Demonstration indiaடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று மாலை என் நண்பனுடன் நாங்கள் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடியில் அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம், என் அப்பாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது "டேய் 500, 1000 ரூபாய் நோட்டெல்லாம் இனி செல்லாதாம், கையில் ஏதாவது காசு இருந்தா சில்லறை மாற்றி வச்சுக்கோ” என்றார்... அப்பா வாட்ஸ்அப்களில் வரும் ஃபார்வேர்ட் மெசேஜ் எல்லாம் உண்மை என்று நம்பும் இந்த நடுத்தர வர்க்க மனோநிலை கொண்ட கோஷ்டி என்பதால் இதையும் அதேபோல் ஏதோ போலி வாட்ஸ்அப் செய்தி என்றே நம்பி கிண்டலடித்து போனைத் துண்டித்தேன்.

சிறிது நேரம் கழித்து கீழே அறைக்கு வந்த பிறகுதான் உண்மை நிலவரம் தெரிந்தது. இச்செய்தி முதல் முறை என் காதில் விழுந்தபோது அதை நம்ப மறுத்ததை எனது அசட்டுத்தனம் என்று நிச்சயம் சொல்ல மாட்டேன்.

நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூபாயின் மதிப்பில் 86 விழுக்காட்டை ஒருவர் திடீரென செல்லாது என்று சொன்னால் எவன் நம்புவான்? 70 ஆண்டுகளாக ஒரு மாநிலத்திற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருந்த சிறப்பு அந்தஸ்து ஒரே நாளில் பறிக்கப்படுவது, மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் சாவதற்கு காரணமானவர்கள் அப்பழுக்கற்றவர்களாக கருதி விடுதலை செய்வது என அசாத்தியங்களை சாத்தியமாக்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது எனக்கு அப்போது தெரியாது.

கேட்டவுடன் சிரிப்பை வரவழைத்த ஒரு செய்தி போகப்போக தன் பேரழிவு முகத்தைக் காட்டியது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நியாயப் படுத்த அரசும் அதற்கு முட்டுக் கொடுப்பவர்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு காரணம் சொல்லி வந்தனர்.

முதலில் கள்ள நோட்டுகள் ஒழியும், கருப்புப் பணம் வெளிவரும் என்றனர், பின்னர் டிஜிட்டல் இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்றனர், நேரடி வரி வட்டத்தைப் பெருக்கப் போகிறோம் என்றனர்.

ஆனால் இவற்றில் ஒன்றும் உருப்படியாக நடந்த பாடில்லை. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 15லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 99.3% வங்கிக்கு வந்து சேர்ந்து விட்டது என்று ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொண்டது, கருப்புப் பணமும், கள்ளப் பணமும் வைத்திருப்பவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபித்து விட்டது.

இடி எவர் தலையில் இறங்கியது?

நம்மைப் போன்ற சாமானியர்கள் ஏடிஎம் வாசலில் கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருக்கும்போது, பலர் ஏடிஎம் வாசலிலேயே செத்து விழுந்த போது, சேகர் ரெட்டி புத்தம் புது 2000 நோட்டுகளை கோடிகளில் குவித்துக் கொண்டிருந்தார், கர்நாடகாவில் ஒரு பாஜக எம்பி பல நூறு கோடி செலவில் பிரமாண்டமாய் தன் பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்தார். உண்மையில் இந்த நடவடிக்கைகள் ஏற்படுத்திய பாதிப்பு எவர் தலையில் இடியாய் இறங்கியது?

இந்திய சமூகக் கட்டமைப்பை பொருத்தவரை மையப்படுத்தப்பட்ட அதிகார அமைப்பு செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் இந்நாட்டில் பெரும்பான்மையான உழைக்கும் பிரிவினரான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களைச் சுரண்டுவதாகவே அமையும். பணமதிப்பு நீக்க விஷயத்திலும் அதுதான் நடந்தது.

சிலருக்கு இதைப் படிக்கும்போது 'ஏழை என்று மட்டும் சொன்னால் போதாதா? என்னய்யா எதைப் பேசினாலும் சாதி சாதின்னு அது கூடவே போய் இணைக்குறீங்க' என பொத்துக் கொண்டு கோபம் வரலாம். இந்திய சாதிய சமூகத்தை வெறும் வர்க்கப் பிரச்சனையாக மட்டும் ஒருவர் அணுகுகிறார் என்றால் அவர் பிரச்சனையின் முழுமையை ஒருபோதும் கண்டடைய மாட்டார்.

இந்திய பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட 50% பங்களிப்பது முறைசாரா பொருளாதாரம் தான், இங்கு உள்ள ஒட்டு மொத்தத் தொழிலாளர்களில் 80-90% வரை அமைப்புசாரா தொழிலாளர்களாகவே இருக்கின்றனர்.

இங்கு நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் 98% வங்கிகள் மூலமோ பிற டிஜிட்டல் வழிமுறைகளிலோ அல்லாமல் நேரடியாகக் கரன்சிகளின் மூலமே செய்யப்படுகின்றன.

இத்தகைய அமைப்பு சாரா தொழிலாளர்களில் மிகப் பெரும்பான்மையினர் கட்டிட வேலை செய்பவர்கள், சிறு கடைகள் வைத்திருப்பவர்கள், விவசாயக் கூலி, மூட்டை சுமப்பது போன்ற பிற கூலி வேலை செய்பவர்கள், தச்சர்கள், முடி திருத்துபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுனர்கள் என்ற சாமானிய அடித்தட்டு மக்கள்தாம்.

உயர் சாதியினரில் எத்தனை சதவீதம் பேர் இதுபோன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலையில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்தால் ஏன் ஏழை மக்கள் என வெறுமனே சொல்லாமல் சமூகப் பின்னணியைச் சேர்த்து பார்க்க வேண்டும் என்பது புரியும்.

இங்கு நான் உயர் சாதியினர் என்று குறிப்பிடுவது, இந்து மத சாஸ்திரங்கள் அங்கீகரிக்கும் முதல் மூன்று வர்ண சாதிகளை மட்டுமே, தங்களுக்கு தாங்களே ஆண்ட பரம்பரை பட்டம் கொடுத்துக் கொண்ட நான்காம் சாதியினரை அல்ல.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரம் நேரடிப் பணப் பரிவர்த்தனையில் வேரூன்றி இருக்கும் நிலையில், புழக்கத்தில் இருந்த பணம் செல்லாது, புது ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வரும்வரை டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துங்கள் என்ற அறிவிப்பே அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது.

விளைவுகள் :

விளைவு, பல கோடி அடித்தட்டு மக்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர், 2017-18 ஆம் ஆண்டு வெளியான அரசுத்துறை புள்ளிவிவரங்களின்படி கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம் அளவிற்கு உயர்ந்தது, இந்த தகவல் வெளியான உடனே அரசு இதனை மறுத்தது வேறு செய்தி.

பல லட்சக்கணக்கான சிறு குறு தொழில்கள் சிதைந்தது. அது வரை தங்களை நடுத்தர வர்க்கத்தினர் என்று நினைத்துக்கொண்டிருந்த பல்லாயிரம் குடும்பங்கள் அடித்தட்டுக்கு இடம்பெயர்ந்தன, பலநூறு நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நின்று போயின, அவசர அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டன. இப்படி லட்சக்கணக்காந குடும்பங்கள் அவஸ்தையுற்றன.

அடுத்த ஆண்டே மேலும் ஒரு இடியாய் விழுந்தது ஜிஎஸ்டி அமலாக்கம். முந்தைய ஆண்டு விழுந்த இடியில் தப்பித்துப் பிழைத்த நடுத்தர வர்க்கம் இந்த முறை கடுமையாக தாக்கப்பட்டது, ஏற்கனவே சிதைக்கப்பட்டு இருந்த பல்வேறு சிறு குறு நிறுவனங்கள் இம்முறை இழுத்து மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத வகையில் மக்களின் நுகரும் திறன் வீழ்ச்சி; ஆட்டோ மொபைல் விற்பனை வீழ்ச்சி; ஐந்து ரூபாய் parle g பிஸ்கெட் விற்பனை வீழ்ச்சி போன்றவை நுகர்வு வீழ்ச்சியை உணர்த்தும் குறியீடுகள். அதன் பின்னரும் கூட மத்திய அரசு சாமானியர்களைப் பற்றி கவலைப் படவே இல்லை. பொருளை வாங்க வேண்டியவன் தரித்திரன் ஆகி திரியும்போது, உற்பத்தி செய்பவனுக்கு லட்சம் கோடி கார்ப்பரேட் வரி விலக்கு அளித்தது.

2019இல் வெளியான Oxfam international inequality அறிக்கையின்படி 2018-19 ஆண்டிற்கு இடையில் மட்டும் பொருளாதாரத்தின் உயர் அடுக்கில் உள்ள 1% கோடீஸ்வரர்களின் செல்வம் 39% அதிகரித்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பொதுச் சமூகம் ஏன் அமைதி காத்தது:

இத்தகைய சமத்துவமற்ற சூழல் இருக்கின்ற போதும், இத்தனை இன்னல்களையும் அனுபவித்தும், இந்திய பொதுச் சமூகம் சலனமேதும் இன்றி அமைதி காத்ததோடு, அடுத்த தேர்தலிலும் அவர்களையே ஆட்சியில் அமர்த்தியது, குறிப்பாக இம்முறையும் அவர்களை வெல்ல வைத்தது பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் வாக்குகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இது எப்படி சாத்தியமானது? அதுதான் பார்ப்பனியத்தின் கட்டமைப்பு, இங்கு நடப்பது வெறும் கார்ப்பரேட் ஆட்சியாக மட்டும் இருந்திருந்தால் ஒருவேளை மக்களிடம் கொந்தளிப்பு காணப்பட்டு இருக்கலாம், ஆனால் இங்கு நடப்பது பார்ப்பன பனியா கூட்டாண்மை ஆட்சி, மனுவின் ஆட்சி.

பார்ப்பனியக் கட்டமைப்பின் அடித்தளமே சமத்துவமின்மை தான், உழைப்புக்கான மரியாதையை, உழைப்பவர்களின் கண்ணியத்தை அது துளியும் பொருட்படுத்தாது. மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், விதியின் பெயரால் உழைப்பவர்களின் மூளையை மழுங்கடித்து, சாதியின் மூலம் அவர்களுக்குள்ளேயே மோதவிட்டு கடைசிவரை சுரண்டித் தின்னும் உயர் வகுப்பினரின் நலனை மட்டுமே அது பாதுகாக்கும்.

பாதிக்கப்படுபவனே தான் சுரண்டப்படுவதை விதி என்றும் கடமை என்றும் நியாயப்படுத்துவான், தன்னைவிட சமூக பொருளாதாரத் தளத்தில் கீழே இருப்பவர்களை பார்த்து ஆசுவாசப்படுத்திக் கொள்வான்.

பலியாடுகள்:

இரண்டாயிரம் ஆண்டுகளாக பொதுச் சமூகத்தில் வலிந்து திணிக்கப்பட்ட இந்த அடிமை உளவியலில் இருந்து நாம் இருபதாம் நூற்றாண்டில் கூட வெளி வராதவாறு தேச பக்தி என்னும் புதிய மயக்க மருந்து சேர்க்கப்பட்டது.

விளைவு பணமதிப்பு நீக்கம் மூலம் படும் அவஸ்தை அனுபவித்தாலும் கருப்புப் பணமும், கள்ளப் பணமும் ஒழிந்து தேசம் முன்னேறும் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு மீண்டும் நாம் பலியாடுகள் ஆகிவிட்டோம்.

இன்னும் நாம் எத்தனை காலம் இத்தகைய அப்பாவி பலியாடுகளாக ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிதலும் அவர்களின் மனசாட்சியில் சிறு உறுத்தலைக் கூட ஏற்படுத்தாது என்பதை, பிறகு அடுத்தடுத்து நடைப்பெற்ற ஜி எஸ் டி அமலாக்கம், புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் முதல் தற்போது கொண்டுவந்துள்ள விவசாய மசோதா வரை உணர்த்துகின்றன.

உலகையே சுரண்டித் தின்னும் நாடுகள் என்று விமர்சிக்கப்படும் முதலாளித்துவ நாடுகள் கூட கொரோனா காலத்தில் தங்கள் குடிமக்களின் நலன் காக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல் 20% வரை செலவழித்துள்ளன. ஆனால் நமது ராம ராஜ்யத்தில் 1% கூட இன்னும் மனது வந்து நமக்காக செலவழிக்கவில்லை.

செய்யவும் மாட்டார்கள் ஏனெனில் பார்ப்பனியம் உள்ளவரை இச்சமூகம் ஒரு குடிமைச் சமூகமாக மாறவே மாறாது, அதுவரை அதிகார வர்க்கத்தின் பார்வையில் நாம் என்றைக்குமே குடிமக்கள் அல்ல ஏவல் சாதிகள்தான்.

- குண சந்திரசேகர்

Pin It