kuthoosi gurusamy 268வைரத்தையும் வேறு பல வெள்ளைக் கற்களையும் கலந்து வைத்தால் எது வைரம் என்று பொறுக்கி எடுப்பதற்கு உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? யாருக்குத் தெரிந்தாலுஞ் சரி! எனக்குத் தெரியவே தெரியாது! கடந்த 20 ஆண்டுகளாக ஒரு வைரப் பரிசோதனை நிபுணரிடம் சதா பழகிக் கொண்டிருந்துங்கூட எனக்கு இந்த அறிவு சுட்டுப்போட்டாலும் வராது போலிருக்கிறது!

சங்கீத விஷயமும் கிட்டத்தட்ட இதே மாதிரித்தானிருக்கிறது. இதைப் படிப்பவர்களில் சிலராவது சங்கீத நிபுணர்கள் - ரசிகர்கள் - இருக்கலாம். அவர்கள் என்னைக் கேலி செய்தாலுஞ் சரி! என் “காதுக் கோளாறு” பற்றி நையாண்டி செய்தாலுஞ் சரி! நான் உண்மையைச் சொல்லிவிடுகிறேன்! இன்றைய சங்கீதத்தை வைரம் போலவும், சர்க்கஸ் போலவும்தான் கருதியிருக்கிறேன்.

காதுக்கு இனிமையாக, கருத்துக்குச் சுவையாக, எனக்குத் தெரிந்த மொழியில், வீரம், சோகம், இன்பம், இரக்கம் போன்ற மனித உணர்வுகளைக் கிளப்பக் கூடியதாகப் பாடுவதைத்தான் நான் சங்கீதம் - உண்மையான இசை - என்று ஒப்புக்கொள்வேன்.

“வைரத்தின் அருமை உனக்கென்னடா தெரியும்?” என்று கேட்டால், ‘ஆமாம், தெரியாது’ என்றுதானே கூறவேண்டும்? எனக்கு மட்டுமா? மக்களில் லட்சத்துக்கு 10 பேருக்குக் கூடத் தெரியாதே! தெரிந்தாலும் அவர்களுக்குப் பயனிருக்காதே!

‘சர்க்கஸ்’ என்று குறிப்பிட்டேனல்லவா? பார்ப்பதற்குத் திகைக்கக் கூடியதுதான்! “கரணம் தப்பினால் மரணம்,” என்பதில்லையா? சரி! அதன் பயன்? எல்லோருக்கும் உடற்பயிற்சி அவசியந்தான்! ஆனால் சர்க்கஸ் அளவுக்கா உடற்பயிற்சி அவசியம்?.

இதற்காக சர்க்கஸ் ஒழிந்துவிட வேண்டும் என்று சொல்வதாகப் பொருளில்லை.

தென்னாட்டு இசையை ஒரு சர்க்கஸாக ஆக்கிய பெருமை அநேகமாக அக்கிரகாரத்துக்குத்தான். இசைத்துறையில் அக்கிரகாரத்தைத் தோற்கடிக்கக் கூடியவர்கள் நூற்றுக்கணக்கில் நம்மவர்களிருக்கிறார்கள் என்றாலும், அதன் “சுவையை” அனுபவிப்பவர்கள் அக்கிரகார ரசிகர்கள்தான்!

சங்கீதக் கச்சேரிகளில் இதை நன்றாகக் கவனிக்கலாம்!

நல்ல - இனிமையான - தமிழ்ப் பாட்டு (ஆரியஸ்தான் வாசிகள் துக்கடா என்று கூறுவார்கள்!) பாடினால் மட்டுமே நம்மவர்கள் ரசிப்பார்கள்! தியாகராஜர் கீர்த்தனங்களோடு குஸ்தி போட்டுத் துடையைத் தட்டி, கையைத் தூக்கி, தலையை ஆட்டி, முறைத்துப் பார்த்து, சங்கீத சர்க்கஸ் செய்தால் மட்டுமே அக்கிரகார வாசிகள் ரசிப்பார்கள்!

சங்கீத ரசிகர்களிலும் ஆரிய - திராவிட வேற்றுமையைப் பார்த்தீர்களா?

“சித்தரஞ்சினி, திலீபகம், நாதசிந்தாமணி, மஞ்சரி, தேவாமிர்த்த வர்ஷிணி, போன்ற ராகங்களை ஆராய்ந்தால், இவைகளில் தனியான பாவமேதும் தென்படாவிடில் அவைகளை யெல்லாம் கரஹரப்பிரியாவில் சேர்த்துவிடலாம்.”

- அடபவமே! இதுகூடவா உங்களுக்குப் புரியவில்லை? எனக்கு வைரத்தைவிட நன்றாக விளங்கிவிட்டது! உங்களுக்கு அணுசக்தியைவிடத் தெளிவாக விளங்கியிருக்குமென்று நினைக்கிறேன்! சங்கீத விழா நிகழ்ச்சிக் குறிப்புக்களில் இதுவுமொன்று!

“பாமரர்களைத் திருப்திப் படுத்துவதற்காக வித்துவான்கள் பாடினால் சங்கீதத்தின் தரம் குறைந்துவிடும் என்று கூறுவது சுத்த அபத்தமாகும். ஜனநாயக காலத்தில் இப்படிச் சொல்வது பாமரர்களின் மனதைப் புண் படுத்துவதாகும்.”

- இவ்வாறு நான் கூறினால், “இவன் ஒரு சங்கீத தற்குறி” என்பீர்கள்! இப்படிக் கூறியவர் சாட்சாத் ஆர். கே. ஷண்முகம் அவர்கள்! அதாவது தமிழிசையை வளர்ப்பதற்காக, பல லட்ச ரூபாய் திரட்டி, (சைவத்தை வளர்ப்பதற்காகப் பலகோடி ரூபாய் வைத்திருக்கிற மடாதிபதிகளைப் போல!) தியாகராஜ கீர்த்தனைகளைக் கலந்து சரமாரியாகப் பொழிந்து கொண்டிருக்கும் - நடராஜ முத்திரை - தமிழ் இசைச் சங்கத்தின் அமைப்புத் தலைவர்களில் ஒருவரே இப்படிக் கூறிவிட்டார்! பாமரர்கள் சார்பில் பேசவும் வாதாடவும் யாருமில்லையே என்று ஏங்கியிருக்கும் இந்நாளில், பாமரர்களின் இசையுணர்ச்சிக்காகப் (பசியுணர்ச்சி எப்படியோ நாசமாய்ப் போகட்டும்!) பரிந்து பேச ஒருவர் கிடைத்தது பாமரர்களின் திடீர் “அதிர்ஷ்டம்” என்றே சொல்வேன்!

எனவே, எல்லாத் துறைகளிலும் இருப்பதுபோல, இந்தத் துறைகளில் கூட பாமரர் - பண மூட்டைகள் என்ற பாகுபாடு இருப்பதை அகில உலகப் புகழ் பெற்ற பொருளாதார நிபுணரான நம் ஆர். கே. எஸ். எடுத்துக் காட்டியது பற்றி பாமரர் சார்பில் நான் நன்றி செலுத்திக் கொள்கிறேன்!

- குத்தூசி குருசாமி (25-12-50)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It