kolathur mani copy‘பெரியாரும் - மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (1)

  • சாதியத்தை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் கட்சி என்பதாலேயே பெரியார் காங்கிரசிலிருந்து விலகினார்.
  • ஜாதித் திமிர் - பணத் திமிர் அடிப்படையில் இரண்டு சுரண்டல்களையுமே பெரியார் எதிர்த்தார்.

குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது.

எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி - தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் - பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி - மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை.

பெரியார் என்பது பெரியாரினுடைய நான்கு கொள்கைகள் தான்.. பெரியாருடைய முதன்மை கொள்கையாக அவர் வைத்திருந்தது ஜாதி ஒழிப்பு. ஜாதி ஒழிப்பைத் தொடர்ந்து, ஜாதீயத்திற்கு பாதுகாப்பாக ஜாதியத்தைத் தொடர்ந்தும் பேணு கிறதாக, அத்தன்மையில் இருக்கிற, பெண்ணடிமை ஒழிப்பு என்பது அடுத்ததாக அவர் வைத்துக் கொண்ட கொள்கை.. மூன்றாவதாக அவர் வரித்துக் கொண்ட கொள்கை, பொதுவுடமை கொள்கை தான்.

1925இல் சுயமரியாதை இயக்கம், ஜாதி ஒழிப்பு, 1926இல் பெண்ணுரிமை, 1927ஆம் ஆண்டிலிருந்து அவர் பொதுவுடமை கருத்துகளை பேசத் தொடங்குகிறார். இறுதியில், 1938ஆம் ஆண்டு தான் தனித் தமிழ் நாடு என்கிற ஒரு கொள்கையை அவர் முன் வைக்கிறார். இந்த நான்கு கொள்கைகளை முன்னிறுத்தித் தான் அவருடைய காலம் முழுதும் அவர் செயலாற்றி வந்திருக்கிறார்.

ஆனாலும் நீங்கள் நினைக்கலாம், இதில் எங்கே கடவுள் மறுப்பைக் காணோமே என்று. இந்த கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கு, செயல்படுத்துவதற்கு அவர் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் கடவுள் மறுப்பு. அவர் இலக்கே கடவுளை ஒழித்து விட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்பது அல்ல.. ஆனால், எல்லாவற்றிற்கும் தடையாக இருக்கிற கடவுளைப் பற்றிய விமரிசனத்தை அவர் வைக்க வேண்டிய தேவை வந்தது.

நாத்திகர்கள் என்று நாம் பார்த்தால், பல இடங்களில் நான் சொல்லியிருக்கிறேன். இந்த நாட்டில் பெரும் கொடுமையாக, இன்று வரைக்கும் நாம் பேசிக்கொண்டிருக்கிற, இந்துத்துவா என்கிற விஷ வித்தைத் தூவிவிட்ட சாவர்க்கர் ஒரு நாத்திகர்தான். அந்த நாத்திகம் நமக்குத் தேவையில்லை.

வெறும் அறிவியல் நாத்திகத்தையும் பெரியார் பேசவில்லை. சமூக மாற்றத்திற்கான நாத்திகத்தைத் தான் பெரியார் முன்வைத்தார். அவருடைய நாத்திக உரையை நாம் கேட்டிருப்போமேயானால், அவர் சொல்லிய செய்திகளெல்லாம் இப்படித்தான் இருக்கும். அவர் ஓரிடத்தில் சொல்லு கிறார்.

“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத் தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப் பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப் பதைப் பார்த்த பிறகுங்கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” இது தான் கடவுள் நம்பிக்கை குறித்து அவர் வைத்த கேள்வி. இப்படிப்பட்ட கொடுமைகளை அவர் பார்த்துக் கொண்டிருப்பாரா என்று கேள்வி வைத்தார்.

இன்னொரு இடத்தில் சொல்லுவார். இந்த தீண்டாமைக் கொடுமைகளை, இன்றென்ன அவசரம் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒரு நாள் கூட ஒத்தி வைக்க என் மனம் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லுவார்.

“கடவுள் எங்கும் நிறைந்த சர்வசக்தி உள்ளவர் பட்சபாதம் அற்றவர் என்று சொல்லிக் கொண்டு கடவுள்தான் தீண்டாதவர்கள் என்ற கொடுமைக்கு உட்படும் மக்களுக்கு ஆதாரம் என்பது எவ்வளவு கேவலமானது அனேகமாக அவர் தான் இந்த தீண்டாமையை படைத்தவர் என்றும் சொல்லப்படுகிறது அது உண்மையெனில் உண்மையில் அத்தகைய கடவுளை எப்படி யாவது ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்க வேண்டும் இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாது என்றால் அதற்காக அவரை இன்னமும் சீக்கிரமாய் ஒழிக்க வேண்டும் அவரால் இத்தகைய அநீதியை விளக்கம் அல்லது அக்கிரமம் செய்பவர்களை அடக்கவும் முடியாது என்றால் அவருக்கு எந்த உலகத்திலும் இருக்க வேண்டிய வேலையே இல்லை ஒழிக்க வேண்டியது தான் நியாயம்.” இந்த உரை 1929இல் சென்னை பச்சையப்பன் ஹாலில் நடைபெற்ற தீண்டாமை விலக்கு மாநாட்டில் ஆற்றப்பட்டதாகும்.

தீண்டாமைக் கொடுமைகளை ஒழிக்கவும் கடவுளுக்கு விருப்பம்தான், ஆனால் அவரால் முடியவில்லை என்றால், அந்த கடவுள் நமக்கு எதற்கு? இப்படித் தான் அவர் வாதங்களை வைத்திருக்கிறார். எனவே, அவருடைய இலட்சியத்தை நோக்கி செல்லுகிற பயணத்தில், கடவுள் மறுப்பு மிகத் தேவையானது, இது தான் எல்லா கொடுமை களுக்கும் ஆணிவேராக இருக்கிறது, என்பதால்  கடவுள் மறுப்பைப் பேசவேண்டி இருந்திருக்கிறது.

எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு, ‘மார்க்சியமும் பெரியாரும்’ என்பதாகும். இதை மூன்று வகையில் நான் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். ஒன்று, பெரியாரும் அவருடைய மார்க்சிய செயல்பாடுகளும், மார்க்சிய சிந்தனை களும், அவர் முன்வைப்புகளும். இன்னொன்று, பெரியாருக்கு இணக்கமான மார்க்சிய பார்வைகள்.

பெரியாரை விட்டு விலகிச் சென்றிருக்கிற மார்க்சியம். இந்த மூன்றையும்தான் நான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். முதலில் பெரியாரின் மார்க்சியம் என்று சொல்லுகிறபோது, பதிவாக நம்மிடம் இருப்பது பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ என்கிற ஏடு தான். அவர் அதை 1925ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்குகிறார்.

அதற்கு பின்னால் தான், அவரின் உரைகளெல்லாம் அதில் முழுமையாக நாம் பார்க்க முடிகிறது. ஒரு வேளை பிற ஏடுகளில் வந்திருக்கலாம். அவற்றைப்  படிக்கிற வாய்ப்பு நமக்கு இல்லை. நம் கைக்கு கிடைப்பதில்லை. ஆனால் அவருடைய குடிஅரசு ஏடு எல்லாம் நம்மிடம் இருக்கிறது. எங்கள் முயற்சியில் நாங்களே கூட பதிப்பித்து இருக்கிறோம்.

1925 முதல் 1938 வரைக்கும் பதிமூன்று ஆண்டுகளில் அவர் பேசியதும் எழுதியதும், ஒரு இருபத்தேழு தொகுதிகளாக நாங்கள் வெளியிட்டு இருக்கிறோம்.. அதற்குப் பின்னால் 1949 வரைக்கும் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கிறது. அவற்றில் நான் படித்த சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

1925ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில்தான் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார். இந்த காங்கிரஸ் கட்சி என்பது ஜாதியை பாதுகாக்கிற, முதலாளித்துவத்தை பாதுகாக்கிற அமைப்பாக இருக்கிறது என்பது அவர் கருத்தாக இருந்தது. அதை பின்னாலே பார்ப்போம்.

இராமநாதபுரம் ஜில்லா காங்கிரஸ் மாநாடு என்றொரு மாநாடு காரைக்குடி பள்ளத்தூரில் நடக்கிறது. மாநாட்டுக்குத் தலைவர் பெரியார். ஏனென்றால், பெரியார் அப்போது தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர். அவர் ஆறாண்டு காலம் காங்கிரசிலே பணியாற்றியிருக் கிறார். 1919ஆம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் கட்சிக்குள் வருகிறார்.

அதற்கு முன்னால், காங்கிரஸ் ஆதர வாளராக இருந்திருக்கிறார். 1907ஆம் ஆண்டு சூரத் மாநாட்டுக்கே போயிருக்கிறார். ஆனால் காங்கிரஸ் உறுப்பினராக இருக்கவில்லை. ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்த பின்னால், அமிர்தசரஸ் மாநாட்டுக்கு போனவர் படுகொலை நடந்த இடங்களை குண்டு துளைத்த சுவர்களையெல்லாம் பார்த்துவிட்டு வந்த பின்னால் காங்கிரசில் உறுப்பினராகிறார்.

இந்த காலகட்டத்திலும்கூட நாம் விலகி நிற்கக்கூடாது, நாமும் நம்மை இணைத்துக் கொண்டு, அந்த ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று, காங்கிரஸ் கட்சி ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் என்று தவறாக புரிந்து கொண்டு, அதில் போய் சேர்ந்து விடுகிறார். அதைக் கண்டுணர்வதற்கு ஆறாண்டுகள் ஆகிவிட்டன.

பெரியார் காங்கிரசில் சேர்ந்த ஆண்டுதான் மொழி வழியாக காங்கிரஸ் கமிட்டிகளைப் பிரிக்கிறார்கள். அரசாங்க நிர்வாகம் என்பது, சென்னை மாகாணம் பெரியதாக இருந்தாலும், கட்சி அமைப்பை மொழிவழியாக பிரிக்கிறார்கள். தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி, கேரள காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி என்று அப்போதே பிரித்துவிட்டார்கள்.

அப்பொழுது தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பெரியார் வருகிறார். அவர் இருந்த எல்லா ஆண்டும், தலைவர் இல்லையென்றால் பொதுச்செயலாளராகத் தான் இருந்துவிட்டு, பொதுச் செயலாளராக இருந்த போது தான் அந்த அமைப்பை விட்டு வெளியேறுகிறார். அந்த காரைக்குடி மாநாட்டில் அவர் பேசுகிற போது ஒன்றைச் சொல்லுகிறார், காங்கிரசைப் பற்றி. ஏனென்றால் அவர் அதற்குப் பின்னர் சில மாதங்களில் அந்த அமைப்பை விட்டு வெளியே போய்விடுகிறார். அம்மாநாட்டுரையில் அவர் சொல்லுகிறார்.

“உலகமே தொழிலாளர்களுடையது தான். காங்கிரஸ் தொழிலாளர்களுடையதாகத் தான் இருந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் காங்கிரஸ் பணக்காரர்களுடையதாகவும், ஆங்கிலம் படித்தவர்களுடையதாகவும் இருந்து வந்திருக்கிறது. மகாத்மா சொல்லும் சுயராஜ் ஜியம், தொழிலாளிக்குத்தான் வேண்டுமே தவிர, ஆங்கிலம் படித்தவர்களுக்கும் பணக்காரர் களுக்கும் அல்ல.” ஆனால் இந்த கட்சி தொழி லாளர்கள் கட்சியாக இல்லையே என்று ஆதங்கப்படுகிறார்.

பணக்காரன், படித்தவன் கட்சியாகத்தானே இது இருக்கிறது. தொழிலாளர்கள் யாரும் இந்த கட்சியில் இல்லையே. அவர்களை இணைத்துக் கொள்ளாத கட்சியாக அல்லவா நடக்கிறது. கட்சியினுடைய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் பேசுகிறார். இதை மாற்றியே ஆகவேண்டும் என்பது அவர் பேசுகிறபோதே அவருக்கு இருந்த எண்ணம், அங்கு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தவர் களுக்கு எதிரான பார்வையாகத் தான் இருக்கிறது.

அடுத்து கூட, இன்னொரு இடத்தில், சட்ட மன்ற தேர்தல் வருகிறபோது சொல்லுகிறார். சட்டமன்ற தேர்தல் நடக்கும். நியமனமும் உண்டு அந்த காலகட்டத்தில், எம்.எல்.சி-யென்று சொல்லுவார்கள். நியமனம் என்பது, தொழிலாளர் தொகுதி, பட்டதாரிகள் தொகுதி என்றும் உண்டு. அப்பொழுது அவர் அறிக்கை விடுகிறார்.

சரி, தொழிலாளர்களுக்குத் தலைவராக இருக்கும் சில அரசியல் தலைவர்களுக்கு தொழிலாளர்களிடம் உண்மையான அன்பு இருக்குமேயானால், சென்னை, நாகை, கோவை முதலிய இடங்களிலாவது, தங்கள் கட்சிக்காக நிறுத்தப்படும் சட்டசபை ஸ்தாபனங்களுக்கு, தொழிலாளர்களிலேயே சில பிரதிநிதிகளை ஏன் நிறுத்தலாகாது, என்று கேள்வி வைக்கிறார்.

நீயே தொழிலாளர் தொகுதி என்று பெயர் வைத்துவிட்டு, அதற்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது போய், ஒரு கட்சிக்காரனை நிறுத்துகிறாய், பெரிய பெரிய ஆட்களை நிறுத்துகிறாய், தொழிலாளரை கொண்டு போய் நிறுத்து, அவன் குரலை ஒலிப்பதற்கு தானே பிரதிநிதி வேண்டும். அந்த கேள்வியை வைக்கிறார். இப்படி தொடர்ச்சியாக சின்னச்சின்ன செய்திகளெல்லாம் சொல்லிக் கொண்டே வரலாம்.

(தொடரும்)

- கொளத்தூர் மணி

Pin It