கீற்றில் தேட...

மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 2

இந்திக்கு எதிரான முதல் மொழிப் போராட்டத்தில் முதல் களப்பலியான இல.நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் இந்திக்கு எதிரான போரில் சிறைபட்டு சிறைக் கொடுமையால் தாளமுத்து என்ற இளைஞரும் ஈகியானார்.

தஞ்சை மாவட்டம் குடந்தையைச் சேர்ந்தவர் தாளமுத்து. இவரது பெற்றோரின் பெயர் வேல் முருகன் - மீனாட்சி. தாளமுத்துவின் மனைவி பெயர் குருவம்மாள். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக இந்தி எதிர்ப்பு போரில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தாளமுத்து.

thalamuthu 32013 பிப்ரவரி 1939 அன்று, சென்னையில் உள்ள இந்து (தியாலஜிகல்) இறையியல் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தாளமுத்துவும் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த மறியலில் ஈடுபட்டதற்காக மற்றவர்களுடன் சேர்ந்து தாளமுத்துவும் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டார்.

சென்னை ஜார்ஜ் டவுன் நீதிபதி மாதவராவ் முன்னிலையில் நேர்நிறுத்தப்பட்ட போது எத்தனை நாட்கள் சிறை என்றாலும் எமக்கு கவலை இல்லை. சிறைச்சாலையை மகிழ்வோடு ஏற்பதாக தாளமுத்து நெஞ்சு நிமிர்த்தி கூறினார். தங்களை வழக்கிலிருந்து விடுவித்தால் போராட்டத்திலிருந்து விலகிக் கொண்டு வீட்டுக்குச் சென்று விடுவீர்களா என்று நீதிபதி கேட்டதற்கு, இல்லை நான் மீண்டும் போராட்டக் களத்துக்குச் செல்வேன் என்றார் தாளமுத்து. அதன் விளைவாக, ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாக வழங்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

சென்னை மத்திய சிறையில் தாளமுத்துவிற்கு கைதி எண் 6477 வழங்கப்பட்டு ‘சி’ வகுப்பு பிரிவில் அடைக்கப்பட்டார்.

1939 பிப்ரவரி 13-ல் சிறைபட்ட தாளமுத்துவுக்கு சிறை நிர்வாகம் வழங்கிய தரமற்ற உணவாலும் சுகாதாரமற்ற இருப்பிடத்தாலும் காவல்துறையினரின் தாக்குதலாலும் தாளமுத்துவின் உடல் நலிவடையத் தொடங்கியது. சிறைப்பட்ட பதினெட்டு நாட்கள் கழித்துக் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. வயிற்றுப்போக்கு ஏற்படத் தொடங்கிய இரண்டு நாட்கள் வரை எந்த மருத்துவ சிகிச்சையும் சிறை நிர்வாகம் செய்யவில்லை. தாளமுத்துவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டபடியால் இரண்டு நாட்கள் கழித்து, மார்ச் 6-ம் தேதிதான் அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

அவருக்கு வந்த நோய் அமீபாவினால் (Entamoeba histolytica) உண்டாகும் சீதபேதி என்று சிறை மருத்துவர்கள் முடிவுசெய்தனர். அடுத்த நாள் சளியும் குருதியும் கலந்து பதின்மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. காய்ச்சல் இல்லை என்றாலும் நிமிடத்துக்கு நாடித் துடிப்பு 88 உடன் மூச்சிரைப்பும் கடுமையாக இருந்தது. மார்ச் 10-ம் தேதி அவருடைய நிலை மிகவும் மோசமடைந்தது. இரவில் பத்து முறையும் காலையில் பத்து முறையுமாகப் பன்னிரண்டு மணி நேரத்தில் இருபது முறை சளியும் ரத்தமும் கலந்து பச்சை நிறத்தில் கழிந்தது என மருத்துவ அறிக்கை கூறியது.

ஒவ்வொரு முறையும் கழியும் முன் வயிற்றுப்பிசைவுடன் கடும் வலியில் தாளமுத்து துடித்தார். இந்தி திரைப்புக்கு எதிராக களம் ஆடிய தோழர் தாளமுத்து நோயின் கொடுமை தாங்காமல் துடித்துக் கொண்டிருந்தார்.

நடராசனுக்கு கூறியதைப் போலவே தாளமுத்துவும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வெளியேவிடத் தயாராக உள்ளதாக ராஜாஜி அரசு கூறியது அதை ஏற்க மறுத்து விட்டார் தாளமுத்து. இதன் பிறகு, சென்னை பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மதியம் 1:35-க்கு அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார் தாளமுத்து.

உடலில் உள்ள நீர்ச்சத்து இழந்துவிட்டபடியால், மிகவும் களைத்தும் சோர்ந்தும், கண்கள் உள்ளொடுங்கியும் காணப்பட்டார். நாடித்துடிப்பும் சீராக இல்லாமல் துடித்துக்கொண்டிருந்த தாளமுத்துவுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியது ராஜாஜி அரசு. இந்தி எதிர்த்து தமிழ் காக்க சிறை சென்ற மாவீரன் தாளமுத்து நோய் கொடுமையால் அரசின் அலட்சியத்தால் மார்ச் 12 அன்று பிற்பகல் 1:45 மணிக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்த அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் இரண்டாவது உயிரையும் தமிழகம் இழந்தது. நடராசன் இறப்பின் போதே தமிழகம் கொந்தளித்தது, தாளமுத்துவின் இறப்பு தமிழ் நெஞ்சங்களை வாட்டி வதைத்தது. இந்திக்கு எதிரான போர் கொந்தளிக்கத் தொடங்கியது. தாளமுத்து உடல் இருந்த மருத்துவமனை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்களுக்கு நடுவே மாலை ஆறு மணிக்குப் பொது மருத்துவமனையிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது.

தாளமுத்துவின் வயதான பெற்றோரும் இளம் மனைவியும் அழுது புரண்ட காட்சி அனைவரையும் கலங்கவைத்தது. மறியல் களமான இந்து தியலாஜிக்கல் பள்ளியைத் தாண்டி ஊர்வலம் சென்றபோது, கூடியிருந்த மக்கள் அனைவரும் ஆவேசம் கொண்டு தமிழ் வாழ்க, இந்தி வீழ்க , காங்கிரஸ் ஆட்சி ஒழிக என்று முழங்கினர். நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு நகராமல் மக்கள் வீரமுழக்கமிட்டனர்.

மூலக்கொத்தளம் இடுகாட்டில் நடராசன் விதைக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே தாளமுத்துவின் உடலும் புதைக்கப்பட்டது. திரு.பாசுதேவ் அவர்கள் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் இந்தியை வீழ்த்துவோம், காங்கிரசு ஆட்சியை வீழ்த்துவோம், பார்ப்பனியம் ஒழிப்போம் என சூளுரைத்தனர்.

இரங்கல் கூட்டத்தில் பேசிய திரு.என்.வி.நடராசன் "ராயபுரத்தில் நடத்த வேண்டிய ஈமக்கூட்டத்தை இந்த ஈமக்காட்டில் நடத்துகிறோம். ஆச்சாரியார் ஆட்சியில் தமிழர்கள் உயிருடன் வாழ்வது சந்தேகமாக இருக்கிறது. அன்று நடராசனை சவக்குழியில் கிடத்தினோம். இன்று தாளமுத்துவிற்கு குழி வெட்டியுள்ளோம். இன்று தமிழர்கட்காக வெட்டப்படும் இதே குழிகள் வருங்காலத் தமிழர் ஆட்சியில் பார்ப்பனியத்திற்கும் வெட்டப்படும் என எச்சரிக்கின்றோம். இக்குழி காங்கிரசிற்கு வெட்டப்படும் குழியாகும். இன்றைய ஆட்சியில் தமிழர்கள் மாள வேண்டுமானால் வருங்கால ஆட்சியில் இதே போலப் பார்ப்பனர்களும் மாள வேண்டியதே நியாயம். நமக்கு மனக்கொதிப்பு இருக்கின்றது. அதற்காக நாம் பலாத்காரத்தில் இறங்க வேண்டாம். தமிழுக்காக ஒருவர் அல்ல; இருவர் உயிரைவிட்டனர். தமிழர்கள் தங்கள் உயிரைவிடத்தயாராக இருக்கின்றனர்” என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்

பாசுதேவ் தலைமை வகித்து ஆங்கிலத்தில் பேசியதை த.பா.நித்தியானந்தம் அவர்கள் மொழி பெயர்த்து தமிழில் கூறினார். அதில் "அகிம்சா ஆட்சியின் கீழ் இங்கு துக்கமான நிலையில் கூடியுள்ளோம். தாளமுத்து தமிழ்நாட்டிற்கு இரண்டாவது பலியாக்கப்பட்டார். முன்பு இறந்த நடராசனும் இவரும் வருந்தத்தக்க நிலையிலேயே இறந்தார். இவர் இறந்த சர்ட்டிபிக்கேட்டை டாக்டர்களிடமிருந்து பெறவே ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டிக்கிறார் போலும். இவர் இறந்த செய்தி வெகுநேரம் கழித்தே குடந்தையிலுள்ள பெற்றோர்கட்கு தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. வெகுநேரம் இச்செய்தி நம்மில் யாருக்கும் தெரியவில்லை. தோழர் நாடார் சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார். அவர் இரண்டு கைகளிலும் சந்தேகத்திற்கு இடமாக 2 கட்டுகள் போடப்பட்டிருக்கின்றன. இச்சந்தேகத்தை நீக்க சர்க்கார் என்ன செய்யப்போகிறார்கள். மாலையில் நடந்த மிகப்பெரிய ஊர்வலம் நம் கட்சியின் வளர்ச்சியையே காட்டுகிறது. ஆச்சாரியாரின் ஆட்சியில் மரணத்தைத் தவிர நாம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?" என்று தாளமுத்து சிறையில் தாக்கப்பட்டது குறித்த சந்தேகத்தை எழுப்பினார்.

அறிஞர் அண்ணா, என்.வி.நடராசன், ஆகியோர் உணர்ச்சிமிகு இரங்கல் உரையாற்றினர். ‘தோழர்கள் நடராஜன், தாளமுத்து மரணத்தை எனது அண்ணன், தம்பி இறந்தனர் என்றே கருதுகிறேன்’ என்று உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்ட அண்ணா,

"முன்பு தோழர் நடராசன் அடக்கமான காலத்தில் மீண்டும் இத்தகைய நிகழ்ச்சி தமிழர்கட்கு ஏற்படாதென நினைத்தேன். ஆனால் தோழர் தாளமுத்து இறந்தது காண மனம் கலங்குகிறது. வழி நெடுக ஆயிரமாயிரம் தமிழர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். என்னைப் பொறுத்தவரை தோழர்கள் நடராசன், தாளமுத்து மரணத்தை என்னுடைய அண்ணன், தம்பி மரணம் என்றே கருதுகிறேன். நடராசன் மணமாகதவர். ஆனால் தாளமுத்து மணமானவர். குடும்பத்தை ஒழுங்காக நடத்த இருந்த சமயத்தில் தாளமுத்து இறந்து விட்டார். நடராசன், தாளமுத்தை நாம் இழந்தோம். கண்ணீர் விட்டோம், கலங்கினோம், நெஞ்சு துடித்தோம், நிலை தடுமாறினோம், எதைச் செய்வது, எங்கு போவது என்பதறியாது ஏங்கித்தவித்தோம். ஆனால் இதே சமயத்தில் ஆச்சாரியார், மார்தட்டி, கருப்புக் கண்ணாடியைத் துடைத்த வண்ணம் கலகலவெனப் பேசுவார். ஏன் பேச மாட்டார்? தமிழன் ஆச்சாரியார் காலின் கீழ் இருக்கிறான். அவர் நினைத்தால் பல தாளமுத்துகளும் நடராசன்களும் மயானம் வர முடியும். ஏன், ஆச்சாரியார் நினைத்தால் நீங்களும் நானும் இங்கு வர வேண்டியது தான். இது மிகவும் வெட்ககரமான நிலை. இவர்கள் மாண்டார்கள். நாம் கண்ணீர் விட்டோம். இனி இந்தி படிக்கும் மாணவர்கள் இவ்விருவர் உடலைத் தாண்டிக் கொண்டுதான் படிக்கச் செல்ல வேண்டும். இரண்டு மணிகளை இழந்தோம். தமிழர் ஆட்சி ஏற்படும் போது இவ்விரு வீரர்களின் தியாகத்தை அடிப்படையாகக் கொண்டே அது எழுப்பப்படும். விடுதலை பெற்ற தமிழகத்தில் தலைவர் பெரியாரை நடுவில் வைத்து இறந்த இருமணிகளையும் பக்கத்தில் வைத்து உருவச்சிலை எழுப்ப வேண்டும்.” என்றார்

தாளமுத்துவின் இறப்பிற்குப் பிறகு கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில், தாளமுத்து எப்படிக் காலமானார், அவருடைய குடும்பத்தினருக்கு உரிய நேரத்தில் தகவல் சென்றதா, எப்போது பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், என்ன மருத்துவம் பார்க்கப்பட்டது, சிறையில் சுகாதார நிலைமை என்ன முதலான கேள்விகள் சட்டமன்றத்தில் நீதிக்கட்சியின் பெருந்தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம், பழம்பெரும் இதழாளர் டி.எஸ்.சொக்கலிங்கம், அப்துல் ஹமீது கான், டி.வி.ராமசாமி, கே.வி.ஆர்.சாமி, மெஹ்பூப் அலி பேக் உள்ளிட்ட தலைவர்களால் எழுப்பப்பட்டன.

ராஜாஜி அரசாங்கம் தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்றும் சிறைபடுவதற்கு முன்பே தாளமுத்து தொற்றுக்கு ஆளாகிவிட்டார் என்றும் தங்களை நியாயப்படுத்திக் கொண்டது. நான்கு மாதங்களாகச் சிறையில் உள்ள மற்ற எவருக்கும் இந்நோய் வரவில்லை என்றும் சிறையின் சுகாதார நிலைமையைப் பற்றி எந்தப் புகாரும் வரவில்லை என்றும் கூறிய ராஜாஜி, இந்தி எதிர்ப்புப் போராட்டக் கைதிகள் சிறை அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்று கூறி ஈகியர்கள் மீதே பழி போட்டார்.

தன்னைப் போலவே தன குடும்பத்தையும் கொள்கை ஈடுப்பாட்டோடு வைத்திருந்தவர் தாளமுத்து என்பதற்கு எடுத்துக்காட்டாக தாளமுத்து உயிரிழந்த நான்கு மாத இடைவெளியில், அவர் மனைவி குருவம்மாளும் மறியலில் ஈடுபட்டு 17.7.1939 ஆம் நாள் சிறை சென்றார் என்பது வரலாறு.

தாளமுத்து நடராசனை

தந்ததும் போதாதா? - அவருயிர்

வெந்ததும் போதாதா?

ஆளவந்தார் தமிழரை

அடித்ததும் போதாதா? - சிறையில்

முடித்ததும் போதாதா?

இந்தியினால் உங்கள்தீய

எண்ணம் நிறைவேறுமா? - தமிழர்

எண்ணம் நிறைவேறுமா?

செந்தமிழ்ப் படைப்புலிகள்

சீறிப் புறப்படல்பார் - தடை

மீறிப் புறப்படல்பார்!

- பாவேந்தர் பாரதிதாசன்

- க.இரா.தமிழரசன்