22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து.
1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத் தில் இராஜாஜி எனும் பார்ப்பனர் இராஜகோபாலாச் சாரியாரை முதலமைச்சராகக் கொண்ட காங்கிரஸ் ஆட்சி நடந்தது. 1935ஆம் ஆண்டு பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சட்டமன்றம் அது. முதலில் பிரிட்டிஷார் உருவாக்கிய சட்டத்தையே ஏற்க மாட்டோம் என்று ‘வீரம்’ பேசிய அன்றைய காங்கிரஸ் கட்சி, பிறகு பிரிட்டிஷ் சட்டத்தை ஏற்றுக் கொண்டு தேர்தலில் பங்கேற்று ஆட்சி அமைக்க முன் வந்தது. பெரியாரின் ‘குடிஅரசு’ இதை ‘சரணாகதி மந்திரி சபை’ என்று விமர்சித்தது. இந்தியாவில் எட்டு மாகாணங்களில் காங்கிரஸ் அப்போது ஆட்சியைப் பிடித்திருந்தது. அப்போது இராஜகோபாலாச்சாரி வேறு எந்த மாநில காங்கிரஸ் அமைச்சரவையும் எடுக்காத ஒரு முடிவை எடுத்தார். அதுதான் இந்தித் திணிப்பு. பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கி 1938 பிப்ரவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர உத்தரவிட்டார்.
1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் ‘குடிஅரசில்’ ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி, வடமொழி உயர்வுக்கு வகை தேடவே பார்ப்பனர்கள் இந்தியைத் திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார். 1930ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். மறைமலை அடிகளார் போன்ற தமிழ் அறிஞர்களும் இந்தியைக் கடுமையாக எதிர்த்தனர். தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு இருக்கும் என்று தெரிந்தே இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணிக்கும் ஆணையைப் பிறப்பித்தார். தமிழ்நாடு கொந்தளித்தது.
1938 பிப்ரவரியில் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட் டினார். “இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவதை ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறிய பெரியார், அவை என்ன என்பதையும் விளக்கினார். “தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே, இதன் நோக்கம் சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே இந்தித் திணிப்பு” என்று அதன் நோக்கத்தை அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார்.
போராட்ட அணிகள் உருவாக்கப்பட்டன. போராட்டத் தலைவருக்கு ‘சர்வாதிகாரி’ என்று பெயரிடப்பட்டது. 1938 ஜூன் 4ஆம் நாள் சென்னையில் முதல் மறியல் போராட்டம் பெத்துநாயக்கன்பேட்டை இந்து தியாலஜிக்கல் பள்ளி முன்பு தொடங்கியது. ஒரு சர்வாதிகாரி கைதானவுடன் அடுத்த சர்வாதிகாரி தலைமையில் மறியல் நடக்கும். அதேபோல முதலமைச்சர் இராஜகோபாலாச்சாரி வீட்டின் முன்பும் மறியல் தொடங்கியது. (அப்போது முதல்வருக்கு பிரதமர் என்றே பெயர்) ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். தமிழ் உணர்வாளர்கள் புலவர்கள், ஆசிரியர்கள் என சமூகத்தின் பல்வேறு பார்ப்பனரல்லாத பிரிவினரும் உணர்ச்சியுடன் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள். பல்லடம் பொன்னுசாமி இராஜகோபாலாச்சாரி வீட்டின் முன் பட்டினிப் போராட்டம் தொடங்கி கைதானார்.
போராட்டக்காரர்கள் அனைவர் மீதும் அடக்கு முறை சட்டங்களை ஏவி விட்டார் இராஜ கோபாலாச்சாரி. ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட காங்கிரசார் மீது பிரிட்டிஷ் அரசு பயன்படுத்திய கொடூரமான கிரிமினல் சட்டத் திருத்தத்தை அப்படியே பார்ப்பன ஆச்சாரியார் ஆட்சி கையில் எடுத்தது. ‘கிரிமினல் அமென்ட்மென்ட் ஆக்ட் 7(1)(ஏ)’ என்பது அந்த சட்டத்தின் பெயர். கைதானவர்கள்மீது வழக்குப் போட்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர். கைதானவர்களை மொட்டை அடித்து சிறை உடை அணிவித்து, குல்லாய் போட வைத்து களியையும், கூழையும் உணவாக வழங்கியது ஆச்சாரியார் ஆட்சி.
மொத்தம் 1271 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பெண்கள் 73 பேர்; குழந்தைகள் 32 பேர். 1938ஆம் ஆண்டில் இவ்வளவு எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டதை எண்ணிப் பார்க்க வேண்டும். போராட்ட எழுச்சியைக் கண்ட ஆச்சாரியார் எல்லாப் பள்ளிகளிலும் இந்தித் திணிப்பு என்ற ஆணையில் மாற்றம் செய்து, 125 பள்ளிகளில் மட்டும் இந்தி கட்டாயப்பாடம் என்றும் முதல் மூன்று பாரங்கள் வரை தான் இந்தி இருக்கும் என்றும் (அதாவது 8ஆவது வகுப்பு வரை) இந்தி தேர்வு நடக்கும் ஆனால் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்றும் அறிவித்தார்.
ஆனாலும் இந்தித் திணிப்பு ஆணையைத் திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதம் காட்டினார். பெரியார் பெருந்தன்மையுடன் முதலமைச்சர் வீட்டின் முன் மறியல் செய்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும்கூட ஆச்சாரியாரின் அடக்குமுறை ஓயவில்லை.
இந்த நிலையில் திருச்சியிலிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்து 100 பேர் கொண்ட வழி நடை பிரச்சாரப் படை ஒன்று புறப்பட்டது. இதற்கான வழியனுப்பு விழாவை திருச்சியில் பெரியார் நடத்தினார். இந்தப் படையின் தலைவர் தஞ்சை அய்.குமாரசாமி, ‘நகர தூதன்’ பத்திரிகை ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி, படையின் யுத்த மந்திரி, பட்டுக்கோட்டை அழகிரி, படை அணியின் தலைவர் 1938 ஆகஸ்ட் 1ஆம் நாள் திருச்சியில் புறப்பட்ட இந்தப் படை 1938 செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது. 42 நாட்கள் 577 மைல்தூரம் நடந்தே வந்து மக்களிடம் இந்திக்கு எதிராக பரப்புரை செய்தனர். இந்தப் படைக்காக பட்டுக்கோட்டை அழகிரி கேட்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதித் தந்த பாடல்தான், “எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி? அது எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்?” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பாடல்.
படையை வரவேற்று சென்னை கடற்கரையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் பெரியார் வைத்த முழக்கம் தான், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதாகும். பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி வழக்குத் தொடர்ந்தது. 1938 நவம்பர் 26இல் பெரியார் கைதானார். 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் பெரியாருக்கு விதிக்கப்பட்டது. பெரியாரின் ‘ஃபோர்டு கார்’ பறிமுதல் செய்யப்பட்டு, 181 ரூபாய்க்கு அரசுஅதிகாரிகளால் ஏலத்துக்கு விடப்பட்டது. பெரியார் அபராதம் கட்ட மறுத்ததால் அந்தத் தொகையை வசூலிக்க அவரது காரை ஏலம் விட்டார்கள். வழக்கம் போல பெரியார் எதிர் வழக்காட விரும்பாமல் சிறைத் தண்டனையை ஏற்றார். தண்டனை வழங்கிய சென்னை ஜார்ஜ் டவுன், நான்காவது நீதிபதி மாதவராவ் முன் பெரியார் எழுத்து வடிவத்தில் ஒரு அறிக்கையைப் படித்தார். (வழக்கு விசாரணை 1938 டிசம்பர் 5, 6 தேதிகளில் நடந்தது)
“நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும் அல்லது கிளர்ச்சியும் அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு வன்முறை இல்லாமல்தான் இருக்கும் என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல் மந்திரியாக பேசிவிட்டார். நீதிபதியே காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். எனவே எவ்வளவு அதிக தண்டனை தர முடியுமோ அதையும் கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து விடுங்கள்” - இது நீதிபதி முன் பெரியார் தாக்கல் செய்த அறிக்கையின் ஒரு பகுதி. முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் - பிறகு பெல்லாரி சிறைக்கு (1939 பிப். 16ல்) மாற்றப்பட்டார்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட் டிருந்த இந்தி எதிர்ப்பு வீரர்கள் தாளமுத்து, நடராசன் இருவரும் சிறை அடக்குமுறையால் சிறையிலே உயிர்நீத்து களப்பலியானார்கள். 1939 ஜனவரி 15ஆம் நாள் நடராசனும், மார்ச் 13ஆம் நாள் தாளமுத்துவும் வீரமரணம் அடைந்தனர். தமிழகமே கொந்தளித்தது.
1938 நவம்பர் 13ஆம் நாள் சென்னையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு மறைமலை அடிகளார் மகள் நீலாம்பிகை தலைமையில் கூடியது. இனி ஈ.வெ.ராமசாமியைப் பெரியார் என்றே அழைக்க வேண்டும் என்று மாநாடு தீர்மானித்து பெரியார் பட்டத்தை வழங்கியது. தொடர்ந்து 1938 டிசம்பர் 26, 27 நாட்களில் வேலூரில் சென்னை மாகாண தமிழர் மாநாடு கூடி தமிழர்களின் தலைவர் பெரியாரே என்று தீர்மானித்தது. அதைத் தொடர்ந்து நீதிக் கட்சியின் 14ஆவது மாகாண மாநாடு சென்னையில் கூடி பெல்லாரி சிறையிலிருந்த பெரியாரை நீதிக் கட்சியின் தலைவராக தேர்வு செய்தது.
பெரியார் சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது போல் வடிவம் உருவாக்கப்பட்டு அதை ஊர்வலமாய் எடுத்து வந்தனர். மாநாட்டு மேடையில் தலைவர் நாற்காலியில் பெரியார் உருவப் படம் வைக்கப்பட் டிருந்தது. “என் தோளுக்குச் சூட்டிய மாலையை பெரியாரின் தாளுக்கு (காலுக்கு)ச் சூட்டுகிறேன்” என்று நாதழுதழுக்க சர். ஏ.டி. பன்னீர்செல்வம் கூறி பெரியார் படத்துக்கு மாலை சூட்டினார். பெரியார் மாநாட்டுக்குத் தயாரித்து அனுப்பிய உரையை ஏ.டி. பன்னீர்செல்வமே படித்தார். வரலாறுகளே தலைவர்களை உருவாக்குகிறது என்பதற்கு இது மகத்தான சான்று.
மாநாட்டில் திரண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று, “எங்கள் மாபெரும் தலைவரே! உங்கள் உடல் சிறைபடுத்தப்பட்டிருந்தாலும், உங்கள் வீரத் திரு உருவத்தின் முன் நாங்கள் அனைவரும் எழுந்து நின்று ஒன்றுபட்டிருக்கிறோம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் செயல் வழி நின்று, கட்சி வளர, மக்கள் வாழ, நோக்கம் நிறைவேற ஓயாது உழைத்து வெற்றி பெறுவோம்” என்று உறுதி ஏற்றனர். தமிழிலும் தெலுங்கிலும் அந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பெல்லாரி சிறையில் கடும் வெப்பத்தில் அவதியுற்ற பெரியார், வயிற்று நோயினால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சென்னை மாகாண அரசு 1939ஆம் ஆண்டு மே 22ஆம் நாள் சுமார் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு திடீரென்று விடுதலை செய்தது. 190 பவுண்டு எடையுடன் சிறைச் சென்ற பெரியார், 24 பவுண்டு எடை இழந்து வெளியே வந்தார். கைது செய்யப்பட்ட தோழர்களில் ஒரு பகுதியினர் 1939 ஜூன் 6ஆம் நாள் ஒரு அணியாகவும், 1939 நவம்பர் 15ஆம் நாள் ஒரு அணியாகவும் 7 மாத சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப் பட்டனர்.
வடசென்னைப் பகுதியில் இந்தி எதிர்ப்புப் போராளிகள் நடராசன், தாளமுத்து கல்லறை நினைவுச் சின்னம் இப்போதும் இருக்கிறது. இந்தக் கல்லறைக்கு 1940 மே 5ஆம் நாள் அடிக்கல் நாட்டியவர் பெரியார்.
(தொடரும்)