கலைஞர் மு. கருணாநிதி அரசியல் அரங்கில் நிலை பெற்றாலும் கலை இலக்கிய தளத்தில் பன்முக ஆளுமையாகத் திகழ்ந்தவர். அவர் அடிப்படையில் கவித்துவ உள்ளம் படைத்தவர். இந்த இயல்பூக்கப் பரவலை அவரின் ஒட்டுமொத்த வரலாற்றின் இயங்குசக்தி எனலாம். பேச்சு, எழுத்து, நடிப்பு என முத்தளங்களிலும் காலூன்றியவர். எழுத்தில் கவிதை அவரின் வேர். கதை, நாவல், நாடகம், கடிதம், கட்டுரை, பத்தி எழுத்து, ஆராய்ச்சி, உரை, கருத்துப்படம், துணுக்கு, தன் வரலாறு... என எழுத்தின் எல்லா வடிவங்களையும் கைக் கொண்டவர்.

கலைஞரின் தன் வரலாறும், மடல்களும் அரசியல் இயக்கப் பரந்த வெளியால் அதிகக் கவனம் பெற்றன. மேடைகளால், திரைப்படங்களால் பாடல்கள், கவிதைகள் போற்றப்பட்டன. நாடகங்களும், புதினங்களும் பரந்த வாசக ஈர்ப்பால் கொண்டாடப்பட்டன. ஆராய்ச்சியும், உரைகளும் தமிழ் அறிவுலகில் சிறப்புப் பெற்றன. கருத்துப்படங்களும், துணுக்குகளும் கூட இதழியல் உலகில் முக்கியத்துவம் பெற்றன. இவற்றில் தனித்துவிடப்பட்டது சிறுகதைகள் தான்.

தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி வரலாற்றில் காலம் தோறும் பல்வேறு வடிவ, கருத்து நிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உருவம், உள்ளடக்கம் ஆகிய இரண்டிலும் திராவிட இயக்கத்தவரின் பங்களிப்பு உண்டு. கலைஞர் மு. கருணாநிதி பத்திரிகைகளில் குறிப்பாக முரசொலியில் தன் சிறுகதைகளைப் படைத்தளித்தார். சமூக நீதியை மையமிட்டு அவரது கதைகள் அமைந்தன. அவருக்கே உரிய மொழி நடை, எள்ளல், வசன வீச்சு போன்ற உரையாடல் தன்மை, கருத்தியல் தெளிவு அவரின் பெரும்பாலான கதைகளில் புலப்பட்டன. போலியான சமூகத்தை மட்டுமின்றி போலிமைமிக்க தனிமனிதர்களையும் தன் படைப்பில் தோலுரித்தார். குறிப்பாக மேதைமை நிறைந்ததாகக் காட்டிக் கொண்ட இலக்கியவாணர்களை நோக்கியும் அவரின் பேனா சுட்டுவிரல் நீட்டிற்று.karunanidhi 100சிட்டி - சிவபாதசுந்தரம் ஆகியோர் கலைஞரின் சிறுகதைகளைப் பற்றி, “இவருடைய கதைகளில் பல சிறுகதைகள் வடிவ அமைதி கொண்டுள்ளன என்பது தனிச்சிறப்பு.”

 “பொதுவாக கருணாநிதியின் சிறுகதைகள் யாவும் பாத்திர ஒருமை, சம்பவ ஒருமை, உணர்வொருமை என்ற சிறுகதை இலக்கணத்துக்கமைய இருப்பது இந்த ஆசிரியரின் சிறப்பான கைவண்ணத்தைக் காட்டுகிறது” என்பர். (தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், பக்.236 - 237, 2016)

“ஒரு படைப்பாளர் என்ற முறையில் தம் தனிப்பட்ட கண்ணோட்டமும் சமுதாயம் பற்றிய ஆழமான சிந்தனையோட்டமும் விளங்கச் சிறுகதைகளை உருவாக்கியுள்ளார் கலைஞர்” என மதிப்பிடுகிறார் இரா. மோகன் (கலைஞர் தமிழ், 1999; 158.)

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கருத்தியல் மூடநம்பிக்கை ஒழிப்பும் பகுத்தறிவுப் பரப்புதலும். கலைஞரின் எல்லா படைப்புகளிலும் இவை இடம் பெறக் காணலாம். புராண இதிகாசங்களை தன் பிற எழுத்துக்களில் கடுமையாகச் சாடும் கலைஞர், தொன்மக் கருத்து ஒன்றை மறுவாசிப்பு செய்து சிறுகதையொன்றைப் படைத்துச் சாதனை செய்துள்ளார்.

‘தொன்மம்’ எனப்படுவது பழமையானது. வழக்கொழிந்து போனது. ஆனால் ஆழ்நினைவில் கொண்டாடப்படுவது. புராணத் தொன்மங்கள் மக்கள் வாழ்வில் நீங்கா இடம் பெற்றவை. கால வளர்ச்சியில் இத்தகுத் தொன்மங்களை குறுக்கீடு செய்து மறு படைப்பாக்கம் செய்ய படைப்பாளிகள் முயல்வர். புதுமைப்பித்தன் அகலிகை தொன்மத்தை தன் சிறுகதையில் ‘சாப விமோசனமாக’ மறு படைப்பாக்கம் செய்திருப்பார். அப்படி கலைஞர் ‘நளாயினி’எனும் தொன்மத்தைத் தன் சிறுகதையில் மீளப் படைத்து புரட்சி செய்கிறார்.

கலைஞரின் நளாயினி சிறுகதையில் அவர் நளாயினியை அறிமுகப்படுதுகின்றார்:

“அழகான பெண். ஒளிமுகம் படைத்த உருக்குலையா மங்கை, வெள்ளை உடையால் அவள் நடைக்கு அழகு சேர்க்கிறாள். சிவந்த கழுத்திலே ஒரு கறுப்பு மணிமாலை. அந்தக் கோதி முடிந்த கூந்தலையுடைய கோதை - தலையிலே ஒரு கூடையுடன் தெருவிலே போகிறாள்.”

சரி. கூடையில் என்ன இருக்கிறது “அந்த ஜோதி மழை பொழியும் சொர்ணச் சிலையின் தலையிலே கூடை; கூடையிலோ, துர்வாடை! ஆமாம் அழகியின் தலையில் ஓர் அழுகிய உருவம்.”

கூடையில் இருப்பவரை அறிமுகப் படுத்துகிறார் கலைஞர்:

“தனக்கென உரிய உடலில் கால் பாகத்துக்கு மேல் இழந்துவிட்ட மனிதன்; மகரிஷி! மௌத்கல்யர் என்னும் பெயருடைய மகான். ‘பெரிய’ மனுஷன், ‘பெரிய’ ஆள். ‘பெரிய’ செல்வந்தன், ‘பெரிய’ பண்ணையார் என்பது போலப் ‘பெரிய’ வியாதி என்று ஒன்று உண்டே! அந்தப் பெருவியாதியால் பீடிக்கப்பட்டவர் அந்தப் பெரிய மாகன்”.

நளாயினியை வேகமாக நடக்கவும் சொல்கிறான். கீழே போட்டுவிடக்கூடாது எனவும் முனிவன் எச்சரிக்கிறான். நளாயினி மறுமொழியாகக் கலைஞர் எழுதுகிறார்:

“என் தெய்வமே! என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்? என் கூடுவிட்டு ஆவி போனாலும் கூடையைக் கீழே போடமாட்டேன். கூடையிலென்ன வியாபாரப் பொருளா இருக்கிறது? வீட்டுச் சாமானா தூக்கிச் செல்கிறேன்! விலை மதிக்கவொண்ணா என் ரத்தினமல்லவா தாங்கள்! தங்களையா கீழே போட்டு விடுவேன்! அபச்சாரம்! அபச்சாரம்!" அடுத்து. நளாயினி முனிவரை, தன் மணாளரைக் கூடையில் சுமந்து செல்லும் இந்தப் பயணம் எதற்காக? கலைஞர் வினா எழுப்பி விடைகளை அடுக்கி இப்படி முடிக்கிறார்.

“தவம் புரியவுமல்ல! தலம் காணவுமல்ல! பிறகு எங்கே போகிறார் தபோதனர்? தாசி வீட்டுக்குப் போகிறார்! ஏன்? ‘வேசித் தொழில் கூடாது! காசிநாதனைத் தொழு!’ என்று போதனை புரிவதற்காகவா? அதற்காகவும் செல்லவில்லை. அந்த குஷ்டரோகி, பரத்தையின் வீட்டை பக்திக் கூடமாக்க அல்ல! பகவான் பற்றிய விளக்கமுரைக்க அல்ல! கமண்டலமேந்தியார் செல்வது கணிகையின் கட்டிலறைக்கு! முனிவரின் மோகம் முக்கண்ணனைக் காண அல்ல! நான்கு கண்களும் சந்திக்க அந்த நயனலலிதத்தை வந்திக்க!”

நளாயினியின் இளமையை, அழகை வாசகர் கண்முன் நிறுத்துகிறார்:

“பூத்திருக்கும் ரோஜா! அந்த ரோஜா, அழுகிப் போன வண்டை கருகிப் போன ஒரு மலரிடம் எடுத்துச் செல்கிறது.”

ரோஜா, அழுகிப் போன வண்டு, கருகிப்போன மலர்... அடடா எத்தனை நயம்?

நளாயினியின் காட்சிச் சித்திரம்.

“வானவில்லோ! என்பர் வர்ணனையாளர் அருகே இருந்தால்!” “மான் துள்ளுமா இப்படி! என்பவர் ஏடெழுதுவோர்!” “ஒரு விநாடி அப்படியே வளைத்து நில் போதும். உலகை விலையாகக் கேட்கும் ஓவியம் தீட்டுகிறேன்” என்பான் சித்திரக்காரன் அருகே நின்றால்!

இப்படி இச்சிறுகதை முழுக்க எள்ளலும் துள்ளலும் சமூக விமரிசனமும் கரிசனமும் விரவிக் கிடக்கின்றன.

நளாயினி எனும் தொன்மம்

நளாயினி மகாபாரதத்தில் வரும் ஒரு கதாபாத்திரம். கற்புக்கரசியாகப் புராணக் கதைகளில் சித்தரிக்கப்படுகிறாள். தொழுநோயாளியாகிவிட்ட தன் கணவனைக் கூடையில் சுமந்து வேசியிடம் எடுத்துச் சென்றாள். அப்போது திருட்டுக் குற்றம் சாட்டப் பெற்ற மாண்டவ்யர் என்ற முனிவர் கழுவிலேற்றப்பட்டிருந்தார். நளாயினியின் கூடை நுனி கழுவிலே இடிக்க வலியால் துடித்த மாண்டவ்யர், ‘சூரியன் உதித்தால் உன் கணவர் உயிர் துறப்பான்’ எனச் சாபமிடுகிறார். உடனே நளாயினி ‘இனி சூரியன் உதயமாகவே கூடாது’ என மறு சாபம் இடுகிறாள். உலகம் இருண்டு போகிறது. மன்னன் மாண்டவ்யரிடம் வேண்டி, தண்டனையை நீக்குகிறான். மக்கள் நலன் வேண்டி, சூரியனை உதிக்கச் செய்ய முனிவர் நளாயினியிடம் வேண்டுகிறார். நளாயினி தன் சாபத்திலிருந்து சூரியனை விடுவிக்கிறாள். இப்படிப் பல கதைகள் உண்டு. கற்பு, பத்தினித்தன்மை, பதிவிரதை போன்றவற்றுக்கு நளாயினியை இலக்கணச் சான்றாக்குவது வழக்கம்.

கலைஞரின் நளாயினி

‘குஷ்டரோகக் கணவனைக் கூடையிலே சுமந்து தாசி வீட்டுக்கு அழைத்துச் சென்ற கற்புக்கரசி!’ என்பதுதான் நளாயினி பற்றிய வளமையான சித்திரம். இதனை தன் புதிய எண்ணமெனும் வலிமை கொண்டு உடைத்து நொறுக்குகிறார் கலைஞர்.

நளாயினி, தன் குஷ்டரோகி கணவனைத் தாசி வீட்டுக்குக் கூடையில் வைத்து தூக்கிச் செல்கிறாள். அவனின் கடுமையான ஏச்சுக்கும் பேச்சுக்கும் பதில் பேசாது அமைதி காக்கிறாள். அவனைப் போற்றித் துதிக்கிறாள். இதனால் உலகோர் பார்வையில் அவள் ‘கற்புக்கரசி’ ஆக்கப்பட்டாள். ஆனால் இக்கதையில் இவற்றுக்கான காரணங்களை மறுமொழிகளாக தன் நெஞ்சோடு பேசுவது போல ‘இதயா’ எனும் கற்பனைத் தோழிக்கு நளாயினி உரைப்பதாக கலைஞர் படைத்துக் காட்டுகிறார். ஒரு வகையில் ‘இதயா’ நளாயினியின் கற்பனைப் பிரதிதான். நளாயினியின் உண்மைக் குரல்:

“குஷ்டரோகம் பிடித்தவனோடு கூடிக்கிடக்க எனக்கு விருப்பமில்லை. அவனோ என்னை ஆசையோடு அழைக்கிறான். அணைக்கவோ என் கை நடுங்குகிறது. ஆகவேதான் அவனை தாசி வீட்டுக்கு அனுப்பினேன். என் அழகுக்கு ஆபத்து வராமல் அவன் ஆவல் தீர்ந்தால் சரியென்று எண்ணினேன். இந்தத் தந்திரம் உனக்குத் தெரியாதா, இதயா?....”

“தலையில் தூக்கிக் கொண்டு போனேன் என்கிறாயே நீயும்! திருத்திக் கொள்; கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக்கொண்டு போனேன். குஷ்டரோகியைக் கையால் தொட்டு தலையில் தூக்கிப் போக எனக்கென்ன பைத்தியமா? அதெல்லாம் ஜாக்கிரதையாகக் கூடையில் வைத்துத்தான் கொண்டு போனேன்” (ப. 17)

“கணவன் திட்டினான். நான் மறுமொழி பேசவில்லை. உண்மைதான்! குஷ்டரோகி தானே திட்டுகிறான் என அலட்சியப்படுத்தினேன். நானும் அவனுடன் பேசினால் பேச்சு வளரும். அந்த வாதத்தின் காரணமாக அவனோடு நெருங்கி நின்று வார்த்தையாட வேண்டும். அதற்காகத்தானடி, அந்தக்குஷ்டம் பிடித்தவன் குரைத்துக் கொண்டிருக்கட்டும் என்று விட்டேன்” (பக். 17 - 18)

என்று நளாயினி தன் குஷ்டரோகக் கணவன் மௌத்கல்யரை வேசியர் வீட்டிற்குக் கூடையில் சுமந்து சென்றதற்கும், அவனின் இழி சொற்களுக்குப் பதிலுரைக்காததற்கும் உளவியல் அடிப்படையில் உண்மையை உரக்கச் சொல்வது போல் அமைந்து புதுப்பாதைக் காட்டுகிறார் கலைஞர்.

 சரி, இச்சிறுகதை இதை மட்டுமா சொல்கிறது. பெண்ணின் பாலியல் விழைவை - உரிமையை உடல் அரசியலையும் முன்வைக்கிறது.

 “உம்..எப்படியோ பத்தினி என்ற பட்டம் பெற்று விட்டாய். பார் புகழும் பதிவிரதை - பதிபக்தி மிகுந்தவள் என்றெல்லாம் உலகா புகழ்ந்து விட்டாள் உன்னை!”

என்கிறாள் இதயா.

 நளாயினியோ “உலகாவுக்கு என்னடி தெரியும் என் உள்ளத்தில் இருக்கும் எரிமலை? பத்தினிப் பட்டம் போதுமா? பருவக்களை சொட்டும் இந்தப் பரிதாபத்துக்குரியவளுக்கு சொல்லடி இதயா! சொல்லு! சுகவாழ்வுக்கு வழி சொல்லு!” எனக் கதறுகிறாள்.

“வழி சொல்கிறேன் - நளாயினி! நான் ஒரு புதிய வரம் தருகிறேன். இந்த ஜென்மத்தைச் சீக்கிரம் கழித்து விட்டு விரைவில் அடுத்த ஜென்மம் எடு! அந்த ஜென்மத்தில் நீ திரெளபதியாகப் பிறக்கப் போகிறாய்! ஒரு கணவன் இருந்தும் உனக்கு உற்சாகம் இல்லை. உல்லாசமில்லை. உள்ளமோ வேதனைக் களமாய் இருக்கிறது உனக்கு! ஆகவே அடுத்த பிறவியில் ஐந்து கணவரோடு ஆனந்த வாழ்வு வாழ அருமையான வரம் தருகிறேன்” (ப.18).

 இது புதுமை. பெண்ணின் உடலிய தேவையை வெளிப்படையாகப் பெண்ணே பேசுவதும், புராணக் கதைப்படியே அதற்குத் தீர்வைத் தருவதும் கலைஞரின் சிந்தனைத் திறன். ‘புராணக் கதைப்படி நளாயினிதான் திரெளபதியாக பிறந்திருக்கிறாளாம்’ எனவும் முடிவுக் குறிப்பில் தருகிறார் கலைஞர்.

 இக்கதை மிக நேர்த்தியாக, அழகியலோடு அமைந்துள்ளது. நளாயினியை வர்ணிப்பது, முனிவரை ஏளனம் செய்வது.... எல்லாமே கலைஞரின் கலையாற்றல். கதை ஒரு பகுதி இயல்பாக வளமையானச் சிந்தனை போக்கில் செல்வது போல அமைந்துள்ளது. நளாயினியை வியக்கும் உலகா (உலகம் - சமூகம்), அவளை கற்புக்கரசியாகக் கட்டமைக்கிறாள். பின் அவளே தன் காதல் இணையோடு களிப்புறுகிறாள். நளாயினி அவதியிறுகிறாள். இதயா (தனியள்) எனும் தன் மனப் பிரதிமையுடன் உரையாட ‘புதுவெடிப்பு’ உருவாகிறது. இந்த இரண்டு காட்சிக் கட்டமைப்பு வழி வாசக மனதில் பழமைக்கும் புதுமைக்குமான முரணை, பகையை மிக இயல்பாக கலைஞர் பதிவு செய்து விடுகிறார்.

 சரி கலைஞருக்கு முன் புதுமைப்பித்தனின் ‘சாப விமோசனம்’ அகலிகையை மீட்டுருவாக்கம் செய்து புகழ் பெற்றது. ‘கற்பு’ என்பது கற்பிதம் என்பதை அவரின் ‘பொன்னகரம்’ உரத்துச் சொன்னது. இவை இரண்டும் பெண் விடுதலை நோக்கில் கொண்டாடப்பட்டன. பின்னர் ஜெயகாந்தனின் ‘அக்னிப்பிரவேசம்’ அதே காரணத்தால் புகழ் பெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையில் தேர்ந்த கருத்தியல் - கலையில் தன்மைகளுடன் கலைஞரால் படைக்கப்பெற்ற ‘நளாயினி’ ஏன் தமிழ்ச் சிறுகதை உலகில் கண்டுகொள்ளப்படவில்லை? என்பது நியாயமான கேள்வி.

நளாயினி என்கிற புராணத்தை - தொன்மக் கற்பிதத்தை எதிர்ப்பது என்பதைக்காட்டிலும், இதன் வழியாகக் கட்டமைக்கப்பட்ட ஆணாதிக்கத் தகர்ப்பு என்பதுதான் கலைஞரின் நோக்கம் எனலாம். ‘கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன்’, ‘சாண்பிள்ளை ஆனாலும் ஆண்பிள்ளை’, கொழுநன் தொழுதெழுவாள், ‘பதிவிரதை’ ‘கற்புக்கரசி' என்ற புனைவுகளை பெண்களுக்கு ‘கற்பு’ என விதித்திருக்கும் சமூகத்தைக் கேள்வி கேட்கிறது இக்கதை. ஆணின் பாதி, ஆணுக்காகவே படைக்கப்பட்டவள் பெண் என்பதை மறுத்து பெண்ணும் ‘மனுஷி’, அவளுக்கும் உணர்வுகள் உண்டு என நளாயினி எனும் தொன்மத்தை மீட்டுறுவாக்கம் செய்கிறார் கலைஞர்.

“மொழி, அதிகாரம், சுயமரியாதை, கலை இலக்கிய வடிவங்கள், திரைப்படங்கள் எல்லாம் ஒன்றிணைந்து அரசியலில் ஒரு தனித்துவமான அதிர்வுகளை அளிக்கும் ஒரு மாநிலத்தில் கருணாநிதியின் வாழ்க்கை நவீன தமிழகத்திற்கான ஒருவித இயல்பான உருவகமாக மாறிவிட்டது. எப்படி திராவிட இயக்கம் தமிழகத்தில் இயல்பாகவே எழுச்சி பெற்றது என்பதை அறிந்து கொள்ள அவரது பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை உதவுகிறது!” (கலைஞர் மு.கருணாநிதி வரலாறு, ஏ. ஏஸ். பன்னீர் செல்வன், 2021: 27-28)

திராவிட இயக்க எழுத்துக்களைப் புறக்கணிப்பது சமகால இலக்கிய வரலாற்றில் நேரத்தான் செய்தது. நவீன இலக்கியவாணர்கள் மொழிதல் முறையையும் உள்ளடக்க வீச்சையும் கண்டு முகங்சுழிக்கவே செய்தார்கள். “நவீன இலக்கிய உலகத்தின் உரையாடல்களில் எப்போதும் இத்திராவிட இயக்கச் சிறுகதையாளர்களின் பெயர்கள் இடம்பெறுவதே இல்லை. ஏனெனில் இவை பிரச்சாரத்துக்காக எழுதப்பட்டவை என்பதால் என்பார்கள். சொந்த நாட்குறிப்புகளைத் தவிர மற்ற எல்லா எழுத்துக்களும் பிறர் வாசிப்பதற்காக எழுதப்படுபவை என்கிற போது பிரச்சாரம் என்று தனியாக ஒன்று எங்கே இருக்கிறது. ஒரு வாசகத்துக்கும் உருகாதார் திருவாசகத்துக்கு உருகுவார் எனப்படும் பக்தி இலக்கியங்களிலிருந்து எல்லாமே பிரச்சாரம் தான். எழுதப்பட்ட கதை அதற்குண்டான வடிவ அமைதி பெற்றிருக்கிறதா என்று பார்க்கலாம். பிரச்சாரம் என்று முத்திரை குத்தி வாசிக்காமலே புறக்கணிப்பது அரசியல் தான்”என்பார். (ச. தமிழ்ச்செல்வன், தமிழ்ச்சிறுகதைகளின் தடங்கள், 2022:513)

‘கையெழுத்துப் பிரதியில் தொடங்கி, கல்வெட்டுப் பிரதியாக வாழ்க்கையைச் செதுக்கிக் கொண்டவர் கலைஞர். தமிழுக்காக இவர் தலைகொடுத்த தண்டவாளத்தின் மேல்தான் திராவிட இரயில் ஓடிக் கொண்டிருக்கிறது’ என்பார் பிரபஞ்சன் (கலைஞர். 75; 7.6.9.8, கல்கி)

இது அரசியலுக்கு மட்டுமல்ல திராவிட இலக்கியத்துக்கும் பொருந்தும். தமிழ்ச் சூழலில் திராவிட அரசியல் கவனம் பெற்ற அளவுக்கு திராவிட இலக்கியம் விவாதிக்கப் பெறவில்லை. கலை இலக்கியம் எனும் பண்பாட்டுப் பலகனி வாயிலாக ஆட்சியதிகாரத்தையே கைப்பற்றிய ஓர் இயக்கத்தின் அடித்தளத்தை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது. கருத்து, உணர்ச்சி, கற்பனை, வடிவம் சார்ந்து ஆராய்ந்திட வேண்டும்.

மாற்று அழகியலை, கருத்தியலை கலை இலக்கிய வடிவங்களில் ‘அரசியல்’ புரிதலோடு வெளிப்படுத்தியது திராவிட இயக்கம். புத்திலக்கியங்களில் அதன் செல்நெறிகளை, செல்வாக்கை இந்தத் தருணத்திலாவது கணக்கிட வேண்டும். அதற்கு கலைஞர் நூற்றாண்டு களம் அமைக்கட்டும்!

- இரா.காமராசு, பேராசிரியர், தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Pin It