மொத்த விஸ்தீரணத்தில் மூன்றில் ஒரு பாக பரப்புக்கு மேல் ஜமீன்முறை ஆட்சியில் இருக்கும் இந்தச் சேலம் ஜில்லாவில், முதல் முதலாக இன்று - இங்கு, ஜமீன்தாரர் அல்லாதார் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதானது, எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாகும். நாம் உலக பொது ஜனங்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகளின் முக்கியத்துவம் எல்லாம், இம்மாதிரியாகப் பல அல்லாதார்கள் மாநாடுகள் கூட்டி அவர்களது ஆதிக்கங்களையும், தன்மைகளையும் ஒழிப்பதில்தான் பெரிதும் அடங்கியிருக்கிறது. இன்னும் இதுபோலவே பல மாநாடுகள் கூட்ட வேண்டியிருக்கிறது. சுயமரியாதை மகாநாடுகள் கூட்டப்படும் இடங்களில் இம்மாதிரி மகாநாடுகள், அடிக்கடி கூட்டப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.

உதாரணமாக, லேவா தேவிக்காரர்கள் அல்லாதார் மாநாடு, முதலாளிகள் அல்லாதார் மாநாடு, தொழிற்சாலை அல்லாதார் மாநாடு, வீடுகளின் சொந்தக்காரர் அல்லாதார் மாநாடு, நிலச்சுவான்தார் அல்லாதார் மாநாடு, மேல் சாதிக்காரர் அல்லாதார் மாநாடு, பணக்காரர்கள் அல்லாதார் மாநாடு என்பன போன்ற பல மாநாடுகள் கூட்டி, இவர்களின் அக்கிரமங்களையும், கொடுமைகளையும், மோசங்களையும் பொது ஜனங்களுக்கு விளக்கிக் காட்டி, அவற்றை ஒழிக்கச் செய்ய வேண்டியது நம் கடமையாகும்.

உலகில் எந்தெந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும் சமத்துவத்திற்குத் தடைகளும், சாந்திக்கும் சமாதானத்துக்கும் முட்டுக் கட்டைகளும் இருக்கின்றனவோ, இவை எல்லாம் அழிந்தொழிந்து என்றும் தலை தூக்காமலும் இல்லாமலும் போகும்படிச் செய்ய வேண்டியதுதான் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய லட்சியமாகும். மனித சமுதாயத்திற்கு உள்ள தரித்திரத்திற்குக் காரணம் செல்வவான்களேயாகும். செல்வவான்கள் இல்லாவிட்டால், தத்திரவான்களே இருக்க மாட்டார்கள். மேல் வகுப்பார் இல்லாவிட்டால், கீழ் வகுப்பார் இருக்கவே மாட்டார்கள். ஆதலால்தான் இம்மாதிரி "அல்லாதார்கள்” மாநாடு கூட்ட வேண்டும் என்கிறோம்.

இன்று ஏன் முதன் முதலாக ஜமீன்தார் அல்லாதார் மாநாடு கூட்டினோம் என்றால், இன்றைய உலக ஆதிக்கம் அவர்கள் கையிலேயே இருந்து வருகின்றது. இதற்கு முன் இந்நாட்டு ஆதிக்கம் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்தது. அதற்காகவே நம் இயக்கம் பல பார்ப்பனர் அல்லாதார் ஸ்தாபனங்களும், மகாநாடுகளும், வாலிபச் சங்கங்களும், புதிய முறையில் தோற்றுவித்தும், பார்ப்பனக் கொடுமைகளையும் மோசங்களையும் ஒருவாறு பாமர மக்களுக்கு விளக்குவதில் முனைந்து நின்று வேலை செய்ததன் பயனாய் ஓர் அளவுக்குப் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பதில் வெற்றி பெற்றோம்.

ஆனால், அந்தப் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்தது என்கின்ற சந்தோஷத்தை அடைவதற்குள், அதற்குப் பதிலாக அது போன்ற கொடுமையும் மோசமான ஜமீன்தார் ஆதிக்கம் தலை தூக்கித் தாண்டவமாட ஏற்பட்டுவிட்டது. முன்பிருந்த கெடுதியும் தொல்லையுமே பார்ப்பன ஆதிக்கம் என்னும் பேரால் இல்லாமல், ஜமீன்தார் ஆதிக்கம் என்னும் பேரால் இருந்து வருகின்றன.

பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் பிறவியின் காரணமாகவே பரம்பரை உயர்வுள்ளவர்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவர்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் இன்றைய ஆட்சி முறைக்குத் தூண்கள் போலவும் இருந்து வருகின்றவர்கள் ஆவார்கள். பார்ப்பனர்களைப் போலவே ஜமீன்தார்கள் என்பவர்கள் உலகத்துக்கு வேண்டாதவர்களும், உலக மக்கள் கஷ்டங்களுக்கு எல்லாம் காரணமாய் இருப்பவர்களும் ஆவார்கள். இவர்கள் வாழ்க்கை நிலையை அவர்களது பள்ளிக்கூட வாழ்வில் இருந்து கவனித்தால், பெரும்பாலும் ஒவ்வொருவருடைய யோக்கியதையும் விளங்கும்.

ஏழைகளும், விவசாயக் கூலிக்காரர்களும் தங்கள் பெண்டு பிள்ளைகள் சகிதம் தினம் 8 மணி முதல் 15 மணி வரையில் வியர்வையைப் பிழிந்து சொட்டு சொட்டாய்ச் சேர்த்த ரத்தத்திற்குச் சமமான செல்வத்தை, ஒரு கஷ்டம் ஒரு விவரம் அறியாதவர்களும், ஒரு பொறுப்பும் இல்லாதவர்களுமான ஜமீன்தார்கள், சர்க்காரில் லைசென்சு பெற்ற கொள்ளைக் கூட்டத்தார்கள் போல் இருந்து கொண்டு மக்கள் பதறப் பதற, வயிறு வாய் எரிய எரிய கைப்பற்றிப் பாழாக்குவது என்றால், இப்படிப்பட்ட ஒரு கூட்டம் உலகில் இருக்க வேண்டுமா? இவர்களின் தன்மையையும் ஆதிக்கத்தையும் இன்னும் வைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஜன சமூகம், சுயமரியாதையை உணர்ந்த சமூகமாகுமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மேல் ஜாதி கீழ் ஜாதி முறை கூடாது என்றும், குருக்கள் முறை கூடாதென்றும் எப்படி நாம் பல துறைகளில் வேலை செய்கின்றோமோ, அது போலவேதான் ஜமீன்தாரன் - குடிகள் என்கின்ற தன்மையும், முறையும் கூடாது என்று வேலை செய்ய நாம் கட்டுப்பட்டவர்களாய் இருக்கின்றோம்.

(27.8.1933 அன்று சேலத்தில் ஜமீன்தார் அல்லாதார் மாநாட்டில் ஆற்றிய உரை)

Pin It