தற்போது உள்ள பருவ மாற்று பிரச்சினைகளுக்கும், பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் அவர்களின் உணவுத் தேவைகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகள் உடல்நலத் தேவைகளை சந்திப்பதில் சிறு தானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன. குறிப்பாக குறிகிய காலத்தில் வளம் குன்றிய இடங்களில்கூட சிறு தானியங்களை அதிகளவில் சாகுபடி செய்து நமது பல நடைமுறை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் காணவும் மற்றும் நமது வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்குள் அடையச் செய்ய முடியும் என்பதில் சந்தேகமில்லை. நமது முன்னோடி விவசா­யிகள், தொழில்முனைவோர் இனப்பெருக்க நிபுணர்கள் மற்றும் விரிவாக்கப் பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உற்பத்தி தேவைகளைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண் மற்றும் சார்ந்த வளர்ச்சித் துறைகள் வாயிலாக அதிகளவு மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி தற்போதைய மற்றும் எதிர்கால உணவுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது அவசியம்.

கடந்த சில வருடங்களாக உலகம் முழுவதும் சிறுதானியங்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் பெருக்கம், அவற்றின் சந்தை தேவைகள், மேற்கொள்ள வேண்டிய புதிய மதிப்புக் கூட்டல் மற்றும் தேவைப்படும் விரிவாக்க முயற்சிகளைப் பற்றிய விவாதம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அண்மையில் வெளியான ஐக்கிய நாடுகளின் கணக்கீடுகள்படி உலக முழுவதும் மக்கள்தொகையின் பெருக்கம் 2100ல் 10 பில்லியன் என்ற அளவை எட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 40% பயிர் இழப்புகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் ஏற்படுகிறது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பருவமாற்று பிரச்சினைகள் (Climate change issues), குறைந்து வரும் உயிரினப் பன்மையம் (Loss of biodiversity), அதிகளவில் ஏற்பட்டுள்ள நிலச்சீரழிவு (Land degradation) மற்றும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைகள் போன்றவை நமது உணவு உற்பத்திக்குப் பெரிய சவால்களாக உருவாகி வருகிறது. மேலும் அடுத்த 35 ஆண்டுகளில் சுமார் 2.6 மில்லியன் மக்கள் நமது பூமியில் நேரடியாக விவசாயத்தை நம்பி வாழும் நிலையில் நமது சர்வதேச உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் (Food and Agriculture Organisation) புள்ளிவிபரங்களின், படி நமது உணவு உற்பத்தியை வருட அளவில் 60% வரை உயர்த்தினால் மட்டுமே நம்மால் நமது மக்கள்தொகை உயர்விற்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்கி உலக மக்களின் பெருவாரியான மக்களின் உணவுத் தேவைகளை நிறைவு செய்ய முடியும். இத்தகைய நடைமுறை சூழலில் பருவ மாற்று பிரச்சினைகள் காரணமாக நமது உணவு தானிய உற்பத்தி வீழ்ச்சிகள் மற்றும் அவற்றின் விலை உயர்வுகள் போன்றவை பற்றி எதிர்கால கணிப்புகள், நமக்கு உணவு தன்னிறைவு சந்திக்கும் ஆபத்துகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.plant in dry landஉணவு தானிய வளர்ச்சி விகித வீழ்ச்சிகள் மற்றும் விலை உயர்வுகளும்:

food production ratio

மேற்கண்ட புள்ளிவிபரங்கள் நாம் பார்க்கும் போது வருகின்ற 2030ல் பருவமாற்று பிரச்சினைகள் காரணமாக ஏற்படும் வேளாண் உற்பத்தி இழப்பு விகிதங்கள் அளவு மற்றும் விலை உயர்வுகள் எதிர்காலத்தில் பெருவாரியான ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் உணவு உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. இதனால் பல கோடி மக்கள் பாதிக்கப்படும் நடைமுறை சூழல் தற்போது மாற்றுப் பயிர்கள் சாகுபடி பெருக்கம் நமக்கு முன்பே உள்ள எதிர்கால வேளாண் வாய்ப்பாக உள்ளது. குறிப்பாக, பருவமாற்று பிரச்சினைகள் தாங்கி வளரும் தன்மை கொண்ட சிறு தானியங்களின் உற்பத்திப் பெருக்கம் வாயிலாக நம்மால் நமது எதிர்கால உணவுத் தேவைகளைச் சந்திக்க முடியும்.Food pyramid

மேற்கண்ட உணவு கோபுர வரைபடம் (Food pyramid) நமக்கு தற்போது உலகில் உள்ள அதிகளவில் பயன்படுத்தாத உணவுப் பொருட்களை வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. இதில் அதிகளவில் சிறு தானியங்கள் காணப்படும் நடைமுறை சூழலில் இவை பருவமாற்று பிரச்சினைகளைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும் நமது எதிர்கால உணவு பாதுகாப்பு பிரச்சினைகள், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் நல்ல தீர்வுகளைத் தருவதாகவும் உள்ளது.

சிறுதானிய உற்பத்திப் பெருக்கம் தேவைப்படும் சந்தை வாய்ப்புகள் மற்றும் விரிவாக்க முயற்சிகள்

நமது இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு உலகம் முழுவதும் பசுமைப் புரட்சியின் விளைவாக அரிசி மற்றும் கோதுமையின் உற்பத்தி வெகுவாகப் பெருகி நம்மால் பெருவாரியான மக்களின் உணவுத் தேவையைச் சந்திக்க முடிந்தது. ஆனால் அவற்றிற்கு வழங்கப்பட்ட தொடர் ஊக்கம் காரணமாக சிறு தானிய உற்பத்தியில் பெருக்கம் அதிகளவில் காணப்படவில்லை. இருப்பினும் புள்ளி விபரங்களைக் கொண்டு பார்க்கும்போது சுமார் 97% உலக சிறுதானிய உற்பத்தி வளரும் நாடுகளில் மேற்கொள்ளப் படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பழமையான உணவாக உள்ள சிறு தானியங்கள் முதன் முதலாக நமது நாட்டிலும், ஆப்பிரிக்கா நாடுகளில் தான் உணவு தானியங்களாகப் பழக்கப்பட்டு (Domesticated) வளர்க்கப்பட்டது. இருப்பினும் சிறு தானிய உற்பத்திக்கு அதிகப்படியான ஊக்கம் தரப்படாத காரணத்தாலும் வேளாண் சந்தைகளின் அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் வகையில் வேளாண் கொள்கைகள் வகுக்கப்படாத நடைமுறைச் சூழல் காரணமாக அவற்றின் உற்பத்தி பெருக்க விகிதம் குறைந்தே காணப்படுகிறது. இத்தகைய நடைமுறைச் சூழலில் சிறு தானியங்களின் உற்பத்திப் பெருக்கத்திற்கான தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம்.

சிறுதானியங்களின் முக்கியத்துவம்

நமது பூமிக்கு

 • சிறுதானியங்கள் மிக வேகமாக வளரும் தன்மை கொண்டது.
 • இயற்கை முறையில் குறைந்தளவு வேளாண் இடுபொருட்களைக் கொண்டு சாகுபடி செய்ய முடியும்.
 • குறைந்தளவு தண்ணீரில் வளரும் தன்மை கொண்டது.

நமது விவசாயிகளுக்கு

 • பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் பாதிப்புகள் கிடையாது.
 • அதிகளவு மகசூல் கிடைக்கும்.
 • மிகக்கடுமையான இயற்கைச் சீற்றங்களைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது.
 • உணவு, கால்நடை, தீவனம், உயிரி எரிபொருள் (Bio fuel) உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • விவசாயிகளுக்கு நீடித்த மற்றும் நிலையான வருமானம் பெற பெரிதும் துணை செய்கிறது.

உடல்நலப் பிரச்சினைகளுக்கு

 • நுண்ணூட்டச்சத்துகள் பெற உதவுகிறது.
 • அதிகளவு புரதச் சத்துகள் மற்றும் வைட்டமின்கள் கொண்டது.
 • அதிக நார்ச்சத்து மற்றும் உயிரகத்தடுப்பிகள் (Anti-oxidants) கொண்டது.
 • அதிகளவு பீனாலிக் அமிலங்கள் மற்றும் பைட்டோ ஹார்மோன்கள் கொண்டது.

இவ்வாறு நமது பூமிக்கும் விவசாயிகளுக்கும் மற்றும் மனிதர்களின் உடல்நலப் பிரச்சினைகளுக்கு உதவும் மற்றும் தீர்வுகளைத் தரும் சிறு தானியங்கள் நமது வளங்குன்றா வளர்ச்சி குறிக்கோள்களை (Sustainable Development Goals) அடையவும் பெரிதும் துணை புரிகிறது. குறிப்பாக, பசி ஒழிப்பு, நல்ல உடல்நிலை, ஏற்புடைய வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி (Decent work and economic growth), பொறுப்புடன் கூடிய நுகர்வு மற்றும் உற்பத்தி (Responsible consumption and production), பருவ மாற்று பிரச்சினைகள் (Climate change issues) மற்றும் பூமியில் வாழ்க்கை (Life on earth) போன்ற வளர்ச்சி இலக்குகளை அடையச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உலக அளவில் சிறுதானிய உற்பத்தி புள்ளி விபரங்கள்:food production in countries

இவ்வாறு உலக அளவில் நமது நாடு சிறு தானிய உற்பத்தியில் முதலிடத்திலும் அடுத்தபடியாக ஆப்பிரிக்கா கண்டத்தின் சிறிய நாடுகளே அதிகளவு சிறுதானிய உற்பத்தியில் ஈடுபடுவதை புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் சிறு தானியங்கள் உற்பத்தி புள்ளி விபரங்கள்:

நமது நாட்டில் பெருவாரியாக சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களைப் பற்றிய புள்ளி விபரங்கள் கீழே தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.food production in india

சிறு தானிய உற்பத்தியில் தேவைப்படும் புதிய செயல் திட்டங்கள்:

தற்போது உலகம் முழுவதும் சிறு தானிய ஆண்டு கொண்டாடப்படும் சூழலில் இவற்றின் முக்கியத்துவம் மனித குலத்திற்கு இவற்றின் பயன்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மேற்கொள்ளச் செய்ய அதிகளவில் பரப்புரை பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

தற்போது மிகவும் குறுகிய காலத்தில் மிகவும் குறைந்த அளவு மழை நீரைக் கொண்டு சாகுபடி செய்யப்படும் சிறு தானியங்களின் சாகுபடி பரப்பளவை அதிகரிக்கச் செய்வது அவசியம்.

தற்போதைய பாரம்பரிய பயிர் இனப்பெருக்க முறைகளுக்கு (Traditional plant breeding technique) மாற்றாக புதிய முறையிலான குறுகிய கால திறம் இனப்பெருக்க முறைகளைப் பின்பற்றி அதிகளவு புதிய சிறுதானிய ரகங்களை உருவாக்கி நமது விவசாயப் பெருங்குடி மக்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். மேலும் தற்போதைய சாகுபடி முறைகளுக்கு மாற்றாக சிறுதானிய உற்பத்தியை அல்லது சாகுபடி செய்ய அதிகளவு பயிர் தீவிரப்படுத்துதல் (Crop intensification) முறையை விவசாயிகள் பின்பற்றச் செய்வது அவசியம்.

புதியதாக சிறுதானிய சாகுபடியில் நமது வளர்ச்சி இலக்குகளை அடைய சிறப்பு திட்டங்களை விவசாயிகளின் நில வளம், மண்ணின் தன்மை, வானிலை, நீரின் தன்மை மற்றும் பிற பயிர்களின் சாகுபடி அடிப்படையில் மேற்கொள்ளவும் சாகுபடி செய்யப்பட சிறு தானியங்களை முறையே சேமித்து நுகர்வு சந்தைகளில் விற்பனை செய்யும் வகையில் புதிய கட்டமைப்பு மற்றும் மதிப்புக் கூட்டும் வசதிகளை மேற்கொண்டு நமது சிறுதானிய உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்க வேண்டும்.

நமது முன்னோடி விவசாயிகள் (Progressive farmers), தொழில் முனைவோர், இனப்பெருக்க நிபுணர்கள் விரிவாக்கப் பணியாளர்கள் முறையே ஒருங்கிணைத்து அவர்களை அதிகப்படியாக சிறுதானிய உற்பத்திப் பெருக்கம் மதிப்புக்கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வாயிலாக ஒரு உற்பத்திப் பெருக்கத்தை ஏற்பாடாகி செய்ய அதிகளவிலான மத்திய மற்றும் மாநில அரசுகளின் வாயிலாக அதிகளவிலான மானியங்கள், ஊக்கத் தொகைகள் வழங்கி சிறு தானிய உற்பத்திக்கு தொடர் ஊக்கம் வழங்கப்பட்டால், நம்மால் மிகவும் குறுகிய காலத்தில் சிறுதானிய உற்பத்தியில் மிகப்பெரிய அளவிலான முன்னேற்றத்தை அடையச் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது கர்ப்பிணிப் பெண்களுக்கு கம்பு மிகவும் உகந்ததாகவும் அவர்கள் உடல் நலத்திற்குத் தேவைப்படும் ஃபோலிக் அமிலம் (Folic acid) அதிகளவில் கம்பில் உள்ளதால் அதனை அவர்கள் அதிகளவு எடுத்துக் கொள்வது அவர்களது உடல் நலத்திற்கு நன்மை என்பதை அதிகளவு பரப்புரைகள் வாயிலாக நமது நாட்டி பெண்களுக்குத் தெரிவிப்பதன் வாயிலாக நமது வேளாண் சந்தைகளில் கம்பின் தேவையைப் பெருக்கியும், பல லட்சம் சிறு விவசாயிகளை கம்பு சாகுபடியில் ஈடுபடச் செய்து அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவ முடியும்.

முடிவுரை:

தற்போது பெருகி வரும் பருவ மாற்று பிரச்சினைகள், மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்பவும் நமது ஊட்டச்சத்து குறைபாடுகள் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் பெறுவதிலும் சிறுதானியங்கள் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய நடைமுறைச் சூழலில் அவற்றின் உற்பத்திச் பெருக்கத்திற்குத் தேவைப்படும் ஆக்கபூர்வமான புதிய முறையிலான இனப்பெருக்க முறைகள் வாயிலாக குறுகிய காலகட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு அதிகளவு மகசூல் தரும் புதிய சிறுதானிய ரகங்களை நாம் உருவாக்கவேண்டிய அவசியம். மேலும் சிறுதானிய பாதுகாப்பு மற்றும் மதிப்புக் கூட்டலுக்குத் தேவைப்படும் புதிய சேமிப்பு மற்றும் மதிப்புக் கூட்டு வசதிகளை நாம் பெருக்கவேண்டியது அவசியம். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேளாண் மற்றும் வளர்ச்சி துறைகள் வாயிலாக அதிகளவு மானியங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்களின் உடல் நலத்திற்குப் பெரிதும் உதவும் சிறு தானியங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கு அதிகளவிலான விழிப்புணர்வு பரப்புரைகள் வாயிலாக நம்மால் வேளாண் சந்தைகளில் சிறுதானிய உற்பத்தியின் தேவையை உருவாக்கி, அதிகளவு சிறுதானியங்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரிதும் பயன்பெறும்படி உதவ முடியும்..

- முனைவர். அரிந்தம் கட்டக், மூத்த விஞ்ஞானி, செயல்பாட்டு மற்றும் பரிணாம சூழலியல் துறை, வியன்னா பல்கலைக்கழகம், ஆஸ்ட்ரியா.

மொழிபெயர்ப்பாளர்கள்:

முனைவர் தி.ராஜ் பிரவின்: இணைப் பேராசிரியர் (வேளாண் விரிவாக்கம்) வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், செட்டிநாடு - 630102

சீ.கதிரேசன்: வேளாண் விரிவாக்கம் மற்றும் ஊரக சமூகவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641003