நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பூஞ்சைத் தொற்றுகள் மனித குலத்தின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது நாளைய உலகின் உணவு உற்பத்தி மற்றும் விநியோகத்தைப் பாதிக்கும். உலகில் பயிர் செய்யப்படும் ஐந்து முக்கிய பயிர்களின் விளைச்சல் இதனால் குறையும். பெரும்பாலான கட்டுப்பாட்டு முறைகளுக்கு எதிரான ஆற்றல் பெற்று வரும் பூஞ்சைகள், காற்றின் மூலம் மிக நீண்ட தூரம் பயணம் செய்து, ஒற்றைப் பயிர் (mono crop) விளைவிக்கப்படும் வயல்களை ஆக்ரமிக்கின்றன.
எங்கும் வாழ்பவை
இந்த உயிரினங்கள் உலகின் எந்த ஒரு இடத்திலும் அங்கு உள்ள சூழ்நிலையை சமாளித்து வாழும் தகவமைப்பைப் பெற்றவை. இன்று பொதுவாக பயன்படுத்தப்படும் பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிராக வாழ்பவை. காலநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்ந்து கொண்டிருப்பதால் இவற்றால் ஏற்படும் தொற்றுகள் அதிகரிக்கின்றன. 1990களில் இருந்து இக்கிருமிகள் ஒவ்வொரு ஆண்டும் முன்பை விட 7 கி மீட்டர் அதிக உயரமான இடங்களுக்குப் பரவுகின்றன.
முன்பு வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டுமே வழக்கமாகக் காணப்பட்ட பூஞ்சைகளால் கோதுமையில் ஏற்படும் தண்டு அழுகல் (Wheat stem rust) நோய் இப்போது இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் காணப்படுகிறது. உயர் வெப்பநிலையால் இக்கிருமிகளில் மரபணு வேறுபாடுகள் கூடுதளாக ஏற்படுகின்றன. அதிதீவிரப் புயல்கள் இவற்றின் ஸ்போர்களை வெகுதொலைவிற்குப் பரவச் செய்கின்றன.உலக மக்களிடையில் இவை பற்றிய அதிக விழிப்புணர்வு சமீபத்தில் வெளிவந்த “கடைசியில் நாம்” (The last of Us) என்ற புகழ் பெற்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் ஏற்பட்டுள்ளது.
மனித மூளையைத் தாக்கும் பூஞ்சை பற்றி சொல்லப்பவது ஒரு அறிவியல் புனைக்கதையே என்றாலும், இதனால் பூஞ்சைகள் பற்றி அதிக அக்கறையுள்ளவர்களாக மக்கள் மாறியுள்ளனர் என்று யு.கே. எக்சிடர் (Exeter) பல்கலைக்கழக ஆய்வாளர் மற்றும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர் பேராசிரியர் சேரா கர் (Prof Sarah gurr) கூறுகிறார்.
சாம்பிகளும் பூஞ்சைகளும்
சோம்பிகள் (Zombies) போல அச்சுறுத்தாவிட்டாலும் பூஞ்சைகள் பூமியில் பசி பட்டினியை தலைவிரித்தாடச் செய்யும். சோம்பி என்பது இறவா வரம் பெற்ற பயங்கரத்தைக் கட்டவிழ்த்துவிடும் புராண கால கற்பனை கதாபாத்திரம். ஹேட்டி நாட்டின் நாட்டுபுறக் கலைகளில் இந்த கற்பனை உயிரினங்கள் பற்றிப் பேசப்பட்டுள்ளது. புவி வெப்ப உயர்வு, பூஞ்சைகள் அதிக வெப்பத்தைத் தாங்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். இதனால் இந்த உயிரினங்கள் மனிதன் உட்பட உள்ள வெப்ப இரத்த விலங்குகளில் நோய்த்தொற்றை மிக அதிக அளவிற்கு ஏற்படுத்தும்.
மக்கட்தொகைப் பெருக்கம்
அதிகரித்து வரும் மக்கட்தொகைப் பெருக்கத்தால் ஏற்கனவே மனித குலம் உணவு உற்பத்தியில் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. பூஞ்சைத் தொற்றால் பெருமளவு பயிர் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினிக்கு ஆளாகின்றனர். உயரும் வெப்பநிலை இந்த நிலைமையை இன்னும் மோசமாக்கவே செய்யும் என்று ஜெற்மனி கீல் (Kiel) பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் ஈவா ஸ்டூக்கன்ப்ராக் (Prof Eva Stukenbrock) கூறுகிறார்.
பூஞ்சைத் தொற்றுகளால் விவசாயிகள் ஏற்கனவே 10 முதல் 23% உற்பத்தி இழப்பிற்கு ஆளாகின்றனர். இந்த ஆய்வுக்கட்டுரை நேச்சர் (Nature) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சோளம், சோயா பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகிய உலகின் ஐந்து முக்கிய பயிர்களில் தொற்றுகளால் ஏற்படும் இழப்பு ஆயிரமாயிரம் மில்லியன் மக்களின் உணவைப் பறிக்கிறது. இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளின் வரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளன என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது.
கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஸ்போர்கள்
இவை மண்ணில் 40 ஆண்டு உயிர் வாழக் கூடியவை. இவற்றின் காற்றினால் சுலபமாகப் பரவக்கூடிய ஸ்போர்கள் கண்டம் விட்டு கண்டம் பயணிக்கக் கூடியவை. அமெரிக்காவில் டோர்னேடோ (tornadoe) புயல்கள் ஏற்படும் சமயத்தில் வீசும் காற்றின் மூலம் ஸ்போர்கள் உறிஞ்சப்பட்டு வெகுதொலைவு பயணம் செய்வதைப் பார்க்கலாம். ஒரு செல் செயல்முறை (single cellular process) கட்டுப்பாட்டிற்கு எதிராக இவை வேகமாகப் பரிணாம மாற்றமடைகின்றன.
இப்போது நடைமுறையில் இருக்கும் பூஞ்சைக்கொல்லிகள் மற்றும் பாரம்பரிய நோய்க்கட்டுப்பாட்டு முறைகள் தொற்றுகளைக் குறைக்கப் போதுமானதாக இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒரு பயிர் முறையை விட பூஞ்சைகளுக்கு எதிரான ஆற்றலை உடைய மரபணுக்கள் கொண்ட பல விதைகளை ஒன்றாகக் கலந்து பயன்படுத்துதல் இப்பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு. 2022ல் டென்மார்க்கில் விளைவிக்கப்பட்ட கோதுமையில் கால்பகுதியும் விதைக்கலவைப் பயிரிடல் முறையில் உற்பத்தி செய்யப்பட்டது.
கை கொடுக்கும் தொழில்நுட்பம்
ஆளில்லா பறக்கும் விமானங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் பூஞ்சைத்தாக்குதல் ஏற்படுவதை முன்கூட்டியே கண்டுபிடித்து கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ளலாம். பூஞ்சைக்கொல்லிகளுக்கு எதிரான எதிர்ப்பாற்றலைப் பெறாமல் தடுக்கும் வகையில் பல வேதிப்பொருட்களை இவற்றின் உடலில் உருவாக்க உதவும் கூட்டுப்பொருட்களை எக்சிடர் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்பொருட்கள் அரிசி, கோதுமை, சோளம், வாழைப்பயிர்களில் பலனளிக்கக் கூடியதாக இருந்தது.
பூஞ்சைத்தொற்று குறித்த ஆய்வுகளுக்கு மிகக் குறைவாகவே நிதி ஒதுக்கப்படுகிறது. 2020-2022ல் யு.கே. ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்பு கவுன்சில் கொரோனாவிற்கு எதிரான ஆய்வுகளுக்கு 550 மில்லியன் பவுண்டு நிதி ஒதுக்கியது. ஆனால் இதே காலத்தில் பூஞ்சைத்தொற்று ஆய்வுகளுக்கு வெறும் 24 மில்லியன் பவுண்டு நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டது.
உண்ண உணவில்லாமல் போனால் உயிர் வாழ்வது எப்படி?
போதிய உணவு உண்பதற்கு இல்லாமல் போகும்போது - சத்து பற்றாக்குறையாலேயே - கோவிட்19 போன்ற மற்றொரு கொள்ளைநோய் தாக்குவதற்கு முன்பே நாம் இறந்து விடுவோம். மற்ற மருத்துவ ஆய்வுகளுடன் ஒப்பிடும்போது இப்போதும் இந்த ஆய்வுகள் காசில்லாமலேயே நடந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் பூஞ்சைத்தொற்றுகளே நாளை மனிதனை அழிக்கும் ஆபத்தாக மாறிவிடலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்