kamala harrisசில நாட்களுக்கு முன்னால் அக்கிரகாரம் எங்கும் பட்டாசு சத்தங்களால் அதிர்ந்தது. தீபாவளிக்கு இன்னும் ஒரு சில மாதங்கள் இருப்பதால் இப்போது எதற்கு அக்கிரகாரத்தில் பட்டாசு வெடிக்கின்றார்கள் என்று சற்று குழப்பம் ஏற்பட்டது. ஆனால் அக்கிரகாரத்தில் வைக்கப்பட்ட கட் அவுட்களில் கமலா ஹாரிஸ் சிரித்துக் கொண்டிருந்ததை பார்த்த போது விஷயம் தெளிவானது.

வரவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பிடன்,  கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளதை கொண்டாடத்தான் பட்டாசு வெடித்திருக்கின்றார்கள். இத்தனைக்கும் கமலா ஹாரிஸ் இந்தியாவிலேயே பிறந்தவர் கிடையாது.

கமலா ஹாரிஸின் தாய் சென்னையைச் சேர்ந்தவர். அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். சாஸ்திரத்தை மீறி கடல் கடந்து சென்றதோடு சனாதனத்தை மீறி டொனால்ட் ஜாஸ்பர் ஹாரிஸ் என்ற கருப்பரை கமலா ஹாரிஸின் தாய் சியாமளா கோபாலன் மணந்து கொண்டாலும், அதை சனாதன மீறலாக, சாஸ்திர அவமதிப்பாகப் பார்க்காமல் இன்று கமலா ஹாரிஸிக்காக பட்டாசு வெடித்துக் கொண்டாடுகின்றார்கள் என்றால், அக்கிரகாரம் சனாதனத்தை தூக்கி எறிந்துவிட்டு ஜனநாயகமாகி விட்டதா?

இதிலே குழப்பப்பட எதுவுமில்லை. கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் எதாவது ஓர் அதிகாரமற்ற நபராக இருந்திருந்தால் நிச்சயம் அக்கிரகார மேன்மக்கள் அவரைக் கண்டு கொள்ளாமல்தான் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால் கமலா ஹாரிஸுக்கு தனது தாய்வழி பழைய மரபுகளின் மீதான பற்றும், இயல்பாகவே அவருக்குள் இருக்கும் மேலாதிக்க மனப்பான்மையும், போதாக்குறைக்கு அமெரிக்காவின் மிக உயர்ந்த ஒரு பதவியை அவர் அலங்கரிக்கும் வாய்ப்பு கிடைத்ததால்தான் அக்கிரகாரம் எல்லாம் இன்று கமலா ஹாரிஸைக் கொண்டாடுகின்றது.

இன்று அமெரிக்காவில் சுமார் 25 லட்சம் பேர் இந்தியர்கள் இருக்கிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பார்ப்பனர்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் போது, அக்கிரகாரப் பட்டாசு வெடிகளின் பின்னால் இருக்கும் காரியவாதத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

அந்தக் காரியவாதம்தான் கமலா ஹாரிஸ்க்கு, தமிழ்நாடு பிராமணர் சங்கம் முந்திக் கொண்டு வாழ்த்து தெரிவிக்கவும் அடிப்படையாக இருப்பது. அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஹரிஹர முத்தய்யர் “அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக, கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு, ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேர்தலில் வெற்றியடைய வேண்டும் என கடவுளை வணங்கி வாழ்த்துகிறோம்" என்று மகிழ்ச்சியில் பொங்கி இருக்கின்றார்.

கமலா ஹாரிஸ் ஒரு வேளை துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவில் சனாதன தர்மத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டு இருக்கும் அம்பிகளுக்கு ஒரு அரசியல் ரீதியான துணை கிடைத்தது போல் ஆகிவிடும்.

கடந்த மாதம் அமெரிக்காவில் முதல் முறையாக ஜாதி ரீதியான பாகுபாட்டை எதிர்த்து ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் குற்றவாளிகள் யார் தெரியுமா? ஒருவர் சுந்தர் ஐய்யர், மற்றொருவர் ரமணா கொம்பெல்லா. இவர்களிருவரும் சேன் ஜோஸில் உள்ள சிஸ்கோ தலைமையகத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அங்குதான் தனது பார்ப்பன சாதிவெறி அகம்பாவத்தைக் காட்டி இருக்கின்றார்கள்.

இது சம்மந்தமாக கலிபோர்னியா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “குறிப்பிட்ட நிறுவனம் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த தலித் ஊழியர் அவரது மதம், வம்சாவளி, தேசியம், தோற்றம், இனத்தின் அடிப்படையில் குறைவான அந்தஸ்தைப் பெற்றார், குறைந்த ஊதியத்தைப் பெற்றார், குறைவான வாய்ப்புகள் மற்றும் பிற தரமற்ற விதிமுறைகள் மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகளைப் பெற்றார். தலித் ஊழியர் பணியிடத்திற்குள் ஒரு சாதி வரிசை முறையை ஏற்றுக் கொள்வார் என்று  எதிர்பார்த்ததாகத்” தெரிவித்துள்ளது

இது தொடர்பாக சிஸ்கோ நிறுவனத்தின் மீதும், சம்பந்தப்பட்ட சாதி வெறியர்கள் மீதும் இனம், நிறம், மதம், பாலினம், பிறந்த தேசம் ஆகியவற்றின் அடிப்படையில் பணிமனையில் பாகுபாடு காட்டுவதைத் தடுப்பதற்கான சட்டப் பிரிவு VIIஇன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது கலிபோர்னியா மாகாண அரசு.

பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில், சாதிப் பாகுபாடு சட்ட விரோதமானது அல்ல என்று சிஸ்கோ நிறுவனம் நினைத்துள்ளது என்றும், அதனால் தலித் ஊழியருக்கு அவர்கள் தொடர்ந்து தொல்லை தந்துள்ளனர் என்றும், தலித்  ஊழியரைத் தனிமைப்படுத்தி, நல்ல வாய்ப்புகள் மற்றும் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்குப் போயும் தங்களது சாதி ஆணவப் போக்கை அக்கிரகாரத்து அம்பிகள் கடைபிடிப்பது ஒன்றும் புதிதல்ல.  2018 ஆம் ஆண்டு தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த 1200 நபர்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 26 சதவீதம் பேர் தாங்கள் சாதி காரணமாக உடல் ரீதியான தாக்குதலைச் சந்தித்தாகவும், 59 சதவீதம் பேர் தாங்கள் சாதி ரீதியான இழிவான நகைச்சுவைகளால் இழிவு செய்யப்பட்டதாகவும், தாங்கள் தலித் என்பதற்காகவே வேலை பார்க்கும் இடங்களில் இருந்து வெளியேற்றப்படுவோம் எனப் பயந்ததாகவும் தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்தியாவில் தங்களுக்கு அடிமை சேவை செய்து வந்த சாதியைச் சேர்ந்தவர்கள் இன்று கல்வி கற்று தங்களுக்கு இணையான வேலைகளில் பணிபுரிவது அம்பிகளை வயிற்றெரிச்சல் படவும் செய்துள்ளது. இத்தனைக்கும் இந்தியாவிலிருந்து அப்படிக் கல்வி கற்று அமெரிக்கா செல்லும் தலித்துகளின் எண்ணிக்கை என்பது அக்கிரகாரத்தில் இருந்து போகும் அம்பிகளின் எண்ணிக்கையைவிட மிக மிகக் குறைவுதான்.

2003 ஆண்டு அமெரிக்காவில் குடியேறியவர்களில் 1.5 சதவீதம் மட்டுமே தலித்துகள் என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள இந்தியாவின் மேம்பட்ட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமாகக் குடியேறியவர்கள் உயர் அல்லது ஆதிக்க  சாதி என்று தங்களை கருதிக் கொள்கின்றவர்கள்தான்.

இத்தனைக்கும் அமெரிக்காவில் இந்து மதம் ஒரு சிறுபான்மை மதம்தான். மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதம் மட்டுமே இந்துக்கள் ஆவர்கள். இந்த ஒரு சதவீத அமெரிக்க இந்துக்களில் பெரும்பான்மையானவர்கள் தெற்காசியாவிலிருந்து முக்கியமாக இந்தியா, நேபாளம், இலங்கை பங்களாதேஷ் போன்றவற்றில் இருந்தும் இன்னும் பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்றவற்றில் இருந்தும் சென்றவர்கள் ஆவர்கள்.

இப்போது தெரிகின்றதா ஏன் கமலா ஹாரிசுக்காக அக்கிரகாரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டது என்று. நமக்கு ஒரு கேள்வி வரலாம். பார்ப்பனர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதாலேயே கமலா ஹாரிஸ், அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுத்து விடுவாரா என்று? ஆனால் கருப்பினப் போராளியாக இன்று அமெரிக்க ஊடகங்களால் சித்தரிக்கப்படும் கமலா ஹாரிஸ் இப்படி சாதி ரீதியாக இந்திய தலித்துகள் அமெரிக்காவில் நடத்தப்படுவதற்கு எதிராக எப்போதுமே குரல் கொடுத்தது இல்லை என்பதையும், அவர் தன் தாயின் அக்கிரகாரப் பூர்வீகத்தை தனது பெருமைமிகு அடையாளமாகக் கருதுகின்றார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால் கமலா ஹாரிஸின் உண்மை முகத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சான் பிரான்சிஸ்கோவின் மாவட்ட அரசு தரப்பு வழக்குரைஞராக (2004-2011), கலிபோர்னியாவில் அரசு தரப்பு தலைமை வழக்குரைஞராக (2011-2017), இறுதியில், அமெரிக்க செனட்டராக 2017 இல் இருந்து இப்போது வரையில் பணிபுரிந்த அவர் எப்போதும் போலீஸை ஆதரிப்பவராகவும், தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு எதிரான சிந்தனை கொண்டவராகவும், இராணுவ மேலாண்மையையும் அமெரிக்க போர் வெறியையும் ஆதரிப்பவராகவுமே இருந்துள்ளார்.

முதல் அமெரிக்க - ஆப்ரிக்க துணை ஜனாதிபதி, முதல் ஆசிய - அமெரிக்க துணை ஜனாதிபதி, முதல் பெண் துணை ஜனாதிபதி, முதல் கருப்பின துணை ஜனாதிபதி என்று எப்படி பட்டம் சூட்டி பெருமைப்பட்டுக் கொண்டாலும் இன்று அமெரிக்க மக்கள் சந்தித்து வரும் எந்தப் பிரச்சினைக்கும் அவரால் தீர்வு காண முடியாது என்பதுதான் உண்மை.

காரணம் அமெரிக்கப் பெருமுதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள், ஊடக முதலாளிகள் இவர்கள்தான் அமெரிக்க அதிபரையும் துணை அதிபரையும் தேர்வு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இவை எவற்றிலும் கருப்பினத்தவர் தீர்மானிக்கும் நிலையில் எப்போதுமே இருந்தது இல்லை. எப்படி கருப்பின ஒபாமாவை அமெரிக்க முதலாளிகளின் தங்களின் செல்லப் பிள்ளையாக தேர்ந்தெடுத்தார்களோ அதே போலத்தான் தற்போது கமலா ஹாரிசையும் தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள்.

ஜார்ஜ் பிளாய்ட்டின் படுகொலை அமெரிக்க கருப்பின மக்களிடம் ஏற்படுத்தி இருக்கும் கடுமையான வெறுப்பும் கூட கமலா ஹாரிஸின் தேர்ந்தெடுப்புக்கு ஒரு காரணமாகும். இல்லை என்றால் ஜனநாயகக் கட்சியின் முடிவுகளை எடுக்கும் மேல்மட்டத்தில் கருப்பினத்தவர்கள் எவரும் தீர்மானகரமாக இல்லாத சூழ்நிலையில் நிச்சயம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார்.

காரணம் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டுமே வெள்ளையர்களின் கைகளில்தான் எப்போதுமே இருந்து வருகின்றது. இதில் குடியரசுக் கட்சி வெளிப்படையாக வெள்ளை நிறவெறியர்களை ஆதரித்தும், முதலாளிகள், உயர் வகுப்பினரை ஆதரிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்தியும் வரும் கட்சியாகும். ஜனநாயகக் கட்சியோ இவற்றை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சியாகும். நேரத்துக்கேற்றபடி அமெரிக்க முதலாளிகள் இந்தக் கட்சிகளை மாறி மாறிப் பயன்படுத்திக் கொள்வர்கள்.

மேலும் இரண்டு கட்சிகளால் அதிபர் பதவிக்கும் துணை அதிபர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை ஊடக முதலாளிகள் திட்டமிட்டு பிரபலங்களாக மாற்றும் வகையில் பல செய்திகள், கருத்துக் கணிப்புக்கள், நவீன தொழில் நுட்ப விளம்பரங்கள் முதலியவற்றைச் செய்வார்கள். இந்தச் செலவுகளுக்கான பணத்தை இரண்டு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களும் அமெரிக்க பெருமுதலாளிகள் மற்றும் நிறுவனங்களிடம் வசூல் செய்வார்கள். முதலாளிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து பல மில்லியன் டாலரை நன்கொடையாகக் கொடுப்பார்கள்.

எப்படி அமெரிக்க முதலாளிகள் கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமாவை தேர்தெடுத்ததற்குப் பின்னால் அவர்களின் பொருளாதார வர்த்தக நலன்கள் இருந்ததோ அதே போல கமலா ஹாரிசை தேர்ந்தெடுத்ததற்குப் பின்னாலும் அவர்களின் பொருளாதார வர்த்தக நலன்களே உள்ளன. ஆள் கருப்பாக இருப்பது மட்டுமே இப்போதைக்கு அமெரிக்க கருப்பின மக்களை திருப்திபடுத்த போதுமானதாக அமெரிக்க முதலாளிகளுக்கு இருக்கின்றது. ஒருவரின் நிறமோ, இனமோ, சாதியோ, மதமோ எந்த வகையிலும் சிந்தனையை வடிவமைப்பது கிடையாது என்பதால் கமலா ஹாரிஸ் நிறத்தால் மட்டுமே கருப்பினத்தவர் ஆவர்; குணத்தால் செயல்பாட்டால் அவர் ஓர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரதிநிதி ஆவார்.

எப்படி தமிழக பாஜக தலைவராக முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டது எந்த வகையிலும் தலித் மக்களின் விடுதலைக்குப் பிரஜோசனம் இல்லாததோ அதே போலத்தான் கமலா ஹாரிஸை அமெரிக்க முதலாளி வர்க்கம் தேர்ந்தெடுத்ததும். இருவருமே அடிமைகள். ஒருவர் பார்ப்பன அடிமை, இன்னொருவர் ஏகாதிபத்திய பெருமுதலாளிகளின் அடிமை. அடிமைகள்தான் வரலாற்றில் எப்போதுமே கொண்டாடப்படுவர்கள் என்பதால்தான் கமலா ஹாரிஸை அமெரிக்க ஊடகங்களும், அக்கிரகாரமும் இன்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன.

- செ.கார்கி

Pin It