உயரும் புவி வெப்பத்திற்கு இடையிலும் உயிர்த்துடிப்புடன் வாழும் புதிய ஆழ்கடல் பவளப்பாறைக் கூட்டத்தை இதுவரை ஆராயப்படாத காலப்பெகோஸ் (Galapagos) கடல்வளப் பாதுகாப்பு பகுதியில் (Marine Protection Area MPA) ஆழ்கடலில் மூழ்கி பயணம் செய்யும் வசதியுடைய வாகனத்தில் (Human Occupied Vehicle HOV) பயணம் செய்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை வரைபட வசதி ஏற்படுத்தப்படாத வளைகுடாவின் மத்திய பகுதியில் உள்ள கடல் மலைகளின் சிகரங்களை 6500 மீட்டர்/1970 அடி ஆழத்தில் ஆராய்ந்து கொண்டிருந்தபோது பல உயிரினங்கள் ஒன்று சேர்ந்து வாழும் புதிய பவளப்பாறைத் திட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சாதனையளவு புவி வெப்ப உயர்வு மற்றும் அதிகரிக்கும் கடல் அமிலத் தன்மையால் உலகில் மற்ற இடங்களில் பவளப் பாறைகள் அழிந்து கொண்டிருக்கும்போது ஆரோக்கியமான பவளப் பாறைகள் பாதகமான சூழ்நிலையை சமாளித்து வாழ முடியும் என்ற புதிய நம்பிக்கையை இக்கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு ஏற்படுத்தியுள்ளது.coral reefஅரிய உயிரினங்களின் வியக்க வைக்கும் காட்சி

சூழல் பாதுகாப்புத் திட்டங்களின் திறம்பட்ட செயல்பாடு, பலன் தரும் மேலாண்மையால் அழியும் உயிரினங்களைப் பாதுகாக்கலாம் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இங்கு பிங்க் நிற நீராளிகள், வௌவால் மீன்கள் (bat fish), குந்து இரால் (Squat lobster), பல இன ஆழ்கடல் மீன்கள், சுறாக்கள், கதிர் மீன்கள் மற்றும் பல உயிரினங்கள் வாழ்கின்றன என்று இந்த ஆழ்கடல் ஆய்வுப் பயணத்தின் இணைத் தலைவர் மற்றும் எசெக்ஸ் பல்கலைக்கழக கடல் உயிரியலாளர் டாக்டர் மிஷைல் டைலர் (Dr Michell Taylor) கூறுகிறார்.

இருவர் மட்டுமே பயணம் செய்யும் வசதியுடைய ஆல்வின் (HOV Alvin) என்ற இந்த ஆழ்கடல் மூழ்கு ஆய்வு வாகனம் 600 மீட்டர் ஆழம் வரை பயணம் செய்யக் கூடியது.

இந்த வாகனத்தின் தானியங்கிக் கைகள் பவளப்பாறைகளில் குளிர்ந்த நீரால் சூழப்பட்ட கூடை நட்சத்திர வகை (basket star) உயிரினங்கள், கடல் முள் எலிகள் (seayuchins), குந்து இறால், கடின ஓடற்ற பாலிப்ஸ் (polyps) என்ற பூ போலத் தோன்றும் பவளப் பாறைகளில் காணப்படும் உயிரினங்களான அனெமனிஸ் (anemones) போன்ற பல ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகளை சேகரித்தது. இது ஊக்கமளிக்கும் செய்தி என்று ஈகுவேடார் நாட்டின் சூழல் அமைச்சர் ஹோசே அண்டோனியோ டாவலோஸ் (Jose Antonio Davalos) கூறுகிறார். காலப்பெகோஸ் தீவுக் கூட்டம் ஈகுவேடார் நாட்டிற்குச் சொந்தமானது.

புதிய கடல்வளப் பாதுகாப்பு பகுதி

வடபகுதியில் உள்ள பனாமா, கோஸ்ட்டரிக்கா, கொலம்பியா நாடுகளுடன் இணைந்து புதிய பிராந்திய கடல் பாதுகாப்புப் பகுதியை உருவாக்கும் முயற்சியில் ஈகுவெடோர் இப்போது ஈடுபட்டுள்ளது. டைலர் மற்றும் ஈகுவெடோர் சார்ல்ஸ் டார்வின் அறக்கட்டளையைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் ஸ்டூவர்ட் பேங்க்ஸ் (Dr Stuart Banks) ஆகியோரால் இயக்கப்பட்ட இந்த வாகனம் உயர் தொழில்நுட்பத்திறன் பெற்ற மாதிரி சேகரிக்கும் ஆற்றல் மற்றும் உயர் 4K காணொளி பிம்பமாக்கும் திறன் (4K video imaging system) உள்ளிட்ட படமெடுக்கும் நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டது.

இந்த ஆய்விற்கு முன்பு காலப்பேகோஸ் வளைகுடாவின் வட கோடியில் இருக்கும் டார்வின் தீவின் வடக்கில் உள்ள வெலிங்டன் தீவில் மட்டுமே 1982-83ல் ஏற்பட்ட எல் நினோ என்னும் கடல் நீரோட்ட மாறுதல் நிகழ்வால் பாதிக்கப்படாத ஆழ்கடலில் தேங்கியிருக்கும் நீரில் வாழும் பவளப் பாறை உயிரினங்கள் வாழ்கின்றன என்று கருதப்பட்டது.

பல ஆண்டு பழமை

காலப்பெகோசின் கடல் பாதுகாப்பு பகுதியில் ஆழ்கடலில் இங்கு மட்டுமே காணப்படக் கூடிய செழுமை மிக்க பல ஆழ்கடல் உயிரினங்களை வாழ வைக்கும் இந்தப் பவளப் பாறைத் திட்டுகள் பல நூறாண்டுகளாக இங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சுரங்கத்திற்குள் வழிகாட்டும் கனெரிப் பறவை போல (a canary in the mine) இங்கு வாழும் பவளப் பாறைகள் உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. காலநிலை மாற்றத்தை சமாளித்து வாழும் இவற்றின் திறன் சூழல் சீர்கேட்டிற்கு எதிரான மனித குலத்தின் போராட்டத்திற்கு உதவும். இது கடல் பாதுகாப்பு பகுதிகளில் நடைபெறும் கார்பன் சுழற்சி மற்றும் மீன் வளம் குறித்து புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். உலகின் மற்ற பகுதிகளில் ஆழ்கடல் பவளப்பாறை திட்டுகள் மனிதனால் இன்னும் ஆராயப்படாமல் இருக்கலாம்.

எல்லைகள் தாண்டி கடல்வளப் பாதுகாப்பு பகுதி

ஹெர்மென்டாட் (Hermandad) என்ற புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கடல்வளப் பாதுகாப்புப் பகுதி ஈகுவெடோர் கடற்பகுதியில் இருக்கும் கடல் மலைத்தொடர்களையும் கோஸ்ட்டரிக்காவில் உள்ள கோகோ (Coco) தீவில் உள்ள தேசியப் பூங்காவையும் இணைக்கிறது. இது இப்பகுதியின் கடல் உயிர்ப்பன்மயத் தன்மையை பாதுகாக்க உதவும் என்று நம்பப்படுகிறது.

வலசை செல்லும் பாதைகள்

கடலுக்கு அடியில் இருக்கும் மலைகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வலசை செல்லும் பாதைகள். இவை அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். ஆழ்கடல் பகுதி எண்ணற்ற கடல் உயிரினங்களின் தீவனப் பகுதி. இவை மிதமிஞ்சிய மீன் பிடித்தலால் அழிந்து விடக்கூடாது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர். 2030ம் ஆண்டிற்குள் 30% கடற்பரப்பை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் சமீபத்திய மாண்ட்ரீல் உலக கடல் சார் உயிர்ப் பன்மயத்தன்மை மாநாட்டில் எடுக்கப்பட்ட 30x30 என்ற திட்டத்தின் மற்றொரு திருப்புமுனை இது என்று கருதப்படுகிறது.

ஆர்வி அட்லாண்டிஸ்

ஆல்வின் என்ற இந்த வாகனம் அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமானது. தேசிய ஆழ்கடல் ஆய்வுத்திட்ட அமைப்பினா நிதியுதவி செய்யப்படும் இது யு எஸ் அறிவியல் அறக்கட்டளையின் ஒரு பகுதி. இந்த வாகனம் வுட்ஸ் ஹோல் கடல் ஆய்வுக் கழகத்தால் (Woods Hole Oceanographic Institution WHOI) இயக்கப்படுகிறது. யு கே இயற்கைச்சூழல் ஆய்வுக் கவுன்சில் அமைப்பும் இதற்கு நிதியுதவி செய்கிறது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான வுட்ஸ் ஹோல் கழகம் இயக்கும் ஆர்வி அட்லாண்டிஸ் (RV Atlantis) என்ற மற்றொரு ஆழ்கடல் மூழ்கு கலனில் நடைபெறும் 2023 பன்னாட்டு விஞ்ஞானிகளின் காலப்பெகோஸ் ஆழ்கடல் ஆய்வுப்பயணத் திட்டக் குழுவில் டைலர் மற்றும் பேங்க்ஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதியுடன் செயல்படுத்தப்பட்டால் கடலின் மழைக்காடுகள் என்று அறியப்படும் பவளப் பாறைகள் காப்பாற்றப்படும் என்பதற்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஆழ்கடல் ஆய்வுகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள விஞ்ஞானிகளுக்கு இக்கண்டுபிடிப்பு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கோள்: https://www.theguardian.com/environment/2023/apr/18/scientists-discover-pristine-deep-sea-galapagos-reef-teeming-with-life?CMP=Share_AndroidApp_Other

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It