மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இருவர் பலியாயினர். முதலாமவர் இல.நடராசன். மற்றொருவர் தாளமுத்து ஆவார்.
இல.நடராசன் அவர்கள் 5.12.1938இல் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்துகொண்டு இந்து தியாலஜிகல் பள்ளியின்முன் மறியல் செய்து கைது செய்யப்பட்டார். நீதிபதி அப்ரஸ் அலி அவருக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனையும் 50 ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஆறு வாரம் சிறையி லிருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
நடராசன் சென்னை 11ஆவது டிவிஷன் பண்ணைக் கார ஆண்டியப்பன் தெரு எண்.2/2 இல்லத்தில் வசித்து வந்தார். அவருடைய தந்தையார் பெயர் இலட்சுமணன் ஆகும். இவர் அந்தக் குடும்பத்திற்கு ஒரே மகன் ஆவார். இவர் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர்.
இல. நடராசன் சென்னை சிறையில் பலநாள் நோயி னால் அவதிப்பட்டு வந் தார். இராசாசி அரசு இவருக்கு சரியான மருத்துவ வசதியைச் செய்து கொடுக் காமல் கடைசி நேரத்தில் சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் 30.12.1938இல் சிறைச் சாலை நிர்வாகிகள் சேர்த் தனர். நடராசன் அவர்களை மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் விடுதலைச் செய்துவிடுவதாக அரசு பலமுறைக் கூறியும், அவர் மறுத்துவிட்டார்.
15.1.1939 பகல் 2.45 மணிக்கு, பொங்கல் நாளில் இவர் மருத்துவமனையிலேயே இயற்கை எய்தினார்.
படிப்பறிவு இல்லாத இவரை, இந்தி எதிர்ப்பாளர்கள், இந்தி எதிர்ப்புக்குப் பயன்படுத்திக் கொண்டனர் என முதல்வர் இராசாசி சட்டமன்றத்தில் கூறினார். ஆனால் இல.நடராசனின் தந்தை இலட்சுமணன் தன் மகன் நான்காம் வகுப்பு வரை படித்துள்ளார் என்று முதல மைச்சருக்குப் பதில் அளித்தார். தமிழ்மொழியைக் காப்பதற்காக உயிர்நீத்த அந்த உத்தமத் தோழரின் உடல் குமாரசாமிராஜா, முத்தையா செட்டியாரின் விருப் பப்படி மாலை 5 மணிக்கு அரசு பொது மருத்துவ மனையிலிருந்து காரில் வைத்து, கறுப்புக் கொடிகளுடன் பெரும் ஊர்வலமாகக் கந்தசாமி கோவில் தெரு, தேவராஜ முதலி தெரு, தங்கசாலை வீதி, கொத்தவால் சாவடி, பிராட்வே, போர்ச்சுக்கீஸ் வீதி, ஏழுகிணறு முதலிய தெருக் களின் வழியாக நடராசனின் இல்லத்தில் முடிவுற்றது.
இல.நடராசனின் இறுதி ஊர்வலம்
தமிழ்மொழியைக் காக்க உயிர் நீத்தத் தோழர் இல. நடராசனின் இறுதி ஊர்வலம் 16.1.1939 காலை 9 மணிக்குத் துவங்கியது. ஊர்வலத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கைகளில் கருப்புக் கொடி ஏந்தி இருந்தனர். பெரியார் சிறையில் இருந்ததால் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.
இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட முக்கியமானவர்கள் :
டாக்டர் தர்மாம்பாள், மீனாம்பாள் சிவராஜ், புஷ்ப வதியம்மாள், பட்டம்மாள், நாராயணியம்மாள் முதலிய நூற்றுக்கணக்கான பெண்மணிகளும், தோழர்கள் ராவ்பகதூர், என். சிவராஜ், வி.பி.எஸ். மணியர், என்.வி. நடராசன், சி.என். அண்ணாதுரை, அ. பொன்னம்பலனார் உள்ளிட்ட ஏராளமான முன்னணித் தோழர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் வழிநெடுகிலும் மாடிகளிலிருந்து பூமாரி பொழியப்பட்டது. ஊர்வலம் அரை மைல் நீளத் திற்குமேல் இருந்தது. இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிக்கொண்டு 11.30 மணிக்கு மூலக்கொத்தளம் மயானத்தை அடைந்தது.
மாநகர மன்ற உறுப்பினர் ஆல்பர்ட் ஜேசுதாசன் தலைமையில் தோழர்கள் அண்ணாதுரை, அ. பொன் னம்பலனார், காஞ்சி பரவஸ்து, இராசகோபாலாச் சாரியார், வேலூர் அண்ணல் தஸ்கோ, டாக்டர் தர்மாம்பாள், நாராயணியம்மையார் முதலியவர்கள் மறைந்த இல. நடராசனுக்கு இரங்கல் தெரிவித்தும் அவருடைய அருங்குணங்களைப் போற்றியும் இராசாசி ஆட்சியின் இந்தித் திணிப்பு அடாவடிப் போக்கைக் கண்டித்தும் உரையாற்றினர்.
தோழர் அண்ணாதுரை அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது : “தமிழ்த் தாய்மார்களே! தமிழ்த் தோழர்களே! நாம் ஒரு மனஉறுதியுடைய இளங் காளையைக் காங்கிரஸ் ஆட்சிக்குப் பலிகொடுத்து விட்டோம். நடராசன் வீர சுவர்க்கம் அடைந்தார். அவர் சிறையில் பலமாக நோய்வாய்ப்பட்டு இருந்தும் நாங்களும் மேற்படியாருக்கு நோயைப் பற்றிக் கூறி வேண்டுவன செய்துகொள்ளும்படி கூறியும் நான் மன்னிப்பு ஒன்றுமட்டிலும் கேட்கமாட்டேன்; நான் இறந்தாலும் கவலை இல்லை என்று தீரமாகவும் வீர மாகவும் மொழிந்த வீரனின் பிரேதம் நம்மிடையில் இருக்கிறது. தோழர்களே! நாமெல்லோரும் இறப்பவர் களேதான். இறந்தே தீருவோம். ஆனாலும் காங்கிரஸ் ஆட்சியில் இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று மொழிந்து தாய் பாஷைக்காக அரசாங்கத்தாரால் தண் டிக்கப்பட்டு உயிர்நீத்தான் என்று நாம் எந்த வல்லரசு நாட்டிலும், எந்த சரித்திரத்திலும் கேட்டதில்லை. இன்று இங்கு நம்முன் கூடியுள்ள இந்தப் பதினாயிரக்கணக் கான ஆண், பெண் மக்களிடையில் கிடத்தியிருக்கும் தமிழ் வீரனின் செய்கையைப் பொன் எழுத்துக்களிலே உலக சரித்திரத்திலே எழுதப்படும். ஆனாலும் நாம் ஒவ்வொருவரும் நம் இளங்காளை நடராசனைப் போல் வீரத்துடன் தமிழுக்காகத் தியாகம், தாய் பாஷைக்காகத் தியாகம், தமிழ் கலைக்காகத் தியாகம் செய்து, இந்தியை ஒழிக்க இன்றுமுதல் மனத்திடம் கொள்ள வேண்டும்” என்று சுமார் அரை மணிநேரம் பேசினார்.
தோழர் அ.பொன்னம்பலனார் உரை :
“தாய்மார்களே! தோழர்களே! நான் இங்கு இப்படி ஒரு தமிழ் வீரனைப் போற்றி பேச நேரிடும், இந்த துக்கமான சம்பவம் நமக்கு ஒற்றுமையை அளிக்கும் காரியம் ஒன்று நம்முன் இருக்கிறது என்று நான் காலை யில் ஈரோட்டிலிருந்து வந்ததும் தெரியவில்லை. நான் வரும் வழியில் தற்கால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு இந்தி எதிர்ப்புத் தொண்டன் மாண்டான் என்று கேள்விப் பட்டதும் இறந்த தோழனின் ஆவேசம் என்னை இங்கு கொண்டுவந்துவிட்டது. நாம் தெருக்களில் கொடியேந்தி ஆர்ப்பாட்டம் செய்வதினாலும், பல பெருங்கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் செய்வதாலும் நமக்கு விடுதலை இல்லை. தோழர்களே! தாய்மார்களே! நமது இந்தி எதிர்ப்புத் தொண்டனின் மன உறுதியைப் போல், அரசியலாளர்களால் பல துன்பங்களுக்கிடையில் மன்னிப்பு கேட்க மறுத்து மாண்டுபோன நடராசனின் மனவுறுதி யைப்போல் ஒவ்வொரு தமிழனின் மனமும் ஆகவேண்டும். கைதட்டுவதும் கோஷமிடுவதும் பிரயோஜனமில்லை. தமிழன் தன் தாய் பாஷைக்காகச் சிறையில் உயிர்விட வேண்டிய நிலைக்கு இன்று காங்கிரஸ் கொண்டுவந்து விட்டது. நம்முன் வீரமாய் உயிர்துறந்த தோழனைக் காண்பது பெரிதன்று. அவருக்கு அனுதாபத் தீர்மானம் செய்வதும் பெரியதல்ல. தமிழன், தமிழ்நாடு, தாய்மொழி என்றதைக் கருத்தில் கொண்டு, காரியத்தில் காட்ட முன்வரவேண்டியது ஒவ்வொரு மகனும், மகளும் நம் நடராசனைப் போல் (இறக்காமல்) வீரமாய் வீர உரங் கொண்டு தாய்மொழிக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் செய்யும் தொண்டில் பங்குகொண்டு செய்கையில் காட்டுவதுதான் நாம் நம் தோழர்நடராசனின் ஆத்மா சாந்தியடையச் செய்யும் காரியம் என்பதை இது சமயம் கங்கனம் பொதுமையாக மனதில் கொண்டு தமிழ் மொழியைக் காக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளு கிறேன் என்றார்.” அன்று மாலை சென்னை கடற்கரை யில் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட மாபெரும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
- (விடுதலை 17-1-1939)