"சின்னச்சாமியைப்போல ஒரு பத்துத் தமிழனாவது உயிர் நீத்தால்தான் நமது தமிழுக்கு விமோசனம் கிடைக்கும். இந்தி ஆதிக்கம் ஒழியும்." என்று கூறி கோடம்பாக்கம் சிவலிங்கம் தமிழுக்காகத் தீக்குளித்தது தன்னுயிர் ஈந்ததுபோல் அவரது எரிந்து போன உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அதே உணர்வோடு திரும்பி வந்து தன்னையும் எரித்துக் கொண்டவர் தான் விருகம்பாக்கம் அரங்கநாதன்.

அரங்கநாதனின் பெற்றோர் பெயர் ஒய்யாலி - முனியம்மாள். இவர்களுக்கு 27.12.1931 இல் மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

சின்ன வயசிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவராக இருந்த சிவலிங்கம்,மான்கொம்பு , சிலம்பாட்டம், சுருள் கத்தி சுழற்றுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். விருகம்பாக்கத்து இளைஞர்களால் ‘குரு’ என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன் விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைத்து அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். அது போக அந்த இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் இதழ்களை, புத்தகங்களை படிக்கச் சொல்லி உணர்வூட்டியுள்ளார்.

virugambakkam aranganathanசென்னை ஆயிரம் விளக்கு தொலைபேசிக் கிடங்கில் பணியாற்றிய அரங்கநாதனின் இணையர் பெயர் மல்லிகா, இவர்களுக்கு அமுதவாணன், அன்பழகன், இரவிச்சந்திரன் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்தி எதிர்ப்புப் போரில் 1965 சனவரி 26ஆம் நாள் அன்று தன்னையே எரித்துக் கொண்ட கோடம்பாக்கம் சிவலிங்கத்தின் உடலை நேரில் கண்டு அஞ்சலி செலுத்தினார் அரங்கநாதன். சிவலிங்கத்தின் உயிரிழப்பு அரங்கநாதனை வேதனைப்படுத்தியது. தாமும் தமிழுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதியெடுத்தார். அன்றிரவு முழுவதும் சிவலிங்கத்தின் தியாகம் பற்றியே பார்ப்பவரிடம் எல்லாம் பேசியிருக்கிறார். அவரது நண்பர்களிடம் பேசிவிட்டு தனது வீட்டிற்கு அரங்கநாதன் போய்விட்டார்.

சின்ன வயசில் இருந்தே தமிழ் மீது பற்று கொண்டு தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் தமிழ்மொழி உணர்வூட்டிய தி.மு.கழகத்தின் ஆதரவாளராக இருந்த அரங்கநாதன் சனவரி 27ஆம் நாள் நள்ளிரவு 2மணிக்கு விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகில் ஓர் மாமரத்தின் அடியில் நின்று கொண்டு தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். 

இதையறிந்து அவரது இணையரும், மற்ற குடிசைகளில் இருந்தவர்களும் வரும் போது உயிரற்ற அவரது கருகிப்போன உடலைத் தான் அவர்கள் பார்க்க முடிந்தது. தகவலறிந்த காவல்துறை அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

கருகிப்போன அவர் உடலின் அருகில் ஒரு அட்டையில் சுற்றப்பட்டு கடிதங்களின் நகல்கள் கிடந்தது. அந்தக் கடிதங்கள் அண்ணா, நெடுஞ்செழியன், ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களுக்கும் மத்திய அரசுக்கும் எழுதப்பட்டிருந்தன. கடித நகல்களும் பதிவஞ்சலில் அனுப்பியதற்கான இரசீதுகளும் அங்கிருந்து எடுக்கப்பட்டன.

கண்டெடுக்கப்பட்ட அந்தக் கடிதங்களில் “இந்தியைக் கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர்கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறுத்துப் பேசியும், இந்தி வெறி பிடித்தவர்களே _ இந்திக்கு வால் பிடிப்பவர்களே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியைப் புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என்று எழுதப்பட்டிருந்தது.

 உயிருக்கு உயிரான தனது கணவர் அமுதவாணன் (வயது 7) அன்பழகன் (வயது 3) இரவிச்சந்திரன் (6 மாதக் கைக்குழந்தை) என்று மூன்று பச்சிளங்குழந்தைகளைத் தன்னிடம் விட்டுவிட்டு இறந்து போனதை ஏற்க முடியாத இணையர் மல்லிகா அவர்களின் மன நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. உறவினர்கள் துணையுடன் குழந்தைகள் வளர்ந்தனர்.

தமிழுக்காக தன்னுயிரிந்த அரங்கநாதன் பேத்தி கோமதிக்கு பனிரெண்டாம் வகுப்பில் 2018 ஆம் ஆண்டு 1120 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வினால் மருத்துவப் படிப்புக்கான சீட் கிடைக்கவில்லை என்பது கொடூரமானது.

கடுமையான மன அழுத்தத்தில் தன்னுடைய மகன் அன்பழகன் வீட்டில் தங்கியிருந்த அரங்கநாதன் இணையர் மல்லிகா அவர்கள் கடந்த 2022 இல் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருகம்பாக்கம் அரங்கநாதனின் நினைவைப் போற்றும் வகையில் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு சுரங்கத்திற்கு அரங்கநாதன் பெயரை தி.மு.க. அரசு சூட்டியது.

- க.இரா.தமிழரசன்

Pin It