அக்கிராசனரவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே!

உலகத்திலேயே நாகரிகம் பெற்ற நாடுகள் என்று சொல்லப்படுபவைகளில் நம்நாடே சுகாதார விஷயத்தில் மிகவும் கேவலமாக இருந்து வருகிறது. இது வெளிநாடு சென்று வந்தவர்களுக்குத் தெரியும்.

வெளிநாட்டிற்கும் நமது நாட்டிற்கும் சுகாதாரக் கொள்கைகளும் அனுஷ்டிப்பு முறைகளும் நேர் தலைகீழாக இருக்கின்றன. அதாவது, நமது நாட்டுச் சுகாதாரமெல்லாம் - ஒரு சாதி மனிதனை மற்றொரு சாதி மனிதன் தொட்டால் தோஷம்; பார்த்தால் தோஷம்; நிழல் பட்டாலே தோஷம்; தெருவில் நடந்தால் தோஷம் என்கின்ற முறையிலிருக்கின்றதே தவிர - மற்றபடி மனிதன் அசிங்கமாக இருக்கக் கூடாது; துர்நாற்றம் வீசக்கூடாது; கெட்டுப்போன பதார்த்தமாக இருக்கக் கூடாது என்கின்ற கவலைகள் சுத்தமாய்க் கிடையாது.

இதன் காரணமெல்லாம் சுகாதார அறிவு இல்லாததேயாகும். ஒரு மனிதன் பணக்காரனாக வேண்டும்; பெரிய உத்தியோகஸ்தனாக வேண்டும்; பெரிய பண்டிதனாக வேண்டும்; பெருமையுடையவனாக வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் அதிகக் கவலை வைத்திருக்கிறானே ஒழிய - நல்ல திடகாத்திரத்துடன் இருக்க வேண்டும்; சுகஜீவியாக இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களில் கவலைப் படுவதில்லை.

மேல்நாட்டார் முதலியவர்கள் தாங்கள் உலகத்தில் இருப்பதே சுகமாய் வாழ்வதற்கென்றும், சுகாதார முறைப்படி இருப்பதற்கே சம்பாதிப்பதென்றும், சுகாதார வாழ்க்கையை அனுசரித்தே தமது பொருளாதார நிலைமையென்றும் கருதி, அதற்கே தமது கவனத்தில் பெரும்பாகத்தைச் செலவு செய்கிறார்கள். அதனாலேயே மேல்நாட்டுக்காரன் நம்மைவிட இரட்டிப்புப் பலசாலியாகவும், சுகசரீரியாகவும், அதிகப் புத்திக்கூர்மையும் +69மனோஉறுதியும் உடையவனாகவும், நம்மைவிட இரட்டிப்பு வயது ஜீவியாகவுமிருந்து வருகிறான்.

நமது மக்களின் சராசரி வயது 24; வெள்ளைக்காரரின் சராசரி வயது 45. இதற்குக் காரணம் என்ன? சுகாதாரத்தினால் என்ன பலனிருக்கின்றது என்பதே நமக்குத் தெரியாது. “எல்லாம் கடவுள் செயல்” என்கின்ற ஒரே ஒரு அறிவுதான் உண்டு. நமக்குக் ‘காலரா’வந்தால் ‘ஓங்காளியம்மன்’குற்றமென்று பொங்கல் வைக்கவும்; வேல் மிரவணை செய்யவும் தான் முயற்சி செய்வோம். வைசூரி வந்தால் மாரியம்மன் குற்றமென்று மாரியாயிக்கு தயிர் அபிஷேகமும், இளநீர் அபிஷேகமும் தான் செய்வோம். வயிற்றுவலி வந்தால் திருப்பதி பொன்றாமத்தையனுக்கு வேண்டுதல் செய்வோம். நரம்புச் சிலந்தி வந்தால் சிலந்திராயனுக்கு அபிஷேகம் செய்வோம். நம் சங்கதிதானிப்படி என்றால், குழந்தைகளுக்குக் காயலா வந்தால் ‘பாலாரிஷ்டம்’என்போம்; கிரக தோஷமென்போம்; செத்துவிட்டால் விதி மூண்டுவிட்டது என்போம். ஆகவே இந்த மாதிரி வழிகளில்தான் நமது புத்திகள் போகுமேயல்லாமல் ஏன் வியாதி வந்தது! ஆகாரத்திலாவது, பானத்திலாவது, காற்றிலாவது என்ன கெடுதி ஏற்பட்டது? சரீரத்தில் என்ன கோளாறு இருக்கின்றது? என்கின்ற விஷயங்களில் கவலை செலுத்தும்படியான அறிவோ, படிப்போ நமக்குக் கிடையாது.

நமது நாட்டு மக்கள் தங்கள் வீட்டுக் குப்பைகளை பக்கத்து வீட்டுக்கு முன்புறமாய்க் கொண்டுபோய்க் கொட்டுவதே வழக்கம்; பக்கத்து வீட்டுக்காரன் நமது வீட்டுக்கு முன்புறத்தில் கொண்டுவந்து கொட்டி விட்டுப் போவது வழக்கம். நமது குழந்தைகளுக்குப் பொது வீதிகளேதான் கக்கூசுகள்.

- (ஈரோட்டில், 27-8-1930-ல் சொற்பொழிவு - ‘குடிஅரசு’, 21-9-1930)

--------------------------------------------------------------------------------

தென் ஆப்பிரிக்கா தினம்!

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாழ்வாய் நடத்துவதைப் பற்றியும், இந்தியர்களை அந்நாட்டைவிட்டு ஒழிப்பதற்கென ஏற்படுத்திய சட்டத்தைப் பற்றியும் சென்ற 11-ந் தேதி இந்தியாவெங்கும் பொதுத் தினமாகக் கொண்டாடி, தேசமெங்கும் கண்டனத் தீர்மானங்கள் நடைபெற்றன. அக்கண்டன விஷயத்தில் நாமும் கலந்து கொள்ளுகிறோம். ஆனால், நமது நாட்டில் கோடிக்கணக்கான சகோதரர்களைத் தீண்டாதாரென்றும், பார்க்கக் கூடாதாரென்றும், தங்களுடைய வேதங்களையே படிக்கக் கூடாதாரென்றும், தங்களுடைய தெய்வங்களையே கண்டு வணங்கக் கூடாதாரென்றும் கொடுமை செய்திருக்கிற ஒரு நாட்டார், இக்கண்டனத் தீர்மானம் செய்வதில் ஏதாவது பலன் உண்டாகுமா? இதை அறிந்த தென் ஆப்பிரிக்கா வெள்ளையர்கள் இக்கண்டனத் தீர்மானங்களை மதிப்பார்களா? அல்லது குப்பைத் தொட்டியில் போடுவார்களா? என்பதை வாசகர்களே கவனித்துப் பார்த்தால், வீணாக ஒரு நாளை இப்போலிக் கண்டனத் தீர்மானங்களுக்காகப் பாழாக்கினோமே என்ற முடிவுக்குத்தான் வருவார்கள்.

(‘குடிஅரசு’, தலையங்கம் - 18-10-1925)

Pin It