மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 1

1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாளில் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார் இராசாசி. இதனை எதிர்த்து தந்தைப் பெரியார் மற்றும் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கு. அப்பாதுரை, முடியரசன், இலக்குவனார், கி. ஆ. பெ உள்ளிட்ட தமிழறிஞர்களும் தலைவர்களும் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். சென்னைதான் அதன் மையமானது. சென்னையிலேயே அதிக அளவிலான போராட்டங்கள் நடந்தன.

 மூவலூர் ராமாமிர்தம், நாராயணி, வா. பா. தாமரைக்கனி, முன்நகர் அழகியார், டாக்டர் எஸ். தர்மாம்பாள், மலர் முகத்தம்மையார், பட்டம்மாள், சீதம்மாள் உள்ளிட்ட பெருமளவிலான பெண் தலைவர்களும் மொழிப்போரில் கலந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாகினர். பெரியாரின் வழியில் அன்னை மீனம்பாள் மற்றும் தந்தை சிவராஜ் போராட்டங்களை ஆரம்பித்து தலைமை தாங்கி வழி நடத்த ஆரம்பித்தனர். இவர்களின் பின்னால் இந்தி எதிர்ப்பு போரில் பல்லாயிரம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு சிறை சென்றனர். தமிழகமே மொழிப் போராட்டத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

natarajan hindi agitationமொழிப் போரில் ஈடுபடும் தாழ்த்தப்பட்டோர்களை பார்த்து, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சுப்பராயன் சொன்னது "ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று சாதிவெறியோடு பேசினார். "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என்று ராசாசி திமிரோடு பேசினார். இறையெல்லாம் பொருட்படுத்தாது தமிழ்மொழி காக்க பல்லாயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வரிசையில் களத்தில் இறங்கி, போராடி சிறை சென்று தாக்குதலுக்குள்ளாகி ஈகியானவர் இல. நடராசன். இவர்தான் முதல் மொழிப் போரின் முதல் ஈகியானவர்.

1919ஆம் ஆண்டு சென்னை பெரம்பூர் போர்த்துகீசியர் தெருவைச் சேர்ந்த கே. இலட்சுமணன், குப்பம்மாள் இணையருக்குப் பிறந்தவர் நடராசன். இவர் வீட்டிற்கு ஒரே மகன், இவரும் இவரது தந்தையும் தச்சு வேலை செய்துவந்தனர்.

இந்தித் திணிக்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்த நடராசன் சென்னை இந்து தியாலசிகல் பள்ளியின் முன்பு நடந்த மறியல் போரில் பங்கேற்று 5. 12. 1938 அன்று கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் நடராசனுக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனையும், ஐம்பது ரூபாய் தண்டனையும் வழங்கியது. நடராசன் சிறையிலடைக்கப்பட்டு சிறையில் அவருக்குக் கைதி எண் 5524 வழங்கப்பட்டு ‘சி’ (கடைசி) வகுப்பில் அடைக்கப்பட்டார்.

போதிய சுகாதாரமற்ற சிறைச்சாலை, தரமற்ற உணவு, காவல் துறையின் தாக்குதல் சிறையில் அடைக்கப்பட்ட நடராசனின் உடலை நலிவடையச் செய்தது. சிறைபட்ட சில நாட்களில் கடும் வயிற்று வலி ஏற்படத் தொடங்கியது. மேலும், சிறைப்பட்ட மூன்று வாரத்துக்குள் கீழுதட்டில் பெரிய கொப்புளம் ஒன்று உருவாகியது. இதன் விளையாக, சிறைபட்ட 20 நாட்கள் கழித்து டிசம்பர் 26-ம் தேதி சிறை மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக நடராசன் சிகிச்சை பெற்றார். சிறைத்துறையின் அலட்சியம் காரணமாக நடராசன் உடல் மேலும் மோசமாகியது. அடுத்த நாள் உடல் முழுக்கக் கொப்புளம் வரத் தொடங்கியது; 102 டிகிரி காய்ச்சல்; தலையின் இடது பக்கமும் வீங்கிச் சிவந்து, கடும் வலியால் துடிக்கலானார். தமிழுக்காகப் போராடிய நடராசன் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தார். ராசாசி அரசு சிறை மருத்துவமனையிலேயே அவரை வைத்து சித்திரவதைப்பட வைத்தது.

டிசம்பர் 28, 29 ஆகிய நாள்களிலும் காய்ச்சல் தொடர்ந்ததோடு வலது தொடையிலும் இடது காலிலும் புதிதாக வீக்கம் ஏற்பட்டு தோலும் அதன் தன்மையை இழக்கத் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை பொது மருத்துவமனையில் குற்றுயிரும் கொலையுயிருமாக 30. 12. 1938ஆம் நாளில் சேர்க்கப்பட்டார்.

30-ம் தேதி காய்ச்சல் சற்றே தணிந்தாலும் முகம் முழுவதும் வீங்கி, உதடுகளும் முன்னங்கழுத்தும் சிவந்துவிட்டன. இவை சாதாரணக் கொப்புளமும் காய்ச்சலும் அல்ல கடுமையான சீழ் கொண்ட நோய்த்தொற்று ரத்தத்தில் கலந்து, மூளையையும் பாதித்துவிட்டது. நடராசனுக்கு ‘cellulitis complicated with septicaemia and pyaemia’ என்ற நோய் தொற்று ஏற்பட்டு அது ‘pyaemic abscesses in the brain’ ஆகவும் மாறியதாக அவரது மருத்துவ அறிக்கை வெளிவந்தது. அரசின் மருத்துவ சிகிச்சையில் உடல்நலம் முன்னேற்றமில்லை.

பல்வேறு தலைவர்கள் நடராசனை விடுதலை செய்யக்கோரி கோரிக்கை வைத்த போதும் இராசாசி அரசு மனிதாபிமானத்தோடு விடுதலை செய்ய மறுத்தது. இறுதியில், போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக நடராசன் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் விடுதலை செய்வதாக நிபந்தனை விதித்தது.

 உடல் நலிந்து உயிர் போனாலும் தமிழுக்கு நான் மண்டியிடுவேனே தவிர, ஒருபோதும் மன்னிப்பு கேட்டு இராசாசியிடம் மண்டியிட மாட்டேன் என்று கூறிய நடராசன் 15. 1. 1939 பகல் 2. 45 மணிக்கு, பொங்கல் நாளில் மருத்துவமனையிலேயே இயற்கை எய்தினார். நடராசன் இயற்கையாக மரணமடைந்ததாக தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டாலும் இது இந்தி ஆதிக்க வெறி பிடித்த ராசாசி அரசு செய்த கொலை என்பது தான் உண்மை.

நடராஜன் இறப்புக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களையும் பதிவு செய்தனர். மேலும், சட்டமன்றத்தில் ராஜாஜியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, இராசாசி நடராசன் படிப்பு வாசனை அற்றவர் என்பதை ஒருமுறைக்கு இருமுறை அழுத்திக் கூறி, "தோழர் நடராசனுக்கு தாய் மொழியிலோ அல்லது இதர மொழிகளிலோ எழுதப்படிக்க தெரியாது என்றும் அதனால் தான் மறியலில் ஈடுபட்டார், அவரைப் போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்” என்று மரணத்தை இழிவாகப் பேசினார்.

உடல்நிலை சரியில்லாத நடராசனை விடுதலை செய்திருக்கலாமே என்ற கேள்விக்கு "கைதிக்கு ஆஸ்பத்திரியில் மிக மேலான சிகிச்சை செய்து வந்தது சர்க்காருக்கு தெரியும் ஆகையால் அவரை விடுதலை செய்யும் விஷயம் எழும்ப இடமில்லை" என்றார்

நடராசனின் நோய் இயற்கையாக வந்ததா, அடிபட்டதால் வந்ததா என்ற கேள்விக்கு, அது இயற்கையாகவே வந்ததென்றும், அவர் சிறைப்படாமல் இருந்தால் இந்த அளவு சிறந்த மருத்துவம் அவருக்கு வாய்த்திருக்காது என்று கூறி ராஜாஜி கேவலமாக நடந்து கொண்டார்.

இதைப் பொறுத்துக் கொள்ளாத நடராசனின் தந்தை கே. லட்சுமணன் சண்டே அப்சர்வர் பத்திரிக்கையில் எனது மகன் இறந்தது பற்றி சென்னை சட்டசபையில் இம்மாதம் 18ஆம் தேதி கேட்கப்பட்ட கேள்விக்கு முதன் மந்திரி யார் அளித்த பதில் அடங்கியுள்ள தவறுகளை நான் திருத்த விரும்புகிறேன் முதன் மந்திரி யார் சட்டசபையில் கூறியதை கேட்டு திடுக்குற்றேன் என் மகன் இறந்த செய்தி கூட எனக்கு நடுங்குறச் செய்யவில்லை.

1938 டிசம்பர் 5-ஆம் தேதிக்கு மூன்று நாட்கள் முன் இந்திய எதிர்ப்பு போரில் ஈடுபட இருப்பதாய் என் மகன் என்னுடைய மற்றும் என் மனைவியுடைய யோசனையை கேட்டான் தமிழர்களுக்காகவும் தமிழர்களின் பின் சந்ததியாருக்காகவும் சிறை செல்ல தயாராக இருப்பதாகவும் இதில் தான் பின்னடைய போவதில்லை என்றும் அவன் தெரிவித்தான் ஆகவே நானும் என் மனைவியும் மனப்பூர்வமாக சம்மதமளித்தோம்.

இந்து தியாலஜிக்கல் பள்ளி முன், கட்டாய இந்தியை எதிர்த்து மறியல் செய்ய டிசம்பர்5ஆம் தேதி என் மகன் சென்றான். என்னிடமும் என் மனைவியிடமும் விடைபெற்று அவன் மிக மகிழ்ச்சியுடன் சென்றான். சிறைப்புகுந்து சுகமாகத் திரும்பி வரும்படி நானும் என்மனைவியும் வாழ்த்தியனுப்பினோம்.

டிசம்பர் 10-ஆம் தேதி அவனைப் பார்க்க நான் சிறைக்குச் சென்றிருந்தேன். அவன் அப்பொழுது சுகமாகவும் சந்தோஷமாகவும் இருந்தான். மன்னிப்புக்கேட்டு வீட்டுக்குச் செல்லும்படி அதிகாரிகள் வற்புறுத்துவதாயும் அவ்வாறு செய்ய தான் இணங்கவில்லையென்றும் அவன் என்னிடம் தெரிவித்தான். எக்காரணம் கொண்டும் நாங்கள் பயப்படத்தேவையில்லை யென்றும் அவன் உறுதி கூறினான்.

என் மகனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிருப்பதாக அதிகாரிகளிடமிருந்து டிசம்பர் 31ஆம் தேதி எனக்குச் செய்தி வந்தது. நான் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். என்மகன் நோயுற்றுப் படுக்கையிலிருப்பது கண்டு வியப்படைந்தேன்.

என்ன நோய் என்று கேட்டதற்கு முகத்தில் ஏதோ முகப்பரு 4 நாட்களுக்குமுன் உண்டாகி ஜெயில் ஆஸ்பத்திரியில் கிசிச்சை பெற்று வந்ததாகவும் குணங்காணாமையினால் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குச் செல்லவேண்டுமென்று தெரிவித்ததன் பேரில் ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றதாயும் அவன் தெரிவித்தான். மேலும் மன்னிப்புக் கேட்டு வீட்டுக்குச் செல்லும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாயும் மன்னிப்புக் கேட்டு விடுதலையாவதை விட சிறையில் சாகவே, தான் விரும்புவதாயும் அவன் தெரிவித்தான்.

அவன் எழுதப்படிக்கத் தெரியாததனாலேயே மறியலுக்குச் சென்றான் என கனம் முதன் மந்திரியார் கூறியது, வேண்டுமென்றே சொன்ன பொய்யாகும். ஏழுகிணறு மலையப்பந்தெரு கார்ப்பரேஷன் மாடல் பள்ளிக்கூடத்தில் 4வது வகுப்பு வரை என்மகன் படித்திருக்கிறான். பள்ளிக்கூடம் விட்டபிறகு சுயமாகப் படித்து தமிழ் ஞானத்தை விருத்தி செய்துகொண்டு வந்தான். என் மகன் கையெழுத்துடைய எத்தனையோ புத்தங்கள் என்னிடம் இருக்கின்றன.

என்மகன் தமிழில் வெகு அழகாகவும் எழுதவும் படிக்கவும் செய்வான். வீட்டிலிருக்கும்போது பக்தி மார்க்கமான பாடல்களும் பாடுவான். அவன் சொந்த மனதாலே சிறைக்குச் சென்றான். என் மகனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. இறந்தவனை இழிவுபடுத்திக் கூறிய கனம் முதன் மந்திரியார் ஒரு பெரிய அபசாரம் செய்துவிட்டார்.

"என் மகனைத் தற்காலிமாக விடுதலை செய்திருப்பதாய் அசம்பிளியில் முதன் மந்திரியார் தெரிவித்தார். அவ்வாறு அவர் கூறியதும் தப்பு. ஆஸ்பத்திரியிலும் என் மகனைப் போலீஸார் பந்தோபஸ்து செய்து வந்தனர்".

"முதன் மந்திரி பதவி வகிக்கும் கனம் ஆச்சாரியார் என்மகன் எழுதப்படிக்கத் தெரியாதவன் எனக் கூறி பொது ஜனங்களை ஏய்க்கப் பார்ப்பது மிகவும் வருந்தத்தக்கதே".

"எனக்கு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கெல்லாம் என்மனப் பூர்வமாக நன்றி செலுத்துகிறேன்" என்று நீண்ட விளக்கம் கொடுத்திருந்தார்.

நடராசனின் மரணத்தைத் தொடர்ந்து பல ஊர்களில் அவருக்கு அஞ்சலி கூட்டமும் இந்தி எதிர்ப்புத் தீர்மானங்களோடு நடைபெற்றது.

ராஜாஜியின் பதில்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாயின. எழுத்தறிவற்ற ஆதி திராவிடரின் உயிர் என்ன துச்சமா என்று நீதிக்கட்சியின் ஆங்கில ஏடான ‘ஜஸ்டிஸ்’ கண்டனத்தைப் பதிவு செய்தது. மரணத் தருவாயிலும் அவரிடம் மன்னிப்புக் கடிதம் கேட்கப்பட்டதாக ‘சண்டே அப்சர்வர்’ நாளேடு அரசாங்கத்தைக் குற்றம்சாட்டியதோடு, ராஜாஜியின் பதில்களில் இருந்த ஏளனத்தையும் கண்டித்தது.

திரு. குமாரராஜா முத்தையா அவர்களின் விருப்பப்படி தமிழுக்காகத் தன்னுயிர் ஈந்த இல. நடராசனின் உடல் மாலை 5 மணிக்கு அரசு பொது மருத்துவமனையிலிருந்து காரில் வைத்து, கறுப்புக் கொடிகளுடன் பெரும் ஊர்வலமாகக் கந்தசாமி கோவில் தெரு, தேவராஜ முதலி தெரு, தங்கசாலை வீதி, கொத்தவால் சாவடி, பிராட்வே, போர்ச்சுக்கீஸ் வீதி, ஏழுகிணறு முதலிய தெருக்களின் வழியாக நடராசனின் இல்லத்தில் முடிவுற்றது.

மொழிப்போரின் தலைமகன் இல. நடராசனின் இறுதி ஊர்வலம் 16. 1. 1939 காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த ஊர்வலத்தில், டாக்டர் தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், புஷ்ப வதியம்மாள், பட்டம்மாள், நாராயணியம்மாள் முதலிய நூற்றுக்கணக்கான பெண்மணிகளும், தோழர்கள் ராவ்பகதூர், என். சிவராஜ், வி. பி. எஸ். மணியர், என். வி. நடராசன், சி. என். அண்ணாதுரை, அ. பொன்னம்பலனார் உள்ளிட்ட ஏராளமான முன்னணித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இந்த இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி இருந்தனர்.

natarajan dead bodyஊர்வலம் அரை மைல் நீளத்திற்குமேல் இருந்தது. இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிக் கொண்டு 1130 மணிக்கு மூலக்கொத்தளம் மயானத்தை அடைந்தது. மாநகர மன்ற உறுப்பினர் ஆல்பர்ட் ஜேசுதாசன் தலைமையில் தோழர்கள் அண்ணாதுரை, அ. பொன்னம்பலனார், காஞ்சி பரவஸ்து, வேலூர் அண்ணல் தஸ்கோ, டாக்டர் தர்மாம்பாள், நாராயணியம்மையார் முதலியவர்கள் மறைந்த இல. நடராசனுக்கு இரங்கல் தெரிவித்து உரையாற்றினார்கள். இராசாசி ஆட்சியின் இந்தித் திணிப்பு அடாவடிப் போக்கைக் கண்டித்தும் நடராசனின் மொழிப்பற்று அவரது தியாகம் குறித்தும் உரையாற்றினர்.

அறிஞர் அண்ணா அவர்கள் பேசுகையில் : “தமிழ்த் தாய்மார்களே! தமிழ்த் தோழர்களே! நாம் ஒரு மனஉறுதியுடைய இளங்காளையைக் காங்கிரஸ் ஆட்சிக்குப் பலிகொடுத்து விட்டோம். நடராசன் வீர சுவர்க்கம் அடைந்தார். அவர் சிறையில் பலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தும் நாங்களும் மேற்படியாருக்கு நோயைப் பற்றிக் கூறி வேண்டுவன செய்துகொள்ளும்படி கூறியும் நான் மன்னிப்பு ஒன்றுமட்டிலும் கேட்கமாட்டேன்; நான் இறந்தாலும் கவலை இல்லை என்று தீரமாகவும் வீரமாகவும் மொழிந்த வீரனின் பிரேதம் நம்மிடையில் இருக்கிறது.

தோழர்களே! நாமெல்லோரும் இறப்பவர்களேதான். இறந்தே தீருவோம். ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியில் இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று மொழிந்து தாய் பாஷைக்காக அரசாங்கத்தாரால் தண்டிக்கப்பட்டு உயிர்நீத்தான் என்று நாம் எந்த வல்லரசு நாட்டிலும், எந்த சரித்திரத்திலும் கேட்டதில்லை. இன்று இங்கு நம்முன் கூடியுள்ள இந்தப் பதினாயிரக்கணக்கான ஆண், பெண் மக்களிடையில் கிடத்தியிருக்கும் தமிழ் வீரனின் செய்கையைப் பொன் எழுத்துக்களிலே உலக சரித்திரத்திலே எழுதப்படும். ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் நம் இளங்காளை நடராசனைப் போல் வீரத்துடன் தமிழுக்காகத் தியாகம், தாய் பாஷைக்காகத் தியாகம், தமிழ் கலைக்காகத் தியாகம் செய்து, இந்தியை ஒழிக்க இன்றுமுதல் மனத்திடம் கொள்ள வேண்டும்” என்றும்

"அதோ, அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய இரத்தம் ஓடுவதை நிறுத்தி விட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால் அவருடைய முகத்தைப் பாருங்கள் தன்னுடைய கலாச்சாரத்திற்காவும், விடுதலைக்காகவும் போராடி, அப்போடிரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம். பல்லாயிரக்கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதி மொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியினை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ! நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்ற உறுதி கொள்வீர்களா?. இந்தியைப் புகுத்துவதால் நம் மொழி தமிழுக்கு குந்தகம் விளைந்திடுமா? என யாராவது கேட்டால் அவரிடம் கூறுங்கள். இந்தி வந்தது அதனை நுழையவிடாமல் தடுக்கும் போராட்டத்தில் ஒரு தமிழன் உயிர் துறந்தான்" என்றும் பேசினார்.

தோழர் அ. பொன்னம்பலனார் உரை :

“தாய்மார்களே! தோழர்களே! நான் இங்கு இப்படி ஒரு தமிழ் வீரனைப் போற்றி பேச நேரிடும், இந்த துக்கமான சம்பவம் நமக்கு ஒற்றுமையை அளிக்கும் காரியம் ஒன்று நம்முன் இருக்கிறது என்று நான் காலையில் ஈரோட்டிலிருந்து வந்ததும் தெரியவில்லை. நான் வரும் வழியில் தற்கால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு இந்தி எதிர்ப்புத் தொண்டன் மாண்டான் என்று கேள்விப்பட்டதும் இறந்த தோழனின் ஆவேசம் என்னை இங்கு கொண்டுவந்துவிட்டது. நாம் தெருக்களில் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் செய்வதினாலும், பல பெருங்கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாலும் நமக்கு விடுதலை இல்லை.

தோழர்களே! தாய்மார்களே! நமது இந்தி எதிர்ப்புத் தொண்டனின் மன உறுதியைப் போல், அரசியலாளர்களால் பல துன்பங்களுக்கிடையில் மன்னிப்பு கேட்க மறுத்து மாண்டுபோன நடராசனின் மனவுறுதி யைப்போல் ஒவ்வொரு தமிழனின் மனமும் ஆகவேண்டும். கைதட்டுவதும் கோஷமிடுவதும் பிரயோஜனமில்லை. தமிழன் தன் தாய் பாஷைக்காகச் சிறையில் உயிர்விட வேண்டிய நிலைக்கு இன்று காங்கிரஸ் கொண்டுவந்து விட்டது. நம்முன் வீரமாய் உயிர்துறந்த தோழனைக் காண்பது பெரிதன்று. அவருக்கு அனுதாபத் தீர்மானம் செய்வதும் பெரியதல்ல. தமிழன், தமிழ்நாடு, தாய்மொழி என்றதைக் கருத்தில் கொண்டு, காரியத்தில் காட்ட முன்வரவேண்டியது ஒவ்வொரு மகனும், மகளும் நம் நடராசனைப் போல் (இறக்காமல்) வீரமாய் வீர உரங்கொண்டு தாய்மொழிக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் செய்யும் தொண்டில் பங்குகொண்டு செய்கையில் காட்டுவதுதான் நாம் நம் தோழர். நடராசனின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் காரியம் என்பதை இது சமயம் கங்கனம் பொதுமையாக மனதில் கொண்டு தமிழ் மொழியைக் காக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன் என்றார். ” 

நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே" என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு. மு. அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசினார்.

அன்று மாலை சென்னை கடற்கரையில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பெரியாருக்கு 1,000 ரூபாய் அபராதம் மற்றும் "பெண்கள் சட்டத்தை மீற" தூண்டியதற்காக ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்ததால் இந்நிகழ்வில் பெரியார் கலந்து கொள்ளவில்லை.

இந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு கட்டிடம் ஒன்றுக்கு ‘தாலமுத்து- நடராசன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் முதலில் உயிர் துறந்த நடராசன் பெயர் எழுதப்பட்டு இரண்டாவதாக தாலமுத்து பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு போராட்டத்திலும் முதலில் உயிர் துறந்தவரை வரிசைப்படுத்தி போற்றுவது தான் மரபு. இதனடிப்படையில் நடராசன் பெயர் முதலாவதாக எழுதப்பட்டு நிகழ்ந்த தவறு சரி செய்யப்பட வேண்டும்.

பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்வீரன் நடராசன் என்றொரு கவிதை படைத்தார்.

இந்திஎதிர்ப் புப்போரில் சிறைக்குச் சென்றான்
இளங்காளை நடராசன் சென்னை வாசி
அந்தமுறும் இலக்குமணன் அம்மாக் கண்ணாம்
அருந்தமிழர் பெற்றெடுத்த மருந்து போல்வான்!
இடரான இந்திமொழி வீழ்க வீழ்க
என்றுரைத்தான் தமிழரிடம் தமிழ்நாட்டின்கண்!

அடாதசெயல் இது என்றார் இந்தி சர்க்கார்.
அழகியோன் தான்தன்னைச் சிறையில் கண்டான்
வஞ்சமிலாத் தமிழரெலாம் நடரா சன்பேர்
வாழ்த்திக்கொண் டிருந்தார்கள் சிலநா ளின்பின்
வெஞ்சுரம்தான் கண்டதுவாம் அதுநாள் தோறும்
மேலோங்க லாயிற்றாம் மெலிவுற் றானாம்
தனக்கென்று வாழாத தமிழா என்று
தமிழரெலாம் அவன்பேரைப் பாடா நின்றார்!

தனிப்புகழ்சேர் நடராசன் தன்னைப் பெற்றோர்
தமிழுக்குப் பெற்றோம்என் றகம்ம கிழ்ந்தார்
தன்னலத்தை எண்ணிஎண்ணித் தமிழர் நாட்டைத்
தரைமட்டம் ஆக்குகின்றார் அவர்போல் இன்றி
இன்தமிழில் கல்விகற்றான் நடரா சச்சேய்
எழில்பெற்றான் புகழ்பெற்றான் எல்லாம் பெற்றான்.

- க.இரா.தமிழரசன்

துணைநின்றவை

1.https://www.keetru.com - தமிழுக்காகத் தம்மை இழந்த மொழிப்போர் ஈகியர் - 3
2.www.tamizhvalai.com - தமிழுக்கு நான் மண்டியிடுவேனே தவிர,
3. உயிருக்கு நேர் - முனைவர் ம.நடராசன்
4.www.hindutamil.in - மொழிப்போர்: வரலாறு வரிசையிலும் இருக்கிறது
5.www.hindutamil.in - நடராசன் புகழுடம்பு எய்திய கதை
6.இல. நடராசன் - தமிழ் விக்கிப்பீடியா
7. tamilthesiyan.wordpress.com
8.www.keetru.com - திராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா? படிக்கல்லா? - 49

Pin It