உலகில் மிகவும் பழமையான நோய், பசி என்னும் கொடிய நோய். ”பசிப்பிணி” என்றே சொல்கிறது சங்க இலக்கியம். அரசுமுறை அமைந்த பிறகு, மக்களின் பசியைப் போக்க அரசு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருகிறது. உறுபசியும் ஓவாப்பிணியும் இல்லாததுதான் நாடு என்கிறார் வள்ளுவர்.

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைவதற்கு மொழியுணர்வு சார்ந்த தமிழ்த்தேசியம் முக்கியக் காரணங்களில் ஒன்றாக அமைந்தாலும், பொருளாதாரம் சார்ந்து மக்களின் பசி என்னும் பிரச்சினையைக் கையில் எடுத்ததும் துணைக் காரணியாகும். ரூபாய்க்கு ஒரு படி அரிசி என்ற வாக்குறுதியோடு மக்களிடம் சென்றவர் அண்ணா.

karunanidhi and anna 494இந்திய உணவுக் கழகமே அந்நாட்களில் நெல் கொள்முதலைச் செய்து வந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டிற்கான அரிசி ஒதுக்கீட்டினைச் செய்யாமல் புறக்கணித்தது ஒன்றிய அரசு. இந்நிலையில் உணவுக் கழகத்திற்கு நிகராகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைத் தொடங்கினார் கலைஞர். விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் பணியினை வாணிபக் கழகமே மேற்கொண்டது. 1996 ஆம் ஆண்டு, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதைத் தேர்தல் அறிவிக்கையில் அறிவித்தவாறு செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவர் கலைஞர்.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கியபோது, பசியைப் போக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கொள்கையின் அடிப்படையில்தான் அத்திட்டத்தைத் தொடங்கியதாகக் கலைஞர் குறிப்பிடுகிறார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4ஆம் நாள் நடந்த ‘காந்தியடிகள் - வள்ளலார்’ விழாவில் கலந்து கொண்டு இதைப் பேசியபோது மேலும் சில முக்கியமான செய்திகளைக் குறிப்பிடுகிறார் கலைஞர்.

வள்ளலாரின் புராண, சாஸ்திர எதிர்ப்பைக் குறித்தும் அவ்விழாவில் பதிவு செய்யும் கலைஞர், சாதி சமய வேறுபாடுகள் கூடாதென்றும், எவ்வுயிரையும் தம்முயிர் போல் நினைக்கும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டுரிமையைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வள்ளலார் கொள்கைகளின் சிறப்பினைக் குறித்துப் பேசுகிறார். ஆனால் இதற்கெல்லாம் நேர் எதிரியான சனாதனத்தைத் தூக்கிப் பிடித்தவர் வள்ளலார் என்று பேசித் திரியும் அறிவிலிகளும் இப்போது உளர்.

வள்ளுவரையும், வள்ளலாரையும் பார்ப்பனிய ஒழிப்பு வரலாற்றில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது திராவிட இயக்கம் மட்டுமே. வரலாறு அறிந்தவர்களுக்கு இது தெரியும், வம்பளக்க வந்தவர்களுக்கு அல்ல.

- வெற்றிச்செல்வன்

Pin It