பண்டைக்கால அரசுகள் முதல், தற்கால அரசுகள் வரையிலும் எல்லா அரசுகளும், உணவுக்கு வேண்டிய பொருள்கள் மேல் வரிகளைச் சுமத்தி, அவைகளின் விலையை உயர்த்தி வந்திருக்கின்றார்கள். இத்தியாதி வரிகளை நியாயமென்றே எண்ணி வந்திருக்கின்றார்கள். இந்த வரிகளுக்கு நிலத்தீர்வையென்றும், ஜலத்தீர்வையென்றும், சுங்கத்தீர்வையென்றும் அழைக்கின்றார்கள். இவ்வரிகளை விதித்து வரும் தற்கால அரசுகள் இவ்வரிகள் இயற்கையாக நியாயமானவைகளா? அநியாயமானவைகளா? என்று பகுத்தறிவைக்கொண்டு உணர்ந்தாரில்லை. ஏதோ ஆதிகால முதல் உண்பண்டம், தின்பண்டங்களின் மேல் வரி விதித்து வந்திருக்கின்றார்களாகையால், அந்தப் பழக்கத்தைப் போலவே, அந்தந்த சமயங்கட்கு ஏற்றவாறு பற்பல வரிகளை உணவுப் பொருளின் பேரில் விதித்து வருகின்றார்கள்.
தற்கால ஓர் முனிசிபாலிடியை எடுத்துக் கொள்வோம். எந்தெந்தப் பொருள்களுக்கு வரிகளை விதித்து வருகிறார்களென்பதை சற்று கவனிப்போம். பட்டணங்களில் வரி விதிக்கப்படாத உணவுப்பொருள்கள் யாதொன்றுமில்லை. பால்கொடுக்கும் பசுவுக்கு வரி, பதார்த்தங்களை விற்பதற்கு வரி, அவைகளை விற்கும் தொழிலுக்கு வரி, அவைகளை விற்கும் இடங்களுக்கு வரி, தோசைக் கடை முதல், நெய், சர்க்கரை, மளிகை, உப்பு, வெற்றிலை பாக்கு, சீனி, கற்கண்டு, பிஸ்கட், மிட்டாய், தினைமாவு, தேன் முதலிய சகலவித சொற்ப பண்டங்கட்கெல்லாம் முனிசிபல் வரி விதிக்கப்பட்டு வருகின்றன.
இத்யாதி வரிகளை நேரல்லாத வரிகள் என்று கூறுவார்கள். ஆனால், இவ்வித உண்பண்டம் தின்பண்டங்களின் மேல், நேரல்லாத வரிகளோடு, முக்கிய உணவுகளின் பேரிலும் வரி விதிக்கப்பட்டு வருகின்றன. அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, பருப்பு முதலிய தானியங்களின் பேரிலும் பலவித வரிகளைச் சுமத்தி வருகின்றார்கள்.அரசாங்கத்தாரால் விதிக்கப்படும் இத்யாதி வரிகளும் போதாமல், போக்குவரத்துக்கு வேண்டிய வண்டி, ரயில், கப்பல், தோணி, படகு முதலியவைகட்கு சுமை வரியும் கொடுக்க வேண்டி வருகின்றது. இவ்வரிகளின் அக்கிரமத்திற்கு மேலான ஒரு வரி உண்டு. அவை நிலத்தீர்வை எனப்பெயர். இந்த நிலத்தீர்வை நீர்வரியையும் சேர்ந்தது. விளையும் பொருள்களை விளைவிப்போன் ஒருவன். ஆனால், விளைவுக்கு வேண்டிய உழைப்புக்கு யாதொரு சம்மந்தமுமில்லாதவன், இந்நிலத்தீர்வையைக் கைக் கொள்ளுகின்றான். நிலத்தை இவன் கொண்டு வந்ததில்லை. இந்நிலத்தை ஓரிடமிருந்து, மற்றொரிடத்திற்கு கொண்டு போகவும் முடியாது. கற்ப காலங்களாக, இந்நிலங்கள் இருந்த இடத்திலேயே இருந்து வருகின்றன. மனிதன் உலகில் தோன்றுவதற்கு முன்னமே விளை நிலங்களிலிருந்து வருகின்றன.
இந்நிலத்தை ஆதிகாலமுதல், தற்காலம் வரையில் மனிதனைத் தவிர மற்றெல்லா ஜீவன்களும் பூமியின் மேல் விளையும் பொருள்களை அந்தந்த உயிர்கட்கு வேண்டிய அளவு வரிவிதியா தொன்றுமின்றி அனுபவித்து வந்திருக்கின்றன. ஆனால் மனிதரில் சிலரே இயற்கைக்கு விரோதமாக விளைபொருள்களை யாதொரு உழைப்புமின்றி அனுபவித்து வருகின்றார்கள். இதுதான் அக்கிரமத்திலும் அக்கிரமமான நிலவரி என்பார்கள். பட்சிகள் யாதொரு சட்ட திட்ட நிபந்தனைகளின்றி, விருட்சங்களில் உண்டாகும் கனிகளை உண்டு வாழ்ந்து வருகின்றன. புழு, பூச்சி, வண்டு, புல்லினங்கள் யாவும் தத்தமக்கு வேண்டிய பொருள்களை வரிவிதிப்பின்றி, விளையும் பொருள்களை இலவசமாக உண்டு வாழ்ந்து வருகின்றன. கோடான கோடி வருடங்களாக வரி, சுங்கம் இன்னும் பலவித சுமைகளின்றி, கோடான கோடி உயிர்கள் அனுபவித்துவரும் உணவுப் பொருள்களை, நேற்று உலகில் தோன்றிய மனிதன் ஒருவனே, மக்கள் போதுமான வரையிலும் உண்ணுவதற்கு முடியாமல் வரிச்சுமைகளை மேலும் மேலும் விதித்து வருகிறான். இந்தக் கொடுமை மனிதனைத் தவிர யாதொரு உயிர்களிடமுமில்லை. இது மனிதனால் உண்டாக்கப்பட்ட முதல் கொடுமை.
இந்தக் கொடுமையை விளைவிக்க வேண்டியதற்கு ஏதாகிலும், இயற்கையிலாகிலும், பகுத்தறிவிற்காகிலும் பொருத்தமுளதாவென்று பார்ப்போம். உணவுப் பொருள்களின் பேரில் வரிகளைச் சுமத்தி, அகவிலைகளையும் உயர்த்தி மக்களின் உழைப்பின் பயனையும் குறைத்து, மக்களுக்குப் போதுமான உணவு கிடைக்க வொட்டாமல் செய்வது என்ன தர்ம நீதியென்று கேட்கின்றோம்? முக்கியமாக இந்த வரிச்சுமைகளால், பெரும்பான்மையான மக்கள் பயனடைந்தாலும் ஒருவாராக ஒத்துக்கொள்ள இடமுண்டு. இவ்வரிகளின் பெரும்பான்மையான பயனை சிலர்களே அனுபவிப்பார்களேயாமாகின், இவை எந்த யுக்திக்குப் பொருந்தும்? இவ்வரிகளின் முழுப்பயனும் ராணுவத்திற்கும், உயர்தர உத்தியோகஸ்தர்களுக்கும், அனாவசியச் செலவுகளுக்கும் உபயோகப்பட்டு வருமாயின், இது எவ்வித நியாயத்திற்குப் பொருந்துமென்று கேட்கின்றோம்? ஒரு நாட்டுக்கு வரிகளின் மூலம் 160 கோடி வந்தால், அதில் மூன்றிலிரண்டு பங்கு உணவின் பேரில் விதித்த நேரல்லாத வரியுமானால், அவ்வரியில், 50 கோடி இராணுவச் செலவுக்கும் மூன்று கோடி உணவுப் பொருளபிவிருத்திக்கும் சிலவானால், இவ்வாறாகச் செலவழிப்பதை என்ன மதியீனமென்று நினைப்பது?
உணவுப் பொருள்களின் பேரில் வரிவிதிக்காமல், ராணுவத்தை எவ்விதம் காப்பாற்ற முடியுமென்பார்? அதற்கு, நமது நேரான விடை என்னவென்றால், ராணுவத்தால் என்ன நன்மை என்று கேட்கின்றோம்? ராணுவப்படை இல்லாமல் போமாகிற் தேசமாகிலும், உலகமாகிலும் தலை கீழாகக் கவிழ்ந்து விடுமா வென்றும் கேட்கின்றோம்? வேற்றரசர்கள் நாட்டைப் பிடித்துக் கொள்ளுவார்களென்று எவர் சொல்கின்றார்கள். அதனால் பெரும்பான்மை மக்களுக்கு, தற்கால கஷ்டங்களைவிட வேறு அதிகமான கஷ்டம் என்ன நேர்ந்து விடுமெனக் கேட்கிறோம்? அல்லது தற்கால சுகத்தைவிட, பெரும்பான்மை மக்கள் என்ன அதிகமான சுகத்தைப் பெறுவார்களென்றும் கேட்கின்றோம்? வயிற்றுக்கு எட்டாத உணவு கிடைக்காதிருக்கும் வரையில் இராமன் ஆண்டாலென்ன? அல்லது இராவணன் ஆண்டாலுமென்ன வென்றும் கேட்கின்றோம்.
ராணுவ முதலிய சிப்பந்திகள் தேச தற்காப்பிற்கு இல்லாமற் போமாகில், உள் நாட்டில் குழப்பம், கொலை, களவு முதலிய சச்சரவுகள் உண்டாகுமென்பார்கள். ஏன்? வயிற்றுக்கு உணவு சரி சமத்துவமாக யாவருக்கும் தத்தம் உழைப்பின் பயனாகக் கிடைக்குமாயின், மக்கள் எதற்காக குழப்பம் செய்வார்கள்? இவ்வளவு இராணுவ, சேவக சிப்பந்திகளிலிருந்தும், கொலை, களவு முதலிய உள்நாட்டுக் குழப்பங்கள் ஏன் உலாவுகின்றன? இந்தக் குழப்பங்களை அடக்க எத்தனை சிவில், கிரிமினல் கோர்ட்டுகள்? எத்தனை ஜட்ஜுகள், மாஜிஸ்டிரேட்டுகள்? எத்தனை வெட்டியான், தலையாரிகள்? இவ்வளவெல்லாமிருந்தும், ஒரு நாட்டின் ஜெயில்களில் கொடுங் குற்றவாளிகள் ஆயிரம், பதினாயிரம், லட்சக்கணக்காக அடைபட்டுக் கிடப்பானேன்?
தேச தற்காப்பிற்கு சேனை சிப்பந்திகளும், இராணுவப் படைகளும், கோர்ட்டுக் கச்சேரிகளும், ஜெயில் சப்ஜெயில்களும் அத்யாவசியமென வேண்டுமென்போர் கூறும் கூற்று அறியாமையால் கூறும் கூற்றென அறிக! சண்டையும், போரும், கலகமும், குழப்பமும் உண்டாவதற்கு ஆதி காரணமாக நிற்பது, பொருளாதார வித்தியாசத்தால் என அறிக! ஒருவனுக்கு இருந்து மற்றவனுக்கு இல்லாமையே, எல்லாவித குழப்பங்களுக்கும் காரணகர்த்தாவாக நிற்பதென அறிக! நாட்டிலுள்ள மக்களுக்கெல்லாம் சரி சமத்துவமாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுமாயின், ராணுவ சிப்பந்திகள் ஏன்? கோர்ட்டு கச்சேரிகள் ஏன்? கலக குழப்பங்கள் ஏன்? நாட்டு மக்களது சமூகம் உன்மத்த சமூகமா! ஓரறவு, ஈரறிவு, மூவறிவு, நாலறிவு உடைத்தாயிருக்கும் கீழ்த்தர சீவராசிகள், பல கோடி நூராயிரம் வருடமாக கோர்ட்டு கச்சேரியின்றி, ஜெயில், சப்ஜெயில்களின்றி தத்தம் வாழ்வுக்கு வேண்டிய உணவைப் புசித்துக் கொண்டு இன்று வரை வாழ்ந்து வருகையில், பஞ்சறிவுடைய மனிதன், யாதொரு அடக்கு முறை ஸ்தாபனங்களின்றி தனது சமூக வாழ்க்கையை ஏன் நடத்த மாட்டான்? அதுவல்ல காரணம் பஞ்சறிவுடைய மனித வாழ்க்கையில் ஓர் கொடுங்கோல் திட்டம் புகுந்து கொண்டிருப்பதால் இத்தியாதி கேடும், வினையும் மனித சமூகத்தில் நிறைந்துள! அதுதான் பொருளாதார வித்தியாசத் திட்டமாகும். அதுதான் ஒருவருக்கிருந்தும், மற்றொருவனுக்கு இல்லாதிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்டத்தைக் காப்பதற்கே ஏற்பட்ட சேனை சிப்பந்திகளும், கோர்ட்டுக் கச்சேரிகளும், ஜெயில்களும், அடக்குமுறைகளுமேயல்லாமல் தேச தற்காப்பிற்குமல்ல. உள் நாட்டுக் குழப்பங்களையடக்குவதற்குமல்ல. சரிசமத்துவமாக மக்கள் வாழ்க்கை நடத்துவதற்குமல்ல.
கோடிக்கணக்காக, கோடி வருடங்களாக புழு, பூச்சி, விலங்கினங்கள் யாவும் உணவுப் பொருள்களைத் தடை யாதொன்றுமின்றி உண்டுகளித்து வருவதால், அடக்கு முறைகளும் அடக்குமுறை ஸ்தாபனங்களுமின்றி நீடூழி காலமாக வாழ்ந்து வருவதைப் போல், மக்களுக்கு வரி, சுங்கம் முதலிய கொடிய சுமைகள் இல்லாவிடில், மக்களும் இன்னும் பல்லாயிரம் கோடி வருடம் சுகித்து வாழ்வார்களென்பதற்குச் சந்தேகமில்லை.
மக்கள் வாழ்க்கையில், காலப் போக்கிற்கொத்தவாறு பற்பல நற்பழக்கங்களும், துற்பழக்கங்களும் உண்டாயின. அவைகளில், உணவுப் பொருள்களின் மேல் சிற்சில கற்பனா காரணங்களால் வரி சுமத்தப்பட்டு நாட்டில் வறுமை விளைய நேர்ந்தது. நாட்டிலுள்ள வறுமையையாகிலும், உலகிலுள்ள வறுமையையாகிலும் போக்க வேண்டுமானால், முதலில் உணவுப் பொருள்களின் மேல் ஏறியுள்ள எல்லா வரிச்சுமைகளும் நீங்க வேண்டும். இந்த நியாயம் இவ்வாறிருக்க தற்கால ராஜ்யங்கள், உணவுப் பொருள்களின்மேல் வரிகளைச் சுமத்துவது உன்மத்தமாகுமே யொழிய மதியாகா!
(புரட்சி தலையங்கம் 08.04.1934)