இந்திய மக்கள் எவ்வித முன்னேற்றமோ, விடுதலையோ, சுதந்திரமோ பெறுவதற்குத் தங்களை அருகர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதற்கு முன்பாக - இந்தியர்கள் ஒரே சமூகத்தார் ஒரே இலட்சியமுடையவர் - என்கிற நிலையை அடையவேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இன்று முற்போக்கோ, சுதந்திரமோ, விடுதலையோ அடைந்திருக்கும் நாட்டார்கள் எல்லாம் முதலில் தங்கள் நாட்டாரெல்லாம் ஒரே சமூகத்தார் என்றும், ஒரே இலட்சியமுடையவர்கள் என்றுமானபிறகு தான் அவர்கள் முன்னேறவும், விடுதலை பெற்றுச் சுதந்திரமடையவும் முடிந்தது.

ஆனால், நமது இந்தியாவைப் பற்றிப் பேசப் புறப்படுவோமானால், இது ஒரு சமூக மக்கள் கொண்ட நாடு என்றோ, ஒரே இலட்சியமுள்ள மக்களைக் கொண்ட நாடு என்றோ யாரும் சொல்ல முடியாது. ஏனெனில், இந்தியாவானது பல மதங்களாய், பல சாதிகளாய் இருப்பதோடு, மொழிகளிலும் நடை, உடை, பாவனைகளிலும் பலப்பல மாறுதல்களைக் கொண்டிருக்கிறது. இந்த வித்தியாசங்கள் என்று தொலைவது? மக்கள் எந்தக் காலம் ஒன்றுபட்டு ஒரு சமூகமாகி, ஒரே இட்சியம் கொள்ளுவது என்பவைகளை நினைத்தால், மனம் ஓடிய வேண்டியிருக்கிறதே தவிர நம்பிக்கைக்கு இடமில்லை. என்றாலும், மக்கள் ஒன்றுபட்ட சாயலை அடைந்து பார்வையிலாவது, - அதாவது மனிதனுக்கு மனிதன் பார்த்தவுடனே ஒரு வேற்றுமை உணர்ச்சி தோன்றுவதற்கில்லாமல் செய்துவிட்டால் - பிறகு ஒவ்வொருவரும் தன்தன் மதம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவைகளைக் காட்டியபின்பு ஒரு சமயம் வேற்றுமை உணர்ச்சி உண்டானாலும், அதை அது முதலில் பார்த்தவுடன் தோன்றிய ஒற்றுமை உணர்ச்சியின் பலத்தால் தலை தூக்காதிருக்கும்படி செய்யலாம்.

ஆதலால், ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமூகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்தவேண்டியது முக்கியமானதாகும்.

உதாரணமாக, மற்ற நாட்டினரான சைனாக்காரரையோ, ஜப்பான்காரரையோ எடுத்துக் கொண்டால், அந்த நாட்டாரில் அந்த நாட்டாருக்குள்ளாகவே ஒருவருக்கொருவர் எவ்வித வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாத சாயலையும் உடையையும் கொண்டிருப்பது யாவருமறியலாம்.

இந்த உண்மையையும் இரகசியத்தையும் கண்டுதான் வீரர் கமால்பாட்சா அவர்கள் எல்லோரும் ஒரே வித உடை அணிந்து ஒரு சாயலாகவே இருக்கவேண்டுமென்று உத்தரவிட்டார். அதன் மூலம், துருக்கி நாடு சிறியதாக இருந்தாலும் அது தன்னையும் ஒரு வல்லரசு என்று மதிக்கும்படி செய்துகொண்டது. இதைப் பின்பற்றியே தான் ஆப்கானிஸ்தானமும் முயல்கின்றது.

நமது நாட்டிற்கும் இப்போது வெகு அவசரமாக உடையும் சாயலும் மாற்றப்பட்டு ஒன்றுபோல் தோன்றும்படி செய்யவேண்டியது அவசியம். இந்த எண்ணம் நமக்கும் நமது நண்பர்களில் பலருக்கும் வெகுநாளாகவே இருந்து வந்தாலும், என்ன மாறுதல் செய்வது என்னும் விஷயத்தில் யோசனையாகவே இருந்து வந்ததால் தாமதப்படுத்தப்பட்டுவிட்டது. அதோடு நாம் சொல்லுவது மற்றவர்களுக்கும் சம்மதப்படும்படியாய் இருக்க வேண்டுமே, உடனே பின்பற்ற வேண்டுமே என்கின்ற யோசனையும் இருந்து வந்தது.

சாயல், உடை, பழக்க உணர்ச்சி ஆகியவைகளில் மேல் நாட்டாரைப் போல் கட்டுப்படுகின்ற வழக்கமோ, கவலையோ நம்மவர்களுக்குச் சிறிதும் கிடையாதாதலினாலும், அவ்வித வித்தியாசங்களே இந்த நாட்டின் பெருமைக்கும், இயற்கை வனப்பிற்கும் அணிகலனாய் இருப்பதாக மக்கள் கருதி வந்ததாலும், இது இப்போது பிரஸ்தாபிக்கக் கூடாததாகக் கூட பலருக்குத் தோன்றினாலும் தோன்றலாம்.

மேல் நாட்டார் கட்டுப்பாட்டுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், அவர்கள் உடை, முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள மாறுதலும், அதை ஒரேயடியாய் அய்ரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா முதலிய கண்டங்கள் உடனே பின்பற்றுவதும் - அது போலவே அப்பெண்கள் தலைமயிர் முன் இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் உள்ள வித்தியாசமும், அதை எல்லாக் கண்டங்களிலுள்ள வெள்ளைக்காரரும் பின்பற்றுவதையும் பார்த்தாலே போதுமானதாகும்.

அவசியம் என்றோ, கட்டுப்பாடு என்றோ அவர்களுக்குத் தோன்றிவிடுமானால், எந்த மாறுதலானாலும் அதை அரச ஆக்கினைபோல் பாவித்து, எல்லோரும் உடனே கீழ்ப்படியும் வழக்கம் அவர்களுக்குள் உண்டு. கட்டுப்பாட்டிற்கு மற்றொரு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடுகின்றோம்.

அதாவது, அய்ரோப்பாவில் பெண்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டதில் சில உயர் குடும்பங்கள் என்று சொல்லப்படும் குடும்பப் பெண்கள் தாங்களும் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டாலும், ஜார்ஜ் சக்கரவர்த்தியின் மனைவியான மேரி ராணியார் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளாததில் சற்று அதிருப்தியுடன் கட்டுப்பாட்டிற்குப் பயப்பட வேண்டியவர்களாக இருந்தார்களாம். இதை அரச குடும்பத்தார் அறிந்ததும் இளவரசர் மனை இளவரசியை உடனே தலைமயிரைக் கத்தரித்துக் கொள்ளும்படி செய்தார்களாம். இப்போது அது பொது தேசாச்சாரமாய் விட்டது.

ஆனால், நம் நாட்டிலோ எப்பேர்ப்பட் மாறுதலாயிருந்தாலும் அது எவ்வளவு சரியானதாயும், தேவையானதாயும் இருந்தாலும் பயனும் பொருளும் அற்ற பழைய வழக்கம் என்னும் ‘பேய்க்கு’ - அதாவது மூடபயத்திற்கு அடிமையாகி, உடனே அதைக் குற்றம் சொல்லவும், உள் எண்ணம் கற்பிக்கவும், எதிர்ப் பிரச்சாரம் செய்யவும் புறப்பட்டு விடுகிறார்கள். ஆதலால்தான், ஆயிரக்கணக்கான வருஷங்களாக இந்திய மக்கள் மாத்திரம் வேற்றுமைப்பட்டு, பிரிந்து, துவஷேங்கொண்டு, அன்னியருக்கு அடிமைகளாய் இருக்க வேண்டியவர்களாகி விட்டார்கள். இதை ஒரு வழியில் போக்க முயற்சிக்க வேண்டுமென்று கருதி, பல மாறுதல்களுடன் உடை மாறுதல்களைப் பற்றித் துணிந்து தெரிவிக்கிறேன்.

(‘குடி அரசு’ - தலையங்கம், 9-11-1930)

Pin It