பெரியார் எச்சரித்தவாது சுதந்தரம் என்பதன் பேரால் வடநாட்டு ஆதிக்கம் தமிழகத்தின் மீது திணிக்கப்பட்டது. 1948இல் ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் பள்ளிகளில் இந்தி திணிக்கப்பட்டது. திராவிடர் கழகம் முன்னின்று அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டி போர்க்களம் கண்டது. அது தொடர்பான குடி அரசு இதழின் தலையங்கம்.

களம் நோக்கி வருக! வருக!!

திராவிடர் கழக மத்திய கமிட்டி இந்த மாதம் 2ஆம் தேதி தலைவர் வேதாசலம் அவர்கள் தலைமையில் சென்னையில் கூடி, இந்தி எதிர்ப்பின் நடவடிக்கைகளை எப்படி எப்படிச் செய்வது என்று செய்திருக்கும் முடிவை நாம் மற்றொரு பக்கத்தில் வெளியிட்டிருக்கிறோம்.

அவைகளுள் பொதுக்கூட்டம் நடத்திப் பிரச்சாரம் செய்தல், வெவ்வேறு முனைகளிலிருந்து இந்தி எதிர்ப்புப் படை புறப்பட்டு, கால்நடையாகவே ஒவ்வொரு ஊரிலும் தங்கிப் பிரச்சாரம் செய்து கொண்டே குறிப்பிட்ட களத்திற்கு வந்து சேருதல், மந்திரிகளைக் காணும் போது பொதுமக்கள் தங்களுடைய வெறுப்பைக் காட்டிக் கொள்வதற்காகக் கருப்புக்கொடி பிடித்தல் ஆகிய மூன்றோடு, குறிப்பிடுகின்ற பள்ளிக் கூடத்தின் முன்பு, இந்தியைப் படியாதீர்கள் என்று மாணவர்களை வேண்டிக் கொண்டு, மறியல் ஆரம்பிப்பது, அதற்கு முதல் சர்வாதிகாரி தோழர் சி.என். அண்ணாதுரையவர்கள் எம்.ஏ., ஆரம்பிக்கும் நாள் ஆகஸ்டு 10, என்கிற முடிவைக் கேட்டு, எப்போது ஆரம்பம்? எப்போது ஆரம்பம்? என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்த இளங்காளைகள் எல்லாம் தொடை தட்டியிருப்பார்கள். எங்களுடைய உணர்ச்சியையெல்லாம் இப்படியே எத்தனை நாளைக்கு அடக்கி வைத்துக் கொண்டிருப் பீர்கள்? பார்ப்பன அடிமைகளின் பயத்தினால் நம் முடைய உரிமைகள் எல்லாம் நாளுக்குநாள் பறிக்கப் பட்டு வருகிறதே! இந்த நிலைமையிலும் கூடவா அடக்குமுறைக்கெல்லாம் நாம் அடங்க வேண்டும் என்கிற இதோபதேசம்? என்று வாய் விட்டுச் சொல்லியும், சொல்லாமலும் கொதிப்படைந்து குமுறிய வீரர்கள் எல்லாம் இந்த முடிவைக் கேட்டுப் பெரும் எக்களிப்புக் கொண்டிருப்பார்கள். திராவிட உணர்ச்சியுடைய ஒவ்வொரு ஆணும், பெண்ணுமே இந்த முடிவையறிந்தவுடன், ஒரு புழுக்கமான அறையிலிருந்து தூயகாற்று வீசும் படியான வெளியிடத்திற்கு வந்ததைப் போன்ற உணர்ச்சி பெற்று, இனி இறந்தொழிந்தாலும் கவலையில்லை, எப்படியும் இலட்சியத்தை நிறைவேற்றுவோம் என்கிற உணர்வோங்கி நிற்பார்கள் என்பது உறுதி.

இந்தி எதிர்ப்பு நடவடிக்கை களுக்கு, முதல் முதல் நான் பலி யாகத் தயார் என்று முன்வந்து, முதல் சர்வாதிகாரி ஸ்தானத்தைப் பெற்றிருக்கும் தோழர் அண்ணாத்துரையவர்களை நாம் பெருமகிழ்ச்சியுடன் பாராட்டுகிறோம்.

இப்போதைய இந்தி எதிர்ப்பின் அடிப்படை எது என்பதைத் தலைவர் பெரியாரவர்கள் பலமுறை விளக்கி வந்திருந்தாலும், இந்த மாதம் நாலாம் நாள் விடுதலையில் வெளிவந்த அறிக்கையில் திட்டவட்ட மாக விளக்கியிருக்கிறார்கள்.

“இந்தி எதிர்ப்பு வெறும் மொழிப் பிரச்சனை என்பது மாத்திரமல்லாமல் அன்னிய இனப்போராட்டம், அன்னிய கலாச்சாரப் போராட்டம், அன்னிய ஆட்சிப் போராட்டம் முதலிய பல தத்துவங்களைக் கொண்டதாகும்” என்கிற இந்த விளக்கத்தைக் காங்கிரஸ் திராவிடத் தோழர்களும், பார்ப்பனிய ஆதிக்க மந்திரிசபையும் நல்ல முறையில் விளங்கிக் கொள்ள வேண்டுமென்று நாம் ஆசைப்படுகிறோம். இந்தி நுழைப்பினுடைய அடிப்படை இந்த நோக்கத்தோடு தான் அமைந்தது என்பதை, 10 வருஷங்களுக்கு முன்பே இன்றைய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரியாரவர்கள் ‘இந்தியும் சமஸ்கிருதமும் ஒன்றுதான்’ என்று கூறியிருக்கிறார். அதாவது சமஸ்கிருதத்திற்குப் பதிலாகவே இந்தியைக் கொண்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார். இப்போது இந்த முறையும் எதிர்ப்பு ஏற்பட்ட பிறகு அந்த எதிர்ப்புக்குச் சவாலாக மயிலையும் மாம்பலமும் கூடிக்கொண்டு, “சமஸ்கிருதத்தை அகில இந்திய இயக்கமாகக் கொண்டுவரவேண்டும்” என்று கொக்கரித் திருக்கிறது. மதுரையிலே ஒரு பார்ப்பனர், “இந்தி எதிர்ப்பை நாம் லட்சியப்படுத்த வேண்டாம்; 2ஆவது மொழியில் இந்தியை மட்டுமே சர்க்கார் பாடத் திட்ட மாக வைக்க வேண்டும்; அந்த ஒன்றையே இந்த நாட்டவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டும்; அதற்கு நாம் இப்போதே உடனடியாக ஒரு இயக்கம் தொடங்க வேண்டும்” என்று அபூர்வமான யோசனையை வெளியிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்தி இஷ்ட பாடமாக வோ, கட்டாயப் பாடமாகவோ எந்த ரூபத்தில் இந்த நாட்டில் புகுத்தப்பட்டாலும், அது சமஸ்கிருத மொழியைப் புகுத்துவதாகவும், சமஸ்கிருத கலாச்சாரத்தைப் புகுத்தி வற்புறுத்துவதாகவும், சமஸ்கிருத இனத்தின் நிரந்தர ஆட்சிக்கு அடிகோலுவதாகவுமே இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல், எதிர்ப்பில் ஈடுபடுவோரின் இலட்சியம், மொழிப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது என்று எண்ணும் அவசர வாதிகளையும், ஆழமறியாதோர்களையும் இந்த விளக்கம் கண்களைத் திறக்க வைக்கும் என்றும் நாம் நம்புகிறோம்.

இப்போராட்டம், இந்தப் போராட்டத்திலேயே வெற்றி தோல்வி கண்டு விடவேண்டுமென்கிற முடிவோடு அல்லாமல், எத்தனை போராட்டங்களை நடத்தியா யினும், எந்த வகையான அன்னிய ஆதிக்கத்தி லிருந்தும் திராவிடம் விடுபட்டே தீரவேண்டும் என்னும் தெளிந்த முடிவோடு தொடங்கப்பட்டதாகும் என்கிற தலைவரின் போர் விளக்கத்தையறிந்த, பார்ப்பனியமும் - பனியாக் கூட்டமும் பதைபதைக்கும் என்பதும், பதை பதைப்பால் அறிவொளியும் கண் ணொளியும் மழுங்கி, அகங்கார உச்சியில் ஏறி, ஆணவத் திமிர் குலுக்கப் பெரும் ஆட்டம் காண் பிக்கவே செய்வார்கள் என்பதும் உறுதி.

இந்த ஆட்டத்தினுடைய முடிவாக, பலர் அடிபட்டு, கால் கை முறிந்து கீழே வீழ்த்தப்பட்டுப், பலர் சாக வேண்டிய நிலையும் வந்து சேரவே நேரும். இப்படிப் பலர் பலியாவார்களேயானால் அதனுடைய பின் விளைவு எப்படியிருக்கும்? கதைகளிலும், சித்திரங்களி லும் குறிப்பிடக்கூட முடியாதபடி இந்த நாட்டு ஆரியம் ஒழிவதற்கு, ஓடுவதற்கு ஆகாய வழியாகப் போடப் பட்ட பாதை என்று படைத்தலைவர் விளக்கியிருப்பதை குறிப்பாகப் பார்ப்பனியம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறவும் நாம் ஆசைப்படுகிறோம்.

முந்திய இந்தி எதிர்ப்புப் போருக்கும் இப்போதைய இந்தி எதிர்ப்புப் போருக்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது. இப்போது இந்தியை எதிர்க்கும் நாம் பெரும் அளவில் ஆள்பலத்தையும் பொருள் பலத்தையும் பெற்றிருந்தாலும், இப்போராட்டம் நடைபெறவேண்டிய தற்கு அவசியமும், நியாயமான காரணமும் இருந் தாலும், நம்முடைய லட்சியம் நிறைவேறவேண்டு மானால் போராட்டக் காலத்தில், போராடுங்களத்தில் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்துத்தான், நம்முடைய இந்தப் போராட்டத்தின் வெற்றியும் தோல்வியும் அமையும் என்பதைப் போராட் டத்தில் கலந்துகொள்ள ஆசைப்பட்டு துடிதுடிப்பாய் விளங்கும் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் நாம் வற்புறுத்திக் கூறுகிறோம்.

பய உணர்ச்சியே, பேய் ஆட்சியாக மாறுகிறதென் றால் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பன ருக்குப் பயப்படும் பய உணர்ச்சியே, நம் மந்திரிகளை பேய் ஆட்சி செலுத்தச் செய்யும் என்பதை நாம் விளக்கத் தேவையில்லை. இந்தப் பேய் ஆட்சியைக் கதறக்கதற அடித்துத் துரத்த வேண்டுமானால், எதிர்ப் பில் ஈடுபடும் தொண்டர்கள், ஆட்சியாளர்களுடைய எந்தக் கொடுமைக்கும் கலங்கிவிடாத உள்ள உறுதியும், எத்தகைய அக்கிரமச் செயலையும் தாங்கிக் கொள்ளும் உள்ளப் பொறுமையும், எந்தெந்த நேரத் தில் தனக்கு யார் யார் தலைவர் ஆகிறாரோ அத்தலை வருக்குக் கட்டுப்பட்டு அடங்கி நடக்கும் கடமையு ணர்வும் நிரம்பப் பெற்றவர்களாக இருக்க வேண்டும். போர் வீரர்களின் ஒழுங்குமுறை பற்றிப் படைத்தலை வர் கூறியிருக்கும் கருத்துக்களை நாம் மற்றொரு பக்கத் தில் தந்திருக்கிறோம். அதைக் கருத்தூன்றிப் படித்து அந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் தொண் டர்கள் மட்டுமே இந்த நடவடிக்கையில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை மிக மிக வற்புறுத்திக் கூறுகிறோம்.

“இந்த மாதிரியான எதிர்ப்பு நடவடிக்கை, எப்படி யோ நடந்தேயாக வேண்டும் என்று பார்ப்பனியம் ஆசைப்பட்டுவிட்டது. அதன் ஆசைப்படியே நீங்களும் (திராவிடர்களும்) போர்ப்பரணி கொட்டிவிட்டீர்கள்! ஆனால் என்னுடைய தலைமையில், என்னுடைய ஆட்சியில், என் இனத்தவரை நானே அடிக்கச் செய் தேன்; சாகச் செய்தேன் என்கிற பெரும்பழி என்மீது ஏற்படாதிருக்க வழியில்லையா? அதாவது இந்த எதிர்ப்பு நடைபெறாதிருக்க ஒரு மார்க்கமில்லையா?” என்று நம்முடைய பிரதமர் ரெட்டியார் அவர்கள் இப் போது எண்ணுவார்களேயானால், நாம் ஆச்சரியப்பட மாட்டோம். போர் நடந்துதான் வெற்றிகாண வேண்டுமா? என்பதை முடிவுகட்டும் பொறுப்பு எப்படியும் இப்போது பிரதமர் கைவசத்தில் தான் இருக்கிறது என்பதை நாம் அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

இந்த நாட்டு மக்களின் மான உணர்ச்சியை யழித்து மிதிப்பதற்காகவே, பார்ப்பனர்கள் சிலர் உசுப்பி விட்ட பிறகு, கல்வி மந்திரியார் அவர்களுடைய மிரட் டலுக்கு அஞ்சி, இந்த இந்தி நுழைப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்கிற உண்மையைப் பிரதமர் உணர்வாரானால் என்ன செய்ய வேண்டும்?

“நான் கல்வி மந்திரியாக ஆவதற்கு இடங்கொடுக் காவிட்டால் கடலில் விழுந்து இறப்பேன்” என்று பய முறுத்தும் தோழர் அவினாசியாரின் பயமுறுத் தலுக்குப் பயப்படுவதை விட்டுவிட வேண்டும். வம்பை விலைக்கு வாங்கும் குறும்புப் போக்கால் விளையும் கேடுகளை நான் அனுமதிக்கமாட்டேன் என்பதை வற்புறுத்தி, முதலில் அவரை கல்வி மந்திரிப் பதவி யிலிருந்து இறக்கி விட்டுவிட வேண்டும். அந்த இலாகா வைத்தான் ஏற்றோ அல்லது பிறரிடம் கொடுத்தோ, உடனே இந்த இந்தி நுழைப்பு உத்திரவை மாற்றிவிட ஏற்பாடு செய்ய வேண்டும், இந்த ஒரு முறைதான் எந்த ஜனநாயக ஆட்சியிலும் கையாளப்படுமுறை என்பதையுணர்ந்தால் இதைத் தவிர வேறு என்ன வழி என்று கேட்கிறோம்.

“நாளுக்கொரு உத்திரவாகப் போடுவதற்குத்தான் நான் சளைக்கவில்லையே, இந்த உத்திரவை மாற்ற வேண்டும் என்றால் நான் அதற்குத் தயார்” என்று கல்வியமைச்சர் காட்டிக் கொள்வாரானால், அதைப் பிரதமரும் விரும்புவாரானால், ஒன்று அப்படியாவது செய்வதைத் தவிர வேறு என்ன வழி? என்று கேட்கிறோம்.

இந்த இரண்டில் ஒரு வழியைத் தவிர வேறு எந்த வழியாலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை தற்காலி கமாகக் கூட நிறுத்தப்படமாட்டாதென்பதையும், மான முள்ள ஒரு திராவிடன் நாட்டில் நடமாடும் நிலைமை உள்ள வரையிலும், இவ்வெதிர்ப்பும் நடந்தே தீரும் என்பதையும் நாம் அவருக்குத் தெளிவாக எடுத்துக் கூறுகிறோம்.

தான் பிரதமராயிருந்து கொண்டு இதை நடப்பதற்கு எப்படி அனுமதிப்பது? இந்த உத்திரவைத் தான் எப்படி மாற்றுவது? என்று மயங்குவாரேயானால், உடனே பிரதமர் பொறுப்பை வேறு பார்ப்பனர்களிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறி விடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்?

இந்த வழியையும் பிரதமர் மேற்கொள்ளத் தவறு வாரேயானால், அது அவருக்குப் பெரும் பழியாக-அதாவது அவர் மறைந்து போனாலும் அந்தப் பழி என்றைக்குமே மறைக்கப்பட முடியாத அளவுக்குப் பெரும் பழியாக, உலகம் உள்ளவரையும் நிலைத்து நிற்கும் என்பது அவர் அறியாததல்ல. இந்தக் கடைசி நேரத்தில் அவர் எப்படி நடந்துகொள்ளப் போகிறாரோ? அவரைப் பார்ப்பனியம் எப்படி ஆட்டிவைக்கப் போகிறதோ? யார் கண்டது?

ஆர்வமும் ஆதரவும் அகமும் புறமும் விளங்க, போரொலி கேட்டு, தொடை தட்டி, தோள் உயர்த்தும் தோழர்களே! மறவர்குல மாணிக்கங்களே! தாய் மொழியைழித்துவிட, அதனால் தமிழினத்தை நசுக்கிவிடச் செய்யப்படும் சாகச வேலைகள் எங் களிடமா பலிக்கும்; வாட்போருக்குப் பின்வாங்காத மறக்குடி மகளிரான நாங்களா இந்த அறப்போருக்குப் பின்வாங்குவோம் என்று முழங்கிய தாய்மார்களே! இதோ சர்வாதிகாரியின் தாக்கீது பிறந்துவிட்டது! ஆரம்பமாகிவிட்டது அறப்போர்! களம் நோக்கி அடுத்தடுத்து வருக! வருக!! கட்டாயம் நாமே வாகை சூடுவோம்!

இந்தத் தாக்கீது எங்களுக்கில்லையா? எப்போது நாங்கள் புறப்பட வேண்டும்? என்கின்றனர் சென் னைக்கு - வெளியூர்த் தோழர்கள். பொறுங்கள்! பொறுங்கள்!! படைத் தலைவரின் ஆணைக்கு அடங்கி அழைப்புக்குக் காத்து நில்லுங்கள்! இதோ அழைப்பு எழுதப்படுகிறது! விரைவில் உங்கள் கைக்குக் கிடைக் கும்! புறப்படத் தயார்படுத்துங்கள்; புறப்படுங்கள்!

 “குடிஅரசு” 7.8.1948

தொடரும்

Pin It