உயிரியியல் எரிசக்தி:
விலை உயர்வுக்கும் உணவு நெருக்கடிக்கும் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது உயிரியியல் எரிசக்தி தயாரிப்பாகும். உணவு தானியங்களை கணிசமான அளவு எத்தனால் மற்றும் பயோ டீசல் தயாரிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் திருப்பிவிட்டன. 2007ம் ஆண்டு அமெரிக்கா தனது பாராளுமன்றத்தில் எரிசக்தி சட்டத்தை நிறைவேற்றியது. எதிர்காலத்தில் 20 சதம் எரிசக்தியை இந்த உயிரியியல் எரிசக்தியிலிருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தது. 2008ம் ஆண்டு மட்டும் சோளஉற்பத்தியில் 30 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கீடு செய்தது. சுமார் 135க்கும் மேற்பட்ட உயிரியியல் எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 74 ஆலைகள் உடனடியாக அமைக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய ஊட்டமைப்பு நாடுகள் எண்ணெய் வித்துக்களை உயிரியியல் எரிசக்தி தயாரிக்க திருப்பிவிடப்பட்டுள்ளது. பிரேசில் தனது கரும்பு உற்பத்தியில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க பயன்படுத்துகின்றது. மேலும் இதற்காக கரும்பு விளைச்சளை அதிகப்படுத்த அமேசான் காடுகளை அழிக்கும் நடிவடிக்கைகளும் தொடர்கின்றன.
உயிரியியல் எரிசக்திக்கு உணவு தானியங்களை திருப்பிவிட்டது கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தியது. இதை முதலில் அமெரிக்கா மூடி மறைத்தது. அமெரிக்கா இதனால் விலை உயர்வு முப்பது சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது. ஐஎம்எப் 20 முதல் 30 சதம் மட்டுமே கூடியுள்ளது என்றனர். ஆனால் உலக வங்கியின் இரகசிய அறிக்கை 141 சதம் விலை உயர்வில், அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த எரிசக்தி திட்டத்தால் மூன்றில் ஒரு பகுதி விலைஏற்றம் ஏற்பட்டது என்று அம்பலப்படுத்தியது. உண்மையில் இது நடைமுறையில் கூடுதலாக இருந்தது. பொருளாதார கூட்டுறவு மற்றம் வளர்ச்சி அமைப்பின் (OECD) அறிக்கை, இதனால் 60 சதம் விலை உயர்ந்தது என்று அறிவித்தது.
வளர்ந்த நாடுகளின் இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் வளரும் நாட்டு மக்களை பட்டினிக்கு தள்ளிவிடும். ஏற்கனவே அமெரிக்காவில் எக்சான்மொபில்(EXXON MOBIL), ஆர்ச்சர் டேனியல் மிட்லேன்ட்(ADM) கார்கில் கபெனிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளத்தை பயிரிட்டு உயிரி எரிசக்திக்கு வழங்குகின்றன. தற்போது வளரும் ஏழை நாடுகளின் நிலங்களை எல்லாம் வளைத்துப்போடும் தொழில் வேகமாக பரவி உள்ளது. 2006ம் ஆண்டு முதல் இதுவரை 2 கோடி ஹெக்டேர்(20 மில்லியன் ஹெக்டேர்) நிலங்கள் பிலிப்பன்ஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை ஆகியுள்ளது. இது ஜெர்மனியின் மொத்த விவசாய நிலத்தைவிட இருமடங்கு அதிகமாகும். தென்கொரியாவின் தேவூ(DAWOO Logistic) நிறுவனம் ஆப்பிரிக்காவின் மடகாகஸ் நாட்டில் 99 வருட வாடகைக்கு 30 லட்சம் ஏக்கர் வாங்கியது, இதில் உயிரி எரிசக்திகான பயிர்களை பயிரிட திட்டமிட்டு, தற்போது அந்நாட்டு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரட்ஸ், பிலிப்பைன்சில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. எகிப்து உகாண்டாவில் 20 லட்சம் ஏக்கரில் சோளம், கோதுமை விளைவிக்க வாங்கி உள்ளது. சவுதி எத்தியோப்பியாவில் நிலத்தை வாங்கியுள்ளது.
பல நாடுகள் இந்த நிலத்தை வாங்கினாலும் இதில் குறிப்பாக அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே இதில் பெரும் பங்குதாரர்களாக உள்ளனர். அமெரிக்காவின் (Sunlam Óivate equity)நிறுவனம், சவுதி அரசின் zephyr fund நிறுவனமும், பிரிட்டனின் CDC நிறுவனமும் முக்கிய பங்குதாரராகும். இந்த நிலம் வாங்குவதில் அதிக ஆதிக்கம் செலுத்தியது Emergent Assets Management என்று சொல்லக்கூடிய பிரிட்டனின் நிறுவனம். இவை ஆப்பிரிக்காவில் வாங்கியுள்ள நிலத்தில் இவர்கள் எரிசக்தி தயாரிக்க தேவையான தாவர எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் அதிக நிலங்களை வாங்குவதற்கு முக்கிய காரணம் குறைவான விலை குறைந்தகூலிக்கு தொழிலாளர்கள், போக்குவரத்திற்கு சுலபமான கடல்மார்க்கம் ஆகியவையாகும். எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா மேலும் பட்டினியால் சாகும். அமெரிக்கா, ஐரோப்பா எரிசக்தி உபரியில் மிதக்கும்.
இந்த உயிரி எரிசக்தியால் கடுமையான விலை ஏற்றம் மட்டுமல்ல. உலக வெப்பநிலை கூடுதலாகும். உணவு தானியங்களின் பயிரிடும் பரப்பளவு குறையும். அனேகமாக உலகில் “உணவு தானிய இருப்பு” என்ற நிலை மறைந்துபோகும் அபாயமும் உள்ளது.
முன்பேர ஊக வாணிபம்:
விலைஏற்றத்திற்கு இதுவரை கூறிய காரணங்களுக்கு சமமான அளவில், அதைவிட கூடுதலாகவே இந்த முன்பேர ஊக வாணிபம் (Future Trading) பங்கு செலுத்தியுள்ளது. இந்தியா உட்பட வளரும் நாடுகள் நிதி கட்டுப்பாட்டை அகற்றியதும், புதிய நிதியாளர்களை சரக்கு பரிமாற்றத்தில் அனுமதித்ததும், முன்பேர ஊக வாணிபத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. “சந்தை என்பது உற்பத்தியாளர் நுகர்வோர் பேரம் பேசும் இடம் என்ற நிலைமாறி வர்த்தக சூதாடிகளும், நிதிநிறுவனங்களும் குறுகியகாலத்தில் லாபத்தை ஈட்டும் இடமாக மாறியது”.
2007ம் ஆண்டு ரியல் எஸ்டேட் என்ற தொழில் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வீட்டு அடமானமுறை திவாலாகியது. இதனால் நிதி முதலீடு செய்பவர்களும், தரகர்களும் தங்களது நிதி மூலதனத்தை சரக்கு வர்த்தகத்தை நோக்கி அதாவது உணவு தானியங்களை நோக்கி திருப்பிட்டனர். இதனால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்தியாவில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜீன் 30 வரை முன்பேர ஊக வணிகம் 11,15,326.99 கோடி நடைபெற்றது. 2009ம் ஆண்டு இதே காலத்தில் 15,64,114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது. சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4,48,787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர். 2007ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரையை தற்காலிகமாக இந்திய அரசு தடைசெய்தபோது இப்பொருட்களின் விலை 20 சதவீதம் குறைந்தது நினைவிருக்கலாம். இந்த விலையேற்றத்தின் விளைவாக வால்ஸ்ட்ரீட் 130 பில்லியன் டாலரை கூடுதலாக முன்பேர ஊக வாணிபத்தில் முதலீடு செய்துள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மதிப்பீடு செய்துள்ளது .
சிகாகோ, கான்சஸ்நகர், நியூயார்க் ஆகியநகரில் உள்ள சோளம், கோதுமை மற்றும் கால்நடைகளின் 50 சதம் எதிர்கால சந்தையை விலைபேசி முடித்துவிட்டன இந்த வால்ஸ்ட்ரீட் நிதி அமைப்புகள். மற்றொரு அதிர்ச்சிதரும் தகவல், தற்போது உலக கோதுமை சந்தையில் இந்த முன்பேர ஊக வணிகர்கள் 50 முதல் 60 கோதுமைக்கு முன்பணம் சலுத்தியுள்ளனர். உணவு பொருட்களின் வர்த்தகத்தில், “பட்டியல் நிதி”, பட்டியல் வியாபாரிகள் என்ற புதிய வர்த்தககும்பல் உருவாகி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் அடித்திடவும், விலை ஏற்றிடவும் காரணமாக உள்ளன. தேசிய உணவு சேமிப்பு பல நாடுகளில் தனியார்மயமாகி பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு விவசாயிகள் நலன், நுகர்வோர் நலனைவிட முன்பேர ஊகவாணிபமே முன்னுரிமையாக உள்ளது.
சைவமா ? அசைவமா?
உணவு நெருக்கடிக்கும், விலை ஏற்றத்திற்கும் இளைச்சி உணவை சாப்பிடுவது கூடுதலாகி உள்ளது ஒரு காரணம் என்று கூறுப்படுகிறது. எனவே, மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று பொதுவாக போதிக்கப்படுகிறது. ஆனால் இறைச்சி உணவு தேவை இரட்டிப்பாகி உள்ளது உண்மைதான். இதிலும் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிப்பது அவசியமாகும்.
முதலில், உணவு தானியங்களுக்கும், இறைச்சி உணவுக்கும் இடையில் உள்ள எரிசக்தி சமன்பாடுகளை பொருளாதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் எடுத்துக்கூறியுள்ளார். ஒரு கிலோ கோழிக்கறிக்கு இரண்டு கிலோ உணவு தானியங்கள் தேவைப்படுகிறது. கோழிக்கறியிலிருந்து கிடைக்கும் கலோரி 1090-ம் புரதசத்து 250 கிராம் ஆகும். இதற்காக உணவு தானியங்கள் மூலம் செலவாகும் கலோரி 6900ம் மற்றும் புரதசத்து 200 கிராம் ஆகும். இதே போன்று ஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு ஏழுகிலோ உணவு தானியங்கள் மூலமாக 24150 கலோரியும், 700 கிராம் புரதசத்தும் செலவழிக்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் கலோரி 1140-ம், 226 கிராம் புரதசத்தும்தான். ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு மூன்று கிலோ உணவு தானியங்கள் மூலமாக 10350 கலோரியும், 300 கிராம் புரதசத்தும் செலவழித்து, 1180 கலோரியும், 187 கிராம் புரதசத்தும் பெறப்படுகிறது.
அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 1046 கிலோ உணவு தானியம் கிடைக்கிறது. ஐரோப்பாவில் 552 கிலோவும், சீனாவில் 291 கிலோவும், இந்தியாவில் 155 கிலோவும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. பரம ஏழைநாடுகளில் இது 130 கிலோ மட்டுமே. அமெரிக்கர்கள் வருடத்திற்கு ஒரு டன் உணவு தானியத்தை உண்ண முடியுமா? முடியாது. அங்கு நேரடி நுகர்வைவிட மறைமுக நுகர்வான இறைச்சி உண்பதுதான் அதிகம். அங்கு 5ல் 4 பங்கு மறைமுக நுகர்வாக உள்ளது. இன்றைக்கும் உலகில் அதிகமான அளவு உணவுதானியங்கள் நுகர்வது அமெரிக்காதான். 16 சதவீதம் மக்கள் தொகை கொண்ட வளர்ந்த நாடுகள் உலகின் 40 சதவீத உணவு தானியங்களை எடுத்துக்கொள்கின்றன. பிரேசில் அல்லது அமெரிக்காவில் அரைபவுன்ட் மாட்டிறைச்சி பர்கர் ஒருவர் உண்பதை, அதற்காக செலவாகும் தானியம் இந்தியாவில் தினசரி மூன்றுபேர்கள் போதிய எரிசக்தி, புரதசத்தும் பெறும் வகையில் உண்ணலாம்.
எனவே வளர்ந்த நாடுகளின் இறைச்சி உணவிற்காக கூடுதலான தானியங்கள் செலவாகிறது. அங்கும் பெரும் அளவில் இறைச்சி தொழிற்சாலைகளும், அதற்கான கால்நடை பண்ணைகளும் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு உணவு தானியங்களே உணவாகக் கொடுக்கின்றனர். இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் இறைச்சி சாப்பிடுவதில்லையா என்ற கேள்வி எழுலாம், உண்மைதான் இங்கு இறைச்சி உணவு உற்பத்திக்கு உணவுதானியங்களை சார்ந்திருப்பது மிக மிக குறைவாகும். அதற்கு மாறாக இயற்கை புல்வெளிகளைத்தான் அதிகம் சார்ந்து உள்ளனர். இறைச்சி உணவு கணிசமான அளவு வேட்டையாடுதலை சார்ந்து உள்ளது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகள் நவீன இறைச்சி உற்பத்தி முறையை சார்ந்து இல்லை. அதற்க மாறாக ஆதிவாசிகள் உட்பட காடுகளில் விலங்குகளையும், பறவைகளையும், மீன்பிடித்தொழில் மூலமாகவும் கூடுதலான இறைச்சி உணவை பெறுகின்றனர். எனவே இங்கு இறைச்சிக்கான உணவு தானியங்கள் செலவிடுவது மிகமிக குறைவே என்று பட்நாயக் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே இறைச்சி உணவால் விலையேற்றம், அதனால் அதை குறைத்திடவேண்டும் என்ற பொதுவான போதனைகளை புறந்தள்ளி, உணவுதானியங்கள் வளர்ந்த நாடுகளில் உள்ள மக்களின் இறைச்சி உணவுக்கே வாரி இறைக்கப்படுகிறது. அங்கு கால்நடைகளுக்கு கூட உணவுதானிய நெருக்கடி ஏற்படுவதில்லை. வளரும் நாடுகளில் சிறிதளவு பற்றாக்குறையும் விலையேற்றமும் மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளி விடுகிறது.
இந்த உணவு நெருக்கடியும், விலையேற்றமும், சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளையும் பாதிக்கவில்லை. பில்ப்பைன்ஸ் நாட்டில் இக்காலத்தில் 200 சதம் விலை உயர்ந்தபோது சீனாவில் கடந்த ஆண்டைவிட குறைவான அளவில் கட்டுப்படுத்தி வைத்துள்ளனர். தென்கொரியா தனது உணவு சேமிப்பை சந்தைக்கு திறந்துவிட்டு விலை உயர்வை குறைத்தது. ஜப்பானும் இதே நடவடிக்கையில் இறங்கி தனது நாட்டின் விலை உயர்வை தடுத்தது. இதர ஆசிய நாடுகளில் சாத்தியமில்லாது போனது இவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? ஒன்று அவர்கள் தங்களது தேவைக்கு, தன்னிறைவான உணவு உற்பத்தியை வைத்துள்ளனர், இரண்டு உள்நாட்டு உற்பத்தியை முதலில் உள்நாட்டு சேமிப்புக்கு பயன்படுத்தினர், மூன்று இதனால் அவர்கள் சர்வதேச வணிக ஒப்பந்தங்களின் பலமாக செயல்பட்டு தங்கள் நலனை பாதுகாத்துக் கொண்டனர். ஜப்பானில் அரிசியை ஒரு சரக்காக பார்க்காமல் ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்துள்ளனர்.
எனவே, இன்றைய உணவு நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும், விவசாய நிலம் குறைந்து வருவது, வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம் போன்றவற்றின் மீது பழிபோட்டு, பட்டினிச்சாவை நியாயப்படுத்துவது நேர்மையற்ற வாதமாகும். இதற்குப் பின்னால் வளர்ந்த நாடுகளின் ஏகபோக நிறுவனங்களின் நலன்களும், கொள்ளை லாப கொள்கைகளும் அடங்கியுள்ளன. இம்மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உணவு நெருக்கடிகளும், விலை ஏற்றத்திற்கும் பிரதான காரணமாகும். மற்றவை நீண்டகால திட்டத்தில் தீர்வு காணப்படக்கூடிய பிரச்சனைகள். இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் உணவுப்பிரச்சனை முக்கியத்துவம் பெறுகின்றது.
( தொடரும்)
- ஏ.பாக்கியம்