஐரோப்பிய நாடுகளிலும் முக்கியப் பதவிகளுக்குப் போய்விடுகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பார்ப்பனர்கள்.
ஆக, வெளிநாடுகளில் நிர்வாகிகளாகப் போகிறவர்களுக்கும், இந்தியாவில் வெறும் நிர்வாகி களாக, பெரும் பதவிகளை அலங்கரிப்பவர்களுக்கும் ஒரு நபருக்கு சுமார் 20 இலட்சம் ரூபாய் அளவுக்கு நிதி உதவி செய்யும் இந்திய அரசு - விவசாயிக்கு, விவசாய உற்பத்திக்கு உரிய நிதிஒதுக்கீட்டை வழங்குவதில்லை. நாட்டின் உற்பத்தியில் எந்தப் பங்கும் வகிக்காத சினிமாத்துறையை ஒரு தொழிலாக ஏற்று சினிமா எடுக்க பலகோடி ரூபாய்க ளைக் கடனாகக் கொடுக்கும் தேசிய மயமாக்கப்பட்ட - தனியார் வங்கிகள் விவசாயத்திற்கு கடன் கொடுப்பதில்லை.
2017 ஜூலை 1 முத ல் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்ஸ்.டி வரிவிதிப்பு முறையில் சினிமாத் துறைக்கு 28 சதம் வரி விதிக்கப்பட்டது. சினிமாத்துறையில் உள்ளவர்கள் அறிக்கை விட்ட உடனேயே அதை 18 சதமாகக் குறைத்துவிட்டது இந்தியப் பார்ப்பன அரசு. கேரளாவில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளின் அரசோ ஜி.எஸ்.டி யிலிருந்து சினிமாவுக்கு முழு விலக்கே அளித்துவிட்டது. ஆனால், மத்திய அரசுக்கு எதிராக, கடன் தொல்லையிலிருந்து விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டு மென்று பல மாதங்களாக, நிர்வாணமாகக்கூடப் போராடி வரும் விவசாயிகளுக்கு கடன் தொகையை ரத்துசெய்து அறிவிக்கவில்லை.
இப்படி உற்பத்திக்கு மரியாதை இல்லாமல் உற்பத்தி சாராத துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்பது இந்தியாவில் 2000 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது. உலகில் வேறெங்கும் இல்லாத வகையான பொருளாதாரமுறை இது. இந்தப் பொருளாதார முறையை பொருளாதார வல்லுநர் ஆர்.எஸ். ராவ் பார்ப்பனிய வளர்ச்சிப்பாதை (Brahmanical Path of Develepment) என்கிறார். உலகின் மிக முக்கிய பொருளாதார வல்லுனர்கள் இந்துப் பொருளாதார வளர்ச்சி விகிதம் (Hindu Economic Rate of Growth) என்கின்றனர். இந்த பார்ப்பனிய வளர்ச்சிப்பாதையில் மாற்றம் வராமல் எந்த முறை விவசாயமும் விவசாயிக்கு பலன் அளிக்காது.
இந்துமதத்தால், உபரி உற்பத்தி நாசம் - முடக்கம்
அப்படியே ஒருவேளை விவசாயத்தில் இலாபம் வந்துவிட்டாலும் - உபரியாகப் பணம் கிடைத்தாலும் அந்தப் பணம் எப்படிச் செலவாகிறது? விவசாயத்தை மேம்படுத்தல் - விவசாய ஆராய்ச்சியில் ஈடுபடுதல் - குறைந்த உழைப்பில் அதிக உற்பத்தியைப் பெறும் வழிகள் குறித்த ஆய்வு - விவசாயக் கண்காட்சிக ளுக்குச் சென்று புதிய தகவல்களை அறிந்துகொள் ளுதல் - புதிய தொழில் நுட்பங்களை அறிய சுற்றுலா செல்வது - இப்படித்தான் பயன்பட்டிருக்க வேண்டும்.
முன்னேறிய நாடுகளின் விவசாயிகள் தங்களது உபரி வருமானத்தை இப்படித்தான் செலவிடு கின்றனர். விவசாயம் மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் பொருளீட்டுபவர்கள் தங்களது உபரி வருமானத்தை ஆக்கப்பூர்வமான வழிகளில் முதலீடு செய்கின்றனர். அதனால்தான் வெளிநாடுகளில் அரசங்கங்க நிறுவனங்களை மிஞ்சும் அளவுக்கு ஏராளமான ஆராய்ச்சி நிறுவனங்கள் உருவாகியுள்ளன. உலகப் புகழ் பெற்ற முன்னணிக் கல்வி நிறுவனங்கள் உருகின. உற்பத்தி பெருகுகிறது.
ஆனால் நம் நாட்டு விவசாயி வருமானத்தை என்ன செய்கிறான்? வருமானம் வந்த நேரத்தில் காளியம்மன், மாரியம்மன் பண்டிகை - நோம்பி - கிடா வெட்டு - காதுகுத்து - மஞ்சள் நீராட்டுவிழா - திருமணம் - குலதெய்வ வழிபாடு - கிராமத் திருவிழா - யாகங்கள் இவைகளின் பேரால் உபரி வருமானத்தை நாசம் செய்கிறான். கோவில் கும்பாபிசேகம் - கோவிலைப் புதுப்பிப்பது - புதிய கோவில் கட்டுவது என வருமானத்தை முடக்குகிறான். இப்படி விவசாயிக்குத் தப்பித்தவறிக் கிடைக்கும் பணமும், உபரி உற்பத்தி நாசம், உபரி உற்பத்தி முடக்கம் என்ற இரண்டு வழிகளிலும் வீணாகிறது.
இப்படி உபரி உற்பத்தியை நாசமாக்கும் பண்பாடு இந்துப்பண்பாடு, இந்துமத உளவியல். ஒரு இந்துவினுடைய இயல்பான வாழ்க்கை. இந்த இந்து மதப் பண்பாட்டிற்கு எதிரான புரட்சி நடந்தால் ஒழிய விவசாயிக்கோ - விவசாயத்தை நம்பியுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கோ விடிவில்லை. இந்த பார்ப்பனிய வளர்ச்சிப் பாதை, இந்துப் பொருளாதார வளர்ச்சி விகிதம் இவை மாற வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தையே முடக்கும் மதவழிச்சிந்தனைகள் மாறவேண்டும். இவைகளிலெல்லாம் மாற்றம் கொண்டு வருவது பற்றிப் பேசாமல் இரசாயன உரத்திற்குப் பதிலாக மாட்டுச்சாணி - பூச்சிக் கொல்லிக்குப் பதிலாக மாட்டு மூத்திரம் எனப் பேசி வருவது உரிய பலனைக் கொடுக்காது.
இயற்கை உரத்திலும் தீண்டாமை
அதிலும் ஒரு பார்ப்பனச் சிந்தனை என்னவென்றால் பசுமாட்டுச்சாணிக்கு, பசு மாட்டு மூத்திரத்துக்கு உள்ள சக்தி எருமைச்சாணிக்கும், மூத்திரத்திற்கும் இல்லையா? பன்றிக் கழிவுகளுக்கு இல்லையா? ஆட்டுப்புழுக்கைக்கு இல்லையா? கோழியின் கழிவுக்கு இல்லையா? ஏன் இதுவரை எந்த இயற்கை விவசாயப் பிரச்சாரகரும் பன்றிகளைக் கொல்ல வேண்டாம், ஆடுகளைக் கொல்ல வேண்டாம், கோழிகளைக் கொல்ல வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்யவில்லை? ஆடு, கோழி, பன்றி களைக் காக்க வேண்டும் என சங்கராச்சாரி சொல்லவில்லை. மனுசாஸ்திரம் சொல்ல வில்லை.
இதையெல்லாம் விட மனிதக் கழிவுக்கு அதிக ஆற்றல் இருக்கிறதே. அதை ஏன் பயன்படுத்தச் சொல்லவில்லை? கி.பி. 1880 களில் இங்கிலாந்து ராணி இந்திய விவசாயமுறை பற்றி அறிந்து அறிக்கை கொடுக்குமாறு ஒருவரை அனுப்பி வைத்தார். அவர் பெயர் ஜான் அகஸ்டன் வால்கர். அவர் ஓராண்டு இந்தியா முழுவதும் சுற்றி அலைந்து, ஆராய்ந்து ஒரு அறிக்கை கொடுத்தார். இந்திய விவசாய முறையின் பெருமைகளைப் பேசும் அந்த அறிக்கை முக்கியமாகச் சொன்னது இது.
“பயிர் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரே ஒரு குறைபாட்டைத்தான் பார்க்கிறேன். மனித மலத்தை எருவாகப் பயன்படுத்துவது இந்தியாவில் காண முடியவில்லை. அதற்குக் காரணம் உள்ளது. நிலம் மேல் ஜாதிக்காரனிடம் இருக்கிறது. கீழ்ஜாதிக்காரர்கள் தங்கள் நிலத்தில் மலம் கழிக்க மேல்ஜாதிக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அதனாலேயே மனித மலம் இன்னும் எருவாகப் பயன்படவில்லை.” என்கிறார்.
இன்று நிலைமை ஓரளவு மாறிவிட்டது. செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் ஏராளமாக வந்துவிட்டன. ஒரு ஏக்கருக்கு ஒரு டேங்க் எனக் கொட்டலாமே? அதுபற்றி ஏன் பசுக்காவலர்கள் யோசிக்கவே இல்லை? ஏனென்றால், மனிதமலப் பயன்பாடு பற்றி மனுசாஸ்திர - இந்து வேதங்களில் சொல்லப்பட வில்லை. பார்ப்பன அஜெண்டாக்களில் அது இல்லை.
அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து இங்கேயே உள்ள நமது செல்வமான நீர்வளத்தைச் சுரண்டி நம்மிடமே ஒரு லிட்டர் நீருக்கு 20 ரூபாய் என விலைநிர்ணயம் செய்யும் அதிகாரம் - உரிமை, தமிழ்நாட்டு பார்ப்பனப் பெண்ணான இந்திரா நூயி தலைமையில் உள்ள பெப்சி நிறுவனத்திற்கு இருக்கிறது. ஆனால் ஆறுமாதம் வியர்வை சிந்தி, பட்டினி கிடந்து, உழைத்து களம் சேர்த்த நெல்லுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை யாரிடம் இருக்கிறது? அது இயற்கை விவசாயம் என்றாலும், செயற்கை விவசாயம் என்றாலும் வியாபாரிகளின் கையிலும், தரகர்களின் கையிலும் தானே இருக்கிறது?
இயற்கை விவசாயமோ, இரசாயன விவசாயமோ, மரபணு மாற்ற விவசாயமோ - முறை எதுவாக இருந்தாலும் ஒரு விவசாயிக்கு, தான் உற்பத்தி செய்யும் விளைபொருளுக்கு விலைநிர்ணயம் செய்யும் உரிமை வேண்டும். தான் விளைவித்த பொருளுக்கான விலையை, தானே முடிவுசெய்யும் அதிகாரம் விவசாயிக்கு எப்போது வருமோ - எந்த விவசாய முறையில் வருமோ அந்த விவசாய முறையைத்தான் நாம் வரவேற்க வேண்டியுள்ளது.
ஜாதிமுறையைக் காப்பாற்றாத - பார்ப்பன நலன்களுக்கு எதிரான - பன்னாட்டுத் தரகு முதலாளிகளுக்கு எதிரான - தரகர்கள் இல்லாத - இயற்கை உரங்களில் வர்ணாஸ்ரமம் பார்க்காத - விவசாயம் என்பதே நமக்குத் தேவை. இவை குறித்து பலகோணங்களில் - விரிவான விவாதங்கள் தொடங்கவேண்டும் என விரும்புகிறோம். - Source:
1.https://www.forbes.com/sites/bethhoffman/2013/05/25/who-owns-organic-brands-and-why-you-should-care/#c3adaf66efe5
2.http://www.chicagotribune.com/ct-organic-food-brands-20150506-htmlstory.html
3.http://mentalfloss.com/article/72624/12-natural-and-organic-brands-owned-big-food