தகுதியற்றவைகளைத் தகுதிக்கு மீறிய இடத்தில் வைத்துப் பார்க்கச் சில தகுதியற்றவர்கள் ஆசைப்படுகிறார்கள். அந்த வரிசையில் இப்போது இராமகோபாலன் பிதற்றியுள்ளார். தான் இன்னமும் உயிரோடு இருப்பதை அவர் இப்படிப் பிரச்சினைக்கு உரியவற்றைப் பேசித்தான் உறுதிப்படுத்திக் கொள்கிறார். இந்தி படிக்காமல் தமிழ்நாட்டு இளைஞர்கள் எல்லாம் வீதியில் திரிந்து கொண்டு இருப்பதைப் போலவும், வட நாட்டில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் குவிந்து கிடப்பதைப் போலவும் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இந்தி படித்தால் வடக்கே வேலைகள் காத்துக் கொண்டிருப்பதைப் போலவும், இந்தி படிக்காததால் நம் இளைஞர்கள் அந்த வாய்ப்புகளை இழந்து விட்டதைப் போலவும் பேசி இருக்கிறார். நாட்டு நடப்பே தெரியாமல் நாட்டாமை செய்ய வந்துவிட்டார்.

தமிழ்நாட்டுத் தெருக்களில், விரலுக்கு நாலு பூட்டைத் தொங்க விட்டுக் கொண்டு அலைவதையும், சோன்பப்டி வண்டி தள்ளிக் கொண்டு திரிவதையும், பானிபூரி, பேல்பூரி கடை போட்டு பிழைப்பதையும், ஸ்வீட் பீடா, ஜர்தா பீடா மடித்துக் கொடுத்து வாழ்க்கை நடத்துவதையும் அன்றாடம் நாம் பார்க்கிறோம். இந்தி படிக்காமல் வேலைவாய்ப்பைத் தமிழக இளைஞர்கள் இழந்தார்கள் என்றால், இந்தியைத் தாய் மொழியாகக் கொண்ட அவர்கள், இந்தியிலேயே படித்த அவர்கள், ஏன் அங்கே இருக்கும் வேலைவாய்ப்புகளை விட்டுவிட்டு இங்கே வந்து அல்லல் படவேண்டும்? ஆக இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்பது உண்மையன்று மாயை.

தமிழ்நாட்டு உணவு விடுதிகளில் மேசை துடைப்பதற்கும், தட்டுமுட்டுச் சாமான்கள் கழுவுவதற்கும், கட்டிடம் கட்டுவதற்குமான பல்வேறு பணிகளுக்கு இன்றைக்கு ஆள் கிடைக்காமல் வடக்கே இருந்துதான் ஆட்களை வரவழைக்கிறோம். ஆக இன்றைக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் இல்லை, மாறாக ஆள் இல்லாத் திண்டாட்டம்தான் நிலவுகிறது. இந்தி படிக்காமல் - அதனால் வேலை கிடைக்காமல் இங்கே யாரும் வீட்டில் படுத்துக்கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில்தான் இந்தி சொல்லித் தருவதில்லையே தவிர, இந்தி படிக்க வேண்டும் என்று விரும்புகிற யாரும் இந்திப் பிரச்சார் சபா வாயிலாகத் தாராளமாக இந்தி படிக்கலாமே! அங்கேதான் வெற்றிலை பாக்கு வைத்து, பன்னீர் தெளித்து வரவேற்கிறார்களே! யார் தடுத்தது?

இந்தி தெரியாமல் என்ன இங்கே குறைந்துவிட்டது? மருத்துவம் படிக்க முடியவில்லையா? பொறியியல் பாடம் புரியவில்லையா? தகவல் தொழில்நுட்பத் துறையில் தகுதிக் குறைவாகிவிட்டதா? என்ன குறைந்துவிட்டது என்று ஏங்கித் தவிக்கிறார் கோபாலன். அவர் மட்டுமன்று மத்திய அரசின் பாடத்திட்டத்தில் கூட இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திக் கேலிச்சித்திரத்தைப் பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளனர். அது இன்றைக்குக் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது ஒரு மொழிக்கு எதிரான போராட்டம் அன்று. ஒரு மொழியை எம் மீது திணித்த போது எழுந்த உரிமைப் போராட்டம். ஓர் அக்கிரமத்திற்கு எதிரான, அநியாயத்திற்கு எதிரான, ஆதிக்கத்திற்கு எதிரான வீரம் செறிந்த போராட்டம். அந்த வீரம் செறிந்த போராட்டத்தை ஏதோ விவரம் தெரியாதவர்கள் நடத்திய போராட்டம் போல் சித்தரிக்கச் சிலர் முயல்கின்றனர்.

1938இல் இராஜாஜி கட்டாய இந்தியைக் கொண்டு வந்ததன் பின்னால், பெரும் சதி இருந்தது. காலகாலமாகக் கல்வி மறுக்கப்பட்ட சூத்திரர்கள், முந்திய நீதிக்கட்சி ஆட்சியில்தான் முதன் முதலாகப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றனர். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக்கூடாது என்று கருதித்தான், முதல் முறையாகப் படிக்க வரும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாய் மொழியான தமிழ், அத்துடன் ஆங்கிலம், அதற்கு மேல் இந்தி என்று சுமையை ஏற்றினால், அவன் படிப்பே வேண்டாமென்று மீண்டும் மாடுமேய்க்கப் போய்விடுவான் என்ற கொடூரச் சிந்தனையின் வெளிப்பாடுதான் அந்த இந்தித் திணிப்பு. இதைச் சரியாக உணர்ந்த பெரியார், தமிழறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றோரை இணைத்துக் கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார். அதனால் சிறை சென்றார். பெல்லாரி சிறையில் கல்லுடைத்தார். அத்தோடு ராஜாஜியின் வருணாசிரம ஆட்சிக்கு முடிவு கட்டினார்.

1948இல் இந்திய விடுதலைக்குப் பின்னாலும் இந்தித் திணிப்பு முயற்சி நடைபெற்றது. அப்போதும் அய்யாவும், அண்ணாவும் களம் கண்டனர். 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபின், அய்யாவும் அண்ணாவும் பிரிந்துவிட்டார்கள் என்ற தைரியத்தில், 1952இல் மீண்டும் இந்தியைத் திணிக்க முயன்றனர். தொடர்வண்டி நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் பெயர்ப்பலகைகளில் இந்தியே முதலில் எழுதப்பட்டது. அதனை எதிர்த்துத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் களத்தில் இறங்கின. இந்தியை எதிர்ப்பதில் தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகச் செயல்பட்டன. பெயர்ப் பலகைகளில் இருந்த இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழித்தனர். அதே சமயம் ம.பொ. சிவஞானம் போன்ற தமிழ்த்தேசியச் செம்மல்கள், மண்ணெண்ணெய் கொண்டு, பூசிய தாரைத் துடைத்தெடுத்து, இந்தி எழுத்துகளை ஒளிரச் செய்தனர். தி.க., தி.மு.க.வினர் இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழிப்பதும், அதை ம.பொ.சி.கள் துடைத்தெடுப்பதும் தொடர்ந்து நடைபெற்றன. ஆட்சியாளர்கள் இவை எதையும் கண்டுகொள்ளவில்லை. இன்றைக்குத் தமிழக மீனவர்கள் சிங்களர்களால் கொல்லப்படுவதை வேடிக்கை பார்ப்பதைப் போலவே அன்றைக்கும் வேடிக்கை பார்த்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கினைக் கண்டு வெகுண்டெழுந்த பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்தார். ஆட்சியாளர்கள் திடுக்கிட்டனர். ‘தேசியக் கொடி எரிக்கும் போராட்டம்’ தான் அது. அப்போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக ஆட்சியாளர்கள் கடுமையான அடக்குமுறையை ஈவு இரக்கமின்றி ஏவுவார்கள். அதற்கு அஞ்சாதவர்கள் மட்டும் வருக! என்று பெரியார் அறிவித்த போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் முன்வந்தனர். அவர்களின் பெயர்கள் விடுதலை ஏட்டில் நாள்தோறும் வெளியானது. இத்தனை பேர் தேசியக் கொடியை எரித்தால் என்னாவது என்கிற அச்சம் பண்டிதர் நேருவுக்கு வந்தது. உடனே தமிழக முதல்வர் காமராசரைத் தொடர்பு கொண்டு, “உங்களுக்குப் பெரியார் மிகவும் வேண்டியவர்தானே! அவரை எப்படியாவது தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைக் கைவிடச் சொல்லுங்கள்” என்று வற்புறுத்தினார்.

அப்போது காமராசர், “பெரியார் ஒரு போராட்டத்தை அறிவித்துவிட்டால், யார் சொன்னாலும் கேட்கமாட்டார். அவர் போராட்டத்தைக் கைவிட வேண்டுமானால், நீங்கள்தான் அவரைச் சமாதானப்படுத்த ஏதாவது செய்ய வேண்டும்” என்றார். அதன் பிறகுதான் பிரதமர் நேரு, “இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும்” என்று வாக்குறுதி அளித்தார். நேருவின் அந்த உறுதிமொழியைத்தான் சட்டமாக்க வேண்டும் என்று இன்றுவரை போராடி வருகிறோம். பிரதமர் நேருவின் அந்த உறுதிமொழிக்குப் பின் காமராசரின் வேண்டுகோளை ஏற்றுப் பெரியார் தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தைக் கைவிட்டார். இது வரலாறு. உயிரினும் மேலான தாய்மொழியைக் காக்க, தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் இழக்கச் சித்தமாயிருந்ததால், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத மனத்துணிச்சல் இருந்ததால் போராட்டம் ஆட்சியாளர்களை மண்டியிட வைத்தது.

அன்னை மொழிகாக்கத் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் பாசறைதான் திராவிட இயக்கம். 1938இல் சிறை சென்று உயிர் நீத்தவர்கள் நடராசனும், தாளமுத்துவும். வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, புத்தத் துறவிகள் தீக்குளித்து மாண்ட செய்தியை அறிந்த கீழப்பழுவூர் சின்னசாமி, 1964இல் தன் தேக்குமரத் தேகத்தைத் தீயின் கொடிய நாக்குகளுக்குத் தின்னக் கொடுத்தார்.

அதன்பின் 1965இல் இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி என்று அறிவிக்க முயன்றபோது, விருகம்பாக்கம் அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம், ஆசிரியர் வீரப்பன், தொண்டாமுத்தூர் தண்டபாணி போன்றோர் தீக்குளித்தும், நஞ்சருந்தியும் மாண்டு போயினர். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவன் இராசேந்திரன் உள்ளிட்ட எண்ணற்றோர் இராணுவம், காவல் துறையின் துப்பாக்கிச் சூடுகளுக்கு இரையாகினர்.

இப்படி ஏராளமானோரின் உயிர்த் தியாகத்தால், இன்றும் கனன்று கொண்டிருக்கும் இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வைக் கொச்சைப்படுத்தவோ, குறைத்து மதிப்பிடவோ செய்வார்களேயானால், அதன் விளைவுகள் மிகக் கடுமையானதாக இருக்கும் என்பதற்கான முன்னோட்டமே, தமிழகத்தில் இருந்து எழும் கடுமையான கண்டனக் கணைகள் என்பதை கோபாலன்கள் உணரட்டும்.

Pin It